கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பசுமையாய் வாழ்பவர்கள்

Wednesday, October 07, 2020

 சுமை எப்போதும் மனதுக்கு நிறைவளிப்பது. பச்சை வர்ணத்தினூடாக ஒரு செழிப்பைப் பார்க்கின்றோம். செழிப்பு என்பது முகிழ்தலோடு தொடர்புடையது. அதிலும் உள்ளம் வெறுமையெனும் தரிசால் மூடப்பட்டுக் கொண்டிருக்கும்போது பசுமை கிளர்த்தும் ஆனந்தம் சொல்லிமாளாது.


இவ்வாறு பசுமைக்கு நம் மனோநிலைகளை மாற்றிவிடக்கூடிய வல்லமை இருப்பினும், எனக்கு உரிய பருவம் பச்சை வர்ணம் மூடியிருக்கும் கோடை காலம் அல்ல.


எனது விருப்புக்குரியது பல்வேறு வர்ணங்கள் சிதறிப் பரவும் இலையுதிர்காலமாகும். ஆனால் இதைப்போல அது உற்சாகத்தைத் தரும் பருவமல்ல. Melancholyயான எல்லா உணர்வுகளும் கலந்து நகரும் காலமென அதைச் சொல்லலாம்.


அதற்காய் பசுமை விலத்தி நடப்பவன் என்றல்ல அர்த்தம். கனடா போன்ற நான்கு பருவங்கள் தெளிவாய் இருக்கும் நிலப்பரப்பில் ஒவ்வொரு காலமும் அழகுடையவைதான். அதிலும் மனது உள்ளே பிரச்சினைகளால் சிக்கி உழலும்வேளையில் விரைவில் வரும் அடுத்த பருவம்போல சிக்கல்களும் நம்மைவிட்டுப் போய்விடுமென மாறும் பருவங்களே நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும்.



ன்றைய கொரோனாக் காலம் பலரை வீட்டுக்குள் முடக்கிவிட்டிருக்கின்றது. ஏற்கனவே பிரச்சினைகளில் உழன்றுகொண்டிருந்தவர்க்கு இன்னும் கொடுங்காலமாய் இது ஆகிக் கொண்டிருக்கின்றது. தொலைபேசி எடுத்துப் பேசும் நண்பர்கள் எனக்கு கைவிரல்கள் அளவுக்குள்ளேயே வருபவர்கள் என்றாலும், அவர்களில் பலரே துயர்களின் சுழல்பாதைகளில் சிக்கிக்கொண்டிருப்பதை அவர்களின் பேச்சினூடாக அறிந்துகொண்டிருக்கின்றேன். ஒரு கட்டத்துக்கு மேலேயே எதுவுமே செய்யமுடியாக் கையாலாகத்தனத்துடன் இந்தக் கதைகளைக் கேட்பதே பெரும் உபாதையாக மாறிக்கொண்டிருக்கிறது.



ஆகவே என்னை இதிலிருந்து விடுபடச் செய்வதற்காகவேனும் பசுமையை நோக்கி நடக்கவேண்டியிருக்கின்றது. சிலர் அப்படி பசுமைக்குள் நடக்கையில் சொற்கள் உருண்டு திரண்டு, கதைகளாகவும் கவிதைகளாகவும் உருவாகின்றதாகச் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கு இந்தக் கொடுங்காலத்தில் மனிதர்கள் இன்னுமின்னும் சிலந்திவலைபோல ஏன் தம் வாழ்க்கையைச் சிக்கலாக்கின்றனர்கள் என்றே நடக்கும்போது எண்ணங்கள் பரவித் தொடங்கும். மேலும் நான் மனவுளைச்சல்களில் உழன்றுகொண்டிருந்த பொழுதுகளில் என்னை அரவணத்துத் தேற்றியவர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.



ஏனெனில் பகிரலை விட, செவிமடுத்தல் என்பது இன்னும் பொறுமை வேண்டிய ஒரு நிலை. அதிலும் ஒருவர் என்னால் துயர்களிலிருந்து விடுபடவே முடியாது என்று ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டல் என்பது எளிதானதுமல்ல. ஆனால் அவ்வாறுதான் எல்லோரும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு விடுபட்டு போகவேண்டியிருக்கின்றது. எல்லாப் பாதைகளும் அடைபட்டிருக்கின்றதென சுயபச்சாபத்தில் ஏங்கும் காலத்தில் ஒரு சிறு துண்டை எடுத்தெறிந்துவிடுவதன் மூலம் மோதித் திறக்கமுடியாக் கதவுகளெல்லாம் திறக்கப்பட்டிருக்கின்றது. பிறகு தெரிவதெல்லாம் சூரிய ஒளியில் பச்சையாகவும், பொன்னிறமாகவும் மிளிரும் பசுமை. பசுமை என்பது துளிர்ப்பு. புது வாழ்க்கையிற்கான முகையவிழ்ப்பு. வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை அதிராமல் செப்பும் பெருஞ்சொல்.




திரும்பி பசுமைக்குள் நடந்து வந்துகொண்டிருக்கின்றேன். சட்டென்று ஒரு அதிசயம் நிகழ்ந்தால் போல் அது நடந்தேறுகிறது. நான் இன்னும் மூச்சை இழுக்கின்றேன். இன்னும்...இன்னும்!

 

.ஜேயிற்கு (கனகரட்ன) அவரின் இறுதிக்காலத்தில் சுவை இல்லாமற் போயிருக்கின்றது. எனக்கு இரண்டு வருடங்களின் மூக்கில் நிகழ்ந்த அறுவைச் சிகிச்சையின் பின் வாசங்களை அறவே உணரமுடியாது போயிருந்தது. எந்த நறுமணமோ, நாற்றமோ எதையும் அனுபவித்தறியமுடியாத ஒரு வெறுமையான நிலை அது. இந்தக் காலையில் நறுமணத்தை. நாற்றத்தை ஒரளவு மீண்டும் உணரத்தொடங்கினேன். இது எனது பசுமையின் ஒரு துளிர்ப்பு. மகிழ்ச்சியின் நறுமணம்.



வீடு திரும்பும் எனக்காய் ஒரு சிறுசெய்தி காத்திருக்கின்றது. 'உன்னோடு கதைக்கவேண்டும் போல இருக்கிறது. அழைக்க முடியுமா?'. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் நான் தினம் கதைப்பவன் அல்ல. தொடக்கத்தில் நீ என்னோடு நாள்தோறும் கதைக்கவேண்டும் என்று கேட்டு நிறையச் சண்டைபிடித்து இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்கள் என்பதால் விரும்பியபோது மட்டுமே இப்போது பேசுவோம்.



பேச்சு மூன்று மணித்தியாலத்துக்கு மேலே நீண்டபடி இருந்தது. கடந்தவருடப் பிறந்ததினத்தின்போது அவர் எழுதி அனுப்பியதை தற்செயலாகக் கண்டுபிடித்து, இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றீர்களே என்று அவருக்கு அதை வாசித்துக் காட்டினேன். ஏனெனில் நாங்கள் கதைக்கும்போது நாயே, பேயே அதுவும் இயலாதபோது f wordம் சகஜமாகப் பேசும் ஒருவர் இப்படி உருகி எழுதியிருக்கின்றார் என்றால் சற்று ஆச்சரியந்தான்.



இப்படிப் பேசியபடி 2 மணித்தியாலங்களைக் கடந்தபோதுதான் அவர் கூறினார், 'இன்று மிக இயலாதபட்சத்தில் தற்கொலைக்கு முயன்றேன். எல்லாத் தயார்ப்படுத்தல்களும் முடிந்த நிலையில் வந்த தாயாரின் தொலைபேசி அழைப்பு என்னைக் காப்பாற்றியது' என்றார். இவ்வளவு நேரமும் அதன் சுவடே தெரியாமல் அவரால் என்னோடு கதைக்கமுடிந்ததென்பதில் எனக்குத் திகைப்பு என்றாலும் அவரை கடந்த சில வருடங்களாய் ஒரளவு அறிவேன். எப்போதும் அழுதுகொண்டிருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஒரு துயரம் வந்தால் அதிலிருந்து மீள நாட்களோ வாரங்களோ எடுப்பது போலன்றி, அவர் ஒருநாளுக்குளேயே தன்னை வேறொரு சூழலுக்கு மாற்றிக்கொள்ளும் அற்புதமான மனோநிலை கொண்டவர்.



இதையே அவருக்கும் சொன்னேன். ஒருநாளிலேயே இவ்வளவு துயரம் நடந்தபின்னும் இப்படி உங்களால் சிரிக்கமுடிகிறது என்பது உங்களுக்கு கிடைத்த அற்புதமான விடயம். எனக்கெல்லாம் அப்படியில்லை என்று கூறியபடி தற்கொலைக்கு முயன்ற ஒருவனின் கதையை அனுப்ப அவர் தன்குரலிலேயே வாசித்துக் காட்ட இந்த இரவு நமக்கு வேறொன்றாக மாறத்தொடங்கியது.


 

இறுதியில், 'நீங்கள் இன்று இல்லாமல் போயிருந்தால், நான் உங்கள் கடிதத்தை வாசித்துக் காட்டும் சந்தர்ப்பமோ அல்லது என் கதையை நீங்கள் வாசிக்க உங்கள் குரலில் நான் கேட்கும் அனுபவமோ நமக்குக் கிடைத்திருக்காது. நாமில்லாது போகும் காலம் இயற்கையாய் வரும்வரை சற்றுக் காத்திருப்பதில் என்ன குறைந்து விடப்போகிறது. பதின்மத்தில் இப்படி முயற்சித்த ஒருவன் இப்போது எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கின்றான். அதுமட்டுமில்லை அதற்கான எல்லாக் காரணிகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவன் வாதைகளைப் புரிந்துகொள்ளாமல் எதையும் எளிதாக சொல்லமாட்டான் என்றேன்.




சுமை. இப்போது நம் மனம் முழுதும் பச்சையம். சூரியனின் ஒளியில் தகதகவென ஒளிரும் பொன்மஞ்சள் பசுமை.



ஆம் நாங்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.



பசுமை கோடையின் பின் மறையும். இலைகள் அடுத்த பருவத்தில் வேறு வர்ணங்களை எடுக்கும். காற்றும் பெருமழையும் இலைகளை உதிர்த்துக் கொட்ட பனிக்காலம் வரும். பச்சையம் இழந்த மரங்கள் புதிய இலைகளுக்காய் காத்திருக்கும்.



மீண்டும் முகையவிழ்ப்பு. பசுமை. சுடரில் ஒளிர்தல். ஆனால் அது வேறொரு பிறப்பு. வேறொரு நாம்.



ஒரு வாழ்வை வாழ்ந்து பார்த்த இதத்தில் நாம் இலைகளாய் உதிர்ந்திருப்போம். சருகுகளாய் அடையாளமற்றுப் புதைந்து போயிருப்போம். அதுவரைக்கும் நாம் பசுமையில் வாழ்பவர்கள்.

...............................

(July 18, 2020)

0 comments: