கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 64

Saturday, January 04, 2025

-நினைவோ ஒரு பறவை- 


நேற்றிரவு இன்னொருமுறை தியாகராஜன் குமாரராஜாவின் 'நினைவோ ஒரு பறவை'யைப் பார்த்திருந்தேன். பார்க்கும் கணந்தோறும் புதிய அறிதல்களைத் தரும் எந்தப் படைப்பும் சலிப்பதில்லை. 'நினைவோ ஒரு பறவை' ஓர் எளிய காதல் பிரிவுக்கதை போலத் தோற்றமளிக்கக்க் கூடியவை. ஆனால் அதை ஒவ்வொரு காட்சியாகப் பிரித்தும்/இணைத்தும் பார்க்கும்போது அது வியப்பைத் தரக்கூடியது. அத்தோடு இதன் நெறியாள்கையோடு, ஒளிப்பதிவும், கலையும், இசையும் ஒவ்வொரு சட்டகத்திலும்(frame) குறிப்பிட்டுப் பேசக்கூடியவளவுக்கு மிகுந்த சாத்தியங்களுடையது.

இளையராஜாவின் பாடல்களையும், பின்னணி இசையையும் கேட்டுப் பாருங்கள். காதலின் உக்கிரமான கட்டங்களுக்கும், நெகிழ்வுறும் அனுபவங்களுக்கும் அழைத்துச் செல்லும் (இணையத்தில் தேடினால் 23 நிமிட 'நினைவோ ஒரு பறவை' இசை கிடைக்கும்). அதுபோலவே ஒளிப்பதிவும், கலையும். ஒரு மினிமலிஸ்ட் போல பொருட்கள் (முக்கியமாக சாமின் வீடு) வைக்கப்பட்டிருக்கும்; அதிலிருந்து ஒளிப்பதிவு எவ்வளவு நேர்த்தியாக குறைந்த ஒளியில் நமக்கு பின்னணியை மட்டுமில்லை, கதாபாத்திரங்களில் உணர்வுகளையும் அவ்வளவு அழகுபடுத்திக் காட்டுகின்றன.

இதில் இணைகள் முயங்கும் ஓர் காட்சியில் வரும் ராஜாவின் பின்னணி இசையை உன்னித்துக் கேளுங்கள். அந்த இசைத்துண்டுக்கு 'காமத்துப் பால்' எனப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கிராமபோன் சுழலத் தொடங்குவதில் அந்தக் காட்சி ஆரம்பிக்கின்றது. காட்சிகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் பெறுகின்றதோ, அதனோடு முயங்கி பின்னணி இசையும் உன்னதமான கணங்களை அடைந்து நம்மை வேறு விதமான உலகிற்கு அழைத்துச் செல்வதை உணருவோம். ஸ்டான்லி குப்ரிக்கின் 'Eyes Wide Shut' இன், அதன் முக்கிய பாத்திரங்கள் இரகசிய இரவு விருத்துக்கு நுழையும் காட்சியில் வெளிப்படையாக வீட்டின் பல்வேறு பகுதியில் முயங்கிக்கொண்டிருக்கும் காட்சி வரும்போது, தமிழ்ப் பாட்டு ஒலிக்கத் தொடங்கும். இதில் முதலில் பகவத்கீதையின் சமஸ்கிருத சுலோகம் பாடப்பட்டு அதனால் எழுந்த எதிர்ப்பினால், பின்னர் மாணிக்கம் யோகேஸ்வரனால் தமிழ்ப்பாட்டு பாடப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கும். மாணிக்கம் யோகேஸ்வரன் ஒரு ஈழத்தமிழர்; கர்னாடக சங்கீதத்தில் பாண்டித்தியமும், புகழும் பெற்றவர் (சென்னையில் மாணிக்கத்தின் இசைக்கச்சேரி இம்மாதம் நடைபெறப்போவதாய் எம்டிஎம்மின் பதிவொன்றில் வாசித்தேன்). இந்த ''Eyes Wide Shut' காட்சியில் இளையராஜா பின்னணி இசையைச் செய்திருப்பாரென்றால் எப்படியிருந்திருக்குமென நினைத்திருந்தேன். அப்படியொரு இளமையான காதல் உணர்வை 'நினைவோ ஒரு பறவை'யில் கொடுத்திருக்கின்றார்.

இந்தப் படத்தின் காட்சிகளின் ஆழங்களை அறிந்துகொள்ள தியாகராஜன் கொடுத்திருக்கும் பிற படங்களின் References ஐ விளங்கிக்கொள்வது அவசியமாகும். அதேவேளை இந்த References/குறியீடுகள் அறியாமலும் பார்க்கும் ஒருவர் தனக்கான திரைப்படத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இந்தப் படத்தைப் பலர் 'decode' செய்தும், இன்னும் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருப்பதுதான் சுவாரசியமானது.

சாதாரண மனோநிலையுடன் இதைப் பார்ப்பவர், எந்தக் காட்சியில் நாயகி சாம் டாட்டூவோடு வருகின்றார்/வருவதில்லை என்பது அக்கறையிருக்கவோ அல்லது கற்றாளை எப்போது பச்சையத்தோடு செழித்தும்/ எப்போது உலர்ந்தும் இருக்கின்றன என்பதைக் கூட உன்னிப்பாகக் கவனிக்காது விடலாம். எது உண்மையில் நடந்தது/எது சாம் தன் மனதில் நிகழ்த்திப் பார்த்தது/எது 'எழுதப்பட்ட அந்தப்பிரதியில்' இருப்பது என்கின்ற எண்ணற்ற மர்மச்சுழலில் விழுத்தக்கூடிய பிரதியாக இது இருக்கின்றது. மேலும் சாம் காதல் பிரிவின் பின் போகின்ற உளவியல் ஆலோசகரே, காதல் ததும்பி வழிகின்ற பொழுதில் ஏன் ஒரு சோதிடக்காரப் பெண்மணியாக வந்து அவர்களின் துயரமான எதிர்காலம் குறித்து தன்னியல்பிலே குறி சொல்கிறார் என்பதும் சுவாரசியமானது.

இந்தக் கதைக்கான உசாத்துணைகளாக 'The eternal sunshine of the spotless mind', 'The Matrix' எனப் பல திரைப்படங்களின் காட்சிகளை இணைத்துப் பார்த்துக் கொண்டு பார்க்கலாம். இப்படைப்பின் தொடக்கத்திலேயே முழுக்கதைக்கான Synopsis ஓர் உரையாடல்/காட்சியில் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சாமின் வீட்டில் ஒர் அருமையான முயங்குதலின் பின், இதுதான் நமக்கான கடைசிச் சந்திப்பு என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான விடைபெறல் நடக்கின்றது. அப்போது கே ஆடை அணிந்து சாமின் வீட்டிலிருந்து புறப்படும்போது, 'இனிச் சந்திக்கப் போவதில்லை, இன்னொருமுறை முயங்குவோமா' என சாம் கேயைப் பார்த்துக் கேட்கின்றார். பிரியும்போது எப்போதும் மிகச் சிறந்ததைக் கொண்டு செல்லவேண்டும், எனக்கு இந்த முயங்கலே மிகச் சிறப்பானது, இதனோடு போகின்றேன் போதும்' என்கின்றார் கே. 'உண்மையில் இதுதான் காரணமா, இல்லை உன்னால் இன்னொரு முறை உடனே முயங்க முடியாததா காரணம்?' என்று சாம் கேட்கின்றார். இங்கேதான் தியாகராஜன் என்கின்ற அசல் படைப்பாளி முன்னுக்கு வருகின்றார். இப்படி சாம் கேட்டதும், காட்சி அப்படியே கேயில் சில நொடிகள் உறைந்து நின்று அவனின் முகபாவனையைப் பார்க்கின்றது. 'எனது ஆண்மைக்கே இவள் அறைகூவல் விடுகின்றாள், இதோ இரண்டாம் முறை முயங்குகின்றேன்' என கே போகாமல், 'உண்மை, அதுவும் ஒரு காரணந்தான்' என மெல்லியதாகச் சொல்லிவிட்டு மிக நிதானமாக சாமின் வீட்டை விட்டு கே நகர்கின்றான். Norm ஆன தமிழ்த்திரைப்பட காட்சிகளை எள்ளல் செய்து உதறித்தள்ளுகின்ற ஓரிடம் இது.

இதேவேளை தனது திரைப்படங்களுக்கு விளக்கம் சொல்கின்ற அபத்தங்களையெல்லாம் தியாகராஜன் குமாரராஜா ஒருபோதும் செய்யாததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தமது திரைப்படங்களை promote செய்கின்றோம் என்று புறப்பட்டு தமது படைப்புக்களை நீர்க்கச் செய்த எத்தனையோ சம்பவங்களைப் பார்த்திருக்கின்றோம். அண்மைக்கால உதாரணங்களில் ஒன்று-'கொட்டுக்காளி'.

அதேவேளை தியாகராஜன் தன்னடக்கத்தோடு இவ்வாறு பொதுவெளியில் இருப்பதால் அதை 'பாவனை' என்று நம்பக்கூடிய சமூக ஊடகங்களின் காலத்தில் வாழ்கின்றோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அப்படி நினைக்கக்கூடியவர்களுக்கு, பெருமாள் முருகன் அண்மையில் எழுதிய கட்டுரையான 'பிள்ளைக் கிறுக்கலை' வாசிக்கப் பரிந்துரைக்கின்றேன்.

ஒரு மணித்தியாலப் படம், அதுவும் ஒரு வருடத்திற்கு முன் Modern Chennai Love இல் ஒரு பகுதியாக வந்தது, இப்போதும் இவ்வளவை யோசிக்க வைக்கின்றது/எழுத வைக்கின்றது என்பது சற்று ஆச்சரியமானதுதான். ஒரு படைப்பாளி உங்களை வியக்கவும், நெகிழவும் வைக்கின்றபோது, அந்தப் படைப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அந்தளவு பரவசம் தரக்கூடியதல்லவா?

******************


(Dec 21, 2024)

2 comments:

Anonymous said...

அருமை இளங்கோ, குறிப்பிட்டுள்ள இணைப்பைத் தேடி எடுத்தேன். யாருக்காவது பயன்படலாம் https://youtu.be/mW8YbFC8OGo?si=soKZPhsaFDXP240R

1/05/2025 07:18:00 PM
இளங்கோ-டிசே said...

இணைப்பைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இங்கே பின்னூட்டத்தில்தான் உங்கள் பெயர் 'அநாமதேயர்' என்று காட்டுகின்றது. ஏற்கனவே எனக்குத் தெரிந்த நண்பர்தானே நீங்கள் (என நினைக்கின்றேன்) :).

1/05/2025 09:48:00 PM