நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வேலைத்தளம் பற்றிய சில நாவல்கள்

Saturday, March 10, 2018Charles Bukowski தனது முதலாவது நாவலான 'Post Office'ஐ எழுதும்போது அவருக்கு ஐம்பது வயது. ஒருவகையில் சுயசரிதைத் தன்மையிலான கதையென்றாலும், சுவாரசியமாக அவ்வப்போது சிரித்தபடி வாசிக்கக்கூடிய ஒரு புதினம். இந்த நாவலின் பெரும்பகுதி தபால் நிலையத்தில் நடக்கின்ற கதை. எப்படி ஒரு சாதாரண கீழ்நிலை ஊழியர் பிழிந்தெடுக்கப்படுகின்றார் என்பதை ப்யூகோவ்ஸ்கி அற்புதமாக சித்தரிப்பத்திருப்பார். அந்த நிலை இவ்வளவு காலம் ஆனபிறகும் அவ்வளவு மாறவில்லை என்பதை இதை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். எல்லா விடயங்களையும் ப்யூகோவ்ஸ்கி  உடைத்துப் போட்டபடியோ எழுத்தில் போய்க்கொண்டிருப்பார். அவர் பெண்களைச் சித்தரிக்கின்ற விதத்தில் நமக்குச் சிக்கல்கள் நிறைய இருந்தாலும், எள்ளல்களுக்கு அப்பாலும் தான் சந்திக்கும் பெண்கள் மீது ஏதோ ஒருவகையில் அனுதாபம் கொண்டிருப்பதையும் அறியலாம்.  ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார்: "Women were meant to suffer; no wonder they asked for constant declarations of love."

இந்த நாவலுக்கு அண்மையாக -அதாவது ஒரு வேலைத்தளத்தை முக்கிய பின்னணியாகவும்/சுவாரசியமாகவும் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என நினைக்கும்போது எனக்கு ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி'யும், நோயல் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் நினைவுக்கு வந்தன. லெனின் சின்னத்தம்பி ஒரு உணவகத்தில் வேலைசெய்யும் ஒரு ஊழியரின் வாழ்வைச் சொல்வது. அசோகனின் வைத்தியசாலை ஒரு மிருகவைத்தியரின் வேலைச் சூழலை விபரிப்பது. லெனின் சின்னத்தம்பியிற்கு வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்று, அது அந்த உணவகத்திற்கும் மட்டும் நின்று கதையைச் சொல்லிவிட்டு, லெனின் சின்னத்தம்பி பிற வாழ்வின் பகுதியைச் சொல்லவில்லை என்பது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, அவ்வாறு அதற்குள் மட்டும் நின்று உழன்றுகொண்டிருந்தபடியால்தான் அது ஒரு இறுக்கமான நாவலாக வந்திருந்தது என்பதாக இருந்தது. இவ்வாறு உடலுழைப்பால் பிழியப்படும் ஒரு ஊழியருக்கு பிற விடயங்கள் பெரும் பொருட்டாக மாறமாட்டாது எனத்தான் எடுத்துக்கொண்டேன்.

அசோகனின் வைத்தியசாலையோ, தனது வேலைச்சூழலிலிருந்து அவ்வப்போது விடுப்பு எடுத்து பிற வாழ்க்கையையும் சொல்லியது. அதனூடாக ஒரு குடிவரவாளர் குடும்பம் எப்படி புலம்பெயர் சூழலுக்கு தன்னைத் தகவமைக்கின்றது என்பதையும் நகைச்சுவையாகச் சொன்னது. ஒருவகையில் இந்த இரு நாவல்களுக்குமிடையில் வர்க்கம் தனது வித்தியாசங்களைக் கொண்டு வருகின்றது. லெனின் சின்னத்தம்பி தொடர்ந்து ஜேர்மனிய இனவெறியை நினைவுபடுத்திக்கொள்ள, அசோகனின் வைத்தியசாலை இனவெறி இருப்பதை அடையாளங்கண்டுகொண்டாலும், எங்குதான் நிறவெறி இல்லையெனக் கூறி  ஒருவகையில் புலம்பெயர் சூழலில் தன்னைச் சமரசம் செய்கின்றது.

ப்யூகோவ்ஸ்கியினது கதை ஒருவகையில் சுயசரிதைத் தன்மை எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல லெனின் சின்னத்தம்பியினதும், அசோகனின் வைத்தியசாலையினது எழுதியவர்களும் தத்தமது நாவல்களின் பின்னணியில் வேலையும் செய்துகொண்டிருக்கின்றனர்.  வாசிக்கும் எமக்கு அதில் எவை உண்மை/ புனைவு என்று தேடுவது அவசியமும் அற்றது.

 ப்யூகோவ்ஸ்கி, (உம்பர்த்தோ ஈக்கோ) போன்றவர்கள்  நமக்குச் சொல்லும் விடயம் என்னவென்றால்,  முதல் நாவலை 50 வயதிற்குப் பிறகு கூட எழுதலாம் என்பது  மற்றது சாதாரணக் கதைகளைப் போன்று தோன்றுவதைக்கூட  சுவாரசியமாகச் சொன்னால் அவை காலத்தைக் கடந்து மறக்கமுடியாத புனைவுகளாக மாறிவிடும் என்பதையுமாகும்.


(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: