உமாவின் திரை சார்ந்த கட்டுரையை முதன்முதலில் 'மூன்றாவது மனிதன்' இதழில்தான் வாசித்திருக்கவேண்டும். அப்போது அவர் அதில் தொடர்ச்சியாகப் பத்தி எழுதிக்கொண்டிருந்தார். அன்று தமிழில் வரும் எல்லாத் திரைப்படங்களையும் ஒன்றுவிடாது பார்த்துக்கொண்டிருந்த என்னைப்போன்ற ஒருவனுக்கு, அதில் கொஞ்சம் தடாலடியாக உமா எழுதிக்கொண்டிருந்தவை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், உள்ளிழுத்துக்கொண்டவை. ஆனால் இன்று அவர் எழுதிய கட்டுரைகளை 'மோகத்திரை'யில் தொகுத்துப் பார்க்கும்போது மூன்றாம் மனிதனில் எழுதிய கட்டுரைகள் பின்தள்ளிப் போய்விட, அவர் திரைசார்ந்தவர்களை ஆழமும் விரிவாக எழுதிய நீண்ட கட்டுரைகளே எனக்கு நெருக்கமாகின்றன.
இந்தத் தொகுப்பில் சினிமா அனுபவங்கள். ஆளுமைகள்/அஞ்சலிகள், பத்தி எழுத்துக்கள் என உமா எழுதியவை பகுத்துத் தரப்படுகின்றன. சினிமா ஆளுமைகளில் நடிகை காஞ்சனா பற்றியும், எப்படி திரைப்படம் பார்க்கும் அனுபவங்கள் காலத்தோடு மாறுகின்றன என்பதைப் பற்றியும் எழுதப்பட்டவை என்னளவில் முக்கியமானவை. மற்றவர்கள் திரைப்படங்கள் குறித்து எழுதுவது போலின்றி உமா மெல்லிய நகைச்சுவையுடனும், கறாரான விமர்சனப் பார்வையுடனேயே அநேக கட்டுரைகளை எழுதுகின்றார். உதாரணத்துக்கு 'வேட்டைக்காரன்' படத்தில் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் படபடவென்று சுட்டபோது ஒருவர் பயத்தால் தியேட்டரை விட்டே ஓடிப்போனார். 'பாசமலர்' பார்த்த துயரத்தில் ஒருவர் செத்தே போனார்' (ப. 41 ) என்றும் 'கதாநாயகன் கதாநாயகியிடம் உச்சிமுதல் உள்ளங்கால்வரை காட்டும் மோப்பசக்தி' (ப 46) என்றும் குறிப்பிடும்போது நம்மையறியாமலே சிரிப்பு வந்துவிடுகின்றது.
இன்னொரு இடத்தில் எப்படி திரை இரசனை காலத்தோடு
மாற்றிவிட்டதென்பதை ஒரு காலத்தில் முக்கியமான திரைப்படமாக இருந்த சிறிதரின் கல்யாணப்
பரிசை முன்வைத்து இவ்வாறு எழுதுகிறார்: "இன்றைய தினத்தில் 'கல்யாணப் பரிசை' புதுமையான படைப்பாக யாரும் கொள்ளமாட்டார்கள்.
விக்கல்களுக்கும் கேவல்களுக்கும் மிகைத் தியாகங்களுக்கும் இன்று வரவேற்புக் கிடைப்பதில்லை.
தனது குழந்தையை முன்னாள் காதலிக்குக் கல்யாணப் பரிசாக வழங்கிவிட்டு நடையைக் கட்டுவது
இன்றைய ரசிகனுக்குப் பெரும் புதுமையாகத் தென்படப்போவதில்லை. மனைவியையே மாற்றானுக்குப்
பரிசாக வழங்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்துசெல்லும் பரந்தமனம் கொண்ட கதாநாயகர்கள் தமிழ்த்திரைக்கு
இன்று வந்துவிட்டார்கள்." (ப. 60). எனச் சொல்லுமிடம் புன்னகையை வரவழைக்கும் தருணமாகும்.
இந்தத் தொகுப்பில் பாலுமகேந்திரா, மகேந்திரன், காஞ்சனா, சிறிதர் போன்றோர்
பற்றி உமா எழுதியவை தன்னளவில் முழுமையானவை. பாலுமகேந்திராவைச் சந்தித்ததைப் போல,
எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.செளந்தரராஜன் ஆகியோரை
நேரில் சந்தித்து உமா எழுதிய கட்டுரைகள் சுவாரசியமானவை. எம்.எஸ்.வியும், டி.எம்.எஸ்ஸும் அவர்களின் அந்திமக் காலத்தில் இருக்கின்றார்கள். உமா இரசித்த
இவர்களின் பாடல்களை அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.
அவர்களால் இவர் குறிப்பிடும் எல்லாப் பாடல்களையும் மீளக்கொணர முடியாவிட்டாலும்,
இப்படியொருவர் தங்களின் பாடல்களை நினைவுபடுத்துகின்றாரே என நெகிழ்ச்சிகொள்கின்றனர்.
மகேந்திரன், பாலச்சந்தர்,பாலுமகேந்திரா, சிறிதர் போன்றோரைப் பற்றி விரிவாக எழுதிய
உமா, ஏன் ருத்ரைய்யா பற்றி எழுதவில்லையென யோசித்துப் பார்த்தேன்.
ஓரிரு படம் என்றாலும் தமிழ்த்திரைச்சூழலில் ருத்ரைய்யாவின் 'அவள்
அப்படித்தானுக்கு' ஒரு முக்கியமான இடம் இருக்கின்றது. எத்தனையோ
திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டும் இந்தத் தொகுப்பில் ஒரேயொரு இடத்தில் மட்டுந்தான்
போகின்றபோக்கில் அவள் அப்படித்தான் குறிப்பிடப்படுவது சற்று வியப்பாகவே இருந்தது.
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தவை சினிமா
அனுபவங்கள், ஆளுமைகள்/அஞ்சலிகள் என்கின்ற முதலிரு பகுதிகளாகும்.
உமாவின் வீட்டுக்குப் போயிருந்த ஒவ்வொருபொழுதும் அவரின் தனிப்பட்ட நூலகத்தைப் பார்க்கவே
ஆவல் கொள்வேன். அங்கே நூல்களும், திரைப்படங்களும் மிகுந்த நேர்த்தியாக
அடுக்கப்பட்டிருக்கும். அதேயளவு நேர்த்தியுடனும், இரசனையுடனும்
கூடவே மெல்லிய நகைச்சுவையுடனும் உமா இத்தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார்.
..............................
(Nov 29, 2020)
0 comments:
Post a Comment