இளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு முன்பே தனிக் கவிதைகளாக சிலவற்றை வாசித்திருந்தேன். அவரது கவிதை மொழி எனது கவனத்தை ஈர்த்தது. ஈழத்தின் போர் அனுபவங்கள், புலம்பெயர் வாழ்வபனுவங்களை அவர் கவிதைகள் நுட்பமாக வெளிப்படுத்துவபன.
வாழ்வு என்பது அலைவுதான். அந்த அலைவின் நினைவை எவராலும் மறக்க முடியாது. குறிப்பாக படைப்பாளிகளினால் அவற்றை கடந்து செல்ல முடியாது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களில் புலம்சார் விடயங்கள் தவிர்க்க முடியாதது. வாழ்வின் மிக முக்கிய தருணங்களை புலம்சார் நினைவுகள் சுமந்திருக்கின்றன. அதன் வலியை கடப்பதற்கும் நாம் எழுதியே ஆகவேண்டும். மறத்தலுக்கு எதிரான இயல்பான செயற்பாடு அது. புலம்பெயர் இலக்கியத்தின் மிகமுக்கியமான ஓட்டமாக அதை அவதானிக்க முடியும். புலம்பெயர் இலக்கியத்தை அணுகுபவர்களுக்கு அந்த புரிதல் மிகமுக்கியமானது. 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு நமது காலத்தின் அதிர்வை, அலைவை, வலியை சுமந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது அவற்றைக் கடத்திக்கொண்டும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் இவரது சிறுகதைகளையும் அணுக முடியும். 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைகளிலும் புலம், புலம்பெயர்வு குறித்த எம் வாழ்வின் அலைதலை தரிசிக்க முடியும். வாசிப்பும், தேடலும், அனுபவமும் அவரை சிறந்தவொரு கதை சொல்லியாக செப்பனிட்டிருக்கிறது. அதை அவரது கதைகளுக்கூடாக பயணித்தவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
அவரது வாசிப்பும், தேடலும், தேர்வும் எம்போன்ற வாசகர்களுக்கு புதிய விடயங்களை தந்து கொண்டிருக்கின்றன. வாசிப்பு என்பது 'மெல்ல இனிச் சாகும்' என்ற நிலையில் உள்ள என் போன்றோருக்கு சில பக்கங்களை காட்டிச் செல்கிறார். அதனால் நாமும் தேடி வாசிக்க உந்தப் படுகின்றோம். புத்தகம், பயணம், திரைப்படம், இசை விமர்சனங்கள்-அறிமுகங்கள் என்பன அவரது எழுத்தின் முக்கியமான இன்னொரு பக்கம். 'பேயாய் உழலும் சிறுமனமே' அவரது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இலக்கியப் புனைவுகளுக்கு அப்பால் எழுத்தில் நிகழவேண்டிய பன்முகப் போக்கை காட்டுகிறது.
இவ்வகைய பன்முக எழுத்து எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இளங்கோவுக்கு அது வாய்த்திருக்கிறது. இவரின் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்கள், அறிமுகங்கள், ஏனைய இலக்கிய-அரசியல் விவாத எழுத்துக்கள் மிக முக்கியமானவை. இவை காழ்ப்புணர்வு சார்ந்தவை அல்ல. இலக்கியத்தில் நிகழவேண்டிய ஆழமான உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாகவே நான் கருதுகிறேன். அத்தகைய ஆரோக்கியமான களத்தின் அவசியம் நமக்கு இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்களை 'வேலிச் சண்டை'யாக்கக் கூடியவர்களால் நாங்கள் சோர்ந்து போய் இருக்கிறோம். திறனாய்வுக்கு திறந்த மனமும் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது. அவரின் அபுனைவு எழுத்துக்கள் தொடரவேண்டும்.
அண்மையில் இளங்கோவின் 'மெக்ஸிக்கோ' நாவலை வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின்னர் ஒரு நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். பாராட்டு இருவருக்கும். இறந்தகால ஆணும், நிகழ்காலப் பெண்ணும் எக்காலமும் இருக்கும் நிலத்தை தரிசிக்க முயலும் நாவல் என்று இதைச் சொல்லிவிட முடியும். தரிசிப்பு என்பதை நான் அழுத்திச் சொல்லவிரும்புகிறேன். தரிசனம் உள்ளார்ந்தமானது. அதை அடைவதென்பது ஒரு நிலைப்பட்டதோ அல்லது ஒரு போக்கைச் சார்ந்ததோ அல்ல. பன்னிலைகளில் நிகழ்வது. நம்மைக் கடத்தல், மற்றோரை அணுகுதல், காதல், காமம், நினைவைப் பேசுதல், பண்பாட்டைப் பேசுதல், தன்னைப் பேசுதல், பயணம், தனிமை என நாவலின் பல்வேறு அடுக்குகளுக்கூடாக தரிசனத்திற்கான வெளி இருந்து கொண்டேயிருக்கிறது. அவரின் ஆதர்ச எழுத்தாளர்களின் பயண அனுபவ எழுத்துகள் இந் நாவலுக்கு உந்துதலாக இருந்திருக்கக்கூடும். இன்றைய இடர்காலத் தனிமை, பயணம்பற்றிய நித்திய வேட்கை என்பன 'மெக்ஸிக்கோ' நாவலை இன்னும் நெருக்கமாக்கி நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.
-பா.அ.ஜயகரன்
நன்றி: முகநூல்
0 comments:
Post a Comment