The Worrier's Guide to the End of the
World By Torre DeRoche
வாழ்க்கையில் எதுவும் நின்று நிலைப்பதில்லை.
புத்தரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் தர்மச்சக்கரத்தின் சுழற்சியில் நம்
வாழ்வு அசைந்து கொண்டிருக்கின்றது.
ஓடிக் கொண்டிருப்பதுதான் நதியின் இயல்பெனில், மாற்றங்களில் ஓர் அமைதியைக் காண்பதற்கான
பிரயத்தனங்களில்தான் மனிதர்களும் அலைந்துகொண்டிருக்கின்றார்களோ என எண்ணுவதுண்டு.
எலிஸபெத் ஹில்பேர்ட் எழுதிய 'Eat, Pray, Love' நூல் பயணம்
செய்யும் பலருக்கு ஒரு 'பைபிளாக'வே இருந்திருக்கின்றது. ஆனால் எல்லாக்
கனவுகளுக்கும் ஓர் எல்லையுண்டு. விவகாரத்துப் பெற்று பயணஞ்செய்த எலிஸ்பெத்,
பாளியில் புதிய காதலைப்
பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் முடியும் அந்நூலின் பிறகான எஸிசபெத்தின் வாழ்க்கை
நாம் எதிர்ப்பார்த்திருக்கவே முடியாத பல திருப்பங்களைக்
கொண்டது.
ரொரியின், உலகைச் சுற்றிய பயணநூலான 'Love with a
Chance of Drowning' வாசித்தவர்கள்,
அது எவ்வளவு அழகான
காதலும், பயணமும் சார்ந்த
வாழ்வென நினைப்பார்கள். ஆனால் மாற்றங்கள் அவர் வாழ்விலும் நிகழ்கின்றன. ஒரே
வருடத்தில் தனது தந்தையைப் புற்றுநோயினால்
இழப்பதுடன், அவருடைய ஒன்பது வருடக்காதலனும் பிரிய, ரொரியின். வாழ்க்கை தலைகீழாகிப் போகின்றது.
அந்த
இழப்புக்களைப் பற்றியல்ல, அந்த
இழப்புக்களிலிருந்து எப்படி மீண்டுவந்தார் என்பதை 'The Worrier's Guide to
the End of the World’' என்கின்ற நூலில் எழுதுகின்றார். முரண்நகையான
விடயம் என்னவென்றால் ரொரியின் முதல்நூல் வெளிவந்த காலகட்டத்தில், அவர் இந்த இழப்புக்களைச் சந்திக்கின்றார்.
ஆனால் நூலை வாசிக்கும் வாசகர்களோ, 'காதலும், கடல்பயணமும் சேர்ந்த உங்கள் வாழ்க்கை, எங்களுக்கு உற்சாகத்தைத் தருகின்றது' என எழுதுகின்றார்கள். அவர்களுக்குத் தனது உண்மை
நிலையைச் சொல்லவேண்டுமெனச் சில வாசகர்களுக்குத் தனது இழப்புக்கள் பற்றிப் பதில்
கடிதங்கள் எழுதுகின்றதோடு இந்த இரண்டாவது நூல் தொடங்குகின்றது.
இழப்புக்களோடு இருந்தால் சோர்ந்துவிடுவேன் என
ரொரி ஜரோப்பாவுக்கான பயணமொன்றைச் செய்கின்றார். அப்போதுதான் அவர் நியூயோர்க்கில்
சந்தித்த மாஷா என்கின்ற பெண் தான் செய்யப்போகும் பாதயாத்திரைகளைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு
வருகின்றது. மாஷா உலகு முழுதும் கால்களால் நடந்து சுற்றி வருவதே தன் கனவு என்கின்றார். ஐரோப்பாவுக்குச் சென்றிருந்த ரொரி, மாஷா தன் பாதயாத்திரையை இங்கிலாந்தின் கான்ரபெர்ரியில் தொடங்கி, பிரான்ஸைக் கடந்து இத்தாலிக்கு வந்துகொண்டிருப்பதை
அறிகின்றார். அந்தப் பயணம் ரோமில் முடிவதாக இருக்கின்றது.
அடுத்து வாழ்வில்
என்ன செய்வது என அறியாது இருக்கும் ரொரியை, தன்னோடு பாதயாத்திரையைச்
சேர்ந்து செய்ய மாஷா அழைக்கின்றார் ரொரியும் சம்மதிக்கின்றார். ஒழுங்கான தயார்ப்படுத்தல்களோ, உரிய காலணியோ இல்லாது மிலானிலிருந்து தொடங்கும்
பயணத்தின் தொடக்கத்திலேயே பாதங்கள் காயமடைய,
அது ரொரிக்கு உவப்பானதாக
இருக்கவில்லை. தொடர்ந்து நீண்டதூரத்துக்கு நடக்கமுடியாத சூழ்நிலை வரும்போது,
இடையில் ஒரு சைக்கிளை
வாங்கி ரொரி ஓடிக்கொண்டுவர, மாஷா
நடந்துவருகின்றார்.
இந்நூலின்
முதல்பாதி முழுதும் இத்தாலியின் நிலப்பரப்புக்களினூடாக அவர்கள் இருவரும்
நடந்துசெல்லும்போது நிகழும் சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன. ரோமுக்கான அடைதலில் அவர்களின் முதல் யாத்திரை முடிந்து இருவரும் விடைபெறுகின்றனர். மாஷா தனது கணவனுடன்
துருக்கியில் அடுத்த யாத்திரையைச் செய்யப் போகின்றார். ரொரி மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புகின்றார்.
சில மாதங்களின்பின்
மாஷா இந்தியாவில் பாதயாத்திரை செய்யப்போகின்றேன், தன்னோடு
இணையமுடியுமா என ரொரியிடம் கேட்கின்றார். அவர்கள் அப்படித் தேர்ந்தெடுப்பதுதான் காந்தி உப்புக்காய்
தாண்டிவரை நடந்து சென்ற பிரபல்யமான சத்தியாக்கிரக நடை. ரொரியும், மாஷாவும் இதற்கு முன்னர் இந்தியாவுக்குச்
சென்றவர்களுமில்லை. எப்படி இந்தியாவில் பெண்கள் பாதயாத்திரை செய்வதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றதென அறிந்தவர்களுமில்லை.
இருவரும் இந்தியாவிலிருக்கும் பயண நிறுவனங்களை
இந்தப் பாதயாத்திரையின் நிமித்தம் தொடர்புகொள்கின்றனர். ஒருவரும் ஒழுங்கான தகவல்களைக் கொடுகின்றார்களில்லை.
உண்மையில் காந்தி ஒருகாலத்தில் சென்ற தடத்தில் இப்போது அப்படி
நடந்துசெல்வதில் எவரும் ஆர்வம்
கொண்டவர்களாகவும் இல்லை. ஆனால் ரொரியும்,
மாஷாவும் வருவது
வரட்டுமென இந்தியாவுக்குப் போய் காந்தி வாழ்ந்த ஆச்சிரமத்திலிருந்து
பாதயாத்திரையைத் தொடங்குகின்றனர்.
இந்தியாவில்
பெண்களுக்கு இருக்கும் சூழல் இவர்களுக்கு சற்று அச்சுறுத்த, ஒரு பயண நிறுவனத்தை அணுகி தமக்கு பாதுகாப்புக்கு ஒரு 'செக்கியூரிட்டி'யை
அனுப்பமுடியுமா எனக் கேட்கின்றனர். ஒருவரை உங்களுடன் அனுப்புகின்றோம், ஆனால் அவர் உங்களுக்கு ஆபத்து வந்தால்
தடுத்துநிறுத்துவார் என உறுதிசெய்யமுடியாது. உங்களுக்கான மொழிபெயர்ப்பாளராகவும்,
பாதை காட்டுகின்றவராகவும் அவர் இருப்பார் என ஒருவரை அந்தப் பயண நிறுவனம் அனுப்பிவைக்கின்றது..
காந்தியைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருந்த ரொரி,
இந்தப் பயணத்தின் மூலம் காந்தியைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்கின்றார். துணையாக கூட வந்த இந்திய இளைஞன் தொடக்கத்தில் ஒத்த அலைவரிசைக்கு
வராவிட்டாலும், அவரும் இவர்களைப் போன்ற ஒரு பயணியாக மாறி
புகைப்படங்களை வரும் வழியெங்கும் எடுத்துவருகின்றார். ரொரி இந்தப் பயணத்தை நடந்து செய்ததாலோ என்னவோ, இந்தியாவின் அசல் முகம் இதில்
விபரிக்கப்பட்டிருக்கின்றது. அதீதமான மனோரதியத்துக்கு இட்டுச்செல்லாமலும், ஆகவும் தரம் தாழ்த்தப்படாமலும் இந்தியாவின்
இன்றைய நிலைமையை ரொரி நேர்மையாக எழுதியிருக்கின்றார்.
நடந்தே
போகின்றோம் என்று சொன்னாலும் விடாது துரத்தும் ஓட்டோக்காரர்களின் தொல்லை, பெண்களாக இருப்பதால் உற்றுப் பார்க்கும்
ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்கள், இவற்றை மீறி
இவர்கள் ஏன் இப்படி தொலைதூரம்
நடக்கின்றார்களென அறியத்துடிக்கும் மக்கள், உட்கிராமங்களில் இறங்கிச்செல்லும்போது இதுவரை
வெள்ளைத்தோல் உள்ளவர்களைப் பார்க்காத கிராமத்தவர்களின் வியப்பு, பிறகு நேசமாகி உணவையே பகிரும் அவர்களின் அந்த
அப்பாவித்தனம், நடக்கும்
திசையெங்கும் இவர்களைப் போர்வையாக மூடும் புழுதி என எல்லாம் இந்நூலில் நுண்மையாக விபரிக்கப்பட்டிருக்கின்றது.
காந்தி உப்பு
சத்தியாக்கிரகத்துக்காக நடந்த
பாதையினூடாக நடப்பதால், காணுபவர்களெல்லாம்
'உங்களுக்கு காந்தியின்
எந்தக்கொள்கை' பிடித்தது எனக்கேட்கும்போது
காந்தியை அவ்வளவு வாசிக்காததால் தொடக்கத்தில் ரொரி அதைச் சமாளிப்பவையெல்லாம் சிரிப்பை வரவழைப்பவை. இன்றைய இந்தியாவில்
கிட்டத்தட்ட கைவிடப்பட்டிருக்கும் காந்திய ஆச்சிரமங்கள் பலதில் தங்கி, காந்தி எவ்வாறு அந்நியமாகிக்கொண்டிருப்பதையும்
ரொரி இந்நூலில் தொட்டுச்
செல்கின்றார்.
காந்தியை அவ்வளவு அறியாமல் இந்தப் பயணத்தைத் தொடங்கும் ரொரி
காந்தியின் எல்லாப் பக்கங்களையும் பின்னர் அறிந்துகொள்கின்றார். காந்தியின்
எளிமையும், விடுதலைக்காக
அஹிம்சையைக் கைக்கொண்டதும் அவரை ஈர்த்தாலும், காந்தி பெண்களை முன்வைத்து செய்த பரிசோதனைகளும்,
காந்திக்குள்
பெண்களைப்பற்றி இருந்த சனாதனமான எண்ணங்களும் ரொரியைத் தொந்தரவு செய்கின்றன.
காந்தியை காந்தி என விளித்து இந்தியர்களிடம்
பேசும்போது, அப்படிச்
சொல்லக்கூடாது அவரை 'மகாத்மா' என்றோ அல்லது 'காந்திஜி' என்றோ அழைக்கவேண்டுமென ரொரிக்குச் சொல்லப்படுகிறது. அதைக் கேட்டு அப்படியே பாவித்து எழுதுகின்ற ரொரி,
இறுதியில் அப்படி எழுதாது, வெறும் காந்தியாக மட்டும் காந்தியின் பெயரைக்
குறிப்பிட்டு எழுதுகையில், காந்தியும் சில
உன்னதஙகளை எட்டினாலும் அவரைப் புனிதப்படுத்தவேண்டியதல்ல, ஒருவகையில் அவரும் பலவீனங்களுள்ள சாதாரண மனிதரே என ரொரி சொல்லாமல் சொல்கின்றார் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம்.
காந்தியைத்
திருவுருவாக்கி தூர விலக்கி வைக்காது, அவரோடு உரிமையுடன் உரையாடலைச் செய்வதற்கு ரொரிக்கு இது
உதவுகிறது. காந்தியை மகாத்மா ஆகாதாக்காமல் ரொரியைத் தடுப்பது, காந்தியின் வர்ணாச்சிரம புரிதல்களும், சாரதாபாயையும் மனைவியாக வைத்துக்கொண்டு பிறபெண்களோடு
அவர் படுக்கையில் செய்துகொண்ட சத்தியசோதனைகளும் ஆகும். காந்தியே இவற்றை வெளிப்படையாக தனது நூல்களில் பேசியதால் அவர் தன்னை மகாத்மாவாக ஆக்குவதை ஒருவகையில் தடுத்துநிறுத்தியிருக்கின்றார் எனவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு காந்தி
நடந்தபாதையில் நடந்து, இறுதியில் தண்டியை இவர்கள் மூவரும் அடைகின்றனர். இடையில் சேரிகளும், மாடமாளிகைகளும் அருகருகில் இருக்கும்
முரண்களையும் ரொரி விபரிக்கின்றார். ஏழை மக்கள் தம் வறுமைகளுக்கிடையிலும் மகிழ்ச்சியாக இருக்க, பிரமாண்டமான பலகைகளுடன் இங்கே 'ஆடம்பரவசதிகள்' கிடைக்குமென மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கஷ்டப்படும் பணக்காரத் தெருக்களையும்
மெல்லியதாய் ரொரி பகிடி
செய்கின்றார்.
தண்டியில்
பயணத்தை முடிக்கும்போது, வைனுடன்
கொண்டாடலாமென்றால் குஜராத் மதுவிலக்கு மாநிலம் என்பது இவர்களுக்குத் திகைப்பைக்
கொடுக்கின்றது. எப்படியெனினும் மதுவுடன் கொண்டாடவேண்டுமென அயல் மாநிலத்துக்கு
வாகனம் பிடித்துச் செல்கின்றார்கள். அதுவரை தெருக்களில் சாப்பிட்டுவந்த ரொரியின் உடலுக்கு எதுவுமே நடக்காது நன்றாகவே இருக்கின்றார்,
ஆனால்
பயணம் முடித்து ஒரு நல்ல ஹொட்டலில்
சாப்பிடும்போது உடலுக்கு
ஒத்துவராது போகின்றது. இதனால், ஏற்கனவே திட்டமிட்டமிருந்த இந்தியாவில் மற்ற இடங்களைப் பார்க்கும் பயணத்தையெல்லாம் ஒத்திவைத்து ஒரு வாரமளவில்
ஓய்வெடுக்கவேண்டி வருகின்றது. இறுதியில்
மூவரும் அவரவர் திசையில் பல்வேறு வகையான அனுபவங்களுடன் பிரிந்துசெல்ல இந்த நூல்
முடிவடைகின்றது.
…………………………………………………………………………….
(நன்றி: காலம் இதழ் - 54)
0 comments:
Post a Comment