அய்யனாரை அவர் எழுத வந்த காலத்தில் இருந்தே வாசித்து வந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட நாங்களிருவரும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள் என்று நினைக்கின்றேன். ஆக அவரின் இந்த 'ஹிப்பி' நாவலையும் அவரை வாசித்த வாசிப்புக்களின் தொடர்ச்சியில் வைத்தே பார்க்க விரும்புகின்றேன். ஹிப்பி திருவண்ணாமலையும், அதன் அயலான ஜவ்வாது மலையையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு
திருவண்ணாமலையைப் பின்னணியாக வைத்து ஜீ.முருகன் எழுதிய 'மரம்' எனக்குப் பிடித்த ஒரு புனைவு.
ஹிப்பியில் இரண்டு வெவ்வேறு விதமான மனிதர்களின் கதைகள் சமாந்திரமாகச்
சொல்லப்படுகின்றன. இறுதியில் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புறுகின்றது என்பது
சற்றுச் சுவாரசியமானது.
ரமணாச்சிரமம் பகுதியில் ஓட்டோ ஓடிக்கொண்டிருப்பவனுக்கு வெள்ளைக்காரக் குழுவுடன் நட்பு முகிழ்கிறது. அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு ஜவ்வாது மலைக்கருகிலுள்ள கிராமம் ஒன்றுக்கு மனிதர்கள் இல்லாத வனாந்திரப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே அவன் சந்திக்கும் மனிதர்களும், கட்டற்ற வாழ்க்கையும், எதிர்பாராத நடக்கும் அசம்பாவிதமும் ஒரு நீள்கதையாக நீள, இன்னொரு பக்கத்தில் அலமேலு என்ற பெண்ணைப் பற்றியும் கதை சொல்லப்படுகின்றது.
அய்யனாரின் பிற
படைப்புக்களையும், அவரின் வெளிவந்த
நாவல்/குறுநாவல்களையும் அவரின் வலைப்பதிவுகளில் வாசித்தவன் என்றவகையில் இதை
அய்யனாரின் முக்கியமான நாவலாகக் கொள்ளமாட்டேன். இந்த நாவலில் கொண்டாட்டத்திற்கும், ஏன் மனிதர்கள் இப்படி ஹிப்பி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்கள்
என்பதற்கும் ஆழமாக இறங்கிச் சென்று பார்ப்பதற்கு மிகப்பெரும் வெளி இருந்தபோதும், இந்த ஹிப்பிகள் எல்லா அத்தியாயங்களிலும் கஞ்சாவை இழுப்பதையும், குடித்துக்கொண்டிருப்பதையும் மட்டும் வாசிக்கும்போது சற்று
அலுப்படைய வைக்கின்றது.
இதை
வாசிக்கும்போதுதான் Paulo Coelho எழுதிய 'ஹிப்பி' நினைவுக்கு வருகின்றது. அவர்
ஹிப்பியாக பிரேஸிலில் இருந்து ஐரோப்பாவுக்கு வந்து, அங்கிருந்து நேபாளம் வரை ஹிப்பியாக அலையும்போது சந்திக்கும்
நினைவுகளை இதில் எழுதியிருக்கின்றார். அவரது அந்தப் பயணம் நேபாளம்வரை வந்து
முழுமையடையாது இடைநடுவில் நின்றாலும் ஹிப்பிகளின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு
முகத்தை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதுபோல அய்யனார் ஆகக்குறைந்தது இதில் ஒரு
சில ஹிப்பிகளின் வாழ்வை இன்னும் இந்தப் புனைவில் வாசிப்பவரை உற்றுப்
பார்க்கம்படியாக, ஆழ இறங்கியிருக்கலாமோ என்று
தோன்றியது.
அய்யனார், இந்த நாவல் தான் திருவண்ணாமலையை வைத்து எழுதும் trilogy யில் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார். இன்னும் மூன்றாவது நாவல் அவரால்
எழுதி முடிக்கப்படவில்லை. அது ஹிப்பியைத் தாண்டி இன்னும் நேர்த்தியான ஒரு படைப்பாக
விரைவில் வருமென நம்புகிறேன்.
.................
(Oct 23, 2020)
0 comments:
Post a Comment