அண்மையில் நண்பரொருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் இன்னொரு நாட்டுக்குத் தனித்துச் சென்ற பயணம் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். வீட்டுக்கு ஒரு காரணத்தையும், வேலைத்தளத்தில் இன்னொரு காரணத்தையும் சொல்லித் தனியே பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு நகரத்திலிருந்து பஸ்சில் மலைப்பாங்கான இன்னொரு நகருக்குச் சென்றபோது இடைநடுவில் இறக்கிவிடப்பட்டு நடந்த சில திகிலான சம்பவங்களைச் சொல்லியிருந்தார். அதைவிட இன்னும் விறுவிறுப்பான, மரணத்தை நெருக்கத்தில் கண்ட ஒரு பயணத்தை Jungle என்கின்ற இந்தப் படம் நமக்குக் காட்டுகிறது.
இவ்வாறு இவர்கள் தென்னமெரிக்காவுக்குள் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஜின்ஸ்பேர்க் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்க, அவர் இதெல்லாம் ஒரு பயணமா, என்னோடு வாருங்கள் நான் அமேஸன் காட்டையும், அங்கே இதுவரை எவருமே பார்த்திராத பூர்வகுடிகளையும் உங்களுக்குக் காட்டுகின்றேன் என்கின்றார். புதிய உலகைக் காணும் விருப்பில் அந்த நபரோடு புறப்படும் இவர்களின் பயணம் கடும் சிக்கல்களைச் சந்திக்கின்றது. இனி மேலும் நடக்கமுடியாது என்று திரும்புகையில் வழிநடத்தும் நபரும், சுவிஸ் நண்பரும் நடந்தே திரும்ப, ஜின்ஸ்பேர்க்கும், அமெரிக்கப் புகைப்படக்கார -நண்பரும் அவர்களே பயணத்தின் இடைநடுவில் தயாரித்த கட்டுமரத்தில்- ஆற்றினூடாகத் திரும்புகின்றார்கள்.
கட்டுமரத்தில் திரும்பும் இவர்கள் நீரின் பெரும் வீழ்ச்சியில் சிக்கிக்கொள்ள ஜின்ஸ்பேர்க் தண்ணீரில் விழுந்து தப்பினாலும், கூட வந்த நண்பரைப் பிரிந்து காட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றார். அந்தக் காட்டுக்குள் ஜின்ஸ்பேர்க் கிட்டத்தட்ட 3 வாரங்கள் உயிர் தப்புகின்ற சாகசத்தையே இந்தப் படம் சித்தரிக்கின்றது. இது 1980களின் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது (ஏற்கனவே ஜின்ஸ்பேர்க்கால் புத்தகமாகவும் இது எழுதப்பட்டிருக்கின்றது)..
கட்டுமரத்தில் திரும்பி வந்த ஜின்ஸ்பேர்க்கும், புகைப்படக்கார நண்பரும் தப்பினாலும், இற்றைவரை கால்நடையாகத் திரும்ப விரும்பிய, இவர்களைக் கூட்டிக்கொண்டு சென்றவருக்கும், அவரோடு கூடவே சென்ற சுவிஸ்காரருக்கும் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் அவர்கள் மர்மமாய் காணாமல் போயிருக்கின்றனர். உண்மையில் அந்த வழிநடத்திய நபர் இப்படி வேறு சிலரையும் முதலில் கூட்டிச்சென்று பொலிஸால் எச்சரிக்கப்பட்டவர் என்றாலும், எதற்காக தங்களை அந்த நபர் அமேஸான காட்டுக்குள் கூட்டிச்சென்றார் என்பதற்கான காரணத்தை தன்னால் அறியமுடியாது என்று ஜின்ஸ்பேர்க் கூறுகின்றார்.
பயணத்தின் நடுவில், ஜின்ஸ்பேர்க்கைச் சந்திக்கும் ஒரு பெண் தான் வாசித்த ஒரு புத்தகத்தில் இப்படிச் சொல்லியிருப்பதாய்ச் சொல்வார்: "The last freedom is to choose one’s own way.” இந்த இறுதிச் சுதந்திரத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தெரியாததால்தான் நாம் சிலவேளைகளில் நம் வாழ்வில் அதிகம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றோமோ தெரியாது.
..........................
(2020)
0 comments:
Post a Comment