நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சிற்றிதழ்கள்: 'காலம்' மற்றும் 'அம்மா'

Sunday, July 14, 2019


மிழில் சிற்றிதழ்கள் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதுவதற்கெனத் தொடங்கப்பட்டிருக்கின்றது (வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி). அதேபோல சில எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட சிற்றிதழோடு வளர்ந்துமிருக்கின்றார்கள். உதாரணத்திற்கு 'காலம்' தொடக்க இதழ்களில் (90-95) குமார் மூர்த்தியும், 'அம்மா' இதழ்களோடு ஷோபாசக்தியும் படைப்பாளிகளாக பரிணமிப்பதை நாம் அவதானிக்கலாம்.

1990-95ம் காலப்பகுதியில் காலம் - 10 இதழ்களைப் புரட்டினால் பல சுவாரசியமான விடயங்களை நாங்கள் பார்க்கலாம். முதலாம் இதழிலேயே சுகுமாரனின் கவிதையையும், அவர் மொழிபெயர்த்த பிற கவிதைகளையும் பார்க்கலாம்.  இரண்டாம் இதழில் 'கடவுளின் கடந்த காலம்' - கோபி கிருஷ்ணனின் கதை வருகின்றது. அதேபோல 'அரைக்கணத்தின் புத்தகம்' என்கின்ற சமயவேலின் கவனிக்கத்தக்க கவிதையும் 2ம் இதழில் இருக்கிறது. அடுத்தடுத்த இதழ்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் 'தாவரங்களின் உரையாடல்' கதை இருக்கின்றது. காலம் இதழில் ஜெயமோகன் நுழைந்தது ஒரு காதல் கவிதை ஊடாக.  நாம் எதையெழுதினாலும் எங்களைப் பாராட்டும் 'காலம்' செல்வம், அன்று ஜெயமோகனையும், நீங்களொரு நல்ல காதல் கவிஞரென  உசுப்பேத்தியிருந்தால் நமக்கு நல்லதொரு கவிஞர் (மட்டும்) கிடைத்திருப்பார். அருந்தப்பில் வரலாறு பிசகிவிட்டது.

ஒன்றுசேர்ந்து வந்த 'காலம்' இதழ் 3-4ல் ஜி.நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' மீளப் பிரசுரமானது முக்கியமானது. இப்போது அந்தக் குறத்தி முடுக்கு கிடைப்பதே அரிதென்ற குறிப்புடன் அது பிரசுரமானதோடு, (கோணங்கியிடம்) இருந்த பிரதியில் கடைசிப்பக்கம் இல்லாததால் அது இல்லாமலும் பிரசுரமாயிருக்கின்றது. பின்னர் 5 வது இதழில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் உதவியுடன் விடுபட்ட பகுதி பிரசுரமாயிருக்கின்றது என்பது சுவாரசியமானது.

பின்னாட்களில் காலத்தில் வெளிவந்த படைப்புக்களில் தலைப்புக்களிலேயே எஸ்.ரா 'தாவரங்களின் உரையாடல்' என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பையும், சமயவேல் 'அரைக் கணத்தின் புத்தகம்' என்ற பெயரில் கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டதையும் நாமறிவோம்.

1990ம் ஆண்டிலிருந்து இற்றைவரை (கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகவும் போகிறது) எவ்விதச் சலிப்புமில்லாது, இன்னமும் சிற்றிதழின் வேரையும் இழக்கவிரும்பாது காலத்தைக் கொண்டுவரும் செல்வத்தின் உழைப்பு -அனைத்து விமர்சனங்களையும் தாண்டி- சிலாகிக்கவேண்டியதுதான். இன்று எந்த இதழைத் தொடங்கினாலும், அடுத்தடுத்த இதழ்களிலேயே ஆசிரியர் குழுக்களில் உள்ளவர்கள் திசைக்கொன்றாய் ஓடுவதைப் பார்க்கும்போதும், இதழ்கள் படைப்புக்களின் செழுமையில்லாது சேடமிழுக்கும்போதும், செல்வத்தின் பொறுமை மீது ஒருவகைப் பொறாமைதான் வருகின்றது.

தேபோன்று தமிழ்ச்சூழலில் எந்தச் சிற்றிதழாவது, சிறுகதைகளுக்காய் மட்டும் நடத்தப்பட்டதா என்பதை நான் அறிவேன். ஆனால் பாரிஸிலிருந்து அப்படி 90களின் நடுப்பகுதியில் 'அம்மா' வந்திருக்கின்றது. தனியே சிறுகதைகளுக்கும், அதுகுறித்த உரையாடல்களுக்கும் என்று அந்தக் காலப்பகுதியில் தொடங்குவதற்கு ஒரு 'திமிர்'த்தனம் கட்டாயம் தேவைப்பட்டிருக்கும். அதைத் தொடங்கியவர் மனோ (புவனன்).
அத்தோடு தனது கதைகளைக்கூட கதைகளாக வராமல் ஏன் சிலவேளைகளில் அனுபவங்களாக மட்டும் தேங்கிவிடுகின்றன எனவும் (அ.இரவியுடன்)  பொதுவெளியில் விவாதிக்கின்றார்.

ஷோபாசக்தியின் கதைகள்/கட்டுரைகள் இல்லாது வந்த 'அம்மா' ஓரிதழ் மட்டுமே என்று நினைக்கின்றேன். 8வது இதழிலிருந்து கவிதைகளுக்கும், நாடகத்திற்கும் இடங்கொடுத்து விரைவில் 'அம்மா' தன் ஆயுளை அதன் பிறகு சில இதழ்களோடு முடித்துவிடுகின்றது. மனோ, பார்த்திபன், அ.இரவி போன்றோர் அனுபவமுள்ள படைப்பாளிகளாக அப்போது இருந்தாலும், புதியவராக வரும் ஷோபாசக்தியின் கதைகளை மனமுவந்து (சிலவேளைகளில் தம் கதைகளை விட சிறந்தது என்று கூட) பாராட்டுவதை  'அம்மா' இதழ்களை வாசிக்கும்போது அறியலாம். அப்படிச் சக/புதிய படைப்பாளியைப் பாராட்டும் ஒரு சூழல் இன்று அருகிப்போயிருப்பதைக் காணமுடியும். ஷோபாசக்தி போல, ஓட்டமாவடி அறபாத்தும், அ.இரவியும் நிறையக் கதைகளை 'அம்மா'வில் எழுதியிருக்கின்றனர்.

அதிசயமாக ஜெயமோகன் (கிழக்கு மேற்கும் தொகுப்புப்பற்றி எழுதும்போது)அதில் வந்த அ.முத்துலிங்கத்தின் கதை அனுபவமாக மட்டும் தேங்கிவிட்டது என்று 'உள்ளதை உள்ளபடி சொல்கின்றார். அந்தக் காலத்தில் எடுக்கவா கோர்க்கவா என்ற அ.மு-ஜெயமோகன் , துரியோதனன்-கர்ணன் போன்ற நட்பாக இல்லாததையெல்லாம் பார்த்து, ஆ அந்தக்காலம் மலையேறிப் போச்சுதே என்ற பெருமூச்சு வருகின்றது.

ஜெமோ எழுதியது:
"அ.முவின் கதை சுவாரசியமான சித்தரிப்பாக இருந்த அளவுக்கு மனத்தூண்டலை தருவதாக இல்லை. ஆக்கம் அழிவு என்ற இரு இயக்கங்கள் பரஸ்பரம் பொருந்தப்போவதை, கூற அவர் முற்பட்டிருக்கலாம். ஆனால் அது அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. நிறைய சாத்தியங்கள் கொண்ட கரு அரட்டைப்பாங்கான சித்தரிப்பால் தவறிவிட்டது என்ற வருத்தம் ஏற்படுகிறது."

அதிசயமாக யமுனா ராஜேந்திரனின் கதையொன்றைக் கூட இதில் வாசிக்கலாம். அ.இரவியின் கதைகள் தொகுக்கப்பட வேண்டும் என்று நட்சத்திரன் செவ்விந்தியன் மனமுருகி வேண்டுகின்றார். இப்படி எத்தனை எத்தனை 'வரலாற்று'ச் சம்பவங்கள்.

சிற்றிதழ்கள் முக்கியமானவை என்றே எப்போதும் சொல்லிவருகின்றேன். எனக்கு 2000களின் தொடக்கத்தில் கவிஞர் திருமாவளவனினால் அறிமுகப்பட்ட 'உயிர்நிழல்' இதழ்கள், வாசிப்பின் புதிய திசைகளைத் திறந்துவிட்டிருந்தது. அதில் அரைவாசிப்பக்கங்களில் அக்கப்போர்கள் நடந்துகொண்டிருந்தாலும், வேறு நல்ல விடயங்களும் புதிதாய் ஒரு வாசகர் அறிந்துகொள்வதற்கு வந்துகொண்டிருந்தன. எழுத விரும்புபவர்க்கும், தம்மை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்க்கும் சிற்றிதழ்கள் கொடுக்கும் சுதந்திரம் அளப்பரியது. அதைவிட சில எழுத்தாளர்கள் தம் விம்பங்களையோ/பிரதிகளையோ புனிதமாக உருவாக்கும்போது, அதைக் கட்டவிழ்ப்பதற்கும் சிற்றிதழ்களே நமக்குத் தேவைப்படுகின்றன.

(July, 2018)

0 comments: