கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 34

Friday, May 31, 2024

ஓவியம்:  Gva


சில வாரங்களுக்கு முன் ஈழத்தில் நாங்கள் படித்த பாடசாலையில் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தோம். இப்போது அங்கே கற்றுக் கொண்டிருக்கும், விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ‘ஊட்டச்சத்து மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை’யாக அதை அமைத்திருந்தோம்.


நாங்கள் படித்த பாடசாலை பெண்களும், ஆண்களும் கற்கின்ற ஓர் ஊர்ப் பாடசாலை. நகரத்துப் பாடசாலைகளுக்குரிய வளங்கள் எமக்குக் குறைவென்றாலும், விளையாட்டிலும், கலைகளிலும் எமக்குரிய தனித்துவங்களை உடையவர்கள். விளையாட்டில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அடைவுகள் தனித்துக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.


அதேசமயம், பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பதால், பெண்களுக்குரிய உடல்சார்ந்த பிரச்சினைகள், ஊட்டச்சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும் முக்கியமானவை என்பதால், வழமையான பயிற்சிப் பட்டறையுடன் அவர்களுக்கும் தனித்து ஒரு பகுதியை இந்நிகழ்வில் செய்திருந்தோம்.

இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையாக இருப்பதை நமது பாடசாலைச் சூழலை அவதானித்த ஊரிலிருந்த நண்பர்கள் தெரிவித்தார்கள். இந்தத் துறையில் அனுபவமுள்ள இரண்டு வைத்தியர்கள் எவ்வித கட்டணமும் இன்றி பயிற்சிப் பட்டறையைச் செய்வதற்கு இசைந்தார்கள். இது முதல் முயற்சி. நாங்கள் 30 40 மாணவர்கள் வந்தாலே போதும் எனத்தான் திட்டமிருந்தோம். நிகழ்வை 3 மணித்தியாலங்களுக்குள் அமைத்திருந்தோம். மாணவர்கள் உரைகளைக் கேட்பதாக மட்டுமில்லாது அவர்களும் நிகழ்வில் ஒரு முக்கிய பாகமாக இருக்கவேண்டுமென விரும்பியிருந்தோம். மேலும் வந்திருந்த மாணவர்களுக்கு ஆரோக்கியமில்லாத Junk Food வழங்குவதில்லையென்பதில் கவனமாக இருந்தோம். உள்ளூரிலேயே தயாரித்து வழங்கப்பட்ட மோதகம், உளுந்து வடை, பால் போன்றவற்றை வழங்கும் உணவுப் பட்டியலில் சேர்த்திருந்தோம்.

நாம் எதிர்பார்த்தற்கு மேலாக 100 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் மட்டுமில்லை, பயிற்சியாளர்களும் இது உபயோகமுள்ளதாக இருந்ததைத் தெரிவித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் ஒரே வகுப்பு மாணவர்களாக இணைந்து இதற்கு முன்னும் வெவ்வேறு உதவிகளைச் செய்திருந்தோம். எனினும் இயன்றளவு எமது பாடசாலையைத் தாண்டி ( எமது பாடாசாலைக்கு உதவி செய்ய வெவ்வேறு Batch மாணவர்கள் இருப்பதால்) நாம் தேவை இருக்கும் பிற பாடசாலைகளுக்கே (பளை,மன்னார், தென்மராட்சி) என இதுவரை செய்திருந்தோம்.

இந்நிகழ்வை ஒரு பரிட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்திருந்தோம்.இவ்வாறு ஊரிலிருக்கும் பாடசாலை/ஊர்களுக்கும் உதவி செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் தனியே நிதிசார்ந்த உதவியை மட்டும் செய்யாது இவற்றைப் போல பலவற்றைச் செய்யலாம். நாங்கள் படித்து வெளியே வந்தபோது, எமக்கு நிதிமேலாண்மை குறித்தோ, உறவுகள்/உறவுச்சிக்கல்கள் குறித்தோ எவ்வித அறிவும் இருக்கவில்லை. அவற்றைப் பள்ளிக்காலங்களில் அறிந்திருந்தால் வீணாகக் காலங்களை பின்னாட்களில் விரயமாக்கி இருக்கத் தேவையில்லை என்று நினைப்பதுண்டு.


மேலும் முறைசார்ந்த கல்வியைக் கற்றலைப் போல, விளையாட்டு/கலைகள் போன்றனவும் ஒரு மனிதர்க்கு எவ்வளவு அவசியம் என்பதை படிக்கும் காலங்களிலேயே எடுத்துரைக்கலாம். அவரவர் அவரவர்க்குரிய துறைகளை பின்னாட்களில் தெரிவு செய்ய இவை ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடும்.

அன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வந்து பலர் எமக்கு பயிற்சிப் பட்டறைகள் செய்ததால்தான் எனக்கு நாடகம், மிருதங்கம், சதுரங்கம் போன்றவற்றில் மேலதிக ஆர்வம் வந்தது. இவ்வாறான பல விடயங்கள் நகரப் பாடசாலைகளில் படிப்பவர்க்கு எளிதாகக் கிடைக்கும். எங்களைப் போன்ற‌ ஊர்ப் பாடசாலைகளில் படிப்பவர்க்கு இவற்றை அறிவதற்கு/பழகுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் அதேசமயம் இவ்வாறான விடயங்களை 'இவர்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிக் கொடுக்காது, ‘நாங்கள் இதை அறிவோம், எங்களை இவ்வாறான விடயங்கள் மாற்றியது/மகிழ்ச்சியைத் தருகின்றது, முடிந்தால் நீங்கள் அறியுங்கள்/கற்றுக் கொள்ளுங்கள்’ என்கின்ற மனோநிலையில் இவற்றைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அவ்வாறே புலம்பெயர்ந்து இருப்பவர்களும் ஊரில் ஏதேனும் நற்காரியங்கள் செய்யப்போகின்றார்கள் எனில் ‘நாங்கள் கொடுக்கின்றோம்/நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்' என்கின்ற மனோநிலையை முற்றாகத் தவிர்த்து, 'நாமனைவரும் பகிர்ந்து கொள்ளுவோம், வாருங்கள்’ என அழைப்பதாக இருக்கவேண்டும்.

*************


(Apr 29, 2024)

0 comments: