கோணங்கியிற்கு 'விளக்கு' விருது அறிவிக்கப்பட்டபோது
கோணங்கி பற்றிய புதிய கட்டுரைகள் நிறைய வருமென எதிர்பார்த்தேன். 'விளக்கு'
விருதிற்கென ஒரு அரசியல் இருந்தாலும், சிவரமணி எழுதியதுமாதிரி
'நிராகரிக்கப்பட முடியாதவள் நான்/இனியும் என்ன/தூக்கியெறியப்பட முடியாத
கேள்வியாய்/நான்/பிரசன்னமாயுள்ளேன்' போல கோணங்கி தமிழில் தவிர்க்கமுடியாத
ஆளுமை என்பதால் விளக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நான்
புரிந்துகொள்கிறேன்.
ஜெயமோகன் நிறைய எழுதி, எத்தனையோ தீவிர
வாசகர்கள் அவருக்கு இருந்தாலும், அவரின் எழுத்து நடையின் பாதிப்பிலிருந்து
எழுத வந்தவர்கள் என எவரையுமே அவ்வளவு எளிதில் சுட்டிக்காட்ட முடியாது.
ஆனால் கோணங்கி எந்த வட்ட/சதுர வாசகர்களைக் கொண்டிராதபோதும், அவரின்
பாதிப்பில் உருவாகி வந்த ஒரு புதிய தலைமுறையை எளிதாய் நாம் அடையாளங் கண்டு
கொள்ள முடியும். உதாரணத்திற்கு கல்குதிரை இதழ்களை விரித்துவைத்து
பார்த்துக்கொண்டிருந்தாலே இது எளிதாய் இன்னும் புரியும்.
கோணங்கியிற்கு
விளக்கு விருது கிடைத்தபோது, அவரின் நண்பர்களிடமிருந்து மட்டுமில்லை, அவரை
தம் முன்னோடியாக கொண்டவர்களிலிருந்தும் பல்வேறு தளங்களில் கோணங்கியை
பற்றிய மறுவாசிப்பு நிகழுமென நினைத்திருந்தேன். ஆனால் அநேகமாய் எல்லோரும்
வாழ்த்துக்களோடு மட்டும் நின்று எதையும் விரித்தெழுதாது கோணங்கியை
அவர்போக்கில் தனித்து அலைய விட்டுவிட்டனர். நாம் நமக்கு பிடித்த
படைப்பாளியொருவரை பல்வேறு விதமாய் வாசிப்புச் செய்தும், தொடர்ந்து அறிமுகம்
செய்தபடி இருப்பதும் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.
கோணங்கியைப் போன்ற சித்தன்போக்கில் அலைபவர்கள் இதைத் தனிப்பட
விரும்பமாட்டார்கள் என்றாலும் புதிதாய் வாசிக்க வருபவர்களுக்கு
மட்டுமில்லை, தமிழ் இலக்கியச் சூழலில் 'மும்மூர்த்திகளின் தளங்களுக்கு'
மாற்றாக கோணங்கியை முன்வைக்கும் அவசியமும் இருக்கின்றது.
உண்மையில்
இன்னமும் கோணங்கியின் பெருநாவல்கள் ('பாழி', 'பிதிரா', 'த') எதனுள்ளும்
என்னால் நுழையமுடியாதிருக்கின்றது. கோணங்கியிற்கு விருது கிடைத்த செய்தி
கேள்விப்பட்டபோது, எப்படியென்றாலும் கஷ்டப்பட்டு தினம் 10 பக்கங்களாவது
'பாழி'யில் இருந்து வாசிக்கத் தொடங்குவோம் என நினைத்திருக்கின்றேன். ஆனால்
இன்றையகால என மனச்சூழலில் எளிய வாசிப்புக்களையே தேர்ந்தெடுத்துக்
கொண்டிருப்பதால் அதைத் தொடர முடியாது இருக்கின்றது. ஆனால் கோணங்கியின்
நாவல்களை வாசித்தவர்கள் அவை குறித்து எழுதலாம்; எப்படி அந்த நாவல்களிற்குள்
நுழைவது என்ற மாயப்பாதையின் வரைபடத்தை மேலோட்டமாய் வரைந்தும் காட்டலாம்.
எந்த
எழுத்தாளரும் தன் படைப்பு விளங்கிக்கொள்ளப்படக்கூடாது என்று நினைத்து
எழுதுவதில்லை. கோணங்கியே ஓரிடத்தில் 'எனக்கு முன்பு எழுதிய மொழியில்
தொடர்ந்து எழுதுவது சலிப்பாய் இருந்தது. எனவே புதிய மொழியைத் தேடவேண்டியது
அவசியம் இருந்தது' என கூறியிருக்கின்றார். நாம் பதின்மங்களில்
இருக்கும்போது ஒருவகையான எழுத்து மொழியை வைத்திருப்போம். இப்போது அதே
மொழியில் எழுதிவிடமுடியாது. அப்படி எழுதினால் கூட அதை வாசித்துப்
பார்க்கும்போது நமக்கே கூச்சம் வரும். அவ்வாறான ஒரு நிலையைத்தான் கோணங்கி
தன் பழைய நடையில் பார்க்கின்றார் போலும்.
கோணங்கியிற்கு
விருது கிடைத்த மகிழ்ச்சியில், அவரின் படைப்பு(நாவல்) பற்றி இணையத்தில்
தேடியபோது கிடைத்தது பிரம்மராஜன் எழுதிய எதிர்மறையான இந்த விமர்சனம்: விமர்சனம்
எப்படியிருந்தாலும் அது ஒருவகையில் வாசிப்பவரைப் பாதித்திருக்கின்றது
என்றும், எதிர்மறையாக இருந்தால் கூட அந்த படைப்பாளியின் மீதிருக்கும்
நம்பிக்கையினால்தான் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என உறுதியாக நம்புகின்ற
ஒருவன் நான். சிலவேளை ஒரு எதிர்மறையான விமர்சனம் கூட அந்தப் படைப்பு
அவ்வளவு மோசமானதா எனத் தேடவைத்து உங்களை ஈர்க்கக்கூட வைக்கும்.
உதாரணத்திற்கு 'காவல் கோட்டம்' வந்தபோது எஸ்.ராமகிருஷ்ணன் மிக எதிர்மறையான
விமர்சனத்தை அதற்கு வைத்திருந்தார். எஸ்.ராவின் விமர்சனத்தை வாசித்தபோது,
எவரையும் அவ்வளவு சீண்டிப்பார்க்காதவராயிற்றே, இவ்வளவு பொங்கி
எழுதுகின்றாரே அந்த நாவல் அவ்வளவு மோசமானதா என்ற குறுகுறுப்புடன்
'காவல்கோட்டத்தை' வாசிக்கத் தொடங்கினேன். அதிசயமாய் எனக்கு அந்த நாவல்
மிகப் பிடித்துப் போனது. ஆக ஒரு விமர்சனம் கடுமையாக இருந்தால் கூட
சிலவேளைகளில் நம்மைக் கவரவும் கூடும் என்பதற்கு இது ஒரு சான்று.
பிரம்மராஜனின்
இந்த விமர்சனத்தை ஏற்கனவே சிலதடவைகள் வாசித்தபோதும், இப்போது மீண்டும்
வாசிக்கின்றபோது கூட எனக்கு கோணங்கி விலகிப்போன ஒருவராக இருக்கவில்லை. நான்
கோணங்கியின் நாவல்களை முழுமையாய் வாசிக்கும்போது சிலவேளைகளில் இந்த
எதிர்மறை விமர்சனத்திற்கு -காவல்கோட்டத்திற்கு நிகழ்ந்தது போல- நன்றி
சொல்லக்கூடியவனாகக் கூட மாறிவிடவும் கூடும்.
கோணங்கி பற்றிய இன்னொரு கட்டுரை, பவா செல்லத்துரை எழுதிய 'கோணங்கி பெண் பார்க்கப்போன கதைகள்': .
இதையும் முன்னர் வாசித்ததாக நினைவு. ஆனால் எப்போது வாசித்தாலும்
அதிலிருக்கும் நகைச்சுவையிற்கு அப்பால் மனம் நெகிழ்ந்து போகின்றவனாக
ஆகிவிடுகின்றேன். கோணங்கி தன்னை வாசித்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்கின்ற
சந்தர்ப்பத்தில் என்னை நான் அங்கே கண்டுகொண்டேன். இந்நிகழ்வு நடந்து அடுத்த
நாள் விடிகாலையில் எவரும் அறியாமல் நகர் நீங்கிப் போய்விடுகின்ற கோணங்கியை
நான் பின் தொடர விரும்பினேன். அவரின் கரங்களைப் பற்றி காதல் பிரிவோ, ஒரு
நிரந்திர உத்தியோகம் இல்லை என்பதோ தனிமையையோ துயரத்தையோ தரக்கூடியதாக
இருக்கலாம். இவற்றோடு சமரசம் செய்துகொண்ட எத்தனையோ பேர்கள்
இருக்கின்றார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு
அலைந்துகொண்டிருப்பதால்தானே இன்னுமின்னும் எங்களை
வசீகரித்துக்கொண்டிருக்கின்றீர்கள். வழிகாட்டியாக நீங்கள் முன்னே
போய்க்கொண்டிருந்தாலும் உங்களைப் பின் தொடர முடியா அவலத்துடன்
கண்ணிற்குத்தெரியாக் கண்ணிகளை அறுத்தெறிய முடியாது நாம்
போராடிக்கொண்டிருக்கின்றோம்' எனக் கூற வேண்டும் என நினைத்துக்கொள்வேன்.
கோணங்கியின்
இயற்பெயரும் சிலப்பதிகாரத்தை எழுதியவரின் பெயரும் ஒன்றே. முன்னவர்
துறவியாக அலைந்ததைப் போல கோணங்கியும் தனது பயணத்தைத் தொடர்கின்றவர். அவரின்
தனிமையான பயணங்களை நாம் பின் தொடராதபோதும் எம்முடைய அன்பும் வாழ்த்தும்
அவரை என்றும் அரவணைத்தபடி இருக்கும்,
ஈழத்துச் சூழலில் மிக
முக்கியமானவரான ஏ.ஜே கனகரட்ண தன்னைப் பற்றிய பாராட்டுவிழா(?) நடந்தபோது
அந்த இடத்திற்கே காலடி எடுத்துவைக்கவே கூச்சப்பட்டு போகாமலே இருந்தவர்.
அவரைப் பற்றிய சிறப்பிதழ் புலம்பெயர் இதழொன்றினால் வெளியிடப்பட்டு அவரின்
கையில் கொடுக்கப்பட்டபோது கூட தூக்கியெங்கோ ஓரத்தில் வீசியெறிந்தவர்.
அந்தளவிற்கு தன் மீதான ஒளிவட்டத்தை வெறுத்தவர். இன்றையகாலத்தில் எல்லோருமே
தம்மைத்தாமே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கின்ற சூழலில், ஏஜேயைப் போல
தன்னை முன்வைக்க கூச்சம் மட்டுமின்றி அதுகுறித்து சிறிதும் அக்கறையில்லாத
கோணங்கி போன்றவர்களைப் பார்ப்பதே மிக அரிது. அவ்வாறான ஒருவரை
முன்னோடியாய்க் கொள்வதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியே.
(Oct 17, 2014)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment