நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பார்த்திபனின் 'கதை'

Friday, March 30, 2018


1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். 'கதை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் நண்பர்கள் தொகுத்திருக்கின்றனர். ஒருவகையில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது போலத் தோன்றும். பார்த்திபன் ஒருகாலத்தில் நிறையவும், நிறைவாகவும் எழுதி, பின்னோர் பொழுதில் எப்போதாவது ஒரு கதை என்கின்ற அளவிற்கு தன்னை ஒதுக்கியும்கொண்டவர்.

எழுதப்பட்ட காலவரிசைப்படி கதைகள் தொகுக்கப்பட்டது, ஒரு தொகுப்பிற்கு பலமா பலவீனமா என்பது ஒருபுறமிருக்க, நமக்கு பார்த்திபன் என்கின்ற கதைசொல்லியின் வளர்ச்சியை சீர்தூக்கிப் பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பம் இதன்மூலம் வாய்த்திருக்கின்றது எனச் சொல்லலாம். இதிலிருக்கின்ற இருபத்துமூன்று கதைகளில் ஏழெட்டுக் கதைகளைச் சாதாரண கதைகளென ஒதுக்கிக் கொள்ளலாம்.  நான்கைந்து கதைகள் நல்ல கதைகளாவதற்வதற்கான முயற்சிகளென எடுத்துக்கொண்டால், ஒரு பத்துக் கதைகள் இத்தொகுப்பில் தவிர்க்கமுடியாத  கதைகளாகத் தம்மை ஆக்கிக்கொள்கின்றன.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வென்பது பல்வேறுவகையில் சிக்கலானது.  இதுவரை பேசிப்பழகியிருக்காத மொழிபேசும் புதிய நிலப்பரப்பில் தம் வேர்களைப் பதிக்கவேண்டிய அவதி நம்மவருக்கு இருந்திருக்கின்றது. தாய்மண் பிடுங்கி எறியப்பட்ட புலம்பெயர்வு ஒருபுறமிருக்க, புதிய மொழிபேசும் மனிதரிடையே தம்மைத் தகவமைக்க வேண்டிய அவதியும் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்தொகுப்பில் 'நாளை'. 'ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும்','தெரியவராது', 'ஒரு அம்மாவும், அரசியலும்!', 'வந்தவள் வராமல் வந்தால்', 'இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ', 'தீவு மனிதன்', 'கெட்டன வாழும்', 'மூக்குள்ளவரை!', 'கல்தோன்றி' ஆகியவற்றை  முக்கிய கதைகளாக கொள்ளமுடிகின்றது.

'நாளை' என்கின்ற கதை, புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு பதின்ம வயதினன் தனது அடையாளத்தைத் தேடுகின்ற சிக்கலைப் பேசுகின்றது. தந்தை வேலையோடு அல்லாடிக்கொண்டிருக்க, தாயோ இந்தியத் திரைப்படங்களில் தன்னைத் தொலைத்துக்கொண்டிருக்க, ஜேர்மனிய நிறவெறியை 'நாளை'யில் வருகின்ற வினோத் பாடசாலையில் சந்திக்கின்றான். இவ்வாறான பிரச்சினையை விளங்கிக்கொள்ளவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ இயலாத வினோத் தனக்கு வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு வன்முறையான வழியைத் தேர்ந்தெடுக்கப்போகும் அவலநிலையோடு இந்தக் கதை முடிகின்றது. ஈழத்தமிழர்கள் இவ்வாறான தேசங்களுக்கு புலம்பெயர்ந்து எத்தனையோ தசாப்தகாலம் ஆகியபிறகும், இன்றும் கூட நாம் பல்வேறுவகையான நிறவெறியை எதிர்கொள்ளவேண்டியே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் போலில்லாது நுட்பமாகத் தமது இனவெறியைக் காட்டுகின்ற அளவிற்கு மேற்கு நாடுகள் வளர்ந்திருக்கின்றன என்று சொல்லலாமே தவிர நிறவெறி முற்றாகப் போய்விட்டதென்றால், புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த நமது இரண்டாந்தலைமுறை கூட இதை நம்பாது.

'ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும்' என்கின்ற கதை, ஒரு ஈழத்தமிழருக்கும், குர்திஷ்காரருக்கும் நடைபெற்ற உரையாடல்களால் வளர்த்தெடுக்கப்படுகின்றது. தன்  சொந்தநாட்டு மக்களுக்கு வேலை செய்யும் பொருட்டு, முதலாளி இரவும் வேலை செய்யவேண்டும் எனப் புதிதாய்ப் பிறப்பிக்கும் கட்டளையைப் புறக்கணித்து, தனது வேலையை இழக்கின்றார் குர்திஷ் தொழிலாளி. ஈழத்தமிழரோ தாங்கள் வர்க்கம், பாட்டாளி என்று நிறையக் கதைத்தாலும், இப்படி குர்திஷ் தொழிலாள நண்பர் போல தன்னால்  தான் நம்பும் விடயங்களுக்கு ஏன் உண்மையாக இருக்க முடியவில்லை என யோசிக்கின்றார். தானும், தனது நண்பர்களும் பேசிப் பேசி காலத்தை வீணாக்கின்ற தரவழிகளோ எனக் குழம்புகின்றார். சக தொழிலாளி வேலையிலிருந்து முறையற்று நீக்கப்படும்போது, ஏன் தன்னைப் போன்ற பிறதொழிலாளிகள் குரல்கள் கொடுக்கவில்லை என்றும், நாமெல்லோரும் சுயநலமாக இருக்கின்றோமோ எனவும் யோசித்தபடி, வழமைபோல  எதையும் உருப்படியாகச் செய்யாது சும்மா நண்பர்களோடு சேர்ந்து இப்படியே கதைத்துக்கொண்டு இருக்கலாம் எனக் கதை முடிகின்றது.

'தெரியவராது' கதை நகைச்சுவை போலத் தொடங்கி துயரமாக முடிகின்ற கதை. பாலு என்கின்றவர் நிறையக் கடன்பட்டு ஜேர்மனியில் வந்திறங்குகின்றார். வாங்கிய கடனும், குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டிய அவதியும் இருக்கின்றபோதும், எவ்வளவு கடினப்பட்டு உழைத்தாலும் அவரின் கடன்களை அடைக்கப் பணம் போதாமலே இருக்கின்றது. இந்த நேரத்தில் கனடாவிற்கு ஜெர்மனியிலிருந்து போகின்ற ஒரு சீஸன் ஆரம்பிக்கின்றது. ஒரு கப்பலில் ஏற்கனவே ஜேர்மனியிலிருந்து புறப்பட்டு கனடாவைச் சேர்ந்தடைந்திருக்கின்றனர் என்ற செய்தி பாலுவுக்கு நம்பிக்கை கொடுக்க கனடாவிற்கு விமானமேற முயற்சிக்கின்றார். அவரது ஒவ்வொரு முயற்சியும் ஏதோ ஒருவகையில் இடைநடுவில் பிடிபட்டு ஜேர்மனிக்குத்  திருப்பியனுப்பப்படுகின்றார். ஏற்கனவே இருந்த கடனோடு, இப்போது கனடாவிற்குப் போவதற்காய் வாங்கும் கடனும் சேர்ந்து தலைக்கு மேலாய் கடன் சேர்கின்றது.

இறுதியில் அமெரிக்காவில் இருக்கும் கறுப்பினத்தவரின் முகத்தை பாஸ்போர்டில் மாற்றி, கனடாவிற்குப் போக பாலு முயற்சிக்கின்றார். ஒவ்வொருமுறையும் தோற்றுத் திரும்பிவந்து நண்பர்களின் நக்கல்களையும் கேட்டுச் சலித்த பாலு, இம்முறை சுவிற்சிலாந்திலிருக்கும் நண்பரைப் பார்க்கப் போவதாய் தனது ஜேர்மனி நண்பர்களிடம் பொய்சொல்லிவிட்டு கனடாவிற்கு விமானம் ஏறுகின்றார். ஆனால் பரிதாபம் என்னவென்றால் அவர் ஏறிய விமானம் வெடித்துச் சிதறுகின்றது. பாலு இறந்துவிட்டாலும், அவரது பாஸ்போர்ட்/இன்னபிற விபரத்தை வைத்து தலைமாற்றிய பாஸ்போர்ட்காரரே இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகின்றார். பாலு என்ற ஒரு மனிதர் வாழ்ந்தற்கான எந்த அடையாளமும் இல்லாமல் போகின்றார். அவரது நண்பர்கள் அவருக்காய்க் காத்திருக்கின்றனர். அவரை நிறையக் கடன் வாங்கி அனுப்பிவைத்த குடும்பத்தினரும் பாலு எங்கையோ இருக்கின்றார் என -நடந்தவிபரம் தெரியாது- காத்திருக்கின்றனர் எனக் கதை முடியும். இதேபோல எத்தனை எத்தனை மனிதர்கள் எல்லை கடக்கும்போது அடையாளம் காணாமலே தொலைந்திருக்கின்றார்கள்.

இதே பொருள்தொனிக்கும் இன்னொருகதையை பார்த்திபன் 'இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ' என்ற கதையிலும் எழுதியிருப்பார். அது இவ்வாறான  மனிதர்களிடம் பணம் கறக்கின்ற இலங்கைப் பொலிஸினதும், அவர்களை எல்லை கடக்க வைக்கின்ற ஏஜென்சிகளினதும் மனிதாபிமானமற்ற நிலையைச் சொல்கின்ற கதை. இலங்கைப் பொலிஸுக்கு கடன் தொல்லையால் காசுப்பிரச்சினை வருகின்றபோது, வெளிநாடு வரக்காத்திருக்கும் அப்பாவியை பிடித்துவைத்து அடித்துப் பணம் பறிக்கின்றார்கள். இன்னொருபக்கத்தில் எல்லை கடக்கின்ற மனிதர்கள் இறக்க இறக்க அதைப்பற்றிக் கவலைப்படாது பணத்தில் வெறிகொண்டலைகின்ற ஏஜேன்சிக்காரன் ஒருவன், மொஸ்கோவில் ஒரு பெண், கேட்ட தொகையைக் கொடுக்கவில்லை என்பதற்காய் அவளை விட்டுவிட்டு மிச்சப்பேரை ஜேர்மனிக்குக் கொண்டுவருகின்றான். அந்தப் பெண் அங்கே விட்டுவிட்டதால் ஒரு சிக்கல் என்று ஏஜென்சிக்காரனின் முகவர் தொலைபேச, மற்றவனோ 'என்ன அவள் ரெட் லைற் ஏரியாக்குள் கொண்டுபோய் விட்டிட்டாங்களோ' எனக் கேட்கின்றான். 'இல்லை, அவள் தற்கொலை செய்துவிட்டாள்' என மொஸ்கோவிலிருப்பவன் சொல்கின்றான். மேலும், அவள் தனது ஊர்க்காரி, பாவம் ஊரிலிருப்பவர்களுக்குத் தகவல் தெரிவிப்போமா எனக் கேட்க, மற்ற ஏஜென்சிக்காரனோ தூசணத்தால் திட்டிவிட்டு, இதையெல்லாம் வெளியில் சொன்னால் எங்களை ஜெயிலுக்குள் போட்டுவிடுவார்கள், நீ சொன்ன வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு போனை வைக்கின்றான்.  'தெரியவராது' கதையில் வரும் பாலுவைப் போல, இந்தக்கதையில் வரும் புனிதாவும் அடையாளமில்லாத ஒரு அநாதையாக அந்நிய நிலப்பரப்பில் கரைந்து போகின்றார்.

