கனவுகளைக் கனவுகள் எனவும் சொல்லலாம்
மார்கழியின் மாலையொன்றில
சந்தித்தபோது அது எதுவாக இருந்ததென்பது
நினைவினிலில்லை;
கெதியாய் இருள்மூடி பனிபொழிந்த மூன்று மணியாக
இருந்திருக்கூடுமென்றபோது....
நான் - நினைவூட்டலின் வன்முறை குறித்தும்
நீ - நினைவில் வைத்திருக்கவேண்டிய வரலாற்றின் அவசியம் பற்றியும்
விவாதித்தபடி பனிமூடிய குளிராடையைத் தளர்த்தியபடியிருந்தோம்
இக்கணத்தை நினைவில் வைத்திருப்பதைப் போன்று
முன்னே பின்னே நகர்ந்த நகரும் காலத்தை
நினைவு நூலகத்தின் அகரவரிசையில் தேடியெடுக்க
ஏன் எவரும் துல்லியமாக எழுதவைக்கவில்லையென்றபடி
தேநீருடன் சான்ட்விட்சுக்கான காய்களை வெட்டத்தொடங்கினோம்
இன்னவின்ன வேலைகளை இவரிவர் செய்யவேண்டுமென்ற
எந்தக்கட்டளையையும் மவுனம் கற்பிக்காததை
நமக்குரிய நேசமெனப் பெயரிட்டழைக்கலாம்
அன்றைய இரவுணவிற்கான கோழியை வெட்டி
Ovenக்குள் வேகவைத்த பொழுதிற்கிடையில்
*ஒற்றனில் அமெரிக்கா வந்த கதைசொல்லியின் அனுபவத்தையும்
இறுதியின் எல்லோரையும் என்றென்றைக்குமாய் பிரிந்துபோகும்
அவனின் மெல்லிய துயரையும் பகிர்ந்தபோது
பனியைப்போல நான் உருகக்கூடியவனாகயிருந்தேன்
நீராயென் வெறுமைகளை நீ நிரப்பக்கூடியவளாயிருந்தாய்
காலமெனும் நான்காவது பரிமாணம்
தெப்பமாய் மிதக்கத் தொடங்கியபோது
நாம் எமக்கான துடுப்புக்களைத் தவறவிட்டு
நதி வற்றுமெனக் காத்திருந்தோம்
இப்போது குளிராடையைத் தளர்த்துவதற்கோ
கையுறையைக் கழற்றி விரல்களைக் கோர்ப்பதற்கோ நேரமின்றி
நமக்கான கனவுகளுக்குள் தனித்து நீந்துவதைத்தவிர வேறு வழியில்லை
மார்கழி மாலையொன்றில் நாம் சந்திந்தபோது
அது எதுவாக இருந்ததோ அது இப்போதும் அவ்வாறே இருக்கவும்கூடும்
நாம்தான் எதுவெதுவாகவோ மாறிவிட்டோம் என்பதைத் தவிர.
* அசோகமித்திரன் எழுதிய நாவல்
--------------------------------------
பறக்கும் நூலகம்
குளிர்காலத்தில்
புத்தகசாலைக்குள் நுழையும் நீங்கள்
பக்கங்களில் தன்னைத் தொலைத்த
வெளிர்நீல ஆடையணிந்த ஒருத்தியைக் காணக்கூடும்
அவளின் கவனத்தை ஈர்த்தொரு புன்னகையைப்பெறும்
முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கையில்
சலிப்பில் ஏதேனுமொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டு
வெளியில் பொழியும் கடும்பனியைத் திட்டுவதுபோல
உங்களை நீங்களே நிதானமாய் நிர்வாணமாக்கவும் முடியும்
புத்தகக்கடையில் வேலை செய்யும் ஆணை/பெண்ணை
மோகித்துக்கொண்டிருப்பவள்/ன்
பலநூறு புத்தகங்களை
ஒரேநேரத்தில் வாசித்துவிடுபவனாய்/ளாய் இருக்கலாம்
தொடைகளுக்குள் பறக்கத்துடிக்கும் வண்ணத்துப்பூச்சியை
மறைத்து வைத்திருந்தவளின் உச்சந்தலையில்
ஆரம்பிக்கும் முத்தத்திலிருந்து
மலரத்தொடங்குகின்றது
வாசிக்கமுடியா வர்ணங்களில் கனவுகளின் நூலகம்.
-----------------------
வாதை
மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்
ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை
கமபளிப்போர்வைக்குள்
வெப்பந்தேடி அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்
எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றுத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்
வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
(நன்றி: 'அம்ருதா' - மே மாத இதழ்)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment