கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னின் நினைவுக‌ள்

Wednesday, August 20, 2008

A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beah

உல‌க‌ம் அழ‌கிய‌லோடு இருப்ப‌து போன்றே ப‌ல‌வேளைக‌ளில் நிறைந்த‌ குரூர‌ங்க‌ளோடும் சுழ‌ன்ற‌ப‌டியிருக்கின்ற‌து. ந‌‌ம்மில் ப‌ல‌ருக்கு ந‌ம‌க்கு ம‌ட்டுந் தெரிந்த‌து ம‌ட்டுமே 'உல‌க‌ம்' என்ற‌ எண்ண‌மிருக்கிற‌து. அந்த‌ச் சிந்த‌னையான‌து பிற‌ரை/பிற‌தை நாம் புரிந்துகொள்ள‌வும் விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ வெளியை ஒரு சுவ‌ரைப் போல‌த் த‌டுத்துவிடுகின்ற‌து. சில‌வேளைக‌ளில் நாம் அறியாத‌/ நாம் வாழ்ந்து பார்க்காத‌, ஒரு உல‌கை இன்னொருவ‌ர் விப‌ரிக்கும்போது அதை எப்ப‌டி முழுமையாக‌ விள‌ங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதேபோன்று நாம் க‌ட‌ந்த‌கால‌த்தில் அனுப‌வித்து, ம‌ற‌ந்துவிட்டு ந‌க‌ர‌ விரும்பும் விட‌ய‌ங்க‌ளை நிக‌ழ்கால‌ம் மீண்டும் ஏதோவொருவ‌கையில் நினைவுப‌டுத்துகையில் எப்ப‌டி அவ‌ற்றை உள்வாங்கிக்கொள்வ‌தென்ற‌ அவ‌திக‌ளும இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌. இவ்வாறான‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு வாசிக்க‌த் தொட‌ங்கிய‌ ஒரு நூல்தான் குழ‌ந்தை இராணுவ‌த்தின் க‌தையைச் சொல்லும் A Long way Gone.

த‌ன‌து குழ‌ந்தைமை எவ்வாறு காவு கொள்ள‌ப்ப‌ட்ட‌து என்று த‌ன‌து க‌ட‌ந்த‌கால‌த்தைச் சொல்லும் இஸ்மெயிலில் நினைவுக‌ள் எங்க‌ளைச் சூறையாடிச் செல்கின்ற‌து. அச்சிறுவ‌னைப் போல‌வே என்ன‌ செய்வ‌தென்று குழ‌ம்பி வாசிக்கும் நாமும் அந்த‌ச் சுழ‌லில் த‌த்த‌ளித்த‌ப‌டி சிறு துரும்பாகி உள்ளிழுக்க‌ப்ப‌டுகின்றோம். எவ‌ர் எவ‌ரின‌தோ ந‌ல்ன்க‌ளுக்காய் எதுவுமே அறியாது உல‌க‌மெங்கும் ப‌லிக்க‌டாக்க‌ளாய் -இன்றும் -ஆக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் சிறார்க‌ளுக்குச் சொல்ல‌/ந‌ம்பிக்கை கொள்ள‌ வைக்க‌ எந்த‌ வார்த்தைக‌ளை நாம் வைத்திருக்கின்றோம் என்று நினைக்கும்போது மிகுந்த‌ சோர்வு வ‌ருகின்ற‌து. ம‌னித‌ம‌ற்று குரூர‌மாய்ப் போய்க்கொண்டிருக்கும் உல‌கைப் பார்க்கும்போது, இனி கருணைக்கும் அகிம்சைக்குமான‌ கால‌ம் க‌ட‌ந்துபோய்விட்ட‌து போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

சிய‌ராலியோனில் கிராமப்புற‌த்தில் வாழும் இஸ்மெயில் த‌ன‌து ப‌ன்னிர‌ண்டாவ‌து வ‌ய‌தில் ராப் பாட‌ல்க‌ளைப் பாடும் நிக‌ழ்வில் ப‌ங்குபெற்றுவ‌த‌ற்காய் அடுத்த‌ ந‌க‌ருக்குப் போகின்றான். அதுவே அவ‌ன் இறுதியாய்த் த‌ன‌து கிராம‌த்தைப் பார்க்கும் நாள். எங்கோ தொலைவில் ந‌டைபெற்றுக்கொண்டிருந்த‌ போர் இவ‌ர்க‌ளின் கிராம‌த்தையும் அண்டிக்கொண்டிருப்பதை அறியாது இஸ‌மாயிலும் அவ‌ன‌து மூத்த‌ ச‌கோத‌ர‌ன் ஜூனிய‌ரும் இன்னொரு ந‌ண்ப‌னும் ம‌கிழ்ச்சியுட‌ன் நிக‌ழ்விற்காய்ப் புற‌ப்ப‌டுகின்றார்க‌ள்.

ம‌றுநாள் அடுத்த‌ ந‌க‌ரில் இஸ‌மாயில் த‌ங்கியிருக்கும்போது அவ‌ர்க‌ள‌து கிராம‌ம‌ போராளிக் குழுவொன்றால் தாக்க‌ப்ப‌டுகின்ற‌து. த‌ம‌து குடும்ப‌த்திற்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ற‌றிய‌ விரும்பி திரும்ப‌வ‌ரும் இஸமாயில் உள்ளிட்ட‌வ‌ர்க‌ளை உள்ளே வ‌ர‌விடாது போராளிக‌ள் தாக்குகின்றார்க‌ள். அதே போன்று, கிராம‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் த‌ப்பிப்போனாலும் போராளிக‌ள் சுட்டுக்கொல்கின்றார்க‌ள். கைப்ப‌ற்றும் கிராம‌த்திலுள்ள‌ ம‌க்க‌ளை -இராணுவ‌ம் த‌ங்களைத் தாக்க‌ வ‌ந்தால்- ம‌னித‌க் கேட‌ய‌ங்க‌ளாய்ப் பாவிப்ப‌த‌ற்காய் அவ்வாறான‌ ஒரு எச்ச‌ரிக்கை. இப்ப‌டி த‌ம‌து பெற்றோர்/ஊர‌வ‌ர்க‌ளிலிருந்து பிரிக்க‌ப்ப‌டும் இஸ‌மாயிலும் அவ‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளும் ம‌ற்றொரு ந‌க‌ரில் அக‌திக‌ளாய்த் த‌ங்குகின்றார்க‌ள். அந்த‌ ந‌க‌ரையும் விரைவில் போராளிக் குழு கைப்ப‌ற்றுகின்ற‌து. பாதுகாப்புக்கென‌ கிராம‌த்திலிருக்கும் சொற்ப‌ இராணுவ‌மும் த‌ப்பியோட‌, தெருவில் நிற்ப‌வ‌ர்க‌ள்/ க‌ண்ட‌வ‌ர்க‌ள் என்று பொதும‌க்க‌ளையெல்லாம் (இராணுவ‌ம் ஊடுருவியிருக்கும் என்ற‌ நினைப்பில்) போராளிக்குழு கொல்கின்றது (உண்மையில் இப்ப‌டிக் கிராம‌ங்க‌ளைக் கைப்பற்றி அங்கிருக்கும் முழும‌க்க‌ளையும் கொல்வ‌த‌ற்கான‌ இன்னொரு கார‌ண‌த்தை, இஸ‌மாயில் குழ‌ந்தை இராணுவ‌மான‌ பின்ன‌ர் கூறுகின்றார்). உயிருக்குப் ப‌ய‌ந்து, இஸ்மாயிலும், ச‌கோத‌ருமாய் ஏழு சிறுவ‌ர்க‌ள் அக‌திக‌ளாய் ஓட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். இஸ‌மாயிலுக்கு ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌து, ச‌கோத‌ர‌ருக்கு ப‌தினைந்து வ‌ய‌து; மிகுதிச் சிறுவ‌ர்க‌ள் இந்த‌ வ‌ய‌துக‌ளுக்கிடையில் இருக்கின்றார்க‌ள்.

இவ‌ர்க‌ள் ஏழு பேராய் அக‌திக‌ளாய் ஒவ்வொரு ஊரூராய் அலைய‌த் தொட‌ங்குகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளைப் ப‌ராம‌ரித்துக்கொள்ள‌ தெரிந்த‌ எந்த‌க் குடும்ப‌மும் இல்லை. அதைவிட‌ மிகுந்த‌ ப‌ட்டினி. இவையெல்லாவ‌ற்றையும் விட‌க் கொடுமை, இவ‌ர்க‌ள் இப்ப‌டி ஏழுபேராய் அக‌திக‌ளாய் அலையும்போது பிற‌ கிராம‌த்த‌வ‌ர்க‌ள் இவ‌ர்களைப் போராளிக்குழுவென்று (சில‌வேளைக‌ளில் உள‌வு பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று) துர‌த்துகின்றார்க‌ள். சில‌ இட‌ங்க‌ளில் கொல்ல‌க்கூட‌ வ‌ருகின்றார்க‌ள் கெஞ்சி ம‌ன்றாடித் த‌ப்பியோடிய‌ப‌டியிருக்கின்றார்க‌ள். ஒருக‌ட்ட‌த்தில் போராளிக் குழுவினால் பிடிக்க‌ப்ப‌ட்டு இய‌க்க‌த்தில் சேர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். மிக‌ச் சிறுவ‌னாக‌ இருப்ப‌தால் இஸ‌மாயில் த‌ப்பிவிட‌, அவ‌ர‌து ச‌கோத‌ர‌ர் இய‌க்க‌த்தில் ப‌ல‌வ‌ந்த‌மாய்ச் சேர்க்க‌ப்ப‌டுகின்றார். திரும்ப‌வும் அக‌தியாய் ஓட்ட‌ம். கூட‌விருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைப் போரில் இழ‌த்த‌ல். திடீரென்று எங்கையாவ‌து போர் வெடித்து உயிருக்காய்த் த‌ப்பியோடும்போது அருகிலிருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைப் பிரித‌ல். இப்ப‌டி திசை தெரியாது ஓடியோடி ஒரு க‌ட்ட‌த்தில் ஒரு காட்டிற்குள் இஸமாயில் நுழைந்துவிடுகின்றார். கிட்ட‌த்த‌ட்ட‌ அந்த‌ அட‌ர்ந்த‌ காட்டிற்குள் ஒரு மாத‌ த‌னிமை வாச‌ம். ப‌சியில் கையில் கிடைப்ப‌தையெல்லாம் சாப்பிட்டு உயிர் த‌ப்ப‌ல். குருவி சாப்பிட்டு சாகாம‌ல் இருக்கும் பெய‌ர‌றியாப் ப‌ழ‌ங்க‌ளையெல்லாம் தானும் உண்ட‌ப‌டி எவ‌ரும் கூட‌விருந்து க‌தைக்க‌வியலா மிக‌ப் பெருந்தனிமை. அதிலிருந்து விடுப‌ட்டு ஒருமாதிரியாக‌ வெளியில் வ‌ருகின்றார். தொட‌ரோட்ட‌த்தில் த‌ன‌து பெற்றோர் ச‌கோத‌ர‌ர் இன்னொரு கிராம‌த்தில் த‌ப்பி வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ற‌றிந்து போகின்ற‌போது, அந்த‌க்கிராம‌த்திலுள்ள‌ அனைவ‌ரையும் உயிரோடும்/கொன்றும் எரியூட்டிக் கிராம‌த்தைச் சூறையாடிவிட்டு போராளிக‌ள் போயிருக்கின்றார்க‌ள் என்ப‌து பேரிடியாக‌ விழுகின்ற‌து. இறுதியில் போர் என்றைக்குமாய்த் தீண்டாத‌ ஒரு ந‌க‌ரை நோக்கி -இப்ப‌டி அக‌தியாய் ஓடும்போது வாய்த்த‌ புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு- ப‌ய‌ணிக்கின்றார். அங்கு முகாம் அமைத்திருக்கும் இராணுவ‌ம் இவ‌ர்க‌ளுக்கு அடைக்க‌ல‌ங்கொடுக்கின்ற‌து. இராணுவ‌த்துக்கு கூட‌மாட‌ உத‌விக‌ள் செய‌தப‌டி இவ‌ர்க‌ளைப் போன்ற‌ முப்ப‌துக்கு மேற்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்.

ஏற்க‌ன‌வே நிக‌ழ்ந்த‌துபோல‌ இவ‌ர்க‌ள் இருந்த‌ கிராம‌த்தையும் போராளிக‌ள் சுற்றி வளைக்கின்றார்க‌ள். தின‌மும் முன்ன‌ணிப் போர‌ர‌ங்கிற்குச் செல்லும் இராணுவ‌ம் இழ‌ப்புக்க‌ளுட‌ன் திரும்பி வருகின்ற‌து. ஒரு க‌ட்ட‌த்தில் போராடுவ‌த‌ற்கு ஆள‌ணி போதாம‌ல் இச்சிறுவ‌ர்க‌ளும் இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒன்று த‌ங்க‌ளோடு போரில் ஈடுப‌ட‌வேண்டும் இல்லாவிட்டால் அந்த‌க் கிராம‌த்தை விட்டு போக‌வேண்டும் என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. இனி இப்படி இராணுவ‌ப் பாதுகாப்பிலிருந்த‌ த‌ங்க‌ளைப் போராளிகளும் சுட்டுக்கொல்ல‌த்தான் போகின்றார்க‌ள் என்ற ந‌ம்பிக்கைய‌ற்ற‌ எதிர்கால‌த்தால் இராணுவ‌த்தில் இஸ‌மாயில் உள்ளிட்ட‌வ‌ர்க‌ள் சேர்கின்றார்க‌ள். ப‌யிற்சி கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இஸ்மாயிலுக்கு ப‌தின்மூன்று வ‌ய‌து என்றால், அவ‌ரைவிட‌ எட்டு. ப‌தினொரு வ‌ய‌திலிருக்கும் சிறுவ‌ர்க‌ளுக்கும் கூட‌ ப‌யிற்சி/ஆயுத‌ம் வழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. ஏகே 47ஐ நிமிர்த்திவைத்தால் அதைவிட‌க் குள்ள‌மாய்த்தான் அந்த‌ச் சிறுவ‌ர்க‌ள் இருந்தார்க‌ள் என்று இஸ்மாயில் விப‌ரிக்கின்றார்.

ஒருநாள் போராளிக் குழுவை வ‌ழிம‌றித்துத் தாக்குவ‌த‌ற்காய் இச்சிறுவ‌ர்க‌ள் அனுப்ப‌ப்ப‌டுகின்றார்க‌ள். ச‌ண்டை ஆய‌த்த‌மாவ‌த‌ற்கு முன் இச்சிறுவ‌ர்க‌ளுக்கு வெள்ளைநிற‌ போதைக் குளிசைக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ச‌ண்டை ஆர‌ம்பிக்கின்ற‌து. ந‌டுங்கும் தேக‌த்துட‌ன் ம‌னித‌வுட‌ல்க‌ள‌ ச‌ரிந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார்க‌ள். ஒரு ஆர்பிஜி அடியில் அருகிலிருந்த‌ எட்டு வ‌ய‌துச் சிறுவ‌னின் உட‌ல் பிய்த்தெறிய‌ப்ப‌டுகின்ற‌து. இஸ்மாயிலின் இன்னொரு நெருங்கிய‌ ந‌ண்ப‌னும் கொல்ல‌ப்ப‌டுகின்றான். இனி எதுவும் செய்வ‌த‌ற்கு இல்லையென‌ 'அசைகின்ற‌ எல்லாவ‌ற்றையும்' க‌ண்மூடித்த‌ன‌மாய் சுட‌த்தொட‌ங்குகின்றார் இஸ்மாயில். ஒன்று இர‌ண்டு என்று இவ‌ர‌து துப்பாக்கி ர‌வைப‌ட்டு ம‌னித‌வுட‌ல்க‌ள் ச‌ரிகின்ற‌ன‌. ஒவ்வொருமுறையும் தோட்டாக்க‌ள் முடிந்து மீள‌ நிர‌ப்பும்போது, இற‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளின் முக‌ங்க‌ள் த‌ன‌க்குள் வெறியை இன்னுமின்னும் அதிக‌மாய் ஏற்ப‌டுத்திய‌து என்கின்றார்.

எதையும் தொட‌ங்குவ‌துதான் க‌டின‌ம். தொட‌ங்கினால் எதுவுமே போதையாகிவிடும். அதுவும் அச‌ல் போதை ம‌ருந்தும் எடுத்துக்கொண்டு கொல்வ‌து இன்னும் மிகுந்த‌ போதையாக‌ இருக்கின்ற‌து. ப‌தின்மூன்றில் தொட‌ங்கும் இந்த‌ வேட்டை ப‌தினாறு வ‌ய‌து வ‌ரை கிட்ட‌த்த‌ட்ட‌ தின‌ம் தொட‌ர்ந்தாய் இஸ்மாயில் குறிப்ப்டுகின்றார். போராளிக‌ள் த‌ங்கியிருக்கும் கிராம‌ங்க‌ளைத் தாக்குவ‌து, போராளிக‌ள் ம‌ற்றும் அங்கிருக்கும் ம‌க்க‌ளை முற்றாக‌ கொல்வ‌து (த‌ப்ப‌விடும் ஒவ்வொரு ம‌னித‌னும் த‌ங்க‌ள் உயிரைப் ப‌றித்தெடுத்துவிடுவார்க‌ள் என்று க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌து). 'உங்க‌ள் பெற்றோரைப் ப‌லியெடுத்த‌ போராளிக‌ளை சும்மா விட‌க்கூடாது' என்று இவ‌ர்க‌ளின் குழுத்த‌லைவ‌ரால் ஒவ்வொரு தாக்குத‌லுக்கு முன்னாலும் உசுப்பேற்ற‌ப்ப‌டுகின்றார்க‌ள். வெறித்தனமாய் 'எதிரிக‌ளை'க் கொல்லும் திற‌மைக்காய் இஸ‌மெயிலுக்கு ஜூனிய‌ர் லெப்ரின‌ன்ட் ப‌த‌வி கூட‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் வ‌ய‌தொத்த‌ குழுவிற்குத் த‌லைமை தாங்குப‌வ‌ராக‌வும் ப‌தவி உய‌ர்த்த‌ப்ப‌டுகின்றார். கிராம‌ங்க‌ளைத் தாக்கி அங்கிருக்கும் உண‌வு இன்ன‌பிற‌ பொருட்க‌ளை சூறையாடுவ‌து. போராளிக‌ள் மீண்டும் அக்கிராம‌ங்க‌ளில் த‌ள‌ம் அமைக்காம‌ற் த‌டுக்கும்பொருட்டு கிராம‌ங்க‌ளையே முற்றாக‌ எரிப்ப‌து... இப்ப‌டியாக‌த் தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்துவ‌தும், அவையிலலாத‌ பொழுதுக‌ளில் போதை ம‌ருந்து எடுத்துக்கொண்டு Commando, Rambo, First Blood போன்ற‌ ச‌ண்டைப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பொர் வெறியைத் த‌ங்க‌ளுக்குள் உசுபேற்றிக்கொண்டிருப்ப‌து என்று கால‌ம் க‌ழிகிற‌து.

த‌ப்பியோட‌முடியாது பிடிப‌டும் போராளிக‌ளுக்கு இவ‌ர்க‌ள் செய்யும் அநியாய‌ம் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. ஒரு முறை பிடிப‌ட்ட‌ போராளிக‌ளை, கைக‌ளை பின்ப‌க்க‌மாய் க‌ட்டிவைத்து, இச்சிறுவ‌ர்க‌ளில் யார் குறைந்த‌ நேர‌த்தில் முத‌லில் துப்பாக்கிக்க‌த்தியால் க‌ழுத்தைச் சீவிக்கொல்வ‌து கொல்வ‌து என்ற‌ போட்டி ந‌ட‌க்கின்ற‌து. இன்னொரு முறை க‌டும் இழ‌ப்புக‌ளுட‌ன் கைப்ப‌ற்றும் கிராம‌த்தில் பிடிப‌ட்ட‌ போராளிக‌ளைக் கொண்டே குழிதோண்ட‌வைத்து, அப்ப‌டியே அவ‌ர்க‌ளை அத‌ற்குள் உயிரோடு புதைக்கின்றார்க‌ள் இப்ப‌டி எந்த‌வொரு ம‌னித‌த்த‌ன்மையுமில்லாது போர் இவ‌ர்க‌ளை ஆக்கிவிடுகின்ற‌து. கொல்ல‌ப்ப‌டும் ந‌ணப‌ர்க‌ளை நினைத்து க‌வ‌லைப்ப‌ட‌ முடியாத‌வ‌ள‌வுக்கு போர் வெறி ச‌ன்ன‌த‌மாடுகின்ற‌து. ஓரிட‌த்தில் போராளிக‌ள் த‌ங்கியிருக்கும் கிராம‌த்தைத் தாக்க‌ப்போகும்போது இஸ‌மாயிலின் ந‌ண்ப‌னுக்கு ஒரு ஆசை வ‌ருகின்ற‌து. தாங்க‌ள் பார்த்த‌ ர‌ம்போ ப‌ட‌த்தில் வ‌ரும் ராம்போ மாதிரி போரை நிக‌ழ்த்த‌வேண்டும்ன்று, ராம்போ மாதிரியே உள்ளே ஊடுருவி ம‌திய‌க் க‌ளைப்பில் கிட‌க்கும் ஜ‌ந்தாறு பேரை துப்பாகிக் க‌த்தியால் பின்புற‌மாய் போய் க‌ழுத்தைச் சீவிக்கொலை செய்கின்றான். அதிலும் கொடுமை என்ன‌வென்றால், ராம்போ ப‌ட‌த்தில் செய்வ‌த‌ற்கும் இத‌ற்கும் ஒரேயொரு வித்தியாச‌ம் என்ன‌வென்றால், ராம்போ கொன்ற‌ உட‌ல்க‌ளை ம‌றைத்த‌துபோல‌ ந‌ண்ப‌ன் ம‌றைக்க‌வில்லை அதனால் இன்னும் ப‌ல‌ரை இப்ப‌டிச் ச‌த்த‌மில்லாது கொல்லும் ச‌ம்ப‌வ‌ம் இடைந‌டுவில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌‌ட்டுவிட்ட‌து என்கின்ற‌ இஸ்மாயிலின் குறிப்புக‌ள். பிம‌ப‌ங்க‌ள் க‌ட்டிய‌மைக்கும் உல‌கு எப்ப‌டி நிஜ‌மாய் ஆகின்ற‌து என்கின்ற‌ குரூர‌ உண்மையை நாம் விள‌ங்கிக்கொள்ள‌வேண்டும். ம‌னித‌ர்க‌ளை எப்ப‌டிப் போர் மாற்றியிருக்கின்ற‌து என்ப‌த‌ற்கு இந்நூலில் குறிப்பிட‌ப்ப‌டும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளைவிட‌ வேறு என்ன‌தான் வேண்டும்?

அதிஸ்ட‌மோ என்ன‌மோ தெரியாது, இஸ்மாயில் ப‌தினாறு வ‌ய‌தில் UNICEFவால், அவ‌ர்க‌ளின் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்துக்காய்(?) (rehabilitation centre) சிய‌ராலியோனின் த‌லைந‌க‌ருக்கு அனுப்ப‌டுகின்றார்க‌ள்.அங்கேயும் இவ‌ர்க‌ள் செய்யும் அட்ட‌காச‌ங்க‌ள் சொல்லி மாளாது. சென்ற‌ முத‌ல் நாள‌ன்றே, இவ‌ர்க‌ள் போராளிக‌ள் ப‌க்க‌த்திலிருந்து வ‌ரும் குழ‌ந்தைப் போராளிக‌ளைச் ச‌ந்திக்கின்றார்க‌ள். எவ‌ரையும் கொன்று ப‌ழ‌கிய‌ இவ‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ளைப் பார்க்க‌ச் ச‌கிக்க‌வில்லை. இவ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்கு என்றிருக்கும் பாதுகாவ‌ல‌ர்க‌ளின் துவ‌க்குக‌ளைப் ப‌றித்து இருத‌ர‌ப்பும் சுட்டுக்கொல்கின்ற‌து. முத‌ல் நாளே ஆறுபேர் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்தில் இற‌ந்துபோகின்றார்க‌ள். மிகுந்த‌ மூர்க்க‌த்த‌ன‌மாய் இவ‌ர்க‌ள் அங்கே வேலை செய்யும் ஆண்க‌ளையும்/பெண்க‌ளையும் துர‌த்திய‌டிக்கின்றார்க‌ள், பொருட்க‌ளை வீசியெறிகின்றார்க‌ள். இன்னும் தின‌மும் போதை ம‌ருந்து எடுத்த‌தால் அதுவில்லாது இவ‌ர்க‌ளால் இருக்க‌வும் முடிய‌வில்லை. த‌ம‌து கையை, த‌லையை சுவ‌ரில் நில‌த்தில் அடிக்கின்றார்க‌ள். இர‌த்த‌ம் பொங்கி த‌ன‌து கையெலும்பு வெளியில் தெரியும்வ‌ரை சீமெந்து நில‌த்தில் ப‌ல‌முறை அடித்த‌தாய் இஸ்மெயில் குறிப்பிடுகின்றார்.. இர‌வுக‌ளில் தூங‌க‌முடியாது தான் கொன்ற‌வ‌ர்க‌ளில் நினைவுக‌ள் வ‌ந்து, இர‌விர‌வாய் மைதான‌த்தைச் சுறறியோடிய‌தாய், வ‌ராண்டாவில் ந‌ட‌ந்து திரிந்த‌தாய் -மிகுந்த‌ உள‌விய‌ல் சிக்க‌ல்க‌ளுக்குள் ஆளான‌தாய்- இஸ்மாயில் எழுதுகின்றார்.

தான் எவ்வ‌ள‌வோ முயன்று குழ‌ந்தை இராணுவ‌மாய் ஆவ‌த‌ற்கு முன்பான‌ ந‌ல்ல‌ நினைவுக‌ளை திருப்ப‌க்கொண்டுவ‌ர‌ முய‌ற்சித்தாலும், தொட‌ர்ந்தும் போர்க்காட்சிக‌ளே த‌ன‌து நினைவிலும் க‌ன‌விலும் தொட‌ர்ந்துகொன்டிருந்த‌து என்றார். இவ்வாறு ப‌ல‌வேறு உள்/உட‌ல் சிக்க‌ல்க‌ளில் உழ‌ன்ற‌போதும் அந்த‌ ம‌றுசீர்வாழவு நிலைய‌த்திலிருந்த‌ வாஞ்சை மிக்க‌ ம‌னித‌ர்க‌ளின் அன்பாலும் ப‌ராம‌ரிப்பாலும் திரும்ப‌வும் த‌ன‌து போரில்லாத‌ உல‌கிற்குத் திரும்பியிருக்கின்றேன் என்கின்றார். அவ‌ருக்கான‌ சிகிச்சை முடிந்த‌பின் த‌ன‌க்கு ஒருவ‌ரும் இல்லையென்று நினைக்கும் இஸ்மாயிலுக்கு அவ‌ர‌து மாமா ஒருவ‌ர் திரும்ப‌க்கிடைக்கின்றார். அவ‌ர்க‌ளோடு த‌லைந‌க‌ரில் வாழ‌த்தொட‌ங்கும்போது, ஜ‌நாவின் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு மாநாட்டில் நியூயோர்க்கில் க‌ல‌ந்துகொள்ள‌ வாய்ப்புக் கிடைக்கின்ற‌து. ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ள் நேர்முக‌த்திற்காய் காத்திருக்கும்போது தானொரு குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னாய் இருந்த‌தால், த‌ன்னால்தான் சியராலிய‌னோனில் எப்ப‌டிக் குழ‌ந்தைக‌ளின் வாழ்வு சூறையாட‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைச் சொல்வ‌த‌ற்கு அதிக‌ உரிமையுண்டு என்று கூறிய‌தால் ஜ‌நா க‌ருத்த‌ர‌ங்கிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்றார். அங்கே லோறின் என்ற‌ வெள்ளைப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். ஜ‌நாவிற்கு நியூயோர்கிற்குப் போகும்போது ப‌னிக்கால‌மாகையால் குளிர்கால‌த்தில் இஸ்மெயில் ப‌டுகின்ற‌ அவ‌திக‌ள் இன்னொரு வித‌மான‌வை.

மீண்டும் சிய‌ராலிய‌ரோனிற்குத் திரும்பிவ‌ந்த‌ சொற்ப‌ மாத‌ங்க‌ளில் இதுவ‌ரை போர் தீண்டாத‌ த‌லைந‌க‌ரையும் போர் தீண்டுகின்ற‌து. தேர்த‌லால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌னாதிப‌தியை (96) க‌விழ்த்துவிட்டு இராணுவ‌த்த‌ள்ப‌தியும் போராளிக்குழுவும் நாட்டைக் கைப்ப‌ற்றுகின்ற‌து. மீண்டும் போர், ப‌ட்டினி, கொலை, கொள்ளைக‌ள், பாலிய‌ல் ப‌லாத்கார‌ங்க‌ள். தான் எங்கை போனாலும் போர் த‌ன்னைத் துர‌த்தாது விடாதுபோல‌ என‌ இஸ்மெயில் அந்த‌ரிக்கின்றார்.. இதுவ‌ரைகால‌மும் இவ‌ரை அர‌வ‌ணைத்து அன்பு காட்டிய‌ மாம‌னும், போர்க்கால‌த்தில் நோயின் நிமித்த‌ம் ம‌ருத்துவ‌ வ‌சதியில்லாது இற‌ந்துபோகின்றார். ஏன் இப்ப‌டி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பிரிய‌ங்காட்டிய‌ எல்லோரும் இற‌ந்துபோகும்போது தான் ம‌ட்டும் உயிரோடு இருக்கின்றேன் என‌ மிகுந்த‌ துய‌ர‌ங்கொள்ளும் இஸ்மாயில் இனி இந்த‌ நாட்டில் தான் தொட‌ர்ந்திருந்தால் கொல்ல‌ப்ப‌டுவேன் அல்ல‌து மீண்டும் இராணுவ‌த்தில் சேர்ந்து ம‌னித‌ர்க‌ளைக் கொல்ல‌வேண்டிய‌ நிலைவ‌ருமென்று நாட்டைவிட்டு த‌ப்பியோடுகின்றார். நியூயோர்க்கிலிருக்கும் லோறினைத் தொட‌ர்புகொண்டு தான் நியூயோர்க் வ‌ந்தால் த‌னக்கு அடைக்க‌ல்ந்த‌ருவாரா என‌க்கேட்கிறார். சிய‌ராலிய‌னோனை விட்டு Guinea விற்குத த‌ப்பியோடுவ‌தோடு இந்நூல் நிறைவுபெறுகின்ற‌து.(எப்ப‌டித் த‌ப்பியோடிய‌து என்ப‌து இன்னொரு அவ‌தியான‌ கிளைக்க‌தை).

1980ம் ஆண்டு பிற‌ந்த‌ இஸ்மாயில் த‌ற்ச‌ம‌ய‌ம் நியூயோர்க்கில் வ‌சித்து வ‌ருகின்றார். குழ‌ந்தைக‌ள் போரில் ஈடுப‌டுவ‌த‌ற்கு எதிரான‌ ஜ‌நாவின் திட்ட‌ங்க‌ளில் ப‌ங்குபெற்றி உரையாற்றியும் வ‌ருகின்றார். த‌ன‌து பெய‌ரிலேயே ஒரு அமைப்பு நிறுவி போரில் ஈடுப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளின் ம‌றுவாழ்வுக்காய் வேலைத் திட்ட‌ங்க‌ளையும் செய்துவ‌ருகின்றார். இது ஒரு இஸ்மாயிலின் க‌தை, இவ்வாறு இன்னுமின்னும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இஸ்மாயில்க‌ளின் க‌தைக‌ள் புதையுண்டு கிட‌க்கின்ற‌ன‌. மீண்டும் போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில், அடைக்க‌ல‌ம் கொடுக்க‌ இஸ்மாயிலுக்கு ஒரு மாமாவ‌து இருந்தார். அவ்வாறு இல்லாத‌ ப‌ல‌ர், மீண்டும் சீர்திருத்த‌ நிலைய‌த்திலிருந்து இராணுவ‌ம்/போராளிக்குழுக்க‌ளில் இணைந்து போர்முனைக்குச் சென்ற‌தாக‌ இஸ்மாயில் குறிப்பிடுகின்றார். இஸ்மாயிலுக்கு போரைத்தாண்டிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த‌துபோல‌ எல்லாச்சிறுவ‌ர்க‌ளுக்கும் வ‌ச‌திக‌ள் கிடைப்ப‌தில்லை என்ப‌தையும் க‌வ‌னிக்க‌வேண்டும். இன்று நியூயோர்க்கில் வ‌சித்துக்கொண்டிருக்கும் தான் மூன்று வித‌மான‌ உல‌கிற்குள் இன்ன‌மும் சிக்கிக்கொண்டிருப்ப‌தாய் இஸ்மெயில் கூறுகின்றார். குழ‌ந்தை இராணுவ‌மாய்ச் சேருவ‌த‌ற்கு முன்பிருந்த‌ ஒரு வாழ்வு, குழ‌ந்தை இராணுவ‌மாய் இருந்த‌ ஒர் உல‌கு, இத‌ற்கு முன‌ ப‌ரீட்ச‌ய‌ப்ப‌டாத‌ புல‌ம்பெய‌ர் வாழ்வு என‌ மூன்று வ‌கையான‌ உல‌குக‌ள் த‌ன்னை அடிக்க‌டி இடைவெட்டுவ‌தாய்க் குறிப்பிடுகின்றார்..

ஊரில் தான் சிறுவ‌ராயிருந்த‌போது, த‌ம‌து கிராம‌த்து முதிய‌வ‌ர் கூறிய‌வொரு க‌தையை இஸ்மாயில் ஓரிட‌த்தில் நினைவுப‌டுத்துவார். வேட்டைக்குப் போகும் ஒருவ‌ன் குர‌ங்கைச் சுடுவ‌த‌ற்காய்த் துப்பாக்கியைக் குறிபார்ப்பான். அப்போது அந்த‌க்குர‌ங்கு கூறும், நீ என்னைச் சுட்டால் உன‌து தாயார் ம‌ர‌ணிப்பார், என்னைச் சுடாம‌ல் விட்டாலும் உன‌து உன‌து த‌ந்தை ம‌ர‌ணிப்பார். அவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் எது உங்க‌ள‌து தேர்வாக‌ இருக்குமென‌ அந்த‌ முதிய‌வ‌ர் கேட்டிருப்பார். இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்று மிக‌வும் குழ‌ப்பி, இறுதியில் க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ரிட‌ம், குர‌ங்கை விட்டுவிட்டு மான் போன்ற‌வ‌ற்றை வேட்டையாடி இதிலிருந்து த‌ப்பிவிடுவோம் என்று சொன்ன‌தாய் -சிறுவ‌ர்க‌ளாய் இருந்த‌போது- சொல்லியிருந்தோம் என்று இஸ்மாயில் குறிப்பிட்டிருப்பார். இது ச‌ரியான‌ ப‌திலில்லை எனெனில் துப்பாக்கியைக் குறிப்பார்க்க‌த் தூக்கிவிட்டாய் ஆக‌வே உன‌க்கிருக்கும் தேர்வு இர‌ண்டேதான் (குர‌ங்கைச் சுடுவ‌து அல்ல‌து சுடாது விடுவ‌து) என்று அந்த‌ முதிய‌வ‌ர் கூறியிருப்பார். இப்போது வ‌ள‌ர்ந்த‌பின் அக்க‌தையை மீள‌ நினைக்கும்போது, த‌ன‌க்கு அவ்வாறான‌ இர‌ண்டு தேர்வுக‌ள் ம‌ட்டுமே இருப்பின் குர‌ங்கையே தான் சுட்டிருப்பேன் என்கின்றார் இஸ்மாயில். எனெனில் குர‌ங்கைச் சுடாது விட்டால் அது த‌ன‌க்குப் பின் வ‌ருப‌வ்ர்களுக்கும் இவ்வாறான‌ கேள்வியைக் கேட்டு அவ‌ர்க‌ளுக்குப் பிரிய‌மான‌ ஒருவ‌ரைப் ப‌லிகொடுக்க‌ப்போகின்ற‌து ஆக‌வே கிடைக்கும் விளைவுக‌ளை தான் ம‌ட்டும் அனுப‌வித்துவிட்டு பின் வ‌ரும் ச‌ந்த‌திக‌ளுக்கு இவ்வாறான் இர‌ண்டு கொடும் தேர்வுக‌ளைக் கொடுக்க‌வேண்டியிருக்காதுதானே என்கின்றார். குர‌ங்கையொரு போராய் அல்ல‌து குழ‌ந்தை இராணுவ‌மாய்/போராளியாய் உருவ்கித்துப் பார்த்தால் ந‌ம‌க்கும் நிறைய‌ விடய‌ங்க‌ள் விள‌ங்க‌க்கூடும்

13 comments:

Anonymous said...

//சில‌வேளைக‌ளில் நாம் அறியாத‌/ நாம் வாழ்ந்து பார்க்காத‌, ஒரு உல‌கை இன்னொருவ‌ர் விப‌ரிக்கும்போது அதை எப்ப‌டி முழுமையாக‌ விள‌ங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் இருக்கின்ற‌ன‌. //


யதார்த்தம் பலதடவை அப்படி யான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது


நான் இவ்வாறான பலரை சந்தித்துள்ளளேன் இதை வாசிக்கும் போது அவர்களின் வலிநிறைந்த வாழ்கiகை ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாது இன்றைய இலங்கைச்சூழலில் இதைவிட மோசமான குழந்தைகள் இன்னும் அவதிப்படுகிறார்கள் என்பது மிகுந்த வேதனை யளிக்கிறது.

எஸ்.சத்யன்

8/20/2008 11:50:00 PM
இளங்கோ-டிசே said...

ச‌த்ய‌ன்,
முத‌ன்முத‌லில் நான், குழ‌ந்தை இராணுவ‌த்தின‌ர்/போராளிக‌ள், இந்திய‌ இராணுவ‌கால‌த்தில் த‌மிழ்த் தேசிய‌ இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌ட்ட‌தை நேர‌டிச் சாட்சியாக‌ப் பார்த்திருக்கின்றேன். அந்த‌ப் பாதிப்பே, '87க‌ளில் என்றுமே வ‌ள‌ர்ந்துவிடாத‌தாய் என‌து பிரார்த்த‌னையிருந்த‌து' என்கின்ற‌ மாதிரி ஒரு கவிதையில் ப‌திவும் செய்திருக்கின்றேன். நீங்க‌ள் குறிப்பிடுகின்ற‌மாதிரி 87க‌ளில் ஆர‌ம்பித்த‌து, இன்றும் தொட‌ர்ச்சியாக‌ எல்லாத் த‌ர‌ப்பாலும் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டுக்கொண்டிருப்ப‌துதான் அவ‌ல‌மான‌து.

8/21/2008 09:40:00 AM
Narain Rajagopalan said...

டிஜே,

http://www.theaustralian.news.com.au/story/0,25197,23147571-5016101,00.html

8/22/2008 10:27:00 AM
இளங்கோ-டிசே said...

ந‌ரேன் சுட்டிக்கு ந‌ன்றி.
....
நேற்றிர‌வு ஒரு தோழியுட‌ன் உரையாடிக்கொண்டிருந்த‌போதுதான், இந்நூல் குறித்த‌ ச‌ர்ச்சைக‌ளைக் கேள்விப்ப‌ட்டிருந்தேன். நூலைப் ப‌ற்றிய‌ அறிமுக‌ம் எழுதிய‌போது நூல் குறித்து வ‌ந்த‌ பிற‌ அறிமுக‌/விம‌ர்சன‌க் குறிப்புக‌ளை வாசித்திருக்க‌வில்லை. சூடானிய‌ ம‌க்க‌ளின் புல‌ம்பெய‌ர்வு, அக‌தி வாழ்வு குறித்து த‌ன‌து PhDற்கான‌ ஆய்வு செய்யும் தோழி, What is the what நூலை வாசித்துப் பார்க்கும்ப‌டி கூறியிருந்தார். மேலும் தான் ச‌ந்தித்து உரையாடிய‌ ப‌ல‌ குழ‌ந்தைப் போராளிக‌ள் /இராணுவ‌த்தின‌ருக்கு, போர்சூழ‌லில் இருந்த‌தைவிட‌ அதிலிருந்து விடுப‌ட்ட‌ புதிய‌ வாழ்வுக்கு த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக் கொள்வ‌தே க‌டின‌மாய் இருந்த‌தாய்க் குறிப்பிட்டிருந்தார்.

இந்நூலை வாசிக்கும்போது, இந்நூலில் குறிப்பிடும் எல்லாச் ச‌ம்ப‌வ‌ங்களிலும் இஸ்மாயில் நேர‌டியாக‌ப் ப‌ங்குப‌ற்றியிருப்பார் என்ப‌தை ந‌ம்ப‌க் க‌டின‌மாக‌வே இருந்த‌து. எனெனில் இந்நூலில் குறிப்பிடும் இவ்வ‌ள‌வு ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலும் ஈடுப‌ட்டு ஒருவ‌ர் உயிரோடு த‌ப்பி வ‌ருவ‌தென்ப‌த‌ற்கான‌ வாய்ப்புக் குறைவாக‌விருக்கும். என‌க்குத் தோன்றிய‌து என்ன‌வென்றால், இஸ்மாயில் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்தில் இருந்த‌கால‌த்தில் அங்கே கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌ பிற‌ குழ‌ந்தை இராணுவ‌த்தின‌ரின் ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் சேர்த்துதான் (ஆனால் நூலில் அது தான் ஈடுப‌ட்ட‌தாக‌ மாற்றி) எழுதியிருப்பார் போல‌த்தோன்றிய‌து.

கிட்ட‌த்த‌ட்ட‌ இதே credibility பிர‌ச்சினை ஷோபாச‌க்தியின் 'கொரில்லா'வுக்கும் நிக‌ழ்ந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் உண்மைச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் தொகுப்பே கொரில்லா என்ற‌வாறு ஷோபாச‌க்தி கூறியிருப்பார் (I heard it from my friend so correct me if I'm wrong). பிற‌கு அந்நூலில் விப‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ குமுதினிப் ப‌ட‌குக் கொலைக‌ளிலிருந்து, புலிக‌ளின் முத‌லாவ‌து த‌ற்கொலைத்தாக்குத‌ல் ச‌ம்ப‌வ‌ங்க‌ள்வ‌ரை ப‌ல‌ த‌வ‌றான‌ விப‌ர‌ங்க‌ள் சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்டு விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ப்ப‌ட்ட‌போது ஷோபாச‌க்தி அதை ஒரு புனைவென‌ மாற்றிக் கூற‌த்தொட‌ங்கியிருந்தார் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்.

என‌வே எங்கேயும் முற்றுமுழுதான‌ உண்மைக‌ள் வெளிவ‌ருமென்று எதிர்பார்க்க‌முடியாது. இந்நூல் ( A Long way Gone) குறித்த‌ என‌து ப‌திவில் கூட‌ இந்நூல் க‌வ‌னப்ப‌டுத்தாத‌ சில‌ புள்ளிக‌ளை வைத்து இர‌ண்டு ப‌ந்திக‌ள் எழுதிவிட்டு நூல் சொல்லவ‌ரும் விட‌ய‌த்தை அவை திசை திருப்பிவிடுமோ என‌ ப‌திவிடும்போது அக‌ற்றியிருந்தேன். முழுதாய் வாசித்து முடிக்கும்போது, இந்நூல் மேற்க‌த்தைய‌ வாச‌க‌ர்க‌ளுக்காய் ம‌ட்டுமே எழுத‌ப்ப‌ட்ட‌து போல‌வும், ஆபிரிக்காக் க‌ண்ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌னிதாபிமான‌மே இல்லையென்கின்ற‌ பார்வையை விட்டுச் செல்வ‌தாக‌வும் தெரிந்த‌து.

8/23/2008 12:31:00 AM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் பதிவைப் படிக்கும்போது சமீபத்தில் தமிழில் (மொழிபெயர்ப்பு) வெளியான 'குழந்தைப் போராளி' நினைவிற்கு வருகிறது...

8/26/2008 08:04:00 AM
இளங்கோ-டிசே said...

சுந்த‌ர்,
க‌ருப்புப் பிர‌திக‌ளின் வெளியீடாக‌ தேவாவின் மொழிபெய‌ர்ப்பில் வ‌ந்த‌, 'குழ‌ந்தைப் போராளிக‌ளை' கால‌ம் செல்வ‌த்திட‌மிட‌மிருந்து சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் வாங்கி இன்னும் வாசிக்காம‌ல் வைத்திருக்கின்றேன். 'சோள‌கர் தொட்டி'க்குப் பிற‌கு இவ்வாறான‌ நூற்க‌ளை வாசிக்க‌த் த‌ய‌க்க‌மாயிருக்கிற‌து. மிகுந்த‌ ம‌ன‌வுளைச்ச‌லுக்குள்ளாக‌ வேண்டியிருக்குமென்ப‌த‌ற்காக‌வே, ஜெய‌மோக‌னின் 'ஏழாம் உல‌க‌ம்' போன்ற‌ நாவ‌ல்க‌ளைக் கூட‌ வாசிப்ப‌தைத் த‌விர்த்திருந்தேன்.

...........
இந்நூலை வாசிக்க‌த் தொட‌ங்கிய‌துகூட‌ ஒரு த‌ற்செய‌லான‌ நிக‌ழ்வே. Anthropology ப‌டிக்கும் ந‌ண்ப‌ருக்கு கொடுப்ப‌த‌ற்காய் வாங்கிய‌போது சில‌ ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டிய‌போது, தொட‌க்க‌ப் ப‌க்க‌ங்க‌ள் என‌க்கு மிகுந்த‌ நெருக்க‌த்தைக் கொடுத்திருந்த‌ன‌. அந்த‌ இட‌ம்பெய‌ர்வு, அக‌திவாழ்வு. அதிலும் இஸ்மாயில் குறிப்பிடுவ‌தைப் போல‌ என் வாழ்விலும் நிக்ழ‌ந்திருக்கின்ற‌து. என்னோடு ப‌டித்த‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், இராணுவ‌ம் திடீரென்று முன்னேறிப் பிர‌தேச‌ங்க‌ளைப் பிடிக்கும்போது, பெற்றோர்க‌ள்/குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் இராணுவ‌ வ‌ல‌ய‌த்திற்குள், இவ‌ர்க‌ள் ம‌ற்ற‌ப் ப‌க்க‌ம் என‌ தொலைந்திருக்கின்றார்க‌ள். அன்றைய‌ போர்ச்சூழ‌லுக்குள் இதையெல்லாம் ஆறுத‌லாக‌ யோசிக்க‌முடியாத‌போதும், இப்போது யோசிக்கும்போது அப்ப‌டி பெற்றோர் ஆத‌ர‌வில்லாது வாழ்க்கையை தொட‌ங்கிய‌வ‌ர்க‌ளின் உள‌விய‌ல்நிலை எப்ப‌டி இருந்திருக்குமென்ப‌து விள‌ங்கிக்கொள்ள‌ முடிகின்ற‌து. ஐந்தோ அல்ல‌து ஆறாம் வ‌குப்பென்று நினைக்கின்றேன், வ‌குப்பில் அருகிலிருந்த‌ ந‌ண்ப‌னொருவ‌ன் க‌வ‌லையான‌ முக‌த்தோடு இருப்ப‌தைக் க‌ண்டு கேட்ட‌போது, கொழும்பிலிருந்து வ‌ருகின்ற‌ வ‌ழியில் வ‌வுனியாவில், த‌ன‌து த‌ந்தையை ஆமி பிடித்து வைத்திருக்கின்ற‌து என்றான். அப்பாவை ஆமி பிடித்து வைத்திருக்க‌, எப்ப‌டி இவ‌னால் பாட‌சாலைக்கு வ‌ர‌முடிகின்ற‌தென‌ ஆச்ச‌ரிய‌மாயிருந்த‌து. ஆனால் வேறு வ‌ழியில்லை; ம‌ற்ற‌வ‌ருக்காய் காத்திருந்தால் ந‌ம‌க்கு வாழ்வில்லை என்கின்ற‌மாதிரி போர்ச்சூழ‌ல் ஆக்கியிருந்த‌து. த‌க‌ப்ப‌ன் ஒருவ‌ரின் வ‌ருமான‌த்திலேயே த‌ங்கியிருந்த‌ அந்த‌ ந‌ண்ப‌னின் குடும்ப‌ம், த‌க‌ப்ப‌ன் கைதாகியிருந்தால் என்ன‌ தான் செய்யும்? ந‌ண்ப‌ன் பிற‌கு பாட‌சாலைக்கு வ‌ருவ‌தையே நிறுத்தியிருந்தான்.

இப்ப‌டிச் சொல்வ‌த‌ற்கு இன்னும் நிறைய‌க் க‌தைக‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் இதையெல்லாவ‌ற்றையும் விட‌க்கொடுமை, புல‌ம்பெய‌ர்ந்த‌ சூழ‌லில் கால‌த்துக்கு கால‌ம் நிற‌ங்க‌ளை மாற்றிக்கொள்ளும் புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளின் தொல்லை. த‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே எல்லாந் தெரிந்த‌மாதிரியான‌ அதிகார‌ச் சொற்க‌ளுடான‌ உரையாட‌ல். நான் போர்ச்சூழ‌லுக்குள் வாழ்ந்த‌போதும் க‌தைத்துக்கொண்டிருந்தார்க‌ள். இன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ளான‌ பின்னும் அதேயேதான் க‌தைத்துக்கொண்டிருக்கின்றார்க‌ள். ச‌ரி இவ்வ‌ள‌வு கால‌மும் நீங்க‌ள் சாதித்த‌து என்ன‌? என்னைப் போன்ற‌ உங்க‌ளுக்கு -அடுத்த‌- இரண்டாந்த‌லைமுறைக்கு எந்த‌ ந‌ம்பிக்கையைத் த‌ந்தீர்க‌ள் என்றால்? வ‌ழ‌வ‌ழா கொழ‌கொழாக் க‌தைக‌ள்...தூ!

8/26/2008 12:30:00 PM
superlinks said...

வணக்கம் தோழர்
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

8/29/2008 03:57:00 AM
ஷோபாசக்தி said...

வணக்கம் தோழர்
//ஆர‌ம்ப‌த்தில் உண்மைச் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் தொகுப்பே கொரில்லா என்ற‌வாறு ஷோபாச‌க்தி கூறியிருப்பார்// என்று சொல்லியிருக்கிறீர்கள். நியாயமா? எந்தவொரு தமிழ் நாவலிலிலும் இல்லாத மாதிரி அட்டையிலேயே 'FiCTION' எனகொட்டை எழுத்துகளில் போட்டுத்தானே கொரில்லா வெளியாகியது. கவனிக்கவில்லையா? பிற்காலங்களில் கொரில்லா உங்கள் சொந்தக்கதையா எனக் கேட்கப்பட்டபோது பத்திரிகைகளின் நேர்காணல்களில் கொரில்லாவை AUTO FICTION எனக் குறிப்பிட்டிருப்பேன். எங்கேயுமே நான் கொரில்லாவை உண்மை சம்பவங்களின் தொகுப்பு எனக் குறிப்பிட்டதில்லை.

//பிற‌கு அந்நூலில் விப‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ குமுதினிப் ப‌ட‌குக் கொலைக‌ளிலிருந்து, புலிக‌ளின் முத‌லாவ‌து த‌ற்கொலைத்தாக்குத‌ல் ச‌ம்ப‌வ‌ங்க‌ள்வ‌ரை ப‌ல‌ த‌வ‌றான‌ விப‌ர‌ங்க‌ள் சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்டு விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ப்ப‌ட்ட‌போது ஷோபாச‌க்தி அதை ஒரு புனைவென‌ மாற்றிக் கூற‌த்தொட‌ங்கியிருந்தார் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்// என்கிறீர்கள். இதுவும் சரியற்ற கருத்து.

குமுதினிப் படுகொலைச் சம்பவம் நடந்தபோது கடலில் அலைந்துகொண்டிருந்த அந்தப் படகை கரைக்கு கொண்டு வந்ததிலிருந்து உடல்களை வைத்தியசாலைக்கு அனுப்பியதிலிருந்து திரும்பவும் உடல்களை நெடுந்தீவுக்கு அனுப்பிவைத்தது வரை எல்லாவற்றையும் விடுதலைப் புலிகள் இயக்கமே செய்தது. அந்த மீட்புப் பணி அப்போதைய தீவகப் பொறுப்பாளரும் இன்றைய கவிஞருமான நிலாந்தனின் தலைமையில் நிகழ்ந்தது. முழுச் சம்பவங்களிற்கும் நான் சாட்சியாய் இருந்தேன். புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் மில்லரின் நெல்லியடித் தாக்குதல். அதைப்பற்றி நான் எதுவும் நாவலில் எழுதாததால் நாவலில் வரும் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதலை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அது உண்மையென்று நான் எங்குமே சொன்னதில்லையே. அது பிக்ஸன் தான். உங்களைப் போன்ற பொறுப்பான இளைஞர்களெல்லாம் இப்படிப் போகிற போக்கில் எழுதுவது முறையாகாது.

முன்புகூட ஒரு முறை என்னுடைய நேர்காணல்கள் தமிழக வணிகப் பத்திரிகைகளில் வெளியாவதற்கு 'தெரிந்த நண்பர்கள் கேட்பதால் நான் கொடுக்கிறேன்' என்று நான் சாட்டுச் சொல்கிறேன் என எழுதியிருந்தீர்கள். நான் எங்கே அப்படிச் சொன்னேன் என உங்களால் நிரூபிக்க முடியுமா? யமுனா இராசேந்திரனுக்கு எழுதிய பதிலில் என்னை நேர்காணல் செய்தவர்கள் எனது வாசகர்கள் மற்றும் தோழர்களேயொழிய யமுனா அவதூறு செய்வதுபோல கொடுக்கல் வாங்கலெல்லாம் கிடையாது எனச் சொல்லியிருப்பேன். நான் வணிக ஊடகங்களில் எழுதுவது சரியா தவறா என்ற விவாதத்தை நாம் இன்னொரு தடவை வைத்துக்கொள்வேம். ஆனால் ஏதோ குற்றவுணர்வுடன் எனது நண்பர்களென்றபடியால் தவிர்க்க முடியாமல் பேட்டி கொடுத்தேன் என நான் பம்முவது போல நீங்கள் எழுதியிருந்தீர்கள். இது சரியாகாது.

இப்படி ஆளாளாளுக்கு பொறுப்பில்லாமல் எழுதி ரென்சனை ஏற்றிவிட்டுப் பிறகு ஷோபாசக்தி கல்வெட்டு எழுதுகிறான் காணவில்லையென்று விளம்பரம் வெளியிடுகிறான் என்று வேறு குற்றம்சாட்டுவீர்கள். கொஞ்சம் நிதானியுங்கள் தோழர். மற்றவரைக் குற்றம் சாட்டமுன்பு எழுதும் தகவல்கள் சரிதானா என ஒன்றுக்க நான்கு தடவைகள் யோசியுங்கள்.

அவதூறுகள் எனக்கு மிகவும் பழகிப்போனவை. கேட்டுக் கேட்டு மரத்தே போய்விட்டேன். எனவே பொதுவாகவே நான் பின்னூட்ட விவாதங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால் என் மனதிற்குப் பிடித்த எழுத்தாளரான நீங்களே இப்படிச் செய்யும்போது கொஞ்சம் எனக்கு கவலையாய்த் தானேயிருக்கும்! இல்லையா டிசே?
-Shoba

9/17/2008 02:52:00 PM
இளங்கோ-டிசே said...

அன்பின் ஷோபாச‌க்தியிற்கு,
வாழ்த‌லுக்கான‌ த‌த்த‌ளிப்புக்க‌ள் உங்க‌ளுக்கு எழுத‌வேண்டிய‌ ப‌திலைத் தாம‌தித்துவிட்ட‌ன‌; ம‌ன்னிக்க‌வும்.
(1) 'கொரில்லா' வெளிவ‌ந்து -நான்- வாசிக்க‌பொழுதுக‌ளில், கொரில்லாவை வாசித்த‌ ந‌ண்ப‌ரொருவ‌ர், உங்க‌ள் அன்றைய‌ கால‌ நேர்காண‌ல் ஒன்றை வாசித்தே இக்கூற்றினைக் கூறியிருந்தார் (அதேயேதான் இது த‌வறாக‌விருந்தால் திருத்துங்க‌ள் என்றே என‌து முத‌ற்பின்னூட்ட‌த்தில் குறிப்பிட்டிருந்தேன்). முத‌லில் என‌து இத்த‌வ‌றுக்கு ம‌ன்னிப்பை கோரிக்கொண்டு என‌து சில‌ ச‌ந்தேக‌ங்க‌ளை உங்க‌ளிடம் இவ்விட‌த்தில் கேட்க‌லாம் என‌ நினைக்கின்றேன். 'கொரில்லா' ஒரு Fiction என‌ கொட்டை எழுத்துக்க‌ளில் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தை ஏற்றுக்கொண்டால் அதில் நிஜ‌மான‌ ம‌னித‌ர்க‌ளும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் வெளிவ‌ருகின்ற‌தே. அதை நீங்க‌ள் ஏன் அப்போதே auto fiction என‌ப் போட‌வில்லை. இல்லை Fiction என‌த்தான் போட்டிருந்தீர்க‌ளென்றால், ஏன் நிஜ‌த்தில் வாழ்ந்த‌ சில‌ ம‌னித‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை அப்ப‌டியே பாவித்திருந்தீர்க‌ள்?

இதேயிட‌த்தில் சாருவின் 'ராஸ‌லீலா'வையும் நினைவுப‌டுத்திக்கொள்ள‌லாம். சாரு அப்ப‌டியே நிஜ‌மான‌ ம‌னித‌ர்க‌ள் பல‌ரை (கூட‌வே, த‌ன‌க்குப் பிடிக்காத‌ சில‌ரை character assassination
செய்திருக்கின்றார்) த‌ன‌து நாவ‌லில் கொண்டுவ‌ந்திருக்கின்றார். ஆனால் நாவ‌லின் முன்ன‌ட்டையிலே 'இந்நாவ‌லில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ள்/ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அனைத்தும் க‌ற்ப‌னையே' என‌ சாதுரியமாக‌ப் போட்டு த‌ப்பித்துவிடுகின்றார். ராஸ‌லீலாவில் உங்க‌ள‌து பாத்திர‌மும் உண்டு என்ப‌து ஒரு நினைவூட்ட‌லுக்கு. இப்போது இப்ப‌டிப் பார்ப்போம், உங்க‌ளைப் ப‌ற்றிய‌ அவ‌தூறுக‌ள்/பொய்க‌ள் சொல்ல‌ப்ப‌ட்டிருந்தால் அதை ஒரு வாச‌க‌ர் அப்ப‌டியேதான் எடுத்துக்கொள்ள‌ப்போகின்றார். நீங்க‌ள் நாவ‌லில் நுழைந்து அதை ம‌றுக்குகின்ற‌ வெளி கூட‌ Fiction த‌ன்மையால் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

இப்போது அந்நாவ‌லிலுள்ள‌ ஒருவ‌ர் த‌ன்னைக் காப்பாற்றிக் கொள்ள‌வேண்டும் என்றால் (முக்கிய‌மாய் சாரு மிக‌ மோச‌மாய்ச் சித்த‌ரித்திருக்கும் சில‌ பெண் ப‌டைப்பாளிக‌ள்) எந்த‌வ‌கையில் அந்த‌ நாவ‌லில் இடையீடு செய்வ‌து? இதே பிர‌ச்சினைதான் உங்க‌ள் 'கொரில்லா'வுக்கு வ‌ருகின்ற‌து. நீங்க‌ள் நிலாந்த‌னை ஒரு பாத்திர‌மாக்கும்போது அதை அவ‌ர் ம‌றுத‌லிக்க‌ விரும்பினாலும் நீங்க‌ள் அது ஒரு Fiction என‌த் த‌ப்பிப்போக‌முடியும‌ல்ல‌வா?

ஃபிக்ச‌னுக்கும் ஆட்டோ ஃபிக்ச‌னுக்குமே மிக‌ப்பெரும் வித்தியாச‌ங்க‌ளிருப்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள்தானே. 'ஈழ‌ப்போராட்ட‌த்தில் என‌து சாட்சிய‌ம்' எழுதிய‌ புஸ்ப‌ராசா கூட‌ த‌ன‌து நூலை ஒரு ஆட்டோ ஃபிக்ச‌னாக்கியிருந்தால் இந்த‌ள‌வு விம‌ர்ச‌னத்தை எதிர்கொண்டிருக்க‌மாட்டார் அல்ல‌வா?

(2) குமுதினிப் ப‌ட‌கு கொலையின்போது விடுத‌லைப் புலிக‌ளின் ப‌ங்க‌ளிப்பு இல்லையென்று ந‌ம்மிருவ‌ருக்கும் தெரிந்த‌ ந‌ண்ப‌ரும் இங்கே கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

'“கொறில்லா”வில் வந்த இந்தப் பகுதி முற்றுமுழுதாகத் திரிக்கப் பட்டுள்ளதாக எனக்கு சில நண்பர்கள் கூறினார்கள். அதாவது “குமுதினி” அனர்த்தத்தின் போது வெட்டுப்பட்ட மக்களின் உடலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதும் அகற்றியதும் மக்களுக்கு உதவியதும் விடுதலைப் புலிகள் என்று சோபாசக்தி தனது படைப்பு மூலம் கூறியுள்ளார் ஆனால் தாம் நேரில் நின்று பார்த்ததாகவும்இ விடுதலைப்புலிகளுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் கூறப்படுகின்றது. இப்படியான அரசியல் பதிவு ஒன்றைத் தமக்கு சார்பாக மாற்றி அமைத்தல் என்பது மிகவும் கொடூரமானது என்பதே எனது கருத்து. இதற்கு சோபாசக்திதான் விளக்கம் அளிக்க வேண்டும்.'

(பார்க்க‌, 'ச‌க்க‌ர‌வ‌ர்த்தி, ஷோபாச‌க‌தி சில‌ அவ‌தான‌ங்க‌ள்' என்ற‌ என‌து ப‌திவுக்கான‌ பின்னூட்ட‌ங்க‌ள்: http://elanko.net/?p=31 )

வேறு சில‌ இய‌க்க‌ங்க‌ளிலிருந்த ந‌ண்ப‌ர்க‌ளும் இப்ப‌டி நேர‌டியாக‌ச் சொல்ல‌க் கேட்டிருக்கின்றேன். ஆனால் நேர‌டியாக‌ ச‌ம்ப‌வ‌ இட‌த்திலிருந்த‌ உங்க‌ளின் வார்த்தைக‌ளை ந‌ம்புகின்றேன். இனி இக்குற்ற‌ச்சாட்டை 'கொரில்லா'வை முன்வைத்து எழுப்ப‌மாட்டேன் என‌ உறுதிய‌ளிக்கின்றேன்.

(3) புலிக‌ளின் முத‌லாவ‌து த‌ற்கொலைத்தாக்குத‌ல் மில்ல‌ரோடு ஆர‌ம்பிக்கின்ற‌தென்ப‌தை அனைவ‌ரும் அறிவ‌ர். ஆனால் முத‌லாவ‌து பெண் த‌ற்கொலைத் தாக்குத‌ல் குறித்தே நான் வினா எழுப்பியிருந்தேன். நானறிந்த‌வ‌ரை அது ஜெய‌சுக்குறு நேர‌த்தில் தாண்டிக்குள‌த்தில் ஆயுத‌க் க‌ள‌ஞ்சிய‌ம் மீதான‌ த‌ற்கொலைத்தாக்குத‌லிலேயே புலிக‌ள் (பெண்ணின்) பெய‌ர்போட்டு உரிமை கோரியிருந்த‌ன‌ர். இப்போது நீங்க‌ள் உங்க‌ள் நாவ‌லை நேர்காண‌லின் பின் வ‌ள‌ர்த்தெடுத்த‌பின் (அதாவ‌து ஃபிக்ச‌னிலிருந்து ஃஆட்டோ பிக்ச‌னாக்கிய‌ பிற‌கு) நான் உண்மையென்று சொன்ன‌தில்லை என்கின்றீர்க‌ள். குமுதினிப் ப‌ட‌கில் புலிக‌ளின் ப‌ங்க‌ளிப்பை உண்மையென்று எடுத்துக்கொள்ளும் ஒரு எதிர்கால‌ வாச‌க‌ர் உங்க‌ள் பிர‌தியிலிருந்து ஈழ‌த்து வ‌ர‌லாற்றை வாசிக்க‌த் தொட‌ங்கின் இச்ச‌ம்ப‌வ‌த்தையும் ஒரு உண்மைச் ச‌ம்ப‌வ‌மாக‌வே எடுத்துக்கொள்வார். சாரு நிவேதிதா 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில்' இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ள‌ப் பெண்ணைப் பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்த‌து என்று எழுதுவ‌தைப் போல‌ தான்றித்தோன‌த்தில் எழுதுப‌வ‌ர் நீங்க‌ள் அல்ல‌ என்ற‌ப‌டியால்தான் இதே உங்க‌ளிட‌ம் எழுப்ப‌வேண்டியிருக்கிற‌து. அதுவும் அத்த‌ற்கொலைப்போராளிக்கு பெய‌ர், இராணுவ‌ அந்த‌ஸ்து வ‌ழ‌ங்கிக் ப‌க்க‌த்தில் அடிக்குறிப்பாய் வ‌ரும்போது ஃபிக்ச‌ன் என‌த்த‌ப்பிபோக‌முடியுமா என்ப‌தை உங்க‌ளிட‌மே விட்டுவிடுகின்றேன்.

(2) /முன்புகூட ஒரு முறை என்னுடைய நேர்காணல்கள் தமிழக வணிகப் பத்திரிகைகளில் வெளியாவதற்கு 'தெரிந்த நண்பர்கள் கேட்பதால் நான் கொடுக்கிறேன்' என்று நான் சாட்டுச் சொல்கிறேன் என எழுதியிருந்தீர்கள். நான் எங்கே அப்படிச் சொன்னேன் என உங்களால் நிரூபிக்க முடியுமா? யமுனா இராசேந்திரனுக்கு எழுதிய பதிலில் என்னை நேர்காணல் செய்தவர்கள் எனது வாசகர்கள் மற்றும் தோழர்களேயொழிய யமுனா அவதூறு செய்வதுபோல கொடுக்கல் வாங்கலெல்லாம் கிடையாது எனச் சொல்லியிருப்பேன். நான் வணிக ஊடகங்களில் எழுதுவது சரியா தவறா என்ற விவாதத்தை நாம் இன்னொரு தடவை வைத்துக்கொள்வேம். ஆனால் ஏதோ குற்றவுணர்வுடன் எனது நண்பர்களென்றபடியால் தவிர்க்க முடியாமல் பேட்டி கொடுத்தேன் என நான் பம்முவது போல நீங்கள் எழுதியிருந்தீர்கள். இது சரியாகாது./

நிரூபித்துவிட்டால் போய்விட்ட‌து. இங்கேதான் இப்ப‌டி எழுதியிருந்தீர்க‌ள்.
/என்னை ‘ஆனந்தவிகடனுக்காக’ நேர்காணல் செய்தவர் டி. அருள்எழிலன். அவர் ராஜாங்கத்தின் முடிவு என்ற குறும்படத்தின் இயக்குனர், நடிகர். ‘இந்தியா டுடே’க்காக என்னை நேர்கண்டவர் பீர் முகமது. சிறந்த கட்டுரையாளர். எங்களது கறுப்புத் தொகுப்பிற் கூட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். ‘குமுதத்திற்காக’ நேர்கண்டவர் கடற்கரய். கடற்கரய் ஒரு கவிஞர். ‘தீராநதி’க்காக என்னை நேர்கண்டவர் தளவாய் சுந்தரம். தளவாய் சுந்தரம் சிறுபத்திரிகைகளில் நீண்டகாலமாகக் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர். இவர்கள் நால்வருமே எனது வாசகர்கள். என்னை நேர்காணலிற்காக விகடன் நிர்வாகமோ குமுதம், இந்தியா டுடே நிர்வாகமோ தொடர்புகொள்ளவில்லை. /
(பார்க்க‌, ச‌த்திய‌க்க‌ட‌தாசியில், 'எதிர்ப்ப‌தும் எம‌து ம‌ர‌பு')

நீங்க‌ளும் சுக‌னும் ஒரு வ‌ழிகாட்டியாக‌ ஒரு குருவாக‌ ஏற்றுக்கொண்ட‌ அ.மார்க்ஸ், வெ.சாவிற்கு ஆத‌ர‌வான‌ குர‌லெழுப்பிய‌ இந்தியா ரூடேக்கு என்ன‌ செய்தார் என்ப‌தை நீங்க‌ள‌றிவீர்க‌ள். ச‌ரி அதைத்தான் விடுவோம். த‌லித்துக்க‌ள்/முஸ்லிம்க‌ள் இன்ன‌பிற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளை இழிவுக்குள்ளாக்கும் பார்ப்ப‌ன‌ப் ப‌த்திரிகைக‌ளில் எப்ப‌டி விளிம்புநிலையின‌ருக்கு குர‌ல்கொடுப்ப‌தாய்ச் சொல்லிக்கொண்டிருக்கும் உங்க‌ளால் நேர்காண‌ல் கொடுக்க‌ முடிந்த‌து? அது அற‌ஞ்சார்ந்த‌ விட‌ய‌ம‌ல்ல‌வா? இவ்வாறான‌ ப‌த்திரிகைக‌ளில் அநேக‌ம் த‌ங்க‌ளின் ஈழ‌ஞ்சார்ந்த‌ கொள்கைக‌ளுக்கு ஏற்ப‌ ம‌ட்டும் உங்க‌ளிட‌ம் கேள்விக‌ள் கேட்டு (முக்கிய‌மாய் இந்தியா ரூடே) பிர‌சுரிப்ப‌து குறித்து பிர‌ஞ‌ஞை இல்லாம‌லா நீங்க‌ளிருப்பீர்க‌ள்? இவ‌ற்றைத்தான் நீங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ந்து கேட்டார்க‌ள் ஆக‌வே நேர்காண‌ல்க‌ள் கொடுத்தேன் என்று ச‌ப்பைக் கார‌ண‌த்தைச் சொல்லி இவ்வாறான‌ விம‌ர்ச‌ன‌ங்களிலிருந்து த‌ப்ப‌முடியாது என்று கேட்டிருந்தேனே த‌விர‌, நான் கொடுக்க‌ல் வாங்க‌ல் இருக்கின்ற‌து என்ற‌ அர்த்த‌த்தில் எழுப்ப‌வில்லை. கிட்ட‌த்த‌ட்ட‌ இதே கேள்வியைத்தான் சுகுணா திவாக‌ரின் ப‌திவில் (புதிய‌ பார்வை வெளியிட்ட‌ முத்துராம‌லிங்க‌த்தேவ‌ர் சிற‌ப்பித‌ழ் ப‌ற்றிய‌ ப‌திவு) நான் அ.மார்க்ஸின் அற‌ம் ச‌ம்ப‌ந்த‌மாய் கேள்வி எழுப்பியிருந்தேன். சுகுணாவும் இனி அ.மார்க்ஸ் புதிய‌ பார்வையில் எழுத‌மாட்டாரென‌த் தெரிவித்திருந்தார். தேவ‌ரின‌ அபிமான‌ங்கொண்ட‌ ந‌ட‌ராஜ‌ன் கொண்டு ந‌ட‌த்தும் ஒரு ப‌த்திரிகையில், அ.மார்க்ஸ் எழுதிக்கொண்டிருந்த‌தை ம‌ணாவுட‌னான‌ ந‌ட்பு என்று சொல்லிக்கொண்டு புனித‌ப்ப‌டுத்திவிட‌முடியுமா? அல்லாவிட்டால் அ.மார்க்ஸ் அதுவ‌ரை ந‌ட‌ராஜ‌னின் அர‌சிய‌ல் தெரியாத‌ ப‌ச்சைக் குழ‌ந்தையென‌த்தான் கொள்ள‌ வேண்டுமா?

ஷோபா, உங்க‌ள் ம‌ன‌ச்சாட்சியைக் கேட்டுச் சொல்லுங்க‌ள். இந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் நேர்காண‌ல் எடுக்கும்போது அவ‌ர்க‌ள் சார்ந்திருக்கும் ப‌த்திரிகையில்தான் நேர்காண‌ல் வ‌ரப்போகின்ற‌து என்ப‌தை நீங்க‌ள் அறிய‌வில்லையா? நான் குறிப்பிட‌ விழைந்த‌து இதைத்தான், ந‌ண்ப‌ர்க‌ளைக் கார‌ண‌ங்காட்டி இப்ப‌த்திரிகைக‌ளில் வெளிவ‌ந்த‌ நேர்காண‌லிற்காய் அற‌ஞ்சார்ந்து எழுப்ப‌ப்ப‌டும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை நீங்க‌ள் த‌விர்க்க‌முடியாது என்றுதான். ஆக‌வேதான் கேட்டேன், நாளை உங்க‌ளுக்கு நெருக்க‌மான‌ ஒரு ந‌ண்ப‌ர்/வாச‌க‌ர் உங்க‌ளை நேர்காண‌ல் எடுத்துக்கொண்டுபோய் ஒரு தீவிர‌ ஆர்.எஸ்.எஸ் இன்ன‌பிற‌வ‌ற்றில் பிர‌சுரித்தாலும் ந‌ண்ப‌ர்க‌ள்தானே என்று வாளாவிருப்பீர்க‌ளா? உங்க‌ளிற்கு ஒன்றை நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன். குமுத‌ம் 'யாழ்ம‌ண‌ம்' என்று ஈழ‌/புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்காய் ஒரு இணைய‌ச் ச‌ஞ்சிகை தொட‌ங்கிய‌போது, என‌க்குத் தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் த‌ம‌து ஆக்க‌ங்க‌ள் அதில் வெளிவ‌ந்த‌போது, அதை அக‌ற்ற‌வேண்டுமென‌ அட‌ம்பிடித்திருக்கின்றார்க‌ள். அப்ப‌டைப்புக்க‌ளை அவ‌ர்க‌ளின் பிற‌ ந‌ண்ப‌ர்க‌ளால் அனுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌போதும். ‌

/இப்படி ஆளாளாளுக்கு பொறுப்பில்லாமல் எழுதி ரென்சனை ஏற்றிவிட்டுப் பிறகு ஷோபாசக்தி கல்வெட்டு எழுதுகிறான் காணவில்லையென்று விளம்பரம் வெளியிடுகிறான் என்று வேறு குற்றம்சாட்டுவீர்கள். கொஞ்சம் நிதானியுங்கள் தோழர். மற்றவரைக் குற்றம் சாட்டமுன்பு எழுதும் தகவல்கள் சரிதானா என ஒன்றுக்க நான்கு தடவைகள் யோசியுங்கள். /

என‌க்கு முழுமையாக‌த் தெரியாத‌/அறியாத‌, க‌ல்வெட்டு எழுதுத‌ல் இன்ன‌பிற‌ விட‌ய‌ங்க‌ளுக்குப் போக‌விரும்ப‌வில்லை (கூட‌வே நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினியையும் நீங்க‌ள் சேர்த்துக்கொள்ள‌லாம்). நிதானித்துத்தான் ஷோபா எழுதியிருந்தேன். இல்லாவிட்டால் அங்குமிங்குமாய் உங்க‌ளைப் ப‌ற்றிக் கேட்ட‌தையெல்லாம் எழுதி ஒரு ப‌திவே போட்டிருக்க‌லாம். எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப‌தே அறிவு என்றுதான் என‌க்குத் தெரிந்த‌/ என்னால் உரையாட‌க்கூடிய‌ புள்ளிக‌ளை ம‌ட்டுமே வைத்து அவ்வ‌ப்போது உங்க‌ளிட‌ம் கேள்விக‌ளை எழுப்பியிருக்கின்றேன். பாருங்க‌ள் ஷோபா இப்போதுதான் நினைவுக்கு வ‌ருகின்ற‌து (அவ்வ‌ப்போது வாசிப்ப‌வ‌ற்றை தோண்டித் தோண்டி எடுத்துக்கொண்டிருக்கவா முடியும்?) நீங்க‌ள் ஒரு நேர்காண‌லில் (அல்ல‌து உங்க‌ள் இந்திய‌ தோழ‌ர்க‌ள்/வாச‌க‌ர்க‌ள)ஒரிட‌த்தில் கொரில்லாவைப் புலிக‌ள் த‌ம‌து க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் விற்ப‌த‌ற்குத் த‌டை விதித்துள்ளார்க‌ள் என்று சொல்ல‌ப்ப‌ட்டிருந்த‌து. இத்த‌னைக்கும் நானே நேர‌டியாக‌ கிளிநொச்சியில் அறிவ‌முதில், உங்க‌ள‌து 'கொரில்லா' உட்ப‌ட‌ நீங்க‌ளும் சுக‌னும் தொகுத்த‌ 'ச‌ன‌த‌ரும‌போதினி' போன்ற‌வ‌ற்றை விற்ப‌னைக்கு வைத்திருப்ப‌தைப் பார்த்திருக்கின்றேன். நான் பொறுப்ப‌ற்றுச் சொன்னால் கூட‌, நூறுக்கும் குறைவாய் என் வ‌லைப்ப‌திவை வாசிப்ப‌வ‌ர்களைத்தான் போய்ச்சேர்ந்திருக்கும். இப்ப‌டி கொரில்லா த‌டைசெய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானவ‌ர்க‌ள் வாசிக்கும் ‍‍‍-புலிக்காய்ச்ச‌லிருக்கும்- ப‌த்திரிகையேதோ ஒன்றில்‍ இப்ப‌டி த‌வறான‌ த‌க‌வ‌ல் வ‌ருகின்ற‌தே? அதுவ‌ல்ல‌வா மிக‌ மோச‌மான‌து. நீங்க‌ளோ அல்ல‌து உங்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ள்/வாச‌க‌ர்க‌ளோ ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்த‌ல்ல‌வா இப்ப‌டியான‌ ஒரு செய்தியைக் க‌சிய‌விட்டிருக்க‌வேண்டும் என்று நானும் உங்க‌ளிட‌மும் கேட்கமுடியும‌ல்ல‌வா ஷோபா?

இறுதியில், எல்லாமே சுப‌ம் என்று சொல்கின்ற‌ வ‌ழ‌மையான‌ வார்ததையாய் அல்லாது, ஷோபா ச‌க்தி என்கின்ற‌ ப‌டைப்பாளி மீது என‌க்கு மிகுந்த‌ ம‌திப்புண்டு. இன்றும் புல‌ம்பெய‌ர் இல‌க்கிய‌ம் என்று முன்வைத்து பேசும்போது ஆக‌க்குறைந்த‌து ஷோபாச‌க்தி என்றொரு ப‌டைப்பாளி எங்க‌ளிடையே இருக்கின்றார் என்ப‌து ம‌கிழ்வுத‌ர‌க்கூடிய‌ ஒன்றேதான் என்று ப‌ல‌ த‌ட‌வைக‌ள் சொல்லியிருக்கின்றேன். இன்று உங்க‌ள் மீது எத்த‌கைய‌ விம‌ர்ச‌ன‌ம் வைப்ப‌வ‌ர்க‌ளால் கூட‌ ஷோபாச‌க்தியென்ற‌ ப‌டைப்பாளியின் இட‌த்தை ம‌றுத‌லிக்க‌வே முடியாது. உங்க‌ளின் எழுத்து ந‌டையை மிக‌வும் வித‌ந்து நான் பேசிய‌போது, உங்க‌ள் ஊருக்கு அருகிலிருந்த‌ ஒரு முன்னால் இய‌க்க‌ ந‌ண்ப‌ரொருவ‌ர், இதென்ன இது எங்க‌டை ஊரின் பேச்சு வ‌ழ‌க்குத்தான் என்று இல‌குவாய் சொன்ன‌போது, ஷோபாவால் அதை எழுத்தில் அப்ப‌டியே முன்வைக்க் முடிந்த‌து, உங்க‌ளைப்போன்ற‌வ‌ர்க‌ளால் இப்ப‌டி சும்மா க‌தைத்துக்கொண்டிருக்க‌த்தான் முடிந்த‌து என்றுதான் விவாதித்திருக்கின்றேன்.

இப்போதுகூட‌, சாருவின் ராஸ‌லீலாவை வாசித்துவிட்டு, அது குறித்து விம‌ர்ச‌ன‌ம் எழுதுவ‌தாய் இருந்தால், ராஸ‌லீலா மாதிரி ஒரு நாவ‌ல் எழுதிவிட்டு, ஷோபாச‌க‌தியின் 'கொரில்லா', 'ம்' போன்ற‌வை சிற‌ந்த‌ நாவ‌ல்க‌ளே அல்ல‌ என்று கூற‌ உங்க‌ளிற்கு என்ன‌ அருக‌தை இருக்கிற‌து என்று சாருவிட‌ம் காட்ட‌மாக‌க் கேள்வி கேட்க‌வே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் (அத‌ற்காய் சாருவின் ம‌ற்றைய‌ ப‌ங்க‌ளிப்புக்க‌ளை ம‌றுத‌லிப்ப‌து என்ற‌ அர்த்த‌ம் இல்லை). இன்னும் நீங்க‌ள் தொட‌ர்ந்து தீவிர‌மாய் புல‌ம்பெய‌ர்ந்த‌ தேச‌த்திலிருந்துகொண்டு இய‌ங்குக்கொண்டிருக்கின்றீர்க‌ள் என்ப‌தில் மிகுந்த‌ அன்பும் நெருக்க‌மும் என‌க்கு உண்டு (உங்க‌ளைப் போல‌ ந‌ல்ல‌ ப‌டைப்புக்க‌ளைத் தொட‌ர்ச்சியாக‌த் த‌ருவார்க‌ள் என்று நான் ந‌ம்பிய‌ பார்த்தீப‌ன், மைக்கேல் போன்ற‌வ‌ர்க‌ள் உற‌ங்குநிலைக்குப்போன‌து குறித்து மிகுந்த‌ வ‌ருத்த்முண்டு). ஷோபா நீங்க‌ள் அறிந்தோ அல்ல‌து அறியாம‌லோ உங்க‌ளின் பாதிப்பில் ஈழ‌/புல‌ம்பெய‌ர்ந்த இன்னொரு த‌லைமுறை உங்க‌ள் எழுத்துக்க‌ளை நேசித்துக்கொண்டு எழுத‌ வ‌ந்துகொண்டிருக்கின்ற‌து. நாம் ம‌திக்கின்ற‌/நெருக்க‌மாய் உண‌ர்கின்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் சிறிய‌ த‌வ‌று அல்ல‌து தாம் சொன்ன‌திற்கு எதிராக‌த் திசை திரும்புகிறார்க‌ளோ என்று தெரியும்போது எங்க‌ளுக்கு மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ம் வ‌ரும். அத்த‌கைய் நிலையிலேயே என‌து விம‌ர்ச‌ன‌ங்க‌ள்/கேள்விக‌ள‌ உங்க‌ள் மீது எழுப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌/ இனியும் எழுப்ப‌ப்ப‌டுமே த‌விர‌, த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்புண‌ர்விலோ, வேறெந்த‌ அர‌சிய‌லிலோ அல்ல‌ என்ப‌தை இன்னொருமுறை உங்க‌ளிட‌ம் கூறிவிட‌ விழைகின்றேன். ந‌ன்றி.

9/25/2008 09:48:00 AM
Anonymous said...

arumaiyaana varikal thamilan!

anbudan
- anaivarkum therinthavan thaan!

10/01/2008 10:42:00 AM
Anonymous said...

டி.சே,
சோபாசக்திக்கு நீங்கள் கூறிய பதில் நன்று. சோபாசக்தி தான் பெரிய புனிதர் மாதிரி வந்து கதைவிடுவது நமக்கு மயிர் இருக்கிற இடத்தில எல்லாம் புல்லரிக்க வைக்குது.

சோபாசக்தியும் சுகனும் சத்தியகடதாசி மூலம் பரப்பி வரும் பொய்கள் எல்லோரும் அறிந்ததே. மதிப்புக்குரிய ராஜதுரை ஐயா சுடப்பட்ட போது சத்தியக் கடதாசி செய்த பொய்ப்பரப்புரையை போல யாரும் செய்ததில்லை.
அதுமட்டுமன்றி சுகன் சத்தியகடதாசியில் எழுதும் பொய்களை எதிர்த்துக் கூற வக்கில்லாத சோபாசக்திக்கு இதுகளை பார்த்து கவலை வாறது பென்னாம் பெரிய பொய். சிலவேளை சோபாசக்தி இப்பதான் சுயநினைவுக்கு வந்தாரோ தெரியவில்லை.

சோபாசக்தி,
நீங்களும் மற்றவர்களை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் நிதானியுங்கள். உள்ள பொய்களை எல்லம் எழுதாதீர்கள். நீங்கள் எழுதும் பொய்களால் தலித்துக்கள் தங்கள் உரிமைக்காக குரல்கொடுப்பது தாமதமாகும். உங்கட அவதூறுகளைக் கேட்டு மரத்து எழுத்தையே வெறுக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். முதலில் நீங்கள் நிறுத்துங்கள். பின்னர் மற்றவர்களை நிறுத்தச் சொல்லி சொல்ல முடியும். முதலில் சுகனிடம் சொல்லுங்கள் எழுதும் தகவல்களை சரி பார்த்தா எழுதுகிறாய்? எண்டு கேளுங்கள்.

மற்றவங்களுக்கு ரென்சனை ஏத்திப் போட்டு, மற்றவன் அவதூறு பரப்புறான் எண்டு எல்லாரிட்டையும் கையெழுத்து வேண்டிக் கொண்டு திரியுங்கோ..

10/05/2008 02:51:00 PM
King... said...

\\
இன்னும் நீங்க‌ள் தொட‌ர்ந்து தீவிர‌மாய் புல‌ம்பெய‌ர்ந்த‌ தேச‌த்திலிருந்துகொண்டு இய‌ங்குக்கொண்டிருக்கின்றீர்க‌ள் என்ப‌தில் மிகுந்த‌ அன்பும் நெருக்க‌மும் என‌க்கு உண்டு (உங்க‌ளைப் போல‌ ந‌ல்ல‌ ப‌டைப்புக்க‌ளைத் தொட‌ர்ச்சியாக‌த் த‌ருவார்க‌ள் என்று நான் ந‌ம்பிய‌ பார்த்தீப‌ன், மைக்கேல் போன்ற‌வ‌ர்க‌ள் உற‌ங்குநிலைக்குப்போன‌து குறித்து மிகுந்த‌ வ‌ருத்த்முண்டு). ஷோபா நீங்க‌ள் அறிந்தோ அல்ல‌து அறியாம‌லோ உங்க‌ளின் பாதிப்பில் ஈழ‌/புல‌ம்பெய‌ர்ந்த இன்னொரு த‌லைமுறை உங்க‌ள் எழுத்துக்க‌ளை நேசித்துக்கொண்டு எழுத‌ வ‌ந்துகொண்டிருக்கின்ற‌து. நாம் ம‌திக்கின்ற‌/நெருக்க‌மாய் உண‌ர்கின்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் சிறிய‌ த‌வ‌று அல்ல‌து தாம் சொன்ன‌திற்கு எதிராக‌த் திசை திரும்புகிறார்க‌ளோ என்று தெரியும்போது எங்க‌ளுக்கு மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ம் வ‌ரும். அத்த‌கைய் நிலையிலேயே என‌து விம‌ர்ச‌ன‌ங்க‌ள்/கேள்விக‌ள‌ உங்க‌ள் மீது எழுப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌/ இனியும் எழுப்ப‌ப்ப‌டுமே த‌விர‌, த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்புண‌ர்விலோ, வேறெந்த‌ அர‌சிய‌லிலோ அல்ல‌ என்ப‌தை இன்னொருமுறை உங்க‌ளிட‌ம் கூறிவிட‌ விழைகின்றேன். ந‌ன்றி
\\

நாங்களும் இருக்கிறோம் அண்ணன்...

உங்களை எல்லாம் ஒரு முறை என்றாலும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில்

இளங்கோ அண்ணன் உங்களோடை கதைக்கக நிறைய இருக்கு...

கெதியில நான் இதுக்காகவேனும் கனடாவுக்கு வரவேணும்

10/08/2008 01:53:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள நண்பருக்கு,

இந்தப் பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டமிது.

தமிழ் சினிமா மற்றும் அதன் பார்வையாளர்கள் தொடர்பாக நாகார்ஜீனன் சில எளிய கேள்விகள் எழுப்பியுள்ள ஒரு பதிவினைத் தொடர்ந்து இணையப்பதிவர்கள் சிலரும் அதனைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். புதிதாக எழுதுபவர் தனக்கு விருப்பமானவர்களைச் தொடரச் சொல்லி ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம் என்பது பின்பற்றத் தேவையில்லாத ஒரு விதி. நீங்களும் உங்களின் சிறிய நேரத்தை செலவு செய்து இதில் பங்குபெற வேண்டுமென்பது என் விருப்பம். மேலதிக விவரங்களை அறிய நான் எழுதியுள்ள இந்த மாதிரியைப் பார்க்கவும். எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். http://pitchaipathiram.blogspot.com/2008/10/blog-post_10.html

10/10/2008 09:51:00 AM