'வந்தவள் வராமல் வந்தால்' என்கின்ற கதையும் ஏஜெனசிக்காரர்களால் எல்லைக் கடக்கின்ற துயரத்தைப் பேசுகின்ற கதைதான். ஒருவன் தனது தங்கச்சியை நிறையக் காசு கொடுத்து ஜேர்மனிக்கு எடுக்கின்றான். ஒவ்வொரு நாட்டிலும் தங்கச்சி நிற்கும்போதும், அடுத்த நாட்டுக்கு அனுப்புவதென்றால் காசை உடனே அனுப்பென ஏஜென்சிக்காரன் வெருட்டியபடியிருப்பான். எப்பாடுபட்டாவது தங்கச்சி வந்து சேர்ந்தால் காணும் என அவதிப்படும் தமையன், தனது தங்கச்சியை ஜேர்மனியிலிருக்கும் நண்பன் ஒருவன் திருமணம் செய்துகொள்வான், பிறகு எல்லாக் கஷ்டங்களும் தீருமென நம்புவான. தங்கச்சி ஒரு மாதிரி ஜேர்மனி வந்துசேர்வாள், ஆனால் அவளைத் திருமணம் செய்கின்ற நண்பனோ, இப்படி வாற பெட்டையளை ஏஜென்சிக்காரனோ அல்லது அவளோடு கூடவருகின்றவர்களோ 'அனுபவிக்க வேண்டியதை' அனுபவித்து விட்டுத்தான் அனுப்புவார்கள் என யாரோ சொல்வதைக் கேட்டு இந்தத் தங்கச்சியைத் திருமணம் செய்யமாட்டேன் என மறுப்பான். சரி, இப்படி சந்தேகத்துடன் இருப்பவனோடு திருமணம் செய்தாலும் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் என ஆறுதல் கொள்ளும் தங்கச்சி, பின்னர் ஒரு விபரீதமான முடிவை எடுப்பதாய் இந்தக் கதை முடியும்.

இப்படியொரு கதையை பார்த்திபன் தொடக்க காலத்தில் 'அம்பது டொலர் பெண்ணே' என்று எழுதியிருப்பார். ஆனால் அதில் வரும் பெண் தெளிவாக இருப்பாள். இவ்வளவு சீதனம் கேட்டு என்னை கூப்பிடுகின்ற நான் உங்களைத் திருமணம் செய்யமாட்டேன் என உறுதியாக மறுத்து, தனியே சென்று அகதி அந்தஸ்தைச் சென்று கோருவாள். ஆனால் ஜம்பது டொலர் பெண் ஒரு இயல்பான கதையாக நீளாது, தனக்கிருக்கும் கருத்தை எழுதுபவர் திணித்ததுமாதிரியான வாசிப்பு வரும். அந்தப் பலவீனத்தைத் திருத்தி பார்த்திபன் பிறகான காலங்களில் 'வந்தவள் வராமல் வந்தாலில்' எழுதியிருப்பார்.

'ஒரு அம்மாவும் அரசியலும்' என்ற கதை நமது இயக்கங்களிடையே நிகழ்ந்த சகோதரப்படுகொலைகளைப் பற்றி ஒரு அம்மாவின் மனோநிலையில் நின்று பேசுகின்றது. நண்பர்களாய் ஒருகாலகட்டத்தில் இருந்தவர்கள், பின்னர் வெவ்வேறு இயக்கங்களில் இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காய் எவ்வளவு வெறிகொண்டலைந்தார்கள் என்பதை பதிவு செய்வதோடு, இது முடிவுறாத ஒரு படுகுழியெனவும் நமக்கு எடுத்தியம்புகின்றது.

பார்த்திபனின் கதைகளுக்குள் 'தீவு மனிதன்' பற்றி நிறையப்பேசப்பட்டு விட்டது. ஒருவகையில் பார்த்திபன் 'தீவு மனிதன்' போலவே நம் சூழலில் அடையாளங்காணவும்படுகின்றார். ஆனால் இந்தத் தொகுப்பை முழுதாக வாசிக்கும்போது, அதைவிடச் சிறப்பான வேறு சில கதைகளையும் எழுதியிருக்கின்றார் எனச் சொல்வேன்.

முக்கியமாய் 'மூக்குள்ளவரை', 'கல்தோன்றி' இதில் இருக்கும் சிறப்பான கதைகள். பார்த்திபனின் 'மூக்குள்ளவரை' கதையில், எதை எழுதினாலும் அரசியல் எழுதுகின்றான் என்று வெருட்டப்பட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு எழுத்தாளன் நீண்டகாலத்திற்குப் பிறகு சிலரின் வற்புறுத்தலால் ஒரு கட்டுரை எழுதுகின்றான். அரசியலே இல்லாது, தனக்கிருக்கும் அலர்ஜியைப் பற்றிய சுய அனுபவக்குறிப்பே அது. எனினும் அது கூட வேறுவகையாகத் திரிக்கப்பட்டு எழுதியவன் அடிவாங்குவான். அடிவாங்கிய வேதனை ஒருபுறம் என்றால், இன்னொருபக்கம் இந்த ஆய்வாளர்கள் இந்தச் சம்பவத்தை அலசி ஆராயும் தொல்லை சொல்லிமாளாது. இறுதியில் ஒருவர் தீர்ப்பெழுதுவார், எழுதியவனை எவரும் இரும்புக்குழாயால் அடிக்கவில்லை; அவனே தன்னைத்தானே அடித்துக் காயப்படுத்தினான் என்று.

இத்தொகுப்பில் மிக முக்கியமான கதையாக 'கெட்டன வாழும்' கதையைச் சொல்வேன். மிக அற்புதமாக எழுதப்பட்ட கதை முடிகின்ற விதத்திலும் பார்த்திபன் என்கின்ற கதைசொல்லி மிளிர்கின்றார். இனியான காலங்களில் பார்த்திபனை தீவு மனிதன் என்பதை விட 'கெட்டன வாழும்' எழுதிய பார்த்திபனாக நான் அதிகம் கற்பனை செய்துகொள்வேன் போலத்தான் தோன்றுகின்றது. மிக சிக்கலான இந்தக்கதையை, அதன் வீரியம் கெடாமலும் அதேசமயம் வாசிக்கும் நமக்குள்ளும் நிறையக் கேள்விகளை எழுப்பும்படியாகவும் இதில் எழுதப்பட்டிருக்கும்.

தில் பார்த்திபன் 1986ல் இருந்து 2012ம் ஆண்டு வரை எழுதிய கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஒருவகையில் நமது புலம்பெயர் வாழ்வின் 25 வருடங்களின் குறுக்குவெட்டு எனவும் இதை எடுத்துக்கொள்ளலாம். தொடக்க காலங்களில் தனது கருத்துக்களை வலிந்து திணிக்கவேண்டும் என்று யோசிக்கின்ற கதைசொல்லியான பார்த்திபன் பிறகான காலங்களில் கதைகள் தம்மியல்பிலேயே அவற்றுக்கான இடங்களைச் சென்றடையட்டுமென விட்டுவிடுகின்ற ஒரு மனோநிலைக்கு வந்துவிடுகின்றார். அதுவே அவரைத் தீவு மனிதனாக்குகின்றது. தன்போக்கில் அசைகின்ற எவருமற்ற படகில் தனது கதைகளை ஏற்றி அனுப்புகின்றார். பல கதைகள் வாசகருக்கான கரைகளை அடைகின்றன. சில எல்லை கடக்கமுடியாத மனிதர்களைப் போல கரைகளை அடையாமலே அமிழ்ந்தும் விடுகின்றன. ஆனால் பார்த்திபன் கரைகளைத் தனது கதைகளை அடைகின்றதா இல்லையா என்பதைப் பற்றிப் பெரிதும் அக்கறை கொள்ளாது தனது தீவிலிருந்து படகுகளில் கதைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்.

அவர் பிறரைப் போல தாம் தப்புவதற்கான படகுகளைச் செய்ய முயலாது, பிறர் தப்பிக்கொள்வதற்கான படகுகளைக் கதைகளுக்குள் வைத்து அனுப்பிக்கொண்டிருக்கின்ற ஒரு வித்தியாசமான படைப்பாளி. பார்த்திபன் தனக்கான தீவுக்குள் ஒதுங்கிக்கொண்டாலும்,  வெளியுலகத்தோடு கலக்க விரும்பாது ஆமையைப் போல அடிக்கடி தலையை உள்ளிழுத்துக்கொண்டாலும், வாசகர்கள் இந்தக் கதைகளெனும் படகுகளின் மூலம் பார்த்திபனை நினைத்துக்கொள்ளவும், கொண்டாடவும் என்றென்றைக்கும் செய்வார்கள்.
----------------------------------

(நன்றி: 'காலம்' - இதழ்/52)

0 comments: