கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 118

Thursday, November 13, 2025


டந்த சனிக்கிழமை 'அன்புநெறி'  நாதசங்கமம் என்கின்ற ஓர் இசை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. இசை நிகழ்வென்றாலும் வீணை முன்னிலையாக இருக்க, வாத்தியங்களின் இன்னிசையெனத்தான் அதைச் செய்யவேண்டும். நிகழ்வின் நோக்கம், ஈழத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட நிதி சேகரிப்பதாகும். இந்த நிகழ்வு இதற்கு முதல் வாரம் மொன்றியலில் நிகழ்ந்திருந்தது. இங்கும் மொன்றியலில் நிகழ்ந்த நிகழ்வின் மூலம் 10 வீடுகள் கட்டுவதற்கான புரவலர்களின் நிதி கிடைத்தது மிக முக்கியமானது

 

நாத சங்கமத்தில் முதன்மை வாத்தியக் வீணை வாத்தியக் கலைஞராக இருந்த வாகிசன் கடந்தமுறையும் 'அன்புநெறி' நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து வந்திருந்தார். ஓர் இலங்கைக் கலைஞருக்கு முதன்மை கொடுத்து அன்புநெறியினர் அழைப்பதும், அவரின் திறமையை சபையினர் அங்கீகரிப்பதும் முக்கியமானது. இன்றைக்கு ஈழத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே இந்தியக் கலைஞர்ளை அழைத்து படப்பிடிப்பு நடத்தும் அவல நிலைக்கே நாம் வந்துவிட்டபின், புலம்பெயர் தேசத்தில் இவ்வாறு அரிதாகவேனும் ஈழக்கலைஞர்களை மதிப்பதும், நிகழ்வுக்கு அழைப்பதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

மேலும் வாகீசன் ஒருகட்டத்தில் இசையே வாழ்வென தீர்மானித்து தான் சென்ற கடினபாதையைப் பற்றியும் கொஞ்சம் கூறியிருந்தார். அதுவும் இலங்கையில் கலையை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் வாழப்போகின்றார் என்றால், நமது பெற்றோருக்கு வரும் பதற்றங்களை விபரிக்கத் தேவையில்லை. ஒருகட்டத்தில் இசையே வாழ்வென நினைத்து வாகீசன் இந்தியாவுக்குப் போய் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இசையைக் கற்றிருக்கின்றார். அத்தோடு நின்றுவிடாது audio engineering இல்  பட்டமும் அதே காலகட்டத்தில் பெற்றிருக்கின்றார்.

 

எப்படியெனினும் தன் இசையும் வாழ்வும் இலங்கையிலே என்று முடிவு செய்து இலங்கையில் வாழத் தொடங்கியபோது வெளிநாட்டு இசை நிகழ்வுக்கான வாய்ப்புக்கள் வந்தபோதும், இங்கிலாந்திற்கான விஸாவிற்கு நான்கு முறைக்கு மேலாக நிராகரிக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார். இப்போது வருடம் முழுவதும் பயணித்துக் கொண்டிருப்பவராக அவர் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். மேலும் அந்நிகழ்வில் அவர் சொன்ன இன்னொன்றுதான் நினைவில் கொள்ளத்தக்கது. தனது குரு உனக்கு நல்ல திறமை இருக்கின்றதென்று வாழ்த்து அனுப்பியபோது, எப்போதும் பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதே என்று சொன்னதாகச் சொன்னார். அதனால்தான் தான் பயிற்சியை மட்டுமின்றி, இசையின் புதிய நுட்பங்களையும் தினமும் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்றார். கலையில் ஆழம் செல்கையில் கலை தன்னியல்பிலே நம்மை அரவணைத்துக் கொள்வது என்பதும் உண்மைதானில்லையா?

 

*

 

வாகீசனின் இசை நிகழ்வு அவ்வளவு அருமையாக இருந்தது மட்டுமின்றி, அவ்வளவு எளிமையாகவும், பணிவானவராகவும் இருந்தார். எப்போதும் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர், அவரின் படைப்பு சார்ந்த விமர்சனங்களையும் கேட்க திறந்த மனதுடையவராக இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். அவ்வாறான ஒருவராக வாகீசனும் இருக்கக்கூடும்.

 

அண்மையில் எதையோ குறித்த எழுதிய பதிவில் நான் மதிக்கும் சில ஈழ/புலம்பெயர் திரை நெறியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன். அது நான் பார்த்த திரைப்படங்களின் அடிப்படையில் எழுதியது. அப்போது திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர், நாங்கள் மூன்று முழுநீளத் திரைப்படங்கள் எடுத்திருந்தோம் எங்களைக் குறிப்பிடவில்லை என்று கவலைப்பட்டிருந்தார். அவர்களின் மூன்று திரைப்படங்களில் ஒன்றை மட்டுமே பார்த்திருந்தேன். அவரின் கருத்தைப் பார்த்தபோது மனதுக்குள், 'நான் திரையங்குக்குச் சென்று பார்த்த திரைப்படத்தை பற்றி என் விமர்சனத்தை எழுதினால் எனது பக்கமே எட்டிப் பார்க்கமாட்டீர்கள்' என்று சொல்லி, மெளனமாக அதைக் கடந்து போயிருந்தேன். அந்தப் படம் அந்தளவுக்கு மோசமாக இருந்தது. பார்வையாளர்களை முட்டாள்கள் போல நினைத்து பாவனை செய்து ஏமாற்றியிருந்தது. சிலவேளைகளில் மற்ற இரண்டு படங்கள் நன்றாக இருக்கலாம். ஆனால் பார்க்காதவை குறித்துக் கருத்துச் சொல்ல முடியாதே.

 

இப்போது அவர்களின் நான்காவது திரைப்படம் வெளிவருகின்றது போலும். அத் திரைப்படத்தின் கதை ஏற்கனவே நான் அறிவேன் (அது எப்படி என்னை வந்தடைந்தது என்கின்ற தேடல்கள் வேண்டாம்). ஆனால் திரைப்படத்தில் கரு மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதைக் காட்சிப்படுத்துவதில்தான் எல்லாமே இருக்கின்றது. அதை அவர்கள் கற்றுக்கொள்ளாது, மற்றவர்களின் விமர்சனங்களைக் காது கொடுக்காதுவிட்டால், நமது இலக்கியவாதிகள் போல நாம் எழுதுவது மட்டுமே மேன்மையானது என்று தீவிரமாக நம்பி ஒரு குட்டைக்குள் நின்று நீச்சலடிப்பதாக முடிந்துவிடக்கூடும். அதனால் கலைக்கோ, பிறருக்கு என்ன நன்மை வந்துவிடப் போகின்றது என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும்பட்சத்தில் உங்களின் கலை இன்னும் முன்னோக்கிச் செல்லும், நீங்கள் நினைக்காத இடங்களையெல்லாம் சென்று சேரும்.

 

மேலும் முழுநீளத்திரைப்படம் மட்டுமே எடுத்துத்தான் எங்களை நிரூபிக்க வேண்டும் என்றில்லை.  திரும்பத் திரும்பச் சொல்வதுதான், எத்தனை கதைகள் நம் ஈழநிலப்பரப்பெங்கும் பரவிக்கிடக்கின்றன. சின்ன சின்ன குறும்படங்களாகவோ, 30 நிமிடப்படங்களாகவோ அதை எடுத்து காட்சிப்படுத்தலாம். எத்தனையோ திரைப்பட விழாக்கள் இருக்கின்றன, அங்கே அனுப்பிக் கூடப் பார்க்கலாம். ஆனால் கதைகள் பாவனை செய்யாது, அசலான நம் வேர்களைப் பற்றிய கதைகளாக இருக்கும்போது மட்டுமே அவை தனித்துவமான படைப்பாக மாறும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

 

மேலும் அடிக்கடி நான்  குறிப்பிடுவதுதான், ஈழத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்ட (கல்லூரி வசந்தம்?) திரைப்படமும், புலம்பெயர் தேசத்தில் அருந்ததி நெறியாள்கை செய்த 'முகம்' என்கின்ற்திரைப்படமும் பலவற்றுக்கு நமக்கு முன்னோடி என்பேன். இவையிரண்டும் கையில் இருந்த பணத்தையும், முறைசார் நடிகர்களுமில்லாது எடுக்கப்பட்டவை. தொழில்நுட்பத்தில் கூட பல இடைஞ்சல்களைப் பார்வையாளருக்குத் தரக்கூடியது. ஆனால் 20/30 வருடங்களுக்குப் பிறகும் அதை ஞாபகம் வைத்து அடுத்து வரும் தலைமுறை பேச முடிகிறது என்றால் அவை அசலான நம் கதைகள் என்பதாலாகும்.  

 

அவ்வாறு ஒரு படைப்பை அதற்கான காலத்தையும் தாண்டியும் உருவாக்க முடிவது என்பதுதானே பெரும்பாலான கலைஞர்களுக்குரிய கனவாக இருக்குமே தவிர, சமகாலத்தில் எந்தக் குதிரை ஓடுகின்றதோ அதற்கு தீனி போட்டு பாராட்டைப் பெற முயற்சிப்பது ஒரு அசல் படைப்பாளிக்குரிய மனோநிலையாக இருக்காது அல்லவா?

 

*

 

நாத சங்கம் நிகழ்த்திய வாகீசன் இன்று முழுநேரக் கலைஞர். அவருக்கு இசை சோறு போடுவது மட்டுமில்லாது, உலகெங்கிலும் கலை இரசிகர்கள் அவரை அழைத்து அவரின் கலையைக் கொண்டாடவும் செய்கின்றார்கள். அந்தக் கலை, வசதி வாய்ப்புக்குறைந்தவர்கள் தமக்கான உறைவிடத்தையும் அமைத்துக்கொள்ள ஏதோ ஒருவகையில் உதவி செய்கின்றது என்பது எவ்வளவு அருமையானது. கலை அழைத்துச் செல்லும் பாதைகள் அற்புதமானவை. அதற்கு முக்கியமானது நீங்கள் அந்தக் கலைக்கு உண்மையாக எந்தளவுக்கு இருக்கின்றீர்கள் என்பதும், அதற்காக எவ்வளவு ஆத்மார்த்தமாக உங்கள் உழைப்பைக் கொடுக்கின்றீர்கள் என்பதுமாகும்.

 

******

 

 

 

வாசகர்கள்..!

Friday, November 07, 2025

 

மது ரமேஷ் பிரேதன் காலமானபோது அவர் குறித்து பகிரப்பட்ட பதிவுகளைப் பார்த்தபோது, ரமேஷ் உயிரோடு இருந்த காலங்களில் இவற்றில் ஒரு பத்துவீதமானவர்களாவது அவரை வாசித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் சொல்லியிருந்தால் எவ்வளவு அகமகிழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் பலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை எழுத்துக்காக  காலங்காலமாக அர்ப்பணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் அங்கீகாரம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி வாசகர்கள் உரையாடும்போதுதான் அதிகம் நிகழ்கின்றது. அதுவே அவர்களைத் தமிழ்ச்சூழலில் சோர்ந்து போகாது தொடர்ந்து   உற்சாகமாக எழுத வைக்கின்றதாகவும் இருக்கின்றது.


பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமான சில வாசகர்களாவது இருப்பார்கள். நானென் சிறுவயதுகளில் பாலகுமாரனின் மூழ்கியிருந்தபோது வாசகரான தேவகோட்டை வா மூர்த்தி (?) என்பவரின் அநேக கடிதங்கள் முன்னுரை போல பாலகுமாரனின் நாவல்களில் பிரசுரிக்கப்பட்டபடி இருக்கும். பாலகுமாரனின் மீதிருந்த அன்பால், இப்படியொரு ஒரு தீவிர வாசகனாக என் கடிதம் ஒன்றாவது பிரசுரிக்க வேண்டுமெனக் கனவு கண்டிருக்கின்றேன். அவ்வாறு ஹென்றி மில்லருக்கு அனானிஸ், நபகோவுக்கு வேரா(Vera), தமிழில் பிரமிளுக்கு கால சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் என்று எண்ணற்ற வாசக உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


*


கொழும்பில் ஒரு கஃபேயில், எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் நூல் பற்றிய உரையாடலுக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள். கஃபேயின் மேற்றளத்தில் ஒரு பத்து நண்பர்கள் இலக்கியம் பேசி கொண்டுவிட்டு, கீழே இறங்கி வந்தபோது அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். நான், அவரையும் மேலே அழைத்து வந்திருக்கலாம் என்று சொன்னபோது, பரவாயில்லை என்று இருவரும் சொன்னார்கள்.


அந்த நண்பர் எனது 'மெக்ஸிக்கோ' வாசித்து, அதன் மீது அவ்வளவு நேசத்துடன் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களும் பாடமென்றளவுக்கு அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வாசித்துமிருந்தார். அண்மையில்தான் இன்னொரு விடயமும் தெரிந்தது. அந்த நண்பர் தனது புத்தகங்களை காதலியின் வீட்டில் கொடுத்து வைத்திருக்கின்றார். அவ்வளவு வாசிப்பில் ஆர்வமில்லாத அவரின் காதலி தற்செயலாக 'மெக்ஸிக்கோ'வை எடுத்து வாசித்திருக்கின்றார். அது அந்தப் பெண்ணுக்கும் பிடித்ததால், இந்த நண்பர் 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' நிகழ்வுக்கு வந்ததால், 'மெக்ஸிக்கோ' எழுதியவர் யாரென்று பார்க்க ஆவலுடன் வந்திருக்கின்றார். இது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதைச் சொன்னார். அடடா இப்படியான ஒருவரை முறையாக வரவேற்கவில்லையே என எனக்குக் கொஞ்சம் வருத்தமிருந்தது.


இப்படித்தான் இன்னொரு வாசகர் இருக்கின்றார். அவர்தான் எனக்குக் கிடைத்த மிக இளம் வாசகர் என்று நினைக்கின்றேன். 'மெக்ஸிக்கோ' அவர் தனது பதினைந்து வயதுகளிலே வாசித்திருந்தார். அவரின் அக்காவின் சேகரத்தில் இருந்து எடுத்து வாசித்திருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விடயத்தை இந்த 'இளம் வாசகனை'ப் பற்றி பகிர்ந்தபோது, 'மெக்ஸிக்கோ' அவரைப் போன்றவர்கள் வாசிக்க ஏற்ற நாவலா என்று ஒரு சிறு உரையாடல் எனது முகநூலில் போனது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.


அவர் இன்று பல்கலைக்கழகத்துக்கு முதலாமாண்டு போகின்ற மாணவன். 'மெக்ஸிக்கோ'வோடு மட்டும் நிற்காது எனது அண்மைய நூலான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' வரை வாசித்த வாசகர். தனது அக்காவோடு எனது எழுத்துக்கள் எப்படி மாறுதலடைந்து கொண்டு போகின்றது என்பதை எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவரை'த் தேடி வாசித்து உரையாடியிருக்கின்றார். அவரது அக்காவிற்கு தம்பி தன்னைவிட அதிகம் என் எழுத்துக்களை நுணுக்கமாக வாசிக்கின்றார் என்று திகைப்பு.


அண்மையில் கொழும்பில் அவர் வயதொத்ததவர்கள் கூடிப் பேசும் இலக்கியக் கூட்டத்திலும் தனக்குப் பிடித்த புத்தகம் என்று 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருக்கிந்தார்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இன்று கூட அந்தப் புத்தகத்தை யாரோ ஒரு சிங்களத் தோழிக்கு (அவர் எழுத்துக்கூட்டி தமிழை வாசிப்பவர்) கொடுத்து அந்தத் தோழி வாசித்துக் கொண்டிருந்தபோது இன்னொருவர் அதைப் பார்த்து, 'இளங்கோவின் நூலையா வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' என்று சொல்லி அவர்கள் என் எழுத்துக்களை விவாதித்திருக்கின்றனர். அதன் முடிவில்தான் இந்த புதிய நண்பர் எனக்கு நேசத்தை ஒரு காணொளியாக அனுப்பி வைத்தார்.


பதின்மத்தின் விளிம்பிலும், இருபதுகளின் தொடக்கத்திலும் இருக்கும் ஒரு புதிய தலைமுறை (என் எழுத்தை வாசிப்பதால் மட்டும் அல்ல) நூல்களை வாசிப்பதும் உரையாடுவதும் நிறைவாக இருக்கின்றது. அவர்களினூடாக புதியவர்கள் எழுத வந்து தமிழ்ச்சூழலின் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் கூடும். இப்படியான வயதுகளில்தான் அதுவரை நான் வாசித்தவற்றின் திசையை மாற்றிய எஸ்.பொவின் 'ஆண்மை'யையும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யும் கண்டடைந்திருக்கின்றேன். அவ்வாறு தொடங்கிய ஒரு புதிய வாசிப்பு எழுச்சியும் வீழ்ச்சியுமான என் அலைச்சறுக்கு வாழ்க்கையில் என்னை துயரங்களில் எப்போதும் மூழ்கவிடாது கரைசேர்த்திருக்கின்றது. 


இந்த இளையவர்களுக்கும், அவர்களின் வாசிப்பு, அவர்களின் தத்தளிப்புக்களின் மட்டுமில்லாது, இனிய தருணங்களுக்கும் துணை நிற்கட்டுமாக. இதுவே அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக நாளை ஆக்குமென நம்பிக்கையும் கொள்கிறேன்.


