கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - ‍ 42

Tuesday, July 30, 2024

னித்திருந்து தியானம் செய்வதைப் பார்க்க, கூட்டாக தியானம் செய்வது அதிக பலனளிக்கக் கூடியது. முக்கியமாக அங்கே ஓர் ஆசிரியர் இருந்து வழிநடத்தும்போது நாம் தியானத்தின் ஆழங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும். கடந்த ஞாயிறு ஒரு புத்த மடாலாயத்தில் முழுநாள் தியானம் நடைபெறுகின்றது என அறிந்து சென்றிருந்தேன். காலையில் எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை தியானம், ஆசிரியருடன் கேள்வி-பதில், ஜபித்தல்(chanting) என நிகழ்ச்சி நிரலில் இருந்தன.


விடிகாலையில் எழுந்து சற்று தூரம் பயணித்து, விரும்பிய ஒரு விடயத்துக்காகச் செல்வது மகிழ்ச்சி தரக்கூடியது. காலையிலே எல்லாமே புத்துணர்ச்சியாக இருக்கும். மனித சஞ்சாரம் குறைவாக இருந்து, மனதிலும் எவ்வித தேவையில்லாச் சிந்தனைகளும் தோன்றாத எந்த நாளுமே என்னைப் பொருத்தவரை ஆசிர்வதிக்கப்பட்ட நாளே. தோட்டப் பண்ணைகள் கடந்து, வயல் காற்றை சுவாசித்தபடி விகாரையைப் போய்ச் சேர்ந்தேன்.

ஆசிரியர் புத்தரை/புத்தரின் போதனைகளைப் பற்றி சிறிய அறிமுகம் தந்துவிட்டு தியானத்தைத் தொடங்கி வைத்தார். ஒன்றரை மணித்தியால தியானத்தின் தொடக்கத்தில் பேச்சின் மூலம் வழிகாட்டிய ஆசிரியர் பின்னர் எங்களை அமைதியில் இருக்க விட்டார். எப்போதும் பேசிக் கொண்டிருந்தால் தியானத்துக்குள் மட்டுமில்லை, அமைதிக்குள்ளும் போகமுடியாது. காலைத் தியானம் முடிய, காலை உணவுக்கான இடைவெளி. நான் எதிர்பார்த்தது வேறு. கிடைத்ததையிட்டு மகிழ்வாக இருப்பதுதான் புத்தனாவதற்கான வழி என்று அமைதியடைந்து கொண்டேன். என்றாலும் மிக அருமையான 'சாய்' தேநீர் கிடைத்தது. அது இங்கே சில கடைகளில் 'சாய் டீ' என விளம்பரப்படுத்தி, எமது காசைக் கொள்ளையடிக்கும் கழனித்தண்ணீர் போல இல்லாது மிகநன்றாகவே இருந்தது. அதை வழங்கிக் கொண்டிருந்தவர்களும் அவ்வளவு கனிவாக இருந்தார்கள்.

இதற்கு முன் சில புத்த விகாரைகளுக்குச் சென்றபோதும், அவை கருணையையும், சகோதரத்துவத்தையும் ஏதோ ஒருவகையில் கைவிட்ட மாதிரித் தெரிந்ததால், பிறகு அந்த இடங்களுக்குப் போக மனம் அவாவியதில்லை. அதற்கு மாறாக என்னைப் போன்றவர்கள் அந்நியர்களாக இருந்தாலும் இந்த மடாலாயம் நம்மை மற்றவர்களாக உணரவைக்காதது நிம்மதியாக இருந்தது.


காலை இடைவெளி முடிந்தபின், இசைத்தலோடு தியானம் தொடங்கியது. இலங்கையில் இருக்கும் தொலைகாட்சி 30-40 அலைவரிசைகளிலாவது, பிக்குகள் புத்தரின் போதனைகளைப் போதிக்கின்றோம் என்று எங்களைப் பிரித்தோதிக் கொன்று கொண்டேயிருப்பார்கள். இங்கே புத்தரின் பாடங்களைப் பாளியில் இசைத்து, பின்னர் ஆங்கிலத்தில் பாடியபோதுதான், இவ்வளவுகாலமும் பாளியைத்தான் சிங்களம் என்று நினைத்துக் கொண்டேன் என்று அறிந்துகொண்டேன். வெட்கந்தான் ஆனால் அவமானப்பட ஏதுமில்லை. ஏனெனில் நான் தமிழ்ப் பெளத்ததைப் பரப்பும் பணியில் முதலாவதாக களத்தில் இறங்காலாமோவென யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். யாரோ ஒரு சிங்கள ஆய்வாளர், தமிழ்ப் பெளத்தம் பற்றியொரு ஆய்வுக் கட்டுரையை தமிழகத்தில் வாசித்தபோது, முடிவுரையாக தனது காலத்தில் இலங்கையில் தமிழ்ப் பெளத்ததிற்காக ஒரு விகாரை தொடங்கப்படுவதைப் பார்க்கும் கனவு தனக்கு இருக்கின்றதாகச் சொல்லியிருந்ததாக நினைவிருக்கின்றது.

பாளியில்/ஆங்கிலத்தில் இசைத்த பிறகு ஆசிரியரின் உரையும், கேள்வி பதில்களும் நீண்டன. Mindfulness என்றால் என்ன, ஒருவர் multi- tasking செய்வது mindfulness தானா, 'விடுதலையான (அல்லது ஞானமடைந்த) மனம்' எப்படி இயல்பு வாழ்க்கையைப் பார்க்கும் என்று பல கேள்விகள் கேட்கப்பட்டன. சிலர் தியானத்தை/புத்தரை அறிதலைவிட, நிறைய நூல்களை வாசித்து எளிய கேள்விகளைக் கூட சிக்கலான மொழியில் பயமுறுத்திக் கேட்டனர். அவர்களுக்கு கல்குதிரையும், கோணங்கியின் நாவல்களையும் அனுப்பி உங்களை விட நாங்கள் மொழியைத் திருகிச் சிக்கலாக்குவதில் வல்லவர்கள் என்று சவால் விட ஆசை எழும்பினாலும், கோணங்கி செய்த சில காரியங்களால் வந்த ஆசையை வாயிற்குள் மென்று விழுங்கினேன்.

அடுத்து நடந்ததுதுதான் அற்புதம். மதிய உணவு இடைவெளி விட்டார்கள். காலைச் சாப்பாட்டினால் ஏமாற்றமடைந்த நான் தொங்கிய தலையுடன் சாப்பாட்டு இடம் நோக்கிச் சென்றேன். என்னே ஒரு அற்புதக் காட்சி. இங்கு திருமண விழாக்களில் தருவதைப் போல பல்வேறு உணவுகளைக் காட்சிப்படுத்தி வைத்திருந்தார்கள். மாங்காய் சாலட்டிலிருந்து, அப்பளம்வரை கண்கொள்ளாக் காட்சி. அதைவிட அதிர்ச்சியும், வியப்பும் தந்த விடயம் என்னவென்றால் முதன்முதலாக ஒரு புத்தவிகாரையில் சில்லி சிக்கனைப் பரப்பியிருப்பதைப் பார்த்தேன். எம் ஐயன் புத்தனே நீரொரு மகானென நான் மானசீகமாய் வணங்கிவிட்டு சிக்கனை ஒரு பிடிபிடித்தேன். நூடில்ஸில் கூட முட்டை நிறையக் கலந்திருந்தார்கள். என் (மானசீக) ஆசிரியரான தாய் இதை ஏற்றுக் கொள்வாரோ தெரியாது. ஆனால் பசியிருந்தால் உணவுக்காய் மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடலாம் அதில் தப்பில்லை என்றே புத்தர் சொல்லியிருக்கின்றார் எனச் சொல்கின்ற ஓர் உசாத்துணை நமக்கு இருக்கின்றது. இதை இங்குள்ள பூர்வீகக்குடி மக்களும் இன்னொருவகையாய்ச் சொல்கின்றார்கள். ஒரு மிருகத்தை நீங்கள் வேட்டையாடினால் அதன் ஒரு பகுதியும் வீணடிக்கப்படாது பயன்படுத்தப்பட வேண்டுமென்று. அதனால்தான் அவர்கள் மிருகத்தின் மாமிசத்தை மட்டுமில்லை, எலும்புகள், தோல்கள் உள்ளிட்ட அனைத்தையும் தமது நாளாந்த வாழ்க்கைப் பயன்பாட்டுக்குப் பாவிக்கின்றார்கள்.

இதற்குப் பிறகும் பல்வேறுவகையான பழங்கள் (எனக்குப் பிடித்த பலாப்பழமும், மாம்பழமும் அங்கே இருக்கவில்லை, அடுத்தமுறை வைக்கச் சொல்லிக் கேட்கவேண்டும்), குளிர்களி என்று வைத்திருந்தார்கள். இங்கே நிறைய பிக்குகள் வசித்து வருகின்றார்கள். ஒரு பிக்கு எப்போதும் சிரித்த முகத்துடன் ஓடியாடிக் கொண்டிருந்தார். இங்குள்ள இன்னொரு பிக்கு அவரின் புத்த போதனை காணொளிகளால் உலகம் முழுதும் பிரபல்யமானவர். அவரைச் சந்தித்தால் ஒரு சுயமி அவரோடு எடுக்கவேண்டும் என்பது ஒரு நண்பரது வேண்டுகோள். என் மனம் ஆனந்தத்தில் ததும்பிக் கொண்டு இருக்கும்போது இவ்வாறான சுயமி எடுக்கும் சிறுபிள்ளைத்தனங்களில் ஈடுபடுமா என்ன? என் விருப்பம் அறிந்த அந்த கனிவான பிக்குவும் என் கண்களுக்குக் காட்சியளிக்காது எங்கெயோ மறைந்து போயிருந்தார்.

புத்தமடாலயத்தோடு ஆறவமர நடக்க அதைச் சுற்றி இடமும் இருந்தது. நிறைய பூக்களுடன் அந்த வெளிப்பரப்பும் அழகாகக் கோடையில் தெரிந்தது. நான் பழங்களையும், குளிர்களியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து பகோடாவுக்கு அருகில் சென்றமர்ந்தேன். அதை வழிபட்டவர்களின் முகங்களும், கொளுத்தப்பட்ட சாம்பிராணிக் குச்சிகளும், பிரகாசமான வெயிலும் ஒருவித அமைதிக்கு அழைத்துச் சென்றது. அப்போது ஒரு வெள்ளைக்கார பிக்கு ஒவ்வொரு மரமாய்ச் சென்று குருவிகள் சாப்பிட தொங்கவிடப்பட்ட சாடிகளில் தானியத்தை இட்டபடி தரைக்கு நோகாமல் நடந்து கொண்டிருந்தார்இப்படித் தியானமும், மாமிசமும் அருளப்படும் ஓரிடத்தில் நானும் ஒரு பிக்குவாக மாறலாமோ என்றுகூட எண்ணத் தோன்றியது.

திய உணவு இடைவெளியின்போது ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். அவர் சுவீடனைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் பிள்ளைகள் ஒருவர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தததால் சுவீடனைக் கைவிட்டு கனடாவுக்கு வசிக்க வந்துவிட்டார். பிள்ளைகளும் வளர்ந்து அவரவர் வாழ்க்கையை வாழப் புறப்பட்டபின் தனக்கு வந்த தனிமையில் என்ன செய்வதென்று உறைந்து போயிருக்கின்றார். கிறிஸ்தவப் பின்னணியில் இருந்து வந்தவர்க்கு அதைத் தாண்டிய ஆன்மீகமொன்று தேவைப்பட்டிருக்கின்றது. இந்த புத்த மடாலயம் தனக்கு மிகுந்த அமைதியைத் தருகின்றது என்றார்.

இப்படியான முழுநாள் தியான வகுப்புக்கு மட்டுமில்லை, சும்மா இங்கே வந்து அமர்ந்தாலே தனக்கு அமைதி கிடைக்கின்றதென்றார். மேலும் காலையில் 45 நிமிடங்கள் காரில் பயணித்து வருவதை நிம்மதியாக இருக்கின்றதென்றார். அவரின் கடைசிப்பிள்ளை அரைவாசி சுவீடிஷ் மிகுதிப் பாதி பங்களாதேஷி என்று சொன்னார். பரவாயில்லை, நன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றார்/வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என நினைத்தேன்.

மீண்டும் தியான வகுப்புத் தொடங்கியது. பாளியில் ஜபித்தல் பின்னர் தியானம். உணவு உண்ணும்போது, மெதுவாக இரசித்துச் சுவைத்து மட்டுமில்லை, எப்போதும் முக்கால்வாசி வயிற்றை மட்டும் நிரப்பவேண்டும் என்று நான் கற்ற ஸென் வழி சொல்கின்றது. அதை இன்று பின்பற்றததால் தியானத்தில் நல்ல உறக்கம் வந்தது. நான் தான் விதியை மீறிவிட்டேன் என்று நினைத்து அவ்வப்போது விழித்துப் பார்த்தால், என் வரிசையில் எல்லா ஆண் சிங்கஙகளும் தமது நிலை மறந்து குறட்டை கூட விட்டு 'ஊழ்கத்தை'க் கொண்டாடிக் கொண்டிருந்தனர். கூட்டுத் தியானத்தில் மட்டுமில்லை, கூட்டு உறக்கத்திலும் நான் கலந்துகொண்ட மகிழ்ச்சி என்னைப் பற்றிக்கொண்டது.

அன்று மாலை ஐரோப்பாக் கிண்ணத்திற்கான ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்குமான இறுதி ஆட்டம் இருந்தது. அதே நேரத்தில் யுவன் சந்திரசேகரோடு ஒரு கலந்துரையாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் ஆட்டத்தைப் பார்க்காதுவிட்டால் எனது எஸ்பநோல் தோழிகள் மனம் உடைந்துவிடுவார்கள் என்பதால், தியானத்தின் முழுப்பகுதியும் முடியமுன்னர் மடாலயத்தை விட்டு வெளியேறத் தொடங்கினேன். ஆனால் மீண்டும் அங்கே வருவேன் என்பது மனதில் உறுதியாகி விட்டிருந்தது.

அரிய விடயங்கள் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கின்ற‌. நமக்குத்தான் அவற்றின் அருமையை புரிவதில்லை. எளிதாகக் கிடைக்கும் விடயங்களுக்கு மதிப்பிருப்பதில்லை என்று நமக்குச் சொல்லியிருப்பதால் அவற்றை அனுபவிப்பதில் நாம் அவ்வளவு ஆர்வமாகக் காட்டுவதில்லை. இலக்கியமோ, ஆன்மீகமோ, பயணமோ எதுவாயினும் ஒத்த எண்ண அலைவரிசையைக் கொண்ட மனிதர்களோடு இருப்பதும் உரையாடுவதும் நன்மை பயக்கக்கூடியது. அவ்வாறு ஓர் அலைவரிசையை உருவாக்கக் கடினமானால், நான் சந்தித்த அந்தப் பெண்மணியைப் போல தனித்துக் கூட நாம் விருப்பும் விடயங்களைத் தேடிச் செல்லலாம்.

தியான
வகுப்பின்போது ஆசிரியர், நாம் கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோ வாழப்போவதில்லை, நிகழில் வாழ்கின்றோம் என்று சொல்கின்றோம். ஆனால் அது கூட தவறாகிப் போய்விடலாம். ஏனெனில் மீண்டும் நாம் சும்மா வார்த்தைகளின் சுழலுக்குள் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கின்றது. எனவே நிகழில் இருக்கின்றோம் என்பதையும் உறூதியாகப் பற்றிக்கொள்ளாமல், முற்றுமுழுதாகக் கைவிட்டுவிடவேண்டும் என்று சொன்னார். ஏனெனில் எல்லா சொற்களும், கருத்துக்களும் நம்மை மீண்டும் அலசி ஆராயும் இறுக்கமான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும். அதனால் எவ்விதப் பலனும் ஆழ்மனதுக்கு கிடைக்கப்போவதில்லை.


அதனால்தான் ஸென்னில் ஆசிரியராக இருப்பவர்கள், ஏதேனும் தமது சீடர்களுக்குச் சொல்லும்போது அது அந்தக் கணத்தில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாவிடின் அந்த விடயத்தைக் அப்படியே கைவிட வேண்டுமெனச் சொல்வார்கள். அந்தக் கணத்தில் நாம் விழிப்பாக இருந்தால் அந்த விடயத்தைச் சட்டென்று விளங்கிக் கொண்டிருப்போம். அப்படியாக இல்லாதவிடத்தில் அதற்கான அர்த்தம் என்னவென்று கேட்டுக் கேட்டு பின்னர் நாம் குழம்பத் தேவையில்லை.

புத்தர் போதித்துக் கொண்டிருக்கும்போது பூச்சொரிகின்றது. அப்போது போதிசத்துவரான‌ மஞ்சுசிறி அப்படியான‌ ஆனந்தத்தில் திளைக்கின்றார். மஞ்சுசிறி அந்தக் கணத்தில் ஞானமடைந்துவிட்டது புத்தருக்குத் தெரிகின்றது. அவருக்கு ஒரு மலரைக் கொடுத்து புத்தர் வாழ்த்துகின்றார் என்றொரு கதை இருக்கின்றது. ஆனால் ஞானமடைதல் புத்தருடன் அவ்வளவு நெருக்கமாக இருந்த ஆனந்தருக்கு புத்தரின் இறப்பின் பின்னே நிகழ்கின்றது. ஆனந்தா ஏதோ ஒருவகையில் புத்தரைக் கைவிட முடியாதவராக புத்தர் வாழ்ந்த‌ காலங்களில் இருந்திருக்கின்றார். ஒன்றை முற்றுமுழுதாக கைவிடாது இன்னொரு புதிய விடயம் நிகழ வாய்ப்புக்கள் அரிதென்பதற்கு ஆனந்தா நமக்கு உதாரணமாக இருக்கின்றார். அது புத்தராக இருந்தாலென்ன, நமக்குப் பிடித்தமான‌ விடயங்களாக‌ இருந்தாலென்ன நாம் முற்றுமுழுதாக அவற்றைக் கைவிடத்தான் வேண்டும்.

'மகிழ்ச்சிக்கான பாதையென்று எதுவுமில்லை, மகிழ்ச்சியே பாதை' என்பது எனது ஆசிரியரான தாய் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் நாம் வார்த்தைகளில் மட்டும் இதை மனப்பாடம் செய்து வைத்திருக்கின்றோமா அல்லது மகிழ்ச்சியாக நம்மை ஆக்கிக் கொள்கின்றோமா என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.

************


(July 16)


கார்காலக் குறிப்புகள் - 41

Monday, July 08, 2024

 

'Star' படத்தை இப்போதுதான் பார்த்தேன். இது திரையங்கிற்கு வந்தபோது எழுதப்பட்ட எதிர்மறை விமர்சனங்களைப் போல, அவ்வளவு மோசமான ஒரு திரைப்படம் போலத் தெரியவில்லை. இதுவரை நான் கவினின் திரைப்படங்கள் (Dada, Lift உள்ளிட்ட) எதையும் பார்க்கவில்லை. தமிழ்த்திரைப்படங்கள் என்பதே இரத்தமும், கத்தியும், துப்பாக்கியுமென வன்முறைச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இதில் கதை மட்டுமில்லை, திரைக்கதையும் நேர்த்தியாகக் கொண்டு வரப்பட்டது போலத் தெரிந்தது.


இது ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்கும், லெளதீக வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியைப் பற்றிப் பேசுகின்றது. இப்படத்தில், பொதுவான நம் திரைப்படங்களுக்குரிய ஆண் பாத்திரமே மையமெனினும், உண்மையில் இந்தக் கனவுகள் கலைந்து போகின்றவர்கள் பெரும்பாலும் பெண்களேயாவர். நம்மோடு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்ற பெண்கள் பின்னர் திருமணம்/குடும்பம் என்று செல்கின்றபோது அவர்கள் முற்றிலும் வேறொருவராக மாறவேண்டியிருக்கும் என்பதைக் கண்டுகொள்கின்றோம். ஆகவே இந்தக் கனவுகள் ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்குரியது என்பதை மறந்து பார்த்தால், இத் நம் எல்லோரினதும் உள்மன உந்துதல்கள் எனலாம்.


என ஞாபகம் சரியென்றால், இந்தத் திரைப்படத்தில் வரும் நாயகன் தனது காதல் உறவுகளில் toxic ஆக இருக்கின்றார் என்கின்ற ஒரு முக்கிய குற்றச்சாட்டு முன்னர் வைக்கப்பட்டதென நினைக்கின்றேன். ஆனால் அது toxic ஆக இருந்தாலும் நாயகன் அதனைப் பின்னர் உணர்ந்து கொள்கின்றவராகக் காட்டப்படுகின்றது. அதன் நிமித்தம்தானே நாயகன் அவரில் அவ்வளவு பாசம் வைத்திருக்கும் தகப்பனிடம் கன்னத்தில் அறையும் வாங்குகின்றார். மகனின் கனவுகளுக்காய் சிறுவயது முதலே உந்துதலாக இருக்கும் தந்தையே கை நீட்டி அடிப்பது நாயகன் தன் இரண்டாவது காதலியைத் தனது கனவுகளில் நிமித்தம் அவளோடு இருக்க முடியாதென விட்டு விலகி வரும்போது அல்லவா? அது மட்டுமின்றி முதலாவது காதலியும் இவனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்வதால்தான், நாயகனின் இரண்டாவது காதலி தனது திருமணத்துக்கு நாயகனை அழைத்து வந்தற்காய் அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்கின்றாள்.

இந்த இரண்டு பெண்கள் மட்டுமில்லை, நாயகனின் கனவுகள் அடையமுடியாத யதார்த்தத்தில் காலூன்றி நிற்கின்றது என்று அடிக்கடி சொல்லும் தாயார் கூட ஒருவகையில் அவனைப் புரிந்துகொள்கின்றார். அவ்வாறுதானே பெரும்பாலான நமது அம்மாக்கள் நமது பலவீனங்களுக்கும், பொறுக்கித்தனங்களுக்கும் அப்பால் நம்மைப் புரிந்து கொள்கின்றனர். அந்தவகையில் இது கனவுகளோடு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனின் வாழ்வை 'நாயக' விம்பமாக்கி எல்லாவற்றையும் எளிதாக அடைந்துவிடுவதைக் காட்டுவதைத் தவிர்த்து இயன்றளவு யதார்த்ததுடன் ஒருவன் தனது கனவுப் பாதை நோக்கிச் செல்வதைக் காட்டுகின்றது எனச் சொல்லலாம்.

நட்சத்திரமாவது ஆவது கூட ஒரு பாவனைதான். அது எப்போதும் உதிர்ந்து போய் விடக்கூடியதென்று நம் எல்லோருக்குந் தெரியும். கடந்தகாலம், அப்படி வாழும் காலத்திலேயே உதிர்ந்து போன எத்தனையோ 'நட்சத்திரங்களை' நமக்கு அடையாளங் காட்டியிருக்கின்றது. இங்கும் ஒரு காட்சியில், நடிகராக ஒரு காலத்தில் பிரகாசித்து, பின்னர் ஜஸ்கிறிம் விற்பவராக ஒருவரைக் காட்டுவதன் மூலம் திரையுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதைக் காட்டுகின்றார்கள்.

படத்தின் இறுதிக்காட்சிகளைக் கூட சற்று வித்தியாசமாகக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்தக் காட்சிகள் எடுக்கப்படும் திரைப்படத்தில் இல்லாத காட்சிகளாய் இருந்து (நாயகனின் யதார்த்த வாழ்வில் நடைபெறுவதாக இருந்தால்) அது அவ்வளவு அபத்தமாகப் போயிருக்கும். நான் கூட ஒரு வழமையான தமிழ்த் திரைப்படமாக இந்தக் காட்சிகளின் மூலம் இது ஆகிவிடக்கூடாதென எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வாறு அந்த இறுதிக்காட்சிகளை, நாயகன் நடிக்கும் திரைப்படமொன்றின் காட்சிகளாய் ஆக்கியதன் மூலம் நுண்ணுணர்வுள்ள நெறியாளாராக இளன் இருக்கின்றார்.

இந்த படத்தின் முக்கியபாத்திரம் போல, தன் கனவுகளுக்க்காய் தமது காதல்களை/குடும்ப உறவுகளை விட்டு விலகி வந்த பலரை நாம் அறிந்திருப்போம். நேசமென்பது எமக்குரிய கனவுகளை இறுக்குகின்றது என்று நாமே தனிப்பட்டு சில காதல்களை விட்டு விலகி வந்திருக்கலாம். உண்மையில் அதற்கான காரணம் நமக்களிக்கப்பட்ட நேசமல்ல, நாம் நம் கனவுகளில் நம்பிக்கை இழக்கும்போது, ஏதோ ஒன்றில் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் தப்பி வருகின்றோம். அப்படியொரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்துகொள்வது எம் ஆழ்மனதுக்கு நிம்மதியைத் தருகின்றது. ஆனால் அது மட்டும் உண்மையில்லை என்பது பிறகான காலத்தில் நாம் எல்லோரும் அறிந்துகொள்ளும் ஒரு கசப்பான வாழ்வியல் யதார்த்தமாகும்.

************

(July 01)

கார்காலக் குறிப்புகள் - ‍40

Thursday, July 04, 2024

 

ஷோக ஹந்தகமவின் புதிய திரைப்படமான 'ராணி'க்கு வெளியிடப்பட்ட போஸ்டரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இனித்தான் Trailer வெளிவரப் போகின்றதென்றாலும், இது ரிச்சர்ட் டீ ஸொய்சா பற்றிய திரைப்படம் என நினைக்கின்றேன். ரிச்சர்ட் டீ ஸொய்சா, தமிழ்த் தாயுக்கும், சிங்கள (பறங்கிய) தந்தைக்கும் பிறந்தவர். ஒரு பத்திரிகையாளராக இருந்து தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தியதால், ஒரு இரவில் இலங்கைப் பொலிஸாரால் கடத்தபட்டு அடுத்தநாள் கொல்லப்பட்டு கடற்கரையில் வீசப்பட்டவர் ரிச்சர்ட் டீ ஸொய்சா.

90களில் இது நடக்கும்போது அவருக்கு வயது 31. தாயாருடன் வாழ்ந்து கொண்டிருந்த ஸொய்சாவை அன்று 'இனந்தெரியாத ஆயுதக்குழு' வந்து கடத்திக் கொண்டுபோய் கொலை செய்ததாகச் சொல்லப்படடாலும், அது அன்றைய இலங்கையரசு ஜேவிபி கிளர்ச்சியை அடக்குவதற்காய் உருவாக்கியிருந்த dead squad ஆலேயே அவர் கொல்லப்பட்டார் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸில் இருந்த அந்தக் குற்றவாளிகள் யாரென்று 2005இல் அடையாளங் காட்டப்பட்டபோதும், அந்தக் குற்றவாளிகள் 'உரிய சாட்சிகள்' இல்லையென்ற காரணத்தால் ஒருபோதும் கைது செய்யப்படவோ, நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இவ்வாறு தனது மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட துயரத்தோடு, மனோராணி அவர் இறக்கும்வரை (2004), இலங்கையில் இப்படிக் கடத்தப்பட்டு 'காணாமற் போனவர்களுக்கான' குரல் கொடுக்கும் ஒரு செயற்பாட்டாளாராக இருந்தவர்.

அண்மையில் மான் புக்கர் பரிசு பெற்ற ஷெகன் கருணாதிலகவின் 'மாலி அல்மெய்டாவின் ஏழு நிலாக்கள்' (The Seven Moons of Maali Almeida) நாவலில் முக்கிய பாத்திரம் ரிச்சர்ட் டீ ஸொய்சாவைப் பின்னணியாக வைத்து படைக்கப்பட்டிருப்பதை எளிதாக நாம் அறிந்துகொள்ள முடியும். 90களில் அன்றைய இலங்கை ஜனாதிபதியான பிரேமதாஸா ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் கொலையோடு தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார் என்பதை 90களில் இலங்கை அரசியல் சூழலை அவதானித்தவர்க்குத் தெரிந்திருக்கும்.

ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் கொல்லப்பட்ட உடலை கடற்கரையில் முதன்முதலில் அடையாளங்கண்டு சொன்னவர் தமிழ் ஊடகவிலாளரான தராகி சிவராம். ஒரு தசாப்தத்தின் பின் (2000களின் தொடக்கத்தில்) தராகியும், ரிச்சர்ட் டீ ஸொய்சாவைப் போல 'இனந்தெரியாதோரால்' கடத்தப்பட்டு கொல்லப்பட்டு கொழும்பின் ஆற்றங்கரையில் வீசப்பட்டவர் என்பதுதான் துயரமானது. நமது தீவு நாடு கடந்தகாலத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பற்கு இவை மட்டும் உதாரணங்களில்லை. அதற்குப் பிறகு இப்படி இனந்தெரியாதரோல் ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

ந்தப் பாதிப்பில் நானெழுதியதுதான் 'அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்' என்கின்ற சிறுகதை. புனைவின் மூலம் கண்டடைந்து கொண்ட பிரகீத்தின் மனைவியான சந்தியாவை, கடந்தவருடம் கொழும்பில் 'முள்ளிவாய்க்கால் நினைவு' நிகழ்வு நடந்தபோது நேரே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. அவரிடம் இந்தக் கதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து, பிரகீத்தை நாம் மறக்கவில்லையெனச் சொல்லி, அதைக் கொடுத்துவிட வேண்டுமென மனம் அப்போது அவாவியது.

அஷோக ஹந்தகம 'ராணி'க்கு முன் எடுத்த திரைப்படம் 'Alborada'. அது பாப்லோ நெரூடா இலங்கையில் இருந்த காலத்தைப் பின்னணியாகவும், அப்போது அவர் வலிந்து பாலியல் உறவுகொண்ட தமிழ்ப்பெண்ணை முன்னிலைப்படுத்தியும் வந்திருந்தது. இந்தத் திரைப்படத்தின் பெயரான 'ராணி' என்பது ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் தாயான மனோராணிவின் பெயரில் இருந்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவகையில் ரிச்சர்ட் டீ ஸொய்சா கொல்லப்பட்டு 30 வருடங்களின் பின்னும் இன்னும் பலரின் நினைவுகளில் இருந்து மறைக்கப்படாது இருக்கின்றார் எனச் சொல்லவேண்டும். உண்மைகளை மறைக்கலாம், ஆனால் ஒருபோதும் புதைக்க முடியாது என்பதற்கு கலை ஒரு முக்கிய சாட்சியமாகின்றது. நமது கவிஞர் இளவாலை விஜயேந்திரனும் 91இல் 'றிச்சர்ட் டி சொய்சா; உதிரமுடியாத ஒரு நினைவு' என்று ஸொய்சாவிற்காக ஒரு கவிதை எழுதியிருக்கின்றார்.

கொலைகாரர்களும், கொலைசெய்ய ஏவியவர்களும் ஸொய்சாவைப் போலத்தான் மரணத்தை ஒருநாள் சந்தித்தார்கள் (மிஞ்சிய சிலர் சந்திக்கவும் போகின்றார்கள்). ஆனால் அவர்களுக்கு வரலாற்றில் எந்த இடமும் இல்லை. மேலும், விடுதலையையும், அறத்தையும் அவாவி நின்ற மானுட நேயர்களை கலை/இலக்கியங்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை.

ஆகவேதான் தாம் நம்பிய உண்மைகளுக்காக தமது உயிரைப் பலிபீடங்களில் வைத்த ரிச்சர்ட் டீ ஸொய்சா போன்றவர்களை, அஷோக ஹந்தகம, இளவாலை விஜயேந்திரன், ஷெகான் கருணாதிலக போன்ற கலைஞர்கள் தமது படைப்புக்களின் மூலம் என்றென்றைக்கும் மறக்கமுடியாதபடிக்கு நம்மிடம் மீள எடுத்து வருகின்றார்கள். நாம் அநியாயமாகப் பலியாகிப் போன அவர்களை கருணையுடன் நினைவுகூர்ந்து, நேசத்துடன் அரவணைத்துக் கொள்கின்றோம்.

******************


(Jun, 2024)

கார்காலக் குறிப்புகள் - ‍ 39

Tuesday, July 02, 2024

 ஓவியம்: குலராஜ் (மட்டக்களப்பு)


1.

நான் வேலை செய்யுமிடம் நகரின் மத்தியில் ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றையொட்டி (Lake Ontario) இருக்கின்றது. முக்கியமான ரெயின் நிறுத்தமான யூனியன் ஸ்ரேசனில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் அந்த அமைவிடம் இருக்கின்றது. நம் பெருநகரின் பேருந்து சேவையை விதந்து மாளாது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை வேலைக்குத் தாரை வார்த்து, மிகுதியை போக்குவரத்திற்குக் கொடுக்க வேண்டி வரும். இதனால் இங்கிருப்பவர்க்கு வாழ வீடே தேவையில்லை என்று கனடிய அரசும் வீடுகளை விலையை மில்லியனுக்குக் கொண்டு சென்றுவிட்டது. மக்களின் மனம் அறிந்த நல்லரசு வாழ்க!

இடமேயில்லாதபோதும், வாவியை ஒட்டியும்/வெட்டியும் பல அடுக்கங்கள் வானை நோக்கி எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அமைக்கப்பட்டிருந்த‌ தெருக்களோ இன்னுமின்னும் சுருங்கியபடி போகின்றன. அநேகமாக ரெயின் நிலையத்திலிருந்து 2 கிலோமீற்றர்களை நான் நடந்தே கடந்து போய்விடுவேன். ஏற்கனவே ஏற்றங்களில் ஏறும்போது கால்களில் வலியொன்று வந்து போவதுண்டு. அத்தோடு அண்மையில் ஆடவரோடும், பூவையரோடும் பூப்பந்து விளையாடத் தொடங்கியதாலோ என்னவோ கொஞ்சத்தூரம் நடந்தவுடனேயே வலி விண்விண்னென்று காலில் வலி ஏறி நீண்டதூரம் நடக்கமுடியாமல் செய்கிறது. கால்களே, என் காதல்களைப் போல ஏன் என்னைக் கஷ்டப்படுத்துகின்றீர் என அவற்றிடம் கெஞ்சினாலும் அவை என் குரலைக் கேட்பதில்லை. இருவருமே அவ்வளவு பிடிவாதக்காரர்கள்!


வாவியையொட்டி வேலைத்தளம் இருப்பதாலும், பேருந்துப் பயணம் அவ்வளவு எளிதில் இல்லாதிருப்பதாலும், அந்த கட்டடத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்க்குமென தனிப்பட்ட பேருந்து சேவையை எமக்கு வழங்குகின்றார்கள். அந்த பஸ் யூனியன் ஸ்ரேசனில் இருந்து எம்மை அழைத்துச் செல்லும்.

2.
அந்தப் பேருந்துச் சாரதிகள் அவர்களின் மனோநிலைக்கேற்ப இசையையோ அல்லது சமகாலச் செய்திகளையோ போடுவார்கள். நான் இவற்றைப் பெரிதும் ஊன்றிக் கவனிப்பதில்லை. இணையத்தில் சதுரங்கம் ஆடுவதிலோ அல்லது இன்றைக்கு எந்தப் பெண் அழகான ஆடை அணிந்திருக்கின்றார் என்று என் 'இரசனை'யை வளர்ப்பதிலோ என் பெரும்பாலான நேரங்கள் போய்விடும்.

இன்றைக்கு எமது நிறுவனத்துக்கு ஒரு முறைப்பாடு வந்திருந்தது. காலையில் இதமான மனதோடு பஸ் ஏறும் எங்களுக்கு சாரதிகள் மிகவும் 'சென்ஸிட்டிவான' செய்திகளை ஒலிபரப்புகின்றார்கள். முக்கியமான மத்திய கிழக்கில் நடக்கும் போர் பற்றிக் கேட்கும்போது எம்மை அவை trigger செய்கின்றது. இதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என ஒருவர் கேட்டிருந்தார்.

இந்த முறைப்பாடை இரண்டு விதமாகப் பார்க்கலாம். போருக்குள் இருந்து வந்தவர்க்கோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்டவர்க்கோ உளவடுக்கள் இருந்து, ஆற்றுப்படுத்தும் காலத்தில் இருக்கும்போது, இவ்வாறான செய்திகள் துர்நினைவுகளை ஒருவருக்குள்
இழுத்துவிடும் ஆபத்து இருக்கின்றது. மற்றது, உலகில் என்ன நடந்தாலும், எங்கள் வாழ்வு நிம்மதியாக இருந்தால் போதும் இதையெல்லாம் கேட்க/பார்க்க முடியாது என்கின்ற மனோபாவம்.

உதாரணத்துக்கு இலங்கைக்குப் போகின்ற பெரும்பாலான இந்திய‌ தமிழ் எழுத்தாளர்க்கு, இலங்கையில் ஒரு கடும்போர் நெடுங்காலமாக நடந்ததென்ற சிறுதுளி நினைவுகூட‌ அவர்களுக்குள் இருக்காது, இலங்கையில் எனக்கு வாசகர் இல்லை என்றோ, இலங்கையில் தெருநாய்கள் அதிகம் என்று எதையெதையோ எழுதி தங்களைத்தான் முன்னிலைப்படுத்துவார்களே தவிர அங்கே ஒரு பாதிப்படைந்த தரப்பு அல்லாடிக் கொண்டிருக்கின்றதென்பது அவர்களின் 'ஊழ்கத்தில்' கூட எழாது. இவர்களால் நமது இலக்கியங்களை மட்டுமில்லை, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் எத்தகைய உளவடுக்களில் போர் நிமித்தம் சென்றோம்/இன்னும் பலர் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனதார அறிதல் கடினம்.


இவர்கள் இப்படி போரையும், போரின் பின்விளைவுகளையும் பற்றி அறிந்து இருக்க வேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயம் இல்லை. ஆனால் இந்த அறிதலினூடே இலங்கையிலிருக்கும் மக்களையும், கலை/கலாசாரங்களையும் அணுகவேண்டும். இவ்வாறுதான் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து எழுதும் பெண்களுக்குமான பார்வையை நான் முன்வைப்பேன். இந்தப் பெண்கள் எந்தச் சலுகையையும் எதிர்பார்த்து எழுதப்போவதில்லை. ஆனால் நாம் பெண்கள் எழுதும் படைப்புக்கு ஒரு பார்வையை வைக்கின்றோம் என்றால், இந்த மனநிலை நமக்குப் பின் தளத்தில் மறைமுகமாக நிற்றல் அவசியம். பெண்களுக்கு மட்டுமில்லை, தற்பாலினர்,தலித்துக்கள், திருநங்கைகள் என அனைத்து விளிம்புநிலையினர்க்கும் பொருந்தக்கூடியதே. மேலும் ஒருவர் (ஆணாக இருப்பதால்/ஆதிக்க சாதியாக இருப்பதால்) தமக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய‌ சலுகைகள் (privileges) பற்றியும் யோசித்தாக வேண்டும்.

3.
இந்த முறைப்பாடு செய்த நபர், செய்திகளில் உக்ரேன்X ரஷ்யா போர் பற்றிய செய்திகள் கேட்கும்போது இதற்குமுன் இவ்வாறுதான் முறைப்பாடு செய்தாரா என்றும் தெரியவில்லை. அவருக்கு பாலஸ்தீனத்தில் நடக்கும் இனவழிப்பு மட்டும் மனதை நோகச் செய்கின்றது என்றால், ஏனென்று அவர்தான் யோசிக்கவேண்டும். எல்லாவற்றையும் வடிகட்டி அமைதிப் பூங்காவைக் கட்டியமைப்பது சரியா என்றும் அவர் வினாவவேண்டும்.

