உதிரும் நினைவின் வர்ணங்கள் – இளங்கோ; விலை ₹150; வெளியீடு: அகநாழிகை, 26 ஜெயமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு – 603001, இந்தியா; மின்னஞ்சல்: aganazhigai@gmail.com, கைபேசி: +91 999 454 1010
இவ்வருடம் ‘கான்’ திரைப்பட விழா உக்ரேன் அதிபரின் பேச்சுடனேயே ஆரம்பமானது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விழாவின் அரசியல் நோக்கம் பற்றி சமூகவலைத் தளங்கள் கேள்வி எழுப்பின.
2015இல் ‘தீபன்’ படம் திரையிடப்பட்டதுடன் ‘கான்’ திரைப்பட விழா பற்றி கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. ஒரு சமூகத்துக்கு எதிரான திரைப்படம், அதன் பிரதான திரையிடலில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட விருதும் வழங்கப்பட்டது. சமூக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக இனங்களுக்காக எதிர்க் குரல் எழுப்பிய ஷோபாசக்தி இதன் கதாநாயகன். கடந்த 28 வருடங்களாக எந்தவொரு இந்தியத் திரைப்படமும் ‘கான்’ விழாவில் திரையிடப்படவில்லை என பலர் கவலைப்பட்டனர். ஆனால், ‘தீபன்’ படத்தின் இறுதி 15 நிமிடங்கள் தெலுங்கு மசாலாப் படங்களையே ஒத்துள்ளது.
இன்று உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் நல்ல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்று கூறினால் அது தவறானது. திரைப்பட விழாக்களுக்கெனத் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே சமயம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படும் பல படங்கள் பார்க்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. கொரோனா ஒரு மாற்றத்தை இங்கு ஏற்படுத்தியுள்ளது. இணைய வழியில் பல விழாக்கள் நடைபெறுகின்றன. பல தளங்களில் கவனிக்கப்படாத பல படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன.
இதனை இங்கு கூறுவதற்கு காரணம், இளங்கோவிற்கும் திரைப்பட விழாக்களுக்கும் ஒரு உறவுப் பாலம் உள்ளது என்பதற்காகவேயாகும். ரொரன்ரோவில் நடைபெற்ற பல தமிழ்க் குறும்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களைப் பற்றிய தனது விமர்சனத்தையும் அறிமுகத்தையும் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் இளங்கோ எழுதியுள்ளார். பல விழாக்களில் நடுவராக இருந்திருக்கின்றார். இத் திரைப்பட விழாக்கள் புதிய படைப்பாளிகளுக்கான களத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. இங்கு கருத்தியலும் திரைமொழியும் கவனத்திற் கொள்ளப்படும். புதிதாக படமெடுப்பவர்களுக்கு இது ஒரு பயிற்சிக் களமாகக் கூட மாறும். இளங்கோ தனது விமர்சனங்களில் இதனைக் கருத்திற் கொண்டுள்ளார். பல படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொண்டுள்ளார். ரொரன்ரோ தமிழ் திரைப்பட உலகை நன்கறிந்தவர்ளில் ஒருவர் இளங்கோ என்றால் மிகையாகாது.
‘உதிரும் நினைவின் வர்ணங்கள்’ என்கின்ற இந்நூலில் பல வகையான (36) படங்களைப் பற்றி இளங்கோ எழுதியுள்ளார். ஒரு சிறந்த நாவலாசிரியர், சிறந்த கதைசொல்லியாக, தனது பார்வையில் இப் படங்களை பதிவு செய்துள்ளார். ஒரு பயணியாக இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கை போராளியாக, காதல்-பாச உணர்வு கொண்ட ஒரு சக காதலனாக, நண்பனாக, போரின் பாதிப்புக்களிலிருந்து மீள முடியாத ஒரு சமூகப் போராளியாக இப் படங்களுடன் இளங்கோ பயணிக்கின்றார்.
ஒரு அரசியல் சினிமா விமர்சகனாக, நான் இந் நூலில் உள்ள மூன்று படங்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்த மூன்று படங்களும் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படங்களாகும்.
முதல் படம், ‘போராளிக்கு இட்ட பெயர்’: சில வருடங்களுக்கு முன்னர் சதா பிரணவனின் ‘போராளிக்கு இட்ட பெயர்’ என்ற குறும்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவர் துரோகியாக்கப்பட்டவர். மற்றவரால் சித்திரவதை செய்யப்படுகின்றார். தனது நண்பனின் நெருங்கிய நண்பனை சென்னையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் நீண்ட நாட்களின் பின், பேருந்து ஒன்றில் சந்தித்துள்ளான். ஆனால் ஒருவருடன் ஒருவர் கதைக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் யார், எந்த இயக்கம், இவர் யார், எந்த இயக்கம் எனத் தெரியாது எதிரிகள் போல் பிரிந்து செல்கின்றனர்.
அடுத்து, ‘லைப் ஒப் அதேர்ஸ்’: இந் நூலில் உள்ள இரு படங்கள் கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி இணைந்த பின்னர் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளன. அதில் ‘லைப் ஒப் அதேர்ஸ்’ (Life of Others) என்ற படம் மிக முக்கியமானது. இப் படம் இடதுசாரிகள் மேல் விமர்சனங்களை முன்வைக்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு உளவாளி உள்ளார் என்ற விமர்சனங்கள் மேற்கால் முன்வைக்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் மனிதாபிமானவை போன்ற போக்கை இவ்வாறான இடதுசாரி எதிர்ப்பு படங்கள் முன்வைக்கின்றன.
என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் அழகியலை அல்லது திரைமொழியை விட, அது முன்வைக்கும் கருத்தியல் முக்கியம். படம் எந்த பார்வையாளர்களை குறிவைத்து எடுக்கப்படுகின்றது, இதன் பின்னணி என்ன போன்ற விடயங்கள் என்பது எனக்கு முக்கியம். ஒரு அரசியல் படத்தை என்னால் மேலோட்டமாக பார்த்து விட முடியாது. பல படங்கள் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றன. சரித்திரத்தையே மாற்றிவிடுகின்றன. அண்மையில் வெளிவந்த ‘மேதகு’, மற்றும் சுமதி சிவமோகனின் ‘ஒரு தம்ளர்’ படங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. ‘ஒரு தம்ளர்’ படம் பற்றி அ. யேசுராசா திரைப்பட விழாவிலேயே தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். கடந்த ‘நிழல்’ இதழிலும் இப் படம் பற்றிய விமர்சனக் கட்டுரை இடம்பெற்றிருந்தது. மணிரத்தினத்தின் தேசியத்துக்கும் அமெரிக்காவின் துப்பாக்கி ஜனநாயகத்துக்கும் நெருக்கமான உறவுள்ளது.
‘லைப் ஒப் அதேர்ஸ்’ படமும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சிக்கின்றது. அதற்கப்பால் ஒரு கிழக்கு ஜேர்மனி அதிகாரி ஒருவர், இப்பொழுது சாதாரண வாழ்க்கைக்கு நுழைந்துவிட்டவர். அவரால் பாதிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் சந்திக்கும் பொழுது எழும் உணர்வுகள் போன்ற பல விடயங்களை படம் பதிவு செய்துள்ளது. (இப் படத்தை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், ஒரு தடவை கட்டாயம் பாருங்கள்)
‘அதிகாரப் போதை கூடக்கூட மனிதாபிமானம் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து விடுகின்றது’ என்று இளங்கோ இக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
இதே அதிகாரப் போர்வையைக் காப்பாற்ற முயலும் பொழுது, நாங்கள் மிக மோசமானவர்களாக மாறிவிடுகின்றோம். ‘கோல்ட் வோர்’ (பனிப் போர்) முடிவுக்கு வந்த பின்னர், மேற்கு நாடுகள் சுதந்திரமாக எதிரிகளற்று இயங்கிக் கொண்டிருந்தன. மீண்டும் ருசியா தனது எழுச்சியை உறுதிப்படுத்தத் தொடங்க, ஸ்பில்பேர்க் களத்துக்கு ‘பிரிட்ஜ் ஒப் ஸ்பைஸ்’ என்ற படத்துடன் வருகின்றார். இதுவும் பழைய சோவியத் யூனியனைப் பற்றிய படம். அரசியல் கைதிகள் பரிமாற்றம் என்றாலும் சோவியத்தை விமர்சிக்கும் படம். மீண்டும் ருசியா எழுச்சி பெறும் போதே இப்படி என்றால், சோவியத் யூனியனில் லெனினின் பின்னர் ஸ்டாலின் ஆட்சிக் காலங்களில் என்ன செய்திருப்பார்கள்.
“1919-ல் இடம்பெற்ற பல வேலை நிறுத்தங்கள் அமெரிக்காவை ஆட்டம் காணவைத்தது. இக் காலகட்டம் ‘First Red Scare’ (1917-1920) எனக் கூறப்படுகின்றது. 1929-1939 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பாரிய பொருளாதார வீழ்ச்சியானது பல அமெரிக்கர்களை இடது சாரிகளாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக ‘Second Red Scare’ (1947-1957) உருவானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் உருவானது. இக் காலகட்டத்தில் இடதுசாரிகள் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என அமெரிக்க அரசு கருதியது. விளைவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கிய House Committee on Un-American Activities (HCUA) உருவாக்கப்பட்டது. 1945இல் இவ் விசாரணைக் குழு நிரந்தரமாக்கப்பட்டது. பின்னர் 1969இல் House Committee on Internal Security என பெயர்மாற்றம் பெற்றது.
HCUAஇன் காலத்தில் பல இடதுசாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அமெரிக்க அரசு மிக மோசமான வன்முறையை இடதுசாரிகள் மீது பிரயோகித்தது. இந்த விசாரணைக் குழு கலை இலக்கியவாதிகளையும் விசாரணைக்கு அழைத்தது. ஒருவர் சற்று முற்போக்காக உரையாடினால் அல்லது எழுதினால் அவர் மீது அமெரிக்க அரசு அச்சம் கொண்டது. முற்போக்கு சிந்தனை என்பதனையே பயங்கரவாதம் எனக் கருதியது.
இவ் விசாரணைக்குழு ஹொலிவூட் படைப்பாளிகள், கலைஞர்கள் மீதும் விசாரணையை மேற்கொண்டது. குறிப்பாக திரைக் கதையாசிரியர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நடிகர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து ஹொலிவூட்டில் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. ‘ஹொலிவூட் 10’ எனப்படும் ஹொலிவூட்டின் மிக முக்கிய பத்து படைப்பாளிகளுக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டது. இவர்களில் பலர் சிறைவாசத்தையும் அனுபவித்தார்கள். இவர்கள் பதினொரு பேர். ஒருவர் ஐரோப்பாவில் குடியேறியமையால் பத்து பேர்கள் ஆனார்கள். இவர்களில் ஒருவர் Dalton Trumbo.
இந் நூலில் ‘ரம்போ’ (Trumbo) படத்தைப் பற்றிய கட்டுரையும் உள்ளது.. தமிழில் பல கட்டுரைகள் ஹொலிவூட் அரசியலைப் பற்றி வெளிவந்துள்ளன. ‘படச்சுருள்’ இதழ் சிறப்பிதழ்களையும் கொண்டுவந்துள்ளது. ‘நிழல்’ ஜூன் இதழில் மிக நீண்ட கட்டுரை ஒன்றும் வெளிவருகின்றது.
தடைசெய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் வாழ்க்கையே அமெரிக்க அரசின் சார்பில் இயங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். Screen Actors Guildஇன் தலைவராகவிருந்த முன்னால் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன் பல இடதுசாரிக் திரைக் கலைஞர்களை பற்றிய விபரங்களை அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக, தடைசெய்யப்பட்ட மற்றும் தலைமறைவான பல கலைஞர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
இளங்கோ, ரம்போவை ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் ஆக நூலில் பதிவு செய்துள்ளார். உண்மையும்கூட. விசாரணையின் போது ஒருவரையும் இவர் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றிய பல விடயங்களை பலர் காட்டிக்கொடுத்தன் மூலமே அறிந்துகொண்டார்கள். Elia Kazan போன்றவர்களை இன்னமும் இடதுசாரிகள் மன்னிக்கத் தயாராகவில்லை
ஹொலிவூட் எடுக்கும் அரசியல் படங்கள் அனைத்தையுமே மிக நுணுக்கமாக பார்க்க வேண்டியுள்ளது. ‘கிறீன் புக்’ என்ற படத்துக்கு ஒஸ்கார் சிறந்த படத்துக்கான விருதை வழங்கியிருந்தது. இதனைக் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான ஆதரவுப் படம் என பலரும் கருதினர். உண்மையில் இதன் பின்னால் உள்ள நுண் கருத்தியல், அரசியல் என்பவை மிக மோசமானது.
எனவே, ‘ரம்போ’ போன்ற படங்களைப் பார்ப்பதன் மூலம் அமெரிக்க ஜனநாயக வெளியின் எல்லைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
அமெரிக்கா தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டுக்குள் உலக நாடுகளை வைத்திருந்தது. மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிகள் அரசமைப்பதை எவ்வாறேனும் தடுத்து வந்தது. ஃபிடல் கஸ்ரோவை கொல்வதற்கு பல தடவைகள் முயற்சி செய்தனர். அவ்வாறே சிலியிலும் அமெரிக்கா தனது கைவரிசையைக் காட்டியது.
இவ் வருடம் மார்ச் மாதம் சிலியில் Gabriel Boric புதிய ஜனாதிபதியாக பதவியேற்கின்றார். 49 வருடங்களுக்குப் பின்னர் சிலியில் ஒரு இடதுசாரி அதிபர் பதவிக்கு வந்துள்ளார்.
சல்வடோர் அலண்டே 9-11-1973இல் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் சிலி மக்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். சுமார் 49 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு இடதுசாரி கப்ரியல் பொரிக் அதிபராகின்றார். இதற்கிடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட சர்வாதிகார ஆட்சியைப் பற்றி பப்லோ லைறைன், ‘ரையோலஜி’ என மூன்று படங்கள் எடுத்தார். இவற்றுள் என்னைப் பாதித்தது ‘போஸ்ட் மோர்ட்டம்’. ஆனால், இளங்கோ இந்நூலில் எழுதியிருக்கும் ‘நோ’ (NO) படமும் மிக முக்கியமானது.
இப் படம் 1988இல் பினாச்சேயின் சர்வாதிகார ஆட்சி தொடர்வதா இல்லையா என்ற வாக்கெடுப்பை மையப்படுத்தியது. ‘நோ’ பிரச்சாரம் எவ்வாறு தன்னை நிலைநிறுத்தியது என்பது இங்கு முக்கியம். இப் படத்தைப் பார்த்திருக்காவிட்டால் தயவு செய்து இளங்கோவின் கட்டுரையை வாசித்துவிட்டு ஒரு தடவை படத்தைப் பாருங்கள்.
தனி நபர் கொலைகள் மூலமாக சமூகத்திலோ நாட்டிலோ அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாது என்ற கருத்தியலை அலண்டேயின் கொலை மாத்திரமல்ல, பல கொலைகள் உலக வரலாற்றில் நிரூபித்திருக்கின்றன.
இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். தனது இணையத்தளத்தில் பல நூல்களை விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளார். இவற்றில் பல அச்சிலும் வெளிவந்துள்ளன. இந் நூலிலும் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார். ஒவ்வொரு படத்தைப் பற்றி வாசிக்கும் பொழுதும் நாமும் அவரது பார்வையுடன் இணைந்து பயணிக்கின்றோம்.
***********
நன்றி: 'அம்ருதா' - ஆடி, 2022
0 comments:
Post a Comment