'விழுதாகி வேருமாகி' நூலை முன்வைத்து..
******
கடந்த சில நாட்களாக வேறொரு உலகில் உலாவிக்கொண்டிருந்தேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பரும் எப்போது இதிலிருந்து வெளியே வருவாயெனக் கேட்டபடியிருந்தார். இந்த நூலை நான் 20 வருடங்களுக்கு முன் வன்னிக்குள் நின்றபோது வாசித்திருக்கின்றேன். 600 பக்கங்களுக்கு மேல் நீளும் நூலென்பதால் அதையன்று முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் கடந்த 20 வருடமாக அந்த நூலைத் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது வாசிக்கக் கிடைத்திருந்தது.
அது விடுதலைப்புலிகளின் பெண்கள் அணியாகிய (2ம். லெப்.) மாலதி படையணியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறுகின்ற 'விழுதாகி வேருமாகி' என்கின்ற நூல். இந்த நூல் 1996 -2001 வரையான போராட்டக் காலத்தைப் பதிவு செய்கின்றது.
இவ்வாறு தொடங்கும் மாலதி படையணியின் களங்கள் வன்னிக்குள் விரிகின்றன. இதன் பின்னரே 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாம் புலிகளால் தகர்க்கப்படுகின்றது. அது ஒயாத அலைகள் -01 எனப் பெயரிடப்படுகின்றது. அந்த முகாம் தாக்குதலில் பங்குபற்றிய மாலதி படையணி பின்னர் A9 நெடுஞ்சாலையை, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்க வைக்கத் தொடங்கிய 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்) நடவடிக்கையில் பல்வேறு முனைகளில் நின்று புரிந்திருக்கின்றது.
அவர்கள் மணலாற்றிலிருந்து மன்னார் வரை, புளியங்குளம் (கடும் சண்டை நடந்த அந்த இடம் அவர்களின் மொழியில் புரட்சிக்குளம்), ஒட்டுசுட்டான், மன்னன்குளம் என்று நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத கொடும் களங்களில் முன்னணியில் நின்றிருக்கின்றனர்.
இந்த நூலின் முக்கியம் என்பது புலிகள் ஓயாத அலைகள்-01, 02 என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பெரும் இராணுவ முகாங்களைத் தகர்த்ததையோ, அல்லது ஓயாத அலைகள் -03 என்று வன்னி பெரும் நிலப்பரப்போடு ஆனையிறவை வென்றதையோ, ஓயாத அலைகள் -04 எனப்பெயரிட்டு சாவகச்சேரி அரியாலை, நாகர்கோயில் என முன்னேறி செம்மணிப் பாலத்தடியில் நின்று இலங்கை இராணுவத்தின் யாழ் இருப்பை இறுக்கியதோ பற்றியதல்ல.
போர் என்பது எப்படி யதார்த்தத்தில் நடக்கின்றது என்பது பற்றிய நேரடி அனுபவங்களுள்ள போராளிகள் எழுதிய பதிவுகள் என்பதால்தான் இந்த நூல் மிக முக்கியமான நூலாக இருக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும்ம் நீங்கள் ஒரு நாயகியைக் காண்பீர்கள், சிலவேளைகளில் ஒரு அத்தியாயத்திலே பல வீரநாயகிகளைக் காண்பீர்களென்று இந்த நூலில் சொல்வதைப் போல பல போராளிகளின் வீரத்தை/தியாகத்தைப் பார்க்கின்றோம்.
ஒரு படையணியின் தோற்றத்தை, களத்தில் வெற்றி பெற்றதை/ முன்னேறும் எதிரியோடு எதிர்த்துப் போரிட்டதை மட்டுமின்றி இதை வாசிக்கையில் இந்தப் போரின் கொடுமைகளையும் நாம் பார்ப்பதுதான் என்னளவில் முக்கியமானது. நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மாற்றிவிடமுடியாது. ஆனால் இன்னொரு போர் எந்தப் பொழுதிலும் எங்களுக்குத் தேவையற்றது என்பது ஒரு முன்னுதாரணமாக இதைப் பார்க்கலாம்.
எப்படி 96இல் யாழ் மாவட்ட சாவகச்சேரியில் இருந்து போராளிகள் துரத்தப்பட்டார்களோ, அதை மாற்றி சில வருடங்களில் ஓயாத அலைகள் -04 உடன் சாவகச்சேரிக்குள் நுழைந்து நிலங்களை மீண்டும் கைப்பற்றத் தொடங்குகின்றார்கள். ஒருவகையில் அது அவர்களின் நீண்டநாள் கனவு. ஆனால் தொடர்ச்சியான இராணுவ முன்னேற்றங்களால் பேரழிவுடன் மீளவும் யாழை விட்டு பின்வாங்கிச் செல்வதோடு இந்த நூல் முடிகின்றது. இதை வாசித்து முடிக்கும்போது எப்படி ஒரு போர் நடக்கின்றது என்ற பயங்கரம் நம் முகத்திலறைந்து திகைக்க வைக்கும்.
இன்றும் போரை ஒரு வெற்றிக்களிப்பாகக் கொண்டாடுகின்றவர்களும், அதுபோல புலிகளின் என்றாலே எல்லாவற்றையும் வன்மமாக்கின்ற தரப்பும், பொறுமையுடன் இதை வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். ஏனெனில் வரலாற்றை மிகையாகப் புகழ்ந்தோ அல்லது இருட்டடிப்புச் செய்தோ நாம் கற்றுக்கொள்வதால் எதுவும் பிரயோசனம் இருக்கப் போவதில்லை. அப்படியான 'கற்றல்கள்' நமது தப்பித்தல்களுக்கும், தனிப்பட்ட விருப்புகளுக்கும் உதவுமே தவிர, வரலாற்றைத் தெளிவுறக் கற்பதற்கு உதவப்போவதில்லை.
வரலாறு என்பதை நாம் நினைத்தபடி மாற்றியமைக்க முடியாது என்பதற்கு இந்த நூலே நல்லதொரு உதாரணம். இந்த நூலில் விதுஷா, துர்க்கா, பால்ராஜ், தீபன், கருணா என்று பல தளபதிகளின் பேச்சுக்கள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். கருணாவின் தலைமையில் இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயந்தன் படையணியின் தீரத்தாலே பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட ஜெயசுக்குறு சமர் முறியடிப்பு பல முக்கிய களங்களில் நிகழ்ந்தது என்பதை நாமறிவோம். ஜெயசுக்குறு சண்டையின் பின் புலிகளே ஒப்புக்கொண்ட உண்மை இது. இப்போது கருணா புலிகளின் ஆதரவாளர்க்குத் 'துரோகி'யாகிவிட்டார் என்கின்றபோதும், அன்றைய வரலாற்று உண்மையை/கருணாவின் மேற்கோள்களை வரலாற்றின் எந்தப் பக்கத்திலிருந்தும் எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்த நூலே ஒரு சாட்சியாக நிற்கின்றது.
இந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும்போராளிகளைப் பற்றிய பல நுண்ணிய அவதானங்கள் வந்தபடியே இருக்கும். ஒரு போராளி வாசிப்பதில் அவ்வளவு ஆர்வமுடையவர். களத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாட்டைச் சுற்றி வருகின்ற பேப்பரையே கவனமாகப் பிரித்தெடுத்து வாசித்துப் பார்க்கின்றவர். எப்போதும் அவரது காற்சட்டைப் பொக்கெட்டுக்குள் ஒரு புத்தகம் இருக்கும் என்ற விபரிப்பு இருக்கும். இப்படி நம் நினைவுகளை விட்டகலாத பல போராளிகள் இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வந்தபடியிருக்கின்றனர்.
இயக்கம் குறித்தும், அவர்கள் போராட்டத்தை நடத்திய விதம் குறித்தும் விமர்சனங்களை எவ்வளவு தீர்க்கமாக வைக்கின்றோமோ, அதையளவு இந்தப் போராளிகள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மறுதலிக்காது நாம் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரத்தான் வேண்டும்.
எவரெவரோ இன்றைக்கு இந்தப் போராட்டத்தை 'குத்தகை'க்கு எடுத்தமாதிரி போலிப் பெருமிதங்களில் எழுதியும்/பேசியும் கொண்டிருக்கும்போது, இந்த உண்மையான போராளிகளின் இரத்தமும் சதையுமான வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாசித்தல் அவசியம் என்பேன்.மேலும் சிங்களம் உள்ளிட்ட வேறு மொழிகளில் இது மொழியாக்கப்பட்டு வருகையில் இந்தப் போராளிகள் பற்றிய பல எதிர்மறையான எண்ணங்கள் அவர்களிடையே உதிர்ந்து போகவும் கூடும்.
இறுதியாக இதற்கு முன்னுரை எழுதிய மாலதி படையணியின் தளபதியான விதுஷா சொல்வதைக் குறிப்பிட்டு இதை முடிக்கலாமென நினைக்கின்றேன்:
"எழுதுமட்டுவாளிலிருந்த எமது முன்னணிக் காவலரண் பகுதி. நேரம் 4.30 ஆகிக் கொண்டிருந்தது. முன்னரங்கின் அருகிலிருந்த மைதானத்துக்கு ஒவ்வொரு அணிகளும் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. எல்லோரும் கலகலப்பாகக் கதைத்துச் சிரித்தபடி..சிலர் விளையாட, சிலர் சூட்டுப் பயிற்சிக்கென ஆயத்தமானார்கள். போர்க்காலத்தில் சிறு ஒலியைக் கூட எழுப்பமுடியாத, தலைநிமிர்த்தி நடக்கமுடியாத பகுதி அது. இது போர் நிறுத்தக் காலம் என்பதால் பதுங்கிச்சூடு, எறிகணை வீச்சு என்ற எந்தவித நெருக்கடியுமின்றி முன்னரங்கப் பகுதியே கலகலப்பாக இருக்கின்றது.
ஒரு பனங்குற்றியில் அமர்ந்தவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த என் மனம் திடீரென எங்கோ போனது. இந்த மைதானத்தில் நின்றிருக்கவேண்டிய பலரைக் காணவில்லை. அவர்கள் துயில் நிலங்களில் அமைதியாக இருக்கின்றார்கள். இவர்கள் புதிய தலைமுறையினர். இவர்களை உருவாக்கிவிட்டவர்களும், உருவாக்கியவர்களும், அவர்களை உருவாக்கியவர்களும் எனப் பலர், காலம் தமக்கிட்ட பணியை முடித்துத் தம்முடைய கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் எம்மிடம் தந்த நிறைவோடு உறங்குகின்றார்கள். மைதானத்தில் படையணிப் போராளிகளின் சத்தங்களும், அவர்களது சுடுகலன்கள் எழுப்பிய ஒலிகளும், நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த ஊர்திகளின் இரைச்சல்களும் என்னை இந்த உலகுக்கு இழுத்து வரமுடியாமல் தோற்றுப் போயின."
இதைவிட இந்தப் போர் தந்த துயரங்களைச் சொல்லிவிட முடியாது. இதற்கப்பால் அவர்களுக்கென்று தளராத நம்பிக்கையும், பெரும் கனவுகளும் இருந்தன. அதுவே அவர்களைத் தொடர்ந்து போராடச் செய்திருந்ததையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
********
(நன்றி: 'அம்ருதா', ஆனி 2025)
0 comments:
Post a Comment