நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Tick, Tick... Boom!

Saturday, May 21, 2022


நேற்று காலை வேலைக்குப் போனபோது, நான் இறங்கிய ரெயின் நிலையத்தில், ஒரு பெண் பாலே நடனமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இளவேனில்காலம் வந்துவிட்டாலும் குளிர் இன்னும் போகவில்லை. பனிக்காலத்துக்கான குளிரங்கியை அணிந்துகொண்டு இன்னமும் வெளியே நடமாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் பெண்ணோ எளிய ஆடைகள் அணிந்து, கால் விரல்கள் மடங்க வெறும் தரையில் நடனமாடிக் கொண்டிருந்தார்.


இவ்வாறு தெருவில் நடனமாடுபவர்களை, பாடுபவர்களை, இன்னபிற நிகழ்கலைகளை நிகழ்த்துபவர்களைக் காணும்போதெல்லாம் கலை என்பதும் என்னவென்பதையும், கலைஞர்கள் என்பவர்கள் யார் என்பதையும் மீண்டும் மீண்டும் திருத்தி வரைவிலக்கணம் எழுதவேண்டும் என நினைப்பேன்.


கிட்டத்தட்ட இப்படியான ஒருவர்தான் ஜோனதன் லார்ஸன் (Jonathan Larson). நியூ யோர்க்கில் வறுமைக்குரிய பகுதியில் ஹீட்டர் இல்லாத ஒரு அடுக்கத்தில் வாழ்ந்து, தனது கலையில் விளிம்புநிலை மனிதர்களை உள்ளடக்கி 35வயதில் இறந்துபோன ஒருவர் அவர். இசைகோர்ப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து, சடுதியாக மறைந்துபோன ஜோனதனின் வாழ்க்கை சுவாரசியமானது.

ஜோனதன் ஒரு உணவகத்தில் உணவு பரிமாறுபவராக வாரவிறுதிகளில் வேலை செய்தபடி, நியூ யோர்க்கின் பிரபல்யமான இசை நாடகங்களில் தனது காலைப் பதிக்க முயன்றபடி இருக்கின்றார். எட்டு வருடமாக எழுதி, இசையமைத்து, மீண்டும் மீண்டும் திருத்தி அமைத்த அவரின் இசை நாடகத்தின் முதல் வரைவு மறுக்கப்படுகிறது. அவரின் அன்றையகால நண்பர்கள் பலர் 90களில் கொடூரமாக இருந்த எயிட்ஸால் ஒவ்வொருவராக இளவயதிலேயே இறந்தும் கொண்டிருக்கின்றார்கள்.

ஒழுங்கான வருமானமின்மை, இப்படியே எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருப்பது என்று நம்பிக்கையிழந்து பிரிந்து செல்கின்ற காதலி போன்ற பல துயரத் தத்தளிப்புக்களோடு ஜோனதன் இசையை எழுதியெழுதிச் செல்கிறார். அவர் இசையை எல்லாவற்றிலும் காண்கின்றார். நீந்தும்போது எழுத்தாக இசையின் வடிவங்கள் தோன்றுகின்றன. காதலியை அரவணைக்கும்போது விரல்களில் இசை அரூபமாய் உள்ளே ஊறுகின்றது.

இவ்வாறாக அதுவரை இருந்த இசை நாடகங்களில் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்ற ஜோனதனின் படைப்பு வழமைபோல நிராகரிக்கப்படுகின்றது. அவரின் ஏஜென்டாக இருப்பவர் ஜோனதன் இவ்வாறு நிராகரிப்படுவதைப் பார்த்து, ஒரு நல்ல படைப்பாளி தனது படைப்பை பிறர் நிராகரிக்க நிராகரிக்க, அடுத்தெடுத்து எழுதிக்கொண்டு செல்வார், நீயும் அவ்வாறே இசையை எழுதிக் கொண்டு போ என்கின்றார்.

எட்டு வருடங்களாக எழுதிய படைப்பு நிராகரிக்கப்பட, அவருக்கு வயதும் 30 ஆயிற்று, இப்படியே ஒரு வறுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டு, காதலையும் இழந்துகொண்டு கலையில் ஈடுபடுவது சரியா என்று குழம்புகின்ற ஜோனதனை கலையே மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது.

அவர் அடுத்த 5 வருடங்களில் எழுதிய இசை நாடகமே Rent. அது முற்றுமுழுதான வடிவம் பெற்று, அரங்கேற்றத்துக்கு தயாரான முதல்நாள் ஜோனதன் சடுதியாக இறக்கிறார். 'The show must go on/Inside my heart is breaking/ My makeup may be flaking /But my smile, still, stays on' என Queen பாடியது போல, ஜோனதனின் Rent அரங்கேறுகிறது. விமர்சகர்களால் பாராட்டபடுகிறது. அமெரிக்காவின் இசை நாடக வரலாற்றிலே நீண்ட வருடங்கள் தொடர்ச்சியாக (12 வருடங்கள்) நடந்த இசைநாடகங்களில் ஒன்று என்ற பெருமையை ' Rent' பெறுகின்றது.

ஜோனதனின்ஒரேயொரு இசை நாடகம், அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கும் பயணித்து பெரும் வெற்றி பெறுகின்றது. அத்துடன் அதுவரை இருந்த அமெரிக்க இசை நாடக வடிவத்தை Rent மாற்றியமைக்க வைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் கதையை இசை நாடகத்திலும் உயிரோட்டமாக எல்லோரும் இரசிக்கும்படி செய்யலாமென்று ஜோனதன் காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.

ஒழுங்கான கதகதப்பு அடுப்பில்லாதும், சரியாக வாடகை கொடுக்க முடியாதும் மிகவும் வறுமையில் வாழ்ந்த ஜோனதன் இறந்தபின் அவரது எஸ்டேட்டுக்குச் சொந்தமாக 40 மில்லியன் டொலர்கள் வந்து சேர்ந்திருக்கின்றது. ஜோனதனின் நண்பர்கள் அவர் வாழ்வில் கஷ்டப்படுவதைப் பார்த்து, சாதாரண வேலையொன்றுக்குப் போக அவருக்கு அறிவுரை செய்யும்போது, பணத்தை விட கலைதான் முக்கியமென்று கூறிய ஜோனதன், இந்த 40 மில்லியனைப் பார்த்தும் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டிருக்கக் கூடும். ஏனென்றால் ஜோனதனுக்கு நன்கு தெரியும், கலைக்கு முன்னால் மற்ற எல்லா விடயங்களும் அவருக்கு சிறுதூசிதானென்று.

ஜோனதனின் Rentஇற்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட அவரது இசை நாடகம் 'Tick, Tick... Boom!'. அது இப்போது அதே பெயரில் திரைப்படமாகவும் வந்திருக்கின்றது.

(திரைப்படம்: Tick, Tick... Boom! )

(Mar 26, 2022)

0 comments: