ஒரு கிழமை விடுமுறை. வழமையான நாட்களில் செய்யமுடியா வேலைகளைச்செய்து முடிக்கவேண்டிய பட்டியல் இருந்தும், மனம் ஏனோ "வேலை நாட்களிலும் ஓட்டம், இப்போ விடுமுறையிலுமா?" எனக்கேள்வி கேட்டது. இதைவிட்டால் ஆறுதலாக இந்த வேலையை முடிக்க முடியாது.மனமும் மூளையும் ஒரு மையப்புள்ளியில் கையை குலுக்கிக்கொண்டன.
பாதிநாள் வேலைக்காக, பாதிநாள் எனக்காகின.குணா கவியழகன் எமக்காய் அள்ளிவந்த புத்தகங்களின்முன் ஒரு தேடுதல்.எந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் மீண்டும் மூளைக்கும் மனத்திற்குமான பரிமாற்றம்.
இந்த நிலையை சுலபமாக்கியது என் கணவரின், "மெக்ஸிக்கோ நாவலை படித்துப்பாரும் உமக்கு பிடிக்கும்"என்ற பரிந்துரை.
என் முன்னே அழகாய் விரிந்தது அந்நகரம், காதலின் கொஞ்சலோடு. அந்த இரவுப் பொழுதுகளினுள் கலந்திருக்கின்ற கலாசார வடிவங்களைக்காதலில் தோய்த்து அந்த நேரத்திற்கு இன்னும் அழகு சேர்த்திருந்தார்.
இந்த நாட்டின் பெயர் கேட்ட மாத்திரத்தே இளங்கோ சொன்னது போல போதைவஸ்து ,மாஃபியா கூட்டம் ,துப்பாக்கி சூடுகள் இவைதான் அந்த மண்ணிற்கான பேசும் பொருளாயின. எந்த ஒரு நாடும் சகதியுடுத்திய பக்கங்களை கொண்டிருந்தாலும் அந்தந்த நாட்டிற்குரிய செழுமையையும் கொண்டுதான் இருக்கின்றன.
அதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவம் உள்ளது போல, நாடுகளும் தனித்துவம் கொண்டிருப்பது புவியியல் சிறப்பு.அதனை இளங்கோ பல இடங்களில் எம் கைபிடித்து ,பேனா கொண்டு ஒரு சுற்றுலா கூட்டிச்செல்கின்றார்.
மெக்ஸிக்கோ எனக்கு தெரியாத இடம். ஆனால்,அவர் கதை பேசிச்செல்கின்ற விதம் என் கற்பனையில் அதற்கு ஒரு வடிவம் தீட்டி என்கூடவே வருகின்றது.
சில நாவல்களுடன் எம்மை வலிந்து இணைக்க வேண்டியிருக்கும், இடையிடையே அந்த கதையைவிட்டு விலகியும் சென்றுவிடுவோம். ஆனால் இந்த நாவலெனும் ஆற்றுக்குள் ஒரடி வைத்தேன்,என்னை இழுத்து மூழ்க வைத்தது.
மெக்ஸிக்கோவைப் பற்றிச்சொன்னால் ஃபிரீடாவை பற்றிச் சொல்லாமல் நகரமுடியாது.அதிசயமான பிறப்புக்களில் அவளும் ஒருத்தி.பேசப்படவேண்டிய பெண் அவள்.
நாவலின் நகர்வு என் மனதில் ஒரு முடிவை பின்ன தொடங்கியது. ஆனால் அந்த முடிவின் மாற்றம் நினைத்தே பார்த்திராத ஒரு வளைவுக்குள் புகுந்து முடிகிறது. அதுவே இந்நாவலை வேறு ஓரிடத்தில் தூக்கி நிற்க வைத்துவிட்டது. என் மனதிற்கு பிடித்த நாவல்களுக்குள் இதுவும் நுழைந்து கொள்கிறது.
மெக்ஸிக்கோ நகரை பார்க்கும் ஆசையையும் தூண்டிவிட்டு முடிந்து போகிறது இக்கதை. எனது விடுமுறையை இனிதாக்கிய, இந்த நற்படைப்பைத் தந்த இளங்கோவிற்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.
(via Yogakumari Lingeswaran)
Jun 11, 2020
0 comments:
Post a Comment