கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நான்குமணிப்பூ குறிப்புகள்

Saturday, December 01, 2018


ஸ்.பொ (மற்றும் இந்திரா பார்த்தசாரதி) தொகுத்த பனியும் பனையும் தொகுப்பு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகப்போகின்றன. ஐரோப்பா (20), ஆஸ்திரேலியா (9), வட அமெரிக்கா (10) கதைகளென 39 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் இருக்கின்றன. சிலவேளைகளில் எஸ்.பொவின் 'தமிழ் ஊழியம்' என்பது வியக்க வைக்கக் கூடியது. தனி மனிதராக (மு.தளையசிங்கமும் அப்படிப்பட்ட ஒருவர், எனினும் இளமையில் காலமாகிவிட்டார்) எவ்வித எதிர்பார்ப்புக்களுமில்லாது, படைப்பு மனத்தையும் கைவிடாது தனது இறுதிக்காலம் வரை இயங்கிக்கொண்டிருந்தவர்.

தொடர்ச்சியாக இவ்வாறான தொகுப்புக்களை வெளியிடுவது எஸ்.பொவின் விருப்புக்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை இந்தத் தொகுப்பிற்கான அவரின் முன்னீட்டில் வாசித்தறிந்து கொள்ளலாம். தொகுப்பின் முடிவில் கூட அடுத்த தொகுப்பிற்கான பெயரான 'வேரும் வாழ்வும்' என்று ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்பது தெரிகிறது. மேலும் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்துகொண்டு தனது கதை எதையும் இதில் சேர்க்காதது எஸ்.பொவிற்குரிய 'புகழ் தேடி' அலையாத முகத்திற்குரிய இன்னோர் அடையாளம்.

இத்தொகுப்பு வெளிவந்து கிட்டத்தட்ட அடுத்து இரண்டு புதிய தலைமுறைகளும் வந்துவிட்டபின்னர், இதைப்போல இன்னொரு தொகுப்பை யாரேனும் இப்போது வெளியிட்டால் கடந்த 25 வருடங்களில் புலம்பெயர் சூழலில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருக்கும். இன்னொருவகையில் புலம்பெயர் சூழல் தேங்கிவிட்டதா அல்லது தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கின்றதா என நம்மை நாமே மறுபரிசீலனை செய்யவும் உதவக்கூடும்.



ண்மைக்காலத்தில் தமிழ்ப்படங்கள் அருமையாக வரத்தொடங்கியிருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சிமலை, பரியேறும்பெருமாள், 96, ரூபா,வடசென்னை, (அடுத்து) சூப்பர் டீலக்ஸ் என வெவ்வேறு பின்னணியில் படங்கள் வருவதைப் பார்க்கும்போது தமிழ் இலக்கிய உலகம் மட்டும் ஈயோட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. சென்னைப் புத்தகக்கண்காட்சியை ஒட்டி மார்கழி, தைமாதத்தில் மட்டும் திடீரென்று உயிர்பெற்று ஏதோ எல்லோரும் எழுதுகின்றார்கள்/வாசிக்கின்றார்கள் போல ஒரு பிரமையைக் காட்டத்தான் நாம் எல்லாம் 'லாயக்கு'ப்போல. கடந்த 2 வருடத்தில் சட்டென்று மனதைப் பாதித்த புனைவு/அபுனைவுகளை எவ்வளவு துழாவியும் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு துயரமானது.

இது போதாதென்று நாவல்கள் எழுதுகின்றோமென்று நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வேறு எங்கள் பொறுமையைப் பலர் சோதிக்கின்றார்கள். உரையாடல் மூலம் நூறுபக்கங்கள் எழுதுவதை பத்து பக்கங்களில் எப்படிச் சுருக்கியெழுதுவது என்று அறிய, இவர்களை திரும்பவும் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பரீட்சை எடுக்க முதலில் அனுப்பவேண்டும். 70களில் எழுதப்பட்ட சிங்கள நாவலான 'அம்பரய' ஒரு இலட்சியவாத நாவலென்றாலும், அது கட்டியெழுப்பும் கிராமத்தையும், அந்த சுமனே பாத்திரத்தையும் நூற்றைம்பது பக்கங்களுக்குள் நம் மனதை உழும்படியாக அதில் எழுதமுடியுமென்றால் ஏன் நம்மால் 500-600 பக்கங்கள் எழுதியும் எதையும் சாதிக்கமுடியவில்லை என்று யோசிக்கவேண்டும்.

நல்ல தமிழ்ப்படங்கள் அண்மையில் வந்துகொண்டிருப்பதற்கும், வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருப்பதற்கும் பெரும் நடிகர்களின் படங்கள் அதிகம் வராமல் இருப்பதும் அல்லது அவர்களின் படங்களின் தோற்றுக்கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். அதுபோல இலக்கியம் சார்ந்தும் இந்த 'ஆளுமையான' எழுத்தாளர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, புதியவர்களுக்கு வழிதிறப்பதும், நல்ல எடிட்டர்களாய் இருந்து நாமே எழுதியதைத் திருப்பத் திருப்பத் திருத்தி எழுதுவதும் அவசியம் போலத் தோன்றுகிறது.



சாரு நிவேதிதாவின் 'தேகம்' வாசித்தபோது, நானும் நாவல் எழுதலாம் என்றொரு நம்பிக்கை வந்தது. இப்போது ஆவலுடன் வாசிக்கத் தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் 'பதின்', ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் நாவலை பிரசுரிக்கலாமா என்கின்ற என் அச்சத்தையும் விலக்கி விட்டிருக்கின்றது. அந்தளவிற்கு இந்த இரண்டு நாவல்களுக்கும் நான் நன்றிப்பட்டவன்
.
'குட்டி இளவரசன்' என்கின்ற குழந்தைகளுக்காய் எழுதப்பட்டதாயினும் எல்லோரும் வாசிக்கக்கூடிய நாவல் நம்முன்னே இருக்கின்றது. அதுபோல ஆங்கிலத்தில் Young Adults என்றொரு வகை இருக்கின்றது. இல்லை வளரிளம்பருவக் கதையைத்தான் சொல்லப்போகின்றோம் என்றால், Catcher in the Rye, Lord of the Flies, To Kill a Mockingbirdல் இருந்து, அண்மைக்கால 'வெலிங்டன்' வரை நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பதின் இவை எதுவாகவும் ஆகாதது மட்டுமில்லை, வாசிக்கவே அலுப்பான நாவலாக இருப்பதுதான் அவலமானது.

மேலும் குழந்தை/பதின்மன்களின் கதைகளின் தொகுப்பு என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பற்றி முடியும் எல்லா வாக்கியங்களிலும் 'சொன்னாள்', 'இருந்தாள்' என்று பூர்த்திசெய்வதும், கிழவிகள் என்று எழுதும்போதெல்லாம், அங்கே ஒரு மழலைப் பாத்திரம் இருப்பதில்லை வழமையான எஸ்.ராதான் வாக்கியங்களின் பின் சிரித்துக்கொண்டு நிற்கின்றார் என்பது எவ்வளவு அபத்தம்.

எப்போதும் நான் தனவிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் எழுதிய நாவல்களில் முக்கால்வாசியைத்தான் நான் இதுவரை வாசித்திருக்கின்றேன் ஆனால் எஸ்.ராவினதும், சாரு நிவேதிதாவினதும் அனைத்து நாவல்களையும் இதுவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கின்றேன் என்பது ஒருவகையில் அதிசயந்தான். இனி எஸ்.ராவும், சாருவும் எழுதும் நாவல்களை வாசிப்பதைக் கைவிட்டு ஜெயமோகனின் மகாபாரதம் தொடரை வாசிக்கும் காலம் வந்துவிடும் போலத்தான் தோன்றுகின்றது.

'பதின்' வாசித்த சோகத்தை, 'அப்பாவின் துப்பாக்கி' நாவலை வாசித்து பிறகு ஆற்றிக்கொண்டேன். குர்திஷ்காரர்களைப் பற்றிய அவ்வளவு சுவாரசியமான நாவல் அது.

0 comments: