இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ -
-க. நவம்
புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous System எனப்படும் மைய நரம்புத் தொகுதியின் நடுப்பகுதியில் உள்ள Grey Matter எனப்படும் நரைச் சடலத்திற்கும் இந்தக் கதைகளுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பதிலாக ஒரு தெளிவோ, நிச்சயமோ அற்ற இடைநிலையின் குறியீடாகவே சாம்பல் நிறத்தைக் கருதவேண்டியுள்ளது.
ஆனால், வைரவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? யாழ்ப்பாணத்தில் பாவம், வைரவர் ஒரு சாதி குறைஞ்ச சாமி; பஞ்சக் கடவுள். ஆனாலும் சமூகத்தின் காவல் கடவுள். இனி, இந்த நிச்சயமற்ற சாம்பல் நிறவானத்தையும் அல்லது எல்லாம் எரிந்து முடிந்துபோய் சாம்பலாய் மிதக்கும் வானத்தையும் – அதில் மறையும் வைரவரையும் பொருத்தி ஊகிக்கும் பொறுப்பை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இந்த நூலின் நாலாம் பக்கத்தில் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ – சிறுகதைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்வின் அழைப்புப் பிரசுரத்தில் ‘கதைகளின் தொகுப்பு வெளியீடு’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. இது தற்செயலானதோ அல்லது இளங்கோவின் கடைசி நேர self realization னோ சொல்லத் தெரியவில்லை. இந்தக் கதைகளைப் படித்தபோது ‘கதைகளின் தொகுப்பு’ எனச் சுட்டுவதே பொருத்தமென எனக்கும் தோன்றியது.
உருவத்திலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, சிறுகதைக்களுக்கான மரபார்ந்த கட்டுக்கோப்பை இளங்கோ இதில் உடைத்தெறிந்திருக்கிறார். 4 பக்கக் கதையுமுண்டு; 16 பக்கக் கதையும் இதிலுண்டு.
பிரபல ஐரிஷ் எழுத்தாளரான Joseph O Corner சொல்வதுபோன்று, A moment
of profound realizationனாக - ஆழ உணர்ந்தறியும் ஒரு கணப்பொழுதாக, ஒரு நிசப்த வெடிகுண்டாக, ஒரு சின்னஞ்சிறு நிலநடுக்கமாக அதிரும் சிறுகதையும் உண்டு. அதேவேளை, சிறுகதை வரம்புகளை மீறி, ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களினதும் அவற்றின் பின்புலங்களினதும் வளர்த்தெடுப்பினூடாக, வாழ்வியலின் பெருங்கூறுகளை சுவைபடச் சொல்லும் நெடுங்கதையும் இதில் உண்டு. ஆக, கட்டற்ற சுதந்திரத்துடன்கூடிய - மரபை மீறிய, கட்டுடுடைப்பு முயற்சியை இத்திரட்டில் இளங்கோ மேற்கொண்டிருகின்றார். படைப்பிலக்கிய இயங்கியலின் யதார்த்த பூர்வமான ஒரு முன்னகர்வாகவே இதனைக் கொள்ளவேண்டும்.
அடுத்ததாக, அதே புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளியின் அனுபவத்தினூடாக, கனடா போன்ற புலம்பெயர் தேசங்களில் வந்திறங்கிய இளம் தமிழ்ச் சந்ததியினர் சந்திக்கும் சமூக, அரசியல், பொருளியல், உளவியல், கல்வியியல், பண்பாட்டியல் சிக்கல்களையும் போராட்டங்களையும் இனங்காணமுடிதல் இரண்டாவதம்சம். பழகிப்போன வாழ்வியல் கட்டுமானத்தைத் தகர்த்தெறிந்து புதிய வாழிடச் சூழலுக்கு ஏற்ப தம்மை இசைவாக்கம் செய்துகொள்ளவதற்கென இவர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள் எல்லாமே எல்லாருக்கும் உவப்பானவையல்ல. ஆயினும் சமூக அசைவியக்கத்தின் தவிர்க்க முடியாத கூறுகள் எனும் வகையில் அவற்றைச் சகித்துக்கொள்வதை விட வேறு வழியுமில்லை. ’ஆட்டுக் குட்டிகளும் உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்,’ ’யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம்,’ ’சிறகுவளர்ந்த குஞ்சுகளுடன் பறந்து போனவன்,’ ’துரோகி,’ ’பனி,’ ’கள்ளி’ ஆகியவற்றை அவ்வகைப்பட்ட கதைகளுக்கு உதாரணங்களாகச் சொல்லாம்.
இத்தொகுதியிலுள்ள அநேகமான கதைகளை, இளங்கோ தனது சொந்தக் கதைகளைச் சொல்கின்றாரோ என எண்ணி வியக்கும் விதத்தில், உண்மைத் தன்மையுடன் சொல்லியிருப்பது வாசகர்களுடன் மிகுந்த அணுக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் யுத்தமும், வன்செயலும், மரணமும், பிரிவும், தனிமையும், அகதி வாழ்வின் அலைக்கழிவும், வேர்கொள்ள முடியாத வெறுமையும் ஒன்று திரண்ட துயர வெளிப்பாடுகளாகக் காணப்படும் பெரும்பாலான கதைகளில் வரும் கதை சொல்லி, ஒரு சிறுவனாகவோ அல்லது ஒரு பதின்ம வயதினனாகவோ அல்லது ஒரு பச்சை இளைஞனாகவோ இருப்பதன் காரணமாக, அக்கதை சொல்லியின் ஆற்றாமையையும், இயலாமையையும், கையாலாகாத் தன்மையையும் அநேகமான கதைகளில் உணரமுடிகின்றது. இக்கதைகள் கிளர்த்திவிடும் ஒருவித பச்சாதாபம் கலந்த துயரத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
இவற்றுடன், வயதால் மூத்த தமிழ் மாணவியுடன் பேரம்பேசி முத்தம் பெறுதல், ஆடையவிழ்ப்பு நடனங்களில் ஆர்வம் காண்பித்தல், பல நண்பிகளுடன் படுக்கையைப் பகிர்தல், உடலுறவுகள் - அந்தரங்க உடலுறுப்புகள் பற்றிப் பச்சை பச்சையாகப் பேசுதல், பதின்ம வயதினருக்கே உரிய விருப்பங்களையும் வேட்கைகளையும் ஒளிவு மறைவின்றி விபரித்தல் போன்ற சம்பவங்கள் இத்திரட்டில் சர்வ சாதாரணமாக இடம்பெறுகின்றன. அடக்கமானவர்களுக்கும் அளவு கடந்த மரபுவாதிகளுக்கும் இது அசூசையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தலாம். ஆயினும் புதிய வாழிடத்தின் பண்பாட்டு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் தரிசிக்க மனங் கொள்பவர்களுக்கு, இவை விரசமற்ற புதிய அனுபவ வெளிப்பாடுகளாகவே தென்படும். மனித நடத்தைகள் அனைத்தினதும் மூலமுன்மாதிரி பாலியல் தானே என Sigmund Freud சொன்னதையும் – I don’t
know the question but definitely sex is the answer என்று ஹொலிவூட் பிரபலம் Woody
Allen ஒருமுறை சொன்னதையும் ஒப்புக்கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை.
க.நவம் |
ஆயினும், ‘ஒரு கருத்தைச் சொல்வதற்கு ஒரே சொல் போதும் என்று இருக்கும்போது, இரண்டு சொற்களைச் செலவு செய்யாதே’ என்று யாரோ ஒருவர் சொல்லி வைத்ததை இங்கு நானும் சொல்லியாக வேண்டும். எந்தவொரு கலைப் படைப்புக்கும் காத்திரமான உள்ளடக்கத்துடன், கலைத்துவமும் கட்டிறுக்கமும் மிக்க உருவமும் முக்கியமாகும். ‘மினி,’ ‘கொட்டியா,’ ‘மூன்று தீவுகள்’ போன்ற சில கதைகளில் கட்டிறுக்கம் போதாமைக் குறைபாடு தூக்கலாக வெளித்தெரிவதை, இளங்கோ கவனதில் கொள்வாரென நம்புகிறேன்.
முடிவாக, யாழ்ப்பாணத்தில் அதிலும் வல்வெட்டித்துறையில் அதிலும் விசேடமாகப் பொலிகண்டியில் பிறந்து வளர்ந்த நான், துவக்குத் தூக்கித் திரிந்த ஒருபோராளியைத் தன்னிலும் ஒருபோதும் கண்டதில்லை. எனது கடைசிக் கால இலங்கை வாழ்க்கை கொழும்பில்தான் கழிந்திருந்த போதிலும் நெடியால் பெயர்பெற்ற களுபோவிலை கால்வாயை நான் நேரில் போய்க் கண்டதேயில்லை. கால்நூற்றாண்டுக்கு மேலாக ரொறொன்ரோவில் வாழ்ந்தவிட்ட போதிலும் சீஎன் கோபுரத்தையே இன்னமும் நான் போய்ப் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்த இலட்சணத்தில், கியூபாவுக்குச் சுற்றுலா சென்றேன் என்று சும்மா சொன்னலும் நீங்கள் நம்பமாட்டீர்கள். அப்படிபட்ட எனக்கு, கியூபாவின் இயற்கை அழகையும், வன்னிமண்ணின் போர்ச் சுழலையும், களுபோவிலைப் பாலத்தையும் இதுபோன்ற ஏனைய பல பின்புலங்களையும் அச்சொட்டாகக் கண்முன்னே வரவழைத்துக் காட்சிப்படுத்தி, மனதில் வாசிப்புப் பரவசத்தை ஏற்படுத்துகின்றார், இளங்கோ.
கவித்துவமும் கற்பனைத்திறனும் மிக்க ஒரு நல்ல படைப்பாளியாக இருப்பதற்கு சரஸ்வதி கடாட்சம் தேவை என்பதில் எனக்குச் சற்றேனும் நம்பிக்கை இல்லை. ஒரு கொஞ்சத் திறமையும் தேடலும் இருந்தால் போதும். இவற்றிற்கு மேலாக, வாழ்வின் வடுக்களை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அளவிறந்த நம்பிக்கை உண்டு. அந்த ஆற்றல் இந்த நூலின் ஆசிரியர் இளங்கோவுக்கு நிறையவே உண்டு! ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ அதற்கு ஒரு நல்ல சாட்சியம்!
-------------------------------
(இதன் சுருக்கிய வடிவம் ஜூலை மாத 'தீராநதி'யில் வெளியானது)
0 comments:
Post a Comment