1.
வான்கோவின் ஓவியங்களைப் பார்ப்பதற்காய் சில வருடங்களுக்கு முன்னர் Musée d'Orsay இற்குப் போயிருந்தேன். வான்கோ உள்ளிட்ட பலரின் ஓவியங்களைப் பார்த்தபோது, கூட வந்திருந்த நண்பர் தர்மு பிரசாத், இப்போது எங்களோடு இந்திரன் இருந்திருந்தால் இன்னும் ஆழமாய் இந்த ஓவியங்களைப் பார்த்திருப்போம் எனச் சொன்னார். எனக்கும் அந்தக் கணத்தில் சி.மோகன் எங்களோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென ஓர் எண்ணம் இடைவெட்டிப் போனது.
கிளாட் மோனே போன்றவர்கள் இம்பிரஷனிசத்தை ஆரம்பித்து வைக்க, அதன் நீட்சியின் பின் - இம்பிரஷனிசத்தை பால் ஸிஸான், வான்கோ போன்றவர்கள் முன்னெடுக்கின்றார்கள். அப்படிப் பின் இம்பிரஷிசத்தில் தொடங்கினாலும், பால் காகின் ஒரு ஸிம்போலிஸ்டாக பின்னாட்களில் மாறுகின்றார்.
2.
பாரிஸில் வான்கோவைப் பார்க்கபோனபோது, தற்செயலாக அங்கே பால் ஸிஸானுக்கான சிறப்பு ஓவியக்கண்காட்சி நடைபெற்றது எனது நற்பேறு எனச் சொல்லவேண்டும். பால் ஸிஸானை, பிகாஸோ தனது ஆசானாகக் கொள்கின்ற அளவுக்கு பிகாஸோ போன்றவர்களை ஸிஸான் பாதித்திருக்கின்றார். பால் ஸிசானுக்கும், எழுத்தாளர் எமிலி ஸோலாவுக்கும் இடையிலிருந்த அரிய நட்பைப் பார்க்க விரும்புவர்கள் "Cezanne and I(Emily Zola)" என்ற திரைப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைப்பேன்.
பின் - இம்பிரஷனிசத்திலிருந்து, பிகாஸோ அவரின் பிரசித்தமான கியூபிஸத்தை முன்னெடுக்கிறார். இன்னொருபுறத்தில் குறுகிய காலத்தில் நின்று நிலைத்த ஃபாவிஸத்திற்கு உதாரணமாக ஹென்றி மத்தியூஸின் ஓவியங்கள் ஆகின்றன.
எப்படி புகைப்படக் கருவியின் அறிமுகம் ஓவியங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அவ்வாறே முதலாம்/இரண்டாம் உலகப்போர்கள் அனைத்துக் கலைகளையும் குலைத்துப்போட்டதுபோல ஓவியத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உலகப்போர்கள் ஏற்படுத்திய மாற்றங்களினூடாக எல்லாவற்றையும் மறுவரைவு செய்யவேண்டிய நிலையில் அரூப ஓவியங்கள் (abstract) தோன்றத்தொடங்கின்றன.
அதன் தொடர்ச்சியில், எல்லாவற்றுக்கும் காரண காரியங்கள் இருப்பதை நிராகரித்து சர்ரியலிஸம் அறிமுகமாகின்றது. அதன் உச்சத்தைத் தொட்டவராக சல்வடோர் டாலி நமக்கு ஓவியங்களினூடாக அறிமுகமாகின்றார். இதுவரை ஐரோப்பாவிற்குள் சுழன்றாடிய ஓவியக்கலையின் புதிய பாய்ச்சல்கள் அமெரிக்காவிற்குள் நிகழத்தொடங்கின்றன.
உலகப்போரின் நிமித்தம் சலிப்பும் வெறுமையும் அடைந்த கலைஞர்கள் அமெரிக்காவுக்குக் குடியேறவும், புதிதாக 'நியூயோர்க் பள்ளி' என்ற அடையாளத்தோடு அரூப வெளிப்பாட்டியம் (abstract impressionism) நமக்கு ஜாக்சன் போலாக் போன்றவர்களினூடு அறிமுகமாகின்றது.
3.
சி.மோகனின் இந்த நூலை வாசிக்கும்போது, நாம் இந்த ஓவிய வகைகளையும், அவை ஏன் தோன்றியன என்பதையும் எளிதாக அறியமுடியும். மோகன், ஒவ்வொரு முக்கியமான ஓவியர்களின் மூன்று ஓவியங்களையும் இந்தக் கட்டுரைகளில் எடுத்துக்கொண்டு, அவை பற்றி விரிவாக நமக்கு அறிமுகஞ்செய்கின்றார். இந்த ஓவியங்களை நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும், நாம் கவனிக்காதுவிட்ட புள்ளிகளை நம்மை உன்னிப்பாகப் பார்க்கச் செய்வதில்தான் இந்தப் புத்தகம் முக்கியமாகின்றது. உதாரணத்துக்கு மோகன், டாலியின் 'புனித அந்தோணியாரின் இச்சை' (The Temptation of St. Anthony) என்ற ஓவியத்தை விபரிக்கும்போது, இதில் இவ்வளவு நுணுக்கமான விடயங்கள் இருக்கின்றதா என்று எனக்கு வியப்பு வந்தது.
இந்த நூலில் ஒவ்வொரு ஓவியமும் வர்ணத்தோடு அசல் ஓவியத்துக்கு நிகராக அச்சிடப்பட்டிருப்பதால், மோகன் இவை பற்றி விபரிக்கும்போது அதை நாம் இன்னும் நெருக்கமாகப் பார்க்கமுடிகின்றது. தற்செயலானது என்றாலும் மோகன் இதில் விபரிக்க எடுத்துக்கொண்ட ஓவியங்களில் அரைவாசிக்கும் மேலானவற்றை நான் நேரிலே பல்வேறு மியூசியங்களில் பார்த்திருக்கின்றேன் என்பது எனக்களிக்கப்பட்ட வெகுமதியெனத்தான் கொள்ளவேண்டும்.
இப்படி வெகு நேர்த்தியாகவும், சிரத்தையாகவும் ஒவ்வொரு ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் மோகன் அறிமுகப்படுத்தியதைப் போல, இவ்வாறாக நமது ஈழத்து ஓவியர்களையும் யாரேனும் நமக்கு அறிமுகப்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்குமென ஒரு பெருமூச்சு வந்து மறைந்துபோனது.
..........................................
(Nov 25, 2020)
0 comments:
Post a Comment