சில படைப்பாளிகளை விரிவாக வாசிக்காது, சும்மா சந்தித்துப் பேசும்போது
சொல்லப்படும் சில வரிகளை மட்டும் கொண்டு அந்தப்படைப்பாளிகள் பலரால்
மதிப்பிடப்படுகிறார்கள். ஆழமான வாசிப்பில்லாது இவ்வாறு 'கதை'களைக்
காவிக்கொண்டு திரிவது தமிழ்ச்சூழலின் அவலம் என யாரோ எழுதியது நினைவிலுண்டு.
கோணங்கியின் 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி'யை ஏற்கனவே வாசித்தபோதும், தவறவிட்ட சில கதைகளுக்காய் மீண்டும்
வாசிக்கத் தொடங்கியபோது கோணங்கியும் அவ்வாறு அரைகுறையான 'பேச்சுக்காவி'களால் தவறாக
மதிப்பிடப்படுகின்றார் எனவே தோன்றுகின்றது. இந்த தொகுப்பிலிருக்கும் 70
கதைகளில் ஆகக்குறைந்தது 45 கதைகளை மிக எளிதாக வாசித்துவிடமுடியும்.
மிகுதிக்கதைகளுக்கு வேண்டுமென்றால் 'புரியாத மொழியில் எழுதுகிறார்' என்ற
விமர்சனத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளலாம். ஆனால் கோணங்கியின் கதைகளின் மொழி
எவ்வாறு மாற்றமடைந்து போகிறது என்பதற்கு இந்நூலை முன்வைத்து நல்லதொரு
விமர்சனத்தை ஒருவர் வைக்கலாம் (நான் அவரின் நாவல்களை இங்கே சேர்க்கவில்லை).
கதைகளிலும்
கவிதைகளிலும் என்னை ஒருகாலத்தில் அதிகம் வசீகரித்த படைப்பாளிகள்
ரமேஷ்-பிரேம். ஆனால் இன்றும் என்னால் அவர்களின் தொடக்ககால படைப்பான
'அதீதனின் இதிகாசத்தை' முழுமையாக வாசிக்க முடியாமற்றானிருக்கிறது. அதில் ஐந்தாறு
பக்கங்களை வாசித்தவுடனேயே எங்கையோ தொலைந்துவிடுபவனாக ஆகிவிடுகின்றேன். ஆக,
ரமேஷ்-பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களே எனக்கு விளங்கவில்லை என நினைத்து
விலத்தியிருந்தால் பிறகு அவர்களை எனக்கு நெருக்கமானவர்களாக என்றுமே
அடையாளங் கண்டிருக்க முடியாது. அது போல 'காவப்படும் கதைகளை' மட்டும்
கவனத்தில் எடுத்திருந்தால் நான் கோணங்கியையும் தவறவிட்டிருப்பேன்.
'மதினிமார்களின் கதை'யையும், 'கொல்லனின் ஆறு பெண்மக்களையும்', 'பொம்மைகள்
உடைபடும் நகரத்தையும்' தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்தவை அவையல்ல,
'பாழி'யும் 'பிதிரா'வும்தான். இந்நாவல்களின் பெயர்கள் வசீகரித்த அளவுக்கு,
அவற்றின் உள்ளடக்கம் இப்போதைக்கு தொடக்கூடாதென்றளவுக்கு மிகவும்
பயமுறுத்தியிருக்கின்றன. அதேவேளை அவை எழுதப்பட்டிருக்கும் மொழியினோடு
எனக்கு இன்னும் பரிட்சயம் வரவில்லை என்று நினைத்திருக்கின்றேனோ தவிர எழுதிய
ஆசிரியரை 'இப்படி எழுதியிருக்கின்றாரே, நாசமாகப்போக' எனச் சாபம்
கொடுக்கவில்லை.
'சொல் என்றொரு சொல்'லும் முதல் சிலமுறை
வாசித்தபோது உள்ளிழுக்காதபோதும், சட்டென்று ஒருமுறை இழை இழையாகப் பிரிந்து
விளங்க முழு மூச்சாக அதை வாசித்து முடித்திருந்தேன். மேலும் எல்லாமே
எப்போதும் விளங்கவேண்டும் என்ற அவசியமிருக்கா என்ன? நகுலனின் எழுத்துக்களை
சுய அலட்டல்கள், உள்ளோளி தரிசனங்கள் இல்லையென்பவர்கள் ரொபர்த்தோ
போலானோவின் எழுத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என யோசித்துப்
பார்க்கின்றேன். உள்மனத் தரிசனங்களுக்கு இலக்கியத்தில் ஒரிடமிருப்பதுபோல
சுய அலட்டல்களுக்கும் ஓர் இடம் கொடுத்தால் என்னதான்
குறைந்துவிடப்போகின்றது?
ஒற்றைத்தன்மையான, இறுக்கமான தமக்கான
பார்வையினூடாகப் பார்ப்பது மட்டுமே நல்ல இலக்கியங்கள் என்று உரத்துக்
கூறுபவர்களை, 'நீங்கள் கூறுவதற்கும் ஓரிடம் உண்டு, ஆனால் அந்த இடம் மற்ற
வகைமைகளை உதாசீனப்படுத்துவதால் வருவதால் அல்ல' என்பதையும் அவர்களுக்கு
நினைவூட்டிக் கொள்வோம். கதைகளில் ஒரு தெளிவான 'கதை' இருக்கவேண்டும்,
முடியும்போது நெற்றிப்பொட்டில் அடித்தால்போல ஒரு முடிவு அமையவேண்டும்
என்றெல்லாம் உறுதியாக இருப்பவர்களோடு நாம் நிதானித்து நின்று பதில்
சொல்லவேண்டியதுமில்லை (புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் tragedy பற்றி
மெளனி எழுதியதை இங்கே நினைவுபடுத்தியும் பார்க்கலாம்).
ஆக
என்னுடைய வாசிப்பை வைத்துச் சொல்வதென்றால், கோணங்கியைப் பதற்றமின்றி
வாசிக்க அவருடைய சிறுகதைகளிலிருந்து தொடங்கலாம். 'சலூன் நாற்காலியில்
சுழன்றபடி' இன்னுஞ் சிறப்பான தேர்வாக இருக்கும், எப்படி அவர் இன்று அதிகம்
விமர்சிக்கபப்டுகின்ற 'புரியாத மொழியில்' எழுதுகிறார் என்ற புள்ளிக்கு
கோணங்கி வந்தடைகின்றார் என்பதையும் கூட அலசி ஆராய்ந்து பார்க்க இத்தொகுப்பு
உதவக்கூடும்.
'மஞ்சட்பூத் தெரு' வில ஜி.நாகராஜனும், 'ஆறில்'
புதுமைப்பித்தனும், இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறதில்'
நகுலனும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அண்மையில் 'அறம்' பாடி
உன்னதமாக்கப்பட்ட சில எழுத்தாள ஆளுமைகள் (ஆவிகள் எனச்சொல்வதும்
சிலவேளைகளில் பொருந்தும்) போல மீள் உருவாக்கம் கொள்ளவில்லை. அவர்களின்
பலங்களோடும் பலவீனங்களோடும் கோணங்கியிடமிருந்து வெளிப்படுகின்றார்கள்.
அதுதான் முக்கியமானது, இது படைப்புக்கான வெளியே தவிர, சோகம் மேல் சோகமாய், தியாகம் மேல் தியாகமாய், அறம்
மேல் அறமாய்.... போதும் போதும் என்றளவிற்கு ஒரு திரைக்கதைக்குரிய கதைகளாக
இருக்கமுடியாது. எனெனில் வாழ்க்கை இப்படியென்றுமே அதீதமாய் இருப்பதில்லை
என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இறுதியில்
விமர்சனமாய் கோணங்கியின் படைப்பில் தெரியும் ஒரு விடயத்தையும் கூறியாக
வேண்டியிருக்கிறது. நான் வாசித்தவரையில் அசோகமித்ரனின் படைப்புக்களில் கூட
அவ்வளவு துருத்திக்கொள்ளாத சுயசாதி அபிமானம் கோணங்கியின் படைப்புக்களில்
பிறீட்டு வெளிப்படுகிறது. ஒருவர் தன் சுயசாதி அடையாளத்தை மறைக்கவேண்டிய
அவசியமில்லைத்தான். ஆனால் தன் சுயசாதி ஓர் ஒடுக்குகின்ற சாதியாக
இருக்கின்றபோது அங்கே பெருமிதம் பேசுவதை விட, தன் சாதியின் பெயரால் பிறரை
ஒடுக்குவதை பதிவுசெய்வதை, தன் சுயசாதியைக் கிண்டல் செய்வதையும்
முக்கியமாய்க் கொள்ளவேண்டும். அந்த விடயம் கோணங்கியின் கதைகளில் காணாமல்
போயிருப்பது என்னளவில் ஏமாற்றமே. சுந்தரராமசாமி நாசூக்காய் மறைத்ததும்,
அசோகமித்ரன் கண்டும் காணாததுமாய் விட்டதும், ஆனால் ஆதவன் நக்கல் செய்ததும்,
கிருத்திகா 'வானேஸ்வரத்திலும்', கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்திலும்' தாம்
வந்த சாதிகளைக் கிழிகிழியென்று கிழித்துமிருக்கின்றார்கள் என்பது ஒரு
நினைவூட்டலுக்கு.
'அடே...அப்பிச்சி....உன் தாத்தனுக்காக
இருக்கவேண்டாமய்யா... நீ போய்யா, நல்லா இருப்ப, இன்னாரு பேரன். சுப்பையாத்
தேவன் பேரன்னு பேரெடுத்துப்பாப் போதுமுடா. நாங்க மண்ணுக்குள்ள போறாமுடா' என
'அப்பாவின் குகையில் இருக்கிறேனில்' சொல்வதை ஓர் உணர்ச்சித்தளத்தில்
வைத்துப் பார்க்காலாந்தான். ஆனால் அதற்கப்பால் தலைமுறைக்குள்ளால் தன்
சுயசாதிப் பெருமிதங்களைக் கடத்தும் சாமர்த்தியங்கள் இதில் இருக்கிறதெனவும்
வாசிக்கலாம். 'தேவர்கள் நிறையக்கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும்
வருகிறார்கள். ஆகவே தான் கோணங்கி 'உங்கள் உப்புக்கத்தியில் மறையும்
சிறுத்தை'யும் தேவர் சாதிச் சிறுத்தைதானோ என சந்தேகிக்கவும்
வேண்டியிருக்கிறது என அவருக்குச் சொல்லவும் வேண்டியிருக்கிறது.
இதற்கப்பாலும் 'சிறுத்தையின் உடல் புள்ளிகள் பிரபஞ்சத்தின் ஆயிரம்
கண்களாகத் திறந்து வைலட் கற்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் தீரவே தீராமல் '
(உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை) போர்ஹேயின் புலி போலும் எனச் சமாதானம்
செய்துகொள்ள முயல்கிறேன்.
(ஒக்ரோபர் 01, 2011, 1.36 a.m.)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ennathanya sollavara
4/29/2014 01:23:00 AMஅநாமதேயர்: கோணங்கியை எவ்வித முன் கற்பிதங்களுமில்லாது வாசிக்கலாம் என்பதும், அதேவேளை கோணங்கி எனக்குப் பிடித்த படைப்பாளியாக இருந்தாலும் அவரையும் விமர்சனத்தினூடாகவே அணுகுகிறேன் என்பதுவுமே நான் சொல்ல வருவது.
5/04/2014 10:57:00 AMPost a Comment