பணத்திலும் சாதியிலும் ஆதிக்கத்திலிருக்கும் ஒரு குடும்பப் பின்னணியில் பிறந்த ரேவதி, பர்மாவிலிருந்து அகதியாக வந்த ஆட்டோக்காரான ரவியோடு ஒருநாள் ஓடிப்போகின்றார். அவ்வாறு ஓடிப்போய், இரண்டு குழந்தைகளின் தாயுமாகிய ரேவதி ஆறுவருடங்களின் பின் தீயில் கருகின்றார். அவரது வன்முறையான கணவனான ரவியால் தீமுட்டிக் கொல்லப்பட்டாரா, ரேவதி தன்னைத்தானே தீமூட்டினாரா, அல்லது தற்செயலாக தீவிபத்து ஏற்பட்டதா என்பது கதையும் முடிவுவரை நமக்கு, இமையம் தெளிவாகச் சொல்வதில்லை. கதையின் நீட்சியில் அவரவர் அவரவர்க்கான முடிவை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எந்த முடிவையும் எடுக்காது ரேவதி நம் மீது சுமத்திவிட்டுச் செல்லும் பெருஞ்சுமையுடனும் சென்றுவிடலாம். இந்த இடைவெளி அல்லது தெளிவின்மையே செல்லாத பணத்தை முடிவுவரை தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.
இமையத்தின் எழுத்து நடையின் பலமும் பலவீனமுமாக இருப்பது அவர் உரையாடல்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டு அவற்றினூடு தன் படைப்புக்களை வழிநடத்திச் செல்வதாகும். இந்த நாவல் ஒரு குறுகிய பின்னணியில் (வைத்தியசாலையில்), ஒரு குறுகிய காலப்பகுதியில் (சில நாட்கள்) நடக்கின்றபோதும், இமையம் உரையாடல்களை வீரியமுள்ளதாகக் கொண்டுசெல்வதைக் குறிப்பிட்டாக வேண்டும் ('எங் கதெ'யில் இவ்வாறான உரையாடல்கள் எனக்குப் பலவீனமாகத் தெரிந்ததை முன்னர் குறிப்பிட்டிருக்கின்றேன்). எவர் மீதும் வலிந்து குற்றஞ் சாட்டாமல் அல்லது எவரையும் குற்றத்திற்கு ஆளாக்காமல் ரேவதியோடு அதிக நெருக்கமாக இருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அவரவர்களின் குரல்களிலேயே பேசவிட்டிருப்பது செல்லாத பணத்தை கவனிக்கத்ததொரு படைப்பாக்கின்றது.
இவ்வளவு வசதியும், படிப்புமுடைய ரேவதி ஏன் ரவி போன்ற ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றார் என்பதற்கான காரணங்கள் நம் தர்க்கநியாயங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும், இவ்வாறு தனது குடும்பம், படிப்பு, வசதி போன்றவற்றைத் துறந்து வரும் ரேவதியை ஏன் ரவியாலும் புரிந்துகொள்ளமுடியாது பிறகு வன்முறையை ரேவதி மீது ஏவுகின்றார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதே இருக்கின்றது. இறுதியில் இந்தப் பணத்தை வைத்து எதையும் பெற்றுவிடமுடியாது என்றும், காசு 'பாதாளம் வரை பாயாது', அதற்கும் கூட ஒரு எல்லை உண்டு என்பதும் இந்நாவலை வாசிக்கும் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.
செல்லாத பணம் நாவலில் விடுபட்ட (அல்லது இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதே) இம்மாத (ஜூலை) தடம் இதழில் வந்த இமையத்தின் 'அம்மாவின் விரதம்' கதை எனச் சொல்லலாம். இங்கேயும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் ஓடிப்போன பெண் தன்னிரு குழந்தைகளுடன் ஆறுவருடங்களின் பின் வீட்டுக்கு வருகின்றாள். அப்படிக் குழந்தைகளுடன் வரும் தன் மகளைத் தாயார் மாட்டுக்கொட்டகையில் வைத்து எப்படி வழிமறித்து திருப்பி அனுப்பிவிடுகின்றார் என்பதும் அதனூடாக அம்மா என்கின்ற 'புனிதப்பாத்திரம்' கூட சாதி வெறியில் உழல்வதை இன்னொரு மகள் உணர்ந்துகொள்கின்றதுமாகக் கதை நீளும்.
இமையத்தை முழுமையாக நான் வாசிக்காவிட்டாலும், அவரின் வாசித்த படைப்புக்களில் - முக்கியமாய் பல கதைகள்- இப்படிப் பெண்கள் யாரோ ஒரு சாதி குறைந்த ஆண்களோடு ஓடுவதுபோலவும், அவர்கள் ஓடிப்போவதினூடாக வாழ்வே அழிந்தே போனவர்கள் என்கின்ற ஒரு காட்சி அடிக்கடி வருவது போலவும் தோன்றுகின்றது. இமையம் இவ்வாறான கதைகளினூடாக சாதியின் கொடூரத்தைச் சொல்ல விரும்பினாலும், அவர் இனிவரும் காலங்களில் இவ்வாறு சாதி மாறி ஓடியவர்களும், திருமணம் செய்தவர்களுமாகிய பலர் அற்புதமான வாழ்வை வாழ்கின்றார்கள் என்பதையும் முன்வைக்கவேண்டும். ஏனெனில் சாதி வெறியர்களுக்கு அவர்களின் சாதியின் திமிரை மட்டுமே நினைவூட்டாது, சாதியைத்தாண்டி ஓடிச்சென்று வாழும் மனிதர்களின் அருமையான வாழ்வென்பதும் இவ்வெறியர்களின் முகங்களின் மீது திரும்பித் துப்புகின்ற எச்சிலாகக்கூடவும் இருக்கும் அல்லவா?
...........................
(July, 2019)
0 comments:
Post a Comment