எனக்குப் பயணம் செய்யப்பிடிக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் இல்லை. பயணத்தை விட வாசிப்பில் மூழ்க இன்னும் பிடிக்கும். இந்த வாரவிறுதியில் பெரிதாக எதையும் திட்டமிடவில்லை. ஆனால் அருமையாகக் கழிந்திருந்தன . வெகுதொலைவுக்குப் பயணிக்காமல் பார்ப்பதற்கு அருமையான இடங்கள் அருகிலேயே இருக்கின்றன. நம்மில் பலருக்கு அவற்றைத் தேடிப்போவதற்குப் பொறுமையில்லை அல்லது ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கே திரும்பித் திரும்பிப் போவார்கள்; அதிலொன்று நயாகரா.
சனிக்கிழமை 150 கிலோமீற்றர்கள் பயணித்து Port Dover போக முடிந்தது. ஒன்ராறியோவில் இங்கே Palm Trees ஐ முதன்முதலில் கண்டபோது வியப்பாயிருந்தது. இந்தவகை மரங்கள் கனடாவின் காலநிலைக்கு உரியவை அல்ல. நான்கு மாதங்கள் மட்டுமே கோடை இருக்கும் ஒரு நாட்டில் இதைக் காண்பது அதிசயம். எங்கிருந்தோ கொண்டு வந்து நட்டிருந்தார்கள். காலிமுகத்திடலில் ராஜபக்ச சகோதரர்கள் வளர்ந்த பனைமரங்கள் போல ஆகாவிட்டால் சரி.
Erie வாவிக்கரை நடை, மீனும் உருளைக் கிழங்கும் சேர்ந்த இரவுணவு, இடையில் ஜஸ்கிறிம் சுவைத்தல் என பொழுது உலாத்தலும் கதைத்தலுமாகக் கழிந்தது. திரும்புகையில் சோவென்று பெய்யத் தொடங்கிய மழையும் அவ்விரவுக்கு அழகு கொடுத்தது.
அடுத்தநாள் ரொறொண்டோ நடுப்பகுதியில் இருக்கும் Leslie Pit ற்குப் போக முடிந்தது. 1950களில் துறைமுகமாக நீட்சிக்க இருந்த பகுதியில் பிறகு நகரசபை தனது கட்டுமானக் கழிவுகளைக் கொட்ட ஒருவரும் பாவிக்கமுடியாத பகுதியாக நெடுங்காலமாக இது இருந்திருக்கின்றது.. இப்போது அந்தக் கழிவுகளிலிருந்து ஒரு அற்புதமான இயற்கைச் சூழலை உருவாக்கியிருக்கின்றனர்.. ஒன்ராறியோ வாவியின் கரையில் அமைந்திருக்கும் இங்கிருந்து கனடாவின் உயரமான சி.என்.என் டவரை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். சைக்கிளோடுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இடம் தவறவிடக்கூடாத ஒன்று. இப்போது நிறையப் பறவைகளுக்கான வாழ்விடமாக இது மாறியிருக்கின்றது.
இங்கு ஒரளவு உலாத்திவிட்டு வூட்பைன் பூங்காவில் நடந்த Afro Festivalற்குப் போய் இசையோடும் நடனங்களோடும் ஆபிரிக்கன் ஸ்டைல் கோழிக்கறியோடு சோற்றை வெட்டிவிட்டு வந்தால் சொர்க்கத்தை நினைத்தெல்லாம் கனவு காணத்தேவையில்லை.
இப்படி இரண்டு நாட்களும் வெவ்வேறு ஏரிக்கரையில் நின்றபோது
ஐஸக் அஸிமோவ் எழுதியது ஒன்றுதான் நினைவுக்கு வந்தது:
மகிழ்ச்சி என்பது சிலவேளைகளில் நீங்கள் எங்கையோ போய், எதையாவது செய்துகொண்டோ, யாருடனோ இருக்கவேண்டும் என்று உணராமல் இருக்கச் செய்வதாகும். எளிமையாகச் சொல்வது என்றால் ஓரிடத்தில் இருந்துகொண்டு இன்னொரு இடத்தை/இன்னொரு நபரை/இன்னொரு விடயத்தை நினைக்காமல் இருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த இடத்தில் இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்பதாகும்.
கடந்த இரண்டு நாட்களிலும் அப்படித்தான் இருந்தேன்.
(July 08)
0 comments:
Post a Comment