நாம் வாழும் மேற்கத்தைய நாடுகள் மட்டுமின்றி, வாழ்வில்/மகிழ்ச்சியில் உயரதரத்தில் இருக்கும் ஸ்கண்டிநேவிய நாடுகள் ஏன் ஆயுத உற்பத்திகளை செய்துகொண்டும், ஏற்றுமதி செய்துகொண்டுமிருக்கின்றதென்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு, தொடக்கத்தில் இந்தியாவோ, பின்னாளில் பிறநாடுகளோ எமது இயக்கங்களுக்கும் இலங்கை அரசுக்கும் ஆயுத விநியோகம் செய்யாவிட்டால், அந்தச் சின்னஞ்சிறு தீவு இந்தளவுக்கு போரில் சின்னாபின்னாமாகிப் போகாது இருந்திருக்கும் அல்லவா?

நான் வேலை முடிந்து மாலை நேர நிறுவன பஸ்சிற்காய்க் காத்துக் கொண்டு நின்றேன். போக்குவரத்து ஊர்ந்து கொண்டிருந்ததால் எமக்கான பஸ் நெடுநேரமாய் வந்து சேரவில்லை. அப்போது காரில் சென்ற ஒருவர் என்னை ஏற்றிக் கொண்டார்.

அவர் எங்கள் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளாராகப் பணிபுரிபவர். அவ்வப்போது சிறு அறிமுகம் செய்துகொண்டிருந்தாலும், ஆறுதலாக இருந்து நாம் இதற்கு முன் பேசவில்லை. போக்குவரத்து ஊர்ந்து ஊர்ந்து சென்றதால் 30 நிமிடங்களுக்கு மேலாக நமது 2 கிலோமீற்றர் பயணம் தொடர்ந்திருந்தது.

அதனால் எங்களுக்குப் பேச நிறைய நேரமிருந்தது. அவர் எரித்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். எரித்தியாவை இத்தாலி, இங்கிலாந்து என்பவை காலனிப்படுத்தியவை. 1990களில் எரித்திரியா எத்தியோப்பாவிலிருந்து கடைசியாக சுதந்திரம் பெற்று தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. நிறைய நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த ஜனாதிபதியோ பின்னாட்களில் சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரின் கட்சியைத் தவிர வேறெந்த கட்சிக்கும் அங்கே இப்போது இடமில்லை. எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மக்கள் எந்தக் கேள்விகளுமில்லாது ஒடுக்கப்படுகின்றார்கள். நண்பர்களாக இருந்தாலும் மனந்திறந்து எந்த அரசியலையும் எங்கு பேசமுடியாது. அந்தளவுக்கு மக்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்றார்.


இந்த நண்பரோ ஒரு அரசியல் செயற்பாட்டாளராக அங்கே இருந்திருக்க வேண்டும் (அவர் அதை நேரடியாக்ச் சொல்லவில்லை என்றாலும் என்னால் ஊகிக்க முடிந்தது). கிட்டத்தட்ட 7 வருடங்கள் இன்னொருநாட்டில் அகதியாக அலைந்து, இப்போது கனடாவில் அஸைலம் (Asylum) அடித்திருக்கின்றார். தனது தாய் உள்ளிட்ட எவரையும் 10 வருடங்களுக்கு மேலாகப் பார்க்கவில்லை, தனது சொந்த நாட்டுக்குப் போனால் இனி தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார். மிகப்பெரும் உளவு அமைப்பை 30 வருடங்களாக எரித்திரியாவை ஆளும் ஜனாதிபதி கட்டியமைத்து விட்டார் எனச் சொன்னார். கடந்தவருடம் இப்பெருநகரில் எரித்தியாவின் ஒரு பகுதி மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, நிதியும் சேகரித்தபோது, தானும் தன் நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்து, இறுதியில் அது வன்முறையாக மாறியது என்றும் ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.

இதெல்லாம் நாம் அனுபவித்து கடந்து வந்த பாதை. எனக்கு அவர் மேல் தோழமையுணர்வு தோன்றியது. அவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, இதேதான் எமது நாட்டிலும் நடந்தது என்றேன். பாருங்கள், பெரும் போரை முடித்து வைத்தேன் என்ற பெருமிதத்தில் நின்ற ஒரு குடும்பத்து ஜனாதிபதியை, அந்நாட்டு பெரும்பான்மையின மக்களே நாட்டைவிட்டுத் துரத்தினர் என்றேன். சர்வாதிகரிகளால் அதிகாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கி அழிசாட்டியம் செய்ய முடியும். ஆனால் ஒருநாள் மக்கள் எழுச்சி கொள்வாரென்பதற்கு சிலியின் பினோச்சோவை உதாரணத்துக்குச் சொன்னேன். என்றாலும் இந்தக் கொடுங்கோலர்கள் செய்து முடித்துவிட்ட அழிவுக்கு நிவாரணிகள் கிடைப்பதில்லை. இவர்களின் அதிகார ஆசைகளுக்காக பலியிடப்பட்டவர்க‌ளும், காணாமற்போனவர்களும், தொலைத்துவிட்ட நம் வாழ்வும் மீள நம்மிடம் திரும்பி வரப்போவதில்லை என்பதுதான் மிகத் துயரமானது.


இப்போது சொல்லுங்கள், உலகம் இவ்வாறு இயங்கும்போது, நீங்கள் யுத்தம் பற்றிய செய்திகளைக் கேட்பதையே தவிர்க்கப் போகின்றீர்களென்றால், யுத்தத்திற்குள் இருப்பவர்களை/அதை நேரடிச் சாட்சியாகக் கண்டு கடந்து வந்தவர்களை/ ஒரு சொந்த நாடில்லாது அடைக்கலம் தேடி கடல்களாலும் பனிநிலங்களாலும் கள்ளமாக எல்லை கடப்பவர்களை எப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்?

***********

(June 2024)