நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழ் மொழிபெயர்ப்புக்கள் குறித்து..

Wednesday, May 11, 2022

 

மிழில் நிறைய மொழிபெயர்ப்புக்கள் அண்மைக்காலமாக வந்துகொண்டிருக்கின்றன. அவை நிச்சயம் நம் மொழிக்கு வளஞ் சேர்ப்பவையாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. சிலவேளைகளில் ஒரே புத்தகத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தமிழாக்கம் செய்கின்றனர். அதில் தவறேதும் இல்லை. வெவ்வேறு மேம்பட்ட மொழியாக்கங்கள் வரும்போது நாமின்னும் மூலநூலுக்கு நெருக்கமாகப் போகவும் கூடும். ஆனால் அந்த நூல் ஏற்கனவே மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் அதை எங்கோ ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அறமாகும்.


முன்னைய காலத்தில் இப்போது போன்று 'உடனே தேடிப்பார்க்கும்' இணைய வசதிகள் இருக்கவில்லை. ஆனால் இப்போது கொஞ்ச நேரம் எடுத்துத் தேடினாலே, ஏற்கனவே ஒரு நூல் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தால் அறிந்துகொள்ளமுடியும். எனவே அதை இயன்றளவு தமிழாக்கம் செய்பவர்கள் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் சினுவா ஆச்சுபேயின் ஒரு நூலின் மொழியாக்கத்தைப் பார்த்தபோது, எல்லோரும் அது முதன்முதலாக தமிழாக்கம் செய்யப்பட்டதுபோல பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அது ஏற்கனவே மொழியாக்கம் செய்யப்பட்டதை நான் சில நண்பர்களிடம் குறிப்பிடத்தான், அவர்களுக்கே அப்படி அந்த நூலுக்கு ஒரு மொழியாக்கம் முன்னர் வந்தது தெரியவந்தது.

அவ்வாறே பென்யாமினின் 'ஆடு ஜீவிதம்' இற்கு அண்மையில் ஒரு புதிய தமிழாக்கம் வந்தபோது, அந்த நூலை பல வருடங்களுக்கு முன்னரே தமிழில் வாசித்துவிட்டேனே என்று தோன்றியது. பிறகு அது முன்னர் எஸ்.ராமன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வந்து நான் வாசித்ததை கண்டறிந்தேன். இப்போது ஜே.எம்.கூட்ஸியின் ஒரு நூலின் தமிழாக்கம் வந்திருக்கின்றது. அதை ஏற்கனவே எஸ்.பொ தமிழாக்கம் செய்திருக்கின்றார். ஆனால் ஏற்கனவே வந்த எஸ்.பொவின் தமிழாக்கம் குறித்து எவரும் எழுதியதைப் பார்க்க முடியவில்லை.


ந்தக் குறிப்பை புதிதாக தமிழில் மொழிபெயர்ப்புக்களைச் செய்பவர்கள் மீது 'புகார்' கூறுவதற்காக எழுதவில்லை. இவ்வாறு தமிழாக்கம் செய்பவர்களின் உழைப்பை மதித்து, அதேசமயம் இதில் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்பதைச் சுட்டவே இதை எழுதுகின்றேன்.

அத்துடன் இன்று வரும் பல பழைய மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் (முக்கியமாய் ரஷ்ய இலக்கியங்கள்) முன்னட்டையில் தமிழாக்கம் செய்தவர்களின் பெயர்கள் இல்லாமலே வெளியிடப்படுகின்றன. அது அன்று மொழியாக்கம் செய்தவர்களின் உழைப்பையும் நேரத்தையும் இருட்டடிப்புச் செய்வதற்கு நிகரானது. அந்தப் பெயர்களை முன்னட்டையில் வெளியிட்டு அவர்களுக்கு சிறிய கெளரவத்தையாவது கொடுக்கவேண்டும். ஒரு வேற்றுமொழி நூல் தன்னைத்தானே தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டு வருமளவுக்கு 'தொழில்நுட்பப்புரட்சி' இன்னும் நம்மை வந்து சேர்ந்து விடாததால் பெயர்களை முகப்பில் இட்டு ஒரு சிறு மதிப்பையாவது அந்த மொழிபெயர்ப்பாளர்க்குக் கொடுக்கவேண்டும். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்று உயிரோடு இல்லாதபோது, அவர்களின் பணிகளுக்காய் நாம் நினைவில் கொள்ள, இதைவிட வேறொரு சிறந்த விடயம் நமக்கு இருக்கப் போவதில்லை.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் சொல்லவேண்டும். அண்மைக்கால நூல்கள் பலதைப் பார்க்கும்போது, எனக்குள் நெடுங்காலமாக உறுத்திக்கொண்டிருக்கின்ற விடயமிது. ஒரு நூலை மறுபதிப்புச் செய்யும்போது அது முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டை கட்டாயம் அந்நூலிற்குள் குறிப்பிடவேண்டும். இன்னொரு பதிப்பகம் அதை மீள்பதிப்புச் செய்தாலும், அந்த நூல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஆண்டை குறிப்பிடாது வெளியிடுவது எவ்வகையிலும் நியாயமாகாது. ஒரு புதிய வாசகருக்கு அது இப்போதுதான் வெளிவருகின்றது என்கின்ற தவறான தோற்றத்தையே கொடுக்கும். எனவே அனைத்து பதிப்பகத்தாரும் இதையும் நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

*********************

(Mar 12, 2022)

0 comments: