நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தி.ஜானகிராமனின் 'அடி'

Friday, July 26, 2019

ஆண்- பெண் உறவுகள் என்பது எப்போதும் புதிர்த்தன்மை வாய்ந்தவை. புதிரை அவிழ்க்கின்றோம் என்று தம் உறவுகளுக்குள் போகின்றவர்களும் அதை இன்னுமின்னும் சிக்கலாக்குகின்றவர்களாகவே மாறுகின்றார்கள். ஆகவே இந்த எதிர்ப்பால் ஈர்ப்பு என்பது விந்தை நிறைந்ததாக காலம் காலமாக இழுபட்டபடியே இருக்கின்றது. தி.ஜானகிராமனுக்கு இந்தப் பாலின இச்சை ஏன் திருமணம் ஆகியபின்னும் வருகின்றது என்பது குறித்த நிறையக் கேள்விகள் இருந்திருக்கவேண்டும். ஆகவே அவர் எழுதிய பல்வேறு நாவல்களில் இதுவே முக்கிய பேசுபொருளாகின்றது.

'அம்மா வந்தாளில்' திருமணத்துக்குப் பிறகு அலங்காரத்தம்மாளுக்கு இன்னொரு உறவும் அதன் நிமித்தம் பிள்ளைகளும் பிறக்கின்றன. 'மரப்பசு'வில் அம்மணி ஏற்கனவே திருமணமான கோபாலியுடன் உறவை வைத்துக்கொள்கின்றார். 'உயிர்த்தேனில்' திருமணமான பூவராகவனுக்கு, செங்கம்மா மீது (அது உடல்சார்ந்து நிகழாவிட்டாலும்) காதலும் காமமும் இருக்கிறது. 'மோகமுள்ளிலும்', 'அன்பே ஆரமுதே'யிலும் கூட பால்யத்தில் நேசிக்கப்பட்டவர்கள் மத்தியவயதடையும்போது அவர்கள் தம் உடல்களைப் பரிமாறிய/பரிமாற விரும்பிய வேட்கைகள் இருக்கின்றன.

இவ்வகையில் தி.ஜா இறுதியாக எழுதிய நாவலெனச் சொல்லப்படும் 'அடி'யும் மேற்கூறிய நாவல்களின் பேசுபொருளை, மிகக் குறைந்த பாத்திரங்களுடன் பேசமுயல்வதைப் பார்க்கலாம். செல்லப்பா,  வறுமையின் நிமித்தம் வீட்டுவேலை செய்யும் தாயுக்குப் பிறந்தவர். பிற்காலத்தில் தாயும்,அவரும் இந்தத் தரித்திரத்தில் இருந்து விடுபடுகின்றனர். வடக்குக்குப் போய் நல்ல உத்தியோகம் பார்க்கும் செல்லப்பா, அவரின் அம்மாவையே பெண் பார்க்கச் சொல்கின்றார். திருமண நாளன்று வடக்கிலிருந்து வரும் செல்லப்பாவுக்கு அம்மா இப்படியொரு வசீகரமற்ற பெண்ணை ஏன் திருமணம் செய்துவைக்கின்றார் என்கின்ற கவலை இருக்கின்றது. செல்லப்பா தன் 'வேண்டா' மனைவியுடன் வடக்குக்குப் போகின்றார். தாயும் ஊரில் ஒரு வீட்டை செல்லப்பாவின் உதவியுடன் கட்டிக்கொள்கின்றார்.

அவ்வப்போது ஊருக்கு மனைவி, பிள்ளைகளுடன் வரும் செல்லப்பா அங்கே வறுமையில் வாழும் பட்டு என்கின்ற பெண்ணுக்கும், அவரது கணவரான சிவசாமிக்கும் உதவி செய்கின்றார். அவர்களும் செல்லப்பா குடும்பத்தோடு வடக்குக்கு குடிபெயர்ந்து நல்லதொரு வாழ்வை அமைத்துக்கொள்கின்றார்.

இதுவரை 'நல்லவராகவே' இருந்துவிட்ட செல்லப்பாவுக்கு, பட்டு தன் வறுமையிலிருந்து வெளிவந்து செழுமையில் தளும்ப, ஆசை நுரைக்கின்றது. அந்தக் காதலையும், காமத்தையும் தி.ஜா மிக இயல்பாகவே எழுதிச் செல்கின்றார். ஆணாகிய செல்லப்பாவுக்கு இருக்கும் தேவையற்ற குற்றவுணர்வு கூட, அவரோடு உடலைப் பகிரும் பட்டுவுக்கு இருப்பதில்லை. காமம் என்பது தேடும்வரைதான் சுவாரசியம், கிடைத்தபின் எப்போது அதிலிருந்து விலகியோடலாம் போலத் தோன்றும் எனத் தெளிவாகப் பேசுகின்றவராகவே பட்டு இருக்கின்றார். மோகமுள்ளில் இது பாபு யமுனாவின் உடலைச் சுகித்து முடிக்கின்றபோது 'இதற்குத்தானா' என்கின்ற ஒருவகைச் சலிப்பை நாம் இங்கே நினைவுகூர்ந்தும் கொள்ளலாம்.

எப்போது இந்த உறவை முடிப்பது என்ற தெளிவின்மையால், இனிச் சுவாரசியம் இல்லை என இருவரும் சொன்னாலும் அதற்குப் பிறகும் உறவு இருவருக்குமிடையில் தொடர்கின்றது. ஒருகட்டத்தில் செல்லப்பாவின் மனைவி மங்களம் இதைக் கண்டுபிடிக்கின்றார். மங்களம் மீது மதிப்பிருக்கும் பட்டு எவ்விதத் தயக்கமுமில்லாது செல்லப்பாவோடு தனக்கிருக்கும் உறவை ஒப்புக்கொள்கின்றார். செல்லப்பா -மங்களத்தின் ஆன்மீகக்குருவைப் போல இருக்கின்ற மங்களத்தின் மாமாவின் முன்னிலையில்-  தன் பிள்ளைகளையும் சாட்சியமாக வைத்து, தனக்கு பட்டுவுடன் 'தகாத' உறவு இருந்ததெனச் சொல்லி பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றார்.

தி.ஜானகிராமன், திருமணத்துக்குப் பிறகு வரும் உறவை பல்வேறுபட்டவர்களின் பார்வையில் நின்று அவரது நாவல்களில் பார்த்திருக்கின்றார். அவரின் அநேகமான பாத்திரங்கள் 'அந்த நேரத்து நியாயம்' எனத்  தம் இச்சையைச் சொல்லிக்கொள்ளவும் தயங்காதேயிருக்கின்றார்கள். ஆனால் தி.ஜாவின் இந்தக் கடைசிநாவலில் அது 'அந்த நேரத்து நியாயமாக' இருந்தாலும், மனமுருகி பொதுவெளியில் மன்னிப்பைக் கோருகின்றார்கள். ஒருவகையில் 'அடி'யில் தான், தி.ஜா இதுவரையான நாவல்களில் ஆராய்ந்து பார்த்த விடயத்துக்கு பொதுச்சமூகம் விரும்பும் ஒரு முடிவைச் சிபார்சு செய்கின்றாரோ போலவும் தோன்றுகின்றது.

பட்டுவின் பாத்திரத்தை விட பெரிதாகச் சிலாகிப்பதற்கு இதில் எதுவும் இல்லையெனினும், 'அடி'யையும் வாசிப்பதினூடாக தி.ஜாவின் படைப்புலகம் பற்றிய  முழுமையான ஒரு சித்திரத்தை நாம் நிறைவுசெய்து கொள்ளலாம்.


(July 05)

0 comments: