பிரிய ரமேஷ்,
நீங்கள் இனியொரு பொழுதும் வாசிக்க முடியா ஒரு
குறிப்பை இந்த நள்ளிரவில் உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்கின்றேன். கடந்த
பத்தாண்டுகளில் நீங்கள் அவ்வப்போது அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்படுவதும், நாங்கள் பதற்றமடைவதும், பிறகு நீங்கள் எல்லா
வாதைகளோடும் இன்னும் மிச்சமிருக்கும் உயிரைக் கையில் பிடித்தபடி திரும்பி
வருபவராகவும் இருந்தீர்கள்.
இம்முறை நீங்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டபோது வேறு விதமான நிலையில் இருந்தீர்கள். எனக்குத் தெரிந்த
நண்பர் உங்கள் சகோதரியோடு தொடர்பில் இருந்தார். அவரிடம் உங்கள் உடல்நிலை
குறித்து கேட்டபடி இருந்தேன். ஒருகட்டத்தில் நீங்கள் வெண்டிலேட்டருக்குள்
போய்விட்டீர்களென்றும், மூளையின் பெரும்பகுதி செயலிழந்து
கொண்டிருக்கின்றதென்றும் அந்த நண்பர் தெரிவித்தபோது கலங்கிப் போயிருந்தேன்.

நாங்கள் உங்கள் நினைவுகளை காலைப் பொழுது முழுதும் பகிர்ந்தபடி இருந்தோம். என் நண்பர், நீங்கள் இந்தளவு உடல்அவதிகள் இல்லாது கொஞ்சக் காலமாவது சந்தோசமாக வாழ்ந்திருக்கக் கூடாதா என்று சொல்லிக் கலங்கினார்.
நான் அவருக்கு, 'ரமேஷ் இந்தளவு உடல் வாதைகளை அனுபவித்தவர் என்றால், அவர் புத்தர் கூறியபடி ஏதோ ஒரு புள்ளியில் அந்த துன்பங்களை ஏற்று இதுவரையான வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கின்றார், ரமேஷை எங்கள் நினைவுகளால் இறுக்கிப் பிடிக்காது அவருக்கு விடுதலையை அளித்து விடுதலே சாலவும் சிறந்தது என்றேன். நீங்களும் அதைத்தானே விரும்புவீர்கள் அல்லவா ரமேஷ்?
நூற்றாண்டுகால பழைய உடம்பில் வாழ்ந்தபடி, இறந்தும் பிறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு முடிவிலி உயிரியாக அல்லவா ரமேஷ் உங்களை நீங்கள் எழுத்துக்களில் நம்பிக் கொண்டிருந்தவர் . ஸென் கூறுவதன்படி உங்களுக்கு இறப்பும் பிறப்பும் நிகழ்வதில்லை அல்லது பிறந்தும் இறந்தும் மீண்டும் பிறந்தபடி இருக்கின்றீர்களென உங்களை நான் உருவகித்துக் கொள்கிறேன் ரமேஷ்.
உங்களைப் பற்றி எப்போதும் முதலில் எழுதினேன் என்று காலத்தைச் சுழற்றிப் பார்த்தபோது 20 வருடங்களுக்கு முன் எழுதினேன் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்போது நீங்களும் பிரேமும் உயிர்மையில் எழுதிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களைப் பற்றி அந்த முதல் கட்டுரையை எழுதியபோது ஏற்கனவே உங்கள் இருவரின் 'சொல் என்றொரு சொல்'லை வாசித்திருந்தேன். உங்கள் இருவரின் 'முன்பு ஒருகாலத்தில் நூற்றெட்டுக் கிளிகள் இருந்தன' போன்ற கதைகளில் கிறங்கியிருந்தேன்.
அதற்கு முதல் ஆண்டுதான் இலங்கைக்கு முதன்முதலாக கனடா வந்ததன்பிறகு, திரும்பி ஒன்பது ஆண்டுகளின் பின் போயிருந்தேன். அந்தப் பயணத்திற்கு வழியனுப்ப வந்த ஒரு நண்பர் உங்களின் 'சக்கரவாளக் கோட்டம்' நூலை பயணத்துணையாகத் தந்தார். என்னவொரு அற்புதமான கவிதைத் தொகுப்பு அது.
இரட்டையராக இருந்த நீங்களும் பிரேமும் பிரிந்ததும், அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களும் துயரமானவை. எல்லாப் பிரிவுகளும் அது சார்ந்த அனைவரையும் காயப்படுத்துவதுதானே இயல்பு. இந்தக் காயங்களில் இருந்து மீளும் நிவாரணி எழுத்துக்களிலே இருப்பதை அறிந்தவர்களும் நாங்கள் அல்லவா? நீங்கள் தனித்து ரமேஷ் பிரேதன் என்ற அறிவிப்புடன் 'மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்' என்ற தொகுப்போடு புதிய பயணத்தைத் தொடர்ந்தீர்கள்.
பிறகு கவிதைகளைப் போல புனைவுகளுக்கும் ஆழ இறங்கச் செய்தீர்கள். 'அருகன்மேடு', 'நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை', 'ஐந்தவித்தான்', 'ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து', 'சூன்யதா', 'அவன் பெயர் சொல்' போன்ற பல நாவல்களை உற்சாகமாய் எழுதினீர்கள். நான் இவற்றின் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கின்றேன், என் வாசிப்புக்களைப் பதிவு செய்திருக்கின்றேன். அருகன்மேடு, நீல அணங்கு, ஐந்தவித்தான் மூன்றையும் சேர்ந்து பின்னர் 'பொந்திஷேரி' டிரையாலஜியாக வெளியிட்டீர்கள். உங்களை நேரில் நான் சந்தித்தபோது, இது உங்களின் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்ட புனைவென்று சொல்லி எனக்கு 'அவன் பெயர் சொல்' நாவலைக் கையெழுதிட்டுத் தந்தீர்கள்.
ரமேஷ் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், எழுத்துக்கு வந்த பலர் வாழ்வு கொடுத்த அழுத்தத்தாலும், தனிப்பட்ட காரணங்களாலும் பிறகான காலங்களில் முற்றாக எழுதாமலே போயிருக்கின்றனர். மேலும் எழுத்தின் மீது காதல் கொண்டவர்கள் எழுத்து அவர்களைக் கைவிட்டுப் போகும்போது மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றனர், சிலவேளைகளில் தங்களையே முற்றாக அழித்தும் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஹெமிங்வேயிலிருந்து எண்ணற்ற எழுத்தாளர்கள் உதாரணங்களாய் நம்முன்னே இருக்கின்றனர்.
ஆனால் நீங்கள் storke வந்து உங்கள் உடலின் பெரும்பாலான பாகங்கள் இயங்காது கட்டிலோடு உங்கள் வாழ்வு பிணைக்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் ஒருபோதும் எழுத்தைக் கைவிடவே இல்லை. உங்களை அந்தவகையில் தமிழன்னை கடைசிக்காலம் வரை கைவிடவில்லை என்றே நம்புகின்றேன். உங்கள் கைகளும் ஒழுங்காக இயங்காது சில விரல்களைக் கொண்டே நீங்கள் தட்டித்தட்டி எழுதுவதை நேரில் பார்த்து நான் திகைத்திருக்கின்றேன்.
ஆனாலும் உடல்/மன வாதைகளுக்கிடையிலும் நீங்கள் தினந்தோறும் எழுதிக் கொண்டிருந்தீர்கள். என்னைப் போன்றவர்களைப் பார்த்து சோம்பறிகளே என்னோடு எழுத்தில் போட்டி போட முடியுமா என்று மறைமுகமாக சவால் விட்ட ஒருவராகவே உங்களை நான் எப்போதும் நினைப்பதுண்டு.
இவ்வாறு தினம் எழுதி, எழுத்தின் மூலமே உயிர்ப்பை வைத்துக் கொண்டிருந்த உங்களைப் பார்த்த ஒருவன் என்பதால், உங்களுக்கு கொஞ்ச கொஞ்சமாக மூளை இயக்கமற்றுப் போகின்றது என்று நேற்று அறிந்தபோது உங்களுக்கு மானசீகமாக விடைகொடுக்க விரும்பினேன். ஏனெனில் அவ்வாறு ஒரு நிலையுடன் எழுத முடியாதிருக்கும் ரமேஷை என்னால் கற்பனை செய்து கொள்ள முடியாதிருந்தது. ஒருவகையில் நீங்கள் இந்த வாழ்க்கை போதுமென்று ஓர் இறுதி முடிவை எடுத்துவிட்டீர்கள் என்பதையே நான் உணர்ந்தேன்.
கடந்த வருடம் உங்களைத் தேடி 'பிரபஞ்சன் விருது' வந்தபோது அவ்வளவு அகமகிழ்ந்து எழுதியிருந்தேன். இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோதும் அதே மகிழ்வை நானடைந்திருந்தேன். நீங்களோ நானோ ஜெயமோகனின் நம்பிகைகளுக்கும் விஷ்ணுபுர விருதுக்கும் இன்னொரு முனையில் இருப்பவர்கள். அவ்வாறு இருக்கும் நீங்கள் அவர்களால் தவிர்க்கவோ/மறுக்கவோ முடியாத ஆளுமை என்பதை நிரூபிக்கும்போது உங்களை ஒரு முன்னோடியாக நினைக்கும் என்னைப் போன்றவர்கள் மகிழாமலா இருப்போம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் போகும்போது அங்கே இருக்கும் முக்கிய எழுத்தாளர்கள்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வருவார்கள். புதுச்சேரி என்று நினைத்தவுடன் நீங்கள், பிரபஞ்சன், கி.ரா, ராஜ் கெளதமன் என்று உடனே நினைவுக்கு வருவீர்கள். ஆனால் ஒவ்வொருவராக இப்போது விடைபெற்றுப் போய், எனது புதுச்சேரியை இப்போது வெறுமையாக அல்லவா நீங்கள் அனைவரும் கைவிட்டிருக்கின்றீர்கள்.
உங்களைச் சந்தித்தபோது, புதுச்சேரிக்கு இப்போது முதன்முறையாக வருகின்றேன் என்ற உணர்வில்லாது எல்லாத் தெருக்களும், கோயில்களும், அருகன் மேடுகளும் எனக்குப் பரிட்சயமாக இருக்கின்றதென்றேன்.
அந்தளவுக்கு உங்களதும், பிரபஞ்சனினதும் எழுத்துக்களிலும் நான் புதுச்சேரியை அடையாளங் கண்டிருக்கின்றேன். ராஜ் கெளதமனின் 'லண்டனில் சிலுவைராஜ்'ஜில் அரைவாசிக்கு மேலே புதுச்சேரி அனுபவங்கள் அல்லவா வந்திருக்கும். ஏதோ ஒரு பாரில் மது அருந்திக்கொண்டு நீங்கள், பிரபஞ்சன், ராஜ் கெளதன் எல்லோரும் இருப்பது போலவும் நான் அங்கே வருவதுபோலவும் கற்பனை செய்வது எவ்வளவு சுகமாக இருக்கின்றது. 'Midnight in Paris' திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் கடந்தகாலத்தில் பாரிஸ் தெருக்களில் உலாத்தித் திரிந்த பிரபல எழுத்தாளர்களைச் சந்திப்பதுபோல உங்கள் அனைவரையும் சந்திப்பதில் என்ன தவறிருக்கப் போகின்றது.
(பிற்காலத்தைய)உங்களதும், நகுலனதும், பிரமிளினதும், ஏஜே (கனகரட்ன)வினதும், ஓவியர் கருணா வின்சென்ட்டினதும் தனித்த வாழ்வானது எனக்கு வியப்பையும் திகைப்பையும் ஒரு சேரக்கொடுப்பவை. மனிதர்கள் ஏதோ ஒருவகையில் தனிமைப்பட்டவர்கள்தான். ஆனால் நீங்கள் அனைவரும் (காரணங்களோடோ/ காரணங்களின்றியோ) இப்படியொரு வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்பதால் எனக்கு உங்கள் அனைவர் மீதும் அவ்வளவு காதலும், கருணையும் இருக்கின்றது. அதைச் சொற்களால் வரைந்து காட்டிவிடவும் முடியாது.
ரமேஷ் உங்களை நேரில் இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்துவிட்டு வந்தபோது இப்படி எழுதியிருப்பேன்:
என் பிரிய ரமேஷ் பிரேதனை, என் எழுத்துக்களில் பாதிப்புச் செய்யும் ஓர் ஆளுமையை இறுக்கி அணைத்துக் கொண்டேன். எப்படி எனக்கு அந்தத் தியானச் சாமியார் ஆசிர்வதித்தாரோ அவ்வளவும் ரமேஷிற்குள் கடத்தப்பட வேண்டும் போன்று நெகிழ்ந்திருந்தேன். அவரோடு பேசிய சில மணித்தியாலங்கள் என்றும் என் நினைவில் நிற்கும். ரமேஷ் இன்று இருக்கும் நிலைமை நம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை."
கடைசியாக சில நாட்களுக்கு முன் 'உம்பர்தோ எக்கோ' பற்றிய என் பதிவில் உங்கள் ஆக்கமொன்றைக் குறிப்பிட்டபோது, நீங்களும் (பிரேமும்) சேர்ந்து எழுதிய 'பேச்சு-மறுபேச்சில்' வந்த கட்டுரையல்ல, அது 'கட்டுரையும் கட்டுக்கதையும்' தொகுப்பில் வந்தது என்று என்னைத் திருத்தினீர்கள். இனி யார் என்னில் இப்படி உரிமை எடுத்துக் கொண்டு என் தவறுகளைத் திருத்துவார்கள். எனது பதின்மங்களில் இருந்து உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவனை விட்டு செல்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம் ரமேஷ்?
உங்கள் மறைவை அறிந்தபோது கண்ணீரில்லாது விடைகொடுக்கவேண்டும் என்று சொல்லி என் நண்பரின் அழுகையைக் கூட நிறுத்திய எனக்கு இப்போது இதை எழுதும்போது ஏன் என்னை அறியாமல் கண்ணீர்த்துளிகள் உருட்திரண்டு வழிகின்றது.
என் நண்பர் அடிக்கடி சொல்வார், 'நான் உன்னை எந்தளவுக்கு நேசிக்கின்றேன் என்பதை நீ ஒருபோதும் அறியப்போவதில்லை' என்று. அப்படித்தான் ரமேஷ் உங்கள் எழுத்துக்கள் மீதான என் காதலை உங்களுக்குச் சொல்லியும் தீராதவளவுக்கு எனக்குள் இருந்திருக்கின்றது என்பதை இப்போது உணர்கின்றேன்.
நீங்கள் கற்றுத் தந்தவற்றையையும், உங்களின் தோழமையையும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். உங்களை இந்த வாழ்வில் சகபயணியாய் நான் சந்தித்து எனது நல்லூழ்.
சென்று வாருங்கள் ரமேஷ்!
*****
(நன்றி: 'ஏர்' - அரையாண்டு இதழ்)
புகைப்படம்: இணையம்

0 comments:
Post a Comment