நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு கதையும் சில குறிப்புக்களும்

Monday, January 24, 2005

சுமதி ரூபனின் இந்தக்கதை, புலம்பெயர்தேசத்திலிருந்து எழுதப்பட்டதில் நான் அண்மையில் வாசித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்பேன். சுமதி ரூபன் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களின் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர். சிறுகதைகள், கவிதைகள் எழுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகையாகவும், நல்லதொரு இயக்குநனராகவும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். வாழ்வதற்கான முயற்சிகளிலே தோற்றுக்கொண்டு, அதற்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில், இவ்வாறு படைப்பு முயற்சிகளில் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருப்பவர்களை அவதானிக்கும்போது நான் வியப்பதுண்டு. சுமதி ரூபனின் கவிதைகளில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லாதபோதும் (கிட்டத்தட்ட ஒரே விடயத்தைப் பேசுவதால் அப்படி இருக்கலாம்), அவரது பல சிறுகதைகள் என்னைக் கவருபவை. சில சிறுகதைகள் ஒருவித அதிர்ச்சியாக எழுதப்பட்டது போன்ற பாவனையில் இருந்தாலும், அதையும் மீறிய பல நல்ல கதைகளை என் வாசிப்பனுபவத்தில் பெற்றிருக்கின்றேன். அண்மையில் கூட, மித்ர பதிப்பகம் மூலம் சுமதி ரூபனின் சிறுகதைகள் தொகுப்பாய் வந்ததாய் அறிய முடிகிறது.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தற்கு என்ன காரணம் என்று முதலில் யோசிக்கும்போது, எனக்கு பரீட்சயமான (புலம்பெயர்) சூழலில் இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. அதில் வரும் பாத்திரங்கள் கூட மிகுந்த நம்பகத்தன்மையை உடையதாக படைக்கப்பட்டிருக்கிறது.

அநேக கதைகளில் வருவதைப்போலன்றி, இந்தக் கதையில் வரும் பாத்திரம் வசந்தமலருக்கு காரணம் எதுவுமில்லாமலே (கணவனை கெட்டவனாக காட்டவில்லை) தன்னிலும் வயது குறைந்த பையனோடு உறவு ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கையில் பல சமயங்களில் பலவிடயங்கள் இவை ஏன் நிகழ்கின்றன என்பதே புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. எத்தனை ஏன் போட்டுப்பார்த்து வலைவிரித்தாலும் பதில்கள் சிக்குவதில்லை. அவ்வாறுதான் வசந்தமலரும், முகுந்தனிற்கும் தனக்கும் எப்படி உறவு முகிழ்ந்தது என்று எண்ணி வியப்படைகின்றார், வாசிக்கும் நாமுந்தான்.

அதைவிட நுட்பமான பகுதி இதுதான்...
“தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்”
உறவில் மரபை மீறும் இருவருக்குமே தாலிக்கொடி பெரிய விடயமாகிறது. மேற்கத்தைய கலாச்சாரத்தில் முற்றாக மூழ்கி இருக்கின்றவனுக்கும், தாலிக்கொடியுடன் உறவு கொள்வது உறுத்துகிறது. வசந்தமலருக்கும், தனது கணவன் கட்டிய தாலியைக் கழட்ட மனம் மறுகுகிறது. இந்த முக்கியமான விடயத்தை சுமதி ரூபன் கதையின் ஓட்டத்தில் நாசுக்காய் சொல்லிப்போகிறார். நானறிந்தவரையிலும், தமிழே தெரியாத (அல்லது ஒன்றிரண்டு வார்த்தை) பேசுபவர்கள கலாச்சாரத்தில் பலவிடங்களில் மிக ஊறிப்போயிருப்பதைக் கண்டிருக்கின்றேன். இப்படியானவர்களிலிருந்து வந்த சாதியின் நாற்றமும், மதம் மீதான் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பலவேளைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அற்புதமாகப் போகின்ற கதை முடிவில் கொஞ்சம் சாதாரணமாகிப் போய்விடுவது மாதிரித்தோன்றியது. ஆனால் வசந்தமலரின் கணவன் குமார் வீசும் ஏளனச்சிரிப்பும், கண்களிலுள்ள வன்மமும் ஏதோ தவறுதலாக நடைபெற்று முடிந்துவிட்டது என்பதை வாசகரிடையே விட்டுச்செல்கிறது. அந்த மர்மப்புன்னகை இரண்டுவிதமாய் யோசிக்கவைக்கிறது. பார்த்தியா எனக்கு எல்லாம் நீஙகள் பொத்தி பொத்தி ஒளித்துவைத்திருந்த உறவு ஏற்கனவே தெரியும். வசந்தமலர் விபத்தில் செத்துவிட்டார் இனியென்ன செய்வாய் என்ற ஏளனம் மிதப்பது மாதிரி ஒரு புறமும், மறுபுறம் இப்படி ஒரு உறவு இருப்பதைக் கண்டுபிடித்து, விபத்து என்று சோடித்து வசந்தமலரின் கணவரே வசந்தமலரைக் கொலையும் செய்திருக்கலாம் என்று இருபிரிவாக நினைக்க வைத்தது முடிவு.

(அவசரத்தில் எழுதுகின்றேன். என் வாசிப்பில் பிழையிருந்தால் சுட்டிக்காட்டவும்)

0 comments: