-எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை முன்வைத்து-
அவிழ்க்க முடியாத புதிர்களும், சிக்கல்களும் நிறைந்த மர்மங்கள் பெருகும் வெளியாகத்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இருக்கின்றது. வாழ்தல்/வாழ்க்கையின் அர்த்தம் என்னவாக இருக்குமென சிந்திக்கத்தொடங்கி முகிழ்ந்த இருத்தலியமும், தனக்கான புதர் அடுக்குகளில் சிக்கிக்கொண்டு இன்னமும் கேள்வியை ஆழமாக்கியதே தவிர தெளிவான பதில்களைக்காணாது தவிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் 'எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தாலும்' என்றுமே இருக்கக்கூடிய பிரச்சினையாக இருத்தலியம் குறித்த தேடல்கள் ஊற்றைப்போல பெருகிக் கொண்டிருக்கும்போலத்தான் தோன்றுகின்றது.
வெவ்வேறுபட்ட மனிதர்கள் சிலரின் வாழ்வையும் அவர்களின் திசை மாறும் விருப்புக்களையும்/குணாதிசயங்களையும் பின் தொடர்ந்தபடி இருக்கின்றது யாமம் நாவல். யாமம் என்கின்ற அத்தரின் மணமும், இரவும் இந்நாவலில் வரும் அனைத்து மாந்தர்களுக்குள்ளும் கசிந்தபடியிருக்கின்றன. சதாசிவம் பண்டாரம் நாயொன்றின் பின் அலைவது நேரடிச் சம்பவமாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் இப்புதினத்தில் உள்ள எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒன்றை உருவகித்து அதைத் தேடி -நாயின் பின்னால் பண்டாரம் அலைவதுபோலத்தான்- வாழ்வு முழுதும் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். சதாசிவம் பண்டாரத்தின் மனது அடிக்கடி அலை பாய்ந்தாலும், நாயின் பின்னால் மட்டுமே பின் தொடர்வது என்பதில் தெளிவாக ஒவ்வொருபொழுதிலும் இருப்பதுபோல, இந்நாவலின் பிற மாந்தர்களால் முடிவதில்லை. ஆதலால் அவர்கள் எதற்காகவோ தொடங்கும் தம் பயணங்களைத் திசை திருப்ப வேண்டியதாகிப் போகின்றது; அவலங்களுக்குள்ளும், துரோகங்களுக்குள்ளும், கண்ணீருக்குள்ளும் சிக்கி மீளமுடியாத புதிர்களின் சுழல்களுக்குள் அலைக்கழிந்தபடியிருக்கின்றார்கள்.
அப்துல் கரீம் ரோஜாவின் இதழ்களைக் காய்ச்சி வடிக்கும் அத்தருக்கு வெள்ளைக்காரர்கள் முதல் உள்ளூர்வாசிகள்வரை வாடிக்கையாளராக இருக்கின்றார்கள். தலைமுறை தலைமுறையாக ஆண் சந்ததிகளால் கைமாறிக்கொண்டிருக்கும் அத்தர் செய்யும் தொழில் இரகசியம் அப்துல் கரீமிற்கு ஆண் சந்ததி இல்லாததோடு அழிந்தும் போய்விடுகின்றது. அத்தரை உடலில் பூசியவுடன் உடல் ஒரு விநோதமான நிலையை அடையவும்செய்கின்றது. காமத்தின் அரும்புகள் ரோஜாவின் இதழ்களைப் போல மேனியெங்கும் விரியத்தொடங்கிவிடுகின்றது. அத்தரின் நறுமணம் உடல்களை ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு கொண்டு வந்து மர்மம் நிறைந்த முடிவுறாத ஆட்டங்களை கிளர்ச்சியுடன் ஆடச்செய்கின்றது.
மூன்று மனைவிகளிலிருந்தும்..., அத்தரின் துணையிருந்தும் கூட..., அப்துல் கரீமால் தனக்குப் பிறகு ஒரு ஆண் சந்ததியை உருவாக்க முடியாது போகின்றது. அதுவே கவலையாகவும் அலுப்பாகவும் மாற தனது மனைவிகளின் மீது கவிழ, வெளியாள் ஒருவரால் அறிமுகப்படுத்தப்படும் குதிரைகளை வைத்து ஆடும் சூதாட்டத்தில் தன்னைக் கரைத்துக்கொள்கின்றார். எல்லா எண்ணங்களுமே ஒரு கட்டத்தில் குதிரைகளாகவும், சூதாட்டமாகவும் மாறிப்போகையில் கடன் நிறைந்து கரீம், வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் ஒருநாள் காணாமற்போய்விடுகின்றார். அதனால் செல்வச் செழிப்பிலிருந்த மூன்று பெண்களுக்கும் தமக்கான சச்சரவுகளோடு தங்களைத் தாங்களே பார்க்க வேண்டியிருக்கின்றது. சாம்பிராணித் தூள் செய்கின்றார்கள், மீன் விற்கின்றார்கள், கொலரா வந்து கரீமின் மூத்த மனைவி ரஹ்மானியை காவுகொள்ள, உப்பு அகழ நெடுந்தொலைவுக்கு உப்பளத்துக்கும் இப்பெண்கள் பயணிக்கவும் செய்கின்றார்கள். கரீம் என்ற ஒருவரின் வாழ்வுக்காய் ஓரிடத்தில் இணையும் இப்பெண்கள் தாங்கள் பகல்வேளைகளில் ஆடுகின்ற சோழியாட்டத்தின் காய்களைப் போல பின் திசைக்கொன்றாய் சிதறிப்போகின்றார்கள்.
மற்றொரு திசையில், பத்ரகிரி, திருச்சிற்றம்பலம் என்ற சகோதரர்களைச் சுற்றிக் கதை நகர்கின்றது. தமது இளையவயதில் தம் தாயை பறிகொடுத்த இச்சகோதரர்கள் நங்கைச் சித்தியின் மூலம் வளர்க்கப்படுகின்றார்கள். பத்ரகிரி, இந்தியாவில் முதன் முதலில் நிலஅளவை அறிமுகப்படுத்திய லாம்டன் குழுவில் சேர்ந்தியங்க, கணிதத்தில் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கும் திருச்சிற்றம்பலம் இலணடனுக்கு மேற்படிப்புக்காய் பயணிக்கிறார். அக்காலப் பகுதியில் தனது மனைவி தையல்நாயகியை அண்ணன் வீட்டில் விட்டுவிட்டு திருச்சிற்றம்பலம் கப்பலேறுகின்றார். தொடக்கத்தில் மிக அந்நியோன்னியமாக பத்ரகிரியின் மனைவி விசாலாட்சியும், தையல்நாயகியும் இருந்தாலும் -பத்ரகிரிக்கும், விசாலாட்சிக்கும் இடையில் உடலுறவு சார்ந்த புது உறவு முகிழ்கையில்- வெறுப்பு அவர்களுக்கிடையில் ஒரு அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றது. ஒரு குடிகாரனாக, சுகபோகியாக இலண்டனுக்குப் போகும்வழியில் கப்பலில் திருச்சிற்றம்பலம் சந்திக்கின்ற சற்குணம் காலப்போக்கில் விளிம்புநிலை மனிதர்களுக்காய் போராட்டங்களில் ஈடுபட்டு, இறுதியில் ஜெயிலுக்குள் அடைபடுகின்றான். அதேவேளை இலணடன் தனக்குரிய நகரல்லவெனத் தொடக்கத்தில் நினைக்கும் திருச்சிற்றம்பலம் பின்னர் இலண்டன் சீமாட்டி உட்பட்ட படித்த/செல்வந்த வர்க்கத்தினரிடையே தன்னையும் அவர்களில் ஒருவனாக மாற்ற முயற்சிக்கின்றான்.
பத்ரகிரிக்கும், அவரது தம்பியின் மனைவியான தையல்நாயகிக்கும் இருக்கும் 'உறவு' தெரிந்து, பத்ரகிரியின் மனைவி பத்ரகிரியைக் கைவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்புகின்றார். பத்ரகிரியால் தையல்நாயகிக்குப் பிறக்கும் குழந்தையும் சில மாதங்களில் இறந்துவிட, தையல்நாயகி உளச்சிதைவுக்கும் ஆளாகின்றார். இலண்டனிலிருந்து திரும்பி வரும் திருச்சிற்றம்பலம் நடந்தவையெல்லாம் அறிந்து அடுத்து என்ன செய்வதெனத் திகைக்கிறார். இவ்வாறாக அவரவர் நினைத்தற்கு மாறாக வெவ்வேறு திசைகளில் ஒவ்வொருவரின் வாழ்வும் அமைந்துவிடுகின்றது.
இன்னொரு திசையில் கிருஷ்ணப்ப கரையாளரையும், எலிஸபெத் என்ற வெள்ளைக்காரப் பெண்மணியையும் சுற்றிக் கதை நகர்கின்றது. பெருஞ்சொத்திருக்கும் கிருஷ்ணப்ப கரையாளர் தனது உறவு முறை உள்ள ஒருவரோடான சொத்துத் தகறாரொன்றில் அலைவதோடு நாவலில் அறிமுகப்படுத்தப்படுகின்றார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து தவிக்கும் எஸிசபெத் வேலைக்காக இந்தியா அனுப்பப்படுகையில் பதின்மவயதிலேயே பாலியல் வன்முறைக்குள்ளாகி பின்னாட்களில் பாலியல் தொழிலாளியாகின்றார். எலிஸபெத்தோடு தனக்குச் சொந்தமான மலை வீட்டில் நாட்களைக் கழிக்கும் கிருஸ்ணப்பர், காட்டின் அழகில் தன்னைத் தொலைத்து இனிசொத்துத் தகராறு வேண்டாமென உறவுகளுடன் சமரசம் செய்கின்றார். எலிஸபெத்துக்கும் தனக்கு மிச்சமாகவிருக்கும் மலைவீட்டையும் சூழவிருக்கும் நிலப்பரப்பையும் கிருஸ்ணப்பர் எழுதிக்கொடுக்கின்றார். அந்த மலைகளில் தேயிலைச் செடியை அறிமுகப்படுத்தி வெள்ளைக்காரர்கள் காட்டின் இயற்கைச் சூழலைச் சிதைத்து தமது செல்வத்தைப் பெருக்கத் தொடங்குகின்றதான புள்ளியில் அக்கதையின்னும் நீளுகின்றது.
இன்னொரு கதையில் சித்தர்கள் மீது ஈர்ப்பு வந்து ஒரு நாயின் பின் தொடர்ந்து செல்லும் சதாசிவம் என்ற பண்டாரம் அறிமுகப்படுத்தப்படுகின்றார். நாயை மாதக்கணக்கில் பின் தொடர்ந்து போகின்ற பாதையில் ஒரு பெண்ணோடு உறவு முகிழ்ந்து அவளுக்குப் பிள்ளை பிறக்கின்ற சமயத்தில், நாய் வேறு இடத்துக்கு நகர, பெண்ணையும் பிறக்கப்போகும் குழந்தையையும் கைவிட்டு சதாசிவம் பண்டாரம் நடக்கத்தொடங்குகின்றார். இறுதியில் பட்டினத்தார் சமாதியடைந்த இடத்தில், தன்னையும் இறுக்கப்பூட்டி நீண்டநாட்களாய் உள்ளேயிருந்து, ஒரு நாளில் ஊர்ச் சனம் கதவுடைத்துப் பார்க்கும்போது - எல்லாச் சித்தர்களையும் போல- அகல் விளக்கை மட்டும் ஒளிரவிட்டு காணாமற் போய்விடுகின்றார்.
இவ்வாறு நான்கு வெவ்வேறுபட்ட கதைகளில், பல்வேறு மாந்தர்களும் உலாவினாலும் இப்புதினத்தின் உள்ளே இழைந்துகொண்டிருப்பது வெள்ளைக்காரர்கள் கீழைத்தேய நாடுகளைக் கைப்பற்றி காலானித்துவ நாடுகளாக்கியது பற்றிய சாரமேயாகும். வாசனைத் திரவியங்களுக்காய் இந்தியாவிற்கு வருவதில் ஆரம்பிக்கும் வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தமது கிழக்கிந்தியக் கொம்பனிகளை விசாலிப்பதும், காலனித்துவ நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதும்/சூறையாடுவதும் என இக்கதைகளின் பின்னால் கடந்தகால வரலாற்றின் அலைகளே அடித்தபடியிருக்கின்றன. கடலோர மீனவக்குடும்பங்களைத் துரத்தி தமது துறைமுகங்களை நிர்மாணிப்பதும், நன்னீர்க்கிணறுகளை தமக்கு மட்டும் உரியதாக்கின்றதும், மலைகளில் பணங்கொழிக்கும் தேயிலை போன்றவற்றை அறிமுகப்படுத்துவதுமென பிரிடடிஷ் மேலாதிக்கம் விரிவாக இப்புதினத்தில் விதந்துரைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்தப்புதினம் ஒரு புதுவிதமான வாசிப்பைக் கோருகின்றது எனலாம். இன்னுஞ்சொல்லப்போனால் தமிழில் இவ்வாறான காலனித்துவ விளைவுகள் குறித்த நாவல்கள் மிகக்குறைவாகவே வந்திருக்கின்றன என்கின்றபோது 'சில விமர்சகர்கள்' ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூச்சர்க்கரை போல அளவுக்கு மீறி விதந்தோத்துவதில் வியப்பும் இலலைத்தான்.
ஆனால் இப்புதினம் தன்னை ஒரு வித்தியாசமான நாவலாக தமிழ்ச்சூழலில் முன்வைக்க முடியாதளவுக்கு பல சரிவுப்புள்ளிகளையும் கொண்டிருக்கின்றது. முக்கியமாய் இந்நாவலின் கதைக்களன் இன்னும் விரிவாக காலனித்துவத்தின் கூறுகளை பேசுவதற்கான வெளிகளைக் கொண்டிருக்கும்போது தனிமனிதர்களின் வாழ்வுப்புள்ளியில் மட்டும் வந்து சிக்கிச் சிதைந்துபோகின்றது. வெள்ளைக்காரர்களும் காலனித்துவமும் இப்புதினத்தில் அறிமுகப்படுத்தப்போடும்போது ஒருவித எதிர்மனோநிலையில் 'மட்டுமே' அறிமுகப்படுத்துகின்றார்கள். உண்மையில் காலனித்துவத்தால் எவருடைய அதிகாரங்களும், செல்வாக்குகளும் இல்லாது போனது என்று யோசித்தால் நாம் காலனித்துவத்தால் எதிர்விளைவுகள் 'மட்டுமே' உண்டானதென அறுதியாகச் சொல்லமுடியாது. காலனித்துவம் நம் நாடுகளுக்கு வரமுன்னர் நம் நாடுகளில் 'எல்லோருடைய வாழ்வும்' செழிப்பாகவும் சமத்துவமாகவும் இருந்ததுமில்லை. அப்போதும் ஒரு இருண்ட வாழ்வே பலருக்குத் திணிக்கப்பட்டிருக்கின்றது. எத்தனையோ உரிமைகள் மறுக்கப்பட்ட அவர்கள் காலனித்துவத்தால் மதம் மாறியோ இன்னபிறவாலோ 'சாதாரண மனிதர்களுக்குரிய' ஒரு சில உரிமைகளையாவது பெற முடிந்திருந்தது. ஒரு கறுப்பனாய், அடிமைப்பட்டிருக்கும் நாட்டிலிருந்து இங்கிலாந்து செல்லும் சிற்றம்பலத்தை ஆங்கிலேய படித்த உயர்சமூகம் ஏற்றுக்கொள்வதைப்போல, இந்தியாவிலிருந்த பிராமண/வேளாளர் உள்ளிட்ட உயர்சமூகங்கள் தலித்துக்களை அவர்களின் திறமைக்காய் ஏற்றுக்கொண்டிருந்தனவா என்றால் ஏமாற்றமான பதிலகளையே நமது கடந்தகால வரலாறு தருகின்றது. காலனித்துவத்தால் மிக மோசமான விளைவுகளே வந்தது என்று சொல்லபபட்டிருக்கின்றது; தொடர்ந்து கற்பிக்கப்படவும் செய்கின்றது. ஆனால் இன்றும் பின்-காலனித்துவ சூழ்நிலையையே இந்தியா/ஈழ உயர்வர்க்கங்கள் விரும்பிக்கொண்டிருக்கின்றது ஏன் என்று யோசிக்கும்போது புலப்படாத பல 'அரசியல்கள்' நமக்கு விளங்கக்கூடும். இவ்வாறான பல புள்ளிகளை நோக்கி வாசகர்களை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய யாமத்தின் கதைக்களன் காலனித்துவததை ஒரு 'தீய' சக்தியாக அறிமுகப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில் வீழ்ச்சியையும் அடையத் தொடங்கிவிடுகின்றது (காலனித்துவ காலத்தில், பிறகு யார் உடனேயே காலனித்துவவாதிகளோடு குழைந்தும் கும்பிட்டும் பதவிகளை வாங்கிக்கொண்டார்கள் என்பதையும் யோசித்தும் பார்க்கலாம்).
இப்புதினத்தின் இன்னொரு பலவீனம் என்றால், அது காமத்தைப்பற்றி பேசவேண்டிய பொழுதுகளிலெல்லாம் பேசாது ஒன்றிரண்டு வார்த்தைகளோடு தப்பியோடுவது. கதாமாந்தர்களிடையே காமம் பிரவாகரிக்கும் எல்லாப்பொழுதுகளிலும் விரிவாக எழுதவேண்டுமென்ற அவசியமில்லை; ஆனால் அவை ஒருபொழுதில் கூட விரிவாகப் பேசப்பட்டு வாசிப்பவரை அந்தப்புள்ளிக்குள் இழுத்துச் செல்லவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கின்றது. முக்கியமாய் பத்ரகிரிக்கும் அவனது தம்பி மனைவுக்குமான உடலுறவு முகிழ்வதற்குக் கூட 'குறிப்பிடும்படியான' காரணங்கள் நாவலில் இல்லை. வாசிப்பவருக்கு எங்கேனும் ஒருவீட்டில் இப்படி அண்ணன் - தம்பி மனைவி சேர்ந்து இருந்தால் உடனடியாக உடலுறவு முகிழ்ந்துவிடுமோ என்ற பொதுமைப்படுத்திப் பார்க்கின்ற அளவுக்குத்தான் அந்த உறவு விபரிக்கப்படுகின்றது. காலங்காலமாய் தனக்கான காமத்தை அடக்கிவைக்கப்பட்ட பெண், பத்ரகிரி குழம்பும்போது கூட, 'தம்பி வரும்வரைதானே நீ என்னோடு படுத்து எழும்பு' என்கின்ற மாதிரியான தெளிந்த குரலில்தான் பேசுகின்றாள் (காலனித்துவ காலம் பெண்களின் காமத்தை வெளிப்படையாகப் பேசவிட்டிருக்கின்றதென்றால் சந்தோசந்தான்). இங்கே கூட இந்த உறவு குறித்து பத்ரகிரிக்குத்தான் அதிக குழப்பம். தையல்நாயகி எவ்வித குழப்பமில்லாது இருக்கின்றாள். இறுதியில் கூட தையல்நாயகியின் குழந்தை இறந்துபோவதும், அவள் உளச்சிதைவுக்கு ஆளாவதும் கூட, அவள் செய்த 'பாவங்களுக்கு' கிடைக்கும் பலன்கள்தான் எனத்தான் கொள்ளவேண்டியிருக்கின்றது. பத்ரகிரி ஆணாகவிருப்பதால் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விமோசனம் அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கின்றான் எனவும் வாசிப்புச் செய்யும் சாத்தியம் உண்டு. இந்த இடத்திலேயே நாவலுக்குள்ளேயே வைத்து இன்னொரு புள்ளியையும் யோசிக்கவேண்டியிருக்கின்றது. தையல்நாயகி உளச்சிதைவுக்கு ஆளாகும்போது பைத்தியக்காரியாக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அனுப்ப்படவேண்டுமெனச் சொல்லப்படுகின்றது. அவள் ஒரு தேவைப்படாத ஒரு பாத்திரமாக நாவலின் பின்பகுதியில் வாசகர்கள் வாசிக்கப்படுகின்றமாதிரியான மனோநிலை உருவாக்கப்படுகின்றது. ஆனால் ஒரு நாயை முன்னே ஓடவிட்டு அதை மட்டும் பின் தொடர்ந்து, தனது தாயை மற்றும் உடலுறவு கொண்ட பெண்ணை /அவளின் மகவை விட்டுச் செல்கின்ற சதாசிவம் பண்டாரமாகி ஒரு உயர்நிலைப்பட்ட 'புனித' மனிதராகச் சித்தரிக்கப்படுகின்றார். இங்கேதான் நமது சமூகம் அது கொண்டிருக்கும் சிந்தனாமுறைகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. சதாசிவம் பண்டாரம் நாயை மட்டும் பின் தொடர்ந்து தனக்குப் பிடித்ததைச் செய்ய அனுமதிக்கின்ற/ஏற்றுக்கொள்கின்ற சமூகம் ஏன் உளச்சிதைவுக்கு உள்ளானவர்களை/மூளை வளர்ச்சி குன்றியவர்களை/திருநங்கைகளை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதெனவும் யோசிக்கவேண்டியிருக்கின்றது. இப்புதினத்தில் கிட்டத்தட்ட ஒரே பாத்திர மனோநிலையிலிருக்கும் சதாசிவம் பண்டாரமும், தையல்நாயகியும்(பிற்பகுதியில்) வெவ்வேறு விதமாகப்பார்க்கப்படுகின்றார்கள் என்றால் படைப்பாளியாலும் சமூகம் சிந்திக்கும் முறைமையை மீறி சிந்திக்க முடியாதிருக்கின்றதெனத்தான் எடுக்கவேண்டியிருக்கின்றது.
நாவலில் சாப்பிடுவது பற்றியும், நாயின் பின்னால் அலைந்துதிரிவது பற்றியும் அலுப்பு வருமளவுக்குத் திருப்பத் திருப்ப விபரிக்கும் படைப்பாளி காமத்தைக் கொஞ்ச வரிகளில் கடந்துபோவது இன்னும் வியப்பாகத்தானிருக்கிறது. காமம் குறித்து தினமும் பொழுதும் அலைபாய்ந்தபடியிருக்கும் கீழைத்தேய மனது பற்றியும் அது ஒடுக்கப்பட்டிருக்கும் வன்முறை பற்றியும் நிறையவே பேசவேண்டியிருக்கிறது. இங்கேயும் பேசவேண்டியதை பேசாமல் போவதன் வீழ்ச்சி தெளிவாகத் தெரிகின்றது. ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளில் காமம் -அளவுக்கதிகமாய்-'மதம்பிடித்தலையும் யானையைப் போல எங்கும் அலைகின்றது' என்றால், எஸ்.ராமகிருஸ்ணனின் யாமத்தில் காமம், ஒரு வறண்டுபோயிருக்கும் நிலத்தில் சிறுமழை பெய்யும்போது உடனேயே அடையாளமின்றி உலர்ந்துபோகும் நிலையைப்போல காண்பதற்கு அரிதாகத்தான் இருக்கின்றது.
தெரிந்த/சொல்லப்பட்ட விடயங்களைச் சொல்வதல்ல ஒரு சிறந்த படைப்புக்குரிய அடையாளம். அது தெரியாத/அறிமுகப்படுத்தப்படாத வரலாற்றின் இருண்ட பக்கங்களை நோக்கி தனது பார்வைகளைத் திருப்பி வாசிப்பவரை இன்னுமின்னும் அப்பக்கங்களை நோக்கி இழுத்துச் செல்வதாக வேண்டும். யாமத்தில் காலனித்துவ காலத்தையும், சில சம்பவங்களையும் வெளியே எடுத்துவிட்டால் அது ஏற்கனவே சொல்லப்பட்ட 'கதைகளை'த்தான் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இவ்வாறான பலவீனங்களைத் தாண்டியும், நாவலை அலுப்பின்றி முடியும்வரை வாசிக்க முடிவதற்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்ற படைப்பாளிக்குள் இன்னமும் வற்றிப்போய்விடாத மொழிநடை எனத்தான் சொல்லவேண்டும். ஆனால் அதேவேளை ஏதோ எழுதத்தொடங்கியதை வலிந்து எழுதி முடிக்கவேண்டும் என்ற நினைப்பில் எழுதியதுமாதிரியாக நினைக்கத்தோன்றும் பல பகுதிகள் இப்புதினத்தில் வரச்செய்கின்றன. ஏற்கனவே சொல்லப்பட்ட கதையாக/களனாக இருந்தாலும் கூட அதை மீறி அறியாத/மறைக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போதே ஒரு படைப்பு தனக்குரிய இடத்தை உருவாக்குகின்றது. பிறகு வாசகர்கள் அதிலிருந்து தமக்கான வாசிப்பை நிகழ்த்தும்போது பிரதி பன்முகமான வாசிப்பைக் கோருகின்றது. ஆனால் எஸ்.ராவின் எழுத்துக்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொள்ளும் ஒரு வாசகர் யாமத்தை அவ்வாறான ஒரு நாவலாக அடையாளங்கண்டு கொள்ள மிகவும் தயங்குவார் எனத்தான் தோன்றுகின்றது.
புகைப்படங்கள்: www.sramakrishnan.com/gallery.asp
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
This genre is not new. Amitav Ghosh has written novels on the colonial encounter and how colonisation and slave trade created new avenues of explotation and encounters among cultures.The author has to do lot of research and at the same time should be talented enough to write a novel that goes beyond cliches on coloniser vs colonised and stereotypical description of characters. The author should
6/08/2008 12:58:00 PMhave deep insights into the
psyche of the characters (s)he
creates and should know how to
write a prose that is multi-layered and yet readable. I have no idea about S.Ramakrishnan's fiction. I am not
impressed by his non-fiction writing. But then for how long Tamils should tolerate these eluupai pookal as there is no
sugar factory :).
அன்பு நண்பர் டிசே தமிழனுக்கு
6/08/2008 01:09:00 PMஎனது நாவல் யாமம் குறித்து நீங்கள் எழுதிய விமர்சனகட்டுரையை வாசித்தேன். மிக நுட்பமாகவும் கூர்ந்த விமர்சனப் பார்வையோடும் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் விடுபடல்கள் மற்றும் இடைவெளிகள் குறித்து உங்கள் சுட்டிகாட்டுதல் கவனத்திற்குரியவை.
ஆனால் ஒருநாவலாசிரியனாக இதை திருத்திக் கொள்கிறேன் என்று ஒரு போதும் கூறமாட்டேன். மாறாக நாவல் எழுத்து என்பது முன்கூட்டிய திட்டங்கள் மற்றும் கணக்குகள் கோட்பாடுகள் மீறவேண்டிய பட்டியல்கள் வழியாக உருவாவதில்லை. அதை ஒரு கவிஞராக நீங்கள் உணர்வீர்கள். நாவலை வாசகர்கள் எவ்விதம் அணுகுவார்கள் என்பது குறித்து எந்த விமர்சன முடிவுகளும் நாவலின் வாசிப்பை தடை செய்யப்போவதில்லை. அது தான் எப்போதும் நடைபெற்று வருகின்றது.
தங்கள் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்தில் வாசித்து வருகிறேன். சமீபமாக நான் படித்த கவிதைகளில் வெகு தனித்துவமானவை உங்கள் கவிதைகள். குறிப்பாக நீங்கள் கையாளும் மொழி மற்றும் கவிதையின் வழி பீறிடும் உள்ளார்ந்த கோபம் கவிதையை மிக நெருக்கமானதாக்குகிறது.
மிக்க அன்புடன்
எஸ்.ராமகிருஷ்ணன்.
மிக நுட்பமான வாசிப்பு டிசே..அதீதமான மொழி ஆளுமை ஒரே மூச்சில் படித்துவிட தடையாக இருக்கிறது.சமீபமாய் வாசிக்கத் துவங்கிய நேரடியான எழுத்துக்கள் மற்றும் அப்பட்டமான அணுகுமுறைகளோடு கூடிய எழுத்துக்களைத் தொடர்ச்சியாய் வாசித்த பின்பு கனவுத் தன்மையை ஒட்டிய எழுத்துக்கள் சலிப்பை வரவழைத்துவிடுகின்றன.இத்தகைய மனநிலையில் இதைப்படிப்பது நேர்மையாய் இருக்காது என்பதினால் திறந்தும் மூடியுமாய் காத்திருக்கிறது யாமம்.
6/08/2008 02:46:00 PMஎஸ்.ரா வின் விமர்சனப் புரிதல் வரவேற்கத்தக்கது..
நன்றி நண்பர்களே. விரிவாக இன்னொரு பொழுதில்.
6/08/2008 11:57:00 PMஅநாமதேய நண்பர்: Amitav Ghoshன் நாவல்களை இன்னும் வாசித்தில்லை. நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது அவை வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தரும் போலும்.
6/10/2008 02:36:00 PM....
அன்பின் எஸ்.ராமகிருஷ்ணன்,
உங்களின் எழுத்துக்கள் அனேகமானவற்றைத் தேடி விருப்புடன் தொடர்ந்து வாசித்து வருபவன் என்றவகையில் -ஒரு தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கும்போது- எனக்கு 'யாமம்' ஏமாற்றமாகவே இருந்தது. இதையிதையெல்லாம் இவற்றில் புகுத்தி எழுதவேண்டுமென -முன்நிபந்தனையுடன்- ஒரு சட்டகத்திற்குள் நின்றெழுதுதல் சாத்தியமில்லை என்கின்ற விமர்சனம் குறித்த உங்கள் புரிதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் சிலவேளைகளில் விடுபடல்கள், எழுதியதைவிட முக்கியமாக இருக்கும்போது யோசிக்கவும் வேண்டியிருக்கிறது ('விடுபடல்'களுக்கும் ஒரு அரசியல் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்தானே).
...
நான் உடைந்துபோய் சகமனிதர்கள் மீது நம்பிக்கையிழந்து கொண்டிருந்த வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்த உங்களின் 'உபபாண்டவமும்', 'பால்யநதி' சிறுகதைத் தொகுப்பும் தந்த வாசிப்பனுபவமும், நம்பிக்கையும் மிகப்பெரியது. அப்படி என்னை நெகிழ்த்திய ஒரு படைப்பாளியிடமிருந்து -நான் எழுதுபவை பற்றி வரும்- எந்த வார்த்தையானாலும் அது கதகதப்பானதே. நன்றி.
.......
அய்யனார்: கனவும் அதிபுனைவும் அதிகம் விரும்புகின்றவர் நீங்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இப்படித்தான் வெயிலும், வேம்பும் மிகப்பரிட்சயமான ஊரிலிருந்து வந்த எனக்கு அவை குறித்து விரிவாகப்பேசிய 'நெடுங்குருதி'யிற்குள் புகக் கடினமாயிருந்தது. மனித மனங்களே விந்தைதான் போலும் :-).
Post a Comment