இலையுதிர்க்கால
காலநிலை இன்னுஞ் கொஞ்ச நாட்களில் வந்துவிடும். அதற்கும் முன் குளிர் நுழைந்துவிட்டது.
இதுபோதாதென்று இன்று முழுவதும் மழையும் பெய்துகொண்டிருந்தது. சாம்பல் போர்த்திய வானத்தைப் பார்த்தபடி செம்மதுவை அருந்தியபோது ஒரு மென் கிறக்கம்
வந்தது. இதுதான் வாசிப்பதற்கு அரியதருணமென கு.ப.ராஜகோபாலனின்
சிறுகதைகளை எடுத்து வாசித்துப் பார்க்கத் தொடங்கினேன்.
கு.ப.ரா, புதுமைப்பித்தனைப்
போல 42 வருடங்களே வாழ்ந்தவர். புதுமைப்பித்தனைப் போல இருபது வயதுகளில்
எழுதத்தொடங்காது, தனது முப்பது வயதின்
பின்னேயே எழுதத் தொடங்குகின்ற கு.ப.ரா,
பத்தாண்டுகளுக்குள் 90க்கு மேற்பட்ட சிறுகதைகளை
எழுதியிருக்கின்றார். அவர் இலக்கியத்துக்கு வந்தது
கூட ஒரு விபத்துப் போலத்தான்
ஒருவகையில் தெரிகிறது. கு.ப.ராவுக்கு
32 வயதில் பார்வை முற்றாக, புரையின் காரணமாக இல்லாமற் போக, அவர் அதுவரை
செய்துவந்த வேலையை இழக்கின்றார். பிற்காலத்தில் பார்வையைப் பெறுகின்றபோதும் அவரால் முன்பு இழந்த அரசாங்கவேலையை மீளப் பெறமுடியவில்லை. பிறகான காலங்களில் பத்திரிகையாசிரியாரகவும், நூல் விற்பனையாளராகவும் இருந்திருக்கின்றார்.
கு.ப.ராவும், புதுமைப்பித்தனும்
சமகாலத்தவர்கள். புதுமைப்பித்தன் தனது காலத்தில் பல்வேறு
பரிசோதனை முயற்சிகளைச் செய்தபோது, கு.ப.ரா
ஆண்/பெண் உறவுகளில் இன்னுமின்னும்
ஆழமாகப் போய்ப் பார்த்தவர். எனினும் கு.ப.ராவால்
பாலியல் உறவுகளில், தன் காலத்தைய நம்பிக்கைகளை
மீறிப் போக முடியவில்லை. அதை
அவருக்கு அடுத்த காலப்பகுதியில் வந்த தி.ஜானகிராமன்
எளிதாக உடைத்தெறிந்து போகின்றார்.
எழுதுபவர்கள்
மற்றவர்களின் கதைகளைச் சொல்ல எடுத்துக்கொண்ட அளவுக்கு, தம்மோடு
தொடர்புடைய சார்ந்த கதைகளை எழுதுவது குறைவு எனச் சொல்லலாம். கு.ப.ராவின் பல
கதைகளில் எழுத்தாளர் என்ற பாத்திரம் தொடர்ந்து
வருகின்றது. 'பெண்மனம்' கதையில் எழுதுபவனின் மனைவியை அவளது தோழி சந்திக்க வருகின்றாள்.
எழுத்தாளருக்கு அந்தத் தோழி மீது ஒருவகையான
மையல் வருகின்றது. தோழிகள் கதைத்துக் கொண்டிருக்கும்போது
அடிக்கடி ஏதாவது காரணஞ் சொல்லி அவர்களின் கதைகளுக்குள் நுழைந்துவிடுகின்றார். எழுத்தாளனின் மனைவிக்கோ தனது கணவனின் சலனங்கள்
விளங்குகின்றது. அதேசமயம் தனது தோழி இதை
அறியமுன்னர் அவளை அங்கிருந்தும் அனுப்பிவிடுகின்றார்.
இப்படிக் கணவனின் கள்ளத்தனத்தைக் கண்டு வெகுண்டு/எரிச்சல் அடைந்தாலும், இறுதியில் தனது கணவனை இனியும்
அவமானப்படுத்தகூடாதென்று
மனம் அந்தப் பெண்ணுக்கு இரங்குகின்றது.
அதேபோல
இன்னொரு கதையான 'எதிரொலி'யும், ஒரு எழுத்தாளனுக்கும் அருகில்
வசிக்கும் மணமான பெண்ணுக்கும் வரும் சிறு சபலத்தைப் பற்றியதாகும்.
எழுத்தாளனின் மனைவி ஏதோ ஒரு காரணத்தால்
அவளின் ஊருக்குப் போய் சில மாதங்களாகிவிட்டது.
எழுத்தாளனுக்கு சுகவீனம் வர, பக்கத்து வீட்டுப்பெண்மணி
சாப்பாடு கொடுத்து அருகிலிருந்து கவனித்துக்கொள்கின்றார். ஒருமுறை அந்தப் பெண்ணின் கரத்தை வேட்கையின் நிமித்தம் இவர் இழுக்கின்றார். அந்தச்
சம்பவம் இந்தச் சிறுகதையில் பிறகு மூன்றுவிதமான பகுதிகளில் சொல்லப்படுகின்றது. முதலில் அந்தப் பெண்ணின் பார்வையில். இரண்டாவது எழுத்தாளனின் பார்வையில். மூன்றாவது அந்த எழுத்தாளனின் மனைவியின்
பார்வையில், பெண்ணின்
பார்வையில் சொல்லப்படும்போது அவர் தற்செயலாகத் தனது
கரத்தைத் தொட்டிருக்கலாம், தானும் அது சகோதரப் பாசமெனன
சும்மா விட்டிருக்கலாம், ஆனால் கையை உதறிவிட்டு ஓடிவந்துவிட்டதன்
பேரில் அவர் மீது எனக்கு
ஏதோ மையல் இருக்கின்றதெனக் காட்டிவிட்டேனே எனக் கவலைப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
எழுத்தாளனின்
பார்வையில், சுகவீனமாக நேரத்தில் இவ்வளவு செய்து தந்த, என் எழுத்துக்களின் மீதும்
விருப்புக்கொண்ட பெண் மீது என்
ஆசையால் என்றென்றைக்குமாய் அவளை விலத்திச் செய்துவிட்டேனே,
இந்த மூன்று மாதங்களாய் அவளோடு ஒரு மானசீகக் காதல்
இருந்து நிறைய எழுதிக் குவித்தேனே. இனி அவளும் அருகில்
வரப்போவதில்லை இனியெப்படி எழுதுவேன் எனத் தவிப்பதாய்ச் சொல்லப்படுகிறது.
மூன்றாவது
பகுதியில் எழுத்தாளரின் மனைவி திரும்பி இவரிடம் வரும்போது, எழுத்தாளர் இந்த வீட்டில் இருக்கவேண்டாமென
வேறொரு இடத்துக்கு வாடகைக்கு மனைவியுடன் போகின்றார். மனைவிக்கு இந்த விடயம் தெரியாது
என்றுதான் நினைக்கின்றார். ஆனால் அங்கே வீட்டு வேலை செய்யும் பெண்,
எழுத்தாளனின் மனைவியிடம், இவருக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணில் சபலம் இருந்ததைச் சொல்லிவிடுகின்றார். இப்போது மனைவியும், இனி உன்னோடு இருக்கமுடியாது
ஊருக்குப் போகப்போகின்றேன் என்கின்றாள். இவரும் சரி நீ போ
என்பதோடு கதை முடிகின்றது.
இந்தக்
கதையை வாசித்தபோது மலையாள எழுத்தாளர் சுள்ளிக்காடு பாலச்சந்திரன் தனது சுயசரிதையில், அவரின்
வீட்டுக்கு சோப்பு விற்க வரும் பெண்ணை, அவரின் மனைவி இல்லாத சமயத்தில், அந்தப்பெண்ணின் மீது மையல் கொண்டு
பெண்ணின் கையைப் பிடித்த சம்பவம் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. எல்லாப் படைப்பாளிகளுக்கும் சபலம் அடைகின்ற, தங்கள் தன்னிலைகளை இழக்கின்ற தருணங்கள் வரத்தான் செய்கின்றன. அதை எப்படிக் கடந்தனர்/கடக்கின்றனர் என்பதைப் பார்ப்பதும் ஒருவகையில் சுவாரசியமானதுதான்.
2.
இந்தச்
சலனங்களை 'காதல் நிலை' என்ற கதையில் ஆண்/பெண் பாத்திரங்கள் ஒரு
தத்துவார்த்த சூழ்நிலையை உருவாக்கிக் கடந்து செல்கின்றன. எம்.ஏ படிக்கும்
மிஸல் நவமணிக்கு ஷேக்ஷ்பியரின் 'அந்தோனியும்
கிளியோபாத்ராவும்' வாசித்து விட்டு என்ன அற்புதமான காதல்
அது என்கின்றாள். அதை மறுத்து அவளின்
ஆசிரியரான சுந்தரம், காதல் என்பது ஒருபோதும் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. சிறந்த காதல் எனச்சொல்லப்பட்ட அனைத்திலுமே காதலர்கள் இறந்திருக்கின்றார்களென ரோமியோ-ஜூலியட்டும், பார்பிரியாவும் அவர் காதலனும் அப்படித்தான்
இறந்துபோனார்கள் என உதாரணங்களை சுந்தரம்
காட்டுகின்றார். நவமணியோ நிரந்தரக் காதல் பற்றி, கணவனும் பெண்ணும் ஒருமனப்பட்டால் காதல் ஏன் வளராது என
விவாதிக்கின்றார்.
'ஒருமனப்பட்டால்
என்றால் என்ன, ஒன்று மற்றொன்றில் லயப்படுவதுதானே. அப்படியெனில் ஒன்று மற்றொன்றுக்குப் பரிபூர்ணமாகக் கீழ்ப்படிவதுதானே' என்கின்றார் சுந்தரம். 'சிறியது பெரியதற்கு இடங்கொடுத்து அதில் ஈடுபடுவதுதானே' என்று சொல்லும் நவமணியை, 'ஆராய்ந்து பார்த்தால் சிறியது என்ன பெரியது என்ன?
அபிப்பிராயமப் பேதமாகத்தான் கடைசியில் முடிகிறது' என்று சொல்லும் சுந்தரம், கல்யாணம் ஆகிற நிமிஷமே காதல்
முடிகிறதென உறுதிப்படச் சொல்கிறார்.
'என்
மணவாழ்க்கை சாவுநிலைக்கு சமானந்தான்' என ஒப்புக்கொள்கின்ற நவமணி,
சுந்தரத்திடம் 'உங்கள் வாழ்க்கையில் காதலைக் கண்டிருக்கின்றீர்களா?' எனக் கேட்கின்றார். சுந்தரம்
சுற்றிவளைத்துக் கதைத்தாலும் இறுதியில் தனக்கு நவமணியோடு ஒரு காதல் இருக்கிறதென்பதை
ஒப்புக்கொள்கின்றார். ஆனால் இவ்வாறான நிலையில் எவரையும் பாதிக்காது அவரவர் இயல்பில் இருக்கும் இந்தக் காதலே போதும் என்கின்றார். இதைத் தாண்டிப் போனால் அது சலித்துவிடும்.
கீட்ஸின் 'வாலிபனே, எந்நாளும் காதலித்துக் கொண்டிருப்பாய்; அவளும் அப்படியே அழகுருவாக இருப்பாள்' என்பதே தன் காதலின் வாக்குமூலம்
என்கிறார்.
இதற்கு மேல் காதல் போகக்கூடாது என்கின்றீர்கள். உடல்களைப் பகிர்ந்தாலும் அது அலுத்துப் போய்விடும் என்கின்றீர்கள். அப்படியாயின் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என நவமணி கேட்கின்றார். 'சுகதுக்கம் கலந்த அனுபவந்தான்; வேறொன்றும் இல்லை' என சுந்தரம் சொல்வதுடன் இந்தக் கதை முடிகின்றது.
இதேபோன்று
இன்னொரு கதையான 'திரை'யில் ஒருவன்
தன் காதலியின் உருக்கமான காதல் கடிதங்களின் நிமித்தம் அவளைச் சந்திக்க வருகின்றான். ஆனால் வீணை நன்றாக வாசிக்கின்ற,
கணவனை இழந்த ராஜத்தின் சகோதரி சரஸ்வதிதான் இந்த காதல் கடிதங்களை
எழுதியிருப்பதை அந்த ஆண் பின்னர்
கண்டுபிடிக்கின்றான். சரஸ்வதிக்கு அவன் மீது மையலிருந்தாலும்,
கணவனை இழந்த அவளால் தன் தாபத்தை இப்படி
மறைமுகமாகச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இறுதியில் வீட்டிலிருந்தவர்கள் மீண்டும் வர 'அந்தத் திரை
மீண்டும் மூடிற்று. ஆனால் திரை என்ன அறியும்'
என்பதாக அந்தக் கதை முடியும்.
கு.ப.ரா பிற்காலத்தில்
எழுதிய 'மோகினி மாயை' கதையில், இரண்டாந்தாரமாக வந்த ஒரு பெண்ணுக்கு
அவளை விட பத்துவயதான இளைஞன்
மீது மையல் வருகின்றது. இருவரும் அடுத்த கட்டத்திற்குள் நுழையமுன்னர். எப்படியோ இந்த தாபத்திலிருந்து தப்பிவிடுகின்றனர். பிறகு அந்தப்
பெண் தனது வயதொத்தவளுடன் இதைப்
பகிரும்போது அவளும் தனக்கு அப்படி ஒரு மையல் வயது
குறைந்த பையனோடு வந்தது என்கின்றாள். ஆனால் இதற்கு மேல் அது போகப்போவதில்லை,
ஆகவே இவ்வாறாகவேனும் நடந்ததே, அதை இரசித்து மகிழ்ந்திருக்கவேண்டியதுதான்
என இருவரும் சமாதானம் செய்து கொள்கின்றார்கள்.
3.
ஏலவே
குறிப்பிட்டமாதிரி, கு.ப.ராவுக்கு
ஆண்/பெண் உறவின் பல்வேறு
சிக்கல்கள் புரிகின்றது. அதைத் தெளிவாக முன்வைக்கவும் செய்கின்றார். ஆனால் அவரால் அந்தக் காலகட்டத்து நம்பிக்கைகளைத் தாண்டிப்போக அவரது 'வைதீக' மனம் விடாததால் அத்தோடு
தேங்கியும் விடுகின்றார். அதை வாசிக்கும் நாம்
கு.ப.ராவின் பலவீனமாக
இதைப் பார்க்காது கதைகள் எழுதப்பட்ட காலத்தின் மீது ஏற்றி வைத்துப்
பார்க்கும்போது அதையும் ஏற்று கு.ப.ராவின்
கதைகளை இரசிக்க முடிகின்றது.
அதேவேளை
புதுமைப்பித்தன் மரபுகளை உடைத்தும், கேலி செய்ததும் போலவன்றி,
கு.ப.ராவுக்குள் நிறைய
மரபார்ந்த பார்வைகளும் இருப்பதைப் பார்க்கமுடியும். அபார்ஷன் பற்றியெல்லாம் மிக பிற்போக்குத்தனமாய் கு.ப.ரா எழுதியிருக்கின்றார். ஆனால் அந்தக்
கதைகளினூடும் பெண்களின் உறுதிப்பாடுகளையும் அவ்வப்போது அவர் எழுதிவிடுகின்றார்.
'இயற்கையின் வெற்றி'
கதையில் ஒரு பெண், அபார்ஷனுக்கு
எதிராகத் தன் கணவன் கதைக்கின்றான்
என்பதற்காகவே வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். பிறகு வழமைபோல அந்தக் கதை கு.ப.ராவின் வைதீக மரபுக்குள் முடிந்துபோனாலும் 1930களிலேயே ஒரு பெண் அபார்ஷனுக்காய்
விவாதம் செய்து, தனது கொள்கைக்காக கணவனை
உதறித்தள்ளி வருகின்றாள் என்பது பாராட்டவேண்டியதுதான்.
அதுபோல
பலவற்றை மறுவாசிப்புச் செய்கின்றேன் என்றபேரில் 'ஆமிரபாலி' என்ற மோசமான கதையையும்
கு.ப.ரா எழுதியிருக்கின்றார்.
அன்று மிகப் பிரபல்யம் வாய்ந்த 'தாசியான' ஆமிரபாலி, புத்தர் ஞானம் பெற்று நாட்டுக்குள் திரும்பும்போது அவரைச் சந்தித்து பாதபூசை செய்ய விரும்புகின்றார். புத்தர் மற்றவர்களின் விருப்புக்கும் மாறாக ஆமிரபாலியைச் சந்திக்க தயார் என்கின்றார். அடுத்தநாள் காலையில் ஆமிரபாலி புத்தரைச் சந்திக்க ஏற்பாடுகளைப் பிறர் செய்யும்போது, இரவில் தூக்கமற்றிருக்கும் புத்தர் எவரும் அறியாமல் ஆமிரபாலியைச் விடிகாலை
புலரமுன்னரே சந்திக்கச் செல்கின்றார். புத்தரின் வருகையைக் கண்ட ஆமிரபாலி பாதபூசை
செய்ய முயல்கின்றபோது அதை மறுத்து எனக்கு
பிட்ஸை இடு என்கின்றார் புத்தர்.
இங்கே பிட்ஸை என்று எதை கு.ப.ரா குறிப்பிடுகின்றார் என்பது நமக்குப்
புரிகிறது. ஆசையைத் துறந்த புத்தனால் கூட ஆமிரபாலியின் முன்
தனது ஆசையைத் துறக்கமுடியவில்லை என்று விளங்கினாலும், பிற கதைகளில் தனக்கான
மரபுகளை உதறித்தள்ள முடியாது தடுமாறும் கு.ப.ரா, புத்தரின்
அற்புதமான சீடராக
மாறிய ஆமிரபாலியையும், புத்தரையும் இப்படி கீழிறக்கியிருக்கத் தேவையில்லை. அப்படி
ஆசையிருந்து புத்தர் ஆமிரபாலியுடன் கூடினாலும் அவரின் தெளிவுற்ற பிரக்ஞையுடந்தான் கலந்திருப்பார் என்பதை புத்தரை அறிந்தோர் அறிவோம்.
கு.ப.ரா சமகாலத்தை
எழுதிய அளவுக்கு நிறைய வரலாற்றுக் கதைகளையும் எழுதியிருக்கின்றார். அவர் உயிரோடு இருந்த
காலத்தில் வந்த மூன்று சிறுகதைத்
தொகுப்புக்களில் ஒரு தொகுப்பு முழுதும்
அரச/வரலாற்றுக்கதைகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கின்றார். புதுமைப்பித்தன் நூற்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதியிருந்தாலும், அவரது நல்ல கதைகள் ஐம்பதுக்கும்
குறைவாகவே இருக்கும். பலவற்றைப் பரிசோதனைக்கதைகளாக, கட்டுரைக்கு அண்மையாக நின்று எழுதியிருக்கின்றாரெனவே புதுமைப்பித்தனைக் கொள்வேன்.
தமிழ்ச்சிறுகதை
மேலெழத் தொடங்குகின்ற காலத்தில் புதுமைப்பித்தனும், கு.ப.ராவும்
எழுதியவை இன்றும் -80 ஆண்டுகள் கடந்தபின்னும்- உயிர்த்திருக்கின்றன என்பது குறித்து எந்த மாற்றுக் கருத்துக்களுமில்லை. ஆனால் புதுமைப்பித்தன் எழுதிய எல்லாமே உயர்ந்தவை என்று அவரைத் திருவுருவாக்கும்போது மட்டும், அதே காலத்தில் கு.ப.ராவும் சற்றுப்
பிந்தி கு.அழகிரிசாமி போன்றவர்களும்
புதுமைப்பித்தன் ஏறிய அதே சிகரத்தில்
இல்லாவிட்டாலும் இன்னொரு மலையில் ஏறி தமிழ்ச்சிறுகதை உலகைப்
பார்த்தவர்கள் என்பதையும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டாகவேண்டும்.
............................................
(நன்றி: 'அம்ருதா' கார்த்திகை, 2019)
0 comments:
Post a Comment