நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாழ்வும் வதையும்

Thursday, August 11, 2005

ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'(1)
"இவதான் மாதியா? சிவண்ணாங்கறவன் பொண்டாட்டி. எங்கேடி உன் புருஷன்? எங்கிருக்கான் சொல்லு" என்றான் அதிகாரி.

"அவன் காட்டுக்குள்ளே ஓடிட்டான் சாமி. அவனை தலமலைக்குக் கூட்டிக்கிட்டுப் போனபோது பார்த்தது" என்றாள்.

"அப்படியா" என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து சுவரில் வீசிவிட்டான். அவள் சுவரில் தலைமுட்டிக் கீழே விழுந்தாள். பின் அவளது உடைகளை அவிழ்த்தெறிந்து அவளை நிர்வாணப்படுத்தப்படுத்தினர். இரண்டு கால்களையும் சேர்ந்து உருளையின் ஒரு கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை போலிஸ்காரனை இழுக்க உத்தரவிட்டான் அதிகாரி. கால்கள் மேலே ஏற தலைகீழாய் முடிகள் நிலத்தைத் தொட தொங்கினாள் மாதி. அந்தரத்தில் தொங்கும் அளவு கயிறு கட்டப்பட்டபோது, ஒரு போலிஸ்காரன் அங்கிருந்த தடியை எடுத்துத் தலைகீழாய்த் தொங்கியவளை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அவள் அலறியபோது கயிறு ஆடியது. அவள் அலறி மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்தாள். அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினான்.

அந்த நேரம் மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கெம்பனைக் கீழே இறக்கி, மின் ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டியைக் காட்டி,
மெக்கர் பெட்டியிலிருந்து "கரண்ட் கொடு" என்றான் அதிகாரி.

உடனே பொலீஸ்காரர்கள் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைக் கொண்டு வந்து அதன் முனையிலிருந்த கிளிப்பினை கெம்பனின் இரண்டு காது மடல்களிலும் மற்றொன்ன்றை அவனின் குறியில் விதைப்பையிலும் மாட்டினார்கள்.

ஒரு பொலீஸ்காரன் அந்த மெக்கர் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த கைப்பிடியை மெதுவாகச் சுற்றினான். அது ஒரு சுற்றும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. பின் ஒரு கருப்புப் பொத்தானை அழுத்தியதும் மின்சாரம் கெம்பனின் உடலில் பாய்ந்து அவன் அதிர்ந்தான். பொத்தானிலிருந்து அடுத்த வினாடி கை எடுக்கப்பட்டதும் அந்த அதிர்வு தடைப்பட்டது. மீண்டும் மெக்கர் பெட்டியைச் சுற்றி இம்முறை அதிக நேரம் பொத்தனை அழுத்திப் பிடித்தான் பொலிஸ்

"எங்கேடா வீரப்பன்? சொல்லு"

அவன் "ஊ...ஊ..." என்று கத்திக்கொண்டு அறை முழுவதும் ஓடி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாதி மீது இடித்துவிட்டுத் தடுமாறிக் கீழே விழும்போது அவன் காலோடு வழிந்த மலம் அறை முழுவதும் சிதறியது. அவன் மயக்கமுற்றுச் சரிந்தான்.

அவன் உண்மையாகவே மயங்கிவிட்டானா? அல்லது நடிக்கின்றானா? என அறிய பொலீஸ்காரன் நூற்றுக்கணக்கான சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பட்டையான தோல் வாரினை, தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்து கெம்பனின் முதுகில் ஓங்கியடித்தான். ஆணிகள் அவனது உடலின் சதைகளைத் துளைத்து வெளியே இழுக்கப்படும்போது இரத்தம் அறைகளின் சுவரில் தெறித்தது. அவன் "அய்யோ" என்று கத்தி நெளிந்தான்.

"டேய் அறைக்குள்ளேயே பீயை இருந்திட்டையா? அதைத் தின்னடா" என்றான் அதிகாரி.

அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக்கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த பொலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, "தின்னுடா பீயை" என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.

கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக்கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென்பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப்போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கால்களையும், கைகளையும் மாராப்ப்பிக்கொண்டு நெளிந்தாள்.

"எங்கேடி உன் புருஷன்?" என்றான் அதிகாரி.
"தெரியாதுங்க"
"இவளுக்கும் கரண்ட் கொடுங்க" என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது பொலிஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து ஓயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புக்களும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுவர் சுற்றினாள். பின், அதன் கருப்பு நிறப் பொத்தானை அழுத்தினான்.
"அட சாமி....." என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது. அவள் பள்ளத்தில் வீழ்வது போல உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலின் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

"இவ பொண்ணை இழுந்தாங்கடா?" என்றான் அதிகாரி.
"சாமி. வேண்டாம்" என்று அந்த வேதனையிலும் அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டு முனகினாள். அவன் பூட்ஸ் கால்களால் அவள் முதுகில் ஒரு உதைவிட்டான். மூக்கிலிருந்து ரத்தம் வழிய அவள் சுவரோரமாய் போய் விழுந்தாள். அவள் கண்கள் இருண்டன. பின், அவள் சித்தியின் அலறல் சத்தம் கேட்டுச் சிரமப்ப்பட்டு விழித்தாள். சித்தியும் நிர்வாணமாய் மெக்கர் பெட்டியிலிருந்து மின்சார அதிர்வு பாய்ந்து அலறினாள்.

"வேண்டாம்" என மாதி எழுந்து நிற்க முயலும்போது, அவளைக் கீழே தள்ளி அவளது தலைமுடியை தரையுடன் காலில் வைத்து அழுத்தி நின்று கொண்டான் கணேஷ் பொலீஸ். ஏழாவது முறை மெக்கர் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்படும்வரை சித்தி மயங்காமலிருந்தாள்.
(ப204-206)

அப்போது அவர்களின் அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டது. கணேஷ் பொலிஸ்காரன் வந்தான்.

"இன்னிக்கு வந்த பொம்பளைங்க வெளியே வாங்க" என்று கூறிவிட்டு, மாதி, சித்தி, சரசு என்று பெயர் சொல்லி அழைத்தான்.

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். இருட்டில் வெளியே ஏழு ஆட்கள் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தது தெரிந்தது.
'வா வெளியே" என்றான்.

மாதி புரிந்து கொண்டாள். முரண்டு பிடித்தால் எத்வும் நடக்காது என்று முடிவு செய்து, "நான் வரேன். என் மகள் சின்னப்பொண்ணு. அவளை விட்டுங்க" என்று கும்பிட்டாள்.

வெளியே நின்றிருந்தவர்களில் மூன்று பேர் சித்தியின் கையைப் பிடித்து அறைக்குப் பின்புறமாயிருந்த மண்தடத்தில் அவளை இருளில் கூட்டிச் சென்று மறைந்து விட்டார்கள்.

மற்ற இருவர் சரசுவையும் ஒருவன் மாதியையும் இழுத்துக்கொண்டு இருட்டில் மரத்தின் பக்கம் கூட்டிச்சென்றனர். மாதியைத் தரையில் கிடத்தி அவன் மீது விழுந்தான்.

சித்தி என்று கத்த நினைத்தாள். நொடிப்பொழுதில் வாழ்க்கையும் நம்பிக்கையும் செத்துப்பிணமாவதை எண்ணி அமைதியாகி விட்டாள். சித்தியை நினைத்துக் கண்ணீர் விட்டாள். அதன்பின், இரண்டு நபர்கள் அவள் மீது விழுந்து எழுந்து போய்விட்டார்கள். அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட நட்சத்திரத்திடம், "நான் பிணம்" என்று சொல்லிக்கொண்டாள். அதன் பின், "நீயும் கூடத்தான் மாதேஸ்வரா?" என்றாள்.

நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் கொட்டடையில் கொண்டு வந்து படுக்க வைக்கப்பட்டாள். பக்கத்தில் சித்தி இருக்கிறாளா என இருட்டில் கை வைத்துத் தேடிப்பார்த்தாள். அவளையறியாமல் ஓவென அழுகை வந்ததும் படுத்துக்கொண்டிருந்தவர்கள் விழித்துக்கொண்டார்கள். சற்று நேரத்துக்குப் பின் சித்தியை கைத்தாங்கலாய்க் கொண்டுவந்து அறையில் கிடத்திவிட்டுப் போனார்கள். அவள் கண்கள் மூடியிருந்தது. ஆனாலும் மூச்சியிருந்தது. அவளது கன்னங்களைத் தட்டி, சித்தி என மீண்டும் மீண்டும் செய்தாள். அதன் பின் மெல்ல "அம்மா.....அய்யோ" என்றாள் சித்தி.
(ப208)

(2)
'சோளகர் தொட்டி'க்கு ஒரு விமர்சனம் என்னால் எந்தப்பொழுதிலும் எழுத முடியாது போலத்தான் தோன்றுகின்றது.. இப்படி மேலே கூறப்பட்ட சம்பவங்களைப் போல 240 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பக்கங்கள் இவ்வாறான 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான அதிகாரமையத்தின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையுந்தான் பேசுகின்றன. மேலே கூறப்பட்ட, கரண்டு கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டது வளர்ந்த ஆண்கள் மட்டுமலல, ஏழு, பதினொரு வயது சிறுவர்களுக்குக் கூட இந்தக் கொடூரம் நிகழ்கின்றது. நிறைமாதக் கர்ப்பிணியை எல்லாம் நாலைந்து பொலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வன்புணருகின்றனர்.

இந்த நாவல் குறித்து எதை எழுதத் தொடங்கினாலும் ஒருவித நிம்மதியான வாசிப்பனுவத்துடன் எந்த ஒரு வாக்கியத்தையும் முடிந்துவிடமுடியாது என்று மட்டும் தெரிகின்றது. சில சமயம், தொடர்ந்து இதை வாசிக்கமுடியாமல் வெறித்தபடி பஸ்சினுள் பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றேன்; வீட்டினுள் சோபாவினுள் முடங்கியிருக்கின்றேன். இப்படியான சித்திரவதைச் சம்பவங்களை இதற்கு முன் இந்தளவு வெம்மை உருகும் வார்த்தைகளுடன் வாசித்ததேயில்லை.

இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்.

(3)ச.பாலமுருகன் தனது 'என்னுரையில்' ...
'மகிழ்ச்சி நிரம்ப் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்கள் சமூகம் பல்வேறு நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாயிற்று. தங்கள் சொந்த விளைநிலங்களிலிருந்து அவர்கள் அன்னியராக்கப்பட்டனர். அம்மக்களின் தாயைப் போன்ற வனத்திற்குள் சுதந்திரமாய்ச் செல்ல இயலாதவாறு பல்வேறு தடைகளையும், அரச இயந்திரங்களின் மனித உரிமை மீறல்களையும் சந்தித்த்தார்கள். கடந்த பத்தாண்டுகளாய் மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வந்தவன் என்றமுறையில் அந்த மக்களிடம் பழகவும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களும் அனுபவமும் எனக்குள் பெருஞ்சுமையை ஏற்றியது.

இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்தச் சூழல்கள் இவைகளே எனது நாவலுக்கு உயிர்தந்தவை. நாம் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளை விட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை.. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும். எனவே அவைகளை இந்தப் பதிவின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்' என்கின்றார்.

வீரப்பன கொலைசெய்யப்பட்டு 'அமைதி' நிலவும் இன்றைய பொழுதிலாவது, இந்தப் பழங்குடி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியே. வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.

28 comments:

Kannan said...

உதாரணத்திற்கு நீங்கள் காட்டியதே உறைய வைக்கிறது, டிசே.

யாருக்கும் இது இதமான வாசிப்பைக் கொடுக்கமுடியாதெனினும், நிகழ்வுகளின் பதிவாய் இது சேமிக்கப் படுவது ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப் பட்டவர்களுக்கும், இன்னும் பலருக்கும் நன்மையைக் கொடுத்தால் போதும்.

//ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்//

உண்மை - எனக்கும் அப்படியே...

அறிமுகத்திற்கு நன்றி.

8/11/2005 02:45:00 AM
`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//வாழ்வு திட்டமிட்டுக் குலைக்கப்பட்ட சமூகத்தில், வலிகளுடன் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறுதல் அவ்வளவு இலகுவில்லை.//

சரியாகச் சொன்னீர்கள் டி.சே.

(1) ஐ நான் முழுதுமாக வாசிக்கவில்லை. என்னால் இயலவில்லை. நீங்க சொல்ற மாதிரி மூன்றாம் மனிதராய் சம்பந்தமேயில்லாத சம்பவங்களை வாசிப்பது தான் என்றாலும் இம்மக்கள் அனுபவித்தவைகள் என்னை உள்ளும் புறமும் நடுங்க வைக்கிறது. வாசித்த வரிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் மனவருத்தத்தையும் தருகின்றன.

புத்தகம் கிடைத்தாலும் என்னால் வாசிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதே.

8/11/2005 02:59:00 AM
Anonymous said...

பாலுறவுக் கதைகளை எழுதுபவர்களுக்கும் எனது வாசிப்பனுபவம் என்ற பெயரில் அதே காமக்கதைகளை இணையம் வழி பரப்புவர்களுக்கும் இது தகுந்த காலம். காசி அறிமுகப்படுத்திய வலைப்பூ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் காமம் வளர்க்க நன்கு பயன்படுகிறது.

வாச்சாத்தி பிரச்னை முதல் வீரப்பன் பிரச்னை வரை, ஜெயலட்சுமி பிரச்னை முதல் பிரேமானந்தா பிரச்னை வரை எல்லாமே பேசப்பட வேண்டியவைதான். அதற்காக பிறப்புறுப்பு என்று மார்பென்றும் மின்சாரத்தை செருகினான் என மஞ்சள் இலக்கியம் எழுதுபவர்களை ஊக்குவிக்கவா சொல்கிறீர்கள்?

ஏற்கெனவே வலைப்பூவில் நடிகையின் மார்புப் பிதுங்கலைப் படம் போட்டவனை ஆதரித்தவர் நீங்கள். அவன் உங்களுடன் சாட் செய்வதாக நினைத்து அந்த சம்பாஷ்ணையை எனக்கு அனுப்பி இருந்தான்.

இம்மாதிரி நாவல் எழுதுபவர்கள் மட்டுமல்ல.. விமர்சனம் செய்பவர்களையும் அதனை வாழ்த்துபவர்களையும் கண்டாலே பற்றிக் கொண்டு எரிகிறது!

தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு!

8/11/2005 03:56:00 AM
Anonymous said...

டிசே, இதற்கு விமர்சனம் என்று ஒன்றை எழுதமுடியாதென நான் ஒத்துக்கொள்கிறேன். இந்த வதைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிசன் முன்பு சாட்சியமளிக்க இந்த வதைகளினால் ஊனமுற்றவர்கள், மனநலம் சிதைந்தவர்கள், உடலுறுப்புகள் சிதைந்தவர்கள், நடக்கவியலாமல் தொட்டி போன்று கட்டி தூக்கிவரப்பட்டவர்கள், பாலியற்கொடுமைகளுக்கு ஆளாகி சிதைந்தவர்கள் என்று பலர் கடும் முயற்சிக்குப்பின் அழைத்துவரப்பட்டனர். ஆனால் விளைவு பற்றி ஒன்றும் தெரியவில்லை.

8/11/2005 04:31:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே
ம் நாவலையும் சோளகர் தொட்டி நாவலையும் ஒரு சேர வாங்கி வந்தேன் ம் நாவல் வாசித்து முடித்ததே தொண்டைக்குழியில் அடைத்து நிற்கிறது இதை எப்படித்தான் வாசிக்கப் போகிறேனோ.

இந்தளவு வன்முறை இலங்கை அரசபடையால் கூட உஞற்றப்பட்டிருக்கும் என்பது சந்தேகமே

8/11/2005 05:12:00 AM
ROSAVASANTH said...

டீஜே நன்றி. ஏற்கனவே சில பகுதிகள்(இது உட்பட) தட்ஸ்டமில்.காமில் வந்த போது படித்தேன்.

அந்த போலிஸைவிட வன்முறை இதை நியாயப்படுத்து பவர்களிடமும், இது குறித்து பேசுபவர்களை முத்திரை குத்துபவர்களிடமும் வெளிப்படுகிறது. பழையதை ஞபகப்படுத்த..
http://www.thinnai.com/vivadh/topic.asp?TOPIC_ID=118&whichpage=2

8/11/2005 06:34:00 AM
சுந்தரவடிவேல் said...

மாலையில் வந்து எழுதுகிறேன்.

8/11/2005 08:38:00 AM
-/பெயரிலி. said...

டிஜே,
நல்லது செய்தீர்கள். இந்தப்புதினம் கட்டாயமாகப் பேசப்படவேண்டிய ஒன்று; இதனுடன் சேர, மலையாளத்திலே பாஸ்கரன் எழுதி, தமிழிலே எம். எஸ் பெயர்த்த மலையினப்பெண் ஜானாவின் வரலாறும் சேர்த்து வாசிக்கப்படும்போது, அரச அடக்குமுறையின் வேறுவடிவங்களின் கொடுமை தெள்ளெனப் புலப்படும்.

ஈழநாதன், என் தனிப்பட்ட வாசிப்பின் ஈர்ப்பிலே, 'ம்', 'சோளக்ர் தொட்டிக்கு' அருகிலே வரமுடியாதென்றே சொல்வேன்.

8/11/2005 10:48:00 AM
Anonymous said...

பதிந்தது:தர்சன்

டிஜே,

இரண்டு நாளைக்கு முன்பு, ஒரு நண்பர் இந்நாவலைப் பற்றிக்க்
குறிப்பிட்டிருந்தார். நீங்கள் தந்த நாவலின் பகுதிகளை
வாசிக்கும்போதே உடல் சிறிதாக நடுங்குகிறது. மனித அவலங்களையும் சிறுவயதிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. இலங்கை இராணுவதினதும் அனேகமாக எல்லா இயக்க்ங்களும் நடத்திய சித்திரவதைக் கதைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன், வாசித்திருக்கிறேன். இவைகளப் பார்க்கும்பொது, கேட்கும்போது, வாசிக்கும்போதுதான் மனித இருப்பில் மகிமையைப்பற்றி கேள்விகள் எழும். நீட்செயின் 'அடிப்படையில் மனிதன் இனனொரு மனிதனை வதைப்பதில் இன்புறுகிறான்' என்ற கூற்று மனதில் அடிக்கடி வந்து நிற்கும்.

-தர்சன்

11.8.2005

8/11/2005 10:50:00 AM
கயல்விழி said...

வாசிக்கவே முடியவில்லை. இத்தனை கொடுமைகளை அனுபவித்த அந்த மக்கள் என்ன பாடு பட்டிருப்பார்களோ. இதற்கு பதில் யார் சொல்வது.?

8/11/2005 11:03:00 AM
Sarah said...

எனக்குத் தெரிந்து, நமது நாட்டில் இன்னும் சட்டதிட்டங்கள், ஒரு தனிமனிதனால் சுலபமாக அடைய முடியாத அளவுக்கு வெகு உயரத்தில் இருக்கிறது என்பதே இது போன்ற காரியங்களுக்கு துணையாக அமைகின்றன, 3 போலீஸ்க்காரர்கள் என்னையும் என்னுடன் வந்த 5 இந்திய நண்பர்களையும் பாஸ்போர்ட் கேட்டனர் (பிரான்ஸில்) . இல்லையென்று நாங்கள் ( ஒருவர் மட்டும் அவரை அறியாமலேயே கோட் பாக்கெட்டில் வைத்திருந்தார்) சொல்ல, எங்களை ஸ்டேஸனுக்கு வரச்சொல்லிவிட்டனர் ( அங்குதான் கணினியில் எங்களது அடையாளக் அட்டையில் இருக்கும் தகவல் சரியா எனப் பார்க்க முடியும் என்பதால்). எனக்கு இன்னும் 30 நிமிடத்தில் ஒரு மீட்டிங் போகனும், அதற்குள் விடமுடியுமா என முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு கேட்டுவிட்டேன் , அவரும் கட்டாயம் முடியும் 10 நிமிடத்தில் என்று சொன்னதோடல்லாமல் , சரி பார்த்தும் அனுப்பி விட்டார் இன்னொரு நண்பருக்கு அவர் பெயர்க்குழப்பத்தால் சிறிது சிரமத்தைத் தவிர).இது நடந்தபின் தான் தெரிந்தது , இதே முகத்தை இந்தியப் போலீஸிடம் காட்டியிருந்தால் என் நிலமை என்னவாகியிருக்கும் என.

ஆனால் , இதே சீரியஸான முகத்தை இந்தியப் போலிஸ், ஏன் , ஒரு ரெயில்வே டிக்கெட் எடுக்குமிடத்தில் காட்டினால் கூட , முடிந்த அளவுக்கு அவர்களால் எவ்வளவு சேதத்தை நமக்கு ஏற்படுத்த முடியுமோ அதைத் தயங்காமல் பண்ணும் குணம் நமக்கு மட்டுமே இருக்கிறது என்பதனை இங்கு வந்து சில நாட்களில் புரிந்து கொண்டுவிட்டேன். இதெல்லாவற்றிற்கும் ஆணிவேர் எது எனப் பார்த்தால் சட்டம் என்பது நாம் நினைக்கிற அளவுக்கு எல்லா மனிதர்களுக்கும் சமமாகச் சென்றடையவில்லை என்பது மிகக் கண்கூடாகத் தெரிகின்றது. ஆனால் இதை என்ன செய்து எப்படி வழிக்குக் கொண்டு வர?'.

தெரியலை.

எவ்வளவு நாட்கள் இப்படியே போகப் போகிறதோ !!

சாரா

8/11/2005 03:58:00 PM
Anonymous said...

பதிந்தது:karthikramas

டி சே அறிமுகத்துக்கு நன்றி. சமூகம் என்கிற கருத்தாக்கம் எத்த்னை பொய்மைகளை கொண்டிருக்கமுடியும் என்று காட்டுவதாக உள்ளது. இதே போலிசை நம்பிக்கொண்டுதான் நமது ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியாக இருப்பதாகவும், மிகவும் நியாயமான நீதி கிடைத்துக்கொண்டிருப்ப்தாகவும் நினைத்துக்கொள்கிறோம். அரச அழித்தொழிப்புகளை கோரும் சந்தர்ப்பம் வாய்க்காதவரை எல்லோரும் அதிர்ஷ்ட சாலிகள்தான்.

11.8.2005

8/11/2005 04:32:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இப்படியான ஆக்கங்கள்/ஆவணங்கள் தொடர்ந்து வெளிக்கொணரப்படவேண்டும். அப்போதுதான் என்னவெல்லாம் இந்த பழங்குடி மக்களுக்கு நடந்தது என்றாவது அறியக்கூடியதாக இருக்க்கும். பா.கல்யாணி, கெளத்தூர் மணி, வி.பி.குணசேகரன் போன்ற மனிதாபிமானிகள் இந்த மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காய் போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று வாசித்து அறிந்திருக்கின்றேன். நியாயம் அந்தமக்களுக்கு விரைவில் கிடைத்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்.

8/11/2005 10:26:00 PM
இளங்கோ-டிசே said...

அந்நியன், நீங்கள் குறித்த இந்த விடயம் ஏற்கனவே பலவிடங்களில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. நரேனின் ஒரு பதிவில், எழுதியவரும் நீங்களும் ஒருவரா என்றும் தெரியவில்லை. உங்கள் அறம், வாழ்க்கை சார்ந்து உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அது உங்களின் தனிப்பட்ட விடயம். நான் உங்கள் பதிவில் வந்து இதை எழுதவும் இல்லை. எனது தளத்தில்தான் எழுதியிருக்கின்றேன். ஆனால், உங்களுக்கு குமுதம், விகடன் மற்றும் மூன்றாந்தரப் புத்தகங்களில் வருவதற்கும் இந்தப் புதினத்தில் குறிப்பிடும் சம்பவங்களுக்கு வித்தியாசம் காணமுடியாது 'நடிப்பதைப்' பார்க்கையில் இதற்கு மேல் ஒன்றும் கூறமுடியாது. இவ்வளவு கொடூர சம்பவங்கள் நடந்திருக்கின்றதென்று புரிந்தபின்னும், எவருக்குமே தோன்றாத, இந்த விடயத்துக்க்குத் தொடர்பில்லாத உப்புச்சப்பில்லாத விடயம் உங்களுக்கு மட்டும் தோன்றியிருப்பது புதிர்தான்.
மற்றும்படி எனக்குப் பிடித்தவற்றை, என்னைப் பாதித்தவைகளை நான் தொடர்ந்து எழுதிக்கொண்டேதான் இருக்கப்போகின்றேன், நீங்கள் என்னை நோக்கி துப்புவது முகத்தில் வழிந்தாலும்,வழிந்துக்கொண்டபடி.
//ஏற்கெனவே வலைப்பூவில் நடிகையின் மார்புப் பிதுங்கலைப் படம் போட்டவனை ஆதரித்தவர் நீங்கள். அவன் உங்களுடன் சாட் செய்வதாக நினைத்து அந்த சம்பாஷ்ணையை எனக்கு அனுப்பி இருந்தான்.//
இங்கே வலைப்பதிவுகள் எழுதும் பலருடன் நான் சாட் செய்துகொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும், நேரில் சந்திந்துக்கொண்டும்தான் இருக்கின்றேன். அப்படி நான் உரையாடிய நண்பர்களில் எவரேனும் ஒருவர் உங்களுக்கும் தோழனாய் இருக்கலாம். ஆனால் எவரும் நடிகையின் மார்புப் பிதுங்கல் படம் போட நான் அதை ஆதரித்து பின்னூட்டம் இட்டதாய் நினைவினில்லை அல்லது சாட் செய்யும்போது நீ போட்ட மார்புப் பிதுங்கல் படம் நன்றாக இருக்கிறது இன்னும் போடு என்று எவருக்கும் கூறியதாயும் ஞாபகத்தினில்லை. ஒன்று மட்டும் புரிகிறது நான் ஆபாசத்துக்கு எதிராய் கதைக்கின்றேன் கதைக்கின்றேன் என்று கூறியபடி பிறர் மறந்தாலும் நீங்கள்தான் அந்த விடயங்களை மறக்காமல் தூக்கிப்பிடித்தபடி எல்லா இடங்களிலும் அலைந்தபடி இருக்கின்றீர்கள் என்பது. சரி, எங்கையாவது அப்படிப்பட்ட என் பின்னூட்டத்தைக் கண்டால் இங்கே போட்டுவிடுங்கள். நானும், நான் என்ன எழுதியது என்று பார்த்தமாதிரியும் இருக்கும், மற்றவர்கள் அறிந்தமாதிரியும் இருக்கும்.

8/11/2005 10:27:00 PM
ROSAVASANTH said...

நீங்கள் சென்ற பின்னூட்டத்தில் எழுதியதை போன்ற தவறுதான் தீவிரமான விஷயங்களை எழுதுபவர்களின் மிகப்பெரிய பலவீனமாய் எனக்கு தெரிகிறது. மிக பெரிய கொடுமைகள் பற்றி பேசும்போது கூட இப்படி எழுதும் வக்கிரங்கள் இணையத்தில் கணக்கு வழக்கில்லாமல் இருக்கின்றன. வேறு வழ்ழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல் சகித்துகொண்டு, அதே நேரம் இப்படி ஒரு பதில் போட்டு பேசப்படும் விஷயத்தை கொச்சை படுத்தாமல் இருப்பது சீரிய அணுமுறை என்பது என் பணிவான அபிப்ராயம்.

8/11/2005 11:55:00 PM
இளங்கோ-டிசே said...

//வேறு வழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல் சகித்துகொண்டு, அதே நேரம் இப்படி ஒரு பதில் போட்டு பேசப்படும் விஷயத்தை கொச்சை படுத்தாமல் இருப்பது சீரிய அணுமுறை என்பது என் பணிவான அபிப்ராயம்.//
ரோசாவசந்த், நீங்கள் கூறுவது புரிகின்றது. இனி இப்படியான பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதை இயலுமானவரை தவிர்த்துவிடுகின்றேன். மேலே எழுதியது கூட, இதற்குப் பதிலளிக்காமல் இருந்தால், அவர் கூறுவதை ஒப்புக்கொள்கின்றேன் என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொண்டுபோய்விடக்கூடுமோ என்ற எண்ணத்தினாலேயே எழுதினேன். வெட்டி வேலைக்களில் ஈடுபடாதிருக்கத் தெளிவுபடுத்தியமைக்கு மீண்டும் நன்றி வசந்த்.

8/12/2005 12:18:00 AM
பத்மா அர்விந்த் said...

டீசே
இரண்டு நாட்களாக இந்த புத்தகம் பற்றிய நினைவு இருந்தது.நம்முடைய மனதின் ஒரு ஓரத்தில் எங்கோ ஒரு கொடூர என்ணம் இழையோடுகிறது. நந்தர்ப்பம் கிடைக்கும்போது நம்முடைய ஆளுமையை புரியவைக்க இதுபோல ஆதரவில்லா மக்களாஇ கொடுமைப்படுத்தும் வடிகாலாக, அல்லது மனத்தை புண்படுத்தும்விதம் பேசியோ அது வெளிப்படுகிறது. இது ஒருவகையில் ஆளுமையை நிலைநாட்ட என்றூ எண்ணுகிறேன். இதை அடக்கி ஆள கற்றுகொண்டால் பாதி துன்பங்களும் கொடுமையும் குறையும்.
எந்த தவறும் செய்யாமல், புகார் சொல்ல வரும் பதிக்கப்பட்ட பெண்களை மேலும் இழிவுபடுத்தும் காவலர் இருப்பதால் குறைகள் சொல்ல தயக்கம் வருவது உண்மையே. இதற்காக விசாரணைகள் வந்தாலும் பாதித்த மனம் பழைய நிலைக்கு வருமா? வசதி இல்லாத காரணாத்தால் இதுபோல வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனைபேர்?
புத்தகம் பற்றி எழுதியமைக்கு நன்றி

8/12/2005 10:03:00 AM
SnackDragon said...

//வேறு வழியில்லாமல் இந்த வக்கிரங்களை கண்டுகொள்ளாமல் சகித்துகொண்டு, அதே நேரம் இப்படி ஒரு பதில் போட்டு பேசப்படும் விஷயத்தை கொச்சை படுத்தாமல் இருப்பது சீரிய அணுமுறை என்பது என் பணிவான அபிப்ராயம்.//

இதை தீவிரமாக நானும் ஆதரிக்கிறேன். ஏன் வேணுமென்றால் இந்தப் பின்னூட்டங்களை அழிக்கக் கூடசெய்யலாம். இங்கே எது பிரச்சினை என்று பார்க்ககூட கண்ணில்லாத ஜென்மங்களுக்கு என்ன கருத்து சுதந்திரம் என்ற பேரில் வன்முறை செய்ய அதிகாரம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரியவில்லை.
அப்பறம் நல்லா வருது வாயில அசிங்கமா.

8/12/2005 11:22:00 AM
Voice on Wings said...

டி.சே., மனதைப் பிசையும் தகவல்களையும், வரிகளையும் வழங்கியுள்ளீர்கள். தங்கமணி கூறியுள்ளது போல் விசாரணைகள் குறித்த தகவல்கள், இன்றைய நிலை ஆகியவற்றை அறிய முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும். Amnesty போன்ற இயக்கங்களின் கவனத்தை இந்நிகழ்வுகள் பெற்றனவா என்பதையும் அறிய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொரு வகையில் நீதி கிடைக்க வேண்டும். குறைந்தப்பட்சம், அவர்களது துயர் பரவலாக அறியப்பட்டால் நீதியின் கண்களைத் திறக்கும் சாத்தியங்களையாவது உருவாக்கலாமென நினைக்கிறேன்.

8/12/2005 12:06:00 PM
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

டீசே. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. இவற்றை அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! சக மனிதர்களைச் சமமாக மதிப்பதும், அவர்களின் உரிமையை ஏற்றுக் கொள்வதும் இன்னும் இந்தச் குமுகம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

8/12/2005 01:01:00 PM
Anonymous said...

பதிந்தது:முகமூடி

undefined

12.8.2005

8/12/2005 01:28:00 PM
முகமூடி said...

இந்த கொடுமைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் அம்மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் வழக்கம் போல் ஒரு கமிஷனை வைத்து காரியத்தை முடித்துக்கொண்டது. கமிஷன் முடிவுகள் என்றுமே நல்லதொரு தீர்ப்பை வழங்கியதில்லை. போலீஸ் ஒருவன் வன்புணர்ந்தால் அவனை தண்டிப்பது அல்ல பெருமை, அதை மறைக்க முயல்வதே அவமானம் துடைக்கும் வழி என்று நினைக்கும் பொறுக்கிகளின் கூட்டம் அரசாங்கம் என்ற பெயரில் இருக்கும்போது என்ன செய்வது. இந்த கொடுமைகளின் முடிவில் நிறைய பேரி "காணாமல் போனார்கள்". மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எந்த கேள்வியும் அற்று மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நம்பிக்கை கீற்று தென்பட்டபோதெல்லாம் வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் ஒரு அப்பா தடையுத்தரவு வாங்கி நாசம் செய்தான்.

இந்த கொடுமைகளை செய்த மிருகங்களுக்கு ஒரு தண்டனையும் கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி அவர்களது வீர தீர பராக்கிரமத்துக்கு - ஒரு தனி மனிதனை 200 கோடி செலவு செய்து 10 வருடம் கழித்து கொன்றது - விருதும் பணமுடிப்பும் பதவி உயர்வும் வேறு வழங்கி கௌரவித்த போது மிருகங்கள் ஆளும் இந்த கேடு கெட்ட சமூகத்தில் வாழும் அபாக்கிய நிலையில் இருக்கிறோமே என்று நொந்து கொள்ளத்தான் தோன்றியது.

8/12/2005 01:28:00 PM
இளங்கோ-டிசே said...

நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நன்றி.
//இதற்காக விசாரணைகள் வந்தாலும் பாதித்த மனம் பழைய நிலைக்கு வருமா? வசதி இல்லாத காரணாத்தால் இதுபோல வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனைபேர்?//
பத்மா நீங்கள் கூறியது உண்மைதான். இந்தப் புதினத்தில் கூட ஒரு சம்பவம் வரும். சிறையில் ஒரு முழுமாதக்கர்ப்பிணி அடைக்கப்பட்டிருப்பாள். பிரசவ காலம் என்றபடியால் எழுந்து நடக்கமுடியாமல் அவள் சிரமப்பட்டு அறை முழுதும் உதிரமும், மலமும், சிறுநீரும் படர்ந்து அந்தப்பெண் பிரசவ கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருப்பாள். போலீஸ் உதவவே மாட்டுது. அந்த நேரத்தில் இன்னொரு பெண் அந்தப் பகுதிக்குள் அடைக்க்பபடுகின்றபோது இந்தப்பெண்ணுக்கு நல்லகாலமாய் குழந்தையும் பிறந்துவிடுகின்றது. பிரசவத்திலேயே அவள் செத்துப்பிழைக்க, வெளியே வந்து விழுகின்ற தொப்புள்கொடியை/ ந்ச்சுக்கொடியை இந்தப்பெண்ணுக்கு எல்லாம் மற்றப் பெண் எவ்வித வைத்திய உதவியும் இல்லாமல் கையாலும், வாயாலும் கடித்துதான் பிரித்தெடுப்பாள். ஒருமாதிரி குழந்தையும், பிள்ளையும் தப்பி பிழைக்க, அந்தத் தாய் குடிப்பதற்கு தண்ணி கேட்கும்போது கூட போலீஸ், வீரப்பனுக்கு பிறந்த பிள்ளைக்கு எதற்கு தண்ணி என்றுதான் நக்கலடிப்பார்கள். அதற்கு சில மாதங்களுக்கு முந்தான் அந்தப்பெண்ணின் கணவனை போலீஸார் சூட்டுக்கொன்றிருப்பார்கள். பிறகு அந்தப்பெண் குழந்தையைப் பிரசவித்த வலியில் தூங்கிவிட, போலீஸ் குழந்தையை வெளியே கொண்டு போய் ஏதோ செய்து அதன் மூச்சையும் நிறுத்திவிட்டு அந்தபெண்ணிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தத்தாய் கதறுவாள், பாவியளே என்னையும் கொல்லுங்கடா, மனுசனை, குழந்தையை கொன்றுவிட்டு என்னையேன் உசிரோடு விட்டீர்கள் என்று. இன்று அந்தப்பெண் உயிரோடு இருந்தால், நியாயம், நஷ்டஈடு என்று இழவைக்கொடுத்தாலும் (அதற்கே சந்தர்ப்பம் இருக்கிறதோ தெரியாது :-() அவளது கணவனையும், குழந்தையையும் யாராலும் உயிரோடு திரும்பிக்கொடுக்கமுடியுமா?
....

பல தடவைகள் வாசிப்பை நிறுத்தி, மனசை வேறுதிசைகளில் அலையவிட்டுத்தான் இந்த புதினத்தை பூர்த்தி செய்ய முடிந்தது. தொடர்ந்து ஒரேமூச்சில் நிச்சயம் வாசிககவே முடியாது, நண்பர்களே :-(. இந்தப்புதினமே ஒரு குறிப்பிட்ட சிலரது/சில சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றதென்றால், முழுச் சமூகத்துக்கும் நடந்த சம்பவங்களில் முழுமையான தொகுப்பு எப்படி இருக்கும்?
...

8/12/2005 02:38:00 PM
Anonymous said...

பதிந்தது:Suresh - penathal

//இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்//

இதையேதான் நானும் உணர்ந்தேன், இங்கு பதிவும் செய்திருக்கிறேன்.

25.10.2005

10/25/2005 02:28:00 AM
பினாத்தல் சுரேஷ் said...

பதிந்தது:Suresh - penathal

//இந்தப் பழங்குடி மக்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து, அவர்களுக்காய் வாதாடிய ஒரு வழக்குரைஞரினால் இவை பதிவு செய்யப்பட்டு, ஒரு மூன்றாம் மனிதனாய், மேலைத்தேய வாழ்க்கைச் சூழலில் இதன் துயரங்களின் ஒரு துளியும் அனுபவிக்காது வாழும் என்னையே கலங்கிடச் செய்கின்றதென்றால், அதை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டுந்தான் என்னால் யோசிக்கமுடிகின்றது இந்தக்கணத்தில்//

இதையேதான் நானும் உணர்ந்தேன், இங்கு பதிவும் செய்திருக்கிறேன்.

10/25/2005 02:29:00 AM
Narain Rajagopalan said...

இந்த பதிவினை எப்படி பார்க்காமல் இருந்தேன் என்று நினைவில்லை. ஆனாலும், எதேச்சையாக இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பிருந்தது. நல்ல அறிமுகம் டி.சே. பிரச்சனைகளை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளுகிறது என்று மிக அருகிலிருந்து பார்த்த ஒருவர் எழுதியது என்னும்போது அவர்களின் வாழ்வின் வலி எத்தகையது என்று புரிகிறது. ம் படித்தப்போதே இன்னுமொருமுறை இந்த மாதிரியான புத்தகங்களை தவிர்ந்துவிட முடிந்தேன். காரணம், எவ்வளவு பேசினாலும்,எழுதினாலும் ஒரு நாளும் என்னால் அவர்களின் துயரத்தினையும், வலியையும் பங்கு போட முடியாது. உறைந்துப் போகும் வலிகளை விட சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு மனிதனாக இருப்பது தான் இம்மாதிரியான எல்லா புத்தகங்களின் இறுதி வேண்டுகோளாய் தெரிகிறது. இதில் எழும் தார்மீக கோவத்தினையும், இயலாமையையும் வகைப்படுத்திப் பார்த்தால் ஒரே எல்லைக்குள் எத்தனை வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன என்று புரிகிறது. சதாசிவம் கமிஷன் one more in the count.

10/27/2005 03:55:00 PM
Anonymous said...

Entu theerum Inthak kodumaikalum, thuyarangalum!

10/28/2005 02:13:00 AM
தமிழ்நதி said...

டி.சே.'சோளகர் தொட்டி'யை என்னால் தொடர்ந்து வாசிக்க முடியாமல் அடிக்கடி மூடிவைத்துவிட்டேன். சில பக்கங்களைப் புரட்டிக்கொண்டு போய்விடவே மனம் அவாவியபோதிலும், அவ்வாறு செய்வதால் அந்த வரலாற்றை அறியமுடியாமற் போய்விடுமோ என்னும் ஒரு காரணத்தால் உந்தப்பட்டே வாசித்து முடித்தேன். மனிதருக்கு மனிதர் இப்படிக்கூடச் செய்யமுடியுமா என்று நினைத்துப் பார்க்கும்போது... ச்சே... எவ்வளவு கேவலமான உலகத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று எம்மை நாமே நிந்தித்துக்கொள்ள வேண்டியதுதான். 'சோளகர் தொட்டி'நெஞ்சில் ஆறாத ரணமாகவே இருக்கிறது. அந்த ரணத்தைக் கொஞ்சம் 'அயர்' உரித்துப் பார்த்திருக்கிறது உங்கள் பதிவு.

3/11/2007 12:57:00 PM