நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சண்முகம் சிவலிங்கத்தை நினைவுகொள்ளல்

Sunday, April 22, 2012


-அவரது கவிதைகளினூடாக-
(1939-2012)


இன்னுமொரு காடு

பறக்கிறது
இந்தக் காட்டையும் விட்டு
பறவை

புழு அரித்துப்போன இலை
நுனி கறுத்துப்போன அரும்புகள்
சாவட்டையாய் வதங்கி
சலித்துப் போன
நோய்த் தாவரங்கள்
குச்சும் கம்புமாய்
பரட்டை பற்றித் தெரிகிறது காடு

மனவருத்தந்தான் குருவிக்கு
எனினும்
வாழ்வை மறுதலிக்க முடியவில்லை
இன்னுமொரு காடு
இன்னுமொரு காடு
பறக்கிறது பறவை.

(2002)


குருவிமனம்

வெயில் சலித்துப்போன ஊமைப் பிற்பகலில்
ஒருநாள்,
வானத்து மார்புத் துகில் சற்று விலகித்
தெரியும் சூரிய முலைக்காம்பில்
கொத்தி விழ
வானின் குறுக்காகத் தாவும்
கிளாத்தன் குருவிகளை
கதவடியில் நின்று பார்த்த கணமே
வாய்விட்டுச் சொன்ன வரிகள் -
"வானத்தைப் பார்த்திருந்துவிட்டே
செத்துப் போகலாம்,
பின்னொரு நாளில்."

(1992)


ஆத்மாநாம்

மனோ வியாதி
கவிதை வரிகளாய் மாறும்
மற்றொரு வியாதி

இன்று அதிகாலைப் பனியோ
இந்தக் கதவிடுக்கினுள்ளும்
கூரை வளையிடுக்கிள்ளும் புகுந்து
என் விரல் நகங்களுக்குள் ஊடுருவி
என்னை வெடவெடக்கச் செய்கிறது.

ரோமத்தைப் பிய்த்துத்
தோலை உரித்து
தசைகளைக் கிளறி
நரம்புகளை இழுத்து, உருவிக் குவித்து
கபால உள்ளீட்டின்
கறையான் அரித்த சால்களுக்கிடையில்
என்னை வழிதொலையச் செய்கிறது,
வழி தொலைந்துபோன
ஆத்மாநாம் போல...

நானும்
மனோ வியாதியின்
கவிதை வரிகள்தானோ!

(1991)


தேவதைகளும் கடவுளரும்

மறக்காதீர், மறக்காதீர்
தேவதைகளை அழிக்கு முன்
அவர்களைப் பைத்தியம் ஆக்குவர் கடவுளர்
சுறாக்களை இழுக்குமுன்
அவைச் சுதந்திரமாய் ஓடவிடுவர் மனிதர்கள்.

சிறைக் கதவுகள் மூடுவது
திறந்த கதவினுள் சென்ற பின்புதான்
துப்பாக்கிகள் வெடிக்காதிருப்பது
தொடுவில்லை தொடாத வரையில்தான்
ஒரு நிகழ் யுத்தத்தின் நிறுத்தம்
வரும் யுத்தத்தின் தொடக்கம்.
திறந்த வெளிச் சிறைக்கூடம்
சுதந்திரபூமி ஆவதில்லை.

மறக்காதீர், மறக்காதீர்
தேவதைகளை அழிக்கு முன்
அவர்களைப் பைத்தியம் ஆக்குவர் கடவுளர்
சுறாக்களை இழுக்குமுன்
அவைச் சுதந்திரமாய் ஓடவிடுவர் மனிதர்கள்.

(2003)

துப்பாக்கிக் குழந்தை

உன் தங்க மீன்கள்
இன்னமும் கண்ணாடித் தொட்டியில்
தகதகக்கின்றன
உந்துதல்
ஓடுதல்
ஒளித்தல் எனும்
எந்த நகர்வும் இன்றி
நீரின் மேலெழுந்து
எங்கே நீ எனத் தேடுகின்றன
எவர் அவர்க்கு உன்போல்
தீனி இடுவர்?

வெண்பஞ்சுத் துளிகள் - உன் முயல்கள்
வெளியில் வந்து
துள்ளித் துள்ளி
முன்பாதங்கள் தூக்கி
செங்கண் முகத்தைத் திருப்பித் திருப்பி
எங்கே நீ எனத்தான்
இன்னமும் தேடுவன
எவர் உன்போல்
அடம்பன் தளிரை ஊட்டுவார்
அவர்க்கு?

பப்பி திரிகிறது
நாலுகால் பாய்ச்சலில்
எறிந்த பந்தை எடுத்துவந்து
என்னிடம் தராதாம்
உன்னையே தேடி
ஓட்டமாய்த் திரிகிறது.

இத்தனையும் விட்டு
எப்படி நீ
துப்பாக்கியோடு
வாழ்வைத் தொடர்கிறாய்
மகனே!

(1986)

போர்க்களம்

போனேன்
நான் உன் போர்க்களம் காண

விடிந்ததும் விடியாததுமாக
காதில் விழுந்தது
பல முகங்கள்
மிகத் துயரில்
விம்மலுடன்

முகங்கள் ஊடு
முகங்கள் ஊடு
பிடரிகள் ஊடு
பிடரிகள் ஊடு

அர்ச்சுனர் வீதியில்
அரைத்தூரம்...
இதுதான்...
என்றார்கள்
இடைவிடாது
துப்பாக்கிக் காயங்கள் துளைத்த
மதில் சுவருக்கும்
கிளிசரியா மரங்களுக்கும் இடையில்

நேருக்கு நேர்
நீ ஒருவன் தனியாக
சுழன்று சுழன்று தொடுத்த பாணங்களின்
அற்புதம் பற்றி அளந்தார்கள்
அமைதிப் படை
சர்ப்பமாய் ஒளிந்து
சக்கரமாய் மாறிய
அற்பத்தனம் பற்றியும் அளந்தார்கள்

மதிலோரத்தின் மயங்கிய மண்ணில்
குழிந்து கிடந்தது உன் குருதி
மெதுவாக அள்ளி முத்தமிட்டு
விரலிடை நெரித்தேன்

மீண்டும்
முகங்கள் முகங்கள்
முகங்கள் ஊடு
சிவந்த சூரியனின் சிதறிய முகத்துண்டுகள்
ஆயிரம் என் கண்ணில், அட என் மகனே

(1989)

ஒரு போராளியின் புதையல்

உன்னையும்
ஒரு சவப்பெட்டியுள்தான் ஒடுக்கினார்கள், மகனே!

நீட்டி நிமிர்ந்து நீ நெடுமலாய்க் கிடக்கையிலே
நிழல் போலக்
கறுத்து
விறைத்த உன் முகம்மீது
வீழ்ந்து புலம்பல் அல்லால்
வேறென்ன முடியும் உறவுக்கு?

மாலை வரையும் உன்னை வைத்திருக்கத் தடை
மதியத்திற்கு முதல்
புதைப்போம் என்ற பொறுப்பு
வழக்கமான பாதைக்கு மறுப்பு
ஊர்வலம் ஆகாதென உறுமல்

புதைத்தார்களா?
வாய்க்கரிசி போட்டார்களா?
பொன் மணலைக்
குவித்தார்களா? பிரண்டங்கொடி நட்டார்களா?
கொழுத்தினார்களா மெழுகுவர்த்தி
கடற்காற்றின் கொசுகொசுப்பினிடையே?
எதைத்தான் பார்த்தேன்,
என் மகனைக் கொன்றது ஓர்
இந்தியத் துப்பாக்கி என
எண்ணுவதைத் தவிர?

(1989)நன்றி:
கவிதைகள்:சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகைகளும் -2010
ஓவியம்: றஷ்மி

0 comments: