கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாகைப்பூ குறிப்புகள்

Tuesday, December 25, 2018


கேரளா

உலகில் ஆயிரத்தெட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது கலைகள் அவசியமா என்ற கேள்விகள் இருந்தாலும், இவை நம் உள்மனதின் அந்தரங்கங்களோடு உரையாடுபவை. எப்போதும் எதையோ பெறுவதற்காய் ஓடும் வாழ்க்கையிற்கு கொஞ்சம் 'ஆசுவாசத்தை'த் தருபவை. கடந்தமுறை ஸ்பெயினுக்குப் போனபோது ஒரு மியூசியத்தின் ஒதுக்குப்புறத்தில் சின்னக் கிற்றாரை வைத்துப் பாடல்களைப் பாடிய இசைஞனின் குரலில் ஒரு நண்பர் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். Once againல் தனது மகளோடு இசை நிகழ்ச்சி கேட்கும் பெண் சட்டென்று உடைந்து அழுவாரே, அதைவிடவும் அதிகமாகவும். இவற்றுக்கெல்லாம் ஏன் என்று கேட்டால் அவர்களிடம் தெளிவான பதில் இருப்பதில்லை. ஆனால் நம் ஆழ்மனதின் எதையோ கலை தீண்டுகிறது. நாம் அதன் அலைவரிசைக்குப் போகும்போது நம்மை அறியாமலே நமக்குள் இறுக்கிப்பிடித்து வைத்திருக்கும் அழுத்தங்கள் கரைந்துபோகின்றன. நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சியைப் பெறுகின்றோம்.


ஒருநாள் மழை பொழிவதும் விடுவதுமாக இருந்த இரவு வேளையில் கொச்சினிலிருந்த பிரின்ஸஸ் வீதியில் நடந்துகொண்டிருந்தேன். திண்ணை வைத்த சிறு காலரியில் நீண்ட தாடி வைத்த, வேட்டியை மடித்துக்கட்டிய ஒரு ஓவியர் தன்பாட்டில் பேசியபடி ஒரு பெரிய கான்வாஸில் வர்ணங்களை விசிறியபடி இருந்தார். நான் அவர் வரைவதை வெளி இருட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்க, எனது மனது என்னையறியாமலே எடையற்றுப் போய்க்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.அவரோடு பேச விரும்பியபோதும், அவர் தன் ஓவியத்தோடு தோய்ந்துவிட்ட அந்த மனோநிலையைக் குழப்பிவிடக்கூடாதென்ற கவனத்துடன் அவர் என்னைப் பார்க்கமுன்னரே விலத்திப் போயிருந்தேன்.

உண்மையாகவே கலையில் தோய்ந்த மனங்கள் தம்மை முன்னிறுத்துவதில்லை. தம் கண்களுக்குப் புலப்படாத யாருக்காவோ அவர்கள் வரைந்துகொண்டோ/இசைத்துக்கொண்டோ/எழுதிக்கொண்டோ இருக்கின்றார்கள். அந்த அலைவரிசையை நாம் சரியாகக் கண்டுபிடிக்கும்போது அந்தக்கலை நமக்கான கலையாகவும் மாறிவிடுகின்றது.


தமிழ்நாடு

சென்னையில் நின்றபோது, தங்கி நின்ற விடுதியில் அருகில் இருக்கும் இடங்களைப் பார்க்க, நடந்துபோயிருந்தேன். அப்படி உலாப்போனபோது ஏதாவது சுவாரசியமான இடம் இருக்கா என்று தேடியபோது 10 downing street pub இருப்பதாய் கூகிள் ஐயா கூறினார். அட இது நமது சாரு அடிக்கடி போகும் இடமாயிற்றே, அங்கே அவரைச் சந்திக்க முடியாவிட்டால் கூட, நாயோடு நடையுலா வரும் த்ரிஷாவையாவது தற்செயலாகச் சந்திக்கலாம் என்ற பேராசையுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் போனேன். துயரம் என்னவென்றால் அந்த இடத்தைச் சுற்று சுற்றிப் பார்த்தபோதும் அது எங்கையோ மறைந்து போயிருந்தது. அருகிலிருந்த மசூதியை, அப்படியே அதற்கருகில் இருந்த தெருக்களில் தொலைந்து குறுகிய 'சந்து'களுக்குள்ளால் போய் ஒரு சிறுதெய்வக் கோயிலை எல்லாம் பார்த்தேன். ஆனால் 10 downing pub மட்டும் drowning ஆகிவிட்டது.

பிறகு திரும்பும் வழியில் 'தானியம்' இயற்கை அங்காடியைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளே போய்ப்பார்த்தபோதுதான், இந்த 'கருப்பட்டி கடலை மிட்டய்'ஐ பார்த்தேன். இதை அறிமுகப்படுத்திய ஸ்டாலினையும் (குக்கூ ஊடாகவோ அல்லது ஜெயமோகனின் தளத்தின் ஊடாகவோ, எதுவென மறந்துவிட்டேன்), அவர் தன் பொறியியல்(?) தொழிலை விட்டுவிட்டு தனக்குப் பிடித்த விடயமான பனங்கருப்பட்டித் தயாரிப்புக்குத் திரும்பியதையும் வாசித்திருந்தேன்.

வாழ்விலும் (முகநூலிலும்) நிறைய எதிர்மறைகளைப் பார்த்தது, இப்போது அவற்றை இயன்றவரை விலத்தி வரப் பிரயத்தனம் செய்பவன் என்றவகையில் ஸ்டாலின் போன்றவர்களும், நேர்மறையாக வாழ்வைத் தரிசிக்க விரும்பும் அவர்களின் விடாமுயற்சிகளும் வசீகரிக்கின்றன.

நாம் கச்சான் அல்வா என்று அழைப்பதைத்தான் ' கருப்பட்டி கடலை மிட்டாயாக'ச் செய்கின்றனர். ஆனால் வழமை போலில்லாது சீனிப்பாகிற்குப் பதிலாகக் கருப்பட்டியை(?) பாவிக்கின்றனர் என நினைக்கின்றேன்.

அருமையான சுவை.Marriage of a Thousand Lies

சென்ற வாரம் SJ Sindu எழுதிய 'Marriage of a Thousand Lies'ஐ வாசித்து முடித்திருந்தேன். தமிழ் தற்பாலினரைப் பற்றி தற்பாலினராக இருந்துகொண்டு, முதன்முதலாக ஆங்கிலத்தில் நாவல்(/கள்) எழுதியவர் ஷியாம் செல்வதுரை என்றால், அவ்வாறு ஒரு பெண் சமபாலுறவாளராக இருந்துகொண்டு (பெண்)தற்பாலினர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்ட நாவலாக 'Marriage of a Thousand Lies' ஐ எடுத்துக்கொள்ளலாம். அதேவேளை இதன் மூலத்தின் முக்கிய தீற்றை மேரி ஆன் மோகன்ராஜ் தனது 'Bodies in Motions' தொகுப்பில் ஒரு தனிக்கதையாக எழுதியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நாவல் வாசிக்கவேண்டிய நாவலென்றாலும், தன்னளவில் அதிகம் கவனத்தைக் கோருகின்ற , தவறவிடக்கூடாதென நாவலென அவ்வளவு எளிதில் சொல்லிவிடமுடியாது. அதேசமயம் வாசுகி கணேசானந்தன் எழுதி, ஆங்கிலச்சூழலில் அளவுக்கு  அதிகம் புகழப்பட்ட  Love Marriage அளவிற்கு  இது மோசமான நாவலுமல்ல. தமிழ் தற்பாலினரை, பெண்பாலினம், மண்ணிறநிறம், தமிழ்ச்சூழல் என்பவற்றிற்கிடையில் முன்வைத்து தன் அடையாளஞ்சார்ந்து எதிலும் தேங்காது, திரவநிலையாக (fluid identity) உருகிச் செல்வதை சிந்து எழுதியதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ச்சூழல் இன்னும் 'பட்டிக்காடாய்த்தான்' இருக்கின்றதென்பதை ஆங்கில வாசகர்களுக்காய் தேவைக்கதிகமாய் தாளித்து சமையல் செய்வதுதான் சற்று எரிச்சலைக் கொண்டுவந்திருந்தது. உதாரணத்திற்கு 28 வயதான திருமணம் செய்திருக்கின்ற பெண், இன்னமும் அம்மாவின் குரலைக் கேட்டுப் பணிந்துதான் இருக்கவேண்டும் என்று அடிக்கடி எழுதும்போது 'ஆ போதும் நிறுத்துங்கள்' என்று கொட்டாவிடத்தான் முடிகின்றது.

இலங்கையில் பிறந்த அமெரிக்காவில் வளர்ந்த சிந்துவின் முதல் நாவல் இது. இனி எழுதப்போகும் நாவல்களில் தேவையற்ற கிளிஷேக்களை களைந்து Funny Boy போல மறக்கமுடியாத ஒரு நாவலைத் தருவார் என நம்புவோமாக.
..............................

0 comments: