கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பெருந்தலைகள் உருட்டும் ஆட்டத்தில்....

Friday, December 29, 2006

'"இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?" என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.'
(வெ. சாவின் இக்கட்டுரையை விரிவாக வாசிக்க....)

வெங்கட் சாமிநாதனின் முன்னுரையை வாசித்தபோது 'அடியேனையும்' இந்த முன்னுரையில் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம்வர ப்ளாஷ்பாக்கை சுழலவிட்டேன் (எனது கட்டுரையைக் கீழே தந்திருக்கின்றேன்). 2004ல் இயல்விருதுக்காய் வெ. சா ரொரண்டோ வந்தசமயம், இதுவரை ஈழத்தமிழ் படைப்புக்கள் குறித்து எதையும் எழுதவில்லை என்ற கேள்வியை நான் நேரடியாக கேட்டதாய் நினைவினில்லை. 'அணங்கு' நிகழ்வு பற்றித்தான் ஒரேயொரு கேள்வியை அவரிடம் நேரடியாக கேட்டிருக்கின்றேன். மேலும் தளம்பாத நிறைகுடம் என்று வெ.சாவினால் விபரிக்கப்பட்ட நண்பர்தான், 'நீர் கேட்ட கேள்வி நியாயந்தான் இன்னும் விரிவாக கேட்கவேண்டும்' என்று கேள்விகளின் பின்பான நேரத்தில் -இன்னும் கேளும் என்று- உசுப்பிவிட முயன்றவர். எனினும் உந்த உசுப்பலுக்கு எல்லாம் நான் மயங்கமாட்டேன் என்று வாங்கவேண்டிய புத்தகங்களைத் தேடியெடுக்கப் போய்விட்டேன் என்பது வேறுவிடயம்.

அந்தக் கூட்டத்திற்கு போனபோது வெ.சா, பா.அகிலன், சனாதனன், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் படைப்புக்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றார் என்ற புரிதலோடே சென்றிருந்தேன். எனது ஆதங்கம், அவருக்குப் பரீட்சயமான ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து அந்தக்கூட்டத்தில் பேசவில்லை என்பதாக இருந்தது என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்.

'நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு, புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனுன், மு.ராமசாமியைப் பற்றி உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).'

என்று வேறொரு வாசிப்பை முன்வைத்துக் கூறியதை இதுதான் சந்தர்ப்பம் என்று -வெ.சாவின் 'சாதிப்பின்புலமும் காரணமாயிருக்கலாம்' என்ற ஒற்றை வசனத்தை வைத்து- ஜெயமோகனும் என்னை வெருட்டும் ஆட்டத்தில் களமிறங்கியிருந்தார் (பிறகு விவாதம் வேறு திசையில் சென்றததால் அந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு நான் மன்னிப்பு கேட்டு நீக்கவும் செய்திருந்ததாயும் நினைவு). ஆனால் இற்றளவும் வெ.சாமிநாதன் தனது சாதி அடையாளங்களை மறந்து/மறுத்து வந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இங்கே வரும் 'விளம்பரம்' என்ற சஞ்சிகையில் வெ.சா அவ்வப்போது பத்திகள் எழுதி வருகின்றவர். சில மாதங்களுக்கு முன் தலித் இயக்கங்கள், திருமாவளவன், கிருஸ்ணசாமி போன்றோரை 'வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல' தனது உயர்சாதி விமர்சனப்பார்வையால் நுட்பமாய் கீழ்நிலைக்கு தள்ளியிருந்தவர். மேலே தரப்பட்ட கட்டுரையில் கூட ஈழம் போன பெரியாரைப் பற்றிய வெ.சாவின் குறிப்புக்களிருந்து அந்த ஆதிக்கப்பார்வையை அறிந்துகொள்ளலாம். இன்னவும் பெரியார் விவாதித்த பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற வித்தியாசத்தைக் கூட பிரித்துபார்க்கமுடியாமல் ஏதோ எல்லா பார்ப்பனர்களையும் பெரியார் நிராகரித்தார் என்று குழந்தை போல கூறிக்கொண்டிருப்பது வெ.சா நெருங்கி நிற்கும் அரசியல் புள்ளியை அறிந்துகொள்ள இன்னும் உதவும். ஈழத்திலிருந்து வரும் எவரும் பெரியாரின் பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற உரையாடலை வெள்ளாளன்/ வெள்ளாள ஆதிக்கம் என்ற புள்ளிகளில் இணைத்து பார்க்க முடியும், ஒரு அமெரிக்க கறுப்பினத்தவனின் வாழ்க்கையை தலித் தன் வாழ்க்கையோடு ஒத்திசையச் செய்வது மாதிரி. மேலும் புலம்பெயர்ந்தவர்கள் பாஸிசக் கரங்களுக்கு எதிராக எழுதுகின்றார்கள் என்று கூறுகின்ற வெ.சாவிற்கு தமிழ்நாட்டின் தலித் எழுத்துக்கள் என்னவாய் தெரிகின்றதாம்? அவரது கண்களுக்கு சினிமா வெறி கவிதைகள் மட்டுமே தெரிகின்றது. அதிகார மையங்கள் சாதி ஒடுக்குமுறையாளர்கள் போன்ற பாஸிசக்கரங்களுக்கு எதிராய் தமிழகத்து தலித்துக்கள், இடதுசாரிகள் நிறையவே எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெ.சாவிற்கு யாராவது நினைவுபடுத்தினால் நல்லது. ஆகக்குறைந்து இதைப் பிரசுரித்த 'முன்னாள் இடதுசாரிகளான' திண்ணை ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்தவர்களாவது வெ.சாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கலாம்.

வெ.சாமிநாதனுக்கு குறிப்பு என்று எழுதியதுபோல அண்மையில் சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோதும் அதுகுறித்து சிலவற்றை எழுத விரும்பியிருந்தேன். எனினும் ஏற்கனவே எதையோ எழுதப்போய் அது பெரும் விவாதமாய் நீட்சியடைந்து என் தலையெல்லாம் பெருந்தலைகளால் உருட்டப்பட்டதுபோல இதற்கும் நேர்ந்தால், எனது அஸின், பாவனா கனவுகளுக்கு என்னவாவது என்ற கவலையில் அமைதியாகிவிட்டேன் என்பதை ஒரு முக்கியமில்லாத குறிப்பாய் பதிவுசெய்துவிடுகின்றேன்.

வெ.சாவை முன்வைத்து நடந்த விவாதம் குறித்து விரிவாக அறிய இந்தப்ப்க்கத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப்பொழுது!
~ டிசே தமிழன்
-

எப்போதுமே இலக்கியக்கூட்டங்கள் வறட்சியாக இருக்கின்றபோதும், நேரங்கிடைக்கும்போதெல்லாம் இப்படியான கூட்டங்களிற்கு போகாமல் இருக்க மனம்விடுவதில்லை. இப்படியான ஒரு மனநிலையுடந்தான் வெங்கட்சாமிநாதனுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். போனதற்கு இன்னொரு காரணம், நிரம்ப புதுப்புத்தகங்கள் வாங்கலாமென்பது கூடத்தான்(எல்லாப்புத்தங்களையும் வாங்கிடவேண்டும் என்ற ஆசை ஏன் ஓர்போதும் நிறைவேறுவதில்லை? ) ஒவ்வொரு முறையும் தமிழகத்திலிருந்து இப்படியானவர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி என்ன மதிப்பீட்டை வைத்திருப்பார்கள் என்ற curiosity எப்போதும் என் மனதில் அலைபாய்ந்தபடியிருக்கும். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை வாசிக்க வசதிகள், resources (வளங்கள்?) இல்லாதபோதும், இப்படி ஒரு புலம்பெயர்பயணம் வரும்போது, அங்கேயிருப்பவர்கள் ஏதாவது இவைபற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் home work செய்துவிட்டு விமானம் ஏறுவார்கள் என்னும் நம்பிக்கையை எவரும் இதுவரை பூர்த்திசெய்ததில்லை. அதற்கு விதிவிலக்குமல்ல வெ.சாமியும்.

ஒர் அறிமுகமும், அவரது பொழிப்புரையும் முடிய, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவோம் என்று அழைப்பு விடுத்தாலும், வெ.சாமியிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு கேள்வியிற்கும் பதில்களை கொஞ்சம் நக்கலும் நளினமாயும் வெட்டிப்பேசியபடி இருந்தார். அவரில் இரசித்த இரண்டு விடயங்கள், தனது கருத்தை மற்றவர்கள் ஓமோம் என்று சொல்லி தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை மற்றது நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு. புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனும், மு.ராமசாமியைப் பற்றி 'உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).

தன்னைப் பாதித்ததைப் பற்றி மட்டும்தான் எழுதுவேன். சரியான விதத்தில் எழுதப்பட்டிருந்தால் மற்றையோரைப் போய்ச்சேரட்டும், இல்லாவிட்டால் காற்றில் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை என்று வெ.சாமி சொன்னதில் ஒரு படைப்பாளியின் கம்பீரத்தைப்பார்க்கமுடிந்தது. ஈழத்தமிழ் இலக்கியங்கள் ஏன் அதிகம் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பதற்கு, வெ.சாமி அது arrogance என்று சொல்லப்போக இன்னொருவர் roughயாய் இருக்கிறது ignorance என்று மாற்றிச்சொல்லுங்கள் என்று மன்றாட இறுதியில் எந்த வார்த்தையில் சமரசம் செய்தார்கள் என்பதை யானறியேன் பராபரமே. ஆனால், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுப்பிய நுட்பமான கேள்வியை, 'நீங்கள் கூட ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி அந்தக்காலத்தில் கூட எழுதவில்லை' என்பதை வெ.சாமி சமார்த்தியமாய்த் தவிர்த்துவிட்டார். அது சரி, நீங்களெல்லாம் தமிழகத்து 'இலக்கிய ஜம்பவான்களின்' திருவாய்மொழி மலர்ந்து அங்கீகாரம் வரவேண்டும் ஏன் எதிர்பார்க்கிறியள் என்று கூட்டத்திலிருந்து இன்னொருவர் வீசிய கேள்வியில் நிரம்ப உண்மையிருக்கிறதுதானே.

வெ.சாமிநாதன், இன்றைய எழுத்தாளர்களில், யூமாவாசுகி, பெருமாள்முருகன், இமையம் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கியமாய் யூமாவாசுகியின் 'ரத்த உறவை' எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சிலாகித்துச் சொன்னார். பெண்ணிய எழுத்துக்கள் பற்றியும் கேள்விகள் எழும்பின. வெ.சாமியிற்கு பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுதுவதில் எல்லாம் உடன்பாடிலை. Rice cooker ஆவி (நல்லவேளை பிரமீளின் ஆவியில்லை) மாதிரி எல்லாம் சீறிபாய்ந்து பின் தானாகவே அனைத்தும் அடங்கிவிடும் என்றார். சரி நீங்கள் பெண்கள் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆளுக்கொரு கருத்துக்களை சொல்கிறியள், ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் எழுதும்போது எந்த பேச்சுமூச்சையும் காணவில்லையே என்று கேட்க, அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் அவற்றையெல்லாம் புறத்தள்ளுங்கள் என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களில் கூட இப்படியான சித்தரிப்புக்கள் எல்லாம் இருக்கிறதே என்று யாரோ கூற, அப்படி என்றால் அவற்றையும் வாசிக்காமல் தூக்கியெறியுங்கள் என்று கொஞ்சம் உரத்தகுரலில் கூறினார். (ஜெயமோகன் கவனிக்க, நீங்கள் வெ.சாமி முன்னட்டையோடு ஒரு சிறப்பிதழே சொல்புதிதில் வெளியிட்டும் அவர் உங்கள் கட்சி இல்லையாம். இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வெ.சாமி தமிழ்நாட்டை மிதிக்கும்போது சொன்னால், record செய்த tape யாரிடமாவது இருக்கும் வாங்கி அனுப்பிவிடுகிறேன். ஆனால் பதிவுக்கட்டணம் இலவசமல்ல.

இபபடி இந்தக்கூட்டத்திலும், இன்னொரு பிம்பம் உடைந்துபோன அலுப்போடு வீடு வந்துசேர, நான் வாங்கிய புத்தகங்களின் பக்கங்களிலிருந்து வேறொரு உலகம் விரிவுகொள்கிறது. அவை ஒரு இலக்கியக்கூட்டத்தைவிடவும், ஒரு படைப்பாளியை விடவும் என்னுடன் அதிகம் நேசம் கொள்கின்றன.

(http://www.geotamil.com/pathivukal/djtonvenkatsaminathan_june2004.html)எதிர்வினை!
வெ.சா. பற்றி தமிழனின் குறிப்பு...!


- ஜெயமோகன் -

எதிராளியின் வாதங்களை தங்களுக்கு சாதகமாக திரித்துக் கொள்வதை ஓர் உத்தியாக இடதுசாரிகளில் ஒரு சாரார் கடைப்பிடிப்பதுண்டு. அவ்வுத்தி மூலமே தோற்கடிக்கப்பட்ட மனிதர் வெசா. அதே உத்தி தொடர்வதையே தமிழனின் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு பெரிய சிந்தனையாளாராக மலர்ந்திருக்க வேண்டிய வெ சாவை குறுக்கியது எதிரிகளின் இந்த உத்தியே. உதாரணாமாக வெசா 'உள்வட்ட சித்தாந்தம்' ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது இலக்கியம் என்பது அனைவருக்கும் உரிய ஒன்றல்ல, அது அறிவார்ந்த தெரிவு ரசனை தேடல் கொண்ட சிறு உள்வடத்துக்கு உரியது, அந்த உள்வட்டமே இலக்கியத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டுசெல்லும் ஆகவே 'மக்கள் இலக்கியம்' என்று ஒன்று இருக்க முடியாது என்றார் அவர். இது மாத்யூ ஆர்னால்ட் காலம் முதல் உள்ள ஒரு முக்கியமான தரப்பு. இதில் எந்த வர்க்க சாதிய அடையாளமும் அவரால் தரப்படவில்லை. இதை பிராமணார்களுக்கு மட்டுமே இலக்கியம் தேவை என்று அவர் சொல்வதாக திரித்து பதினைந்துவருடம் இங்கே பிரச்சாரம் நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது. நான் என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். வெசா மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்ல முயன்று தன் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டார். தமிழனின் குறிப்பே உதாரணம். வெசா என்ன சொல்கிறார்? ஈழத்தமிழர் கூப்பிட்டார்கள் என்பதற்காக தயாரித்துக் கொண்டுவருபவன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்கிறார். தமிழன் எப்படி திரிக்கிறார்? தமிழ்நாட்டு விமரிசகன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று வெ சா சொல்கிறார் என்ற தொனியில் இங்கேதான் சாதிவெறி போன்ற உள்நோக்கங்கள் உள்ளன. இதுவே தமிழில் உயரிய விவாதம் நிகழாமல் செய்து சிந்தனையை மழுங்கடிக்கிறது.

(http://www.geotamil.com/pathivukal/jeyamoganondj2.html)

4 comments:

-/பெயரிலி. said...

/வெ.சாமிநாதனுக்கு குறிப்பு என்று எழுதியதுபோல அண்மையில் சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோதும் சிலவற்றை எழுத விரும்பியிருந்தேன். எனினும் ஏற்கனவே எதையோ எழுதப்போய் அது பெரும் விவாதமாய் நீட்சியடைந்து என் தலையெல்லாம் பெருந்தலைகளால் உருட்டப்பட்டதுபோல இதற்கும் நேர்ந்தால், என் அஸின், பாவனா கனவுகளுக்கு என்னவாவது என்ற கவலையில் அமைதியாகிவிட்டேன் என்பதை ஒரு முக்கியமில்லாத குறிப்பாய் எழுதுகின்றேன்./

எமது தம்பி தரமான இடர்க்கியவாலிகள் பட்டியலுள்ளே இந்த அறிவித்தலோடு அயிக்கியமாகிவிட்டாரென அரியத்தருகிறோம்

12/29/2006 11:06:00 AM
இளங்கோ-டிசே said...

ஒரு 'இழக்கியவாதியின்' கதை எழுதியவர் என்னையும் 'இடர்க்கியவாலிகள்' பட்டியலில் அயிக்கியமாக்கியதை பெரும்பாக்கியமாய் எண்ணி அகமகிழும் அதேசமயம், வெ.சா குறிப்பிடும் 'ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக' என்பதிலுள்ள கூட்டம் என்பது எதைக்குறிக்கும் என்பதற்காய் ஆறாவது அறிவை முடுக்கிவிட்டுள்ள்ளேன் என்பதையும் பெருமையாக கூறிக்கொள்ள விழைகின்றேன். எப்போதும் தமிழ்ச்சினிமா சண்டைக்காட்சிகளில் வரும் நாயகர்களைப்போல கூட்டங்களுக்கு தனித்தே போகும் எனக்குப் பின்னும் invisible men/women இருக்கின்றார்கள் என்பது அச்சத்தையே ஏற்படுகின்றது :-).

12/29/2006 03:10:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணை இப்பத்தான் திண்ணைக் கட்டுரையை வாசித்து விட்டு வெசாவுக்கு கனடாவிலை தலையிடி குடுத்தது யாராக இருக்கும் என்று மண்டையைப் போட்டுக் குழப்பி உம்மடை ஞாபகம் வந்ததிலை விட்டுப் போன இந்தப் பதிவைப் படிச்சன்.

ஒரு சின்னச் சந்தேகம் நாடகம்/கூத்து பற்றி வெ.சா சொன்னது புரிசை தம்பிரானா வலசை தம்பிரானா?பெயர் புதுசாக இருக்கிறதே?

12/30/2006 03:36:00 PM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், நீங்கள் குறிப்பிட்டமாதிரி அது புரிசை தம்பிரானாகவே இருந்திருக்கவேண்டும். கவனக்குறைவால் அப்படி எழுதிவிட்டேன். குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி. மாற்றிவிடுகின்றேன்.

12/31/2006 09:26:00 PM