கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் மொழிபெயர்ப்பில் “சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்”

Saturday, October 29, 2022

-அரசி விக்னேஸ்வரன்


1.


சில மாதங்களுக்கு முன்னர் இளங்கோ தனது புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுக உரையொன்றை ஆற்றுமாறு என்னைக் கேட்கும் வரை, ப்யூகோவ்ஸ்கியை ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு தடவைகூட நான் வாசித்திருக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு மூலமாக கொரோனாத் தடைகள் தளர்ந்திருந்த ஒரு வேனிற்காலத்தில் எனக்கு ப்யூகோவ்ஸ்கி அறிமுகமானார். ப்யூகோவ்ஸ்கி தமிழுக்கும் புதியவரல்லர், அவரது ஆக்கங்கள் ஏலவே சிலரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று அறிகிறேன். ஆனால், இலங்கைத் தமிழ்க் கவியுலகுக்கு அவர் புதியவராகவும் புதுமையானவராகவும் எனக்குத் தெரிகிறார். ப்யூகோவ்ஸ்கியை ஏன் இவ்வளவு நாள் நான் அறியாமல் இருந்தேன் என்று என்னை நானே கேட்க வைத்தது இளங்கோவின் இந்தத் தொகுப்பு. 


அறிமுகமில்லாத கவிஞர் என்றாலும் எனது வாசிப்புக்கு இளங்கோவின் முன்னுரையே பெரும்பாலும் என்னைத் தயார்படுத்திவிட்டிருந்தது. அந்தக் கவிஞரின் தனித்துவமான ஆளுமையை சுருக்கமாக முன்னுரையில் இளங்கோ பதிவிட்டிருந்தார். எழுத்தாளரையும் அவரது எழுத்துக்களையும் தனித்தனியே நோக்க வேண்டும் என்று சில வேளைகளில் நான் நினைத்திருக்கிறேன். எழுத்துக்களை எழுத்தாளரின் வாழ்க்கைப் பின்னணியில் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள முடியும் என்றும் பிறகு நான் தெரிந்து கொண்டேன். ப்யூகோவ்ஸ்கியைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களை அவரது ஆளுமையில் இருந்து பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது கவிதைகள் முழுவதும் அவரது ஆளுமை வியாபித்திருந்தது. அவர் தன் கவிதைகளில் மறுக்கமுடியாத பாத்திரமாக இடம்பெற்றிருக்கிறார். எனவே இளங்கோவின் முன்னுரை மிகவும் தேவையானதும் பயனுள்ளதாகவும் அமைந்தது. 


இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் ப்யூகோவ்ஸ்கியின் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரு வகைமாதிரியாக அமையக்கூடிய தெரிவா அல்லது இளங்கோவைக் கவர்ந்த கவிதைகளின் தெரிவா என்று தெரியவில்லை. இவற்றை இளங்கோ எப்படித் தெரிவு செய்திருந்தார் என்று அவர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கலாம். இந்தக் கேள்வி என்னுள் எழக் காரணம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒருசிலர் இளங்கோவையும் ப்யூகோவ்ஸ்கியையும் ஆளுமை ரீதியில் ஒப்பிட்டுப் பேசியமையே. 


இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளை மூன்று வகையான கருப்பொருட்கள் அடிப்படையில் பிரித்து நோக்க முடியும். ஒன்று காதல், காமம் மற்றும் ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைகள். இரண்டாவது நகர வாழ்க்கை, அதில் உழலும் மக்களின் தனிமை, அதில் கவிஞர் அவதானிக்கும் பொதுப்படையான விடயங்கள் தொடர்பான கவிதைகள். மூன்றாவது ப்யூகோவ்ஸ்கி ஒரு எழுத்தாளனாகத் தன்னைத் தானே எப்படிப் பார்த்தார் என்கிற கருப்பொருளுக்குரிய கவிதைகள். 


முதலாவது வகைக் கவிதைகளை வாசிக்கையில் ப்யூக்கோவ்ஸ்கி எவ்வளவு தூரம் ஆண்-பெண் உறவின் ஆழத்தையும் அகலத்தையும் உணர்ந்திருக்கிறார், இரசித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. காமம், கலவி என்பன பற்றி வெளிப்படையாகவே கவிதை எழுதும் அதேவேளை காதல் என்கிற நுண்ணுணர்வினையும் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், புரிந்து கொள்ளல், பிரிவு என்கிற பல விடயங்களையும் ஆழமாகவே தன் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார்,  உறவு என்பது வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்பது பொய் என்று கருதும் அதேவேளை, பிரிவு என்பதன் வேதனையையும், குற்ற உணர்வையும் பேசுகிறார். பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஒருவராக தன் கவிதைகளில் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அந்த ஒவ்வொரு பெண்ணினதும் உடலுடம் மட்டுமன்றி ஆன்மாவுடனும் இணைந்த உறவையே நாடுகிறார். 


இரண்டாவது வகைக் கவிதைகள் வாழ்க்கையின் ஒரேமாதிரியான ஓட்டத்தில் ஓடும் நகர வாசிகள் அதற்காகக் கொடுக்கும் விலை அதிகம் என்பதை உணர்த்துகிறார். தனிமை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல் நகர வாசிகளின் ஒரு பொது அனுபவமாகிறது. எல்லோருமே தனிமையில் உழல்கிறார்கள். வாழ்க்கையில் எதையோ ஒன்றிறைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்.  அவரது “தனித்து எல்லோருடனும் இருத்தல்” என்கிற கவிதை மிகப் பிரபலமானது. அதில் 


“பெண்கள் பூச்சாடிகளை சுவர்களில் 

எறிந்து உடைக்க 

ஆண்கள்  அளவுக்கதிகமாகக் குடிக்கிறார்கள்” என்கிறார். 


வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல ஒரு குடும்பத்தில் நடக்கும் தனிப்பட்ட சச்சரவாக யாரும் கருதக்கூடிய ஒரு நிகழ்வு எப்படி எல்லாருக்கும் பொதுவான ஒரு நிகழ்வாகவும் இருக்கிறது என்பதை மூன்றாம் மனிதராக, ஒரு அவதானியாகப் பதிவிடுகிறார். இதனை ஒரு முதலாளித்துவ, தனிமனிதவாத, நகர வாழ்க்கையின் மீதான ஒரு விமர்சன ரீதியான அவதானமாக அவர் வெளிப்படுத்துகிறார். 


மூன்றாவது வகைக் கவிதைகள் ப்யூகோவ்ஸ்கி என்கிற ஒரு எழுத்தாளனைப் பற்றியது. அவன் திட்டமிட்டு காற்றோட்டமான, வெளிச்சமான அறையொன்றில் இருந்து சிந்தித்து தன் எழுத்துக்களை உருவாக்கவில்லை. கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டே உருவாக்குகிறான். அவனது எழுத்துக்கள் அவனுக்கு வடிகாலாகின்றன, துணையாகின்றன, மனோதத்துவ நிபுணர் ஒருவரின் வேலையையும் அவ்வெழுத்துக்களே அவனுக்குச் செய்கின்றன. துன்பத்திலிருந்து நல்ல எழுத்துக்கள் பிறப்பதாக அவன் நம்புகிறான். ஒரு சில நல்ல வரிகளைத் தான் எழுதுவதற்காகவே கடவுளர்கள் தன்னைத் தீயில் உழல விடுகிறார்களோ என்றும் எண்ணுகின்றான். இந்த எழுத்தாளன் பிரபலமற்றவனாக இருந்து காணும் இடங்களில் அழகான பெண்களால் அடையாளம் காணப்படும் அளவுக்குப் பிரபலமானவன் ஆகிறான். ஆனால் அந்த பிரபலமான எழுத்தாளன் என்கிற அடையாளம் அவனைக் கூசச் செய்கிறது. அதை எப்படித் தன் போலியற்ற ஆளுமையுடன் ஒத்துபோக வைப்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை. 


இந்த மூன்றாம் வகைக் கவிதைகளுள்  ப்யூக்கோவ்ஸ்கி கையால் எழுதியவை, தட்டச்சுப்பொறியால் எழுதியவை மட்டுமன்றி பிற்காலத்தில் தன் எழுபதுகளில் மக்கிண்டோஸ் கணிணியில் எழுதியவையும் அடங்குகின்றன.  அவர் நீண்ட காலம் வாழ்ந்து தன் படைப்புக்களைத் தொடர்ந்து வந்திருப்பதனால் தான் அவரை 

“நிகழ்ந்துவிட்ட அதிசயம்” என்று குறிப்பிடுகின்றார் இளங்கோ.


இந்தத் தொகுப்பில் கவிதைகள் எழுதப்பட்ட ஆண்டை ஒவ்வொரு கவிதைக்கும் அடியில் சேர்த்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் காலத்திற்கேற்ப கவிதைகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். 



2.


மொழிபெயர்ப்பு என்பது ஒரு புதிய படைப்பு. அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளரது தனிப்பட்ட இரசனை, தெரிவுகள் என்பவற்றின் பாற்பட்டது. உண்மையில் இந்தத் தொகுப்பினை ப்யூகோவ்ஸ்கி, இளங்கோ ஆகிய இரண்டு கவிஞர்கள் இணைந்து எழுதிய ஒரு தனித்துவமான படைப்பாகவே நோக்க வேண்டும். 



மொழி என்பது வெறும் தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்ல. அது கலாசாரக் காவி. அந்த மொழிக்குரிய கலாசாரம், பண்பாடு, வரலாறு என்பவற்றினூடாக ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தங்கள் பல ஒவ்வொரு மொழிக்கும் வேறுபட்டிருக்கும். புனைவிலக்கியத்தை மொழிபெயர்க்கும் போது இந்த விடயத்தை இருவேறு விதங்களில் கையாள முடியும். ஒன்று மூலத்தை முழுமையான ஒரு தமிழ்ப் படைப்பாகுவது. தமிழ்க் கவிதை மரபுக்குரிய, தமிழ் வாசகர்களுக்குப் பழகிய இயல்பான மொழியில் முழுமையான ஒரு தமிழ்க் கவிதையாக எழுதுவது இந்த வகைப்படும். இந்த முறையில் மூலத்தின் உணர்வோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவத்தில் தமிழுக்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்படும்.  


இரண்டாவது வகை மூல மொழியின் கலாசார, மொழி வடிவங்களை அண்மித்திருக்கக் கூடியவாறான ஒரு மொழிபெயர்ப்பு. இந்த வகை மொழிபெயர்ப்பு தமிழில் மட்டும் வாசிப்பவருக்கு இடறுவது போல இருப்பினும், தமிழுக்கு புதிய எழுத்து வடிவங்களையும், கலாசார நுண்ணம்சங்களையும் கொண்டு வருவதில் முக்கிய பங்கினை ஆற்றும். இளங்கோவின் கவிதை மொழிபெயர்ப்பு எனக்கு இந்த இரண்டாம் வகைப்பட்டதாகவே தோன்றியது. இக்கவிதைகளை  ஆங்கிலத்தில் வாசித்தேனா தமிழில் வாசித்தேனா என்று கூட மறந்து கருப்பொருள் மட்டும் மனதில் நின்றது. 


முன்னுரையில் இளங்கோ தான் மௌன வாசிப்புக்குரிய கவிதைகளையே கூட விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் மௌன வாசிப்புக்குரியவை அல்ல என்று ஆரம்பத்தில் அபிப்பிராயப்பட்டதாகவும் கூறுகிறார். தமிழ்க் கவியுலகைப் பொறுத்தவரை, கவிதையும் ஓசையும் காலங்காலமாகப் பின்னிப்பிணைந்தவை. எதுகை மோனையெதுவுமற்ற புதுக்கவிதைகளில் கூட உரத்து வாசிக்கும் போது வெளிப்படும் உணர்வு கவிதைக்கு புதிய பரிணாமத்தைத் தரவல்லது. ஒரு கவிதை  மௌன வாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உகந்ததாக ஒரே நேரத்தில் இருக்கக்கூடும். இவ்விரண்டு வாசிப்பு முறைகளும் வெவ்வேறு அனுபவங்களைத் தரவும் கூடும். 


மூலக்கவிதையின் ஒரே வரியைத் திரும்பத்திரும்பக் கூறுதல் போன்ற உரத்த வாசிப்புக்குரிய அம்சங்களை இந்த மொழிபெயர்ப்பிலும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழியாக்கும் போது வரிகளைப் பிரிக்கும் இடங்கள், அவற்றின் வரிசைக்கிரமம் என்பவற்றில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் இக்கவிதைகளை மேலும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். 


புலம்பெயர் தமிழ்க் கவிதை உலகுக்கு மிக அண்மித்த கருப்பொருட்களைக் கொண்ட இக்கவிதைகளைத் தமிழில் கொண்டு வந்ததற்கும் அவற்றை வாசித்து அபிப்பிராயம் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பினை அளித்ததற்கும் இளங்கோவிற்கு நன்றி. 


*************************


(பி.கு: தொரொந்தோவில் 2022 மே மாதம் நடந்த இளங்கோவின் புத்தக வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிமுக உரையின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவமே இக்கட்டுரையாகும்)


நன்றி: 'அம்ருதா' - புரட்டாதி, 2022

0 comments: