கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இச்சாவும், சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்..

Monday, December 28, 2020

1.

கடந்த சில நாட்களாய் இந்த இரண்டு நாவல்கள் பற்றிய விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று இன்னொன்றின் பாதிப்பில் எழுதப்பட்டது என்று எங்கையோ புகையத் தொடங்கியிருக்கின்றது. இதை எழுதியவர்களுக்குரிய இரண்டு தரப்புக்களும் தமது சட்டங்களுக்குள் நின்று களமாட, இன்னொரு தரப்போ இந்தப் பிரதிகளை வாசிக்காது தமக்கான புதிய புனைவுகளை இந்தப் பிரதிகளை முன்வைத்து புனைந்து கொள்ளவும் தொடங்கிவிட்டனர்.


நமது தமிழ்ச்சூழலில் எழுதப்படுபவற்றை முழுமையாக வாசிக்காது முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள் நாம்.  அத்தோடு நான் இந்தத் தரப்புக்களின் வாதங்களுக்குள் போய் ஆராய்ந்து பார்க்கவும் விரும்பவில்லை. இந்த இரண்டு நாவல்களையும் இப்போது வாசித்துவிட்டதால் என் வாசிப்பில் தோன்றிய சிலதைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.


இந்த நாவல்களின் சில பகுதிகளில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை மறுக்கத் தேவையில்லை. ஆனால் அது ஒன்றை இன்னொன்று தழுவியதால் வந்ததென எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. அது - நமது ஈழப்போராட்ட வரலாறு என எதை எழுதினாலும் ஒத்தபுள்ளிகளில் இசைந்து வரக்கூடிய பகுதிகளாகும். இந்த நாவலில் உறுத்தக் கூடிய ஒற்றுமை, ஒரு போராளிப்பாத்திரத்தின் இரண்டு விதமான வாழ்க்கை முறை சொல்லப்படுகின்ற பகுதிகளாகும். அதாவது போராளி/போர்க்கால வாழ்வு, பின்னர் புலம்பெயர் வாழ்வு. 


போராளியின் வாழ்க்கையெனச் சொல்லப்படும் பகுதிகளில் கூட பெரிதாக ஒற்றுமைகளைக் காணவில்லை. எங்கே ஒற்றுமை துருத்திக் கொண்டிருக்கின்றது என்றால், இந்தப் போராளிப் பாத்திரம், போர் முடிந்தபின் புலம்பெயர்ந்த ஆண் ஒருவரால் இந்தப் பெண் போராளி தடுப்பு முகாமில் இருந்து காப்பாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் பகுதிகளாகும். அதேபோன்று இந்த இரண்டு நாவல்களிலும் ஆலா/சாதனா பாத்திரங்களின் புலம்பெயர் வாழ்வுப்பகுதி விரிவாகச் சித்தரிக்கப்பட்டாலும் இறுதியில் இது உண்மையில் நடக்கவில்லையென சந்தேகத்தன்மையுடன் நாவலில் கட்டியமைக்கப்பட்ட பகுதிகளை உடைத்து விழுத்துகின்ற பகுதிகளிலும் ஒத்தவகையில் இருக்கின்றன.


இதைத் தவிர்த்து இந்த நாவல்கள் இரண்டுமே எழுதப்பட்ட/வடிவமைக்கப்பட்ட அமைப்பு முற்றிலும் வேறுவிதமானவை. ஆங்கிலத்தில் 'நீங்கள் அப்பிள்களையும் தோடம்பழங்களையும் ஒப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அவ்வாறே இந்த இரண்டு நாவல்களையும் தனித்தனியாக வைத்து பிரதிக்குள் வைத்து அலசிப் பார்க்கவே விரும்புவேனே தவிர ஒன்றை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கொள்ள என் வாசிப்பின் வழி விரும்பமாட்டேன். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஷோபாசக்தியினதும், சேனனினதும் முன்னைய நாவல்களோடு அவர்களின் நாவல்களை ஒப்பிட்டுக் கொள்ள விரும்புவேனோ தவிர இந்த இரண்டு நாவல்களையும்  அருகருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு ஒப்புதலுமில்லை.


2.


ஷோபாவின் 'இச்சா'வினை வாசித்து அன்று எழுதிய சிறுகுறிப்பில், 'இச்சா' தவிர்க்காது வாசிக்கவேண்டிய நாவல் எனினும், 'இச்சா'வினை ஷோபாவினது முக்கிய நாவல்களில் ஒன்றாக முன்வைக்கமாட்டேன் என்றும் எழுதியிருப்பேன். ஏனெனில் எனக்கு அவர் அதற்கு முன் எழுதிய 'பொக்ஸ்: கதைப்புத்தகம்' , 'இச்சா'வினை விட முக்கியமானதாக இருந்தது. அது என் வாசிப்பு. இன்னொருவர் என் வாசிப்பை மறுத்து 'இச்சா' மிகச்சிறந்த நாவலென தனது வாசிப்பை முன்வைக்கலாம். அவ்வாறுதான் ஒவ்வொரு படைப்பும் தனக்கான இடத்தை காலத்தின் மேல் வைத்து நகர்ந்து கொள்ளும்.


சேனனின் 'சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களை' வாசிக்கும்போது நான் அவரின் 'லண்டன்காரரை' முன்வைத்தே என் வாசிப்பை முன்வைப்பேன். அந்தவகையில் இந்தப் புதிய நாவல் அதைவிட்டு முன்னகர்ந்திருக்கின்றது எனச் சொல்வேன். லண்டர்காரருக்கு ஒரு புனைவுக்கான அமைதி வந்து சேராததைப் போல, இந்த நாவலிலும் அதே சிக்கல் இருக்கின்றது என்பதையும் சொல்வேன். ஆனால் பன்மைக்குரல்களை ஒலிக்கவைத்ததில், அதிலும் தொடர்ந்து தமிழில் யதார்த்தக் கதைகளை முக்கியமாய் நமது போராட்டப் படைப்புக்களில் அலுக்க வைத்து எழுதிக்கொண்டிருப்போர்க்கு இடையில்- சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் கவனத்துக்குரியது. அதேசமயம் அந்தப் பன்மைக்குரல்கள் வெறும் வாக்குமூலங்களாகவும், பின்னர் கலைத்துப் போடுகையில் கூட அவை அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது, முழுமையடையாது வீணே உதிர்ந்து போவதையும் காண்கின்றோம். 


இந்த நாவலைத் தொடங்கமுன்னர் சேனன் நிறையப் பேர்களுக்கு விரிவாக நன்றி சொல்லி, சில பக்கங்களை அதற்காய் ஒதுக்கி இருப்பார். இதை இவ்வளவு பேர் வாசித்தார்களா, கருத்துக்களைப் பகிர்ந்தார்களா என  வியப்பேற்பட்டாலும், ஆகக்குறைந்தது இந்த நீண்ட பட்டியலில் இருப்பவர்களில் ஒருவராவது இந்த நாவலில் இருக்கும் எழுத்துப்பிழைகளைப் பார்ப்பதற்காய்க் கொஞ்ச நேரம் செலவழித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தளவு எழுத்துப் பிழைகள்.  சாதாரணமாகப் பாவிக்கின்ற உண்மை, இலையான் என்று வருகின்ற இடங்களிலேயே உ'ன்'மை, இ'ளை'யான் என்று  எல்லா இடங்களில் வரும்போது அந்தப் பட்டியலில் இருப்பவர்களை, இதையெல்லாம் கவனிக்காது வாசித்து நன்றிகொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன்.


நான் 'இச்சா'வுக்கு இன்னொரு இடத்தில் வைத்திருந்த விமர்சனங்களில் முக்கியமானது, பின்னட்டையில் பாவிக்கப்பட்ட சேலையணிந்த சிறுமி ஒருவரினது புகைப்படம். புனைவு என்று எழுதிவிட்டு இப்படியெல்லாம் வாசகரைச் சுத்துமாத்துச் செய்யத் தேவையில்லை என்று சொல்லியிருப்பேன். ஷோபாவைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்து எழுதினாலே அவருக்காய் எல்லா இடங்களிலும் பேசவல்ல நண்பரொருவர் வந்து அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் இப்போது இந்தியாவில் இருக்கின்றார். அவரின் அனுமதி கேட்டுத்தான் இதில் பிரசுரிக்கப்பட்டதென்றும் அந்தப் பொழுதில் கூறியிருந்தார்.. அப்படிப் பார்த்தால் ஒரு எளிய வாசக மனம், இந்தப் பெண்தான் அந்த ஆலா அல்லது ஆலாவின் சாயல் என நினைத்துக் கொள்ளலாம். 


அப்படியெனில் யாரோ தெரிந்த பெண்ணுக்கு நடந்த கதையைத்தான் ஷோபா எழுதியிருக்கின்றார் என முடிவு செய்வதற்கான வாசிப்புச் சுதந்திரமும் இதில் இருக்கிறது.  அந்தவகையில் வைத்துப் பார்த்தால், அதே பெண்ணின் கதை சேனனுக்கும் தெரிந்திருக்கலாம் (ஒரே ஊர்க்காரர், ஒருவகையில் இருவரும் உறவினர்கள் என்றும் சொல்கிறார்கள்). ஆக தெரிந்த ஒரு பெண்ணின் கதையைத்தான் இருவரும் எழுத முயன்றிருக்கலாம் என ஒருவர் வேண்டுமெனில் ஒரு வாதத்திற்காய்ச் சொல்லலாம். ஆகவேதான் புனைவைப் புனைவாக எழுதுங்கள். Auto biography ஐ  Auto biography  ஆக எழுதுங்கள்.  Memoirஐ Memoirஆக எழுதுங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன். ஆட்டுக்குள் மாட்டைக் கொண்டு வந்து விட்டால்  எப்போதேனும் வேறு திசையில் இதைபோலச் சிக்கல்கள் வந்து சேரக்கூடும்.


3.


என் வாசிப்பில் இந்த நாவல்களில் சில வகையில் ஒற்றுமைகள் இருக்கின்றன என்று சொல்வேனே தவிர, இச்சா, சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களின் பாதிப்பில் எழுதப்பட்டதெனச் சொல்ல அவ்வளவு எளிதில் துணியமாட்டேன். அப்படிப் பார்த்தால், இன்னொருவகையில் ஷோபாவின் பாதிப்பில் கதைகளும் நாவல்களையும் எழுதத் தொடங்கியோர் என்று கூட ஒரு பட்டியலிட முடியும். நாம் அங்கெல்லாம் போகத் தேவையில்லை.

 

நிலையற்ற யுத்தக்காலங்களில் பல்வேறு வதந்திகளும்/புனைவுகளும் இயல்பு என்பதை -அது அப்படித்தான் என- எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டு நாவல்கள் ஒத்தசாயலாக இருக்கின்றது என்று பேச்சு வந்தால், கொஞ்சம் பொறுமையாக இருந்து இரண்டு நாவல்களையும் வாசித்துவிட்டு கருத்துக்களைச் சொல்வதால் எதையும் நாம் இழக்கப் போவதில்லை. 


மற்றது இந்த எழுத்தாளர்களின் ஆதரவாளர்கள், இந்த இரண்டு நாவல்களையும் வாசித்து ஒப்பிட்டு எழுதாமல் விட்டால் கூடப் பரவாயில்லை, ஆகக்குறைந்தது ஏன் தமக்கு இந்த நாவல்கள் முக்கியமானது என்று விரிவாக எழுதுவது அவர்கள் தமக்குப் பிடித்த படைப்பாளிக்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அவ்வாறு எழுதப்படுவதை வாசித்து நமது நேரமும் பிரயோசனமாகப் போனது என்று நாமும் அவர்களை நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்வோம்.

....................................................

(Sep 06, 2020)

0 comments: