கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்னேஷன்பூக் குறிப்புகள்

Sunday, August 11, 2024

1. இராஜாவே - Rajawe

இது போரைப் பேசுகின்ற தமிழ்/சிங்களக் கலைஞர்கள் உருவாக்கிய பாடல். எனது பிரியத்துக்குரிய நண்பர் அக்‌ஷயா  பாடல் வரிகளை எழுதியிருக்கின்றார். சிங்களப் பாடகியான நிபுணி ஹெராத் பாடலைப் பாடி, காணொளியிலும் நடித்திருக்கின்றார்.

 

அக்‌ஷயாவை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். எனக்கு அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். எனவே அந்தத் தலைமுறை போரைப் பார்ப்பதும் அதை எதிர்கொள்வதும் வேறுவிதமாக இருப்பதும் இயல்பானதே. அக்‌ஷயா பாடல்களை எழுதத் தொடங்கியபோதே அவர் அதில் நிறையச் சாதிப்பார் எனச் சொல்லிக் கொண்டிருப்பேன். பின்னர் அவர் எழுதிய ஒரு பாடலை ஷக்திசிறி கோபால் பாடியதிலிருந்து, இலங்கை அரச விருதை சிறந்த பாடலுக்காகப் பெற்றதென நிறைய உயரங்களை அடைந்தவர். 

 

எப்போது இலங்கை போனாலும் ஒருமுறையாவது அவரை எங்கேனும் கஃபேயில் சந்தித்துப் பேசிக் கொள்வேன். எனது 'மெக்ஸிக்கோ'அவருக்கு மிகப் பிடித்தமானது. நான் தமிழாக்கிய சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளை அவரது குரலில் பதிவு செய்து அனுப்பி வைக்க அதை இங்கே பகிர்ந்துமிருக்கின்றேன்.  எனக்குப் பிடித்தமான எஸ்.பொ(ன்னுத்துரை)யின் பேரப்பிள்ளையானவர் அவர். அதனால் அவர் மீது எனக்குத் தனிப்பட்ட பிரியமும் இருக்கின்றது. அக்‌ஷ்யாவிடமிருந்தே நான் நிறைய நாள் தேடிக் கொண்டிருந்த எஸ்.பொவின் 'வரலாற்றில் வாழ்தலை' இரவல் வாங்கி வாசித்தவன்.

 

இது ஒரு அழகான பாடல். பாடலின் மென்மை மட்டுமில்லை, நடிகர்களும் இயல்பாக இருக்கின்றார்கள். என்ன வன்முறையைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். போரின் கொடுமையை அப்படியே நேரடிக் காட்சிகளால் மட்டுந்தான் காட்டவேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயமும் இல்லைத்தானே.  ஆனால் கடந்தகாலத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இலங்கை 'அமைதி'யாக இருக்கின்றதென்பதை நம்பவைக்கின்ற காலத்தில் தமிழ்/சிங்களக் கலைஞர்கள் இப்படிப் பேச(பாட) வந்திருப்பது என்பதே முக்கியமானது. போரில்/வன்முறையில் இழப்புக்கள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் காணாமற் போனவர்க்கான' காத்திருத்தல் என்பது வேறுவகையான துயரம் . இந்த (சிங்கள)தமிழ்ப் பெண் அவரின் துணைவரை இழப்பதால் ஒருவகையான உளவியல் சிக்கலுக்குப் போகின்றார். அது அவருக்கு வன்முறை பரிசளித்த சாபங்களில் ஒன்று.

 

ஈழத்துச் திரை/பாடல்கள் தனக்கான தனித்துவத்தைத் தேட வேண்டுமெனச் சொல்லிக் கொண்டிருப்பவன் நான். எந்தக் கலையாக இருந்தாலும், அது பாவனையோ போலச் செய்தலோ இல்லாது, எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அசலாக இருக்க வேண்டும் என்றே விரும்புவேன். இது அப்படியான நீண்டபயணத்தில் ஒரு சிறுகாலடியெனக் கூடச் சொல்லலாம். நிறையக் காலடிகள் கூட்டாகச் சேர்ந்து நாம் ஒரு தனித்துவப் பாதையை  நமக்காக அமைக்க வேண்டும்.

 

புதுப் பாடல்கள்/புது Project கள் வரும்போது அக்‌ஷயா  என்னோடு பகிர்ந்து கொள்வார். இந்த வருடம் அவரின் வாழ்வில் இன்னும் நிறைய மகிழ்வான விடயங்கள் நடக்க இருக்கின்றன. இந்தப் பாடலுக்கு மட்டுமின்றி,  கலையின் மீதான ஆர்வத்தில் எப்போதும் இதே போன்று அக்‌ஷயா இருக்கவும் என் வாழ்த்துகள்!

 

பாடலைக் கேட்க/காண: https://www.youtube.com/watch?v=msYUqWcLJqw

 

 

2. ஒவ்வொரு குழந்தையும் முக்கியமானவர்கள் (Every Child Matters)

 

கனடாவில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் 1830இல் இருந்து 1990கள் வரை பூர்வீகக்குடிப் பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டு பாடசாலையில் -கத்தோலிக்கத் தேவாலயத்தினால்- சேர்க்கப்பட்டார்கள். இதன் மூலம் அந்தப் பூர்வீகப் பிள்ளைகள் தமது சொந்த மொழியையும், அவர்களின் கலாசாரத்தையும் அறிவதிலிருந்து பிரிக்கப்பட்டார்கள். வேர்களை இழந்த மரங்கள் வாழ முடியாது போவது போல, தமது சொந்த மொழியையும், கலாசாரத்தையும் இழந்த பிள்ளைகள் பின்னாளில் எல்லாவற்றிலிருந்தும் அந்நியமானார்கள். அத்துடன் இப்பிள்ளைகளை உண்மையில் பாடசாலையில் வைத்து வெள்ளையர்கள் கற்பிக்கவில்லை. அவர்களுக்கு பகுதி நேரம் கற்பித்துக்கொண்டு,  மிகுதி நேரம் பாடசாலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

 

இவ்வாறு பூர்வீகக்குடிப் பெற்றோரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் மொழியையும், கலாசாரத்தையும் இழந்து ஊழியமற்ற வேலையாட்களாக மட்டுமின்றி, இந்தப் பாடசாலைகளில் அநியாயமாக ஆயிரக்கணக்கில் இறந்தும் போயிருக்கின்றார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்ந்த பூர்வீகக்குடிப் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட பல நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தி அவர்களின் உடல்களில் இருக்கவில்லை. அத்துடன் இந்த ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே சில தொற்றுநோய்களை இந்தப் பிள்ளைகளுக்குப் பரப்பினார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதன் நிமித்தம் இறந்துபோன ஆயிரக்கணக்கான பிள்ளைகளை எந்தச் சுவடுகளுமின்றி பல்வேறு பகுதிகளில் புதைத்துமிருக்கின்றார்கள். அண்மையில் (2021) இல் இவ்வாறு பிள்ளைகள் புதைக்கப்பட்ட பகுதிகள் வன்கூவரில் கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டும் இருந்தது. இது குறித்த விழிப்புணர்வுக்காகவே 'Every Child Matters' என்பது தொடங்கப்பட்டது. 

 

கனடிய அரசும் இந்த அவமானம்/அழுத்தம் காரணமாக அரச பொதுவிடுமுறையாக இப்போது செப்ரெம்பர் 30 அறிவித்து அந்த நாளை - Orange Shirt Day ஆக‌-  நினைவுகூர்கின்றது.

 

 

3. எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவது?

 

நோர்வேயில் வசிக்கும் 'இளவாலை' விஜயேந்திரனின் கவிதைகளின் முழுத்தொகுப்பு ('எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவது?') அண்மையில் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தது. அவரது முதல் தொகுப்பான 'நிறமற்றுப் போன கனவு'களுக்குப் பிறகு மிகக் குறைந்த கவிதைகளே அவர் எழுதியிருக்கின்றார். ஒருவகையில் எப்போது கவிதைகளை எழுதுவதை நிறுத்தவேண்டும் என்று உணர்ந்து நிறுத்துவது கூட ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு எனத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

ஏனெனில் எம் சூழலில் பலர் தங்களைக் கவிஞர்கள் என்று எப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக காலாவதியான மொழியிலும்,  (ஏற்கனவே எழுதிய கவிதைகள்) போலச் செய்வதிலும் நம்மிடையே நிறையப் பேர் இருக்கின்றார்கள். அந்தவகையில் இனி கவிதைகள் எழுதுவதை குறைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்த விஜயேந்திரன் போற்றுதலுக்குரியவர். விஜயேந்திரனின் கவிதைகள் ஒரு காலத்தில் பதிவுகள் எனச் சொல்லலாம். இன்னும் குறிப்பாகச் சொல்வதனால் எமது போராட்ட காலத்தின் எண்பதுகளையும், புலம்பெயர் வாழ்வின் தொண்ணூறுகளையும் அவரது எழுத்துக்கள் அடையாளப்படுத்துகின்றன எனச் சொல்லலாம். அந்தவகையில் இப்போது 2020களில் இவற்றை வாசித்தாலும் நாம் அந்தக் காலத்து பண்பாட்டு/சமூகவியல் நிகழ்வுகளில் உலாவுகின்றகின்ற ஒருவராக நம்மை உருவகித்துக் கொள்ளமுடியும்.

 

விஜயேந்திரனோடு தனிப்பட்டதொரு சந்திப்பில் கதைத்துக் கொண்டிருந்தபோது, முகநூலில் எழுதும்போது இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்வேன் என்றார். ஒன்று ஏதேனும் புதிய விடயத்தைப் பகிர்ந்து கொள்வதாக இருந்தால் மட்டும் எழுதுவேன் என்றார். இரண்டு இயன்றவரை எழுத்து/இலக்கணப் பிழைகள் இல்லாது எழுத வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன் என்றார்.  இவையிரண்டும் நம் எல்லோருக்கும் பொருந்தக் கூடியதே.  

 

விஐயேந்திரன் இன்றைய காலங்களில் சூழலியலில் அக்கறையுடையவராக, ஈழத்தில் அவர் வாழ்ந்த கிராமத்திலும், கற்ற பாடசாலைச் சூழலிலும் மரங்களை நாட்டி வளர்ப்பதிலும் ஆர்வமாக இருக்கின்றார்.

 

 

4. சிவப்பு ஆடை தினம்

 

சிவப்பு ஆடை தினம் (Red Dress Day) என்பது கனடாவில் கொல்லப்பட்ட/காணாமற்போன பூர்வீகக்குடிப் பெண்களினதும், சிறுமிகளினதும் ஞாபகமாக நினைவு கூரப்படுகின்றது.  சிவப்பு ஆடை ஓர் அடையாளமாக 2010 இல் கனடாப் பூர்வீகக்குடிக் கலைஞரான Jamie Black ஆல் முன்னிறுத்தப்பட்டது. அன்று அவர் நூற்றுக்கணக்கான வெறும் சிவப்பு ஆடைகளைத் தொங்கவிட்டு இதற்கான விழிப்புணர்வைத் தொடங்கி வைத்தார். இவ்வாறு செய்ததன் மூலம் இப்படிக் கொல்லப்பட்ட பெண்களைப் பற்றியும், வன்முறைக்குட்படும் பெண்கள் தமது கதைகளைச் சொல்வதற்குமான பாதுகாப்பான பொதுவெளிகளை உருவாக்குவதே தனது முதன்மையான நோக்கமென அந்தக் கலைஞர் கூறியிருந்தார்.

 

கடந்த முப்பது வருடங்களில் (1980-2010)  இப்படி அநியாயமாக பூர்வீகக்குடிப் பெண்களும்/சிறுமிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதைத் தரவுகள் சொல்கின்றன. பூர்வீகக்குடிகளின் உடல்களிலிருந்து வெளியேறிய ஆன்மாக்கள் கடும் வர்ணங்களை எளிதாக அடையாளங் கண்டுகொள்ளும் என்பது  அவர்களுக்கிடையில் இருக்கும் ஒரு நம்பிக்கை; அவற்றில் முக்கியமானது சிவப்பு வர்ணம். இவ்வாறு சிவப்பு வர்ணத்தில் ஆடைகளைத் தொங்க விடும்போது, இறந்துபோன பெண்களின் ஆன்மாக்கள் தமது நேசத்துக்குரிய மனிதர்களை எளிதாக மீளக் கண்டடையும் என்பதை இந்த சிவப்பு ஆடை குறித்து நிற்கின்றது. தற்செயலாக ஒரு நகரத்துக்குச் சென்றபோது டூலிப் மலர்களோடு இந்த சிவப்பு ஆடைகள் தொங்கவிடப்பட்டு, கொல்லப்பட்ட/காணாமற்போன பூர்வீகக்குடிப் பெண்கள் நினைவுபடுத்தப்பட்டதைக் கண்டேன்.

 

 *************


0 comments: