கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சல்மான் ருஷ்டியின் 'கத்தி'

Saturday, June 01, 2024

 

ல்மான் ருஷ்டியின் 'கத்தி'யை (Knife: Meditations After an Attempted Murder) வாசித்துக் கொண்டிருக்கின்றேன். உயிர் போகுமளவுக்கு 15இற்கு மேற்பட்ட கத்தி குத்துக்களை வாங்கி ஒரு கண்ணை இழந்துவிட்ட பிறகும், வலிகள்/வடுக்கள்/உளச்சிதைவு என பலவற்றை அனுபவித்த பிறகும் ருஷ்டியின் எழுத்துக்கள் முன்பிருந்த அதே வீரியத்துடன் எழுந்து வருகின்றன. குத்திய 23 வயது நபரை ‘The A’ என்று ஒரு பெயரிலியாகவே அழைப்பது மட்டுமில்லாது, அந்தக் கொலைகாரரை மன்னிக்கும் மனோநிலையும் ருஷ்டிக்குள் ஏதோ ஒருவகையில் இதில் கனிந்து வருகின்றது. இந்நூலின் முதலாவது அத்தியாயமான ‘மரணம் என்னும் தேவதை'யில் அந்தக் கத்திக்குத்து நடந்த நிகழ்வையும், அதுவரை இருந்த இயல்பு வாழ்க்கை இனி என்றைக்கும் இல்லையாகிப் போனதையும் மிகத் துல்லியமாக விபரிக்கின்றார். நமக்குள்ளும் எதுவென்று சொல்ல முடியாப் பாரம் ஏறிவிடச் செய்கின்றது.

அந்தக் கொலைகாரர் தன்னைத் தாக்க வருகின்றார் என்று உணர்ந்த பிறகும் மேடையில் இருந்து ஏன் தான் தப்பியோடவில்லை/ திருப்பித் தாக்குவதற்கான எந்தச் சிறுமுயற்சியும் செய்யவில்லை என்பதைத் தொடக்க அத்தியாயத்தில் ருஷ்டி அசைபோடுகின்றார். விழுந்த 15 இற்கு மேலான குத்துக்கள் அனைத்துமே அவரின் முன்பக்கத்தில்யே விழுந்திருக்கின்றன. கழுத்தில் பலமான குத்தல்கள். இரத்தம் கொப்பளிக்கத் தொடங்க, வைத்தியசாலை செல்லும்வரை பெருவிரலால் தன் கழுத்தை அழுத்தி வைத்திருந்தவரை மட்டுமின்றி அந்த வைத்தியசாலையில் இருந்து ஹெலிகொப்டரில் இன்னொரு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அப்படி கழுத்தில் கட்டைவிரல் வைத்திருந்தவரையும் 'thumb' men என்று நகைச்சுவையாகச் சொன்னாலும், அவர்களைப் போன்றவர்களின் ஆபத்துக்கால உதவிகளாலேயே ருஷ்டி மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றார் என்பது வாசிக்கும் நமக்கு நன்கு புரிகின்றது.

இப்படி அவலமான சூழ்நிலையை விபரிக்கும்போது கூட, ருஷ்டிக்கு அவர் வாசித்த பல நூல்கள் நினைவுக்கு வருகின்றன. மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டு காலத் தனிமையில்' தொடக்கமான “Many years later, as he faced the firing squad…” வாக்கியத்தை குறிப்பிடுகின்றார். என்னுடைய அந்த கடைசி இனிமையான இரவை நினைக்கும்போது, எதிர்காலத்தின் இருள் எனது நினைவுகளில் படிகின்றது. ஆனால் இப்படி நடக்கப்போகின்றது என்று என்னை நான் எப்படி எச்சரிக்க முடியும்? என்னால் இதை ஒரு கதையாக மட்டுந்தான் உங்களுக்குச் சொல்ல முடியும் என்கின்றார்.

அவருக்குப் பிடித்த பிரேஸிலிய எழுத்தாளரின் நாவலின் முக்கிய பாத்திரம், கல்லறைக்குள் இருந்து கதை சொல்லும். இவ்வாறு மார்க்வெஸ்ஸை மட்டுமில்லை, கத்தி/கொலைகார கத்தி மாறுவதற்கு காஃப்கா உள்ளிட்ட பலரின் நூல்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டுகின்றார்.

40 வருடங்களுக்கு முன் பத்வா கொடுக்கப்பட்டபோது வராத மரணம், ஏன் இப்போது தனது 75 வயதில் வந்திருக்கின்றதென கேள்வி எழுப்புகின்றார். இத்தனைக்கும் அந்தக் கொலைகாரர் இவரின் சர்ச்சைக்குள்ளான 'சாத்தானின் வசனங்களை' வாசிக்கவேயில்லை. ருஷ்டி குறித்த இரண்டொரு காணொளிகளையும், அவரின் ஏதோ ஒரு நூலின் பக்கங்களையும் மட்டும் இந்தக் கொலைகாரர் வாசித்திருக்கின்றார்.

ல்வேறு நாடுகளின் அரசியல் பிரச்சினைகளால் தஞ்சம் கேட்டு வந்த எழுத்தாளர்களுக்கென்று ஒரு தெருவையே ருஷ்டியின் நண்பர்கள் அமைத்திருந்தார்கள். அப்படி அரசியல் தஞ்சம் பெறும் எழுத்தாளர்களை எப்படி அரவணைக்கவேண்டுமென்று ருஷ்டி 20 வருடங்களுக்கு முன் ஒரு உரையற்றியபோது கேட்டவர்களே இப்படி அந்தத் தெருவில் நிறைய வீடுகளை இவ்வாறு அரசியல் தஞ்சம் பெறும் எழுத்தாளர்களுக்கென்று அமைத்திருந்தார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு நிகழ்வுக்காய்ப் பேசுவதற்கு ருஷ்டி வந்தபோதே அவரைக் கொலைகாரர் தேடி வந்திருக்கின்றார் என்பதுதான் அவலமானது.


காஃப்காவின் ‘விசாரணை’யில் ‘கே’யின் கழுத்தை ஒருவர் பிடிக்க, மற்றவர் கேயின் இதயத்தில் சுழற்றிச் சுழற்றிக் கத்தியால் குத்துவார். கே இறக்கும்போது அவர்களில் ஒருவர் ‘"Like a dog!" he said, it was as if the shame of it should outlive him. என்று சொல்வதாக அந்த நாவல் முடியும். ருஷ்டியும் மீண்டும் உயிர் தப்பாமல் போயிருந்தால் ‘விசாரணை’ நாவலின் நாயகன் 'கே' போல ஒரு முடிவை அடைந்திருப்பார். அதிஷ்டவசமாக அவர் தப்பிப் பிழைத்ததால் நமக்கு அந்த வலியின் கதையைச் சொல்கின்றார்.

ருஷ்டி ஓரிடத்தில் என்னிடம் கத்தியோ, துப்பாக்கியோ இல்லை, என் வசம் மொழி மட்டுமே இருக்கின்றது. என்னுடைய எதிர்ப்பைக் காட்டும் 'கத்தி' இந்த நூலாகும். மிகத் தெளிவாக, எந்தக் கதையாடலையும் என் எழுத்தால் கையாள முடியும் என்கின்றார்

*********

(Apr, 2024)

0 comments: