நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஏதிலி - அ.சி.விஜிதரன்

Sunday, March 14, 2021

 1.

இந்தியாவில் இருக்கும் ஈழ ஏதிலிகளின் கதைகளை இந்தப் புதினம் பேசுகின்றது. 14 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூலில் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய மனிதர்களையும் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்களையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் இன்னமும் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், அங்கே முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ எதிலிகளின் நிலைமையில்  -இன்று ஈழத்தில் போர் முடிந்தபின்னும் கூட-  பெரிதாக ஏதும் மாற்றம் வந்துவிடவில்லை. சாதாரண மனிதர் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, தேவையான கல்வியையோ, நல்லதொரு வேலையைப் பெறுவதற்கோ இன்னும் ஏதிலிகள் வாய்ப்பில்லாதே தமது வாழ்வை நடத்தவேண்டியிருக்கின்றது.


இந்தப் புதினம் தொடக்கத்தில் ஒரு பின் நவீனத்துவக் கதைசொல்லலின் கூறுகளிலிருந்து தன்னை விரித்தெடுக்கத் தொடங்கினாலும், இறுதி அத்தியாயங்களை நெருங்கும்போது, தனித்துச் சம்பவங்களைச் சொல்லவேண்டுமென்ற அவசரத்தில் சற்று உலர்ந்ததன்மையையும் கடைசியில் அடைந்துவிடுகின்றது. ஒருவகையில் விஜிதரன் இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வருகின்றவர் என்பதால் எப்படி பின் நவீனத்துவக் கதைசொல்லல்களை எளிதில் உள்வாங்கினார் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், இறுதியில் தனக்குரிய 'அரசியலை'ச் சொல்லிவிடவேண்டும் என்ற எத்தனிப்பில் ஒருவகையில் பிரச்சாரம் போல பிற்பகுதிகள் ஆகியும் விடுகின்றன.


இந்த நாவலில் கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு அத்தியாயங்களில் முகாங்களிலுள்ள 'அரசியல்' பிரக்ஞையுள்ள இளைஞர்/கள்,  இந்திய கியூ பிராஞ்சி/சிஜடியினரினதும், அரசியல்வாதிகளினது போலித்தனங்களைக் கேள்விகளால் தகர்த்துவிடுகின்றனர் என்பதை எளிதாக நாம் கண்டடைகின்றோம்.. அதிலும் நாம் தமிழர் போன்ற தமிழ்த்தேசிய அரசியலை உணர்ச்சிபூர்வமாகச் செய்பவர்களைக் கேள்வி கேட்டு சாரு என்ற பெண் அ தகர்ந்தெறியும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இறுதி அத்தியாயத்தில், ஈழத்தில் போர் முடிந்து இந்தியாவிலிருக்கும் ஈழ ஏதிலிகள் திரும்ப நாட்டுக்குத் திரும்பவேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்,  செல்வநாயகத்தின் வழித்தோன்றல் அகதிமுகாங்களுக்குள் நுழையும்போது அதை உடைத்தெறியும் நபர்களான  கடவுள் ஆரையும், நேவியையும் பார்க்கும்போது ஒருவகை  பிரச்சாரத்தன்மை நாவலுக்குள் வந்துவிடுகின்றது.

இவ்வளவு பெருந்திட்டத்தோடு வரும் ஒருவரை, அவர் சார்ந்த அமைப்பை இரண்டு இளைஞர்கள் கேள்விகளால் வழிமறித்து அனுப்பிவைக்கின்றார்கள் என்பது நம்புவதற்கு கடினமாய் இருப்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தளவுக்கு முகாம் மக்கள் இத்தனை வருடங்களாகியும் இந்த அமைப்புக்களின் 'அரசியல்' தெரியாமல் அப்பாவிகளாக இருப்பார்களா என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது..

 

2.

விஜிதரன் 'கலை என்பது முற்றிலும் அரசியல் சார்ந்தது' என்பதைத் திடமாக நம்புகின்ற ஒருவரெனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார். ஏன் இந்த நாவல் கூட கலையை விட அரசியலையே முதன்மையாகக் கொள்வதையும் வாசிக்கும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடிகிறது. அதில் தவறும் இல்லை. கலை மக்களுக்கா, கலை கலைக்காகவா என்ற கடந்தகால விவாதங்களுக்கு நாம் இப்போது மீண்டும் போகத் தொடங்கத் தேவையில்லை. அந்த விவாதம் நம் ஈழச்சூழலில் 60/70களில் நடந்து முடிந்து, நாம் கடந்தும் வந்துவிட்டோம். ஆனால் இந்த புதினத்தில் இடதுசாரியான விஜிதரன் எந்த எந்த இடத்திலும் முகாங்களுக்குக்குள் ஓர் அமைப்பைக் கட்டுவதையோ அல்லது அதற்கான ஆரம்ப சமிக்ஞைகளைக் கூட இதில் எழுதிக்  காட்டாதது சற்று வியப்பானதுதான். புதிதாய்த் தொடங்கிய கட்சியான 'நாம் தமிழர்'களே ஏதிலிகளின் முகாங்களுக்குள் நுழைய முடியும்போது, அரசியல் கொந்தளிப்பான ஒரு முக்கிய இடத்தில் இடதுசாரிகளுக்கு வேலை இல்லாமலாப் போய்விடும்.


மற்றும்படி  தேங்கிப்போன ஓர் இடதுசாரியைப் போல அல்லாது, விஜிதரன் ஈழ அரசியலை  மிகுந்த கவனத்துடன் மக்களின் பக்கம் நின்று பேசுவது இந்தப் புதினத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது. எப்படி புலிகளின் தலைவரோடு அவர்களின் தலைமை அழிக்கப்பட்டதை உடனே தெரிவிக்காது ஆறப்போட்டு, தமிழகத்தில் ஒரு பெரும் எழுச்சி நிகழ்வதை தமிழக அரசியல்வாதிகள் தடுத்தார்கள் என்பதிலிருந்து, புலம்பெயர்ந்தவர்கள் தம்மிடம் இருக்கும் இயக்கத்தின் சொத்துக்களைப் பதுக்குவதற்காய், தலைவர் வரட்டும் அப்போது நாம் இவற்றைக் கையளிக்கின்றோம் என்று சோகநாடகம் நடத்தியதிலிருந்து எல்லாவற்றையும் வெளிப்படையாக விஜிதரன் இதில் பேசுகின்றார். அதுபோல புலிகள்தான் யுத்தத்தில் மனிதவுரிமைகளை மீறியவர்கள் என்று ஒரு பாத்திரம் பேசுகின்றபோது, புலிகளைச் செய்தது தெரியும், அரசாங்கமும், இராணுவமும் செய்ததைப் பேசாமல், முள்வேலிக்கம்பிகளுக்குள் தன் சொந்தமக்களை அடைத்து சித்திரவதைப்படுத்திய அரசின் பக்கங்களைப் பேசாமல் யாருக்கான நியாயம் பேசுகின்றீர்கள் என்றும் இந்த நாவலில் கேட்கப்படுகிறது,


அரசியல் புரிதலுள்ள ஒருவரால்தான் இவ்வாறு நியாயமாய் எழுதமுடியும் என்பதற்கும், இதற்காகவேனும் அழகியலை மட்டும் கலையில் பார்ப்பவர்கள் அரசியலையும் விஜிதரனைப் போலப் பயிலவேண்டும் எனவும் சொல்லவேண்டியிருக்கிறது. இதேபோல இன்னொரு உறுத்தலான விடயம் இதில் சொல்லப்படுகின்றது. அதாவது ஈழத்திலிருந்து ஏதிலிகளாக வந்த மக்கள் பற்றிய விபரங்களை முதன்முதலாகப் பதிவு செய்யும்போது, அவர்களிடம் சாதி கேட்டுப் பதிவு செய்யப்படுகிறது என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.

 

3.

தமிழகத்தில் இருக்கும் ஈழ ஏதிலிகளைப் பற்றிப் பேசுகின்ற ஒரு புதினம் என்றவகையில் இது முக்கியமானதுதான். ஆனால் கலையின் அமைதியை அரசியல் துருத்திக்கொண்டு போகின்ற பல அத்தியாயங்களும் இதில் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். அகதி முகாங்களை இப்படி வைத்திருக்கின்றார்களே என ஒரு 'ஆறுமுகநாவலர்' பாத்திரம் கனவில் வரும்போது, மறுபாத்திரம் இதைவிடக் கொடுமையாக சேரிகளில் மக்கள் இருக்கின்றார்கள் எனச் சொல்கின்றது. அது உண்மைதான். ஆனால் சேரி மக்களுக்கு என்று ஒரு வாழ்வு இருக்கின்றது. கொண்டாட்டம் இருக்கின்றது. அப்படி இவ்வாறு தசாப்தகாலங்களாய் முகாங்களில் இருக்கும் மக்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கும். அது இவ்வாறான அரசியலைப் புரிந்தோ/புரியாமலோ அவர்களுக்குள்ளும் ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை இருக்கும். அதை அவ்வளவாக இந்தப் புதினத்தில் தொட்டுப் பார்க்கப்படவில்லை என்பதுதான் கவலையானது.


இந்தப் புதினத்தின் கதைசொல்லிக்கும், மதுரையில் படிக்கும் மலையாளப் பெண்ணுக்கும் காதல் இருக்கின்றது. அவள் செய்யும் படிப்பு சம்பந்தமான ஆய்வுக்கு 'நமது மக்கள்' என்று ஏதிலிகள் முகாங்களிலுள்ள பெண்களுக்குரிய சிக்கல்களை எடுத்துக்கொள்கின்றவளாகவும் மினு ஈழமக்களைப் புரிந்துகொண்டவளாகவும் இருக்கின்றாள். ஆனால் மினுவுக்கும், 'வீ'யுக்கும் வரும் காதலைப் பற்றிப் பெரிதாக ஏதும் விபரிக்கப்படவில்லை. ஈழ அகதிகள் என்று பல்வேறு வழிகளில் வெறுத்தொதுக்கப்படுகின்ற அகதியொருவனை, கேரளத்தைப் பூர்வீகமாய்க் கொண்ட ஒரு பெண் நேசிக்கின்றாள் என்பது எவ்வளவு அழகானது. அந்தக் காதலைச் சொல்வதில் ஒரு அழகியல் இருக்கும். அது கூட ஒருவகை அரசியல்தானே. உங்களில் இந்தத் 'தீண்டாமை'களில் இருந்து காதல் இந்த எல்லைகள்/ஒதுக்கல்களைத் தாண்டியும் எழும் அற்புதமான விடயமெனச் சொல்லும்போது, நேரடியாக அரசியலைச் சொல்வதை விட, வாசிக்கும் இது நம்மை அதிகம் பாதிக்கும் அல்லவா?


 'கலை என்பது அரசியல் சார்ந்தது' என்று தீர்க்கமாக இருக்காது, 'கலை என்பது அரசியலும் சார்ந்தது' எனச் சற்றுத் தளர்வாக இருந்திருந்தால் இந்தப் புதினம் இன்னும் பலவழிகளில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்குமென நினைக்கிறேன்.

.....................


-நன்றி: வனம்

(Oct 25, 2020)

 

 

 

0 comments: