கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ - 01

Monday, September 11, 2023

 

-தேவ அபிரா

 

 

இத் தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. இத் தொகுப்பின் முதலாவது கதைஹேமா அக்கா” . இக்கதையின் களம் இந்திய இராணுவ காலம். இக்கதை எனக்கு மிகவும் பிடித்த கதை என்பதால் அது குறித்து இறுதியாகச் சற்று விரிவாகப்பார்ப்போம்.

 

கொட்டியா

 

ஈழத்தில் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதனில் இருந்து விலகிக் கொண்டிருந்த ஒரு இளைஞன்  கொழும்புக்கு இடம்பெயர்கிறான்.  அவன்  பின் வெளிநாட்டுக்குப்  புலம்பெயர்கிறான். அக்கால இடையில் நிகழ்பவைகள் தொடர்பான  கதை இது. கொழும்பில் தங்கி இருக்கும் போது இராணுவச் சோதனை என்ற பெயரில் சிங்கள இராணுவத்தினன்  குறித்த இளைஞன் மீது மேற்கொண்ட  பாலியற் சீண்டல், அவனுக்குத்  தன் வயதொத்த சிங்களப் பெண்ணுடன் ஏற்படும் நட்பு,  அதன் வழி அவள் மேல் வருகிற    பாலியல் ஈர்ப்பு, அவளுடனான பாலியல் துய்ப்பு, குறித்த சிங்களைப் பெண்ணின் இவன் மீதான காதல்,  இதற்கிடையில் புலிகளின் தற்கொலைப்போராளியாக  வருகிற குறித்த இளைஞனின் பால்ய காலச்  சக பாடசாலை மாணவியுடன் இவர்கள் இருவருக்கும் எற்படும் தொடர்பு, அதன்  வழி ஏற்படுகிற பிரச்சனைகள் எனக்கதை  பல்வேறு  முனைகளை ஒருங்கிணைக்கிறது.

 

ஒரு கதை சொல்லப்படும் போது அங்கு பல கதைகள் உருவாகின்றன. கதைசொல்லப்படும் முறையும் அதன் மொழியும் வாசிப்பவரின் உலகத்தில் ஏற்படுத்தும் நுண் தூண்டுதல்கள் தான் இக்கதைகளை உருவாக்குகின்றன.

 

"குதிரை" எனப் பாடசாலைக்காலத்தில் விளிக்கப்பட்ட பெண், தற்கொலைக் குண்டுதாரியாகி வெடித்த பின் அவளுடன் தொடர்புடைய இவர்கள் இருவரும் (இளைஞனும் சிங்கள நண்பியும்) பொலிஸ் மற்றும் இராணுவத்தின் விசாரணை வளையத்துட் கொண்டு வரப்பட்டுத் தேடப்படுகிறார்கள்.  அச்சந்தர்ப்பத்தில்  இவனை வேறு ஒரு இடத்தில் வைத்துக் காப்பாறும் சிங்கள நண்பி தான் பொலிஸ் விசாரணைக்குள் அகப்பட்டு விடுகிறாள். எல்லாவிதமான கடுமையான விசாரணைகளையும் எதிர் கொண்ட போதும்   அவள் இவனைக் காட்டிக் கொடுக்க வில்லை.  இவனைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான பணத்தைப்  பெறுவதற்காக அவள்  தன் இனத்துக்கே எதிராக உளவு வேலையில் ஈடுபடுகிறாள். 

 

இக்கதையினுள்ளிருந்து  வருகிற முக்கியமான ஒரு விடையம் இது. ஆனால் கதையின் ஓட்டம் இவன் எண்ணங்களையும் பாடுகளையும் மட்டும்  முதன்மைப்படுத்துவதாக இருக்கிறது.  இன முரண்பாடும் எல்லா அதிகாரங்களினதும் (அரசு மற்றும் போராளிகள்) மானிட விழுமியங்களுக்கு   எதிரான செயற்பாடுகளும் கூர்மை அடைத்து இருந்த ஒரு கால கட்டத்தில் சிங்களப் பெண் ஒருத்தி தான் கொண்ட காதலுக்காக தனது தமிழ்க்காதலனுக்காகச் செய்தவைகள் அவளின் காதலின் ஆன்ம ஒளிர்வுகளாகும். 

 

குதிரை என விளிக்கப்பட்ட,  பாடசாலைக் காலத்தில் தலைசிறந்த ஓட்டப்பந்தைய வீராங்கனையாக இருந்த ஒருத்தி எவ்வாறு தற்கொலைக் குண்டுதாரியானாள் என்பதும் இக்கதையில் ஆழ் நிலையில் வைத்து அணுகப்படவில்லை.

 

குதிரை என்கிற தற்கொலைக் குண்டுதாரி இறந்த பின்னர் அவனின் சிங்கள நண்பியைப்  பொலீஸ் விசாரணைக்கு உட்படுத்துகிறது. விசாரணையின் பின் அவளை  நிபந்தனையுடன் வெளியே விடுகிறது. அதன் கருத்து அவள் அவர்களின் கண்காணிப்பு வளையத்துள் இருக்கிறாள் என்பதாகும் . இந்நிலையிலேயே அவள்   இரத்மலானை விமான நிலையம் தொடர்பில்  தகவல்களைத் தனது மாமா மூலம்  சேகரித்துப் புலிகளுக்கு வழங்குகிறாள்.  தன் காதலனுக்காக அவள் எப்பேர்ப்பட்ட ஆபத்தான செயலை செய்திருக்கிறாள் என்பதை  அவன் அறிகின்ற வேளையில் அவனின் வெளிப்பாடு மேலோட்டமானதாகவே இருக்கிறது. அவள் பொலீசால் விசாரிக்கப்பட்டமை கீழ் வருமாறு விபரிக்கப்படுகிறது: விசாரணைக்கென்று இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைத்து  அவளை "எல்லா விதமாயும்" விசாரித்திருக்கிறார்கள்

 

அவளை வெளி நாட்டுக்கு அழைத்தமைக்கான காரணத்தை சொல்லும் பந்தி கீழ் வருமாறு அமைகிறது: “ முதல் வெளி நாட்டு முயற்சியின் போது அவளைக் கைகழுவி  விட்டுப்போக வேண்டும் என்றிருந்தவனுக்கு அவள் பிறகு செய்த உதவிகள்  எல்லாம் அவன் மனதை மாற்றி விட்டன. இன்னும் திருத்தமாய்த் தமிழ் செண்டிமெண்டலில்( மென் நய உணர்வில்) சொல்ல வேண்டும் என்றால்  இப்போதைய வாழ்வு அவள் இட்ட பிச்சைதான்

 

மேற்குறித்த இரு உதாரணங்களும் குறித்த இளைஞனின் மன ஆழத்தைச் சொல்லப் போதுமானவை. சுயநலம் கொண்ட ஆழமான காதலுணர்வற்ற  ஒரு இளைஞன் பாத்திரத்தை உருவாக்குவதில் இக்கதை வெற்றி பெறுகிறது. எதிர் மறையான பாத்திர உருவாக்கம்  கதைகளில் கையாளப்படுவதன் மூலம் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்க முடியும். இது அதனில் முழுமையான வெற்றியைப் பெறாவிடினும் முக்கியமான கதை

 

ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில பழுப்பு  இலைகளும்.

 

இக்கதை புலம்பெயர்ந்த சூழலில் பதின்ம வயதுகளில் இருக்கிற தமிழ் இளைஞர்களின் உலகத்தில் நிகழ்பவைகளைக் கூறுகிறது. இவ்விளைஞர்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கிற  உலகத்துள் வாழ்பவர்கள். குழு நிலைப்பட்ட சண்டித்தனம்,  அவற்றுக்கிடையிலான  மோதல்கள், குழு உறுப்பினர்களின் இளம் பெண்களுடனான காதல்கள், அதனால் உண்டாகும் போட்டி பொறாமைகள், அவர்கள் மேற்கொள்கிற வன்முறை நிறைந்த காமம்,  மது மற்றும் போதை மருந்துப் பாவனைகள், சட்டத்திற்குப் புறம்பான நடத்தைகள் எனப் பல்வேறு பிரச்னைகளை எம் முன் வைக்கிற கதை இது.

 

இக்கதையின் முதற்பகுதி மேற்குறித்த உலகத்துக்குள் அகப்பட்டு அதில் இருந்து வெளிவராமலேயே குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இறந்துபோன ஒருவனைப் பற்றியது.  இரண்டாம் பகுதி அத்தகைய உலகமொன்றுக்குள் இருந்து வாசிப்பினாலும்  அவனுக்கு கிடைத்த காதலியினாலும் மீண்டு வருகிற இறந்து போனவனின் நண்பனைப் பற்றியதாகவும் உள்ளது. முதலாமவன் காதலியின் துரோகம் அல்லது சீண்டலினால் கோபமுற்றுக்  காதலியைச் சார்ந்தவர்களைத் தாக்குகிறான்.   அந்த வன்முறைச் சம்பவம் அவனை சிறைக்கு செல்ல வைக்கிறது. இரண்டாமவன்  தனது  காதலியைத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கும்  அவளது மாற்றுத் தந்தையைச்  தாக்கித் தண்டிக்கமுற்பட்டு அதன் விளைவாகச் சிறைக்குப் போகிறான். 

 

முதலாமவனுக்கு முதலில் நல்ல காதலி கிடக்கவில்லை. சிறையில் இருந்து வந்த  பின்னர் அவனுக்கு அவனை உண்மையிலும் விரும்பிய நல்ல காதலி கிடைத்த போதும் அவனது மது மற்றும் சிறையில் பழகிய போதைப்பொருட்பாவனை காரணாக அவளின் பெறுமதியை உணர முடியவில்லை. பிற்பாடு  இறந்தும் போகிறான். இரண்டாமவனுக்குக்  இடைக்கும் காதலி ஸ்பானிஷ் இனத்தவள். அன்பானவள். நிறையப் புத்தகங்கள் வாசிப்பவள். அவள் அவனைப் புத்தகங்களின் உலகங்களுக்கு அழைப்பவளாக இருக்கிறாள். முதலில் வாசிப்பில் அக்கறையற்று இருந்தவன் பின்னர் சிறையில் இருக்கும் போது  சிறையின் கொடூரமான கலாசாரத்தில் இருந்து  தப்பிக்கப் புத்தகங்களின் உலகத்துள் நுழைகிறான். பெருமளவுக்கு  நேர் கோட்டில் செல்கிற கதை இது.  இங்கே சொல்லப்படாத கதை என்று எதுவும் இல்லை. கனேடிய  ஸ்பானிய மற்றும் தமிழ்க் கலாசார உணர்வுகளின் தளங்கள் கொண்ட இக்கதையைப் போன்ற கதைகள் பன்மைத்துவக் கலாசாரம் இல்லாத நாடுகளிலும்  நிகழவே செய்கின்றன.

தாராளவாத கலாசாரம், வளரிளம்பருவத்தின் கட்டுக்கடங்காமை, அடையாளச் சிக்கல்கள்,  சீரழிவுப்பண்பாடு போன்றவை உலகம் முழுவதிலும்  இத்தகைய கதைகளை உருவாக்குகின்றன.

 

மூன்று தீவுகள்.

 

இக்கதை கியூபாவுக்குக்குக் கனடாவில் இருந்து விடுமுறைக்கு வருகிற இளைஞன் ஒருவனுக்கு அங்கே விடுமுறையைக் கழிக்க வந்த ஒருத்தியுடன் ஏற்பட்ட உறவைச் சொல்கிறது. அவளின் பூர்வீகம் பண்டைய  இலங்கை. அப்பெண்ணுடன் ஏற்படுகிற உறவு உடல் சார்ந்த தற்காலிக உறவாக முடிகிறது. விடுமுறைக்காலங்களில் சில நாட்கள் மட்டுமே நீடிக்கிற காதல் - காம உறவுகள் தமிழ்ச் சூழலுக்கு புதியவை. மரபார்ந்த சிந்தனை வழி காதலையும் காமத்தையும் புரிந்து வைத்திருக்கும் தமிழ் வாசகர்களுக்கு இக்கதை சிந்தனைக்கான களத்தைத்  திறந்து வைக்கிறது. மனதைப் புத்துயிர்ப்பாக்கிக் கொள்வதற்குக்  கட்டுப்பாடுகள் அற்ற, இருவழிச் சம்மதம் கொண்ட காமமும் அவசியம் என்ற பார்வையை இக்கதை உள்ளீடாக முன்வைக்கிறது. மறுபுறத்தில்   இக்கதையின் மையச்சரடாக இருந்திருக்கக் கூடியவற்றை  இக்கதை தவறவிட்டு விடுகிறது. அது தவற விட்ட விடையங்கள்  கதையின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வருகின்றன. ஆரம்பத்தில்

"இனியும் இவர்களின் தழுவல்களின் மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தால் எதையெல்லாம் மறக்க வேண்டும் என்று கியூபாவுக்கு வந்தேனோ அதை எல்லாம் மீள நினைக்கும்படி ஆகிவிடும் என்ற அச்சத்தில் 24 மணிநேரமும் திறந்து இருக்கும் பாரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்".

என்பது குறித்த இளைஞனின் கூற்றாக வருகிறது.

 

பிற்பாடு கதையின் இறுதியில் குறித்த பெண் பின்வருமாறு கூறுவாள்:

முதல் உன் தவறுகளை ஒத்துக் கொள் அதன் பிறகுதான் உன்னால் இன்னும் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.”

இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் தான் இங்கு கூறப்படாத கதை இருக்கிறது. இழந்த  உறவின் துயரத்தைக் கரைக்கவே கியூபா வரும் அவன் அது குறித்துப் பேசுவதில்லை. அக்கதையைக் கிளர்த்துவதை விடுத்து, அப்பெண்ணின் பூர்வீகத்தைத் தேடிக் கதை தேவை இல்லாமல் உழல்கிறது.

உடல் உள்ளம் காதல் காமம் என்ற நான்கு முனைகளையும் இணைக்கும் சரடுகளாகப் பின்னிப்பிணையும் உணர்வுக் கொடியாகப் படரவேண்டிய மொழி பல இடங்களில் அங்கதமாக அல்லது மேலோட்டமான பகிடியாகக் குறுகி விடுகிறது.

 

வார்த்தைகளின் காத்திருப்பு.

 

வாழ்வு பற்றிய  ஆன்ம விசாரத்தை வெளிப்படுத்தும் பத்தியாகவே இக்கதையைப்  பார்க்கிறேன். மனிதர்களின் அக உலகம் புற உலகுடன் கொள்ளும் முரண்பாடுகளை விளங்கிக்கொள்ளும் ஒரு முயற்சியாக   இப்பத்தி அமைகிறது. ஒருவருடைய ஆன்ம விசாரத்தை இன்னொருவருக்குத் தொற்ற வைப்பது என்பது கடினமான காரியம். உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஆன்ம விசாரத்துக்குள் புகாமலேயே வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். ஏனையவர்களுக்கு அவரவர்களுக்கு என்று ஒரு ஆன்ம விசாரம் இருக்கிறது. உலகத்தை எண்ணங்களினதும் உணர்வுகளினதும் திரட்டாக மட்டும் எடுத்துக் கொள்ளும் போதும் உலகத்தைத் தன் சார்ந்து மட்டும் புரிந்து கொள்ள முயலும் போதும்   தோன்றுகிற  ஆன்ம விசாரம் ஒரு வகையானது . பிரிவு  இழப்பு துரோகம் துன்பம் நோய்  மரணம்  போன்ற மனித வாழ்வின் சாரங்களின் போது தோன்றுகின்றவை இவ்வகையானவை.  பிரபஞ்சம் உயிருள்ள உயிரற்ற பொருகளினால் ஆனதும் என்றும் அதனைச் சார்ந்தே  மனித உயிரின் செயல்கள் அமைக்கின்றன என்றும் புரிந்து கொள்ளும் போது  தோன்றும் ஆன்ம விசாரம் இன்னொரு வகையானது. இக்கதைகளுக்கு முடிவில்லை.

 

மினி

 

இக்கதையின் நாயகனும் அவன் காதலியும்  கனடாவில் இருந்து நீண்ட நாட்களின் பின் இலங்கைக்குச் செல்லுகின்றனர். அங்கிருந்து போராளிகளின் வாழ்வையும் வன்னிப்பகுதிகளையும் பார்ப்பதற்குச் செல்லும் ஒரு குழுவுடன் இணைந்து கொள்கின்றனர்.  அப்போது வன்னியில் நிகழ்பவற்றை  அங்கதம் நிறைந்த மொழியில் இக்கதை முன்வைக்கிறது. வன்னியைப் பார்க்கச் சென்ற குழுவில் இருந்த, வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் சரியாகத் தெரியாத ஒரு தமிழ் இளைஞனின்(விக்கி) நடத்தையிற் சந்தேகம் கொண்டு அவனைப் புலிகளை உளவு பார்க்க அல்லது அவர்களைக் கொல்ல வந்தவனாகக் கருதி கொள்கிற  கதையின் நாயகன் அதனாற் பதட்டம் அடைகிறார். பதட்டம் மனதுள் வளரப் புலிகள் தன்னையும் சந்தேகிக்க அல்லது கைது செய்யக் கூடும் என்ற மனப்பிராந்தியையும் அடைகிறார். இதனால் வன்னியை விட்டு விரைவிலேயே வெளியேறுகிறார். வெளியேறும்பொழுது தான் சந்தேகப்பட்ட இளைஞரைப் பற்றிப்  புலிகளைச் சார்ந்த ஒருவருக்குச் சொல்லி விட்டே செல்கிறார். பிற்பாடு குறித்த இளைஞன் தனது பாட்டியின் பூர்வீகத்தைத் தேடி வந்தவன் என்பதை அறிந்து கொள்கிறார்.  இக்கதையின் பலம் அதன் அங்கத மொழி.

 

ஆனாலும் இருபக்க இராணுவச் சோதனைகளைத் தாண்டி விக்கி, தனது பாட்டி தாத்தாவைக் கொல்லப்பயன்படுத்திய கத்தியை  கொண்டுவந்திருந்தமை  நம்பகத் தன்மையற்றது. அல்லது நம்பும்படி கதை சொல்லப்படவில்லை. தனது பாட்டியின் பூர்வீகத்தை அறிவதற்கு இவ்வளவு பூடகமாக அவ்விளைஞன் நடந்து கொண்டிருக்கத்  தேவையும் இல்லை. 

 

இவை கதையின் பலவீனங்கள். விக்கி இல்லாத சமையம் அவன் பையைத் திறந்து பார்ப்பது என்பது உளவுதான். ஆனால் போராட்ட அல்லது இராணுவ வாழ்வில் செய்யப்படுகிற தொழில் முறை உளவு என்பது வேறு பரிமாணத்தில் அமைவது. அதன் கனதியும் இதன் கனதியும் வேறு. தன்னை உளவாளியின் பரிமாணத்தில்  வைத்துக் கொள்ளும் கதாநாயகனின் நினைப்பு  கதைக்கு வலிமை சேர்ப்பதல்ல.

 

யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம்

 

இக் கதை  இதய ஆழத்துட் சென்று அமர்ந்து விடுகிற கதை அல்ல. ஆனால் புலம்பெயர்ந்த வாழ்வின் பல குறுக்குவெட்டுக்களைக் காட்டுகிற கதை. கனடாப் பல்கலைக் கழகத்தில் உள்ள இடங்களுக்கு ஊரில் உள்ள இடங்களின் பெயரை வைத்தல், ஊரில் இருந்த வாழ்க்கை முறையை இங்கேயும் பேண முயல்தல் பெண்களை ஆவலோடு பார்த்தல், சாதி பார்த்தல்  போன்ற பல பண்புகளை இக்கதை எள்ளலுடன் சுட்டுகிறது.  புலம் பெயர்வானது  பல்வேறு பண்பாட்டுக் கோலங்களையும் மனவிரிவுகளையும் எங்கள் முன் வைக்கிறது. அவற்றை  அறிந்து உணர்வதனூடாகக்  தன்னை விசாலிக்கக் கூடிய சாத்தியம் புலம்பெயர்ந்தவர்களுக்கு அமைகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் இச்சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்களாக இல்லை. குறிப்பாக ஆண் -பெண் உறவு நிலையில் வரும் பிரச்சினைகளைத் தமிழ் ஆண்கள்  யாழ்ப்பணீய அல்லது தமிழ் ஆண் மன நிலையுடன் அணுகுவதை இக்கதை கிண்டல் செய்கிறது.


(இன்னும் வரும்)

நன்றி: 'அம்ருதா',  ஆடி-2023)

0 comments: