'A Passage North'இல் கிரிஷான் என்கின்ற பாத்திரத்திற்கு ஒரு காதலி இந்தியாவில் இருப்பார். அவரைப் பிரிந்து வந்து நான்கு வருடங்களில் -நனவிடைதோய்தலாக- கிரிஷான் அவரது காதலியான அஞ்ஜமை நினைவுகூர்வார். இந்த நான்குவருடங்களில் நான் நன்கு முதிர்ச்சியடைந்துவிட்டேன், எனக்கு தசைகள் திரண்டு தோள்கள் விரிந்துவிட்டன, இந்த நிலையில் என்னைப் பார்த்தால் அஞ்ஜம் இப்போது என்னை அதிகம் நேசிப்பார் என்று கிரிஷான் நினைப்பார். அப்படி நினைக்கும்போது, அந்த நான்கு வருடங்களில் தன்னைப் போலவே அஞ்ஜமும் முதிர்ச்சியடைந்திருப்பார், ஒவ்வொரு மனிதரும் தாம் விட்டுவந்த காலத்தில் இருந்ததுபோல தமக்குத் தெரிந்த மனிதர்களும் இருப்பார்கள் என்று நம்புகின்றோம். ஆனால் நாம் இடைப்பட்ட காலத்தில் எப்படி மாறுகின்றோமோ அப்படித்தான் அவர்களும் மாறியிருப்பார்கள். அதை மறந்துவிடுகின்றோம் என்று கிரிஷான் பிறகு தனக்குள் இந்த நாவலில் நினைப்பார்.
வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை
In இன்னபிற, In பத்தி, In வாசிப்புFriday, November 19, 2021
அதுதான் யதார்த்தம்.
இந்த நாவலில் இது பிரிந்த காதலுக்கு உரியதென்றாலும் இதைப் புலம்பெயர்ந்த எவருக்கும் பொருத்திப் பார்க்கலாம். அது போரோ, பொருளாதார நிமித்தமோ எதுவாக இருந்தாலும் இடம்பெயர்ந்த நிலமும் மனிதர்களும் நாம் விட்டுவந்த காலத்தைப் போல அப்படியே இப்போதும் இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் காலம் வேறுவிதமான பதில்களை நமக்காய் வைத்திருக்கின்றது.
ப்யூகோவ்ஸ்கி இறுதிக்காலத்தில் எழுதிய குறிப்புகள் 'The Captain Is Out to Lunch and the Sailors Have Taken Over the Ship' என்ற புத்தகமாக வந்திருக்கின்றது. தலைப்பே ஒருவிதமாக இருக்கிறது அல்லவா. அந்தக் குறிப்புகளில் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றி ப்யூகோவ்ஸ்கி எழுந்தமானமாக எழுதிக்கொண்டு போவார். அதில் ஓரிடத்தில், எழுத்தாளர்கள் எழுதியவற்றைவிட, அவர்களைத் தனக்குப் பிடித்தமாதிரி இப்படி இருந்திருப்பார்களெனக் கற்பனை செய்வது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது என்பார், ப்யூகோவ்ஸ்கி.
கிட்டத்தட்ட இதேமாதிரித்தான் நான் அனுபவித்தவற்றை, கைவிட்டு வந்தவற்றைப் பற்றி நாங்கள் எங்களுக்குப் பிடித்தமாதிரி நினைத்துக் கொள்கின்றோம்/நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகின்றோமோ தவிர, அதை அப்படியே நாம் நினைப்பதுபோல கடந்தகாலத்தில் இருந்திருக்கச் சாத்தியமில்லை என்பதும் கசப்பான உண்மை. என்றாலும் விழுங்கிக்கொண்டாகத்தான் வேண்டும். ஆகவேதான் கடந்தகாலத்தை நிகழ்காலத்தில் தேடத்தொடங்கும்போது நாம் ஏமாற்றமடைகின்றோம், விரைவில் சலிப்படைந்து போகின்றோம்.
ப்யூகோவ்ஸ்கி எல்லோரையும் விட கவிஞர்கள் மீது மிகுந்த சலிப்பை இந்தக் குறிப்புகளில் காட்டுகின்றார். அவர் சந்தித்த கவிஞர்களைப் பற்றி எழுதிச் செல்லுவது அவ்வளவு அங்கதச் சுவையுடையவை. இந்த இளம் கவிஞர்கள் எல்லாம் எந்தத் தொழிலையும் ஒழுங்காய்ச் செய்யாமல், வசதியாக வாழ்கின்றார்களே எப்படி என்று அதன் ஆழத்தைத் தேடிப் போகும்போது, அநேகமாக எல்லா இளஞ்கவிஞர்களையும் அவர்களின் தாயார்கள் பராமரித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை ப்யூகோவ்ஸ்கி கண்டுபிடிக்கின்றார்.
அதிலும் ஒரு கவிஞர் தன்னை ஒரு இடதுசாரியாகச் சொல்லிக்கொண்டிருப்பவர். ஞாயிறுகளில் தேவாலயத்தில் கவிதைப் பட்டறைகளையும் அடிக்கடி நடத்துபவர். அந்தப் பட்டறையில் கலந்துகொள்ளும் ஒரு பெண் ப்யூகோவ்ஸ்கியைச் சந்திக்கும்போது, இந்த இளம் கவிஞர் உணவுகள் விற்கும் டிரக்கில் கஷ்டப்பட்டு வேலை செய்து வாழ்கின்றார் என்று சொன்னதாகச் சொல்கின்றார். ஆனால் உண்மையில் இந்த கவிஞர் பல வீடுகளைச் சொந்தமாக வைத்து அதில் வரும் வாடகையில் சொகுசாக வாழ்கின்றவர். இப்படி பொய்சொன்னதை அறிந்த ப்யூகோவ்ஸ்கி இந்த கவிஞர் இருக்கும் அடுக்கத்துக்கு சென்று, Fred, come on down here and I'll kick you ass, you communist land owner!" என்று கத்திக் கூப்பிடுகிறார். அந்தக் கவிஞரோ, ப்யூகோவ்ஸ்கி இங்கிருந்து போய்விடுங்கள் என வீட்டுக்குள் இருந்து கெஞ்சுகிறார். ப்யூகோவ்ஸ்கி கோபத்தில் பியர் போத்தலை வீட்டு யன்னலை நோக்கி எறிந்துவிட்டு பொலிஸ் வரமுன்னர் அந்த இடத்தை விட்டு விலகிப் போவார். ஆக, இந்தக் காரணங்களால்தான் நான் தனியே இப்போது இருக்க விரும்புகின்றேன் என்பார் அவர்.
இது ப்யூகோவ்ஸ்கி இறப்பதற்கு ஒரு வருடம் முன்னர் எழுதப்பட்ட குறிப்புகளில் தொகுப்பு. வாசிப்பதற்கு மிகுந்த சுவாரசியமானது. அசோகமித்ரனுக்கு அவரது மூப்படைந்த காலத்திலும் எப்படி அவரது எழுத்து நீர்த்துப் போகாது இருந்தததோ, அப்படியே ப்யூகோவ்ஸ்கியின் எழுத்துக்களும் அவரின் கடைசிக்காலம் வரை அலுப்படையாதிருப்பதை நாம் இதை வாசிக்கும்போது அவதானிக்கலாம்.
நகுலனின் 'நினைவுப்பாதை'யை வாசிக்கும்போது நவீனன் என்ற கதைசொல்லி, தனது நண்பர்கள் ஏன் எப்போதும் தன்னைப் பற்றியே கதை சொல்லிக்கொண்டிருக்கின்றான் என்று அலுப்படைகின்றார்கள் என அதில் எழுதியிருப்பார். ஆனால் என்ன செய்ய என்னுடைய அனுபவம் இவ்வளவுதான், எனக்கு என்னை அகவயமாகப் பார்ப்பதுதான் முக்கியமாக இருக்கிறதென்று நவீனன் என்ற கதைசொல்லி வாசிக்கும் நமக்கு அடிக்கடி நினைவுபடுத்தியபடி இருப்பார்.
நகுலனுக்கு, ப்யூகோவ்ஸ்கியிற்கு மனிதர்களை விட்டு விலகியிருக்கும் பெருவிருப்பு இருந்திருக்கின்றது என்பது அவர்களின் எழுத்துக்களில் இருந்து எளிதாகப் புரியும். நகுலனையும், பிரான்சிஸ் கிருபாவையும் கூட சிலவேளைகளில் நான் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பதுண்டு. நகுலனுக்கு அவருக்கென ஒரு தொழிலும், அவரின் குடும்பத்தினரால் வந்த சொந்த வீடும் இறுதிவரை இருந்ததால் அவர் ஓரிடத்தில் -தனக்குரிய உலகிற்குள் எவரது தொந்தரவுமின்றி- வசிக்க முடிந்திருக்கின்றது.
பிரான்சிஸ் கிருபா அவராக தன் வாழ்வைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது அவர் வாழ்ந்த வாழ்வு அவரைத் தேர்ந்தெடுத்ததா என்பது குறித்து நாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் நகுலனை, ப்யூகோவ்ஸ்கியை அறியும்போது பிரான்ஸிஸ் கிருபாவுக்கும் அவருக்குரிய உலகில் வாழச் சாத்தியமாகியிருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகின்றது. இதன் அர்த்தம் வறுமையைப் பற்றிக் கதைக்கின்றேன் என்று நீங்கள் நினைத்தால் நான் எதைச் சொல்ல வருகின்றேன் என்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!
சிலவருடங்களுக்கு முன் பிரமிளை நினைவுகூர்ந்த கூட்டத்திலும் பிரமிளை அவர் வறுமையில் வாழ்ந்தார், தமிழ்ச்சமூகம் கைவிட்டுவிட்டது என்பதுமாதிரி, பிரமிள் வறுமையில் வாழ்ந்த கலைஞர் என்ற விம்பத்தை அவருக்கு அணிவது சரியல்ல என்று யாரோ (எம்.டி.எம்?) எழுதியதை வாசித்தது ஞாபகம் இருக்கின்றது. அவ்வாறு இவர்களை நினைவுகொண்டால் நாம் அவர்களின் எழுத்தில் தோய்ந்த ஆன்மாக்களைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று எளிதாக விளங்கிவிடும். இது அவர்களில் பிழைகளல்ல, அவர்களைப் புரிந்துகொள்ளாமல் நாம் விடும் தவறுகளே இவை.
ஒரளவு வசதியுடன் தமிழகத்திற்கு மலேசியாவிலிருந்து வாழ வந்த ப.சிங்காரம் ஏன் இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதவில்லை என்பதைக் கூட நாம் இந்த இடத்தில் வைத்து விளங்கிக்கொள்ள முயலலாம். இங்கே மீண்டும் ப்யூகோவ்ஸ்கியை நினைவுகொள்கின்றேன். எழுத்தாளர்கள் துன்பப்படுவதாலும், சிலுவையில் ஏற்றப்பட்டு வேதனையுறுவதன் மூலமாகவுமே சிறந்த எழுத்து வருமென்று பாவனை செய்கின்றார்கள். அப்படி விரும்புபவர்களைச் சிலுவையில் அறைய அனுமதியுங்கள். அவர்களை வாழ்த்தியும் விடுவோம். ஆனால் வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை, எழுத்தாளரே அதை உருவாக்கின்றார் (..but pain doesn't create writing, a writer does.) என்கின்றார் ப்யூகோவ்ஸ்கி.
இப்படித்தான் பலர் அடையாளத்தைத் தாங்கி வைத்திருக்கின்றார்களே தவிர, அதற்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இடதுசாரி, பகுத்தறிவு என்று சொல்லிக்கொள்வார்கள், ஆனால் இன்னொருபுறத்தில் பூர்ஷூவாக்களாகவும், சாதிமான்களாகவும் இருப்பார்கள்.
இதற்கும் ப்யூகோவ்ஸ்கியின் ஒரு கவிதைதான் ஞாபகத்துக்கு வருகின்றது. அந்தக் கவிதையின் தலைப்பு:
"I Wanted to Take Down the Government, But All I Took Down was my Best Friend's Wife"
***************
(Sep 23, 2021)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment