வ்வப்போது அரசியல் தளத்திலும்/களத்திலும் ஈடுபடும் நண்பர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. அது எவ்வகை அரசியல் நம்பிக்கையாக இருப்பினும், அவர்களின் அரசியலை அறிக்கைகளாகவோ/ சிறு பிரசுரங்களாகவோ எழுதவேண்டுமென அவர்களை வற்புறுத்துவேன்.

ஏனெனில் அப்படி வெகுசன அரசியலில் ஈடுபாடுடையவர்கள், அந்த மக்களை நோக்கிப் பேசவேண்டியதும் அம்மக்களுக்குப் பரிட்சயமான  மொழியில் பேசவேண்டியது முக்கியமானது.  இல்லாவிட்டால் வெகுதிரள் அரசியலில் ஒரு அடி கூட முன்னே போக முடியாது.

அதுபோலவே தாம் செய்ய விரும்பும் அரசியல் பற்றிய அறிக்கையை பொதுவெளியில் வைத்து உரையாடும்போது, அதை யதார்த்த களநிலவரங்களுக்கேற்ப விரித்துக் கொண்டு செல்லவும் முடியும். கார்ல் மார்க்ஸ் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை எழுதியபின் அது தொடர்ந்து அவராலும் ஏங்கல்ஸாலும் பல தடவைகள் திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாமறிவோம்.

Uploaded Image


நான் வாசிக்க வந்த காலத்தில் அ.மார்க்ஸ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து 90களில் எழுதிய 'தலித் அரசியல் ஆவணம்' எனக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிந்தது. அதை ஏற்றும், நிராகரித்தும் பல்வேறு உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன. தலித் அரசியல் அந்த அறிக்கையிலிருந்து எவ்வளவோ முன்னகர்ந்தும் போய்விட்டது.  ஆனால் அந்த அறிக்கை  ஒரு முக்கிய விடயத்துக்கான தொடக்கப்புள்ளி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

 அதேபோன்று ஈழத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாய் அரசியல் கொதிநிலையில் இருக்கும் சூழ்நிலையில், அகிம்சை/ ஆயுதப்போராட்டம் என்று பல்வேறு அரசியல் களங்களில் பயணித்த நம்மவர்களும் நிறைய அறிக்கைகளையும், உரையாடல்களையும் செய்திருக்க வேண்டும். கடந்தகாலங்களில் இப்படி நிகழ்ந்திருக்கும் சாத்தியம் இருந்தாலும், அவற்றை நாம் விரிவாக எழுத்தில் பதிவு செய்யவோ, தொடர்ச்சியாக உரையாடவோ இல்லை என்று நினைக்கின்றேன்.

இலக்கியத்தில் எஸ்.பொ(ன்னுத்துரை) இலங்கையில் இந்திய நூல்களின் தடை வந்தபோது ஓர் அறிக்கையை விரிவாக  70களில் எழுதியிருக்கின்றார். அன்றைய அமைச்சருக்கு  இந்த அறிக்கையை 60 பக்கங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சமர்ப்பித்துவிட்டு அதை ஒரு நூலாக அடுத்த நாளே எஸ்.பொவின் நண்பர் எம்.ஏ.ரஹ்மான் 'அரசு' பதிப்பாக வெளியிட்டுமிருக்கின்றார். பின்னர் 2000களின் வெளிவந்த எஸ்.பொவின் 'இனி' என்ற தொகுப்பிலும் இந்த அறிக்கை இருந்தது. அதிலேயே நான் இதை வாசித்திருந்தேன்.

லங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு)யின் தலைவராக இருந்த நா. சண்முகதாசன் நிறைய நூல்களையும், சிறு பிரசுரங்களையும் எழுதியிருக்கின்றார், வேறொரு தேடலுக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்ககால வரலாற்றை  வாசித்தபோது சண்முகதாசனின் முக்கிய நூலொன்று அகப்பட்டது.

அது 'தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது?' என்கின்ற நூலாகும். இது வெளிவந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாகிவிட்டது. ஆனால் அதில் சண்முகதாசன் இதுவரை கால இலங்கையின் வரலாற்றை விரிவாகப் பேசிவிட்டு சமகாலத்திற்கு (70களுக்கு) வருகின்றார். அவரது அறிக்கையை ஏற்கவும் நிராகரிக்கவும் நாங்கள் செய்யலாம். ஆனால்  இன்று ஒரு பெரும் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் நாம் இந்தக் காலத்திலும் இந்த அறிக்கையை முன்வைத்து உரையாட முடியுமளவுக்கு காலத்தில் அழியாமல் இருக்கின்றது.

Uploaded Image


இந்த நூல் வெளிவந்த காலத்தையும் நாம் கவனித்தாக வேண்டும். இது 1976 இல் வெளிவந்திருக்கின்றது. அதே ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழர்க்கு தனிநாடே இனி ஒரே தீர்வு என்று அறைகூவல் விடுத்தனர். அந்த உணர்ச்சிவசப்பட்ட காலத்தில் மிக நிதானமான நடையில் வெளிவந்த சண்முகதாசனின் இந்த அறிக்கை முக்கியமானது. அவரின் கட்சியினரே தொடர்ந்து காலத்துக்கேற்ப இந்த அறிக்கையை விசாலித்தபடி மக்களிடையே கொண்டு சென்றிருந்தால், நாம் வேறு விதமான பாதைகளை அடுத்து வந்த தசாப்தங்களில் தேர்ந்தெடுக்க முடிந்திருக்கலாமோ தெரியாது. ஆனால் அவர்களோ கட்சி தலைமைக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், மற்றொரு பிரிவினரைத் திரிபுவாதிகள் என்றும் கட்சிக்குள்ளும், வெளியிலும் சமராடிய சோகந்தான் நிகழ்ந்திருக்கின்றது.

இன்றைய அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் மக்களுக்கான அரசியலைச் செய்வதாகச் சொல்லும்போதோ/எழுதும்போதோ நாம் அவர்களிடம் உங்களின் அரசியல் குறித்த அறிக்கையை வெளியிடுங்கள் எனக் கேட்கலாம். உண்மையான மக்கள் நலத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் எவராயினும் இந்த விடயத்தில் பின்னிற்கப் போவதில்லை என்றே நினைக்கின்றேன்.

ஆனால் எம்மிடையே இப்படி வரலாற்றை விரிவாக அறிந்தவர்களோ, தமது அரசியல் கொள்கைகளைத் தெளிவாக முன்வைக்கக்கூடிய அரசியல்வாதிகளோ, களச்செயற்பாட்டாளர்களோ, ஆய்வாளர்களோ,  மிக அரிது என்பதான் நமது இன்றைய அரசியலில் மிகப்பெரும் பலவீனமும் என்பேன்.

***

(நா.சண்முகதாசனின் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது? என்ற நூலினை வாசிப்பதற்கான இணைப்பு )