கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 65

Saturday, January 04, 2025

 
மிழில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கள் மீளவும் தமிழாக்கம் செய்யப்படுவதுண்டு. ஒரு மொழிபெயர்ப்பை மீறி இன்னொரு மொழிபெயர்ப்பு அந்தப் படைப்பை செழுமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இன்னும் எத்தனையோ நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியிருக்கும்போது அவை குறித்து கவனம் செலுத்தலாமேயென்று யோசிப்பதுண்டு. அதேயளவு கவலை, சிலவேளைகளில் தமிழாக்கம் செய்யப்பட்ட நல்ல படைப்புக்கள் கவனிக்காமல் இருக்கின்றபோதும் எழுவதுண்டு.

அவ்வாறு ஒரு படைப்பு Lara Fargus எழுதிய My Sister Chaos. இது தமிழில் 'இழப்பின் வரைபடம்' என்று அனிருத்தன் வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. எவ்வளவுதான் நூலின் உள்ளடக்கத்துக்கு பொருத்தமான தமிழ் தலைப்பாக இருந்தாலும், இயன்றளவு மூலநூலின் தலைப்புக்கு நிகராக இருப்பதே நூலின் ஆசிரியருக்கு நாம் கொடுக்கின்ற மதிப்பாக இருக்கும். இவ்வாறு பல மொழியாக்கங்கள் நூலின் தலைப்பை விட்டு விலகி தமிழாக்கம் செய்யப்படுவது ஏனென்றும் விளங்குவதில்லை. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனிருத்தன் மிகச் சிறப்பாக இதைத் தமிழாக்கியிருக்கின்றார் எனச் சொல்லவேண்டும்.

இந்த நாவல் இரட்டைச் சகோதரிகளின் பார்வையில் சொல்லப்படுகின்றது. போர் நிலத்தில் இருந்து தப்பியோடி வந்த பெண்கள். ஒருவர் வரைபடக் கலைஞராகவும், இன்னொருவர் ஓவியராகவும் அவர்களின் தாயகத்தில் இருக்கின்றனர். போர் எல்லாவற்றையும் அடித்துப் புரட்டிப் போட்டுவிடுகின்றது. வரைபடக் கலைஞர் நாட்டைவிட்டு தப்பியோடி வரும்போது அவர் பணியில் இருந்த வரைபடங்களை ஒரு யுஎஸ்பியில் பதிவு செய்து கொண்டு வருகின்றார்.

இவ்வாறு தப்பி வந்தவருக்கு அவரின் தாய் போருக்குள் சிக்குக்குப்பட்டது பிறகு தெரிகிறது. நாட்டுக்குள் நுழைவது கடினம் என்றாலும் ஓர் ஆபத்தான சாகசத்தைத் தாயாரைக் காப்பாற்றுவதற்காகச் செய்கின்றார். இறுதியில் தாய் காணாமற்போனவர்களின் பட்டியலுக்குள் அடங்கிவிடுகின்றார். இந்தத் துயரத்தோடு மீளவும் இந்த வரைபடக் கலைஞர் அகதியாக அடைக்கலம் புகுந்த நாட்டில் ஒரு வேலையைத் தேடி தனக்கான வாடகை வீட்டில் தனித்து வசித்து வருகின்றார். வீட்டில் அவர் ஒரு வரைபடத்தை மிகத் துல்லியமாக வரையத் தொடங்குகின்றார்.

அப்போதுதான் அவரது மற்ற சகோதரி இவரைத் தேடி வருகின்றார். இவருக்கோ அந்தச் சகோதரி தன்னைப் போரின் இடைநடுவில் விட்டுவிட்டுப் போனவர் என்கின்ற பெருங்கோபம் இருக்கின்றது. எனவே அந்த ஓவியச் சகோதரியை இவர் தனது வீட்டுக்குள் அனுமதிக்க விரும்பவில்லை. என்கின்றபோதும் அந்த ஓவியச்சகோதரி ஓர் அழையா விருந்தாளியாக இவரோடு தங்கிக் கொள்கின்றார்.

ந்த ஓவியச் சகோதரிக்கும் ஓர் கதையுண்டு. அவர் வீட்டிலிருந்து தன் பதின்மங்களிலேயே ஓடிப்போனவர். போர் நடந்தபோது அவர் தனது காதலியுடனும், அவரின் மகளோடும் தப்பி வருகின்றார். வருகின்ற பாதையில் அந்தக் காதலியையும், அவரின் மகனையும் இராணுவம், இவர் அவர்களுக்காய் உணவு தேடச் சென்றபோது பிடித்துவிடுகின்றது. அவர்களும் காணாமற் போய்விடுகின்றனர். தனது காதலியையும், பிள்ளையையும் விசாரிக்க இராணுவத்திடம் போகும் அவரையும் சந்தேகத்தில் கைதுசெய்து .வன்புணர்வு' முகாமிற்கு அனுப்பிவிடுகின்றது. ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றபோது காணாமற்போனவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் கோப்போடு ஓடிவந்துவிடுகின்றார்.

அந்தக் கோப்பில் அவரது காதலியும், காதலியின் மகனும் அடையாளமிடப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அவர்கள் எப்படி கைதுசெய்யப்ப்பட்டிருப்பார்கள், எங்கே கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள், என்ன நடந்திருக்கும் என்பதை இந்த ஓவியச்சகோதரி வரைபடங்களின் புள்ளிகளை வாசிக்கத் தெரிந்த சகோதரியோடு சேர்ந்து மர்மங்களை அவிழ்க்கின்றார். இறுதியில் அவர்கள் வந்தடையும் உண்மை மிகத் துயரமானது. எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

இது ஒருபக்கமாய் நடக்க, ஆக்கிரமிக்கும் இராணுவம், இந்தச் சகோதரிகளின் நாட்டின் வரைபடங்களை மாற்றியமைக்க, இந்த வரைபடக்கலைஞரான சகோதரி ஆக்கிரமிக்க முன்னர் இருந்த தனது தாயகத்தின் எல்லைகளுள்ள வரைபடத்தை உருவாக்க முயல்கின்றார். அதன் உச்சத்தில் அவர் செய்துவரும் தொழிலையும் இழக்கின்றார்.

இந்த நாவலில் எங்கே போர் நடக்கின்றதென்பதையோ அல்லது எந்த நாட்டுக்கு அகதியாகச் சென்றார்கள் என்பதோ சொல்லப்படுவதில்லை. அதுபோல காணாமற்போனவர்களின் துயரத்தையும், வன்புணரப்பட்டவர்களின் வேதனையையும், போரின் சீரழிவுகளையும் நாம் அது பொஸ்னியா-சேர்பியாவாகோ, சிரியாகவோ, பாலஸ்தீனமாகவோ ஏன் ஈழமாகக் கூடப் பொருத்திப் பார்க்கலாம் என்பதே இந்த நாவலின் சிறப்பு.

ஓரிடத்தில் ஒரு சகோதரி 'நீ ஒருபோதும் போர் நடந்தபோது உனக்கு என்ன நடந்தது என்று சொல்லவில்லையே?' என வினாவுகின்றார். அதற்கு ஓவியச் சகோதரி, 'உனக்கு என்ன நடந்ததோ அதுவே எனக்கும் நடந்தது' என்கின்றார். அது சகோதரியாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன ஒருவர் போரின் நிமித்தம் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றார் என்பதைக்கூட வெளிப்படையாகப் பேசமுடியா மிகப் பெரும் மெளனத்தை நாம் பார்க்கின்றோம்.

யுத்ததிற்குள் இருந்து வந்தவர்களாலேயே போரின் எல்லாப் பரிமாணங்களையும் விபரிக்க முடியாதென்கின்றபோது, போரினால் சிறுதுளியும் தீண்டப்படாதவர்கள் யுத்தங்கள் குறித்துப் பேசும்போது எவ்வளவு அவதானமாக இருக்கவேண்டும் என்பதை வாசிப்பவர்க்கு நினைவூட்டிச் சொல்கின்ற புதினமாகவும் இது இருக்கிறது.


*************


(Dec, 2024)


0 comments: