கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நஞ்சு

Saturday, May 08, 2010

thami

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
பனிக்குள் பத்திரப்படுத்திக் கையளிக்க
மாயன்காலத்தவர்கள்
போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன

காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்துபோனவர்களின் நினைப்பொழிந்து
போர்பற்றிய பயங்களிலிருந்து விடுபடலாமென்று
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகின்றான் தோழன்

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்காலக்குறிப்புக்கள் களைந்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.




(Jan 30, 2007)
Photo: Thami (Eelam)




இரண்டு உலகங்களுக்கு இடையில்...

-விமுக்தி ஜெயசுந்தராவின் Between Two Worlds முன்வைத்து-

1.
திரைப்ப‌ட‌ங்க‌ள் என்ப‌து பொழுதுபோக்கிற்கு ம‌ட்டுமே என்றொரு விம்ப‌ம் த‌மிழ்ச்சூழ‌லில் பொதுப்புத்தியில் ப‌திந்திருக்கின்ற‌து. அவ்வாறான‌ சூழ‌லிலிருந்து வ‌ரும் நெறியாள‌ர்க‌ளும் பொதுப்புத்தியைத் த‌விர்த்து புதிய‌ க‌ள‌ங்க‌ளில் த‌மிழ்த்திரைப‌ட‌ச்சூழ‌லை ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு அக்க‌றை கொள்வ‌துமில்லை.. ஆக‌வேதான், வ‌ழ‌மைக்கு மாறாய் ஆடல், பாட‌ல், ச‌ண்டைக்காட்சிக‌ள் குறைவாக‌ வ‌ரும் திரைப்ப‌ட‌ங்க‌ளைக் கொண்டாட‌வேண்டிய‌ அவ‌ல‌ச்சூழ‌ல் த‌மிழில் இருக்கிற‌து. எனினும் இவ‌ற்றுக்கு அப்பால் இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ த‌லித்துக்க‌ள், பெண்க‌ள், அர‌வாணிக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்கள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் மிக‌ மோச‌மாக‌ நுண்ணிய‌த‌ள‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌ முடியும்.த‌மிழ்ச்சூழ‌லோடு ஒப்பிடும்போது மிக‌ச்சிறிய‌ பார்வையாள‌ர் வ‌ட்ட‌த்தையும் மோச‌மான‌ த‌ணிக்கைச் சூழ‌லையும் கொண்ட‌ சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌ச்சூழ‌லிலிருந்து அற்புத‌மான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் ப‌ல்வேறு பின்புல‌ங்க‌ளை முன்வைத்து வ‌ர‌த்தொடங்கிவிட்ட‌ன‌. அதிகார‌த்தின் அமைப்புக‌ளுக்கு அறைகூவ‌ல் விடுத்தப‌டி ப‌ல இளைய‌ நெறியாள‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ -முக்கிய‌மாய் போருக்கும்/அர‌ச அதிகார‌ங்க‌ளுக்கும் எதிரான‌ க‌தைக‌ளைத் துணிவுட‌ன்- திரைப்ப‌ட‌மாக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ர். இன்று ப‌ல்வேறு நாடுக‌ளில் நிக‌ழும் திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் சிங்க‌ள‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌தும், விருதுக‌ளைப் பெறுவ‌தும் புதிய‌ க‌ள‌ங்க‌ளைப் ப‌ரீட்சித்துப்பார்த்த‌ சிங்க‌ள‌த்திரைப்ப‌ட‌ச்சூழ‌லிற்குக் கிடைத்த‌ அங்கீகார‌மென‌ எடுத்துக்கொள்ள‌லாம்.

அவ்வாறான‌ சிங்க‌ள‌ நெறியாள்கையாளர்களில் ஒருவ‌ராக‌, த‌ன‌து இருபத்தேழாவது வ‌ய‌தில் The Forsaken Land திரைப்ப‌ட‌த்தை இய‌க்கிய‌த‌ன் மூல‌ம் பல‌ர‌து க‌வ‌ன‌ததைத் திருப்பிய‌ ஒருவ‌ர் விமுக்தி ஜெய‌சுந்தரா. இல‌ங்கையின் தென்ப‌குதியில் பிற‌ந்த‌ விமுக்தி திரைப்ப‌ட‌த்துறை சார்ந்த‌ க‌ல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்ன‌ர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்ட‌வ‌ர். இப்போது மீண்டும் -நான்கு வ‌ருட‌ இடைவெளியின்பின்- த‌ன‌து இர‌ண்டாவ‌து ப‌ட‌மான‌ Between Two Worlds என்ற‌ ப‌ட‌த்தோடு வ‌ந்திருக்கின்றார்.. ஏற்க‌ன‌வே வெனிஸ் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிட‌த்தெரிவான‌ இத்திரைப்ப‌ட‌ம் இமமாத‌ம் ரொற‌ண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌விழாவிலும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. .மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளையும், நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளாலான‌ கவித்துவ‌க்காட்சிக‌ளையும் கொண்ட‌ விமுத்தியின் ப‌ட‌ங்க‌ளில் சாதார‌ண‌மாய் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதில் நுழைந்துவிட‌முடியாது..மிக‌ மெதுவாக‌வும், நேர்கோட்டுத்த‌ன்மை அற்ற‌ காட்சிக‌ள் ஒன்றுக்கு ஒன்று தொட‌ர்பில்லாது அடிக்க‌டி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்ப‌ட‌ங்களைப் பார்க்க‌த் த‌ன்னைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளாத‌ ஒரு பார்வையாள‌ரை இத்திரைப்ப‌ட‌ங்கள் த‌ம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிட‌வே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்ப‌ட‌ம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன், ஒரு சிறு அறிமுக‌த்தை விமுக்தி த‌ரும்போது, "ஏற்க‌ன‌வே இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ப‌ல‌ர் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டினமான‌ ப‌ட‌ம் என்றே கூறியிருக்கின்றார்க‌ள். இது ப‌ல‌ puzzleக‌ளைக் கொண்ட‌ ஒரு திரைப்ப‌ட‌ம். ப‌ட‌ம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌ம் பார்வையாள‌ருக்குரிய‌ திரைப்ப‌ட‌ம்; .puzzleக‌ளை மாற்றி மாற்றி அடுக்குவ‌த‌ன் மூல‌ம் பார்ப்ப‌வ‌ர் த‌ன‌க்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும். ஒருவ‌ர் உருவாக்கும் க‌தையும், ப‌ட‌த்தைப் பார்க்கும் ம‌ற்றொருவ‌ர் உருவாக்கும் க‌தையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற‌ எந்த அவ‌சிய‌மும் இல்லை. இதை இன்னொருவித‌மாய் இது த‌ன்ன‌ள‌வில் பார்ப்ப‌வ‌ரின் சூழ‌லுக்கும், அனுப‌வ‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ க‌ண‌ந்தோறும் மாறிக்கொள்ளும் பிர‌தியென‌ எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ஒற்றைத்த‌ன்மையிலும், நேர்கோட்டுக்க‌தைச் சொல்ல‌லிலும் ஊறியிருக்கும் ந‌ம்மில் எத்த‌னைபேர் இத்திரைப்ப‌ட‌ம் த‌ரும் சுத‌ந்திர‌த்தை அனுப‌விக்க‌த் த‌யாராக‌ இருக்கின்றோம்? கட்டற்ற சுத‌ந்திர‌ம் என்ப‌து சில‌ருக்குப் பிடிக்காதுபோல‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌வித‌மும் ப‌ல‌ருக்குப் பிடிக்காது போக‌வும் கூடும்.

2.
ஒருவ‌ன் ம‌லையுச்சியிலிருந்து க‌ட‌லுக்குள் வீழ்வ‌துட‌ன் ஆர‌ம்பிக்கும் முத‌ற்காட்சி, அவ‌ன் திரும்ப‌வும் ம‌லை மீதேறி ந‌க‌ருக்குள் நுழையும்போது ந‌க‌ர் க‌ல‌வ‌ர‌த்தின் அந்த‌ர‌த்தில் மித‌க்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. தெருவில் போகின்ற‌வ‌ர்க‌ளை அடித்துத் துவைத்து க‌டைக‌ளையெல்லாம் நொறுக்கிய‌ப‌டி குழுக்குழுவாய் இளைஞ‌ர்க‌ள் கூக்குர‌லிட்ட‌ப‌டி இருக்கின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த்தின் ந‌டுவில் ப‌யந்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி ஒரு பெண்ணிருப்ப‌தைப் பார்த்து, க‌ட‌லில் விழுந்து ந‌க‌ர் மீண்ட‌ இளைஞ‌ன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீன‌ச்சாய‌லுடைய‌ பெண்ணை இவ‌ன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்த‌னின் வானில்(Van) ஏற்றிய‌ப‌டி நீண்ட‌வீதியினூடாக‌ கிராம‌ப்புற‌த்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்க‌ள். 'உன்னை வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர் யாரென்று தெரியுமா' என அந்த‌ப் பெண்ணிட‌ம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற‌ சாய‌லுடைய‌ ஒருவ‌ன்' என்கிறாள் அந்த‌ப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வ‌ன்புண‌ர‌ இவ‌ன் துடிக்கின்ற‌போது, வானை ஓட்டிக்கொண்டு வ‌ருகின்ற‌வ‌ர் அதற்கு இடைஞ்ச‌லாய் இருப்ப‌து புரிகின்ற‌து. இப்ப‌ய‌ண‌த்தின்போது சீனாவில் ஒரு நகரில் ப‌ல‌ தொலைத்தொட‌ர்புச்சாத‌ன‌ங்க‌ளைத் த‌க‌ர்த்த‌ப‌டி போராளிக‌ள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்க‌ப்ப‌டும் வானொலியில்- சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து (ம‌றைபொருளாய் இல‌ங்கையிலிருக்கும் போராளிக‌ள் என்றும் அர்த்த‌ம் கொள்ள‌லாம்). ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில், இவ்வாறு காம‌த்துட‌ன் பித்தேறியிருக்கும் இவ‌னை அடித்துப்போட்டுவிட்டு அந்த‌ப்பெண்ணும், சார‌தியும் வானில் ஏறித் த‌ப்பிப்போகின்றார்க‌ள்.

இவ‌ன் மீண்டும் த‌ன‌து கிராம‌த்திற்குப் ப‌ஸ்சில் போகின்றான். ஊரிலிருப்ப‌வ‌ர்க‌ள் 'ஊருக்கு ஏன் இவ்வ‌ளவு விரைவில் திரும்பி வ‌ந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவ‌ர்க‌ள் சுட்டுப்போட்டுவிடுவார்க‌ள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவ‌து ஒளிந்துகொள்' என்கின்றார்க‌ள். அவ‌னைப் போன்ற‌ ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் அதிகார‌ அமைப்பின் வ‌ன்முறைக்குப் ப‌ய‌ந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்ப‌க்க‌மாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு சிறுவ‌னின் துணைகொண்டு இவ‌ன் அறிகின்றான். .தானும் அவ‌ர்க‌ளோடு ப‌துங்கிவாழ‌ இவ‌ன் த‌யாராகின்ற‌போது, தான் வ‌ந்த‌ வான் குள‌மொன்றில் க‌விழ்வ‌தைக் காண்கின்றான். இவ‌ன் விரைவாக‌ ஓடிப்போய் குள‌த்தைப் பார்க்கின்ற‌போது அங்கே வான் விழுந்த‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌மும் இல்லை.. குள‌த்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதிய‌வ‌ரிட‌ம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குள‌த்தினுள் இப்போது விழ‌வில்லை. ஆனால் முன்னோர் கால‌த்தில் இப்ப‌டியோரு ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌து எதுவும் இனி நிக‌ழாது என்றும் அறுதியிட்டுக் கூற‌முடியாது' என்கிறார். இப்போது அடுத்த‌ காட்சி மாறுகின்ற‌து.

3.
ஒரு முதியவ‌ரும் இளைஞ‌னும் ந‌ல்ல‌ வெறியில் க‌ட‌லையொட்டிய‌ குன்றொன்றில் அம‌ர்ந்திருக்கின்றார்க‌ள். முதிய‌வ‌ர் க‌தையொன்றைச் சொல்ல‌ப்போவ‌தாய்க் கூறுகின்றார். ஆனால் க‌தையின் ந‌டுவில் எதுவும் கூறி க‌தையை வேறு வித‌மாக‌ மாற்றக்கூடாது என்று இளைஞ‌னை எச்ச‌ரிக்கின்றார். க‌தை: ஒரு நாட்டின் அர‌ச‌னுக்கு இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும் ஒரு ம‌க‌ளும் இருக்கின்றார்க‌ள். எதிர்கால‌த்தில் இந்த‌ அர‌ச‌னின் ம‌க‌ள் திரும‌ண‌ஞ்செய்து அவளுக்குப் பிற‌க்கின்ற‌ ஆண் குழ‌ந்தை, அவ‌னின் இரு மாம‌ன்க‌ளையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்ப‌ற்றுவான் என்று சோதிட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்றார்க‌ள். இத‌ன் நிமித்த‌ம், எவ‌ரையும் திரும‌ண‌ஞ்செய்து குழ‌ந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரச‌னின் ம‌க‌ள் ஒரு தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌டுகின்றாள். ஆனால் ஏதோவொரு வ‌கையில் அவ‌ள் கர்ப்ப‌ம‌டைந்து ஒரு ஆண் குழ‌ந்தையைப் பெற்று விடுகின்றாள். வ‌ள‌ர்ந்துவ‌ரும் அந்த‌ இள‌வ‌ர‌ச‌னைக் கொல்ல‌ இர‌ண்டு மாம‌ன்க‌ளும் முய‌ல்கின்றார்க‌ள். இறுதியில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ விதம் ப‌ற்றிப் ப‌ல‌ க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று: இள‌வ‌ரச‌ன் குறித்த‌ ச‌ரியான‌ அடையாள‌ந்தெரியாத‌தால், அந்நாட்டிலுள்ள‌ அவ‌ன் வ‌ய‌தொத்த‌ அனைத்து இளைஞ‌ர்க‌ளையும் கொலைசெய்ய‌ அவ‌ன‌து மாம‌ன்மார்க‌ள் க‌ட்ட‌ளையிட்டார்க‌ள் என்று க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ர் கூறுகின்றார். அதைக் க‌தை கேட்ட‌ இளைஞ‌ன் ம‌றுத்து, அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் நீராடிக்கொண்டிருந்த‌போது அவ‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இள‌வ‌ர‌ச‌ன் தப்பிப்போய் ஒரு ம‌ர‌ப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் என‌வும், அவ‌ன் இன்ன‌மும் அந்த‌ ம‌ர‌ப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து என்றும் க‌தையை வேறுவித‌மாய் முடிக்கின்றான்.

4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் த‌ன் வ‌யதொத்த‌ -ப‌துங்கியிருக்கும்- இளைஞ‌ர்க‌ளைத் தேடும் இவ‌ன், த‌ன‌து அண்ணியின் வீட்டுக்குள் வ‌ருகின்றான். க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு விழி திற‌க்க‌முடியாத‌ இவ‌னுக்கு அவ‌ர் முலைப்பால் விட்டு காய‌ம் ஆற்றுகின்றார். இடையில் இவ‌னுக்கு அண்ணி மீது உட‌ல்சார்ந்த‌ ஈர்ப்பு வ‌ர‌ அண்ணி அவ‌னை உத‌றித்த‌ள்ளுகின்றார். 'என‌து ராஸ்க‌ல் அண்ண‌ன் இனியும் திரும்பி வ‌ருவான்?' என்று நீங்க‌ள் நினைக்கின்றீர்க‌ளா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவ‌னோடு ப‌ற்றைக‌ளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவ‌ன் சிறுவ‌னின் துணையுட‌ன் ஒளிந்திருக்கும் இளைஞ‌ர்க‌ளைத் தேடிப் போகின்றான். சிறுவ‌ன் ஒரு ம‌ர‌ப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்ச‌த்த‌ங்க‌ள் கேட்கின்ற‌ன‌. இவ‌ன் சிறுவ‌னின் ம‌ன்றாட்ட‌த்தையும் அல‌ட்சிய‌ம் செய்து ம‌ர‌த்த‌டிக்குப் போகின்றான். அந்த‌ ம‌ர‌ம் இள‌வ‌ர‌ச‌ன் தான் கொல்ல‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌ப்ப‌ ஒளிந்து கொள்வ‌தாய்த் தொம‌க்க‌தையில் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ ம‌ர‌ம்.

இத‌ற்கிடையில் கிராம‌ம் எங்கும் கைக‌ள் ம‌ட்டும் வெளியே தெரியும் உட‌ல‌ங்க‌ள் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிராம‌த்துக் குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் பீதியுட‌ன் உறைந்த‌ நிலையில் இவ‌ற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். நாய்க‌ள் மாடுக‌ள் எல்லாம் கூட‌வே சுட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு முழு மாட்டைக் கோர‌மாய் கிழித்துண்ணும் க‌ரிய‌ நாய் சூழ‌லின் கொடூர‌த்தை ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துகின்ற‌து.. கிராம‌த்தில் எல்லா இய‌ல்ப‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌ன‌. இளைஞ‌ர்க‌ள் காணாம‌ற்போய்க்கொண்டிருக்கின்ற‌ க‌தையை வெளியே சொல்ல‌முடியாத‌ க‌ன‌த்த‌ சோக‌த்தை த‌ங்க‌ள் தொண்டைக்குழிக‌ளுக்குள் அட‌க்கிய‌ப‌டி கிராம‌த்த‌வ‌ர்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க‌ள்.அதேவேளை கிராம‌த்த‌வ‌ர்க‌ளின் நீர்த்தேவைக‌ளைப் பூர்த்திசெய்யும் குள‌மும் ந‌ஞ்சூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. பதுங்கியிருக்கும் இளைஞ‌ர்க‌ள் வெளியே வர, இவனும் அந்த இளைஞ‌ர்க‌ளும் ஒன்றுசேர்ந்து அக்குள‌த்தைச் சுத்திக‌ரிக்கும் ப‌ணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குள‌த்தைச் சுத்திக‌ரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைக‌ளில் ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள் கூடி நிற்கும் இளைஞ‌ர்க‌ளைத் அடித்தும் சுட்டும் கொல்ல‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். எல்லோரும் கொல்ல‌ப்ப‌ட‌ இவ‌ன் ம‌ட்டும் த‌ப்பிப்போய் ம‌ர‌ப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன‌ இவ‌னைத் தேடி சிறுவ‌னும், இவ‌ன‌து அண்ணியும் அலைய‌த்தொட‌ங்குவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிவுபெறுகின்ற‌து.

காட்சிக‌ளை அப்ப‌டியே ப‌திவாக்குவ‌து என்றால் இப்ப‌டித்தான் இத்திரைப்ப‌ட‌த்தின் க‌தையிருக்கும். விமுத்தி குறிப்பிட்ட‌துபோல‌ பார்ப்ப‌வ‌ர் இந்த‌ puzzleக‌ளை எப்ப‌டி அடுக்கித் த‌ன‌க்கான‌ ப‌ட‌த்தை உருவாக்குகின்றார் என்ப‌தில்தான் ப‌ட‌த்தின் முழுமை த‌ங்கிருக்கிற‌து. திரையிட‌லின் பின் ப‌ட‌ம் குறித்த‌ கேள்விக‌ளுக்கு, 'இந்த‌ப்ப‌ட‌த்தின் மூல‌ம் எந்த‌க் க‌தையைச் சொல்ல‌ விரும்புகின்றீர்க‌ள்?' என்று பார்வையாள‌ரிடையே இருந்து வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'நீங்க‌ள் யோசியுங்க‌ள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவார‌த்தில் உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி ப‌தில‌ளித்திருந்தார்.. 'சில‌வேளைக‌ளில் இந்த‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளின் ஜ‌தீக‌க் க‌தைக‌ளோடு இணைத்துப் பார்த்து இல‌ங்கைய‌ர்க‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும், அத‌னாற்றான் எங்க‌ளால் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டின‌மாய் இருக்கிற‌தா?' என்றொருவ‌ர் கேள்வி எழுப்பிய‌போது, 'இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ க‌தை ம‌காவ‌ம்ச‌த்தில் வ‌ருகின‌ற‌து. ஆனால் ம‌காவ‌ம்ச‌த்தை வாசித்தால்தான் இந்த‌ப் ப‌ட‌ம் விள‌ங்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை' என்றும் விமுக்தி க‌வ‌னப்ப‌டுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வ‌ர்த்த‌க‌ ஹொலிவூட் ப‌ட‌ங்க‌ளுக்கு தான் எதிரான‌வ‌ன் என்ப‌தை விமுக்தி ப‌திவு செய்த‌போது, அப்ப‌டியாயின் இத்திரைப்ப‌ட‌த்திற்கான‌ பார்வையாள‌ர்க‌ள் யாரென‌ வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'அது குறித்து நான் அக்க‌றைகொள்ளவில்லை. என்ன‌ளவில் எத்த‌கைய‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாரில்லை. ஆக‌க்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமான‌து' என்று விமுத்தி தெளிவாக‌வே கூறியிருந்தார்.

5.
இனி, என‌க்கு விள‌ங்கிய‌மாதிரி உருவாக்கிக்கொண்ட‌ க‌தை: இர‌ண்டுவித்தியாச‌மான‌ உல‌கு என்ப‌தை விமுக்தி ய‌தார்த்த‌திற்கும் புனைவுக்குமான‌ உல‌க‌ம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது க‌ன‌வுக்கும் ந‌ன‌வுக்கும் இடையிலான‌ உல‌க‌ம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த‌ க‌ன‌வு X ந‌ன‌வு என்கின்ற‌ இர‌ண்டு உல‌கை அவ்வ‌ளவு எளிதாக‌ எவ‌ராலும் வித்தியாச‌ப்ப‌டுத்த‌ முடியாது. நாம் ய‌தார்த்த்தில் இருக்கும்போதே ச‌ட்டென்று க‌ன‌வுல‌க‌த்திற்குப் போய்விட‌முடியும். இங்கே த‌ன்னை த‌டுத்துநிறுத்த‌ முய‌ல்கின்ற‌ சிறுவ‌னை இவ‌ன் த‌ரையில் அடித்துக்கொள்வ‌தும், த‌ன‌க்கு புண‌ர‌ முத‌லில் ச‌ம்ம‌த‌ம் த‌ராத‌ அண்ணியை க‌ல்லொன்றால் ச‌த‌க் ச‌த‌க் என்று இர‌த்த‌ம் பீறிட இவன் கொல்வ‌துமான‌ காட்சி யதார்த்த‌தில் நிக‌ழ்வ‌துபோல‌க் காட்ட‌ப்ப‌ட்டிருந்தாலும் இவைய‌னைத்தும் இவ‌னின் உள்ம‌ன‌தில் உருளுகின்ற‌ உல‌கில் வ‌ருப‌வையே. எனெனில் இறுதிக்காட்சிக‌ளில் இவ‌ன் பொந்தில் இருக்கின்ற‌போது தேடி உயிருட‌ன் மீள‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இச்சிறுவ‌னும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு ப‌டிம‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌தில் பெருவிருப்ப‌ம் உள்ள‌தென்ப‌தால் எதையும் நேர‌டியாக‌ச் சொல்வ‌தற்காய் அதிக‌ நேர‌ம் செல‌வ்ழிப்ப‌தில்லை. அவ‌ர‌து முத‌ற்ப‌டமான‌ Forsaken Land லிலேயே, போரைப் ப‌ற்றிச் சொல்ல‌ப்பட்டாலும் போரின் நேர‌டி அழிவுக‌ளை எந்த‌வொரு காட்சியிலும் காட்சிப்ப‌டுத்தியிருக்க‌ மாட்டார்.. அதுபோல‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் அடிக்க‌டி ஒரு ப‌டிம‌மாய் வ‌ரும் க‌வ‌ச வாக‌ன‌மும் (ராங்கியும்) அது குறிப்பார்க்க‌த் திருப்புகின்ற‌ நீண்ட‌ குழாயும், 'ச‌மாதான‌ கால‌ம்' என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ கால‌த்திலும் போர் வாச‌ற்ப‌டியில் நின்று, எப்போதோ மீண்டும் நிக‌ழ‌த் த‌யாராகின்ற‌தென‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். இந்த‌ப் ப‌ட‌த்திலும் அவ்வாறான‌ ப‌டிம‌ங்க‌ளையே விமுக்தி ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌த்தில் வ‌ரும் இவ‌ன் ஒரு முன்னோர் கால‌த்தில் நிக‌ழ்வ‌தாய்க் கூற‌ப்ப‌டுகின்ற‌ க‌தையில் வ‌ருகின்ற‌ இள‌வ‌ர‌ச‌னின் இன்னொரு ப‌டிம‌மே. இங்கே வ‌ரும் அண்ணியும் கூட‌. அவர் மூன்றாம் முறையாக‌ இவ‌ன‌து காய‌த்தை ஆற்றுவ‌த‌ற்காய் த‌ன‌து முலைப்பால் கொடுக்கும்போது, இவ‌ன் கேட்கின்றான் எப்ப‌டி 'உங்க‌ளுக்குப் பிள்ளையில்லாம‌லே முலை சுர‌க்கிற‌து?' என்று. இதை நாம் அந்த‌ ஜ‌தீக‌க் க‌தையில் தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ இளவ‌ர‌சி எவ‌ருமேயின்றி எப்ப‌டி ஒரு ஆண் குழ‌ந்தைக்குத் தாயாகின்றாள் என்ப‌தோடு பொருத்திப் பார்க்க‌லாம். அதே மாதிரி இள‌வ‌ர‌ச‌னின் தோழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ நிக‌ழ்கால‌த்தில் இவ‌ன‌து ஊரைச் சேர்ந்த இளைஞ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒரு கிள‌ர்ச்சி/க‌ல‌க‌ம் அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்று அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ள் கொண்டாடுகின்ற‌போதும், இவ‌ன் பொந்தில் இருப்ப‌து என்ப‌து, போராட்ட‌த்திற்கான‌ கார‌ணி இன்ன‌மும் அழிந்துவிட‌வில்லை என்ப‌தைக் குறியீடாக‌க் கொள்ள‌லாம். இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை ஈழ‌த்தில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டுவித‌மான‌ உள்நாட்டுப் போர்க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்க‌லாம்.. திரைக்க‌தை மேலோட்ட‌மாய் த‌னியொருவ‌னின் க‌தையைச் சொல்வ‌தாக‌ இருந்தாலும், அது ஒரு போராடிய ச‌மூக‌த்தின் க‌தையைத்தான் சொல்கின்ற‌து என்ற‌ நுட்பமான பார்வையை நாம் வ‌ந்தடைய‌ முடியும். ஈழ‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ த‌மிழரின் ஆயுத‌ப்போராட்ட‌ம், சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் 'சே குவேரா' (ஜேவிபி) கிள‌ர்ச்சிக‌ளுட‌ன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்த‌வ‌ரை அதிக‌மாய்ப் பொருந்திப் போவ‌து ஜேவிபியின் கிள‌ர்ச்சிக்கால‌ம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌போது ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள இளைஞ‌ர்க‌ள் மிக‌ மிலேச்ச‌த்த‌ன‌மாய் எந்த‌வித‌ சாட்சிக‌ளோ விசார‌ணைக‌ளோ இன்றி கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கையின் தென்பாகம் எங்கும் ச‌ட‌லங்க‌ள் க‌ட‌லில் மித‌ந்த‌தாக‌வும் அரைகுறையாய் புதைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் பின்வ‌ந்த‌ க‌தைக‌ள் சாட்சிய‌ம் கூறியிருக்கின்ற‌ன‌. இன்றைய‌ த‌மிழின‌ அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூர‌க்க‌ர‌ங்க‌ள் இருந்த‌ன‌வோ அதேபோல் சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் கிள‌ர்ச்சிக்கால‌த்தை ஒடுக்க‌வும் இந்தியாவின் இர‌த்த‌க்க‌ர‌ங்க‌ள் நீண்டிருந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம்.

மானுட‌ விடுத‌லைக்கான‌ கல‌க‌ங்க‌ள் எவ்வ‌ளவு கொடூர‌மாய் அதிகார‌த்தின் க‌ர‌ங்க‌ளால் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் அவை என்றேனும் ஒருகால‌த்தில் மீண்டும் திரும்பி வ‌ருவ‌த‌ற்கான‌ நிக‌ழ்த‌க‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையே இப்ப‌ட‌ம் உள்ளுறை உவ‌மமாக‌க் கூறுவ‌தாக‌த் தோன்றுகின்ற‌து.. இப்ப‌ட‌த்தில் ஒரு முதிய‌வ‌ர் அடிக்க‌டி வ‌ந்து வ‌ர‌லாற்றில் நிக‌ழ்வுக‌ள் அடிக்க‌டி மீள‌ நிக‌ழ‌க்கூடிய‌வை என்ப‌து இச்சாராம்ச‌த்தோடு இணைந்துபோக‌க்கூடிய‌துதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன‌, இந்த‌ப் ப‌ட‌மாய் இருந்தாலென‌ன‌ அவ‌ருக்கு மிக‌ப்பெரும் வெளியைக் காட்சிப்ப‌டுத்துவ‌து பிடித்திருக்கின்ற‌து. Forsaken Landல் பொட்ட‌ல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த‌ பெரு நில‌ப்ப‌ர‌ப்பு. அத்தோடு அதிக‌ காட்சிக‌ளில் க‌மரா அப்ப‌டியே அசையாம‌ல் ச‌ல‌ன‌ம‌ற்றிருக்கின்ற‌து; அது காட்டுகின்ற‌ வெளியில் ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள், பிற‌கு ம‌றைந்தும் போய்விடுகின்றார்க‌ள்.. அக‌ண்ட‌காட்சிகளாய் விரியும் ப‌ல‌ காட்சிக‌ளில் வ‌ந்துபோகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் மிக்ச்சிறிதாக‌த் தெரிகின்றார்க‌ள். இந்த‌ப் ப‌ட‌க்காட்சிக‌ள் ந‌ம‌து ம‌ன‌தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய‌வை. நம‌து வாழ்வில் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள் போகின்றார்க‌ள், ஆனால் ந‌ம‌து வாழ்வு தொட‌ர்ந்து ஒரேயிட‌த்தில் நின்று இவை எல்லாவ‌ற்றையும் ச‌ல‌ன‌ம‌ற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌துபோல‌.

விமுக்தியின் பட‌ங்க‌ளை -ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌தைப் போன்று- சாதார‌ண‌ப் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் வேக‌த்திலோ, அதிர‌டியான‌ திருப்ப‌ங்க‌ளையோ எதிர்பார்த்தோ பார்க்க‌ முடியாது. முத‌ல் வ‌ரும் காட்சிக்கும் அடுத்த‌ காட்சிக்கும் க‌ட்டாய‌ம் தொட‌ர்பு இருக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌த்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்த‌ள்ளும் அதேவேளை சில‌ காட்சிக‌ள் மிக‌ மிக‌ மெதுவாக‌ ந‌க‌ர்கின்ற‌போது ச‌ற்று அலுப்பு வ‌ர‌ச்செய்வ‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இன்று விமுத்தியின் ப‌ட‌த்தை பார்த்து ஒரு க‌தையை உருவாக்கும் ஒரு பார்வையாள‌ர் நாளை அத‌ற்குத் தொட‌ர்பில்லாத‌ இன்னொரு க‌தையைத் த‌ன்ன‌ளாவில் உருவாக்கிக்கொள‌ள‌வும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிர‌தி வாசிக்கும் க‌ண‌ந்தோறும் த‌ன‌க்கான‌ க‌தையை மாற்றிக்கொள்ளும் மாய‌த்தை உள்ள‌ட‌க்கினால் எப்ப‌டியிருக்குமோ அப்ப‌டியே விமுத்தியின் இப்ப‌ட‌மும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்க‌ளின் குறுக்குவெட்டுக்க‌ளால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள‌ முனைகின்ற‌து. இந்த‌க் மாய‌ வித்தை சில‌ருக்கு வ‌ன‌ப்பூட்ட‌லாம், வேறு சில‌ருக்கு அலுப்பூட்ட‌லாம். அது க‌தைசொல்லியின் த‌வ‌றும‌ல்ல‌, க‌தைகளைச் ச‌துர‌ங்க‌க் க‌ட்ட‌த்தில் ந‌க‌ர்த்த‌ விரும்பும்/விரும்பாத‌ ந‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்புக‌ள் சார்ந்த‌வை.


ன்றி: 'உன்னம்' & 'வைகறை'‌‌‌‌

ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் - 03

Wednesday, May 05, 2010

இதைவிட‌ ஈழ‌த்திலிருந்து அண்மைக்கால‌மாய் தொட‌ர்ச்சியாக‌வும் காத்திர‌மாக‌வும் எழுதும் அனாரைத் த‌விர்த்து நாமின்று ச‌ம‌கால‌ ஈழக் கவிதைக‌ள் குறித்து பேச‌முடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்காத‌போதும் சிறுக‌தைக‌ளில் த‌னித்து மிளிரும் திசேராவும், க‌விதைத்த‌ள‌த்தில் ப‌ஹிமா ஜ‌கானையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலிருந்து எழுதும் ம‌ல‌ர்ச்செல்வ‌னின் பெரிய‌ எழுத்திலும் சில‌ ந‌ல்ல‌ க‌தைக‌ள் இருக்கின்ற‌ன.

ம‌ஜீத்தின் 'புலி பாய்ந்த‌போது இர‌வுக‌ள் கோடையில் அலைந்த‌ன‌', க‌ருணாக‌ர‌னின் 'ப‌லியாடு' என்ப‌வற்றையும் வாசிக்காத‌போதும் -வாசித்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளின் அடிப்ப‌டையில்- அவையும் ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் முக்கிய‌ம் வாய்ந்த‌வை போன்றே தெரிகின்ற‌ன‌. அதேபோன்று யாழிலிருந்து வெளிவ‌ந்த‌ பா.ச‌த்திய‌மூர்த்தியின் ந‌.ச‌த்திய‌பால‌னின்  'இப்படியாயிற்று நூற்றியொராவ‌து த‌ட‌வையும்', புலத்திலிருந்து வெளிவந்த கலாமோகனின் 'ஜெயந்தீசன் கதைகள்' மற்றும் இரவி அருணாசலத்தின் 'காலமாகி வந்த கதை'யும்', வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவலும் வாசிப்பில் உள்ள‌ட‌க்க‌வேண்டிய‌வை.

நீண்ட‌கால‌மாய் புனைவுத்த‌ள‌த்தில் இய‌ங்கிவ‌ரும் பொ.க‌ருணாக‌ர‌மூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்' கவனிக்கத்தககவை. பொ.கருணாக‌ர‌மூர்த்தியிட‌ம் ம‌ர‌பு சார்ந்த‌ க‌தைசொல்லி அவ்வ‌ப்போது வெளிப்ப‌ட்டு வாசிப்ப‌வ‌ருக்கு இடைஞ்ச‌ல் கொடுத்தாலும், அதை வெளிப்ப‌டையாக‌ உண‌ர‌முடியாத‌வ‌ளவுக்கு அவ‌ரின் க‌தைக‌ளில் அங்க‌த‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து. அவ‌ரின் ப‌டைப்புக்க‌ள் குறித்து அவ‌ரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாக‌ப் பேசியிருப்ப‌தால் அவ‌ற்றைப் பற்றி இங்கே பேசுவ‌தைத் த‌விர்க்கிறேன்.

மேலும் தொகுப்புக்க‌ளாய் வெளிவ‌ராத‌போதும் (என்னை) மிக‌வும் வ‌சீக‌ரித்த‌ க‌தைக‌ளை எழுதிய‌ மைக்க‌ல், பார்த்தீப‌ன், சித்தார்த்த‌ சே குவேரா  போன்ற‌வ‌ர்க‌ளையும் க‌விதைக‌ளில் பிர‌தீபா தில்லைநாத‌ன், துர்க்கா போன்ற‌வ‌ர்க‌ளையும் நாம் இந்த‌ இட‌த்தில் த‌வ‌ற‌விட‌ முடியாது; அவ்வாறு குறிப்பிட‌த்த‌க்க‌ நீண்ட‌ ப‌ட்டிய‌ல் நம்மிடையே இருக்கிறது. ற‌ஞ்சினி, தேவ‌ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேர‌ங்க‌ருதி- இங்கே த‌விர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்ன‌ம்பல‌ம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.

ப‌ல்வேறு ப‌டைப்பாளிக‌ளின் ப‌டைப்புக்க‌ளைத் தொகுத்து இல‌ண்ட‌னிலிருந்து ப‌த்ம‌நாப ஜ‌ய‌ர் (க‌ண்ணில் தெரியுது வான‌ம்), பிரான்சிலிருந்து ஷோபா ச‌க்தி, சுக‌ன் (ச‌ன‌த‌ரும‌போதினி, க‌றுப்பு), க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌ன் (கூர்), த‌மிழ‌க‌த்திலிருந்து அ.ம‌ங்கை (பெய‌ல் ம‌ண‌க்கும் பொழுது), சுவிஸிலிருந்து ர‌ஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட‌ தொகுப்புக்க‌ள் ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் குறித்த‌ ப‌ல‌வேறு குறுக்கு வெட்டு முக‌ங்க‌ளைத் த‌ருகின்ற‌ன‌.

3.
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் ச‌காப்த‌த்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இல‌க்கிய‌ம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகால‌த்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்ப‌தும் பிற‌கு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிக‌ழ்ந்து கொண்டிருக்கின்ற‌து. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்ட‌ள‌வில் எங்க‌ளைவிட‌ கணிசமானோர் இல‌க்கிய‌ச் சூழ‌லில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வ‌ந்து நிர‌ப்பிவிடுகின்றார்க‌ள்.

மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவிய‌த்து ஒன்றிய‌ம்) உட்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவ‌ந்த‌ அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை த‌ங்க‌ளுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்ப‌து கூட‌ வ‌ர‌லாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய‌ கால‌மே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.

க‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ கால‌த்தில் க‌விதை, சிறுக‌தை போன்ற‌வ‌ற்றில் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளை ப‌திவு செய்த‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ உல‌க‌ம் நாவ‌லக‌ளிலோ விம‌ர்ச‌ன‌ம் உள்ளிட்ட‌ அபுனைவுத்த‌ள‌த்தில் அதிக‌ள‌வு ச‌ல‌ன‌ங்க‌ளை ஏற்ப‌டுத்த‌வில்லை என்றே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. நாவ‌ல்க‌ள் என்று பார்க்கும்போது ஷோபா ச‌க்தியின் 'கொரில்லா', 'ம்', தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'நிலாச்சமுத்திரம்', ந‌டேச‌னின் 'வ‌ண்ணாத்திக்க்குள‌ம்', 'உனையே ம‌ய‌ல் கொண்டு', விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி', அ.முத்துலிங்க‌த்த்தின் 'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்'. ர‌குநாத‌னின் 'ஒரு ப‌ன‌ங்காட்டுக்கிராம‌த்தின் க‌தை', எஸ்.பொவின் 'மாயினி' போன்ற‌வையே ஒர‌ள‌வாவ‌து க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளாய் இருக்கின்ற‌ன.

இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்ற‌வையே முக்கிய‌முடைய‌ ப‌டைப்புக்களாகின்ற‌ன‌. வ‌ண்ணாத்திக்குள‌ம் சிங்க‌ள/த‌மிழ் உறவுக‌ளை அதிக‌ ரொமான்டிசை செய்த‌துபோல‌ இருக்க‌, உனையே ம‌ய‌ல் கொண்டு ஒரு ஆணாதிக்க‌ப் பிர‌தியாக‌வும் யாழ்ப்பாணியக் கூறுக‌ள் அதிக‌ம் கொண்ட‌தாக‌வும் தெரிகின்ற‌து. ப‌ன‌ங்காட்டுக் கிராம‌த்தின் க‌தை ஈழ‌த்துப் ப‌ஞ்ச‌ம‌ர் வாழ்வைச் சொல்ல‌ முற்ப‌டும் ஒரு ப‌டைப்பு என்றாலும் அதில் சில‌ விட‌ய‌ங்க‌ள் திருப்ப‌ச் திருப்ப‌ச் சொல்வ‌து ஒருவித‌ அலுப்பை ஏற்ப‌டுத்துகின்ற‌து. சிற‌ந்த‌ க‌தை சொல்லியாக‌ த‌ன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக‌ மோச‌மான‌ த‌மிழ்த்தேசிய‌ பிர‌ச்சார‌க் க‌தையாக‌ மாயினியைத் த‌ந்திருக்கின்றார். அ.முத்துலிங்க‌த்தின் உண்மை க‌ல்ந்த‌ நாட்குறிப்புக்க‌ள், அவை த‌னித்த‌ள‌வில் சிறுக‌தைக‌ளாய் இருக்கின்ற‌தே த‌விர‌ ஒரு நாவ‌லுக்கான‌ வெற்றியை அது அடைய‌வே இல்லை. விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.

ஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எம‌து ப‌டைப்புக்க‌ள் த‌ம‌து த‌ள‌த்தை உல‌க‌ அள‌விற்கு விசாலிக்க‌வில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான‌ விம‌ர்ச‌ன‌ ம‌ர‌பு தொட‌ர்ச்சியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வில்லை என்ப‌து முக்கிய‌ கார‌ண‌மாய்த் தோன்றுகின்ற‌து. ந‌ம் ப‌டைப்பாளிக‌ள் ச‌க‌ ப‌டைப்பாளிக‌ளிடையோ வாச‌க‌ர்க‌ளிடையோ விரிவான‌ உடையாட‌ல்க‌ளை நிக‌ழ்த்தாது த‌ங்க‌ளின் சாள‌ர‌ங்க‌ளை இறுக்க‌ முடிக்கொண்டிருப்ப‌து இருப்ப‌து இன்னொரு கார‌ண‌மாக‌ இருக்க‌க்கூடும். ம‌ற்றும்  -இதைச் சொல்வ‌தால் சில‌ருக்கு  கோப‌ம் வ‌ர‌க்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அர‌சிய‌ல், சினிமா தொட‌க்கும் இல‌க்கிய‌ம் வ‌ரை இந்தியா மீதான் அடிமை மோக‌த்திலிருந்து வெளியே வர‌வில்லை என்ப‌தையும் கூற‌த்தான் வேண்டியிருக்கிற‌து.

(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில்  வாசிக்கப்பட்ட கட்டுரை; சில திருத்த‌ங்கள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து - Apr, 2010)

சமகால ஈழத்து இலக்கியம் - 02

Sunday, May 02, 2010

(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)

இந்த‌ இட‌த்தில் பெய‌ர்க‌ளைப் ப‌ட்டிய‌லிடுவ‌தை ச‌ற்று நிறுத்தி, மீண்டும் தொட‌ர்ச்சியாக‌ எழுதுவ‌து/ எழுதாம‌ல் இருப்ப‌த‌ன் புள்ளி குறித்து ச‌ற்றுப் பார்ப்போம். ப‌ல்வேறு புற‌க்கார‌ண‌ங்க‌ள் இருந்தாலும், ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் ந‌ல்ல‌ சில‌ ப‌டைப்புக்க‌ளை எழுதிய‌ எத்த‌னையோ பேர்கொண்ட‌ ப‌ட்டிய‌ல் ந‌ம்மிட‌ம் நீண்ட‌தாய் இருக்கிற‌து. ர‌ஞ்ச‌குமார் ஓர் அருமையான‌ தொகுப்பான 'மோகவாசலோடு' நிறுத்திவிட‌வில்லையா? ' ம‌க்கத்துச் சால்வை' எம்.ஹ‌னீபா 40 ஆண்டுக‌ளாக‌ எழுதினாலும் 'அவ‌ளும் ஒரு பாற்க‌ட‌ல்' என்ற‌ தொகுப்பில் 25 க‌தைக‌ளை ம‌ட்டுந்தானே தொகுக்க‌ முடிந்திருக்கின்ற‌து. ஆனால் வாசிக்கும் நாம் ர‌ஞ்ச‌குமாரையோ, ஹ‌னீபாவையோ, ஏன் அர‌சிய‌ல் த‌ள‌த்தில் கோவிந்த‌னையோ தொட‌ர்ச்சியாக‌ நினைவு கூர்ந்து கொண்டுதானே இருக்கின்றோம். இதைத்தான் ஈழ‌த்தின் த‌னித்துவ‌மான‌ ஒரு ப‌ண்பு என‌ எடுத்துக்கொள்கின்றேன். எங்க‌ளுக்கு -அதாவ‌து வாச‌க‌ருக்கு- ஒரு ப‌டைப்பாளி ஒன்றிர‌ண்டு ந‌ல்ல‌ ப‌டைப்புக்க‌ளைத் த‌ந்தால் கூட‌ அவ‌ர் க‌வ‌னிக்க‌க்கூடிய‌வ‌ர் என்றுதான் எம‌து ஈழ‌த்து ம‌ர‌பும் வாழ்வும் க‌ற்றுத்த‌ந்திருக்கின்ற‌து. இந்த‌ ம‌ர‌பு இப்போதுதான் தொட‌ங்கியிருக்கின்ற‌து என்ப‌த‌ல்ல‌, ச‌ங்ககால‌க் க‌விஞ‌ர்க‌ளை இப்போதும் நினைவுகூர‌ எங்க‌ளுக்கு அவ‌ர்க‌ளின் ஒன்றிர‌ண்டு பாட‌ல்க‌ளே போதுமாயிருக்கிற‌து அல்ல‌வா?

இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் இணைய‌ம் ப‌ல‌ புதிய‌ ப‌டைப்பாளிக‌ளை அடையாள‌ங்காட்டுகின்ற‌து. முக்கிய‌மாய் யாழ்ப்பாண‌த்திலிருந்து முர‌ண்வெளி த‌ள‌த்தில் ஹ‌ரி எழுத‌த் தொட‌ங்குகின்றார். முர‌ண்வெளி த‌ள‌த்தில் வெளிவந்த ஆமிர‌பாலியின் க‌விதைக‌ளும், அமெளனனின் 'வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்' என்ப‌தும் 2005ற்குப் பிற்பான‌ ப‌டைப்புக்க‌ளில் க‌வ‌ன‌த்தைக் கோருப‌வை. வெளிச்ச‌க்கூடுக‌ள் தேவைப்படுவோர் க‌தை இராணுவ‌த்தால் மூட‌ப்பட்ட‌ யாழ் ந‌க‌ரின் வாழ்வைப் ப‌திவுசெய்கின்ற‌து. விரும்பியோ விரும்பாம‌லோ சூழ‌லின் நிர்ப்ப‌ந்த‌ற்குள் உந்த‌ப்ப‌ட்டு இராணுவ‌த்தோடு த‌ற்பால் உற‌வு கொள்கின்ற‌ சிறுவர்களின் பாத்திர‌ங்கள் இதில் வ‌ருகின்ற‌து. இக்க‌தையில் அநேக‌மான‌ ஈழ‌த்துச் சிறுக‌தைக‌ளில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ 'கொடுமைக்கார‌' இராணுவ‌ம் என்ற‌ பாத்திர‌ம் இராணுவ‌த்திற்கு கொடுக்க‌ப்ப‌டாத‌து க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டிய‌து. மிக‌ உக்கிர‌மான‌ போர்ச்சூழ‌ல் ந‌ம‌க்கான‌ இர‌ண்டு தெரிவுக‌ளைக் கொடுக்கின்ற‌து; அதிலொன்று நாம் 'வீர‌னாகி'ப் போர்க்க‌ள‌த்திற்குப் போவ‌து. அல்ல‌து இன்னுமொரு வாய்ப்பாக‌ இருக்க‌கூடிய‌ காம‌த்தின் உச்ச‌த்திற்குள் சிக்கிக்கொள்வ‌து. மேலும் இணையத்தில் ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருந்த நிவேதா, சித்தாந்தன் போன்றோரின் கவிதைகளும் கவனத்தைக் கோருபவையாக இருந்திருக்கின்றன.

2005ற்குப் பின் முத்துலிங்க‌மும், சோபாச‌க்தியும் பரவலான கவனத்தைப் பெற்றதால், நாம் அவ‌ர்க‌ளின் பிற‌ ப‌டைப்புக்க‌ளைச் ச‌ற்று ம‌ற‌ந்து பிறரைப் பார்ப்போம். சும‌தி ரூப‌னின் 'யாதுமாகி' தொகுப்பு மிதர பதிப்பகத்தால் வெளிவ‌ருகின்ற‌து. அவ‌ற்றில் அனேக‌மான‌வை வானொலிக்கு எழுதிய‌வை என்றாலும் ஒரு பெண்ணின் அக‌வுல‌க‌ம் மிக‌ நுட்ப‌மாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. முக்கியமாக 'வேட்கை' என்று சும‌தி திண்ணையில் எழுதிய‌ க‌தை கவனிக்கத்தக்கது. திருமணமான ஒரு பெண்ணுக்கும் அவரோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும் வரும் உறவு குறித்துப் பேசும் கதையது. திரும‌ண‌ம் என்கின்ற‌ மிக‌க்க‌ட்டுபாடான‌ அர‌ங்கை விட்டு ந‌க‌ர‌ விரும்புப‌வ்ர்க‌ளால் கூட‌ சில‌வேளைக‌ளில் ப‌ண்பாட்டை க‌ழ‌ற்றியெறிய‌ முடியாது இருக்கின்ற‌து என்ப‌தைச் சுமதி தாலியை முன் வைத்து அதில் க‌வ‌னப்ப‌டுத்தியிருப்பார். இதே காலப்பகுதியில் க‌ன‌டாவிலிருக்கும்போது அவ்வ‌ளவு க‌வ‌ன‌ம் பெறாத‌ த‌மிழ்ந‌தி த‌மிழ‌க‌த்திலிருந்து த‌ன‌து த‌ட‌ங்க‌ளைப் ப‌திக்க‌த்தொட‌ங்குகின்றார். 'சூரிய‌ன் த‌னித்த‌லையும் ப‌க‌ல்' என்கின்ற‌ கவிதைத் தொகுப்பும், 'ந‌ந்த‌குமார‌னுக்கு எழுதிய‌து' என்கின்ற‌ சிறுக‌தைத் தொகுப்பும் வெளிவ‌ருகின்ற‌ன‌. த‌மிழ்ந‌தியின் க‌விதை மொழியில் ஒரு வ‌சீக‌ர‌த்த‌ன்மை இருந்தாலும் அவ‌ர் முன்வைக்கும் அர‌சிய‌ல் சில‌வேளைக‌ளில் அபத்தமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

இவ‌ர்க‌ளை விட‌ மிக‌வும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ தொகுப்பை நிருபா 'சுணைக்கிது'வாய் த‌ந்திருக்கின்றார். சிறுமியிலிருந்து வ‌ள‌ர்ந்த‌ பெண்வ‌ரை ப‌ல‌ பாத்திர‌ங்க‌ள் மிக‌ அழ‌காக‌ச் சித்த‌ரிக்க‌ப‌ப்ட்டிருக்கின்ற‌ன‌. சுணைக்கிது க‌தையில் சிறுமியொருத்தியைப் பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌த்திற்கு ஆளாக்குப‌வ‌ர் யாரென்ப‌தை நேர‌டியாக‌ச் சொல்லாம‌ல் ஒரு வினாவாக‌த் தொக்கு நிற்க வைத்து அருமையான‌தொரு க‌தையாக‌ முடித்திருப்பார். கிட்ட‌த்த‌ட்ட‌ எஸ்.ராம‌கிருஸ்ணைன் த‌ன‌து க‌தையொன்றில் (விசித்திரி என‌ நினைக்கிறேன்) ம‌ன‌நிலை பிற‌ழ்ந்த‌ பெண்ணொருத்தியோடு உற‌வு கொண்ட‌து யாரென்ப‌தை கூறாம‌ல் ஒரு க‌தை எழுதியிருப்பார். அதை ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ சொல்லித் திரிந்த‌ எவ‌ரும் நிருபாவின் சுணைக்கிது க‌தையைப் ப‌ற்றிக் குறிப்பிடாம‌ல்விட்ட‌து விய‌ப்பாக‌ இருக்கிற‌து.

இதேவேளை பிரான்சிலிருந்து நீண்டகாலமாய் கவிதைகள் எழுதிவரும் வாசுதேவனின் 'தொலைவில்' வெளிவருகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்களை சில இடங்களில் கோரக்கூடிய கவனிக்கத்தக்க பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' காலம் பிந்தி வந்தாலும், ஆழியாளின் உரத்துப் பேச போன்றதைப் போல கவனிக்கத்தக்கதொரு தொகுப்பே. மேலும், மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்களும்' , த.பாலகணேசனின் 'வர்ணங்கள் கரைந்த வெளியும்' இதே காலப்பகுதியில் வெளிவருகின்றன..

3.

ஈழ‌த்தில் சமாதானக் காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலிருந்தும் வன்னியிலிருந்து புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுத வருகின்றார்கள். அதிக கவனத்தைக் கோருகின்ற இருவராக தீபச்செல்வனையும், த.அகிலனையும் கூறலாம். கிளிநொச்சியின் முற்றுகையை தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. இதை சு.வில்வரத்தினத்தினம் தீவுகள் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டுவ‌தைப் பாடிய 'காற்றுவெளிக்கிராமம்' , யாழ்ப்பாண 95ம் ஆண்டு பெரும் இடம்பெயர்வையும் முற்றுகையையும் முன்வைத்து நிலாந்தன் எழுதிய 'யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே' போன்ற தொகுப்புக்களின் நீட்சியில் வைத்துப் பார்க்கலாம். தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' தொகுப்பு ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவை விட அதற்கப்பால விரிவடையவில்லை. திருப்பவும் திருப்பவும் ஒரேவிதமான மொழியாடலில் ஒரேவிதமான படிமங்களுடன் தீபச்செல்வன் நிறையக் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதால் அப்படியான வாசிப்பு மனோநிலை வந்ததோ தெரியாது. எனினும் ஒரு சகோதரரை ஈழப்போருக்குக் பலிகொடுத்தும், பதின்மத் தங்கை கட்டாய புலிகளின் ஆட்சேர்ப்பில் உள்ளாக்கப்பட்டு, இன்று தாயும் தங்கையும் முள்வேலி முகாங்களுக்குள் இருக்கும்போது தீபச்செல்வனை வேறு விதமாய் கவிதை எழுதக்கேட்க எங்களிடமும் எவ்வித அறங்களுமில்லை என்பதையும் அறிவேன். நீண்டதொரு பயணத்திற்கு தீபச்செல்வன் தயாராகின்றார் என்றால் இதே விமர்சனத்தைப் பின்னாட்களில் அவர் கேட்கக் கூடும் என்ப‌தால் இதை இப்போது சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌மும் இருக்கிற‌து என‌வே ந‌ம்புகிறேன். த.அகிலனின் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கின்றது, அதை வாசிக்காதவரை அதுகுறித்து கருத்துச் சொல்லமுடியாது எனினும் புனைவுத் தன்மையில் அகிலன் எழுதிய 'மரணத்தின் வாசனை' முக்கியமானதொரு படைப்பு. ஒவ்வொரு கதையும் மரணத்தையே பேசுகின்றது. இவ்வளவு மரணங்களையும் நெருக்கமாகக் கண்ட ஒருவரால் இவ்வளவு நிதானமாகப் பதிவு செய்யமுடிகின்றதே என்ற ஆச்சரியமும், மரணம் சூழப்பட்ட எம் ஈழத்தமிழ் இனம் குறித்த சோகமும் ம‌ர‌ண‌த்தின் வாச‌னை வாசிக்கும்போது சூழ்கின்றது. இத்தொகுப்பு வெளிவந்த சில மாதங்களில் அவரின் சகோதரரும் போரின் நிமித்தம் பலிகொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஏன் இவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளோடு இவ‌ர்க‌ளின் புற‌ச்சூழ‌ல் குறித்தும் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ‌ர்க‌ளைப் போன்ற‌ ப‌ல‌ ப‌டைப்பாளிகள் பலர் இவ்வாறான இழ‌ப்புக்க‌ளோடும் துய‌ர‌ங்க‌ளோடும் நேர‌டியாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட‌ட‌வ‌ர்க‌ள். தாங்க‌ள் நினைத்த‌ நேர‌த்திற்கு கும்ப‌மேளாவிற்கும், கும‌ரிமுனைக்கும் போய் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு எத்தகைய நெருக்கடிகளிலிருந்து ஈழத்துப் படைப்புக்கள் எழுதப்படுகின்றன என்பதை அறிதல் கடினமே.

இறுதியாக அண்மையில் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' பற்றியும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இது ஒரு குறுநாவல் அளவு சிறிதெனினும் பலவித கதைகளை நீட்சித்துக் கொண்டுபோகக்கூடிய இடைவெளிக‌ளை வாச‌க‌ருக்குத் த‌ர‌க்கூடிய‌ ஒரு முக்கிய படைப்பு. மெலிஞ்சி முத்தனின் கவிதைகள் என்னை அவ்வளவு ஈர்க்காதபோதும், மெலிஞ்சியின் 'வேருலகு' அண்மையில் புலம்பெயர் சூழலில் வெளிவந்த முக்கிய படைப்பு எனலாம். அவரின் கவிதைகளிலிருந்து பார்க்கும்போது, இக்குறுநாவல் மிகப்பெரும் பாய்ச்சலாகவே இருக்கின்றது.

(தொடரும்...)
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில்  வாசிக்கப்பட்ட கட்டுரை, Apr, 2010)

சமகால ஈழத்து இலக்கியம்

Saturday, May 01, 2010

(2000ம் ஆண்டுகளின் பின்பான பிரதிகளை முன்வைத்து)

1.
ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் என்ப‌து ப‌ர‌ந்த‌ த‌ள‌த்தில் அணுக‌வேண்டிய‌து. விரிவான‌ வாசிப்பும், ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்ப‌ண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்த‌ல் என்ப‌து க‌டின‌மான‌து.. ஈழ‌த்திலிருந்து என‌க்கு வாசிக்க‌ கிடைத்த‌ பிர‌திக‌ள் மிக‌ச் சொற்ப‌மே. எனவே ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ற‌ வ‌கைக்குள் ஈழ‌த்திலிருந்தும் புல‌ம்பெய‌ர்ந்தும் வ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளை சேர்த்து, சில‌ வாசிப்புப் புள்ளிக‌ளை முன்வைக்க‌லாமென‌ நினைக்கின்றேன். அத்துடன், இது எத‌ற்கான‌ முடிந்த‌ முடிபுக‌ளோ அல்ல‌ என்ப‌தையும் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற‌ ஈழ‌த்துச் சூழ‌லில், இன்று இல‌க்கிய‌ம் பேசுவ‌து கூட‌ ஒருவ‌கையில் அப‌த்த‌மான‌துதான்.

ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தை 2000ம் ஆண்டுக்குப் பிற‌கான‌ சில‌ பிர‌திக‌ளினூடாக‌ அணுக‌ விரும்புகின்றேன். ஈழ‌த்தில‌க்கிய‌த்தில், மிக‌ நீண்ட‌கால‌மாக‌ புனைவுக‌ளின் ப‌க்க‌ம் தீவிர‌மாக‌ இய‌ங்கிய‌வ‌ர்க‌ள் என‌, எவ‌ரேயையேனும் க‌ண்டுகொள்ளுத‌ல் ச‌ற்றுக் க‌டின‌மாக‌வே இருக்கிற‌து. விம‌ர்ச‌ன‌த்துறையில் ஒரு தொட‌ர்ச்சியும், தொன்மையும் இருந்த‌தைப் போல‌, புனைவுக‌ளின் வ‌ழியே ந‌ம்மிடையே ஒரு தொட‌ர்ச்சி இருந்த‌தில்லை. அவ்வாறு இல்லாத‌து ந‌ல்ல‌தா கூடாதா என்ப‌தைப் பிற‌கொரு நேர‌த்தில் பார்ப்போம். இந்த‌க் கால‌ப்ப‌குதியில், ஒர‌ள‌வு தொட‌ர்ச்சியாக‌ க‌விதைத் த‌ள‌த்தில் தீவிர‌மாய் இய‌ங்கிவ‌ந்த‌ வில்வ‌ர‌த்தின‌த்தை இழ‌ந்திருக்கின்றோம். இன்னொரு புற‌த்தில் மிக‌வும் நம்பிக்கை த‌ந்துகொண்டிருந்த‌ எஸ்.போஸை மிக‌ இள‌ம‌வ‌ய‌தில் துப்பாக்கியிற்குப் ப‌லியும் கொடுத்திருக்கின்றோம். ஆக‌வே ஈழ‌ இல‌க்கிய‌த்தை வாசிப்புச் செய்ய‌வ‌ரும் ஒருவ‌ர், புற‌நிலைக் கார‌ணிக‌ளான‌, தொட‌ர்ச்சியான‌ போர், இட‌ம்பெய‌ர்த‌ல், சுத‌ந்திர‌மாக‌ எதையும் எழுத‌முடியாத‌ சூழ‌ல் என்ப‌வ‌ற்றைக் க‌வ‌ன‌த்தில் கொள்ளுத‌ல் அவ‌சிய‌மாகின்ற‌து. இதை விம‌ர்ச‌க‌ர்க‌ளுக்கு முக்கிய‌மாய் இந்தியாவில் சொகுசான‌ சூழ‌லில் இருந்துகொண்டு, வ‌ருமான‌ வச‌திக‌ளுக்காய் கோட‌ம்பாக்க‌த்தில் புர‌ண்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விள‌ங்க‌ப்ப‌டுத்துவ‌து க‌டின‌ம‌.

ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தே அவ‌ற்றின் நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும், க‌லாசார‌ த‌ள‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ உட்பிர‌தேச‌ங்க‌ளிலேயே வித்தியாச‌ப்ப‌டுப‌வை. உதார‌ண‌மாக‌ யாழில் வெளிவ‌ரும் ப‌டைப்புக்க‌ளுக்கு, பிரயோகிக்கும் விம‌ர்ச‌ன‌ அலகுகளை ம‌லைய‌க‌த்தில் முன்வைக்க‌முடியாது. முற்றிலும் வித்தியாச‌மான‌ சூழ‌ல் ம‌லைய‌க‌த்தினுடைய‌து. க‌விதை எழுதும் ம‌லைய‌க‌ப் பெண்ணொருவ‌ர் ஒரு நேர்காண‌லின்போது, தான் ஒரு ப‌டைப்பு எழுதி அனுப்புவ‌து என்றால் கூட‌ 4 மைல் ந‌ட‌ந்துவ‌ந்தே த‌பால் பெட்டிக்குள் போட‌வேண்டியிருக்கின்ற‌து என்ப‌த‌ன், பின்னாலுள்ள‌ புறச்சூழ‌ல்க‌ளை முன்வைத்தே நாம் ம‌லைய‌க‌ப் ப‌டைப்புக்க‌ளை அணுக‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று வ‌ட‌க்கிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின‌தும், கிழ‌க்கில் இருக்கும் முஸ்லிம்க‌ளினதும் வாழ்வு நிலை என்ப‌து கூட‌ முற்று முழுதிலும் வேறுப‌ட‌க்கூடிய‌து. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளில் ஊடாடுவ‌தை விள‌ங்கிக்கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாக‌ச் செய்துவிட‌ முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக‌ வாழ்வு குலைக்க‌ப்ப‌ட்டு புதிய‌ நாட்டுச் சூழ‌லில் வாழ‌த்தொட‌ங்கும் புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் வேறுவித‌மான‌ பிர‌ச்சினைக‌ள் இருக்கின்ற‌ன‌.

2.
2001ம் ஆண்டு ஷோபாச‌க்தியின் 'கொரில்லா' ஒரு புதிய‌ பாய்ச்ச‌லை தமிழ்ச்சூழலில் ஏற்ப‌டுத்துகின்ற‌து. க‌தைக் க‌ள‌த்தில் ம‌ட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாச‌த்தைக் கொண்டிருந்த‌து. அழுது வ‌டிந்துகொண்டிருந்த‌ மொழியில், க‌தை சொல்லிக்கொண்டிருந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர் ப‌டைப்புக்க‌ள‌த்தில், இது ஒரு பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. மிக‌ உக்கிர‌மான‌ அர‌சிய‌லை, அங்க‌த‌த்தோடு இணைத்துக்கொண்ட‌தால் -எப்போதுமே அர‌சிய‌ல் பேச‌ப்பிடிக்கின்ற‌ த‌மிழ‌ர்க‌ளை- அது வெகுவிரைவாக‌ த‌ன‌க்குள் இழுத்துக்கொண்ட‌து. அதே ஆண்டு அ.முத்துலிங்க‌த்தின் 'ம‌காராஜாவின் புகைவ‌ண்டி ர‌யில்வ‌ண்டி' கால‌ச்சுவ‌டு ப‌திப்பாக‌ வ‌ருகின்ற‌து. அத‌ற்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாய் முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ளை வாசித்த‌வ‌ர்க‌ளுக்கு ‍‍-முக்கிய‌மாய்த் த‌மிழ‌க‌ வாச‌க‌ர்க‌ளுக்கு- இப்ப‌டி த‌ங்க‌ளை எளிதாக‌ப் புன்ன‌கைக‌ வைக்கின்ற‌ ஒரு க‌தைசொல்லி இருக்கின்றார் என்ப‌தை அறிகின்றார்க‌ள்.. ஷோபா சக்தியும், முத்துலிங்க‌மும் புதின‌ங்க‌ளில் வாச‌க‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்தைக் கோருகின்ற‌ அதேவேளையில், க‌விதைக‌ளில் 2000ல் ஆழியாளின் 'உர‌த்துப் பேச‌'வும், பா.அகில‌னின் 'ப‌துங்குகுழி நாட்க‌ளும்' க‌வ‌ன‌த்தைப் பெறுகின்ற‌ன. காத‌ல் முறிவின்போது என்னிட‌ம் இருந்து எல்லாவ‌ற்றையும் திருப்பிப் பெறுகின்ற‌ நீ, எப்ப‌டி என‌க்குத் த‌ந்த‌ முத்த‌ங்க‌ளையும்,விந்துக்க‌ளையும் திருப்பிப் பெறுவாய்? என்று அறைந்து கேட்கின்ற‌ கேள்விக‌ள் ஆழியாளிட‌மிருந்து வெளிவ‌ருகின்றது, பா.அகில‌னோ இழ‌ந்து போன‌ காத‌லை, ம‌ஞ்ச‌ள் ச‌ண‌ல் வ‌ய‌லில் விழுகின்ற‌ சூரியனாய் ஆக்குகின்ற ப‌டிம‌ங்க‌ளில் எழுதுகின்றார்.

ஷோபாச‌க்தியைப் போல‌, மிக‌ப்பெரும் பாய்ச்ச‌லை புனைவுத்த‌ள‌த்தில் நிகழ்த்த‌க் கூடிய‌வ‌ர் என்று, மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்தி 'யுத்த‌தின் இர‌ண்டாம் பாக‌த்தோடு' ஒருவித உற‌க்க‌நிலைக்குப் போன‌து ஈழ‌த்து இல‌க்கிய‌ப்ப‌ர‌ப்பில் ஏமாற்ற‌மே. யுத்த‌த்தின் இர‌ண்டாம் பாக‌த்தின் சில‌ கதைக‌ள் உணர்ச்சித்தளத்தில் மட்டும் இருக்கின்ற‌ன‌ என்றாலும், அதில் உண்மைக‌ள் நேர்மையாக‌வும் துணிச்ச‌லாக‌வும் கூற‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து என்ப‌தால் முக்கிய‌ம் வாய்ந்ததாகிவிடுகின்றது. மேலும் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மொழியின் வாச‌னை க‌தையெங்கும் ம‌ல‌ர்ந்த‌ப‌டியே இருப்ப‌துவும் க‌வ‌னிக்க‌த்த‌து. இதே கால‌க‌ட்ட‌த்தில் இல‌க்கிய‌ உல‌கில் கால‌ம் ச‌ற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த‌ சொற்சிக்க‌ன‌த்தோடும் அழ‌கிய‌லோடும் திருமாவ‌ள‌வ‌ன் நுழைகின்றார். ப‌னிவய‌ல் உழ‌வில் முன்ன‌வ‌ர் சில‌ரின் பாதிப்பு இருந்தாலும் சிற‌ந்த‌ க‌விதைக‌ள் சில‌வ‌ற்றையாவ‌து அதில் அடையாள‌ங்காண் முடியும். ப‌னிவ‌ய‌ல் உழ‌விற்குப் பிற‌கு அஃதே இர‌வு அஃதே ப‌க‌லில் வேறொரு த‌ள‌த்தில் க‌விதைக‌ளை திருமாவ‌ள‌வ‌ன் ந‌க‌ர்த்த‌ முய‌ன்றிருக்கின்றார். ஆனால் அவ‌ர‌து 3வ‌து தொகுப்பான‌ இருள்-யாழி இவ்விரு தொகுப்புக்க‌ளை விடுத்து முன்ன‌க‌ர‌ வேண்டிய‌த‌ற்குப் ப‌திலாக‌ சற்றுத் தேங்கிப் போன‌து ஒருவ‌கையில் ஏமாற்ற‌மே. இதே கால‌ப்ப‌குதியில் க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌னின் 'க‌தா கால‌ம்' கால‌ம் ப‌திப்பாக‌ வ‌ருகின்ற‌து. ம‌காபார‌த‌ம் ந‌ம‌து ஈழ‌த்துச் சூழ‌லிற்கு ஏற்ப‌ ம‌றுவாசிப்புச் செய்ய‌ப்ப‌டுகின்ற‌து.நாம் அறிந்த ம‌காபார‌த‌ பாத்திர‌ங்க‌ள் க‌தா கால‌த்தில் வேறு வேறு வ‌டிவ‌ங்க‌ள் எடுக்கின்ற‌ன‌.. வாசிப்புக் க‌வ‌ன‌த்தைக் கோரும் இப்புதின‌ம், ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்த‌ எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் உப‌பாண்ட‌வ‌த்தின், பெரும் வெளிச்ச‌த்தில் பின் த‌ங்கிவிட்ட‌தோ, என்கின்ற‌ ஆத‌ங்க‌ம் இப்போதும் என‌க்கு உண்டு.

2001ல் ஈழ‌த்தில் ஏற்ப‌ட்ட‌ ச‌மாதான‌க் கால‌ம், வ‌ன்னியிலிருந்து நாம் இதுவ‌ரை அறியாத‌ க‌தைக‌ளை எம்முன்னே கொண்டுவ‌ர‌த் தொட‌ங்குகின்ற‌து. ஏற்க‌ன‌வே அறிய‌ப்ப‌ட்ட‌ தாம‌ரைச் செல்வியின் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுக‌தைத் தொகுப்பு வெளிவ‌ருகின்ற‌து. அதேபோன்று த‌ன‌து பிள்ளைக‌ளை ஈழ‌ப்போருக்குப் ப‌லிகொடுத்து, தானும் ஒரு போராளியாக‌ இருந்த‌ த‌மிழ் ம‌க‌ள் என்ற‌ க‌தைசொல்லியின் 'இனி வானம் வெளிச்சிரும்' வ‌ருகின்ற‌து. வ‌றுமைக்குள் வாழ்ந்து, திரும‌ண‌மாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் க‌ண‌வ‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ உறுதிமிகு ஒரு வ‌ன்னிப் பெண்ணின் க‌தை, மிக‌ அற்புத‌மாக‌ அதில் ப‌திய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இதுவ‌ரை ஆண்க‌ளின் குர‌ல்க‌ளின் வ‌ழியே விழுந்த‌ போராட்ட‌ம் குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளை த‌மிழ்ம‌க‌ள் வேறொரு வித‌த்தில் அணுகுகின்றார். இந்நாவ‌லின் ஆண்க‌ள் விய‌ந்தோத்தும் வீர‌த்தை அதிக‌ம் கொண்டாடாது, இப்போராட்ட‌ம் த‌ம‌க்கு வேறு வ‌ழியில்லாது திணிக்க‌ப்ப‌ட்ட‌து, த‌ம‌து இருத்த‌ல் என்ப‌தே இப்போராட்ட‌த்தோடு இணைந்துள்ள‌தென‌ நினைக்கும், ஒரு பெண்ணின் ம‌னோநிலையில் எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. போர் குறித்தும் போர் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து குறித்தும் ந‌ம‌க்கு ப‌ல்வேறு கேள்விக‌ள் இருக்கின்ற‌போதும் தாம் உறுதியாய் ந‌ம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்துக்கொண்ட‌வ‌ர்க‌ளின் புதின‌ம் என்ற‌வகையில் இந்நாவ‌ல் முக்கிய‌மான‌தே. ம‌க்சிம் கார்க்கியின் தாயிற்கு நிக‌ரான‌ எத்த‌னை ஆயிர‌மாயிர‌ம் தாய்களை நாம் ந‌ம‌து நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளில் க‌ண்டிருக்கின்றோம். அவ்வாறான‌ ஒரு தாயின் க‌தையே இது. மேலும் புலிக‌ளின் அரசிய‌ல் துறையில் இருந்த‌ ம‌லைம‌கள் எழுதிய‌ 'புதிய க‌தைக‌ளிலும்', வெளிச்ச‌ம் ச‌ஞ்சிகையால் தொகுக்க‌ப்ப‌ட்ட‌ 'வாசல் ஒவ்வொன்றும்' சிறுக‌தைத் தொகுப்பிலும் போர்க்கால‌ வ‌ன்னிச்சூழ‌ல் அங்கே வாழ்ந்த‌வ‌ர்க‌ளால் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட 'இசை பிழியப்பட்ட வீணை'யையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(தொடரும்...)
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

ஒரு யாழ்ப்பாணியின் சோக‌ வாக்குமூல‌ம்

Thursday, April 15, 2010

-நெடுங்க‌தை-

1.
அவ‌ளைக் காண‌வில்லை என்று தெரிந்த‌போது நான் பெரிதாக‌ முத‌லில் எடுத்துக்கொள்ள‌வில்லை. வ‌குப்பு முடிந்த‌வுட‌ன் வ‌ழ‌மையாக‌ச் ச‌ந்திக்கும் இட‌த்தில் அவ‌ள் இல்லாத‌போது வேறெத‌னும் வேலையாக‌ப் போயிருப்பாள் -தாம‌த‌மாக‌ வ‌ரலாம்- என்று காத்துக்கொண்டிருக்க‌த் தொட‌ங்கினேன். கோடை கால‌த்தில் இந்த‌ வ‌ளாக‌த்தைச் சுற்றி ஓடும் ந‌தியிற்கு அதிக‌ வ‌ன‌ப்பு வ‌ந்துவிடுகின்ற‌து. ப‌டிக்கும் நாங்க‌ள் ப‌ல்வேறு தாய்மொழிக‌ளைப் பேசிக்கொண்டு திரிவ‌துபோல‌ ந‌தியும் க‌ல‌க‌ல‌ப்பாக‌ப் ப‌ல‌மொழிக‌ளைப் பேசிக்கொண்டு ந‌க‌ர்வ‌து போல‌ப்ப‌ட்ட‌து.

இய‌ற்கைச் சூழ‌லை இர‌சிக்க‌த்தொட‌ங்கிய‌தில் நான் எத‌ற்காய் இங்கு வ‌ந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்ப‌தும் ம‌ற‌ந்துபோய்விட்ட‌து. ஒருக்காய் முறிக‌ண்டிப்ப‌க்க‌ம் போய் த‌லையைக் காட்டிவிட்டு வ‌ர‌லாம் என்றாலும், இவ‌ள் அத‌ற்குள் வ‌ந்துவிட்டாள் என்றால் பெரும் பிர‌ச்சினையாகிவிடும். 'ஏன் அந்த‌ப் ப‌க்க‌ம் போனாய்' என்று அவ‌ள் எழுப்பும் கேள்வியோடு புகையைத் தொட‌ங்கும் ச‌ண்டையின் பெருநெருப்பை, மூன்று கிலோமீற்ற‌ர் தூர‌த்திலிருக்கும் க‌னேடிய‌ பிர‌த‌ம‌ர் வாச‌ல்த‌ல‌த்தால் கூட‌ தீர்த்துவைக்க‌ முடியாது. க‌ன‌டாவில், அதுவும் அத‌ன் த‌லைந‌க‌ரில் முறிக‌ண்டி எப்ப‌டி வ‌ந்த‌து என்று நீங்க‌ள் உங்க‌ள் மூளையைத் திருகு திருகென்று திருக‌வும்கூடும். முறிக‌ண்டி ம‌ட்டுமில்லை, க‌ன்னிய‌ர் ம‌ட‌ம், வ‌ழுக்கையாறு என்ப‌தெல்லாம் கூட‌ எங்க‌ளின் வ‌ளாக‌த்தில் இருக்கின்றன. முறிக‌ண்டி என்ப‌து நீங்க‌ள் எங்க‌ள் வ‌ளாக‌த்தின் சுர‌ங்க‌ப்பாதைக்குள்ளால் ந‌ட‌ந்துபோனால் வ‌ருகின்ற‌ ஒரு முச்ச‌ந்திப் பிர‌தேச‌மாகும். முச்ச‌ந்தியில் ஒருபுற‌ம் கோப்பிக்க‌டையும், இன்னொரு ப‌க்க‌ம் Barம் இருக்கும். வ‌ளாக‌த்துக்கு வாற‌ போற‌ பெட்டைய‌ள் ஏதோ ஒரு வ‌குப்புக்காக‌வேனும் அந்த‌ முச்ச‌ந்தியைக் க‌ட‌ந்துபோய்க் கொண்டிருப்பார்க‌ள் என்ப‌தால் அது ஒரு கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாய் மாறிவிட்ட‌து. என‌க்கென்ன‌வோ இந்த‌ப் பொடிச்சிக‌ள், தாங்க‌ள் அன்ற‌ன்றைக்கு செய்கின்ற‌ அல‌ங்கார‌த்தைப் பெடிய‌ங்க‌ளுக்குக் காட்சிப்ப‌டுத்தி பாராட்டைப் பெறுவ‌த‌ற்காய்த்தான் அடிக்க‌டி முறிக‌ண்டிப் ப‌க்க‌மாய் ந‌டைப‌வ‌னி செய்கின்றார்க‌ளோ என்கின்ற‌ ஒரு சந்தேகமும் உண்டு. அத்தோடு ப‌க்க‌த்திலை ஒரு பாரும் இருக்க‌ அதுக்குள்ளை தாக‌ந் தீர்க்க‌, இங்காலை க‌ண்ணுக்கு குளிர்ச்சிக்கென‌ இர‌வு ஒன்ப‌து ப‌த்து ம‌ணிவ‌ரை ச‌ன‌ம் நிறைய‌ப் புழ‌ங்கிக்கொண்டிருக்கிற‌ இட‌மாய்தான் முறிகண்டியிருக்கும். இப்ப‌டி வெளியிலை வெயிலுக்குள்ளை நிண்டு என‌க்கும் ஒரே தாக‌மாய்தானிருக்கிற‌து, முறிகண்டிச் ச‌ந்திக்குப் போய் வாயைக் கொஞ்ச‌ம் ந‌னைச்சுட்டு வ‌ந்திட‌லாம் என்றால் இவ‌ளொருத்தி வ‌ருவ‌தாய்ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்து ப‌ய‌முறுத்துகிற‌து

ஒருமுறை இப்ப‌டித்தான் முத‌லாம் ஆண்டு பெட்டையொருத்திக்கு ஒற்றை ரோஸ் கொடுத்து காத‌லைச் சொல்ல‌ ந‌ண்ப‌ரொருவ‌ன் முறிக‌ண்டியில் காத்துக்கொண்டிருந்தான். அவ‌னும் ரிப்ரொப்பாய் வெளிக்கிட்டு, ரென்ச‌னைக் குறைக்க‌ கொஞ்ச‌ம் 'வாசித்து'விட்டு சுதியாய்த்தான் நின்றான். அந்த‌ப் பெட்டை வ‌ருகின்ற‌ நேர‌ம‌ள‌வில் ஒற்றை ரோஸை எங்க‌ள் கையில் த‌ந்துவிட்டு, த‌ன்ரை ரென்ச‌னைக்குறைக்க‌ பாத்ரூம் போய்விட்டு வ‌ந்திருந்தான். பெட்டை முறிக‌ண்டியைக் க‌ட‌க்கையில் 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று ஒர் ஓர‌த்தில் கூப்பிட்டு அந்த‌மாதிரி ரொமாண்டிக்காய் முழ‌ங்காலிட்டு I love you என்ற‌ப‌டி ஒற்றை ரோஸைக் கொடுத்தான். அந்த‌ப் பெட்டைக்கு கொஞ்ச‌ம் அதிர்ச்சி என்றாலும், இப்ப‌டி ஒருத்த‌ன் ரொமாண்டிக்காய் இருக்கின்றானே என்ப‌தில் ஒரு நெகிழ்ச்சி வ‌ர‌ ரோஸையும் வாங்கிவிட்டாள். ஆனால் ரோஸை அவ‌ள் முக‌ர்ந்து பார்த்த‌தில்தான் எல்லாப் பிர‌ச்சினையும் தொட‌ங்கிய‌து. 'You bloody drinker, அவ்வ‌ப்போது நீ குடிக்கிற‌தென்றால் கூட ப‌ர‌வாயில்லை, அத‌ற்காய் ப்ர‌போஸ் ப‌ண்ணுகிற‌ கேர்ளிற்குத் தருகிற‌ ரோஸைக் கூட‌ குடிக்க‌ வைத்துத் த‌ந்திருக்கிறாயே, உன்னையெல்லாம் ந‌ம்பி நான் எப்ப‌டிக் காத‌லிக்க‌ முடியும்' என்று ந‌ல்லாய்த் திட்டிவிட்டு ரோஸையும் குப்பைத்தொட்டிக்குள் எறிந்துவிட்டு அவ‌ள் ம‌றைந்துவிட்டாள். ந‌ண‌ப‌னுக்கோ என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று பெருந்திகைப்பாக‌ இருந்த‌து. நாங்க‌ள்தான் கொடுப்புக்குள் ந‌முட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தோம். கையில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்திருக்க‌ச் சொன்ன‌ ரோஸை பிய‌ர் பிச்ச‌ருக்குள் அமிழ்த்தி எடுத்த‌து நாங்க‌ள்தான்.. பெட்டை முறிகண்டிக்கு வாற‌ ரென்ச‌னிலை ந‌ண்ப‌னால் ரோஸிலிருந்த‌ வ‌ந்த‌ 'ந‌றும‌ண‌ம்' ஒன்றையும் இன‌ம்பிரித்த‌றிய‌ முடிய‌வில்லை.

இங்கே முன்னே ஒடிக்கொண்டிருக்கிற‌ ரீடோ ஆற்றுக்கு நாங்க‌ள் இட்ட‌பெய‌ர்தான் வ‌ழுக்கையாறு. ஆறே இல்லாத‌ யாழ்ப்பாண‌த்திலை ம‌ழை நிறைய‌ப் பெய்து வெள்ள‌வாய்க்காலுக்குள்ளாலை நீரோடும்போது அது வ‌ழுக்கையாறாக‌ மாறிவிடுவ‌துண்டு. நானொரு அச‌ல் த‌மிழ‌ன். என்ன‌ தான் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மைல்க‌ள் தாண்டி க‌ன‌டாவுக்கு வ‌ந்தாலும் எங்க‌டை ஊர்க‌ளை ம‌ற‌க்க‌க்கூடாதுதான். சில‌வேளை என்ரை பெட்டை வாய் த‌வ‌றி ரீடோ ஆற்றுப்ப‌க்க‌மாய்ச் ச‌ந்திப்போம் என்றாலும், நான் 'வ‌ழுக்கையாறு என்று சொல்லும்' என்று திருத்த‌ ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. ஈழ‌த்தில் பாளியாறு ப‌த‌வியா ஆறு, ம‌காவ‌லியாறு என்று எத்த‌னையோ ஆறுக‌ளிருக்க‌ இப்ப‌டியொரு போலி ஆற்றின் பெய‌ரைத் தேர்ந்தெடுத்த‌துதான் ஒரு யாழ்ப்பாணிக்குரிய‌ சாம‌ர்த்திய‌ம்.

2.
இவளை ஏன் இன்ன‌மும் காண‌வில்லை. வ‌ழுக்கையாற்ற‌டிக்கு வ‌ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌த்திற்கு மேலே ஆகிவிட்ட‌து. இத‌ற்கிடையில் நாலைந்து முறை அவ‌ளை செல்போனில் அழைத்தும் பார்த்துவிட்டேன், ஒரு ப‌திலையும் காண‌வில்லை. காத‌லுக்காய் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ கதாநாய‌க‌ன்க‌ள் போல‌ என்னால் இனியும் காத்துக்கொண்டிருக்க‌ முடியாது. அவ‌ர்க‌ளுக்காவ‌து காத‌லி வ‌ந்துவிட்ட‌த‌ன்பிற‌கு கொஞ்ச‌ம் கோபித்து, கொஞ்ச‌ம் செல்ல‌ம் கொஞ்சி, பிற‌கு ஏதாவ‌து வெளிநாடொன்றுக்குப் ப‌ற‌ந்து டுய‌ட் ஆட‌வாது முடிகின்ற‌து. என‌க்கு இஃதொன்றும் நிக‌ழ‌ப்போவ‌தில்லை. இப்ப‌டி நீண்ட‌நேர‌க் காத்திருப்ப‌தாலேயே ஒரு க‌டுப்பு வ‌ந்துவிட்டிருக்கும். இவ‌ள் வ‌ந்த‌வுட‌னே அது எள்ளும் கொள்ளுமாய் வெடிப்ப‌தாய்த்தான் முடியும். பிற‌கு ச‌ண்டை, க‌ண்ணீர், கெஞ்ச‌ல், ஆற்றுப்ப‌டுத்த‌ல் என ஒருவார‌ம் இருவ‌ரும் ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளோடுதான் இருக்க‌வேண்டியிருக்கும். எத‌ற்கு இந்த‌ப் பொல்லாப்பு. 'என்னால் இனியும் காத்திருக்க‌முடியாது நான் வீட்டை போகின்றேன்' என்றொரு ரெக்ஸ் மெஸேஜ் அனுப்பிவிட்டுப் போக‌வேண்டிய‌துதான்.

இப்போது இர‌வு எட்டு ம‌ணியாகிற‌து. ம‌த்தியான‌ம் இவ‌ளைச் ச‌ந்திக்காம‌ல் வீட்டை வ‌ந்து ந‌ன்கு நித்திரை கொண்டு எழும்பியாகியும் விட்டாச்சு. ஒருமுறை அவ‌ளை செல்போனில் அலைத்துப் பார்ப்போம். ம‌த்தியான‌ம் காத்திருந்த‌ அலுப்பை கொஞ்ச‌மாக‌வேனும் காட்டாம‌ல், காத‌லில் உருகி எப்ப‌டிக் க‌தைப்ப‌து என்று ஒருமுறை என‌க்குள் ஒத்திகை செய்துகொண்டேன். காத‌லிக்கும்போது எப்போதும் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ ப‌க்க‌ங்க‌ளை ம‌ட்டுமே காட்ட‌வேண்டும் என்று எங்கையோ வாசித்த‌து இந்த‌ச் சூழ‌லுக்கு எவ்வ‌ள‌வு பொருந்துகிற‌து பாருங்க‌ள். ஏன் இவ‌ள் தொலைபேசியை எடுக்கிறாளில்லை. என்ன‌ ந‌ட‌ந்த‌து இவ‌ளுக்கு? சில‌வேளை என்னை வெட்டிவிட்டு வேறு யாரைவ‌து பிடித்துவிட்டாளா? சீ...ஏன் என்னைப் போல‌வே அவ‌ளையும் நினைக்கிறேன். வேறு ஒருத்த‌னைப் பிடிக்க‌வேண்டியிருந்தால் இந்த‌ இர‌ண்டு வ‌ருச‌த்துக்குள்ளையே எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அவ‌ளுக்கு வாய்த்திருக்கும். அதையெல்லாம் ம‌றுத்த‌ப‌டிதானே என்னோடு இருந்த‌வ‌ள். அப்ப‌டியேதும் ந‌ட‌ந்திருக்காது. அப்ப‌ ஏன் இப்ப‌ தொலைபேசியை எடுக்கிறாளில்லை. ச‌ரி எத‌ற்கும் அவ‌ளின் அறைத்தோழிக்கு அழைத்துப் பார்க்க‌வேண்டிய‌துதான். 'என்ன‌ அவ‌ள் கால‌மை வ‌ளாக‌த்து வெளிக்கிட்ட‌த‌ற்குப் பிற‌கு இன்னும் அறைக்கு வ‌ர‌வில்லையா?' எங்கை போய் இவ‌ள் தொலைந்துவிட்டாள். இத‌ற்கு முன் இப்ப‌டியேதும் நிக‌ழ்ந்து இல்லையே. வேறெங்காவ‌து இப்ப‌டி போவ‌தாய் இருந்தால் கூட‌ தொலைபேசியில் அழைத்தோ, ஈமெயிலிலோ அல்ல‌து ரெக்ஸ் மெஸேஜ் செய்துவிட்டோதானே போகின்ற‌வ‌ள். என்ன‌வாயிற்று இவ‌ளுக்கு.

இவ‌ளுக்கு இங்கை இர‌ண்டு அண்ணாமார் இருக்கின‌ம். ஒருத்த‌ர் ப‌க்க‌த்திலை இருக்கிற‌ ம‌ற்ற‌ யூனிவ‌(ர்)சிற்றியில் ப‌டிக்கிறார். ம‌ற்ற‌வ‌ர் ப‌டித்துமுடித்துவிட்டு ஜேடிஎஸ்சில்தான் வேலை செய்கின்றார். இவ‌ளுடைய‌ அண்ணன்மாருக்கு எங்க‌டை விச‌ய‌ம் சாடைமாடையாய்த் தெரியும். இவ‌ளென்னைக் காத‌லித்துக்கொண்டிருப்ப‌து அவ‌ர்க‌ளுக்கு அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை என்ப‌தும் என‌க்கு ந‌ன்கு தெரியும். இப்ப‌த்தையான் நிலைமையில் க‌வுர‌வ‌ம் அது இதென்டு ஒன்றையும் பார்த்துக்கொண்டிருக்க‌ முடியாது. சில‌வேளை அவ‌ர்க‌ளோடுதான் இவ‌ள் நிற்கிறாளோ தெரியாது. ஒருக்காய் அவ‌ர்க‌ளுக்கும் அழைத்துப் பார்க்க்க‌வேண்டிய‌துதான். என்ன‌து அங்கையும் இவ‌ள் போக‌வில்லையா? இந்த‌ விச‌ரி எங்கைதான் போய்த்தொலைந்தாளோ?

3.
ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டும் ஆகிவிட்ட‌து. இனி இப்ப‌டியே வீட்டிலிருந்து சும்மா பார்த்துக்கொண்டிருக்க‌முடியாது. இவ‌ளுடைய‌ அண்ணன்மார் இருவ‌ரும் என்ரை அப்பார்ட்மெண்டிற்கும் வ‌ந்துவிட்டின‌ம். இவ‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர் எல்லோரையும் விசாரித்தாயிற்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாய்க் கிட‌க்கிற‌து. எல்லாச் சுத‌ந்திர‌மும் இருக்கிற‌தென்று பீத்திக்கொள்கின்ற‌ க‌ன‌டாவில் எல்லாவற்றையும் செய்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌மும் இருக்கிற‌து என்ப‌தையும் ம‌ற‌ந்துவிட‌முடியாது. இவ‌ளுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்குமா என்று வ‌ருகின்ற‌ எண்ண‌த்தை இலையான் க‌லைக்கிற‌ மாதிரி துர‌த்திக்கொண்டேயிருந்தேன். 'இனியும் இப்ப‌டியே வாளாவிருக்க‌ முடியாது, வாருங்க‌ள் போவோம்' என்று இவ‌ளுடைய‌ அண்ணன்மாரையும் அழைத்துக்கொண்டு பொலிஸில் புகார் கொடுக்க‌ வெளிக்கிட்டோம்.

பொலிஸ்கார‌ன்க‌ள், ஒன்றும் ந‌ட‌ந்திருக்காது, தாங்க‌ளும் தேடுகிறோம், யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் நிற்க‌க்கூடும், நாளைக்கு வ‌ந்திருவா என்று சொல்லுறாங்க‌ள். எங்க‌டை த‌மிழ்ச்ச‌மூக‌த்திற்குள்ளை குடும்ப‌ங்க‌ளுக்குள் ஏதாவ‌து பிண‌க்குப்ப‌ட்டு, ம‌னுசிமார்க‌ள் கோப‌த்தில் சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் இர‌வில் நின்றுவிட்டு, கால‌மைக‌ளில் 'க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன் புல்லானாலும் புருச‌ன்' என்ற‌ தத்துவ‌ ஞான‌ம் கிடைத்து க‌ண‌வ‌ன்மாரோடு போய்ச் சேர்ந்துவிடுவ‌துண்டு. இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலும் சில‌வேளைக‌ளில் ம‌னுச‌ன்மார் ம‌னுசியைக் காண‌வில்லை என்று ம‌னுக்கொடுப்ப‌துண்டு. இப்ப‌டிப் புகார் கொடுப்ப‌து, உண்மையில் ம‌னுசி காண‌வில்லை என்ப‌தால் வ‌ந்த‌ அக்க‌றையாலையா அல்ல‌து நாளை மனுசிக்கு ஏதும் ந‌ட‌ந்தால் பொலிஸ் த‌ன்னைச் ச‌ந்தேக‌த்தில் பிடித்துவிட‌க்கூடும் என்ற‌ முன் எச்சரிக்கையாலையா என்ப‌து புகார் கொடுக்கும் ம‌னுச‌ன்மார்க‌ளின் ம‌ன‌தைப் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. இவ்வாறான‌ கார‌ணங்க‌ளால் இந்த‌ப் பொலிஸ்கார‌ன்க‌ள் உண்மையான‌ அக்க‌றையோடு இவ‌ளைத் தேடுவான்க‌ளோ என்ப‌தில் என‌க்கு ஐமிச்ச‌ம் இருந்த‌து.

அடுத்த‌ நாள் ம‌த்தியான‌ம் போல‌ வ‌ளாக‌த்திற்கு பொலிஸ் வ‌ந்து இவ‌ளைப் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளை இவ‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள், பேராசிரிய‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் முழுதும் இவ‌ளைக் காண‌வில்லை என்ற‌ செய்தி ப‌ர‌விவிட்ட‌து. அத்தோடு இவ‌ள் காணாம‌ற்போன‌து வ‌ளாக‌ச் சுற்றாட‌லுக்குள்தான் என்ப‌தை இவ‌ள‌து அறைத்தோழியும் தெளிவாக‌ச் சொல்லியிருக்கிறாள். எனென்றால் நேற்றுக் காலை இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்துதான் அறையிலிருந்து வ‌குப்புக்க‌ளுக்காய் வெளிக்கிட்டிருக்கின‌ம். இவ‌ள் காணாம‌ற் போயிருந்த‌து வ‌ளாக‌த்திற்குள் என்ப‌தால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ நிர்வாக‌த்திற்கும் பெரும் பிர‌ச்சினையாகிவிட்ட‌து. என்னிட‌ம், ந‌ண்ப‌ர்க‌ளும் பொலிஸும் அடிக்க‌டி வ‌ந்து விசாரித்துக்கொண்டிருந்தார்க‌ள். எங்க‌ளுக்குள்ளை ஏதாவ‌து பிர‌ச்சினைப்ப‌ட்டுத்தான் அவ‌ள் காணாம‌ற்போய்விட்டாளா என்று தொட‌க்க‌த்தில் பொலிஸுக்கு என்னிலை ஒரு ச‌ந்தேக‌மிருந்த‌து. நான் தான் ஏதோ இவ‌ளுக்குச் செய்துவிட்டு காண‌வில்லையென்று நாட‌க‌ம் ஆடுகின்றேனோ என்று அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழ‌மையான‌ பொலிஸ் புத்தி சிந்தித்திருக்கின்ற‌து. ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இவ‌ள் காணாம‌ற்போயிருந்த‌ நேர‌த்தில் நான் வ‌குப்பொன்றுக்குள் இருந்த‌து தெளிவாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌தால் வேறு யாரோதான் இவ‌ள் காணாம‌ற்போன‌த‌ற்கு கார‌ண‌மாயிருக்க‌வேண்டுமென‌ப் பொலிசுக்கு பிற‌கு தெரிந்துவிட்ட‌து. என்றாலும் என்னையும் எப்போது தாங்க‌ள் தொட‌ர்புகொண்டாலும் பொலிஸ் நிலைய‌த்திற்கு வ‌ர‌வேண்டுமென‌ அறிவுறுத்தியிருந்தார்க‌ள்.

இவ‌ள் காணாம‌ற்போய் மூன்றாவ‌து நாளாகியும் விட்ட‌து. இவ‌ளின் அண்ண‌ன்மார் ம‌ற்றும் ரொர‌ண்டோவிலிருந்த‌ இவ‌ள‌து பெற்றோர் என‌ எல்லோரும் ஒரேயிட‌த்தில்தான் நிற்கிறோம். எல்லோர் முக‌ங்க‌ளிலும் சோக‌மும் சோர்வும் அப்பிக்கிட‌க்கிற‌து நானும் என‌து மூளையைக் கச‌க்கி அவ‌ளின் நினைவின் மிட‌றுக‌ளிலிருந்து அவ‌ள் தொலைந்துபோயிருக்க‌க்கூடிய‌ இட‌ங்க‌ளைப் ப‌ற்றி வ‌டிக‌ட்டிக்கொண்டிருக்கின்றேன். இப்போதுதான் இந்த‌ விட‌ய‌மொன்று நினைவுக்கு வ‌ருகின்ற‌து. இவ‌ள் சொல்லுவாள், மார்க்க‌மிலிருக்கிற‌ ம‌ச்சான் முறையான‌ ஒரு பெடிய‌னுக்கு தான் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்துக்கொண்டிருக்கிற‌ பொழுதிலிருந்தே த‌ன்னில் விருப்ப‌மென்று. அடிக்க‌டி த‌ங்க‌ளின் பாட‌சாலைக்கு வ‌ந்து த‌ன்னை 'நேசியும‌ன் நேசியுமன்' என்கின்ற‌ அவ‌னின் தொல்லை தாங்காது த‌ன் அண்ணாமாரிட‌ம் சொல்ல‌, அவ‌ர்க‌ள் அவ‌னைக் கூப்பிட்டு இதெல்லாம் ச‌ரியில்லையென‌ எச்ச‌ரித்துவிட்டிருக்கின்றார்க‌ள் என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் இப்ப‌ இவ‌ள் வ‌ளாக‌ம் வ‌ந்த‌ன்பிற‌கு கூட‌, யாரிட‌மிருந்தோ தொலைபேசி எண்ணெடுத்து ம‌ச்சான் த‌ன்னை நேசிக்கும்ப‌டி அவ்வ‌ப்போது வ‌ற்புறுத்திக்கொண்டிருப்ப‌தாய் சொல்லியிருந்தாள். 'நீரென்னை நேசித்துக் கொண்டிருப்ப‌தாய் சொல்ல‌வில்லையா' என்று அவ‌ளிட‌ம் ஒருமுறை கேட்ட‌போது 'அதையும் அந்த‌ விச‌ர‌னுக்குச் சொன்ன‌னான். ஆனால் அவ‌ன் நீர் பொய்சொல்கின்றீர். நீரில்லாவிட்டால் உயிர் வாழ‌வே மாட்டானென‌ உறுதியாய்க் குர‌லில் கூறினான்' என்றாள். 'இந்த‌ நாச‌மாய்ப் போன‌ த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பார்த்து இவ‌ங்க‌ள் சரியாகக் கெட்டிட்டாங்க‌ள், உருப்ப‌ட‌வே மாட்டாங்க‌ள்' என்று ஓர் அறிவுஜீவியின் பாவ‌னையில் நான் கூறிய‌தும் என‌க்கு நினைவுண்டுதான்.

4.
எத‌ற்கும் ஒருக்காய் இவ‌ளின் இந்த‌ ம‌ச்சானை விசாரித்துப் பார்த்தால் என்ன‌ என்று இவ‌ளின் அண்ணாவிட‌ம் சொன்னேன். த‌க‌வ‌ல் பொலிசுக்கும் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. நாங்க‌ள் அவ‌னின் தொலைபேசி இல‌க்க‌த்தை அழைத்த‌போது அவ‌னும் எடுக்கிறானில்லை. அவ‌னொரு வீட்டின் நில‌வ‌றையில் தான் வ‌சித்துவ‌ந்தான். பொலிஸ் போய் வீட்டைத்த‌ட்டிய‌போது அவ‌ன் திற‌க்க‌வில்லை என்ற‌போது பொலிசுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. க‌த‌வை உடைத்துப் பார்த்த‌போது, அங்கே இவ‌ளை அறைக்குள் பூட்டிவைத்திருந்த‌து தெரிந்த‌து. ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே, உங்க‌ளுக்கு ந‌ம்புவ‌த‌ற்குக் க‌டின‌மாயிருந்தாலும் காத‌லுக்காய் ஒரு க‌ட‌த்த‌ல்தான் க‌னடாவில் நிக‌ழ்ந்திருந்த‌து. எங்க‌ள் எல்லோருக்கும் அப்பாடா இவ‌ள் ஒரு பிர‌ச்சினையுமில்லாம‌ல் கிடைத்துவிட்டாள் என்ப‌தில் பெரிய‌ நிம்ம‌தி. இப்போது இவ‌ளுக்கு மூன்று நாட்க‌ளுக்கு முன் என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்ற‌ விட‌ய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌னிக்கட்டியொன்று உருகிய‌மாதிரித் தெரிய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. இவ‌ள் அன்றைக்கு வ‌குப்பு முடிந்துவ‌ந்த‌போது இந்த‌ ம‌ச்சான்கார‌னும், அவ‌னுடைய‌ இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் காரில் காத்துக்கொண்டிருக்கின்றார்க‌ள். இவ‌ளுக்கும் இவ‌ர்க‌ளைக் க‌ண்டு பெரிய‌ அதிர்ச்சி. 'வாருங்க‌ள் காருக்குள் இருந்து க‌தைக்க‌லாம்' என்று இவ‌ளை கூட்டிக்கொண்டுபோய் அப்ப‌டியே மார்க்க‌த்திற்கு அவன்கள் க‌ட‌த்திக்கொண்டு போய்விட்டார்க‌ள். காத‌லிப்ப‌து பிழையில்லைத்தான். . ஆனால் இப்ப‌டிக் க‌ட‌த்திக்கொண்டு போய் த‌னியே வீட்டில் வைத்திருந்தால் இவ‌ளுக்குக் காத‌ல் வ‌ந்துவிடும் என்றோ அல்ல‌து இவ‌ளை அவ‌னுக்கு க‌லியாண‌ஞ் செய்துவைத்துவிடுவார்க‌ள் என்றோ ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்துக்கு நிக‌ராய் அவ‌ன் யோசித்த‌துதான் பெரும் சிக்க‌லுக்கு வ‌ழிவ‌குத்துவிட்ட‌து.

ஒன்ற‌ரை ம‌ணித்தியால‌ம் ஓட‌க்கூடிய‌ ஓர் ஆங்கில‌த் திரில்ல‌ர் மாதிரி இந்த‌ மூன்று நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ இவ‌ளின் க‌தை இருந்தாலும், பிற‌குதான் என‌க்கும் இவ‌ளுக்கும் இடையில் எல்லாம் புகைய‌த் தொட‌ங்கின‌. இப்ப‌டி மூன்று நாட்க‌ள் ஒரு பெடிய‌னின் வீட்டில் வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் ப‌ற்றி உற‌வுக‌ளும் ச‌முக‌மும் 'என்ன‌ க‌தைக்கும்' என்ப‌து புரிய‌க்கூடிய‌தாக‌ இருந்தாலும், என்னுடைய‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூட‌ நான‌றிய‌க்கூடிய‌தாக‌ இந்த‌ விட‌ய‌ம் ப‌ற்றியும் இவ‌ளைப் ப‌ற்றியும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய்க் க‌தைத்துக் கொண்டு திரிந்த‌தைத்தான் தாங்க‌முடியாதிருந்த‌து. அதிலும் ஒருத்த‌ன், 'எப்ப‌டி மூன்று பெடிய‌ங்க‌ள் இருக்கைக்கே காருக்குள் ஏறி இவ‌ள் க‌தைக்க‌ப் போன‌வ‌ள்' என்று கேட்டான். இன்னொருத்த‌ன் 'என்ன‌தான் இருந்தாலும், இவ‌ளின் ச‌ம்ம‌த‌மில்லாம‌ல் அவ‌ங்க‌ள் மார்க்க‌ம் ந‌க‌ருக்குக் கொண்டுபோய் இருக்கமாட்டார்க‌ள் என்றான். என்னுடைய‌ நெருங்கிய‌ தோழி கூட‌, 'அவ‌ள் ந‌ல்ல‌வ‌ள் என்று இனியும் ஏமாளியாக‌ இருக்காதே, ஒரு யாழ்ப்பாண‌த்துப் பெடிய‌னாக‌ அடுத்தென்ன‌ செய்வ‌தென்று யோசி' என்று அறிவுரையை க‌ன்னிய‌ர் மட‌த்தில் வைத்துச் சொன்னாள். என‌க்கு எல்லாம் ஒரே குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. ஒருத்தியை அவ‌ளின் விரும்பமின்றி ஒருத்த‌ன் கொண்டுபோய் வைத்துவிட்டான் என்ப‌த‌ற்காய் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் நேசித்த‌து எல்லாம் பொய்யாகிவிடுமா என்ன‌?  இத்த‌னை அல்லாட‌ல்க‌ளுக்குமிடையில், இவ‌ள் த‌ன்னைக் க‌ட‌த்திக்கொண்டு போன‌வ‌ர்க‌ளின் மீது வ‌ழ‌க்கு ப‌திந்துவிட்ட‌து, இனி அவ‌ன்க‌ளின் வாழ்க்கை முற்றும் பாழென்று புல‌ம்பிக்கொண்டிருந்தாள். இவ‌ள் த‌ன‌து ம‌ச்சானின் வாழ்க்கை நாச‌மாகிவிட்ட‌தென‌ இர‌க்க‌ப்ப‌டுகின்றாளா அல்ல‌து ம‌ச்சான் மீதான் த‌ன‌து காத‌லை ம‌றைமுக‌மாய் என‌க்குக் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாளா என்று நான் யோசித்துப் பார்த்த‌தில் என‌க்கு த‌லையிடிதான் வ‌ந்து சேர்ந்த‌து.

5.
இப்ப‌டியாக‌ நாட்க‌ள் போக‌ப்போக‌ எங்க‌ள் உற‌வில் எங்க‌ளைய‌றியாம‌லே விரிச‌ல் வ‌ந்துவிட்ட‌து. இவ‌ளுக்கு அந்த‌க் க‌ட‌த்திப் போன‌ பெடிய‌ன் மீது ஏதோ ஈர்ப்பிருந்திருக்கிற‌தோ என்ற‌ எண்ண‌ம் அடிக்க‌டி வ‌ருவ‌தை என்னால‌ த‌டுத்து நிறுத்த‌வும் முடிய‌வில்லை. ச‌ந்தேக‌ம் போன்ற‌ வியாதி ரொர‌ண்டோவில் வ‌ந்த‌ SARSஐ விட‌ அபாய‌க‌ர‌மான‌து. எந்த‌ ம‌ருந்து கொடுத்தாலும் அவ்வ‌ள‌வு கெதியாய் மாறிவிடாது. இந்த‌ முறை கோடை வ‌குப்புக்க‌ள் எதுவும் எடுப்ப‌தில்லையென‌ முடிவுசெய்து ரொர‌ண்டோ மாந‌க‌ரில் பொழுதை க‌ழிப்ப‌தென‌ முடிவு செய்தேன். த‌ன‌க்குச் சில‌ பாட‌ங்க‌ள் எடுக்க‌விருக்கிற‌தென‌ இவ‌ள் வ‌ளாக‌த்திலேயே த‌ங்கிவிட்டாள். ரொர‌ண்டோ வ‌ந்த‌த‌ன்பிற‌கும் என்னால் இவ‌ள‌து விட‌ய‌த்தில் தெளிவான‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியாம‌ல் இருக்கிற‌து. ப‌ல‌ர‌து பேர‌ன்புக்கும் பெரும‌திப்புக்குமுரிய‌ சிறி ராம‌பிரானே -எல்லாம் அறிய‌க்கூடிய‌ க‌ட‌வுளாய் இருந்தும்கூட‌- சீதா தேவியை நெருப்பில் நீந்த‌ச்சொல்லி ஏற்றுக்கொண்ட‌போது சாமானிய‌னாய் -அதுவும் யாழ்ப்பாண‌ம் என்னும் பூகோள‌த்தில் சிறு புழுக்கை போன்ற‌ ஊரிலிருந்து வ‌ந்த‌- நான் என்ன‌தான் செய்ய‌முடியும்? இப்ப‌டியிருக்கும்போதுதான் ஸகாபுரோவில் எக்ளின்ட‌ன் வீதியிலுள்ள‌ சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம் ப‌ற்றி ந‌ண்ப‌ரொருவ‌ன் குறிப்பிட்டு, ஆதி ர‌ம்பாவிட‌ம் போனால் உன‌து ம‌ன‌ச்ச‌ஞ்ச‌லம் -ம‌ழை காணா ம‌ண்ணில் மூத்திர‌ம் பெய்தால் த‌ட‌மின்றிப் போவ‌துபோல‌- தூசாய்ப் ப‌ற‌ந்துபோய்விடுமென‌ புத்திம‌தி சொன்னான்.

ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் சாத்திர‌ம் பார்ப்ப‌திலிருந்து தியான‌ம் போன்ற‌ ப‌ல‌வ‌ற்றில் தேர்ந்த‌ வித்த‌கியாக‌ இருந்தார். ஆதி ர‌ம்பாவின் பூர்வீக‌ம் தெலுங்கு தேச‌மாயிருக்க‌வேண்டும், ஆனால் ச‌ன் ரீவி நிக‌ழ்ச்சித்தொகுப்பாள‌ர்க‌ளைப் போல‌ 'ந‌ன்கு த‌மிழ்' பேச‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்தார். வ‌ய‌தும் அவ்வ‌ள‌வு ஒன்றும் பெரிதாக‌ இல்லை. இந்த‌ வ‌ய‌திலும்...... வேண்டாம் இத‌ற்கு மேல் ஏதும் விப‌ர‌ங்க‌ள் த‌ந்தால் நீங்க‌ள் பிற‌கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவை ம‌ற‌ந்து ந‌டிகை ர‌ம்பாவை நினைக்க‌த் தொட‌ங்கிவிடுவீர்க‌ள் என்ப‌தால் நிறுத்திக்கொள்கின்றேன். என‌து கையைத் த‌ன‌து ம‌டியில் வைத்துப் பார்த்த‌ப‌டி 'த‌ம்பி நீங்க‌ள் ச‌ரியான குழ‌ப்ப‌த்தில் இருக்கின்றீர்க‌ள்?' என்று கூறினார். இந்த‌ உல‌க‌த்தில் குழ‌ப்ப‌மில்லாத‌ மனுச‌ர் என்று எவ‌ரேனும் இருக்கின்றார்க‌ளா என்ன‌ என்று கேட்க‌ விரும்ப‌மிருந்தாலும், ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் என் கைக‌ளை வ‌ருடிய‌ப‌டி சாத்திர‌ம் கூறும் இத‌மான‌ அனுபவ‌த்தைக் குலைக்க‌ நான் விரும்ப‌வில்லை. இவ்வாறாக‌ நான் சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவின் ஆச்சிர‌ம‌த்தில் அதிக‌ள‌வு பொழுதைக் க‌ழிக்கும் ஒரு ப‌க்த‌னாய் மாறிவிட்டேன். அங்கே செய்ய‌ப்ப‌ட்ட‌ தியான‌மும் ப‌ஜ‌னையும் புத்துண‌ர்வைத் த‌ந்த‌தோ இல்லையோ என்னால் இவ‌ளைப் ப‌ற்றிய‌ குழ‌ப்ப‌ங்க‌ளிலிருந்து ஒரளவுக்காவது த‌ப்பித்திருக்க முடிந்திருந்த‌து. தியான‌ம் ப‌ஜ‌னைக‌ளின்போது ஒரேயோரு தொந்த‌ர‌வு ம‌ட்டுமேயிருந்த‌து. ஆச்சிர‌ம‌த்திற்கு அடுத்த‌தாய் இருந்த‌ க‌டையிலிருந்து க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ந்துகொண்டிருக்கின்ற‌ த‌ந்தூரி சிக்க‌ன் வாச‌ந்தான் என்னை அடிக்க‌டி தியான‌த்திலிருந்து -இப்போது கோழியின் எந்த‌ப் பாக‌ம் பொரிந்துகொண்டிருக்கும்- என்று ம‌ன‌தின் திசையை மாற்றிக்கொண்டிருந்த‌து.

இப்ப‌டி என்னைப் போல‌வே சிறில‌சிறி ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ளின் ஆச்சிர‌ம‌த்திற்கு ப‌ஜ‌னைக்கென‌ அடிக்க‌டி வ‌ந்துபோய்க்கொண்டிருக்கின்ற‌ ஒருத்தியை அவ‌தானித்துக்கொண்டிருந்தேன். அவ‌ள் என்னை ஈர்த்த‌ற்கு அதிக‌ கார‌ண‌ம், இடைவ‌ரை நீண்டிருந்த‌ அவ‌ள‌து கூந்த‌லும், காதில் தொங்கிக்கொண்டிருந்த‌ நீண்ட‌ சிமிக்கித் தோடுக‌ளுந்தான். நான்கு மாத‌ங்க‌ளே கோடை வ‌ருகின்ற‌ க‌ன‌டா போன்ற‌ நாட்டில் இடுப்பு வ‌ரை நீண்ட‌ கூந்த‌லைப் ப‌ராம‌ரிப்ப‌து என்ப‌து எவ்வ‌ள‌வு க‌டின‌மான‌ காரிய‌ம் என்று எவ‌ருக்கும் சொல்லித்தான் தெரிய‌வேண்டுமென்ப‌தில்லை. அத்தோடு என்னைப் போல‌ யாழ்ப்பாண‌ க‌லாசார‌த்தைக் கைவிட‌க்கூடாதென்ப‌தில் பிடிவாத‌மாய் அவ‌ளிருக்கிறாள் என்ப‌தை அவ‌ளுட‌ன் பேசும்போது தெரிந்த‌து. இங்கு வ‌ந்த‌த‌ன் பிற‌கு கூட‌ ரெக்ஸோனா சோப்பும் பேபி ப‌வுட‌ரும் போடுவ‌தை இத்த‌னை ஆண்டுகளானபின் கூட‌ அவ‌ள் ஒதுக்கிவிட‌வில்லை என்றால் பாருங்க‌ள். அன்றைக்கொரு நாள் ப‌ஜ‌னை முடிந்து எல்லாவ‌ற்றையும் சுத்த‌மாக்கி முடிந்த‌போது நேர‌ம் ப‌த்து ம‌ணியாகிவிட்ட‌து. அவ‌ளுக்கு நான் தான் என்னுடைய‌ காரில் ride கொடுத்தேன். பேசிக்கொண்டு போகும்போது தான் வீட்டிலை மூன்று பெடிய‌ங்க‌ளுக்கு ஒரு பெட்டை என்றாள். யாழ்ப்பாண‌த்திலையே ந‌ல்ல‌ தென்ன‌ஞ்சோலையுள்ள‌ இர‌ண்டு வீடுக‌ள் த‌ங்க‌ளுக்கு இருக்கிற‌தென்றும் ஓர் உப‌குறிப்பாய்ச் சொன்னாள். கொண்டுபோய் அவ‌ளை வீட்டில் இற‌க்கிய‌போது இப்போது இங்கையிருக்கிற‌ வீடும் ந‌ல்ல‌ வ‌ச்தியாக‌த்தான் தெரிந்த‌து. வீட்டுக்கு முன் ஒரு Lexusம் BMWம் நின்ற‌து. இவ்வ‌ள‌வு கார்க‌ள் வீட்டிலிருந்தாலும் ப‌ஜ‌னைக‌ளுக்கு வ‌ரும்போது என்னுடைய‌ காரிலேயே வ‌ர‌ விரும்புகின்ற‌வ‌ளாய் அவ‌ள் இருந்தாள். அவ‌ள‌து வீட்டிலும் நான் யாழ்ப்பாண‌த்தில் எந்த‌ ஊர்க்கார‌ன் என்றும், அந்த‌ ஊரில் எந்த‌த் திசையில் எங்க‌ள் வீடு இருந்த‌தென்ப‌தையும் 'விசாரித்து' ஏற்க‌ன‌வே அறிந்து வைத்திருந்த‌தால், அவ‌ர்க‌ளுக்கு அவ‌ள் என்னோடு காரில் வ‌ருவ‌தில் பெரிய‌ பிர‌ச்சினையிருக்க‌வில்லை. அத்தோடு சிறில‌சிறி ஆதி ரம்பாவின் தீவிர‌ ப‌க்த‌னாக‌ நான் இருப்ப‌தும், ஒரு கும‌ர்ப்பெட்டையை என்னோடு த‌னியே விடுவ‌தில் வ‌ர‌க்கூடிய‌ த‌டையை உடைத்திருக்க‌வேண்டும்.

6.
கோடை முடிந்து இலையுதிர்கால‌ம் ஆர‌ம்பிக்க‌, நான் ரொர‌ண்டோவை விட்டு நீங்கி வ‌ளாக‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ரொர‌ன்டோவிலிருக்கும்போது அவ்வ‌ப்போது -க‌ட‌த்தப்ப‌ட்ட‌ இவ‌ளோடு- தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருந்தாலும் முன்புபோல‌ அவ்வ‌ள‌வு ஈடுபாட்டோடு க‌தைப்ப‌தில்லை. இவ‌ளுக்கும் நானும் ஏதோ சில‌ கார‌ணங்க‌ளுக்காய் த‌ன்னைவிட்டு வில‌கிப்போய்க்கொண்டிருப்ப‌தாய்த் தோன்றியிருக்க‌க் கூடும்.

இலையுதிர்கால‌ம் என்றாலும் இன்ன‌மும் கோடை மிஞ்சியிருந்த‌து: மிதமான‌ வெப்ப‌நிலை இருந்த‌து. நீண்ட‌ மாத‌ங்க‌ளுக்குப்பிற‌கு இவ‌ளை முத‌ன் முத‌லில் பார்த்த‌போது மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ப‌ளீரென்ற‌ வெள்ளை சோர்ட் ஸ்கேர்ட்டை முழ‌ங்காலுக்கு ஒரு சாண் மேலே நிற்க‌க்கூடிய‌தாக‌ அணிந்த‌ப‌டி வ‌ந்துகொண்டிருந்தாள். என‌க்கென்றால் வான‌த்திலை இருக்கிற‌ சூரிய‌ன், கையிலை எட்ட‌க்கூடிய‌ தூர‌த்தில் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்து இவ‌ளை எரித்துவிட‌லாமோ என்ற‌ள‌வுக்கு கோபம் கொப்ப‌ளிக்க‌த் தொடங்கிய‌து. என்னோடு இருந்த‌ இவ்வ‌ள‌வு கால‌மும் இப்ப‌டி shortயாய் எதுவும் போட்ட‌தேயில்லை. இதெல்லாம் இவ‌ளின் க‌ட‌த்திப்போன‌ ம‌ச்சான் கொடுத்த‌ ஊக்குவிப்பாய்தான் இருக்க‌வேண்டும். அத்தோடு முந்தி தோள்வ‌ரை நீண்டு கிட‌ந்த‌ கூந்த‌லை இன்னும் குட்டையாக‌ வெட்டி 'பொப்' ஆக்கியுமிருந்தாள். இவ‌ள் என்னுடைய‌ ஆண்மைக்கு ச‌வால் விடுவ‌த‌ற்கு என்றே இதையெல்லாம் வேண்டுமென்றே செய்திருக்கின்றாள் போல‌ப்ப‌ட்ட‌து. ஆண்மைக்கு ச‌வால் விட்டால் கூட‌ப்ப‌ர‌வாயில்லை, நான் இவ்வ‌ள‌வு கால‌மும் க‌ட்டிக்காத்துக்கொண்டிருந்த‌ யாழ்ப்பாண‌த்துக் க‌லாசார‌த்தையே காலில் போட்டு மிதிக்கின்ற‌ பாவ‌னையில் அல்ல‌வா ந‌ட‌ந்து வந்து கொண்டிருக்கிறாள். இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ளை நான் நாளைக்கு க‌லியாண‌ங்க‌ட்டினால் எங்க‌டை யாழ்ப்பாண‌த்துச் ச‌ன‌ம் போற‌ வாற‌ இட‌ங்க‌ளுக்கு எந்த‌ முக‌த்தோடு நான் கூட்டிக்கொண்டு போக‌ முடியும்? இப்ப‌வே முடிவெடுத்துவிட்டேன். இனி இவ‌ளைக் கைக‌ழுவிவிட்டு விட‌வேண்டும். இராம‌பிரானுக்கு அனுமான் நின்று வ‌ழிகாட்டிய‌து போல‌ என‌க்கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவும் அவ‌ர‌து அணுக்கப் ப‌க்தை அனுவும் இருக்கும்போது நான் ஏன் இவ‌ளை என்ரை த‌லையில் க‌ட்டி வைத்துக் க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டும். அந்த‌க்கால‌த்திலை 'க‌ற்பு' ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌போது நெருப்பில் குதிக்கத் த‌யாராக‌ அல்ல‌வா சீதையை எல்லாம் வ‌ள‌ர்த்திருக்கின்றார்க‌ள். இப்போது க‌ற்பிலோ பிற‌வ‌ற்றிலோ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌தென்று கேட்டால் -இப்ப‌டி குட்டையாய் பாவாடை அணிகின்ற‌வ‌ள்- பாவாடையை உய‌ர்த்திப்பிடித்து பின்ப‌க்க‌த்தைக் காட்டிப் ப‌ழித்துவிட்டுப் போனாலும் போய்விடுவாள். பிற‌கு என‌க்குத்தான் அசிங்க‌மாய்ப் போய்விடும். .

நான் இப்ப‌டியான‌ கோல‌த்திலை இவ‌ளைக் க‌ண்ட‌த‌ன்பிற‌கு அவ்வ‌ள‌வாய் இவ‌ளோடு க‌தைக்க‌ விரும்பவில்லை. வேறு வேலையிருக்கிற‌தென்று வ‌ழுக்கையாற்ற‌டியிலிருந்து ந‌ழுவிப்போயிருந்தேன். பிற‌கு வேண்டுமென்றே அவ‌ள‌து தொலைபேசி அழைப்புக்க‌ளையும் நேர‌டிச் ச‌ந்திப்புக்க‌ளையும் த‌விர்க்க‌த் தொட‌ங்கினேன். இதெல்லாம் போதாத‌து என்று அவ்வ‌போது என்னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'என்ன‌டா உன்ரை ஆள் அந்த‌ மாதிரி உடுப்புப் போட்டுக்கொண்டு இப்ப‌ திரிகிறா' என்று நாளாந்த‌ வ‌ர்ண‌னை செய்துகொண்டிருந்தார்க‌ள். என‌க்கென்றால் நான் இவ்வ‌ளவு கால‌மும் இவ‌ளுக்குக் க‌ற்றுக்கொடுத்த‌தெல்லாம், ம‌ழைநீரில் க‌ரைகின்ற‌ ம‌ண்ணாங்க‌ட்டியாய் போய்க்கொண்டிருக்கின்ற‌தே என்கின்ற‌ க‌வ‌லைதான் வ‌ந்த‌து.

ஒரு நாள் பின்னேர‌ம் எக்க‌னாமிக்ஸ் வ‌குப்பு முடிந்து முறிக‌ண்டிச் ச‌ந்திய‌டிக்கு கிட்ட‌ வ‌ந்துகொண்டிருந்த‌போது இவ‌ள் என்னை வ‌ழிம‌றித்தாள். 'உங்க‌ளோடு பேச‌வேண்டும் கொஞ்ச‌ நேர‌ம் நிற்க‌ முடியுமா?' என்று கேட்டாள். நான் இன்றைக்கும் இவ‌ள் ஷோர்ட் ஸ்கேர்ட் ஏதாவ‌து போட்டிருக்கின்றாளா என்றுதான் முத‌லில் ப‌ரிசோதித்துப் பார்த்தேன். அப்ப‌டி எதுவும் போடாத‌ப‌டியால்தான் ஆறுத‌லாக‌க் க‌தைப்ப‌த‌ற்கு ஒத்துக்கொண்டிருந்தேன். 'என்ன‌ ந‌ட‌க்கிற‌து எங்க‌ளுக்குள்ளை?' என்றாள். நான் என்னுடைய‌ குழ‌ப்ப‌ங்க‌ளை எல்லாம் சொன்னேன், ஆனால் புத்திசாலித்த‌ன‌மாய் சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம‌த்தில் ச‌ந்தித்த‌ அனு ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எதையும் சொல்ல‌வில்லை. இவ‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அந்த‌ மூன்று நாட்க‌ளில் என்ன‌ நிக‌ழ்ந்திருக்குமென்ப‌து என‌க்கு பெர்மூடா முக்கோண‌ம் போல‌ ஒரே ம‌ர்மமாய் இருக்கிற‌தென்றேன். இவை எல்லாவ‌ற்றையும் விட‌ முக்கிய‌மாய் எங்க‌ள் யாழ்ப்பாண‌த்துக் கலாசார‌த்தைக் குலைக்கிற‌ மாதிரி இப்ப‌டி இவ‌ள‌ ஆடைக‌ள் போடுவ‌து என‌க்கு அதிக‌ம் தொந்த‌ர‌வாய் இருக்கிற‌தென்றேன்.

தான் ஆடைகள் அணிவதற்கான சுத‌ந்திர‌ம் த‌ன‌க்கு ம‌ட்டுமே உரிய‌தென்று உய‌ர்த்திய‌ குர‌லில் சொன்னாள். பின், 'இப்ப‌டியெல்லாம் க‌தைக்கும் நீர், என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டிய‌ பிற‌கு புண‌ர்ச்சியின்போது கூட‌, ஆடைக‌ளோடு சேர்த்துத்தான் புண‌ருவீரா?' என்றாள். என்னால் இத‌ற்கு மேலும் பொறுமையாக‌ இருக்க‌முடிய‌வில்லை. 'You are a bitch, நீரொரு அச‌ல் யாழ்ப்பாண‌த்தியாய் இருந்தால் இப்ப‌டியெல்லாம் க‌தைத்திருக்க‌ மாட்டீர். உம்மை இப்ப‌ பார்க்க‌ யாரோ என்ரை உட‌ம்பிலை எண்ணெய் ஊற்றி எரிக்கிற‌மாதியான‌ உண‌ர்வுதான் வ‌ருகிறது. இப்ப‌டியெல்லாம் நீர் க‌தைப்பீர் என்று தெரிந்துதான் நான் ரொர‌ண்டோவில் நின்ற‌ நேர‌ம் யாழ்ப்பாண‌த்துக்காரி ஒருத்தியை ப்ர‌போஸ் செய்துவிட்டேன். இனி நீரும் உம்ம‌டை ல‌வ்வும், ஒரு மண்ணாங்கட்டியும் என‌க்கு வேண்டாம்' என்றேன். இஃதொரு பெரிய‌ அடியாக‌ அதிர்ச்சியாக‌ இவ‌ளுக்கு இருக்க‌ப்போகின்ற‌தென‌ இவ‌ள‌து எதிர்வினைக்காய்க் காத்துக்கொண்டிருந்தேன். எந்த‌ அதிர்ச்சியும் இல்லாது மெல்லிய‌ புன்முறுவ‌லோடு, 'நீரொரு அச‌ல் யாழ்ப்பாணி என்றென‌க்கு ந‌ன்கு தெரியும். இன்னொருத்தியைக் காத‌லிக்கின்றேன் என்ப‌தைக் கூட‌ நெஞ்சுக்கு நேரே சொல்ல‌ முடியாத‌ கோழையைத்தான் இவ்வ‌ள‌வு கால‌மும் நேசித்திருக்கின்றேன் என்ப‌தைய‌றியும்போது என‌க்குத்தான் வெட்க‌மாயிருக்கிற‌து. உங்க‌ளுக்கு எல்லாம் எத‌ற்கு வாய்? அது நேர்மையாக‌ இருக்கின்ற‌வ‌ன்க‌ளுக்குத்தான் தேவையாயிருக்கும். நீங்க‌ளெல்லாம் குண்டியால் குசுகுசுக்கொண்டிருக்க‌த்தான் பொருத்த‌மான் ஆட்க‌ள்' என்று கூறிவிட்டு ச‌ட்டென்று அந்த‌ இட‌த்திலிருந்து போய்விட்டாள்.

இவ்வ‌ள‌வு தெளிவாய் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டு ஒரு துளி க‌ண்ணீரோ, அதிர்ச்சியோ இல்லாம‌ல் இவ‌ள் போன‌து கூட‌ அவ்வ‌ள‌வு பெரிய‌ விட‌ய‌மில்லை. ஆனால், நான் போற‌ வாற‌ பெட்டைய‌ளின்ரை குண்டிக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌து, ஒரு த‌மிழ்ப்பெட்டையான‌ இவ‌ளுக்கு எப்ப‌டியோ தெரிந்துவிட்ட‌தே என்ப‌துதான் எல்லா அவ‌மான‌ங்க‌ளுக்கும் மேலான‌ அவ‌மான‌மாய் என‌க்குத் தோன்றிய‌து. ஒரு அச‌ல் யாழ்ப்பாணியான‌ என் மீது விழுந்து விட்ட‌ இந்த‌க்க‌றையை, நான் வ‌ங்க‌க்க‌ட‌லையெடுத்து என் மீது வாரியிறைத்துக் கொட்டினால் கூட‌ என்றைக்கும் அக‌ற்ற‌முடியாது போல‌த்தான் தெரிகிற‌து..

(2008)
(ந‌ன்றி: கால‌ம் ‍-34)

நாம் இருக்கும் கனடாவில்...

Friday, April 02, 2010

(1)
பெப்ரவ‌ரி மாத‌ம் வெளியிட‌ப்ப‌ட்ட‌ ஆய்வ‌றிக்கை ஒன்றின்ப‌டி, ரொறொண்டோவிலுள்ள‌ காவ‌ற்துறையால், 'க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளைச் சேர்ந்த‌வர்க‌ளை விட‌ மூன்று ம‌ட‌ங்கு நிறுத்த‌ப்ப‌ட‌வும், அடையாள‌ அட்டைக‌ளைக் கேட்க‌வும் செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள்' என்று கூறப்படுகின்ற‌து. இத்த‌கைய‌ நிற‌வேறுபாடு ரொறொண்டோ பொலிசிட‌ம் இப்போதுதான் அடையாள‌ங் காண‌ப்ப‌டுகிற‌து என்ப‌த‌ல்ல‌. கிட்ட‌த்த‌ட்ட‌ எட்டு வ‌ருட‌ங்க‌ளிற்கு முன்னும் இவ்வாறு காவல்துறையினர் நிற‌வேறுபாடு காட்டுகின்றார்கள் என‌ச் சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. வ‌ழ‌மைபோல‌ அப்போது பொலிஸ் உய‌ர‌திகாரிக‌ள் இது குறித்து க‌வ‌னிக்கிறோம் என்று கிட‌ப்பில் போட்டிருக்கின்றார்க‌ள் போலும். இல்லையெனில் எட்டு வ‌ருட‌ங்க‌ளின் பின் செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஆய்வு இன்னும் நிற‌வெறி இருக்கிற‌து என்று விரித்துக் கூறியிருக்காது. மிகுந்த‌ அதிகார‌ம் குவிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பொலிஸ் குறித்து வெளியிட‌ப்ப‌டும் பிற‌ குற்ற‌ச்சாட்டுக்க‌ள் (இல‌ஞ்ச‌ம் வாங்குத‌ல்/போதைம‌ருந்துக் க‌ட‌த்த‌லிற்கு உட‌ந்தையாக‌ இருத்த‌ல்) போன்ற‌வை கூட கடந்தகாலத்தில் சாதார‌ண‌ எடுத்துக்கொள்ள‌ப்ப‌ட்டு 'காவ‌ற்துறையின் க‌ண்ணிய‌ம்' காக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து.

இன்னும் முக்கிய‌மாய், இந்த‌ அறிக்கையில் பொலிஸால் 'ம‌ண்ணிற‌' நிற‌முடைய‌வ‌ர்க‌ளும் இவ்வாறு க‌றுப்பின‌ ம‌க்க‌ளைப் போல‌ நிறுத்த‌வும் அடையாள‌ அட்டைக‌ள் காட்ட‌வும் கேட்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌து க‌வ‌னிக்க‌த்த‌து. இந்த‌ 'ம‌ண்ணிற‌'வ‌கைக்குள் அட‌க்குப‌வ‌ர்க‌ளில் நாங்க‌ளும் இருக்கின்றோம் என்ப‌தை நினைவூட்ட‌த்தேவையில்லை. மேலும் பொலிஸ் ஒருவ‌ரை நிறுத்தி விசாரிக்கும்போது அவ‌ர்க‌ளிற்கு உரிய‌ ஒரு புத்த‌க‌த்தில் விசாரிக்க‌ப்ப‌டும் ந‌ப‌ர் நிற‌ம், பெய‌ர், முக‌வ‌ரி, உட்ப‌ட‌ அவ‌ர் விசாரிக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கான‌ கார‌ண‌மும் எழுத‌ப்ப‌ட‌வேண்டும் என்று அறிவுறுத்த‌ப‌ப‌டுகின்ற‌து. ஆனால் த‌னிம‌னித‌ருக்குள்ள‌ உரிமையில், த‌டுத்து நிறுத்தி விசாரிக்க‌ப்ப‌டும் ஒருவ‌ர், த‌ன‌து சுய‌விப‌ர‌ங்க‌ளை (பெய‌ர், முக‌வ‌ரி) என்ப‌வ‌ற்றை பொலிஸிட‌ம் கொடுக்காது இருக்க‌முடியுமெனச் சட்டம் கூறுகின்றது. அதேச‌ம‌ய‌ம் பொலீஸ் இவ்வாறு விப‌ர‌ங்க‌ளைக் கேட்கும்போது ஒருவ‌ர் கொடுக்க‌ மறுத்தால், அவ‌ரைச் 'ச‌ந்தேக‌த்திற்குரிய‌ ந‌ப‌ர்' என்ற‌ வ‌கைக்குள் அட‌க்கி மேலும் தீவிர‌மான‌ விசார‌ணைக்கு உட்ப‌டுத்தும் அபாய‌மும் இருக்கிற‌து என்று இந்த‌ ஆய்வு க‌வன‌த்திற்கு உட்ப‌டுத்துகிற‌து.

பொலிஸ் அதிகார‌த்தை துஷ்பிர‌யோக‌ம் செய்வ‌தைக் குறைக்கும்பொருட்டு, பொலிஸின் த‌வ‌றான‌ விசார‌ணைக‌ளை நாம் ந‌ம‌து தொகுதிக‌ளில் நாம் தேர்ந்தெடுக்கும் க‌வுன்சில‌ர்க‌ள், எம்பிமார்க‌ளின் க‌வ‌ன‌த்திற் கொண்டுவ‌ர‌லாம். பொலிஸ் என்ப‌து ந‌ம‌து வ‌ரிப்ப‌ண‌த்தில் ந‌ம‌க்காக‌ ந‌ட‌த்த‌ப‌டுகின்ற் ஒரு அமைப்பே த‌விர‌, அவ‌ர்க‌ள் கூறும் அனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ள‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌மும் இல்லை என்ப‌தை நாம் நினைவில் இருத்தியாக‌ வேண்டும். மேலும் சிறுபான்மையாக‌வுள்ள‌ (minorities) ப‌ல்வேறு ச‌மூக‌ங்க‌ளிலிருந்து காவ‌ற்துறைக்கு ஆட்க‌ளைச் சேர்க்க‌வேண்டும் என்று நாம் பொதுவெளியில் வ‌லியுறுத்த‌ வேண்டும். ஒரு குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை, நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அதிகார‌த்தை ஆக்குப‌வ‌ர்க‌ளாக‌வும், காவ‌ற்துறையில் நிறைய இடங்களில் இருப்பவர்களாகவும் இருக்கும்போது அவ‌ர்க‌ளால் 'ம‌ற்ற‌வ‌ர்களை' (சிறுபான்மையினரை) அவ்வ‌ள‌வு எளிதாக‌ விள‌ங்கிக்கொள்ள‌ முடியாது.


(2)
இதேபோன்று ரையசன் (Ryerson) பல்கலைக்கழகத்தை முன்வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றையும் நாம் கவனிக்கவேண்டும். ஒராண்டு காலமாய் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடியும், திறந்தவெளியில் கருத்துக்கேட்டும் வெளியிட்டப்பட்ட இவ்வறிக்கை ரையசன் வளாகத்தில் நிறவெறி உயர்மட்டத்தில் அதிகம் நிலவுவதாகக் கூறுகின்றது. முக்கியமான பல்கலைக்கழக அலுவலக உயர்மட்டத்தில் வெள்ளையினத்தவர் அல்லாத சிறுபான்மையினர் மிக்ககுறைவாக உள்ளதாகக் கூறுகின்றது. அத்துடன் சில பேராசிரியர்கள் மற்றும் பணிபுரிவோர் போன்றோர் பிற சிறுபான்மையினரைக் கவனத்திற்கொள்ளாது வகுப்பில் பகிடிகள் விடுவதாகவும், பிற மாணவர்கள் இவ்வாறு சிறுபான்மையினரை வகுப்புக்களில் கேலிசெய்யும்போது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ரையசனில் படிக்கும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் 'வீடற்றவர்' (homeless) என அடையாளப்படுத்தப்பட்டு வளாகத்தின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வறிக்கையை எழுதியவர்கள், நிறவெறிக்கு எதிரான, காலனியாதிக்கத்திற்கு எதிராக, முஸ்லிம் வெறுப்புணர்வுக்கு எதிராக, யூதர் வெறுப்பு எதிராக பல்வேறு பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டுமெனப் பரிந்துரைந்திருக்கின்றது. மேலும் கறுப்பின மற்றும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களைப் போன்ற சிறுபான்மை சமூகங்களிலிருந்து இன்னும் நிறையப் பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தவேண்டுமென எதிர்பார்ப்பதாய்க் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கையை அடுத்து பல்கலைக்கழகத்தின் தலைவர், ஒரு குழுவை அமைத்து இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நிகழாது பல்வேறுமட்டங்களில் விழிப்புணர்வு செய்யப்படுமெனக் கூறியிருக்கின்றாரெனப் பத்திரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.


(3)
ஜனவர் மாதத்தில், ரெண்டனில்(Trenton) இருக்கும் விமானப்படைத்தளத்தின் ஒரு பகுதியிற்குப் பொறுப்பாக இருக்கும் கேணல் ரஸல் வில்லியம்ஸ் (Russell Williams) இரண்டு பெண்களைக் கொன்ற குற்றத்திற்காய் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா, கனடாப் படைகள் செய்யும் அட்டூழியங்கள் நாம் அறியாததுமல்ல. அண்மையில் ஆப்கான் சிறைச்சாலைகளில் மிகக்கொடூரமாய் கனேடிய படைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அறிக்கையை வைத்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டே கனேடிய பிரதமர் ஹார்ப்பர் பாராளுமன்றத்தை நீண்டகாலத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். கனடாப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதை வலதுசாரி பிரதமரும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களும் விரும்புகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் தேசியம் என்ற பெயரால் கனேடிய படைகள் செய்யும் துஷ்பிரயோகங்களையும் பாலியல் வன்புணர்ச்சிகளை மூடிமறைக்கத் தெரிந்த அரசுக்கு இப்படி ஒரு கேணல் தரத்தைச் சேர்ந்தவர் இரண்டு பெண்களைக் கொன்றதும், மேலும் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும் மறைக்கமுடியாது விழிபிதுங்கி நிற்கவேண்டியிருக்கிறது. எந்த நாட்டு அரசும் தனது அதிகாரவர்க்க காவலாளிகளான இராணுவம் பொலிஸ் என்பவற்றை -அவை எந்தத் தவறைச் செய்தாலும்- விட்டுக்கொடுக்க அனுமதிப்பதில்லை. நாட்டின் இறையாண்மையைக் காரணங்காட்டி இவற்றை 'சாதாரண' விடயமாக்கிவிடுவார்கள்.

ஏன் இவ்வளவு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேணல் கூட இன்னும் சில வருடங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துவிடவும் கூடும். இராணுவம், பொலிஸ் என்ற அதிகார மையங்கள் எப்போதும் அப்பாவிகள் மீதே தனது பலத்தை நிரூபித்து தாம் தமது கடமைகளைச் செய்துகொண்டிருப்பதாய்க் கூறிக்கொண்டிருப்பார்கள். இந்தக் கேணலின் விவகாரத்தோடு, புதிய ஜனநாயக் கட்சியினர் (NDP) இராணுவ உயர்மட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், அதிகாரங்கள் குவிந்து துஷ்பிரயோகமும் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டும், இராணுவம் சாராத மக்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் அலுவலகர் ஒருவர், இவ்வாறான இராணுவமையங்களில் அமர்த்தப்படவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்திருக்கின்றார்கள். முன்னர் சோமாலியாவில் கனேடியப் படைகள் இவ்வாறான துஷ்பிரயோகம் செய்த காலங்களில் இவ்வாறான ஒரு சிவில் அலுவலகர் நியமிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் மக்கள் நலன் சார்ந்து தொழிற்படும் ஒரு அரசாக அல்லாத வலதுசாரிகளைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இவ்வாறான கோரிக்கைகள் எல்லாம் வலதுசாரி அரசின் காதில் ஏறுமா என்பதும் சந்தேகமே.



எழுதுவதற்கு உதவிய இணைப்புக்கள்:
(1) www.thestar.com/news/gta/article/761551--when-good-people-are-swept-up-with-the-bad
(2) www.thestar.com/news/gta/education/article/762011--ryerson-told-to-crack-down-on-racist-chill
(3) www.thestar.com/news/ontario/article/762152--cfb-trenton-chief-charged-with-murder-of-two-women

(நன்றி: வைகறை, Mar, 2010)

(அமெரிக்க) இராணுவ‌த்தில் ஓரின‌ப்பாலின‌ர்

Monday, March 29, 2010

சுருக்க‌மான‌ வ‌ர‌லாறு
இராணுவ‌த்தில் ஓரின‌ப்பாலின‌ர்

By: Kayla Webley
தமிழாக்க‌ம்: டிசே த‌மிழ‌ன்

அமெரிக்க இராணுவ‌த்தில் ஆண்/பெண் ஓரின‌ப்பாலர் ம‌ற்றும் இருபாலின‌ர் என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ 660,000 பேர் த‌ம‌து பாலிய‌ல் சார்பை (sexual orientation) ப‌ல‌வ‌ந்த‌மாக‌‍ ம‌றைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றார்க‌ளென‌ அண்மைக்கால‌ ஆய்வொன்று கூறுகின்ற‌து. பெப்ர‌வ‌ரி 02ல், 17 வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு, அமெரிக்க ஜ‌னாதிப‌தி ஓபாமா 'த‌ம‌து நாட்டை நேசிக்கும் ஓரின‌ப்பாலார், அமெரிக்க இராணுவ‌த்தில் வேலை செய்வ‌தை ம‌றுக்கும் ச‌ட்ட‌த்தை' ப‌ற்றி விவாதிக்க‌ வேண்டியிருக்கிற‌து எனப் பேர‌வையில்(Congress) பேசியிருப்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

பழ‌ங்கால‌ கிரேக்க‌த்தில் இது(ஓரின‌ப்பால்) ஒரு முக்கிய‌ விட‌ய‌மே அல்ல‌. பிளேட்டோ படையினரிடையே ஓரின‌ப்பாலை ஊக்குவிப்ப‌தால் படைகள் ப‌ல த‌டைகளைத் தாண்ட‌முடியுமென‌ எழுதினார்; 'காத‌ல் பிர‌யோச‌ன‌ம‌ற்ற கோழைக‌ளைக் கூட‌ உத்வேக‌முள்ள‌ வீர‌ர்க‌ளாக‌ மாற்றிவிடுகிற‌து' என்கிறார். ஆனால் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ பெரும்பாலான‌ ம‌ற்றைய‌ ப‌குதிக‌ளில் இது ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. நெப்போலிய‌னின் போர்க்கால‌ங்க‌ளில் இவ்வாறான‌ ந‌ட‌த்தைக‌ளுக்காய் ப‌ல‌ர் தூக்கிலிட‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். 1778ல் ஜென‌ர‌ல் ஜோர்ஜ் வாசிங்ட‌ன், ஒரு இராணுவ‌ வீர‌னை த‌ற்பால் ந‌ட‌த்தைக்காய் இராணுவ‌த்திலிருந்து நீக்கியிருக்கிறார்.

1916ல் ஜ‌க்கிய‌ அமெரிக்கா, ஓரின‌ப்பாலின‌ர் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றுவ‌தை த‌டை செய்திருக்கின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ ம‌கா யுத்த‌த்தின்போது, படையில் சேர்ப‌வ‌ரின் ந‌ட‌த்தைக‌ளையும், உட‌ல் உறுப்புக்க‌ளையும் அவ‌தானித்தே இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். விய‌ட்னாம் போர்க்கால‌த்தில் சில‌ர் ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ ந‌ட‌த்தைக‌ளைக் காட்டிய‌தால் சேர்க்க‌ப்ப‌டுவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து எனினும் எல்லாப்பொழுதும் இத‌னால் ப‌டையில் சேர்க்க‌ப்ப‌டாம‌ல் த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌துமில்லை; 1968ல் பெர்ரி வோக்கின்ஸ் என்ற‌ வோஷிங்ட‌ன் ந‌க‌ரைச் சேர்ந்த‌ 19 வ‌ய‌து இளைஞ‌ன் 'த‌ற்பால்சார்பு ந‌ட‌த்தையுடைய‌வ‌ராக‌' இருந்த‌போதும் 16 வ‌ருட‌ங்க‌ள் இராணுவ‌த்தில் ப‌ணிபுரிய‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். பிற‌கு இவ‌ரின் பாலிய‌ல் சார்பால் இவ‌ர் இராணுவ‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌டடதற்காய் நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுத்து 1990ல் அவ்வ‌ழ‌க்கில் வென்றுமிருக்கின்றார்

ஜ‌னாதிப‌தி பில் கிளிங்ட‌ன் 1993ல் ப‌த‌வியேற்ற‌போது, இராணுவ‌த்தில் சேரும்போது 'கேட்காதே, சொல்லாதே' (Don't ask, Don't tell) என்ற ச‌ட்ட‌த்தை இராணுவ‌ அலுவ‌ல‌ர்க‌ளின‌தும், பொதும‌க்க‌ளின‌தும் எதிர்ப்புக்க‌ளிடையே கொண்டு வ‌ந்தார். இம்முய‌ற்சி ஒர‌ள‌வு வெற்றி பெற்ற‌து. பேர‌வை இத‌ற்குப் ப‌திலாக‌, அமெரிக்க‌ இராணுவ‌த்தில் த‌ம‌து பாலிய‌ல் சார்பை வெளிப்ப‌டையாக‌ ஒருவ‌ர் அறிவிக்காத‌வ‌ரை அவ‌ர் இராணுவ‌த்தில் ப‌ணியாற்ற‌முடியும்' என்ற‌ இன்னொரு ச‌ட்ட‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து. ஆனால் பென்ர‌க‌ன் ஒருவ‌ரை இராணுவ‌த்தில் சேர்க்கும்போது அவ‌ர‌து பாலிய‌ல் சார்பைக் கேட்ப‌தை நிறுத்தினாலும், இராணுவ‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளிடையே தொட‌ர்ந்தும் (இவ்வாறான‌ ந‌ட‌த்தைக‌ளுக்கான‌) விசார‌ணைக‌ளை ந‌ட‌த்திக்கொண்டிருக்கின்ற‌து. 1994 ஆண்டிலிருந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 12, 000 இராணுவ‌த்தின‌ர் அவ‌ர்க‌ளின் பாலிய‌ல் சார்பினால் இராணுவ‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள்.

ந‌ன்றி: TIME
(Timeல் வந்த இக்கட்டுரையை ஸ்கான் செய்து அனுப்பிய 'வைகறை'  ரவிக்கும் நன்றி)

புத்தரும், அவனும் - 01

Saturday, February 20, 2010

நீண்ட‌நாள் காணாம‌ற் போயிருந்த‌ புத்த‌ரை இன்று மீண்டும் அவன் தன‌து க‌ண‌னி மேசைக்க‌டியில் ஒளிந்திருப்ப‌தைக் க‌ண்டான். ப‌னிக்கால‌ம் தொட‌ங்கி அறையெல்லாம் சில்லிட்டுக்கொண்டிருக்க‌ புத்த‌ர் ந‌டுந‌டுங்கிய‌ப‌டி இருந்தார். காடு, ம‌லை, ம‌ழை எல்லாவ‌ற்றையும் புறக்கணித்து நெடுந்தூர‌ம் அலைந்து திரியும் புத்த‌ர் இப்ப‌டிப் ப‌ய‌ந்து ஒடுங்கிய‌ப‌டி அவனது அறைக்குள் இருந்த‌த‌ற்கு இந்த‌ப் பனிக்கால‌ம் ம‌ட்டும் கார‌ண‌மாயிருக்காது என்ப‌து தெளிவாக‌ப் புரிந்த‌து.

புத்த‌ரை இறுதியாய்ச் ச‌ந்தித்த‌ பின்பான‌ இடைவெளியில், நிக‌ழ்ந்த‌ எத்த‌னையோ விட‌ய‌ங்க‌ளை அவ‌ரிட‌ம் ப‌கிர்வ‌த‌ற்கு தன்னிடம் இருக்கின்ற‌து என்ற‌ எண்ண‌ம் அவனுக்குள் நிறைந்து வ‌ழிய‌ ஆர‌ம்பித்த‌து. எனினும் வ‌ழ‌மைபோல‌ அவன‌து வீட்டுக்கு வ‌ருகைத‌ருப‌வ‌ரைப் போல் இன்று புத்த‌ர் இருக்க‌வில்லை.... அது ஏன் என்ற‌ கேள்வி அவனுக்குள் ச‌ஞ்ச‌ல‌த்தை உருவாக்க‌த் தொட‌ங்கியிருந்த‌து. வ‌ருகின்ற‌ வ‌ழியில் எங்கையேயாவ‌து ஆற்றில் அவனுக்காய் வெள்ளைத் தாம‌ரைக‌ளை ஆய்ந்து வ‌ர‌ புத்த‌ர் ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. இன்றைய‌ நாளில் அவனுக்காய் எந்த‌ப் பூவையும் கொண்டுவ‌ர‌வில்லை என்ப‌தோடு அவர‌து க‌ர‌ங்க‌ள் சிவ‌ப்பு நிறமாய்க் க‌ண்டிப்போய் இருந்த‌தைப் பார்க்கும்போது ம‌ன‌திற்குள் சிறுவ‌லி மின்ன‌லாய் வெட்டிவிட்டுப்போயிருந்த‌து.

அவன‌து சகோதரர்களின் பிள்ளைக‌ள் ஓடிப்பிடித்து விளையாடும்போது மேசைக்க‌டியில் ஒளிந்திருப்ப‌துபோல‌ புத்த‌ரும் க‌ண்ணை மூடிக்கொண்டு இருந்த‌து அவனுக்கு ஒருமாதிரி இருந்த‌து (க‌ண்ணை மூடினால் எவ‌ரும் க‌ண்டுபிடிக்காமாட்டார்க‌ள் என்ப‌து குழ‌ந்தைக‌ளின் ம‌ன‌த்துணிபு). சிறிய‌வ‌ர்களோடு என்றால், அவ‌ர்க‌ள் ஒளிந்திருக்கும் இட‌த்தைக் க‌ண்டுபிடித்தாலும், காணாத‌துமாதிரி ந‌டிக்க‌முடியும், ஆனால் புத்த‌ரோடு அப்ப‌டியெல்லாம் விளையாட‌முடியாது அல்ல‌வா? இந்தத் த‌ருண‌த்தை எப்ப‌டி எதிர்கொள்வ‌து என்ற‌ ஒரு திணறல் ப‌னிக்கால‌த்தில் உரிய‌ ஆடைக‌ளை அணியாது வெளியே போன‌து போன்ற‌ நிலைக்கு நிகராய் அவனுக்குள் உருவாகக‌த் தொட‌ங்கிவிட்ட‌து

சாதார‌ண‌மாய் ச‌ந்திக்கும் புத்த‌ர் என்றால் இப்போது கிண்ண‌ங்க‌ளில் வைனையோ அல்ல‌து கிழ‌க்காசியாவிலிருந்து பிர‌த்தியேக‌மாக் புத்த‌ர் த‌ன‌து காவித்துணியில் ம‌டித்துக்கொண்டுவ‌ரும் தேயிலையையோ வைத்து.... உருவாக்கிய‌ தேநீரையோ அருந்திக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். திர‌வ‌ங்க‌ள் நிறைந்த‌ கிண்ண‌ங்க‌ள் காலியாக‌ ஆக‌ ம‌ன‌தும் விருப்பு வெறுப்பும‌ற்ற ஒரு வெற்றிட‌மாய் மாறிக்கொள்ள‌த் தொட‌ங்கும். பிற‌கு எல்லாமே புதிதாய்த் தோன்றுவ‌துமாதிரியும் எதையும் எதிர்கொள்ளலாம் என்ற‌ தெம்பும் அந்த‌க்க‌ணங்க‌ளில் பொங்கித் த‌தும்ப‌த் தொட‌ங்கியிருக்கும். ஆனால் இப்போது புத்த‌ரின் நிலைமையைப் பார்த்தால் அத‌ற்கான‌ சாத்திய‌மே எதுவும் இல்லாத‌து போல‌த் தோன்றிய‌து..

புத்த‌ர் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளை க‌ற்பிக்கின்றோம் என்ற‌ பிர‌க்ஞையில்லாது அவனுக்குள் ஊட்டியிருக்கின்றார். அவன் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளைக் கூட‌ சில‌ இட‌ங்க‌ளில் நிஜ‌மாக்கியிருக்கின்றார். ஒரு ம‌ழைநாளில் வ‌ந்த‌ புத்த‌ரோடு உரையாடிக்கொண்டிருந்த‌போது முளைத்த‌, க‌ண‌வ‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ பெண்ணையும் அவ‌ளின் குழ‌ந்தையும் நிஜ‌மாக‌வே -3 வ‌ருட‌ங்க‌ளின் பின்- அவன் தன் வாழ்வில் ச‌ந்தித‌த‌போது அவனுக்கு மிக‌வும் விய‌ப்பாயிருந்த‌து. இன்று அவ‌ளும் அவ‌ள் குழ‌ந்தையும் துய‌ர் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளைக் க‌ட‌ந்து ஒரு இள‌வேனிலுக்காய்க் காத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைப்ப‌ற்றியும் புத்த‌ருட‌ன் ப‌கிர‌வேண்டும் என‌ நீண்ட‌நாட்க‌ளாய் நினைத்துக்கொண்டிருந்தான்.


புத்த‌ருட‌ன் ஓர் இர‌வு
-இளங்கோ

மழைத்தூறல் ஓய்ந்து
ஈரம் இரவை
சிறகுகளால் கோதிக்கொண்டிருந்தபோது
வீட்டுக்கு வந்திருந்தார்
புத்தர்

Santa மட்டுமே
புகைக்கூண்டுக்குள்ளால் இறங்குவார்
என்றெண்ணிய
என் நான்கு வயது மகளுக்கு
கோடையில்
சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து
தூசி தட்டியபடி
புத்தர் வந்தது வியப்பாயிருந்தது

நான் அருந்துவதற்கு
மிதமாய் கலந்துவைத்திருந்த
வோட்காவை பகிர்ந்தபோது
ஒவ்வொரு மிடறும்
தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்றார்

அரசியல் சினிமா
ஜென் செக்ஸ் என
ஒரு பட்டத்தைப்போல
திசையில்லாது உரையாடல் அசைந்துகொண்டிருக்கையில்
புத்தர் திடீரென வினாவினார்
கடந்துபோன காலத்தில்
நீ இழைத்த தவறுகளுக்கு
வருத்தம் கூற விரும்புகின்றாயாயென

நான்
பாவங்கள் விளைவித்த
மனிதர்கள் நிரையாக நிற்க
வெட்கிக் குனிந்தபடி
நடுங்கும் குரலில்
கோருகின்றேன் மன்னிப்பு

இப்போது
மனது மேகமாய் மிதந்து
குதூகலம் மழைநீராய் திரண்டபோது
DJ drop the s*** என்றலறியபடி
ராப் பாடலுக்கு ஆடத்தொடங்குகின்றோம்
நானும் புத்தரும்

நேரம் நள்ளிரவைக்கடந்தபோது
வெறுமையான மதுக்கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும்
துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும்
எனது நான்குவயது மகளும்
காணாமற்போயிருந்தனர்.

2.
மதியவுணவு
இடைவெளிகளின்போதுதான்
முகையவிழ்த்திருந்தது அவளுடனான நட்பு

அவளையும் இரண்டுவயதுக் குழந்தையையும்
சில மாதங்களுக்கு முன் கைவிட்டு
இன்னொரு பெண்ணுடன்
தன் துணைவன்
வாழத்தொடங்கியிருக்கின்றான்
என்றாள் விழிநீரைத்துடைத்தபடி

எனக்கு வாய்த்ததைப் போல
புத்தர்
அவள் வீடு தேடி
ஓர் இரவில் போகக்கூடும்
அல்லது
அவளிடமும் அவள் குழந்தையிடமும்
நான் புத்தரையும்
காணாமற்போன என் நான்கு வயதுக்குழந்தையும்
என்றேனும் ஒருநாள்
அடையாளம் காணவும்கூடும்.

(Aug 25/2005)

ந‌ன்றி: வைக‌றை (தை, 2010)

நீ இன்னும் அழ‌வில்லை

Friday, February 12, 2010

1.
நேச‌த்தின் க‌ச‌ப்பு
ம‌ர‌ங்க‌ளில் துளிர்த்து
நில‌வொன்று த‌ன்னை
தீமூட்டிக் கொன்ற‌ க‌ரிய‌விர‌வொன்றில்
இத்தெருக்க‌ளின் விளிம்புக‌ளில் தொலைந்திருக்கிறேன்
புராத‌ன‌த்து ம‌ண‌த்தை
*வ‌ளாக‌த்துப் புறாக்க‌ள் சிற‌க‌டித்து ப‌ர‌ப்பிய‌
தேவால‌ய‌த்தின் வாச‌லில்
நாட‌ற்ற‌வ‌னாக‌வும்
ஒருத்தியின் வெறுப்புக்குரிய‌வ‌னாக‌வும்
ஒருபொழுதில் கிட‌ந்துமிருக்கிறேன்.

த‌ன் மூதாதைய‌ர் நெய்துகொடுத்த‌
போர்வையைப் ப‌கிர்ந்த‌ பூர்வீக‌க்குடி
த‌ங்க‌ளின் க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளின்மேல்
க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இப்பெருந‌க‌ர‌த்தின
வ‌ர‌லாற்றைத் துப்புகையில்
சூரிய‌ன் யாரையோ தொலைவில்
சுட்டுவிட்டு த‌லைம‌றைவாவ‌து தெரிந்த‌து
வான‌ம் க‌ருஞ்சாம்ப‌லைப் போர்த்திய‌ப‌டி
கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌லைத்தேடி
ப‌க‌லில் இர‌க‌சிய‌மாய் அலைந்த‌து

இன்ன‌மும் உல‌ர்ந்துவிடாத‌
உயிர்த்த‌லுக்கான‌ ப‌ச்சைய‌த்தை
நேசமாயொருத்தி ப‌கிர வ‌ந்த‌போது
நாட‌ற்ற‌வ‌ர்க‌ளான நாமிருவ‌ரும்
இன்ன‌முமித்தெருக்க‌ளில்
திசைக‌ள‌ற்று அலைவ‌த‌ற்கான‌
ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் விழித்திருக்கின்ற‌தென்ற‌ப‌டி
விடைத‌ந்தார் பூர்வீக‌க்குடி

2.
இன்று
நிக‌ழ்கின்ற‌ ஊழிப்பெருங்கூத்தில்
நின்று அழுவ‌த‌ற்கான‌ கால‌ங்கூட‌ இல்லை
விழி நிர‌ப்புகின்ற‌ க‌ண்ணீர்த்துளிக‌ளை
குர‌ல்க‌ளிலும் ப‌தாதைக‌ளிலும்
ம‌றைத்து வைத்து
எவ‌ருமே செவிம‌டுக்காத‌ சூனிய‌த்தில்
எங்களைக் காப்பாற்றுங்க‌ளென‌க் கெஞ்சுகின்றோம்

ப‌‌டுகொலைக‌ளை நிறுத்த‌ச்சொல்லி
எங்க‌ளோடு கூட‌வே
உர‌த்துக் க‌த்தும் 9 வ‌ய‌து கீர்த்தி
த‌மிழ் ம‌க்க‌ளைக் காப்பாற்ற‌
ஏனோர் சீன‌ப்பெருஞ்சுவ‌ர் க‌ட்டியிருக்க‌க்கூடாதென்கிறான்
சிறுவ‌ர்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌மோ
யார் ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வ‌ரென்ற‌
ப‌குப்பாய்வுக‌ளுக்கோ அவசிய‌மிருப்ப‌தில்லை
இருள்கின்ற‌ இக்க‌ண‌த்து வான‌த்திலிருந்து
தெறிக்குமொரு மின்ன‌லைப்போல‌
இற‌ந்த‌வ‌ர்க‌ள் நாளை உயிர்ப்பார்க‌ளென‌
க‌ன‌வு காண்கிறார்க‌ள் அவ‌ர்க‌ள்

பிரிய‌ கீர்த்தி,
என்றேனும் ஒருநாள்
எல்லோரும் நிதான‌மாய்க் கேட்க‌க்கூடிய‌
உன‌க்கதிகார‌முள்ள‌ ச‌பையிலிருந்து...
நெடுஞ்சாலையில் வாத்துக்க‌ள் ந‌ட‌ந்துபோனாலே
கார்க‌ளை ம‌ணிக்க‌ண‌க்கில் நிறுத்தி
வ‌ழிவிடும் இம்ம‌க்க‌ள்
ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோர் அழிவின்போது
ம‌வுன‌ம் சாதித்து த‌ங்க‌ளை நிர்வாண‌மாக்கிய‌தையும்
எங்க‌ளைப் ப‌க‌டைக‌ளாக்கி
சூதாடிய‌ வ‌ல்ல‌ர‌சுக‌ள் அடையாள‌மின்றி
உடைந்து போன‌தையும்
என் க‌ல்ல‌றை முன்வ‌ந்து செப்பு

அப்போது ஓர் ஊற்றாய் அழுது தீர்க்கிறேன்
ஏன் சிச்சியா
எல்லோரும் அழும்போதும்
நீயின்னும் அழ‌வில்லையெனும் உன் கேள்விக்கு.


May 10, 2009
*Toronto Campus

(அர‌சிய‌ல் முர‌ண்க‌ளிற்கு அப்பாற்ப‌ட்டு,  தீக்குளித்த‌ முருக‌தாச‌னின் ஓராண்டு நினைவுக‌ளிற்கு Feb 12, 2009)