கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பட்டிப்பூ (அந்திமந்தாரை) குறிப்புகள்

Monday, March 15, 2021

1. தாமரையாள் ஏன் சிரித்தாள்?


ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நம்மை என்ன செய்யவேண்டும்? இன்னும் என்ன என்னவென அவற்றில் கூறியிருப்பதைப் பற்றித்  தேடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் எழுதியிருப்பதை மனமொன்றி இரசிக்கவாவது செய்யவேண்டும். 


அவ்வாறுதான் உமா வரதராஜனின் 'மோகத்திரை'யை வாசித்தபோது, முதல் பக்கத்திலேயே நடிகை காஞ்சனாவைப் பற்றிய கட்டுரை தொடங்கியபோதே அவர் என்னை ஈர்க்கத் தொடங்கிவிட்டார். உடனேயே காஞ்சனாவின் பாடல்களை youtubeஇல் சுழலவிட்டபடி, நூலை வாசிக்கத் தொடங்கினேன். காஞ்சனாவின் பாடல்கள் - அப்படியே எம்ஜிஆர், சிவாஜி, உமாவின் ஊர் தியேட்டர்கள்/படம் பார்த்த அனுபவங்கள், இயக்குநர் சிறிதர் பற்றிய கட்டுரைகள் வாசிக்கும்வரை என்னோடு தொடர்ந்தபடி வந்தபடி இருந்தன.


காஞ்சனா நடித்த சில பாடல்களை ஏற்கனவே அவர் அதில் இருக்கின்றாரா என அறியாது பார்த்திருக்கின்றேன். ஆனால் உமாவின் கட்டுரைதான், உமாவைப் போல எனக்கும் காஞ்சனாவைப் பிடித்த நடிகையாகச் செய்துவிட்டது. பிற நடிகைகள் கோலோச்சிக்கொண்டிருந்த 60-70களில் ஒரு ஓரமாய்க் காஞ்சனா பிரகாசித்திருக்கின்றார். எவ்வாறு எனக்கு அஸின் -ஒரு முக்கிய நடிகையாக அவரின் காலத்தில் இல்லாதபோதும்- என்னை அவ்வளவு கவர்ந்தாரோ, இப்போது அவருக்கு முன் தலைமுறை நடிகைகளில் காஞ்சனா,  அவரின் பாடல்கள் முழுதையும் பார்த்துவிட்டதன் பிறகு எனக்கு மிகவும் உவப்பாகிவிட்டார்.


இந்த நூல் தந்த உற்சாகத்தில் ஓடிப்போய் 'ஆசை முகங்கள்' என்னும் நடிகைகளைப் பற்றி பல்வேறு பேரினால் எழுதப்பட்ட கட்டுரைகளை சி.மோகன் தொகுத்த தொகுப்பைப் பார்த்தேன். என்னே ஒரு சோகம்! அதில் பத்மினி, சாவித்தி, சரோஜாதேவி, வைஜெந்திமாலா எல்லாம் இருக்கின்றனர், ஆனால் காஞ்சனாவைக் காணவில்லை. 


என் பிரிய அஸினைப் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதிய ஒரேயொரு கட்டுரைக்காகத்தான் அந்தத் தொகுப்பையே தேடி வாங்கியிருந்தேன். எனினும் 'ஆசை முகங்கள்' அடுத்த பதிப்பு வந்தால் சி.மோகன், காஞ்சனா பற்றி உமா எழுதிய இந்தக் கட்டுரையைக் கட்டாயம் சேர்க்கவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.


"காஞ்சனா என்ற அமைதியான ஆறு ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தது. அவருடைய அழகு அத்தகையது. ஆடைக் குறைப்புக்களால் அந்த மெளனக் குகையின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் பலவந்தமாகப் பொன்முட்டையிட வைக்கலாம் எனவும் தமிழ்த் திரையுலகம் முயன்றிருக்கக்கூடும். ஆனால் அவர் ஆடைகளால் மூடப்பட்ட பதுமை அல்ல என்பதை அது உணரத் தவறிவிட்டது. அதன் கண்களில் தென்பட்டது உண்மையான அவரல்லர்." ('மோகத்திரை' - ப 11)


காஞ்சனாவைப் பாராட்டிவிட்டு அஸினைப் பற்றிப் பேசாவிட்டால் நம் மனம் என்னை மன்னிக்காது என்பதால் அஸின் பற்றி எம்.டி.எம் எழுதியிருப்பதிலிருந்து சிறு பகுதி..


" வாழ்க்கையின் துயரங்களை துயரங்களாக அனுபவத்தறியாத செல்லப்பிள்ளையின் கண்கள் அசின் பெண் பிம்பத்தின் கண்கள். அந்தக் கண்களே அசின் பிம்பத்தின் உடலசைவுகள் அனைத்தையும் கோலாகலமாய் மாற்றுகின்றன. உணர்வு தொற்றா கண்கள் அவை என்பதினால் அசின் பிம்பத்தை அம்பாளாகக் காண வேண்டிய துரதிருஷ்டம் நமக்கு நிகழாது என்று நான் ஆசுவாசமடைகிறேன். அழகிய பொம்மை உலா பொழுதுபோக்குக்கு உகந்ததுதானே." ('ஆசைமுகங்கள்' - ப. 110)



2. Kilometers and Kilometers


இந்தப் படத்தின் trailerஐ  முதன்முதலாக பார்த்தபோது, ஒரு road movie என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சுற்றுலாப்பயணிக்கும்,  அலைந்து திரியும் பயணிக்கும் வித்தியாசம் தெரியாது குழப்பிக்கொண்டதால் படம் அவ்வளவாக ஒட்டாது போய்விட்டது. அதுவும் இன்று உலகமே சுருங்கிவிட்டபிறகு அமெரிக்காவிலிருந்து வரும் பெண் இந்தியக் கலாசாரத்தை அவ்வளவு விளங்காது இருக்கமுடியுமா என்று  நினைக்க வைக்கும்போதோ படம் என்னிலிருந்து விலகிப்போகத் தொடங்கிவிட்டது. 


ஒரு மோட்டார்சைக்கிளில் இந்தியாவின் நிலப்பரப்பைப் பார்க்க விரும்பும் பெண் ஒருபோதும் சுற்றுலாப் பயணியின் மனோநிலையில் இருக்கப்போவதில்லை. அவர் தான் பயணிக்கும் நிலப்பரப்புக்களின் மக்களுக்கிடையிலும், கலாசாரத்திற்குள்ளும் குறுக்குவெட்டிப் போக விரும்புவாரோ தவிர, இவற்றையெல்லாம் மற்றமையாகாகப் பார்த்து விலகிப் போகப்போவதில்லை. 


மேலும் அமெரிக்கக் கலாசாரம் என்பதே தனிமனிதர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று ஒற்றைத் தன்மையாக நம்புவது கூட ஆபத்தானது. அமெரிக்க X இந்திய கலாசாரத்தை எதிரெதிராக வைத்துப் பார்க்கவேண்டும் என்ற எத்தனிப்பில் காட்சிகளும் இயல்பின்றி தறிகெட்டலைய  அது பார்ப்பவரையும் திரைப்படத்திலிருந்து வெளியேற்றிவிடுகிறது. 'நாங்கள் ஒரு பெண்ணோடு கொஞ்சம் நெருக்கமாகப் பழகத் தொடங்கினாலே, அவர்களை நமது மனைவிமார்கள் மாதிரி நினைக்கத் தொடங்கிவிடுவோம்' என்று நாயக பாத்திரம், அமெரிக்கப் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கினவுடனேயே, நமக்கு நம்மைப் பற்றித் தெரியுமே போதுமய்யா போதுமென நமது மனச்சாட்சி பேசத் தொடங்கிவிடுகிறது. நான் இன்னும் பார்க்காதுவிடினும் The Great Indian Kitchen என்று அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட படத்தையும் இதே நெறியாளர்தான் எடுத்திருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.



3. Air Time by Katie Melua


Katie Meluaஇன் பாடல்களைப் பல்வேறு பொழுதுகளில் வெவ்வேறு நண்பர்களோடு அருகில் இருந்து கேட்டிருக்கின்றேன். அதுவும் ஒரு நண்பரோடு  காலைத் தேநீரோடு, வீட்டுனுள் நுழையும சூரியக்கதிர்களைப் பார்த்தபடி கேட்டியின்  ஓரிரு பாடல்களைத் திரும்ப திரும்ப தவழவிட்டபடி இரசித்திருக்கின்றோம்.  Nine Million Bicycles, Wonderful life, The closest thing to crazy , I will be there போன்ற பாடல்கள் அன்றைய காலைகளுக்கு அப்படியொரு புத்துணர்ச்சியைத் தந்ததை உணர்ந்திருக்கின்றேன்.


நீண்டகாலமாகப் புதிய பாடல்களைப் பாடாத கேட்டி இப்போது  ஒரு புதிய இசைத் தொகுப்புக்குத் தயாராகிவிட்டார். ஜெயமோகனின் 'ஆழி' என்ற சிறுகதையில், உறவில் இருந்த காதல் இணை ஒன்று பிரிவிற்குப் பின்  சந்திப்பதாய்க் கதை தொடங்கும். அவர்கள் இருவருமே எதுவுமே 'நம்மிடையே பொதுவில் இல்லை, ஆனால் மூன்று வருடங்கள் காதலில் இருந்திருக்கின்றோம், அதிசயந்தான்' என்று கூறியபடி இறுதிச் சந்திப்பையும் சண்டை/சர்ச்சையோடே தொடங்குவர். ஒருவர் அமெரிக்காவுக்குப் போகப் போகின்றார். இன்னொருவர் திருவனந்தப்புரத்துக்கு வேலை நிமித்தம் இடம் மாறப்போகின்றார். அவர்கள் இருவரும் மணப்பாடுக்கு போய் குளிப்பது, கடல் அலைகளுக்குள் சிக்கிச் சுழல்வது, அதன் நிமித்தம் ஒரு (தற்காலிக) புரிந்துணர்வு வருவது என‌ அந்தக் கதை விரியும்.


அந்தக் கதையைப்  போலத்தான் இந்தப் பாடலும்.


பிரிந்து போன காதலர்களில், பெண் ஒருத்தி தான் கடந்துவந்த காதலனை நினைக்கின்றாள். சிலவேளை அவனும் தன்னைப் போல, இப்போதும் தம் பிரிந்துபோன காதலை நினைத்து எண்ணி/ஏங்கிக் கொண்டிருக்கின்றானா தெரியவில்லை என நினைக்கின்றாள். இறுதியில் சந்திக்கவும் முடிவு செய்கின்றாள். ஆனால் 'ஆழி'கதை போல இங்கே புரிந்துணர்வு இருவருக்குமிடையில் வருவதில்லை. 


இந்தப் பெண் பாடுகின்றாள், 'இதை விட்டுப் போ, ஏனென்றால் நிறைய காதல் உன்னைச் சுற்றி இருக்கிறது'. இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். உலகில் நிறைய காதல் இருக்கும்போது ஒரு தேவையில்லாத/துயரம்தரும் உறவுக்காய் ஏங்கிக்கொண்டிருக்காதே என்பது ஒன்று. 


உன் மனதிற்குள் காதல் நிறைந்து இருக்கின்றது, அதற்குப் பொருத்தமானவன் இவன் இல்லை என்பது மற்றொன்றாகும் . 

.......................

0 comments: