நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சூரன் சுயசரிதை

Saturday, December 26, 2020

வரலாற்றை வாசித்தல் - 05 

1.

"எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள் கோயில்களுக்கு வரமாட்டேன். ஏனெனில் உங்கள் கோயில்களுக்குள்ளே சுத்தம் மிகக்குறைவு" என்று ஒடுக்கப்பட்ட மக்களை   கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கலாமா என்ற விவாதங்கள் 1940களில் நடந்தபோது சூரன் அவர்கள் கூறிய கருத்து ஒருகாலத்தில் பிரபல்யமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தீர்க்கமாய்க் கூறிய சூரன் நம் இலங்கை வரலாற்றில் முக்கியமானவர். ஒருவகையில் பண்டிதர் அயோத்திதாசர் போல மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்காரர்  என அவரைச் சொல்லலாம். சூரனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் 1900களின் தொடக்ககாலங்களில் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்கலாம். 


சூரனின் முக்கியத்துவம் என்பது, ஒடுக்கப்பட்டவர்கள் சைவப்பாடசாலைகளில் கற்க மறுக்கப்படுகின்ற கொடுஞ்சூழலில், அவர்  தனது மக்களுக்காக 1914ம் ஆண்டு கட்டுகின்ற பாடசாலையாகும். பின்னர் தேவரையாளி இந்துக்கல்லூரியாக அது வளர்ச்சி பெற்று இன்று நிமிர்ந்து நிற்கின்றது. அதைக் கட்டியதோடு அல்லாது, அந்த நிகழ்வுகளை அப்படியே எழுத்தில் பதிவு செய்திருப்பதே நமக்கு இங்கே முக்கியமாகின்றது. கிட்டத்தட்ட இது எழுதப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகே அச்சில் (2004இல்) ஏறுகின்றது  என்றாலும் நமக்கு ஒரு அரிய ஆவணம் சாட்சியமாக 'சூரன் சுயசரிதை' கிடைத்த மகிழ்வு வருகிறது.


சூரன் காலத்தில் ஒருபக்கத்தில் சைவ ஆதிக்கசாதிச்சக்திகள் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வியை மறுக்கின்றது. இன்னொருபுறத்தில் அமெரிக்க மிஸனரிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் ஆரம்பக்கல்வியைக் கற்பதற்கான பாதைகளைத் திறக்கப்பட்டாலும், அவர்களுக்கும் சாதி ஒழிப்பைவிட மதம் மாற்றுதல் என்பதே ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த இரண்டு தரப்புக்களும் இடையில் திணறுகின்ற சூரன் சைவத்தின் மீது பற்று இருக்கின்ற ஒருவராகத் தன்னை முன்னிறுத்துகின்றார்.  வதிரி பூவற்கரை அண்ணாமர் கோயிலில் நடந்த வேள்வியில் ஆடுகளுக்கும் வெட்டுபவருக்கும் இடையில் நின்று அங்கு நடந்த வேள்வியை நிறுத்திய துணிச்சற்காரரும் கூட.


'சூரன் சுயசரிதை' என்கின்ற இந்தநூலில் அவர் தன்னைப் பற்றிய தனி விபரங்கள் எதையும்  பெரிதாய்ப் பேசவில்லை. பாடசாலையை 1910களில் தனித்து,  மேலும் நான்கு ஒடுக்கப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து கட்டுகின்ற தகவல்களையும், அதன் நிமித்தம் சந்திக்கும் சிக்கல்களையுமே விரிவாகப் பதிவு செய்கின்றார். பாடசாலை கட்டத் தொடங்கும் காலத்தில், அருகிலிருக்கும் அமெரிக்க மிஷன் கல்லூரி யாராலோ எரிக்கப்பட, சூரன் உள்ளிட்ட சிலர்  இவர்களே அதை எரித்தார்கள் எனக் குற்றவாளியாக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர். பின்னர் பாடசாலைக்கென நிதிசேகரிப்பிலும் சிக்கல்கள் வருகின்றன. 


இவற்றையெல்லாம் தாண்டி பாடசாலையைக் கட்டி, ஒருமாதிரியாகப் பிள்ளைகள் சிலரை பாடசாலைக்கு படிக்கச் சேர்த்ததன் பிறகு இன்னொரு சிக்கல் வருகின்றது. அன்றையகாலத்தில் வாழ்ந்த எந்த ஆதிக்கசாதி ஆசிரியர்களும் கல்வி கற்பிக்க வர முன்வரவில்லை. எனினும் மனந்தளராது ஆதிக்கசாதி ஆசிரியர் ஒருவருக்கு அவர் மற்றப்பாடசாலையில் வாங்கும் சம்பளத்தை விட இரண்டரை மடங்கு ஊதியம் கொடுத்து அவரை அழைத்துவருகின்றனர்.எனினும் ஆதிக்கசாதிகளில் இருந்து வரும் எந்த அதிபரும் ஒழுங்காக இல்லாததுகண்டு, ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே  அங்கே  ஆசிரியர்/அதிபராக வரவேண்டும் என்று சூரனைப் போன்றவர்கள் நினைக்கிறனர்.


2.


இங்கேதான் யாழ் சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல் ஒடுக்கப்பட்டோரிலிருந்து நிகழ்கின்றது. இந்த நூலில் மிக முக்கியமான ஆவணப்பதிவாக  இதையும் இணைத்துச் சொல்லவேண்டும். அது - முதன்முதலாக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு வல்லிபுரம் என்கின்ற ஆசிரியர் செல்கின்ற நிகழ்வாகும். வல்லிபுரம் சூரனின் உறவினர் என்பதால் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளை அருகில் இருந்து பல பக்கங்களில் சூரன் இந்த நூலில் எழுதிச் செல்கின்றார்.


ஒடுக்கப்பட்டவரையே படிக்க அனுமதிக்கா யாழ் ஆதிக்க சமூகம் ஒரு ஆசிரியர் முதன்முதலில் பயிற்சிக்காகப் போகும்போது எப்படி வரவேற்கும். மூர்க்கமாய் எதிர்க்கின்றது. அதை மீறியும் வல்லிபுரம் போனபின் அவர் கோப்பாய் விடுதியில் இருந்து வெளியேறவிடவேண்டும், இல்லை என்று கொல்லப்படுவார் என ஆதிக்கசாதி காடையர்களால் எச்சரிக்கப்படுகின்றனர். 


அன்று சமஆசன சமபந்தி சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதால் வல்லிபுரம் என்ற ஒடுக்கப்பட்டவரோடு சேர்ந்து படிக்கும் 40 ஆதிக்கச்சாதி மாணவர்களும் வெளிநடப்புச் செய்கின்றனர். அவர்கள் விடுதியிலிருந்து வெளியேறுகின்றனர். வெளியே சென்று சாப்பிடுகின்றனர். வல்லிபுரம் வீட்டுக்குத் திரும்பவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு இந்த ஒருவருக்காக 40 பேரைப் பகைக்கமுடியாது என்று முதலில் அங்கிருந்து அகற்றப்படுகின்றார்.  


எனினும் வல்லிபுரத்தின் தந்தையார் மற்றும் சூரன் போன்ற சிலரின் வற்புறுத்ததால் வல்லிபுரம் திருப்ப கலாசாலைக்கு எடுக்கப்பட்டாலும், வல்லிபுரத்தை ஒரு கடிதத்தை -அந்த 40 ஆதிக்காசாதி மாணவர்களுக்காய்- அவர் வெளியில் சென்று சாப்பிடுவதாக எழுதித் தரச் சொல்லித் தரச்சொல்கின்றனர். இப்படி எழுதிக் கொடுத்தால் பிறகு வல்லிபுரம் பயிற்சிக்கல்லூரியில் இருந்து கற்கமுடியாது போய்விடும் என்று சூரனைப் போன்றவர்கள் தயங்குகின்றனர். இதற்காய் சூரனைப் போன்றோர் எந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதையும் இந்த நூலை நாம் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம்.


பல்வேறு வகைகளில் வெளியில் மட்டும் அல்லாது, அவரின் ஊரிலுள்ள ஆதிக்கசாதியினரும் வல்லிபுரத்தை வீட்டுக்கு எடுக்கும்படி சூரனைப் போன்றவர்களிடம் வற்புறுத்துகின்றார்கள். இவ்வாறான நெருக்கடிகளை மீறி வல்லிபுரம்  கற்றுத்தேர்ந்து வெளியில் வருவது ஒரு பெரும் பாய்ச்சல் எனத்தான் சொல்லவேண்டும். அன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட ஒருவர் கோப்பாய் கலாசாலைக்குள் நுழைந்தது பெரும் விடயமாக எல்லாத் தரப்பாலும் நிச்சயம் பேசப்பட்டிருக்கும் இந்த சமாசன சமபந்தியின் தாக்கம் எந்தளவுக்குப் போனது என்பதை க.சிவத்தம்பி இன்னும் விரிவாக (இந்நூலில் சூரன் அதைக் குறிப்பிடாவிட்டாலும், சிலவேளை ஆதிக்கசாதிகளின் சூழ்ச்சியின் எல்லை தெரியாததாலும் சூரனுக்கே இது தெரிந்திருக்காதும் இருக்கலாம்) குறிப்பிடுகின்றார். அதாவது  சேர் பொன்னம்பலம் இராமநாதனே இந்த ஆசிரிய கலாசாலை சமபோசன விடயத்தில் தலையிட்டதைப் பற்றியதாகும். இந்த சமபோசனம் கலாசாலையில் அனுமதிக்கப்படக்கூடாது என்று சேர் இராமநாதன் தேசாதிபதிக்கு ஒரு பெட்டிசன் அனுப்பியிருக்கின்றார். இந்த விடயம் ஜோன் ரஸல் என்பவர் எழுதிய Communal Politics Under the Donoughmore Constitution: 1931-1947' என்ற நூலில் குறிப்பிடப்பட்டதாக கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகின்றார். உண்மையில் 1920களில் நடந்த இந்த ஆசிரிய கலாசாலை சமாசன சமபோசன பிரச்சினை என்பது யாழ் சமூகத்தில் சாதியொழிப்பு விடயத்தில் முக்கிய மைல்கல்லாகும். இது குறித்து இன்னும் விரிவாக அந்தக் காலத்தில் நிகழ்ந்தவற்றின் தரவுகளுடன் நிறைய ஆய்வுகளும், ஆக்கங்களும் கட்டாயம் வரவேண்டும்.


இப்படி கஷ்டப்பட்டு சமாசன சமபந்தியில் ஒடுக்கப்பட்டவர்கள் சாதித்துக் காட்டியதைப் பின்னர், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் 1960களில் கோயில் நுழைவுப் போராட்டங்களையும், தேநீர் கடைப் பிரவேசங்களையும் செய்தபோது, தமிழரசுக்கட்சியினர் இந்த சமாசன சமபந்தி நிகழ்வுகளை கேலிக்கூத்தாக்கி சாதியொழிப்புப் போராட்டத்தைத் தாங்களும் செய்கின்றனர் என்று காட்ட முயற்சித்ததும் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைதான். 


3.


சூரனின் முக்கியத்துவம் என்ன என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இங்கே கட்டாயம் குறிப்பிடவேண்டும். அது அன்று 1920களில் இலங்கை வாலிபர் காங்கிரஸ், காந்தியின் சுயராஜ்ஜியத்தின் மீது ஈர்ப்புக்கொண்டு இலங்கையில் இயங்கத் தொடங்குகின்றனர்.  தனியே சுயராஜ்ஜியத்துக்காக மட்டுமின்றி சாதி வேறுபாட்டிற்காகவும் ஹண்டி பேரின்பநாயகம் போன்ற வாலிப காங்கிரஸ்காரர்கள் போராடினார்கள். அந்தவகையில் அவர்கள் 1929, 1930களில் நடந்த மாநாடுகளுக்குச் சூரனை உரையாற்றுவதற்கு அழைத்திருக்கின்றனர். அத்துடன் சூரனைத் தமது அங்கத்துவரும் ஆக்கி அவருக்கான இடத்தையும் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு மாநாட்டுக்குப் போன சூரன், அங்கே நடந்த கலவரத்தில் இறந்துவிட்டதாக ஊரில் ஆதிக்கசாதிகள் வதந்திகளைப் பரப்பியதாகவும் சூரன் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்


இற்றைக்கு நாவலரை தமது முகமாகக் கொள்கின்ற யாழ் இந்து சமுகம் ஒருபோதும் சூரனைக் கவனத்தில் கொள்வதே இல்லை. நாவலர் போன்ற சாதிமான்களை விட, தனது ஆதிமதம் சைவமே என்று மதமும் மாறாமல், அதேவேளை இந்து ஆதிக்க சாதிமான்களின் வெறுப்பையும்/ஒடுக்குதல்களையும் சம்பாதித்துக்கொண்டு தனது வேரிலிருந்து தடம்புரளாத சூரனை அல்லவா நாம் யாழ் சமூகத்தின் முகமெனக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலந்தான் நாம் சற்றாவது யாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களெனப் பெருமிதங் கொள்ளலாம். இந்த நூலின் முன்னுரையிலும் கா.சிவத்தம்பி 90களில் இலங்கைப் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வரும்பொருட்டு, பெரியவர்கள் சிலரை இணைக்கவேண்டும் எனக் கேட்டபோது ஹண்டி பேரின்பநாயகம், சூரன் போன்றவர்களை இணைக்கவேண்டுமெனப் பரிந்துரை செய்ததாகக் குறிப்பிடுகின்றார். அது இற்றைவரை நிகழாமலே இருக்கின்றதெனவே நினைக்கின்றேன்.


சூரன் ஒரு ஆசாரியாகவும் இருந்தவர். அவரது இருபதுகளில் கரவெட்டி தேவமாதா கோயிலுக்கு மாதா சிலை வைக்க ஒரு கண்ணாடிக்கூட்டைச் செய்து கொடுக்கின்றார். அப்போது  ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் இதை ஒடுக்கப்பட்டவரான சூரன் செய்ததாக வெளியில்  சொல்லவேண்டாம், அப்படிச் சொன்னால் சைவ வேளாளர்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று சொல்கின்றார். சூரன் தேவாலயத்தில் இல்லை என்று நினைப்பில் சொல்லப்பட்ட இதை சூரன் கேட்டுவிடுகின்றார். 'எனக்கு ஒன்றும் இந்தச் சிறப்பு வேண்டாம்' என்று அவரின் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது அவருக்குச் சற்று கிறிஸ்தவச் சாய்வு இருந்திருக்கின்றது. எனினும் பிற்காலத்திலும்  வதிரி வேதக்கோயிலுக்கு சூரன் இரதம் செய்துகொடுத்திருக்கின்றார். இதன்மூலம் சூரன் ஒரு தீவிர சைவக்காரராக இருந்தாலும் மாற்று மதங்களை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதும் நமக்குப் புலப்படுகிறது.


ஆசாரியர் சூரன் தனியே இந்த விடயங்களில் மட்டுமில்லாது, அவரே பாடல்களை எழுதி பாடுகின்றவருமாவார். அதை நூலாக்கி பின்னர் பாடசாலைக்கான நிதிக்காய் கொழும்பு, காலி உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு அலைந்தபோது இவற்றைக் கொண்டு சென்று விற்பனை செய்துமிருக்கின்றார். அத்துடன் அவர் நெல்லியடியில் அன்று இருந்த மகாத்மா தியேட்டரில் காந்தி கொல்லப்பட்டபோது நிகழ்ந்த அஞ்சலி நிகழ்விலும் உருக்கமாய் காந்தி பற்றிய பாடல்களைப் பாடியதாக கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இதைவிட சுவாரசியமானது பராசக்தி திரைப்படம் வந்து, சூரனின் பகுதியில் பல இளைஞர்கள் நாத்திகம் பேசித் திரிந்தபோது, பராசக்தி நாத்திகத்தையல்ல, பக்தியைத்தான் விதந்தோத்துகிறது என்று பராசக்தி பற்றி ஒரு எதிர் விமர்சனமும் எழுதியிருக்கின்றார். இந்த நூலைப் பதிப்பித்த ராஜ சிறிகாந்தன் அந்தக் கட்டுரை தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டாலும் இந்த நூலில் அதைச் சேர்க்காமல்விட்டது நமக்கு ஓர் இழப்பே. சூரன் கதை என்று அவர் சுயசரிதை வந்ததுபோல, அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றிப் பிறர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்படவேண்டும். அதன்மூலம் சூரனின் ஆளுமை இன்னும் சிறப்பாக வெளிக்கொணரப்படக்கூடும்.


அன்று இப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் பாடசாலை  தொடங்கியிருக்கின்றார் என்று அறிந்து அதை 'இந்துசாசனம்' தனது பத்திரிகையில் வெளியிடுகின்றது . அதேவேளை ஒருவாரம் இலங்கைக்குப் பயணஞ்செய்த கல்கி, சூரனைச் சந்தித்ததைப் பதிவு செய்கையில் ஈழத்து நந்தன் என்று அவரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்


ஒடுக்கப்பட்ட சமுகத்தில் 1881ல் பிறந்த சூரன் 1956இல் மரணமடைகின்றார். சூரன் சுயசரிதையை அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதி முடித்திருந்தாலும் விபரங்களை, சம்பவங்களை, வழக்குகளை காலக்கிரமாக தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஒன்று அவர் ஏற்கனவே குறிப்புகளாக இவற்றை எழுதி வைத்திருக்கவேண்டும் அல்லது இவ்வளவும் அழியாத நினைவுகளாக அவருக்குள் உறைந்து இருந்திருக்கவேண்டும்.


இன்றைக்கும் சாதியைக் கடந்துபோய் விடாத யாழ் சமூகத்திற்கு, சூரன் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் செய்த விடயங்களின் மூலம், ஒரு பெரும் சவாலாக நம் எல்லோர் முன்னும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றார்.

.....................................................

(Jun 08, 2020)

0 comments: