ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் -போராடத்தில் இணைந்துகொள்ள- புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 81 யாழ் நூலக எரிப்பும், 83 ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும். ஆனால் யாழ் சமூகத்தில் அவ்வளவு ஒட்டமுடியாத மற்றும் உயரதரவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் என்பது நம் போராட்ட வரலாற்றைக் கற்றுக் கொள்வோருக்குச் சற்று வியப்பாக இருக்கலாம் தமிழ் பெண் புலி(Tamil Tigress) என்கின்ற நினைவுகளின் தொகுப்பை எழுதிய நிரோமி தன்னை மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவராய்க் கூறிக்கொண்டாலும், அவர் விபரிக்கும் யாழ்ப்பாண வாழ்க்கையை வைத்து, அவர் யாழின் உயரதர வர்க்கத்தைச் சேர்ந்தவரென எவரும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

உண்மையில் நமது இயக்கங்களின் வரலாற்றை இன்று அலசுவோர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஓடுக்குமுறை என்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களினது பிரச்சினை மட்டுமே என்பதோடு அநேகம் சுருக்கிவிடுவர். அதிலும் முக்கியமாய் இன்றையகாலத்தில் இலங்கை அரசு சார்பாய் இயங்க விழைவோர் இன்னும் குறுக்கி யாழ்ப்பாணியத்தின் பிரச்சினையென எளிய சூத்திரமாக்கி விடுவர். உண்மையில் இது வடக்கு மற்றும் கிழக்கு மக்களினது பிரச்சினை மட்டுந்தானா? தமிழ் பேசும் அனைத்துச் சமூகங்களினதும் பிரச்சினை இல்லையா? யாழ்ப்பாணிகள் இந்தப் போராட்டத்தின் திசையை சிதறடித்தார்கள்/வீழ்ச்சியடையச் செய்தார்கள் என்கிற விமர்சனத்தை வேண்டுமானால் நாம் முன்வைக்கலாம். ஆனால் இனப்பிரச்சினையை யாழ்ப்பாணிகளின் பிரச்சினையாக மட்டும் சுருக்கிவிடும்போது பிறரின் போராட்டத்திற்கான வகிபாகத்தை நாம் மறுத்துவிடுபவர்களாய் மாறிவிடும் அபாயமுண்டு. மேலும் யாழ்ப்பாணத்தவர்கள் எதிர்கொண்ட/சந்தித்த பிரச்சினைகளுக்கு ஒரு தனிப்பட்ட வரலாறு இருப்பதுபோல, பிற மாவட்டங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் தனித்துவமான வடிவங்கள் இருப்பதையும், அவர்கள் அவற்றைத் தமது சூழலுக்கு ஏற்ப எதிர்கொண்டதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
மலையகத் தமிழர்கள் பெரும்பான்மை சமூகத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதைப் பார்க்கையில் நிரோமிக்கு தன் தமிழ் சார்ந்த அடையாளம் நினைவுக்கு வருகின்றது. அதுவரை தன்னையொரு சிறிலங்கரெனவே உணரும் அவர் தன்னையொரு தமிழராகப் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றார். மேலும் 1977 கலவரம், தமிழர் என்ற அடையாளத்தை இன்னும் தீவிர அரசியல் சொல்லாடலாக மாற்ற, இலங்கையில் அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடைகின்றன. 1979ல் நிரோமி மலையகத்திலிருந்து பாதுகாப்பு நிமித்தம் யாழ் நகரை வந்தடைகின்றார்.
.நிரோமியின் இந்த நினைவுகளின் நூலை (Memoir) வாசிக்கும் ஒருவர், நிரோமி என்னும் ஒருவரின் வாழ்வை முன்வைத்து, நமது போராட்டத்தை விளங்கிக்கொள்வது என்பதே எவ்வளவு சிக்கலும் ஆழமும் நிறைந்ததென்பதைப் புரிந்து கொள்ள முடியும். நிரோமியின் வாழ்வை நாம் ஒரு Case Study ஆகச் செய்தால் கூட அது இன்னும் வித்தியாசமான பார்வைகளை நம் போராட்டம் குறித்து தரவும் கூடும். எனெனில் நிரோமி...
(1) தன் சிறுவயதில் பல்லினச்சமூகங்களோடு நெருங்கிப் பழகியவர்
(2) மத்திய(உயர்தர) வர்க்கத்தைச் சேரந்தவர்
(3) சமூகத்தில் இரண்டாம் பாலினத்தவராக -பெண்ணாக- இருப்பவர்
(4) புலிகளில் சேரும்போது புலிகள் தம்மோடு போராடப்போன இயக்கங்களை அழித்தவர்கள் என்பதை ஏலவே அறிகின்றவர்
(5) அதையும் தாண்டி சிங்களப் பேரினவாதத்தோடு போராடி தனித்தமிழீழம் பெறுவதே சுதந்திரத்திற்கான வழியென நினைத்தவர்
(6) எந்த எதிரியோடு போராடவேண்டுமெனப் போனாரோ அதனோடு போராட முடியாது இன்னொரு இராணுவமான இந்தியா இராணுவத்தோடு போராடியவர்
(7) புலிகள் தம் சகோதர இயக்கங்களை அழித்ததை அறிந்தவர் மட்டுமில்லை, புலிகள் இயக்கத்தின் உள்ளே நிகழ்ந்த கொலைகளையும் அறிகின்றவர்
(8) தன்னோடு இயக்கத்தில் சேர்ந்த தன் நெருங்கிய தோழியை தன் கண்முன்னே இந்திய இராணுவத்துடனான மோதலில் பலிகொடுத்ததும் புலிகள் தான் நினைத்துச் சென்ற இயக்கமல்ல என்வும் உணருகின்ற காலகட்டத்தில் இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றவர்.
(8) புலிகளை விட்டு வெளியேறப்போகின்றார் எனத் துண்டு கொடுத்ததும், புலிகள் நிரோமியை அவரின் பெற்றோரோடு இணையும்வரை அவரைப் பத்திரமாக வைத்துக் கையளிப்பது.
ஆக, நிரோமி என்கின்ற ஒருவர் -அதுவும் புலிகளில் ஒன்றரை வருடத்திற்கும் குறைவாக இருப்பவரின் வாழ்விலிருந்தே நம் போராட்டம் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழும்போது, அவற்றிற்கான விடைகளைத் தேடுவதென்பதே சிக்கலாக இருக்கும்போது நமது முப்பதாண்டு கால் ஆயுதப் போராட்ட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நமது நிறையக் காலம் தேவைப்படும் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகின்றோம். ஆகவேதான் எழுந்தமானமாக, நம் தனிப்பட்ட விருப்பு சார்ந்து எழுத விழைகிறோம். அவற்றையே நம் போராட்டத்தின்/இயக்கங்களின் வரலாறு எனவும் தீர்க்கமாய்ச் சொல்லியும் கொள்கிறோம். சிலவேளைகளில் அவ்வாறு சொல்லிக்கொள்வதால் நமது ஆற்றாமையை, காயத்தை, வெறுப்பை நாம் கரைத்து ஆறுதலடையக்கூடும். ஆனால் பலவேளைகளில் அது முடிந்துபோன ஆயுதப் போராட்டம் குறித்த பன்முகப்பார்வைகளைத் தவறவிட்டு, தட்டையாக நகர்ந்துவிடக் கூடிய அபாயமே காணப்படுகிறது.
நிரோமி புலிகளில் சேரப்போகின்ற காலத்திலேயே, இலங்கை இராணுவத்தின் யாழைக் கைப்பற்ற முயல்கின்ற ஓபரேஷ்ன் லிபரேஷன் தொடங்குகின்றது. இலங்கை இராணுவம் நம் ஊர்களுக்குள் புகுந்தால் நம்மைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிற பயம் மட்டுமில்லை, ஒரு பதின்ம வயதுப் பெண்ணாகவும் நிரோமி இருப்பதால் இராணுவம் பெண்ணுடல் மீது நிக்ழ்த்தப்போகும் வன்முறையும் அவரைப் பயமுறுத்துகின்றது. அத்தோடு இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் பிரஜைகளாய் தமிழர்கள் நடத்தப்படுவதும், நம் சமூகத்தில் பெண்கள் இரண்டாம்பாலினராக ஒடுக்கப்படுவதும், இயக்கத்தில் சேர நிரோமியை நிர்ப்பந்திக்கின்றன. நிரோமி விபரிக்கின்ற பல சம்பவங்களோடு நாம் நம்மைப் பொருத்திப் பார்க்கவும் முடியும். உதாரணமாக எந்நேரமும் யுத்தத்தால் கொலைகளும், அங்க இழப்புக்களும், இடம்பெயர்வுகளும் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, எப்படியும் ஒருநாள் இராணுவத்தின் கரங்களினால் சாகத்தான் போகின்றோம், ஆகவே இப்படி வீணாய்ச் சாவதைவிட இயக்கத்தில் சேர்ந்து கொஞ்ச இராணுவத்தைக் கொன்றுவிட்டு செத்தால்தான் என்ன என நம்மில் பலர் ஒருகாலத்தில் யோசித்திருப்போம். நிரோமியும் இப்படி யோசிப்பதை பல இடங்களில் எழுதிச் செல்கின்றார். வேறெந்த வெளியுலத் தொடர்புமில்லாது, போருக்குள் வாழ்ந்தவர்களுக்கு இப்படியான உளவியல்நிலைதான் இயல்பென்பதை நாமறியாததுமல்ல.
இவ்வாறாகத்தான் ஒரு தலைமுறை புலிகளை - பேரினவாதத்திற்கெதிராகப் போராடும்- ஒரேயொரு இயக்கமாக நினைத்துக்கொண்டது. தன்னை அந்த இயக்கத்திற்காய் -எவ்வித விமர்சனமுமின்றி- முழுமையாக அர்ப்பணித்தும் கொண்டது. ஆகவேதான் புலிகள் எவ்வளவு மூர்க்கமான இயக்கமாயிருந்தாலும் - தாம் நம்பிய கொள்கைகளுக்காய் அர்ப்பணித்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளால்தான் - புலிகளால் இவ்வளவு காலத்திற்கு நீண்டகாலத்திற்கு நின்று தாக்குப் பிடித்திருக்கவும் முடிந்திருக்கின்றது. அதை நிரோமி புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராயிருந்த திலீபன், அன்றையகால புலிகளின் மாணவர் அமைப்பின் தலைவராய் இருந்த முரளி போன்றவர்களுடான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது நம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
மென்மையானவர்களாகவும், எல்லோர் மீதும் அக்கறையுள்ளவர்களாகவும், தாம் சொல்வதைச் செவிமடுப்பவர்களாகவும் இவர்களைப்பற்றி (இன்னுஞ் சிலர் செங்கமலன்) நிரோமி கூறும்போது புலிகளின் ஆன்மா என்பது இவர்களைப் போன்ற போராளிகளின் உண்மையான அர்ப்பணிப்புக்களால்தான் கட்டியெழுப்பட்டது என்கின்ற புரிதலுக்கு வந்திருப்போம்.
நிரோமியும் அவரின் நீண்டகால பள்ளித்தோழியான அஜந்தியும் இயக்கத்தில் இணைய முரளியின் காரியாலத்திற்குப் போகும்போது முரளி அவர்களை இணைத்துக்கொள்ள மறுக்கின்றார். இவர்களின் பிடிவாதத்தைக் கண்டு, திலீபனை வோக்கியில் அழைத்து அவருடன் நேரடியாகப் பேச வைக்கின்றார். திலீபன் இவர்களிடம், 'வெளியே நீங்கள் பார்க்கும் இயக்கமல்ல புலிகள், உள்ளே வேறுவிதமானது' என எச்சரிக்கின்றார். அந்த எச்சரிக்கையைப் பல்வேறு விதமாய் நிரோமி புலிகளுக்குள் இருந்த காலங்களில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை இந்நூலை வாசிக்கும்போது நாம் அறிந்துகொள்ளலாம்.
நிரோமியின் இந்த நினைவுகளின் பிரதியை முக்கியமாகக் கொள்வதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இதில் இதுவரை அவ்வளவாய்ப் பதியப்படாத, இயக்கங்களில் பெண்கள் முதன் முதலாய்ச் சேருகின்ற காலகட்டம் விபரமாய்ப் பதிவு செய்யப்படுகின்றது. என்னைப் போன்றவர்கள் பதினமங்களில் இருந்தபோது, ஆண்களைப் போல பெண்களும் இயக்கத்தில் சேருவது ஒரு இயல்பான விடயமாய் இருந்திருக்கின்றது. இதில் பெண்கள் இயக்கத்தில் தொடக்ககா லங்களில் சேரும்போது அவர்கள் பெண்களாய் இருப்பதால் அவர்களுக்கு தம் உடல் சார்ந்தும் புறவெளி சார்ந்தும் இருக்கின்ற சிக்கல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நிரோமி போன்ற பெண்கள் மீது சக ஆண்களுக்கு வருகின்ற காதலிலிருந்து, சகோதர வாஞ்சையோடு அவர்களைப் போராட்டக் களங்களிலிருந்து காப்பாற்றுகின்ற நிலைமை வரை பல விடயங்கள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றது.

நிரோமியின் குழுவினருக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டபின், விரும்பியவர்கள் வீட்டுக்குப் போகலாம் எனப் புலிகள் அனுப்புகின்றனர். நிரோமி வீட்டுக்குத் திரும்புகின்றார்,ஆனால் அதேவேளை அவரது நெருங்கிய தோழியான அஜந்தி மீண்டும் வீட்டுக்குப் போவதைத் தவிர்க்கிறார். இந்த இடத்தில் நிரோமி ஏன் தன் நெருங்கிய தோழியை விட்டுவிட்டு தனியே வீடு திரும்புகிறார் என வாசிக்கும் ஒருவருக்கு எழும் சந்தேகத்திற்கு நிரோமியால் இந்த நூலில் எந்தப் பகுதியிலும் சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. இந்தப் புள்ளியிலிருந்தே, நிரோமியின் இயக்கத்தோடு இணைந்து போராடும் தடுமாற்றம் தொடங்குகிறது.
சிலவேளைகளில் நிரோமியை விட அஜந்திதான் போராடுவதற்கான உண்மையான அர்ப்பணிப்போடு இருந்திருக்கின்றார் என வாசிக்கும் ஒருவர் நினைத்தாலும், தவறாகவும் இருக்காது. மேலும் இன்று அஜந்தி உயிரோடிருந்தால், அவர் சொல்லும்/எழுதும் 'நினைவுகள்' நிச்சயம் நிரோமியைப் போன்றிருக்காதென உறுதிபடக் கூறமுடியும். நிரோமி இங்கே தன்னைப் பற்றி கட்டமைக்கும் விம்பங்கள் பலதை உடைக்கக் கூடியதாய்க் கூட அந்தப் பிரதி இருந்திருக்கவும் கூடும்.
இயக்கப் பயிற்சி பெற்று வீட்டுக்குப் போகும் நிரோமி மீண்டும் பாடசாலைக்குப் போக விரும்புகிறார். மிகுந்த கட்டுப்பாடுகளையுடைய பாடசாலை நிர்வாகம் நிரோமியை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. எனினும் புலிகளின் மாணவர் அமைப்புக்குப் பொறுப்பாயிருக்கும் முரளியின் செல்வாக்கால் நிரோமி மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்படுகிறார்.. பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும், புலிகளின் வாத்திய அணியில் ஒருவராகவும், மாணவர்கள்/புலிகள் இணைந்து யாழில் செய்யும் ஊர்வலங்களில் முன்னணியில் கலந்துகொள்ளும் ஒருவராகவும் அவர் இருக்கின்றார்.
இதே காலத்தில் இந்திய இராணுவம் 'அமைதிப்படை' என்ற பெயருடன் வந்திறங்குகின்றது. புலிகளுக்கு இந்திய இராணுவத்துடன் முறுகல் நிலை வர நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.. மாணவர்கள் பங்குகொள்ளும் போராட்டமொன்றில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மனுக்கொடுக்கப்படும்போது முரளி ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதால் நிரோமியை முன்னுக்குப் போகச் சொல்கிறார். அந்நிகழ்வு யாழ்ப் பத்திரிகைகளில் படத்துடன் வெளிவர நிரோமிக்கு புலிகள் அமைப்போடு இருக்கும் தொடர்பு பலருக்குத் தெரிய வருகின்றது.
இப்படிச் சம்பவங்களை வரிசைக்கிரமமாய்க் கூறிக்கொண்டிருக்கும்போது, மலையக(இந்திய வம்சாவளி) பின்புலத்திலிருந்து வந்த தாயாரையும் தம்மையும் தகப்பன் வழி உயர்சாதியினர் எப்படி யாழ்ப்பாணத்தில் கீழ்மைப்படுத்துகின்றனர் என்பதையும் நிரோமி விரிவாக எழுதுகின்றார். மேலும் பயிற்சியின் நிமித்தம் யாழ் கோட்டைப் பகுதியில் சென்றிக்கு விடப்படும்போது அங்கே நிற்கும் ஆண்கள் சிலருக்கு அவரோடு முகிழும் காதல் பற்றியும் (அதிலொருவர் நிரோமி இயக்கத்தை விட்டு விலகியபின் கூட அவரைப் பின் தொடர்ந்து வந்தது பற்றியும்) சிறு சிறு சம்பவங்கள் மூலம் கூறுகிறார். அதேவேளை இயக்கத்தில் காதல் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்ற எச்சரிக்கையை மீறி இதெல்லாம் நடக்கிறதென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நிரோமி சென்றிக்காய் நிற்கும்போது தன் கரங்களில் இருக்கும் துப்பாக்கியும், கழுத்தில் தொங்கும் சயனைட்டும் தனக்கு அதிக பலத்தையும், எதற்கு அஞ்சாத மனோநிலையையும் தந்திருக்கிறதெனவும் குறிப்பிடுகிறார்.
திலீபனின் அகிம்சைப் போராட்டமும் ஈற்றில் அவரின் மரணமும், ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வு. திலீபனின் இழப்போடே பெண்கள் பெருந்தொகையாக புலிகளின் இயக்கத்தில் போராளிகளாக இணைந்தும் இருக்கின்றனர். அதுவரை 'சுதந்திரப் போராளி'களிலும் இன்னபிற அமைப்புக்களிலும் தலைமறைவாய் இயங்கிய பெண்களை திலீபனின் மரணம் முழுநேரப் போராளிகளாக மாற உந்தித் தள்ளியிருக்கின்றது. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட வானதி, கஸ்தூரி போன்றவர்கள் பின்னாளில் சிறந்த படைப்பாளிகளாகவும் மாறிய நிகழ்வுகள் நாமெல்லொரும் ஏற்கனவே அறிந்ததே.

பெரிய அணிகளாகத் திரிவதைத் தவிர்ப்பதன் நோக்கில் பல போராளிகள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நிரோமி, அஜந்தி போன்றவர்களை -அவர்கள் இயக்கத்திலிருப்பவர்கள் என்று அறிந்து இந்திய இராணுவம் அவர்களைத் தேடுவதால்- வீட்டுக்கு அனுப்பப்பட முடியாமல் முரளியின் அணியில் இருக்கின்றார்கள். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் எல்லாப்பிரதேசங்களிலும் முற்றுகையை இறுக்க, முரளியின் அணியினர் ஒவ்வொரு இடமாய் தப்பியோடுகின்றனர். நீர்வேலியில் இவர்களுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நேரடி மோதல் நடக்கின்றது. முரளி, அஜந்தி உட்பட இன்னும் பலர் அத்தாக்குதலில் கொல்லப்படுகின்றனர். மீண்டும் கடல்நீரேரி கடந்து காடுகளுக்குள் வாழும் குறுகியகால வாழ்வோடும், அங்கிருந்து இயக்கத்தை விட்டு வெளியேறுவதோடும் நிரோமியின் நினைவுகளின் தொகுப்பு நூல் முடிவடைகின்றது. நிரோமி நேரடியாக இயக்கத்தோடு களத்தில் நின்றது எனப்பார்த்தால் ஆறு மாதங்களுக்கும் குறைவானது என்று வாசிக்கும் நாமனைவரும் எளிதாக அறிவோம்.
இந்த நூலில் முக்கிய பகுதிகளில் ஒன்றாய் நான் மதிப்பிடுவது, இந்திய இராணுவ காலத்தில் புலிகள் கெரில்லா அணியாக இயங்கிய காலங்களைப் பதிவு செய்திருப்பது என்பது. இந்திய இராணுவ காலத்தில் சிறுவனாய் இருந்த என்னைப் போன்றவர்களும் அல்லது இயக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படாதவர்களும், ஒழுங்கைகளில் அவ்வப்போது வந்துபோகும் போராளிகளை மட்டும் அநேகம் அறிந்திருப்போம். ஆனால் அவர்களின் 'ஒருநாள் உயிர் தப்பியிருக்கும் வாழ்வு' என்பதே எவ்வளவு நெடிய போராட்டம் என்பதை இந்நூலை வாசிக்கும்போது விரிவாக அறியமுடிகிறது. மேலும் உதிரப்பெருக்கின்போது ஒழுங்கான மாற்றுடைகளில்லாது தவிர்க்கும் பெண்போராளிகளின் கடினவாழ்வையெல்லாம் நாம் வாசிக்கும்போது நாமறியாத் அல்லது நாமறிய விரும்பாத தடைகளையெல்லாம் பெண் போராளிகள் தாண்டவேண்டியிருக்கின்றது என்றறிகிறபோது நெகிழ்வே ஏற்படுகின்றது. அதுபோலவே வன்னிக்காட்டுக்குள் முகாம் அமைத்து காட்டு விலங்குகளுக்கும், உடல் நோய்களுக்கும், அவ்வப்போது முகாங்களைத் தாக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராகத் தப்பிப் பிழைப்பது பற்றியும் இந்நூலில் விபரிக்கப்பட்டிருக்கின்றது.
நிரோமி போராட்டத்தை விட்டு விலகியது பற்றி தெளிவாய் ஒரு காரணமே வைக்கப்படுகின்றது. புலிகளில் இரு போராளிகள் காதலிப்பதை அறிந்து மாத்தையா ஆண் போராளியை பலரின் முன்னிலையில் 'மண்டையில்' போடுகிறார். அதுவே இயக்கத்தைவிட்டு விலத்த வைத்ததென நிரோமி எழுதுகிறார். ஆனால் வாசிக்கும் நமக்கு இந்த இடத்தில் குழப்பம் வருகின்றது.
நிரோமி புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்தது தெரிந்தே புலிகளில் சேருகின்றார். இயக்கத்தில் இருக்கும்போதே புலிகளின் மனிதவுரிமை மீற்ல்கள் பற்றியும் அறிகிறார். அப்போதெல்லாம் இயக்கத்தை விட்டு விலக நினைக்காதவர் - தமிழீழம் பெறுவதே இலககென நினைத்தவர் - ஒரு கொலையோடு மட்டும் ஏன் விலகுகின்றார் என்பது சற்று யோசிக்கவேண்டிய விடயம். சிலவேளைகளில் பல்வேறு காரணங்கள் இருந்து, இந்தக் கொலையோடு திரண்டு வந்து விலத்த வைத்திருக்கலாம். ஒரு பக்கம் புலிகள் தம் எதிரிகளையும் துரோகிகளையும் கண்மூடித்திறப்பதற்குள் போட்டுத்தள்ளுபவர்களாக இருப்பினும் நிரோமி இயக்கத்தை விட்டு விலகப்போகின்றேன் என்றதும் உடனே அவரைப் போக அனுமதிக்கின்றனர். காட்டுக்கு வெளியே இன்னொரு இரகசிய இடத்தில் அவரது தாயார் வந்து பொறுப்பெடுக்கும்வரை அவரைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் என்பதையும் கவனித்தாக வேண்டும்.
நிரோமியின் இந்த நினைவுகளின் தொகுப்பில் வரும் அனுபவங்கள் போலியானது என்கின்ற சில குரல்களைக் கேட்டுக்கொண்டே இதை வாசித்திருக்கின்றேன். இந்நூலை நிதானமாக வாசிக்கும் ஒருவர் -தகவல்கள் சில இடங்களில் பிழையாக இருப்பினும்- அந்தக் காலத்தில் புலிகளுக்குள் இருக்காத ஒருவர் இதை எழுதியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடவே செய்வார். சில சம்பவங்களில் உயர்வுநவிற்சியும், வேறு சில இடங்களில் தகவல் பிழைகளும் இருப்பது உண்மையே.
மேலும் இது 20 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றை எழுதும்போது பல தவறுகள் ஏற்படுவதும் இயல்பானதே. A Long Way Gone என்கின்ற மிகவும் கவனிப்புப்பெற்ற குழந்தை இராணுவ்த்தினனின் நூலே இன்று போலியென கடுமையான விமர்சனம் வைக்கப்படும்போது இப்படியான விமர்சனங்கள் வருவது விதிவிலக்குமல்ல. உண்மை என்பது ஒன்றா? என்பதே கேள்விக்குள்ளாக்கப்படும்போது ஒருவர் நூற்றுக்கு நூறு சரியாக எழுதிவிடத்தான் முடியுமா என்ன? . மேலும் இது 'நினைவுகளின் தொகுப்பு', எனவே விடுபடல்களும் மறதியும், தவிர்ப்புக்களும் சாதாரணமாக நிகழக்கூடியதே.
இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் புலிகளைப் பற்றி மட்டுமின்றி இன்றைய இலங்கையின நிலைமையும் பற்றியும் நிரோமி கொடுக்கும் தகவல்களும், ஆதாரங்களும் ஒரு முக்கியமான அரசியல் அறிக்கையே. அந்தக் கடைசி அத்தியாயம் எப்படி தீவிர புலி ஆதரவாளர்களை கோபப்படுத்த வைக்குமோ அவ்வாறே புலியெதிர்ப்பாளர்களையும் எரிச்சலுறச் செய்யும். ஆனால் போராட்டத்தின் பெயரால் எல்லாச் சுமைகளும் சுமந்த மக்கள் என்கின்ற மூன்றாவது தரப்பும் இருக்கின்றது.. அதைப் பற்றியே நாமின்று நிறையக் கவலை கொள்ளவேண்டியிருக்கின்றது. அந்த அக்கறை இந்நூலை எழுதிய நிரோமியிடம் ஏதோ ஒருவகையில் இருப்பதை இந்நூலை வாசிக்கும்போது நாமும் அறிவோம்.
(Jun 19, 2013)
(நன்றி: 'காலம்' - இதழ் 43, Mar 2014)
0 comments:
Post a Comment