***
 

கார்காலக் குறிப்புகள் - 117

Tuesday, November 04, 2025

 

 காளமாடன் (பைசன்)

***


லை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும். அதன் நிமித்தம் கிடைக்கும் புகழ்,பணம், செல்வாக்கு என்பதல்ல, படைப்பின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைப்பவை. எனவே ஓர் உண்மையான படைப்பாளி படைப்பின் மூலம் கிடைக்கும் by product குறித்து அவ்வளவு அக்கறைப்படமாட்டார் என்று நினைக்கின்றேன்.


இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை ஆழப்புழா ஜிம்கானா போன்ற மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.


ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக தன்னை மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, முக்கியமாக துவிதநிலையில் நாயக ௴ எதிர்நாயக் விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது.


எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததில் இருந்து எங்கும் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களைப் பார்த்த ஞாபகம் வருகின்றது.


மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம்.


இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓர் முன்னே நிற்கின்றார் என நினைக்கின்றேன். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரை சேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார்.


துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரையும் போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாக கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்லதொரு உதாரணங்கள்.


என்னைப் போன்ற ஊரில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ளவேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகத் தன்னை நிரூபிகவே தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது.


லை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். 


நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்றமாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். 


மாரி இந்த காளமாடனினில் -அவரின் முன்னை திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம்.


மாரியும் ஓர் நேர்காணலில் சொல்லியிருப்பார், 'வாழை'யில் ஒரு நடந்தகதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடான் பல்வேறு உரையாடல்களை அது நேரோ எதிரோ உருவாக்குவதையே விரும்புகின்றேன்  என்று கூறியிருப்பார்.


மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரத்தினால் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை வைக்கமுடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர்.


இப்போது முன்புபோல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?



********

கார்காலக் குறிப்புகள் - 116

Sunday, November 02, 2025

 

 
ழுத்து எனக்கு அந்தரங்கமானது என்பது போல, படைப்பாளிகளையும் தனித்தோ, ஓரிருவர்களோடு சேர்ந்து சந்திப்பதே எனக்குப் பிடித்தமானது. அப்போதுதான் அவர்களோடு நெருக்கமாகவும், வெளிப்படையாகவும் உரையாட முடியும்.

 
எனக்குப் பிடித்த படைப்பாளிகளை மேடையில் பார்க்கும்போது எனக்குள்ளும் ஒரு பதற்றம் வந்துவிடும். இவர்களால் அரங்கில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று எண்ணற்ற கேள்விகள் எனக்குள்ளும் குவியத் தொடங்கிவிடும். இது இப்போதல்ல எனக்குச் சிறுவயதுகளில் இருந்தே வந்துகொண்டேயிருக்கின்றது. சிறுவயதுகளிலே பாடசாலையில் படிக்கும் யாரேனும் பெண்ணை எங்களுக்குச் சோடியாக வைத்து 'பட்டந்தெளிப்பார்கள்'. அப்படி எனக்குச் சோடியாக வைக்கப்பட்ட பெண்களில் யாரேனும் மேடையில் நாடகம் நடிக்கும்போதோ, பரதம் ஆடும்போது ஏதோ நானே நடிப்பது போலவும், ஆடுவது போலவும் எனக்குள் பதற்றம் வந்துவிடும்.


இது பிறகு வளர்ந்து இளைஞனானபோதும் என் காதலிகளில் யாரேனும் மேடையில் இருந்து உரையாற்றும்போதோ/பாடும்போதோ/விவாதங்களில் பங்குபற்றும்போதோ இவர்கள் யார் முன்னும் அவமானப்பட்டுவிடக்கூடாது என்ற பயம் வந்துவிடும். அதனால் நான் அரங்கில் இருந்தால் கூட அவர்களின் முகத்தை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். இந்தச் சிக்கலுக்கு ஏதேனும் உளவியல் பெயர் கூட இருக்கக்கூடும். இதற்குள் இன்னும் போய் நான் மேலும் சிதைவடைய விருப்பமில்லை.


இங்கு நடக்கும் இயல்விருது குறித்து நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. தொடக்க காலங்களில் அது குறித்து நிறைய விமர்சித்து எழுதியுமிருக்கின்றேன் (விருப்பமுடையவர்கள் தேடி வாசிக்கவும்). ஒரு கட்டத்தில் அவர்களும் மாறப்போவதில்லை; என்னைப் போன்றவர்களும் திருந்தப்போவதில்லை என்று ஒரு 'சமாதான உடன்படிக்கை' நிலைக்கு மனதைக் கொண்டு வந்தாயிற்று. மேலும் இயல்விருதுக்கு மாற்றாக எதையும் நாங்கள் உருப்படியாக உருவாக்கவில்லை என்பது எங்களைப் போன்றவர்களின் வீழ்ச்சியே தவிர இயல்விருதுக்காரர்களுக்கு இதனால் இழப்பேதுமில்லை. நாங்கள் பேசுவதில் வல்லவர்கள்; ஆனால் செயற்பாட்டுக்கு வரத் தயங்குபவர்கள். வெவ்வேறு மாற்றுப்பார்வைகள் இருந்தாலும், சில புள்ளிகளில் உடன்பட்டு ஒன்றாய் ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதற்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம்.


ஒரு கட்டத்தில் இதுதான் என்னால் சாத்தியமாகும் என்று பலரிடம்/குழுக்களிடம் இருந்து விலகி வந்தாயிற்று. ஆகக்குறைந்தது சிலரைப் போல ஆக்கபூர்வமான அமைப்புக்களை தனிப்பட்ட நலன்களுக்காக உடைக்கவில்லை/ பிரிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு ஏதுமின்றிய அமைதியாவது என்னளவில் இருக்கின்றது. இன்றையகாலத்தில் ஒரளவு நமக்கு உடன்பாடான அமைப்புக்களோடு, அமைப்புக்கு வெளியே இருந்து ஏதாவது செய்வது என்பது எனக்குப் போதுமாக இருக்கின்றது.


25 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இயல்விருதுக்கு மாற்றாக ஒன்றை நாம் இத்தனை வருடங்களில் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது எங்களால் அப்படிச் செய்யமுடியவில்லை என்கின்ற சுயவிமர்சனத்தைச் செய்து நாம் நம் பலவீனத்தையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.


ஆக இப்போது இயல் விருதை,  அவர்கள் 'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்கின்ற அளவில் எனக்குப் பிடித்த படைப்பாளிகள் புல்லாய் இருந்தாலும் அவர்களுக்கும் விருது கிடைக்கின்றதே என்று அகமகிழ்வதுடன் நின்றுவிடுவதுண்டு. ஒருகாலத்தில் அழைப்பிதழ் வராது எனக்குப் பிடித்த எஸ்.பொ, அம்பை போன்றவர்களின் விழாவுக்கு  எது நடந்தாலும் பார்ப்போம் என 'கலகக்காரனாக' இயல் விருதுக்குள் நுழைந்திருக்கின்றேன். இப்போது வயதாகிவிட்டது என்று அறிந்தோ என்னவோ அவ்வப்போது அழைப்பிதழ் மின்னஞ்சலில் வரும்/ சிலவேளைகளில் வராது. நான் நெருக்கமாக உணரும் படைப்பாளிகளுக்கு இயல் விருது அண்மைக்காலமாக கிடைக்காததால், அழைப்பிதழ் வருதோ இல்லையோ இப்போது இயல்விருது நான் போக விரும்பாத 'திருமண விழாக்கள்' போல ஆகி ஆண்டுகள் பலவாயிற்று.


டைசியாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் எனக்குப் பிடித்த இமையத்துக்கு இயல்விருது (2018?) கிடைத்தபோது போனதாக ஞாபகம். ஆனால் விருது நிகழ்வல்ல, இமையத்தோடு அவர் தங்கியிருந்த ஹொட்டலில் நாங்கள் ஓரிரு நண்பர்கள் அவரோடு உரையாடியதுதான் எனக்கு இன்னும் நினைவில் நிற்கின்றது. அவ்வாறே அதற்கு முன் சுகுமாரனுக்கு விருது கிடைத்தபோதும், அந்தக் காலப்பகுதியில் என் நூல் வெளியீடு ஒன்றும் நடந்ததால், சுகுமாரன் அங்கு வந்து பேசியதும், அவர் தங்கி நின்ற ஹொட்டலில் நாங்கள் சில பேர்  அவரோடு உரையாடியதும் நினைவில் மறக்காமல் இருக்கின்றது.


நேற்று 'காலம்' செல்வம், இம்முறை விருது பெற்றவர்களுடன்  ஓர் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். விருது பெற்ற ஐந்து பேர்களையும் ஓரிடத்தில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் ஒவ்வொரிடமிருந்தும் படைப்பினூடாக பெற்றுக்கொள்ளவும்,  விமர்சிக்கவும் நிறைய இருக்கின்றது.


முக்கியமாக கடந்த வருடம் யுவனைச் (சந்திரசேகர்) சந்தித்தபோதும், அவர் தனிப்பட்ட உரையாடலுக்கு சுவாரசியமான ஒருவராகத் தெரிந்தார். கடந்தமுறை 'என் படைப்புக்களை எத்தனை பேர் வாசித்திருப்பீர்களோ தெரியாது, ஆகவே நான் எதைப் பேசுவது' என்று தனது உரையைச் சுருக்கமாக முடித்து, உரையாடலுக்கு அன்று வந்திருந்த அனைவரையும் அழைத்திருந்தார். அப்போது யுவன் 'விஷ்ணுபுரம்' விருதைப் பெற்றிருந்து, அவரைப் பற்றிய ஆவணப்படமும் வெளிவந்திருந்தது. நான் யுவனிடம், 'நீங்கள் உங்கள் ஒரு நாவல் கணனியில் இருந்து அழிந்துவிட்டது என்றதும் பதற்றமடைந்ததும், அழவும் செய்தது என்னை மிகவும் பாதித்தது' என்று சொன்னதாகவும் நினைவு.

 

அதேபோன்று யுவனின் கதைகளை 'மாற்றுமெய்மை' என்று பெயரில் விதந்தோத்தும் விஷ்ணுபுரவாசிகளின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் எழுதியிருக்கின்றேன் (அவரிடம் அதைச் சொன்னேனா என்று ஞாபகத்தில் இல்லை). அவரின் சில நாவல்கள் அதன் இயல்பிலே கவனத்துக்குரியவையேயன்றி, இந்த 'மாற்றுமெய்மை'யினால் அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட வாசிப்பு. யுவனின் இயல்பின்படி இதை நேரடியாகச் சொன்னால் கூட, ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, 'அப்படியா' என நிதானமாகக் கேட்டுக்கொள்ளவாவது செய்வார் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.


வ்வாறான யுவன், சுகிர்தராஜா உள்ளிட்டோர் இருந்த அரங்கில் எந்தவகையான பொது உரையாடலும் நிகழாமல் அவர்கள் அங்கே தனித்துவிடப்பட்டதுதான் எவ்வளவு கவலையானது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஜயகரன் கூறியதுமாதிரி, இப்படி முக்கியமான படைப்பாளிகள் அனைவரிடம் ஓரிடத்தில் இருப்பது ஓர் அரிய சந்தர்ப்பம், ஆனால் அவர்களிடம் இருந்து பெறுவதற்குரிய சபை அமையவில்லை' என்பதை ஒருவகையில் இதுதான் கனடிய இலக்கிய உலகின் யதார்த்தம் என்பதாகவும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் வாசிப்பவர்களே அரிதாகிவிட்டார்கள் என்பது மட்டுமில்லை, அறிவுபூர்வமாக உரையாடுபவர்களும் குறைந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.


ஒரு நல்ல புத்தகத்தையோ, திரைப்படத்தையோ, கலையின் இன்னபிற நல்லவிடயங்களை ஆழமாகப் பேசவோ விவாதிக்கவோ நம்மில் பலர் தயாரில்லை. அதுவேதான் இவ்வாறு எழுத்தாளர்கள் இருக்கும் அரங்குகள் வீணாகிப் போய்வருவதற்கும் காரணமாகிவிட்டது.


இம்முறை எனது தமிழாசிரியரான இரவி அருணாச்சலத்துக்கும் விருது கிடைத்திருந்தது. அவருக்கு மாணவனான நான் இந்த விருது கிடைத்தற்கு வாழ்த்துக்கூறி ஒரு பதிவும் செய்யவில்லை என்று மனவருத்தம் இருந்ததாக (நண்பரொருவர் மூலம்) அறிந்துகொண்டேன். அவருக்கு என்றில்லை இயல்விருது கிடைத்ததற்காக எவருக்கும் நான் வாழ்த்துப் பதிவுகளை இதுவரைகாலமும் தனித்துப் போட்டதில்லை. ஆனால் எப்போதும் போல அவருக்கும் விருது கிடைத்தபோது அது பகிரப்பட்டவர்களின் முகநூலுக்குச் சென்று மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தேன் (என் வகுப்புத் தோழியின் பதிவுட்பட).


மேலும் ஒரு வாசிப்பாளானாக அண்மைக்காலமாக இரவியின் நாவல்கள் ஓரிடத்துக்குள் தேங்கிவிட்டதாக எனக்கு எண்ணமிருக்கின்றது. அவரது 'பம்பாய் சைக்கிள்' இன்னும் வாசிக்கவில்லை. எனவே அது குறித்துக் கருத்துச் சொல்லமுடியாது. அவரின் 'காலமாகி வந்த கதை', 'பாலைகள் நூறு' அவருடைய சிறந்த படைப்புக்கள். ஆகவே 'பம்பாய் சைக்கிள்' எப்படியென்றாலும், அவரின் இத்தனை கால எழுத்துக்காகவும் அவர் விருதுக்குத் தகுதியானவர் மட்டுமின்றி, காலம் பிந்தி விருது கொடுக்கப்பட்டவர் என்று கூடச் சொல்லலாம்.  அதேசமயம் அவரின் தளும்பும் அரசியலுக்கும், அந்த அரசியலை முன்வைத்து இலக்கியத்தில் அவர் செய்யும் இருட்டடிப்புகளுக்கும் நான் வேறுதிசையில் இருப்பவன் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிவிடுகின்றேன்.


நேற்றைய நிகழ்வில் யுவன் மொழியாக்கம் செய்து அண்மையில் வந்த கதையைப் பற்றி ஜயகரன் கேள்வியொன்றைக் கேட்டபோது, யுவன் அதைப் பற்றிப் பேசிவிட்டு இந்தக் கதையை எவரும் வாசித்திருக்கமாட்டார்கள் என்று அரங்கைப் பார்த்துச் சொன்னபோது, நானும் வாசித்தேன் எனச் சொன்னேன். 'இளங்கோ என்னை உளவாளி மாதிரி பின் தொடர்கின்றார்' என நகைச்சுவையாகச் சொன்ன யுவனிடம் கூட ஆறுதலாகப் பேச முடியவில்லை என்பது துயர்.


அதுபோலவே ரவி சுப்பிரமணியனைப் பார்த்து நான் இளங்கோ என்று அறிமுகம் செய்தபோது, எனக்கு உங்களை நன்கு தெரியுமே, 'அம்ருதா'வில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேனே' என்று சொன்னார். அவர் முகநூலில் இல்லை என்பதால் எனது தொலைபேசி எண்ணை வாங்கிச் சேகரம் செய்தபோது, நீங்கள் 'சக்தித் திருமகனில்' நன்றாக நடித்திருக்கின்றீர்கள் என்று பாராட்டிவிட்டு வீட்டை வந்து பார்த்தால், ரவி சுப்பிரமணியன் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதால் பலரால் வறுத்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார். புரட்டாசிச் சனி நமக்கு மட்டுமில்லை நம்மைச் சந்திக்கின்றவர்களுக்கும் தொடங்கிவிட்டதுக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.


எப்போதும் நிகழ்வுக்கு நேரம் பிந்திப் போகின்றவன் இம்முறை பொஸ்டனில் இருந்து வந்திருந்த 'பாஸ்டன்' பாலாஜி எனது நூல்கள் வேண்டுமென்று கேட்டதாலும் ஒரு மணித்தியாலத்துக்குள் விமானநிலையத்துக்குச் செல்லவேண்டும் என்று அவர் சொன்னதாலும் நான் நேரத்துக்குப் போயிருந்தேன். பாலாஜியைச் சந்தித்துவிட்டு, நேற்றைய நிகழ்வின் அரைவாசி நேரம் வெளியே இருந்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அதுபோல நிகழ்வு முடிந்து கார் தரிப்பிடத்தில் வேறு மூன்று நண்பர்கள் 30-40 நிமிடங்களாவது பேசிக் கொண்டிருந்திருப்போம்.


அந்த 30 நிமிடங்களில்  நாம் பகிர்ந்து கொண்டதும், சிநேகிதபூர்வமாக இலக்கியச் சர்ச்சைகளை விவாதித்ததும் (முக்கியமாக ரமேஷ் பிரேதனின் மரணத்துக்குப் பிறகு நடைபெறுபவை), அரங்குக்குள் நடந்தவற்றை விட பெறுமதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இனி இலக்கியம் என்பது கனடாவில் கார்த்தரிப்பிடங்களில்/ கோப்பிக் கடைகளில் நான்கைந்து பேரோடு பகிர்ந்து கொள்வதாக மட்டுமே மாறிவிடும் போலத்தான் தோன்றுகின்றது.


****


செம்மணி

Saturday, November 01, 2025

  செம்மணிப் புதைகுழிகளில் உறங்க மறுக்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

 

ண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. 


நான் நேத்ராவின் நனடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த  கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு  96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி  தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி,  அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. 


கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார்.


இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர்.


இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். 


இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம்.
இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.


எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது.


பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது.

ற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன.


அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும்,  குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது  இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். 

 

அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர்.


கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது.


இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு  பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும்  விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார்.


இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது  இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார்.


இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார்.

கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம்.


இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.


கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள்  கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். 


அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார்.


அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும்.


அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு.


இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது.  இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை  சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். 


***

('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும்.  இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது)


-நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005-



கார்காலக் குறிப்புகள் - 115

Wednesday, October 29, 2025


கலைகளுக்குப் பங்களிப்பவர்கள்


பசுமை விகடன் போன்றவற்றில் இயற்கை விவசாயம் செய்பவர்களை மிகைப்படுத்தி எழுதுவார்கள். அதுவும் ஐடி போன்ற தொழில்நுட்பத் துறைசார்ந்தவர்கள் இயற்கை விவசாயத்துக்குப் போகும்போது இன்னும் அதிகம் மிதந்தேத்துவார்கள்.. ஒரு இலட்சம், இரண்டு லட்சம்  சம்பளத்தைக் கைவிட்டு விவசாயத்துக்கு வந்தவர்கள் இவர்கள் என்று எழுதி வாசிக்கும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார்கள்.

 

அவ்வாறான ஓர் 'அதிர்ச்சி'யை ஏற்படுத்தும் காலம் இலக்கியத்திலும் இப்போது வந்துவிட்டதோ என்று சஞ்சலம் எழுகின்றது. எழுத்து/இலக்கியம் என்பவற்றுக்காக பலர் தமது துறைசார்ந்த வேலையை விட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்காக எவரும் நாம் இலக்கியத்துக்காக இவற்றையெல்லாம் இழந்து 'தியாகி'களாக வந்திருக்கின்றோம் என்று பிரகடனப்படுத்தியதில்லை. அது ஊர் ஊராய் அலைந்து சஞ்சிகை விற்ற சி.சு.செல்லப்பாவா இருந்தாலென்ன,  ஒருவகை விட்டேந்தி வாழ்க்கை வாழ்ந்த க.நா.சுப்ரமணியனாலென்ன, அப்படி எவரும் தமக்கு ஓர் இலக்கிய தியாகிப்பட்டம் தரவேண்டும் என்று வாசகரிகளிடம் கோரியதில்லை.

 

அசோகமித்திரன் கூட, ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து வேலையைத் துறந்தபின், ஒரு முறையான ஊதியம் கிடைக்கும் தொழிலில் போய் அமர்ந்தவரில்லை. அவர் நினைத்திருந்தால் அவருக்குரிய அனுபவம்/திரைப்படத் துறை சார்ந்த நெருக்கத்தின் நிமித்தம் ஆகக்குறைந்தது ஒழுங்காய் மாதம் மாதம் சம்பளம் கிடைக்கும் வேலையில் போய் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் பிரமிள் போன்று தனித்து வாழும் வாழ்க்கையை இலக்கியத்தின் பொருட்டுத் தேர்ந்தெடுத்துவருமில்லை. அசோகமித்திரனுக்கு மனைவி, பிள்ளைகள் என்று பார்த்துக்கொள்ளவேண்டிய குடும்பச்சுமை இருந்தது.

 

ஆக மேற்குறிப்பிட்ட இவர்கள் உள்ளிட்ட இன்னும் பலரும்,  எழுத்தை ஏன் தமது வாழ்நாளின் ஆதாரசுருதியாகக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு இலக்கியம் அவ்வளவு பிடித்திருந்தது. வேறு துறைசார்ந்து அவர்களுக்கு புலமைத்துவம் இருந்தும் அவர்களை எழுத்து  ஆழமான வேர்களால் பின்னிப்பிணைத்திருந்தது. அவ்வாறு எழுத்து அவர்களுக்கு 'அருளப்பட்டபோது' அவர்கள் ஏனைய லெளதீகப் பிரச்சினைகளோடும் மரியாதையுடன்  இலக்கியத்தை வாரி அணைத்துக் கொண்டார்கள்.

 

அதிலும் பிரமிள் இவர்கள் அனைவரையும் விட இன்னும் அதி தீவிர நிலைக்குச் சென்றவர். அசோகமித்திரன், க.நா.சு போன்றவர்களுக்கு பூர்வீகச் சொத்து கொஞ்சமாவது இருந்திருக்கும் (ஆகக்குறைந்தது வாழ்வதற்கு ஓர் வீடாவது). பிரமிளுக்கு அதுவும் இல்லை. இலங்கையில் திருகோணமலையில் தனது தாயின் வீட்டை விற்றுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து, எந்தத் தொழிலும் செய்யாது எழுத்தை மட்டும் நம்பி வாழ்ந்த பிரமிளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லை இலக்கியத்தின் முன் எந்தச் சமரசமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள்/உதவியவர்கள் என்று எல்லோரையும் விமர்சனங்களால் அடித்து நொறுக்கியவர் .

 

அதன் நிமித்தம் வசதி குறைந்த இடத்தில், ஒழுங்கான உணவில்லாது கூட வாழ்ந்தவர் பிரமிள். ஆனாலும் ஒருபோதும் நான் இப்படியிருந்து எழுதுகின்றேன், ஆகவே தமிழன்னை என்னை ஓர் தியாகியாக நினைக்க வேண்டும் என்று தமிழின் முன்னோ அவரின் வாசகர்கள் முன்னோ இறைஞ்சியவரில்லை. ஒருவகையில் அதுவே இன்றும் பிரமிளை கம்பீரமான எழுத்தாளராகத் துலங்க வைக்கின்றது.

 

இவ்வாறானவர்கள்தான் நமக்கு எழுத்தில் முன்னோடியாக இருக்கின்றார்கள்.  இலங்கையில் கூட மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. அண்மையில் மு.தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் காலமானபோது, அவருக்காக எழுதப்பட்ட ஒரு குறிப்பில், மு.பொன்னம்பலம் கூட பெரும்பாலும் நண்பர்களின் உதவியுடந்தான் நெடுங்காலம் தனது வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்தபோது வியப்பாக இருந்தது. ஏனெனில் அவரின் கடைசி மகனும், நானும் கொழும்பில் ஓர் பாடசாலையில் ஒன்றாகக் கொஞ்சக் காலம் கல்விகற்றிருக்கின்றோம்.

 

இன்று பல ஆளுமைகளின் பிள்ளைகள் தமது தந்தையர் மீது விமர்சனம் வைக்கும்போது (காந்தியின் மகனில் இருந்து அண்மைக்கால பேராசிரியர் வசந்திதேவியின் மகன்வரை), அசோகமித்திரனின் பிள்ளைகளோ அல்லது மு.பொன்னம்பலத்தின் பிள்ளைகளோ பொதுவெளியில் வந்து தம் பெற்றோரை திட்டவில்லை. ஒருவகையில் இப்படி எழுத்தின் விருப்பம் சார்ந்து முழுநேர எழுத்தாளர்களாக இருந்தபோதும், இவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

 

இப்படியெல்லாம் நமக்கு நிறைய எழுத்தாளர்கள் உதாரணங்களாக வாழ்ந்து காட்டிப் போனபோது சில எழுத்தாளர்கள் இந்த 'பசுமை விகடன் ஐடி இயற்கை விவசாயிகள்' போல தேவையில்லாது எழுத்தாளர்கள்/எழுத்தை glorify செய்வதைப் பார்க்கச் சலிப்பாக இருக்கின்றது. இத்தனைக்கும் ஓர் எழுத்தாளர் மாதமொருமுறை தனது (வளர்ப்பு) மகனைத் திட்டி எழுதுகின்றார். இன்னொரு எழுத்தாளரோ, என் மகன் உழைக்கவே தேவையில்லை, அவனுக்காக வாழ்நாளுக்கான பணத்தை நான் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றேன்' என்று அறைகூவல் விடுகின்றார். இவர்களைப் போன்றவர்கள்தான் எழுத்தை அதியற்புதமாகவும், எழுதிக்கொண்டிருப்பவர்கள் உன்னதமானவர்கள் போலவும் நம்மை நம்ப வைக்கக் கஷ்டப்படுகின்றார்கள்.

 

மேலும் நாகார்ஜூனன், தமிழவன், எம்.டி.எம் போன்றவர்கள் தமது எழுத்தின் 'பேரெழுச்சி'களால் காணாமற் போய் இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று இன்னொருபக்கம் சிணுங்கவும் செய்கின்றார்கள். இவர்கள் தொடர்ந்து எழுதி இவர்களின் வளர்ச்சி இந்த 30 வருடங்களில் விஸ்வரூபம் எடுத்துவிட்டதென்றால், ஏன் மீளத் திரும்பும் உதிரிகளைக் கண்டு இவர்கள் அச்சமுற வேண்டும்?

 

ப்படியெனில் 60களின் பிற்பகுதியில்  'அக்கா' என்கின்ற ஒரு சிறுகதைத் தொகுப்போடு உறங்குநிலைக்குப் போய், பின்னர் ஓய்வூதியம் எடுத்துகொண்டு 30 ஆண்டுகளின் பின் எழுத வந்த அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை இவர்கள் எப்படி மதிப்பார்கள். அ.முத்துலிங்கத்தோடு முரண்பட என்னைப் போன்றவர்களுக்கு ஒரு நூறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் மீள வந்தபோது அருமையாகத்தானே எழுதத் தொடங்கினார். முப்பது வருடங்களாக ஒருவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதோ, அல்லது முப்பது வருட உறங்குநிலைக்குப் பிறகு ஒருவர் வந்து எழுதுவதையோ குறித்து ஒரு வாசகர் அக்கறைப்படப்போவதில்லை. என்ன ஒருவர்  எழுதுகிறார்/எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதே வாசகர்க்கு மட்டுமில்லை, தமிழின் எதிர்காலத்துக்கும் முக்கியமானது.

 

மேலும் இன்று தமிழில் தாமேதான் மூன்று முக்கியமானவர்கள் என்று தங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. இந்த மூன்று பேரும், தமிழில் புதுத்திணையாக வந்த இணையத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் ஆவார். அதனால்தான் இவர்களின் எழுத்து இந்தளவுக்கு பரவலாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றதே தவிர, இவர்களுக்கு நிகராக எழுதும் பலர் -இலைமறை காயாக- சமகாலத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம். கடந்த பத்து/இருபது ஆண்டுகளில் இவர்கள் தமிழ்ச்சூழலில் என்னவிதமான புதுப்பாய்ச்சல்களை நிகழ்த்திக்காட்டினார்கள் என்று நாம் அவதானித்தாலே நமக்கு இவர்களின் எழுத்தின் பலவீனமான பக்கங்களும் விளங்கும்.

 

இதற்குள் நாகார்ஜூனன், தமிழவனைப் போன்றவர்களை நிராகரிக்கும் இவர்களுக்கு இருக்கும் 'துணிச்சல்' என்னவென்பதையும் நாம் அறிவோம். இவர்கள் எவரும் அருகில் ஈழப்போர் உக்கிரமாக நடக்கும்போது நாகார்ஜூனன் தமிழவன் போல இவர்கள் உரத்தகுரலில் எழுதியவர்களோ/பேசியவர்களோ இல்லை. அதிலும் ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் போனபோது இந்த யுத்தம் குறித்து உங்களுக்குக் கருத்துச் சொல்ல எதுவுமில்லையா? என்று வினாவ, 'நான் அரசூழியன் எந்தக் கருத்தையும் சொன்னாலும் என் பணிக்கு ஆபத்து' என்று தனது 'வீரத்தை'க் காட்டியவர். இன்னொருவரோ இலத்தீன் அமெரிக்கப்போராட்டங்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுவார். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து மெளனத்தைக் காப்பார். ஆனால் ஈழத்தில் போர் முடிந்து மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும்போது, இலங்கையில் நாய்களால் பிரச்சினையென உலகின் அதிமுக்கிய பிரச்சினையை எழுதி தன் இருப்பை 'அறிவுஜீவி'த்தனமாகத் தன்னை நிரூபிப்பார். முப்பது ஆண்டுகளாக யுத்தம் தின்ற மண்ணில் இவர்களுக்கு நாய்களைத் தவிர பேசுவதற்கு வேறு விடயங்களே இல்லை என்றளவுக்கு அந்தளவுக்கு 'மனிதாபிமானி'கள்.

 

நாகார்ஜூனன், எம்டிஎம் போன்றவர்களின் மீள்வரவால் இப்படிப் பதற்றப்படும்போது, நாகார்ஜூனன் தான் எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டு (மறைத்துவிட்டு) மீளவும் உறங்குநிலைக்குப் போனவர் என்பதை ஏன் இவர்கள் சொல்வதில்லை. ஆகக்குறைந்தது நாகார்ஜூனன் ஒருபோதும் தன் எழுத்தையோ/பெயரையோ வாசகருக்கும் விற்கும் எந்த எத்தனமும் செய்ய விரும்பவில்லை என்பதைத்தானே, அவர் இணையத்தளத்தில் எழுதிய எல்லாவற்றையும் மறைத்துவிட்டுச் செல்வதன் மூலம் கூறாமல் நமக்குக் கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் என்னைப் போன்றவர்கள் நாகார்ஜூனன், தமிழவன் போன்றவர்களிடம் இருந்து கோட்பாடு/தத்துவம்/பிறமொழிப் படைப்புகள் குறித்து எத்தனையோ நிறையக் கற்றிருக்கின்றோம்.மேலும் இன்றைக்கு தமிழில் விமர்சனம் என்பது செத்துவிட்டது போன்ற தோற்றத்தைத் தரும்போது நமக்கு நாகார்ஜூனன், தமிழவன், எஸ்வி.ராஜதுரை, ராஜ் கெளதமன், அ.மார்க்ஸ், எம்.டி.எம், ரமேஷ்-பிரேம் உள்ளிட்டவர்களின் எழுத்துக்களும் இன்றில்லாவிட்டால், எங்கிருந்து திறனாய்வின் அடிப்படைகளையோ/அல்புனைவு எழுத்துவகைமையை தமிழில் அறிந்து கொண்டிருக்கமுடியும். மேற்குறிப்பிட்டவர்கள் மீது நமக்கு விமர்சனங்களும் ஏற்பும் என எல்லா விடயங்களும் இருக்கின்றது. அதையும் எழுத்தின் ஒரு சாராம்சமாக எடுத்துக்கொண்டு முரண்பாடுகளோடு உவத்தல்/காய்த்தலின்றி உரையாடலாம் என்றுதானே இவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள்.

 

சில வருடங்களுக்கு முன் அ.மார்க்ஸ் இலங்கை வந்தபோது, நிகழ்வுக்கு வந்த  இந்த நாய்ச்சிக்கல்காரர் அ.மார்க்ஸை தூற்றோ தூற்றென வன்மத்துடன் கரித்து எழுதிக் கொண்டிருந்தார். நான் அ.மார்க்ஸை நேரடியாகச் சந்தித்தபோது உங்களுக்கும் இந்த நாய்ச்சிக்கல்காரருக்கும் அப்படி என்னதான்  பிரச்சினையென நேராகவே கேட்டேன். அ.மார்க்ஸ் சிரித்தபடி நீங்கள் இதை அவரிடந்தான் கேட்கவேண்டும் என்று அந்த விடயத்தை நாசூக்காய் முடித்துவிட்டார். இதைத்தானே இலக்கியம் கற்றுத்தரவேண்டும்?

 

வர்களைப் போல பாவனை காட்டாது, தமிழில் எழுத்தும் வாழ்க்கையும் வேறு வேறு இல்லையென அசலாக வாழ்ந்தவர்கள் நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். தமிழில் தலித்திய முன்னோடி எனச் சொல்லப்படுகின்ற கே.டானியலுக்கு எழுத்தைப் போல, போராட்டமும் முக்கியமானதே. அதற்காக அவர் களங்களில் நின்றிருக்கின்றார், அதிகாரத்திடம் அடிவாங்கியிருக்கின்றார், சிறை  சென்றிருக்கின்றார்.

 

இன்னொருவர் மு.தளையசிங்கம். மெய்யுள், பிரபஞ்ச யதார்த்தம் என்று புதிய தடங்களில் சிந்தித்ததோடு மட்டுமின்றி, சர்வோதயம் என்று காந்தியச் சிந்தனைகளின் நீட்சியில் இயக்கம் தொடங்கி சமூகக் களங்களில் போராடியவர். இன்றைக்கு அவர் எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டி நம்முன்னே மறுவாசிப்புக்காய்க் காத்திருக்கின்றது. இத்தனைக்கும் தம் ஊர் கிணற்றில், தலித்துக்களை தண்ணீர் அள்ள அனுமதியளிக்கவில்லை என்பதற்காக சாதிவெறியர்களோடு போராடி சிறைக்குச் சென்று அங்கு பொலிஸ்காரர்களால் மோசமாகத் தாக்கப்பட்டவர். மிக இளவயதில் (38) இறந்த தளையசிங்கத்தின் இறப்பில் அவர் மீது பொலிஸ் நடத்திய தாக்குதலும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது.

 

ஆக இப்படி எழுத்தும் வாழ்வும் வெவ்வேறானதல்ல என்று நமக்கு முன்னோடியாகப் பலர் வாழ்ந்து காட்டிவிட்டுப் போனதன்பிறகும், தமிழ்ச் சமூகத்தில் எழுத்துப் போராளிகளாகவும், இலக்கியத்துக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டோம் என்றும் நம் சமகாலத்தில் சில எழுத்தாளர்கள் எழுதும்போது நமக்கு சிரிப்பு வருவது ஒருபுறமிருக்கட்டும், அவர்களுக்கு இப்படியெல்லாம் எழுதுகின்றோமே எனக் கொஞ்சமாவது வெட்கம் வராதா என்ன?

 

*******

(நன்றி: ஓவியம்- பிருந்தாஜினி)

கார்காலக் குறிப்புகள் - 114

Saturday, October 25, 2025

 

 1.

நண்பர் என் புத்தக சேகரத்திலிருந்து எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'மைத்ரேயி மற்றும் பிற கதைகள்' தொகுப்பை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். சில கதைகளை வாசித்தபின், 'என்ன, உனது ஆள் நன்றாக எழுதுகின்றார்' என்று சொன்னார். அதன்பிறகு இருவரும் நேரடியான யதார்த்தவாதக் கதைகள் நமக்கு எவ்வளவு அலுப்பூட்டுகின்றது என்பது பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். அதை விட்டு விலகி எம்டிஎம் எழுதியதால்தான் நம்மிருவரையும் இத்தொகுப்பு வசீகரித்திருந்தது.

'மைத்ரேயி' தொகுப்பு எம்டிஎம் 30 வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளிலிருந்து சமகாலத்தில் எழுதியவற்றின் ஒரு தொகுப்பு. இது எனக்குப் பிடித்த தொகுப்பாயினும், என் கண்களுக்கு எப்போதும் எட்டக்கூடிய மிகச்சிறந்த நூல்களில் ஒன்றென வைத்திருக்கும் எம்டிஎம்மின் 'நிலவெளி என்னும் ரகசிய துணை'யைச் சொல்வதுண்டு. அது ஓர் அற்புதமான அல்புனைவுத் தொகுப்பு.



எம்டிஎம் தமிழாக்கிய 'ரோஜாவின் பெயரை' நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் எம்டிஎம்மின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றவகையில் அவர் தனது அதியுச்ச உழைப்பை உம்பர்த்தோ எக்கோவின் நூலுக்குக் கொடுத்திருப்பார் என்றே நம்புகின்றேன். படைப்பாளியாகவும், விமர்சகராகவும் இருக்கும் எம்டிஎம்மைப் போன்ற ஒருவர் அவ்வளவு எளிதில் ஒரு நூலைக் கீழிறக்கும் வேலையை செய்யப் போவதுமில்லை.


எம்டிஎம் ஓர் உறங்குநிலையிலிருந்து மீண்டும் வருகை தந்தபின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாய் தமிழ்ச்சூழலில் உற்சாகமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றார். ஏதோ இப்போது சர்ச்சையில் சிக்கிய 'ரோஜாவின் பெயர்' மொழிபெயர்ப்பு நூலோடுதான் தமிழில் மீள்வருகையை  எம்டிஎம் நிகழ்த்தியதாக எழுதப்படும் பதிவுகள் அலுப்பூட்டக்கூடியவை. இன்னொருவகையில் இவ்வாறு எழுதுபவர்கள் எவ்வாறு சமகாலச்சூழலின் வாசிப்பிலிருந்து பின் தங்கி நிற்கின்றார்கள் என்பதை அறிவதற்கு நமக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது என்பதாக நாம் ஆறுதற்பட்டுக் கொள்ளலாம்.

2.

நான் எப்போது உம்பர்த்தோ எக்கோவை முதன்முதலில் அறிந்துகொண்டேன் என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் நண்பர் ஒருவரோடு பழகத் தொடங்கியபோதுதான் எக்கோ எங்களின் உரையாடல்களுக்குள் வந்தார். நண்பர், ரமேஷ்-பிரேமின் 'கதையும் கட்டுக்கதையும்'' நூலின் மூலமாகவே எக்கோவை அறிந்துகொண்டார். அத்தோடு நம்புவதற்குச் சற்றுக் கடினம் என்றாலும் அவரது பதின்மம் முடிவதற்குள்ளேயே எக்கோவின் 'The Name of the Rose', 'Baudolino' போன்ற நூல்களை வாசித்து முடித்திருந்தார். பிறகு நானும் அவருமாகச் சேர்ந்து 'Foucault's Pendulum', 'The Mysterious Flame of Queen Loana', 'The Prague Cemetery' போன்றவற்றை வாங்கி வாசித்திருக்கின்றோம். ஒருவர் ஒரு நாவலை வாசித்துவிட்டால், அவரிடமிருந்து அது குறித்து கற்கலாம்/அறியலாம் என்பதால் நான் அநேகமாக அவர் வாசிக்கத் தொடங்காத எக்கோவின் நாவல்களை வாசிப்பேன்.

பின்னர் எல்லா உறவுகளையும் போல எமது உறவு தேய்ந்து இல்லாதபோனபோதும் நான் தனித்து எக்கோவின் நூல்களை வாங்கி வாசித்திருக்கின்றேன். அதன் நீட்சியில்தான் எக்கோவின் இறுதி நாவலான ' Numero Zero' வாசித்ததோடல்லாது ஒரு விரிவான வாசிப்பையும் அன்றைய பொழுதில் (2015?) எழுதியிருந்தேன்.

இவ்வாறாக எக்கோ புனைவுகளால் தமிழ்ச்சூழலில் பிரபல்யமாக இருந்தாலும், எக்கோ எழுதிய அல்புனைவுகள்தான் அவரின் புனைவுகளை விட மிக அதிகம்.  எக்கோ எழுதிய நாவல்கள் ஏழுதான்; ஆனால் அவரின் அல்புனைவு நூல்கள் எப்படியும் 20களைத் தாண்டும் என நினைக்கின்றேன். அப்படி வாசித்தவற்றில் சில 'How to Travel with a Salmon & Other Essays', ' On Ugliness', 'On Literature'. வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தைக் கடந்துகொண்டிருக்கையில் ஒருபொழுது தனித்துப் பயணித்தபோது கையில் கொண்டு சென்றது எக்கோவின் 'Confessions of a Young Novelist'. அதுபோலவே இப்போது தமிழில் எக்கோவை முன்னிட்டு சர்ச்சைகள் போகும்போது அதில் நுழையாமல் மனதைத் திரும்ப 'Six Walks in the Fictional Woods ' என்ற எக்கோ ஒரு பல்கலைக்கழகத்தில் கொடுத்த உரைகளின் தொடரை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்நூல் நிச்சயம் தமிழாக்க வேண்டியது. அந்தளவுக்கு புனைவுகளின் வகைமைகளை மட்டுமில்லை எப்படி வாசகர்கள் ஒரு நூலை வாசிக்கின்றனர்,  எழுத்தின்/வாசிப்பின் போதாமை என்று பல்வேறு கோணங்களை ஆராயும் எக்கோ, ஒருவகையில் எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான இடைவெளியை எப்படி குறைப்பது என்பது பற்றியும் நமக்குச் சொல்லித் தருகின்றார்.

அதில் ஓரிடத்தில் தாமஸ் மான், காஃப்காவின் 'Metamorphosis' ஐ, அல்பேர்ட் ஜன்ஸ்டீனிடம் வாசிக்கக் கொடுக்கும்போது, ஐன்ஸ்டீன் 'இந்த நூலின் சொல்லுமளவுக்கு மனிதமூளை அவ்வளவு சிக்கலானது' என்று சொல்லி நூலை திரும்பிக் கொடுத்துவிடுவார் என்பதைப் பற்றி எக்கோ குறிப்பிடுகின்றார். ஆக உலகில் அதிசிறந்த IQ கொண்ட அறிவுகொண்டவர்களால் கூட ஒரு படைப்பாளியின் உலகினுள்(மூளைக்குள்) சிலவேளைகளில் நுழையக் கடினமாக இருக்கலாம் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். அதுபோலவே எக்கோவினது நூலோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்போ கூட எல்லோர்க்கும் உரியதல்ல என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள ஏன் தயங்குகின்றோம் என்பதுதான் புரியவில்லை.

ஏன், மேலே நான் வாசித்ததாக குறிப்பிட்ட நூல்களை முழுமையாகவோ அல்லது எக்கோ கூற விரும்பிய அர்த்தங்களில் சரியாக விளங்கிக் கொண்டேன் என்றோ நான் சொல்லப் போவதில்லை. ஆனால் எக்கோவின் எந்த நூலை வாசித்தாலும் நான் அறிந்துகொள்ள புதுவிடயங்களும், நான் இதுவரை யோசிக்காத வழிகளில் அவர் ஒரு திறப்பைச் செய்கின்றவராகவும் இருப்பதால் எக்கோவை நான் தொடர்ந்து வாசிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றேன்.

உதாரணத்துக்கு எக்கோவின் 'On Ugliness' வாசிக்கும்போது, இந்த 'அசிங்கம்' என்பவை எப்படி எங்களுக்குள் மத்தியகால ஐரோப்பிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது என்பது பற்றிய ஆரம்பப்புள்ளிகளையாவது சிந்திக்கத் தொடங்குவோம். அதுபோலவே எக்கோவின் 'The Mysterious Flame of Queen Loana' என்னை வசீகரிக்கும் அவரது ஒரு நாவல். அதில் ஒரு புத்தகக்கடைக்காரர் சட்டென்று அவரின் நினைவை முழுதாக இழந்துவிட்டு, பின்னர் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவார். அந்த மீள் நினைவை எக்கோ அந்த நபரின் சிறுவயது காட்டூன் புத்தகங்கள் இன்னபிற சிறுவர் நூல்களினூடாகக் கட்டியெழுப்புவார். அதில் நகைச்சுவைக்கும் குறையிருக்காது. அவரின் புத்தகக் கடையில் ஒரு இளம்பெண் உதவியாளராக இருப்பார். திருமணமாகிய இந்தப் புத்தகக்கடைக்காரருக்கு நினைவுகள் இழந்து மீண்டதில், இந்தப் பெண்ணோடு உடல்சார்ந்த உறவு இருந்ததா இல்லையா என்றெல்லாம் அவருக்கு வரும் குழப்பங்களும், நடத்தைகளும் சிரிப்பை வரவழைப்பவை.

3.

என் (கடந்தகால) நண்பருக்கு ஐரோப்பிய மத்தியகாலத்தின் மீதும், கத்தோலிக்க மதம்/திருச்சபை குறித்தும் பரந்த வாசிப்பும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் மிகுந்து இருந்தது. அவருக்கு எக்கோ ஒரு முக்கிய நூலாசிரியராக நான் அவரையறிந்த காலங்களில் இருந்தார்.  என்னுடைய ஆர்வம் இவற்றில் குறைவு. எனக்கு மிலான் குந்தேரா போன்றவர்கள் வசீகரித்த அளவுக்கு உம்பர்த்தோ எக்கோ போன்றவர்கள் நெருக்கமானவர்களில்லை. அதற்கு என் வாசிப்பின் போதாமைதான் ஒரு காரணமாக இருக்கும்.

இன்றைக்கு எக்கோவின் மொழிபெயர்ப்பை வைத்து, எக்கோவையே மிதிக்க ஒரு கோஷ்டி வருவதைப் பார்க்க வியப்பாக இருக்கின்றது. இவர்கள் எக்கோ எழுதிய நூல்களில் அரைவாசியாவது வாசித்திருப்பார்களா? ஒரு நூலை முன்வைத்து ஒரு எழுத்தாளரை நிராகரிக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு வழங்கியது. அதிலும் ஏதோ கல்லூரிக்காலத்தில் வாசித்துவிட்டு இது கிறிஸ்தவ இறைஞானத்தை நோக்கியே போகவில்லை, பொலபொலவென்று உதிர்ந்து விழும் நாவல், ego trip இற்கு அழைத்துச் செல்லும் புனைவு என்றெல்லாம் 'எல்லாம் தெரிந்த ஞானி'யாக அறுதியிட்ட உண்மையாக ஒருவர்  எழுத தமிழில் வாசகர்கள் எதைச் சொன்னாலும் கேட்பார்கள் என்கின்ற ஆணவத்தைத் தவிர வேறென்னவாக இருக்கும்.

அதுவும் இன்னொரு பதிவில் துப்பறியும் நாவல்கள் என்று 'ரோஜாவின் பெயரோடு (மறைமுகமாக), ரொபர்தோ பொலானோவின் 2666, Savage Detectives போனவற்றை ஒப்பீடு செய்வது என்னவொரு கொடுமை. மத்தியகாலத்தில் நடக்கும் ஒரு நாவலைக் கொண்டுவந்து, எப்படி சமகாலத்தைப் பின்னணியாக வைத்து  எழுதிய 2666, Savage Detectives  ஒப்பிட முடியும் என்கின்ற எளிய விடயம் கூடத் தெரியாமலா ஒருவர் இருப்பார்? பொலானோவின் இந்த நாவல்களை எக்கோ எழுதிய இறுதி நாவலான 'Numero Zero' உடன் ஒப்பிட்டிருந்தால் கூட ஒரளவுக்குப் பரவாயில்லை. 'Numero Zero'  இரண்டாம் உலகப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு துப்பறியும் நாவலாகும்.

இப்படியான அபத்தங்களைப் பார்க்கும்போது எனக்குப் பிடித்த ரொபர்தோ பொலானோ கூடப் பிடிக்காமல் இனிப் போய்விடுவாரோ  என்று அச்சமாக இருக்கிறது. நல்லவேளையாக பொலானோவின் படைப்புக்கள் பற்றி ஒரு  வாசிப்பை எழுதி 'எழுத்தென்னும் மாயக்கம்பளத்தில்' சேர்த்திருப்பதால் பொலானோவை நானும் 'நாளை நீங்களெல்லாம் ஓர் எழுத்தாளரா உங்களை நான் நிராகரிக்கின்றேன்' என்று நம் தமிழ் 'அறிவுஜீவி'களோடு சேர்ந்து நின்று திட்டினாலும், ஒரு  கடந்தகாலச் சாட்சியாக அந்த நூல் நின்று என் மனச்சாட்சியை உறுத்துமென நினைக்கின்றேன்

உண்மை எது புனைவு எது என்ற கோடுகளை அழிக்கும் நாவல்கள் இவையென பட்டியலிட்டு எக்கோவை நிராகரிக்கும் 'எல்லாம் அறிந்த வல்லவரே' தயவுசெய்து எக்கோவினது 'Baudolino' வை நிதானமாக வாசித்துப் பாருங்கள்.  அது என்னைப் போன்ற எளிய வாசகனுக்குக் கூட மத்தியகால ஐரோப்பாவின் வரலாறு என நம்பிக்கொண்டிருந்தவற்றை/கற்பித்தவற்றை கட்டவிழ்த்துப் பார்ப்பதைத் தானே வாசிப்பவர்க்குச் சொல்லித் தருகின்றது. இதைவிட வரலாற்றை எப்படிக் கட்டுடைக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்.

எனக்கு வரும்  திகைப்பென்னவென்றால் வாசித்த கொஞ்சத்தை வைத்து எப்படி இவர்கள் தந்தகோபுரத்தில் ஏறி நின்று,  நமக்கு மட்டுமில்லை, எக்கோவிற்கே துணிச்சலாகப் பிரசங்கம் செய்கின்றார்கள் என்பதுதான்!

**********

பனிக்காலத் தனிமை - 11

Saturday, October 18, 2025

 

மெரிக்காவில் ஸென்னைப் பரவலாக்கிய ஒருவராகிய சூஸிகி ரோஸி சான் பிரான்ஸிற்கோவிற்கு வரும்போது அவருக்கு 55 வயதாகியிருந்தது. சூஸிகி ரோஸியின் குழந்தைப் பருவம் வறுமைக்குள் கழிந்தது. தனது சிறுவயதில் வளர்ந்த தலைமயிரைக் கூட சலூனுக்குச் சென்று வெட்ட முடியாத காரணத்தால், தனது தந்தையார் தனது தலையை நன்றாக மழித்துவிடுவார் என்றும் அதனால் பாடசாலையில் தனது மொட்டைத்தலையை எள்ளல் செய்தபடி சக மாணவர்கள் இருப்பார்கள் எனவும், இதனால் தனது பாடசாலைப் பருவம் மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும் ரோஸி சொல்லியிருக்கின்றார்.

சூஸிகி ரோஸியின் தந்தையார் ஒரு புத்த மடலாயத்திற்குப் பொறுப்பானவராக இருந்தவர் . ஆனால் அன்றைய மெஜி பேரரசர் (Emperor Meiji) பெளத்த மடாலயங்கள் அனைத்தையும் ஷின்டோ (Shinto) மடலாயங்களாக மாற்றி அரசின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தார். ஒருவகையில் வேறிடத்தில் இருந்த பெளத்தம் வேண்டாம், ஜப்பானிய பூர்வீக மதங்களுக்குத் திரும்பவேண்டும் என்ற நோக்கில் இப்படி அனைத்தும் ஷின்டோவாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

சூஸிகி ரோஸி தனது 13 வயதில் தந்தையிடம் அனுமதி கேட்டு இன்னொரு பெளத்த மடலாயத்தில் சென்று சேர்கின்றார். ரோஸி ஆசிரியராக ஸென்னைக் கற்பிக்கும் நிலைக்கு வந்தபோது அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றார். அவருக்கு ஜப்பானில் பெளத்தம் அதன் அசலான நிலைமையிலிருந்து மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. புதிய நிலப்பரப்பில், பெளத்தம் குறித்து எவ்வித முன்முடிவுகளும் இல்லாத இடத்தில் ஸென்னை கற்பிப்பது சிறந்ததென முடிவு செய்கின்றார்.
ஆனால் ரோஸியின் ஆசிரியர் அவரது இந்த முடிவுக்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் அவர் தனது ஐம்பதுகளில் (1959இல்) அமெரிக்காவுக்கு ஒரு ஜப்பானிய மடலாயத்துக்கு குருவாக வருகின்றார். அங்கும் அது ஒரு மதகுருவாக இருந்தாலும் அவரது கனவான ஸென்னை அதன் மூலத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதற்காக காலையிலும் மாலையிலும் 'சடங்குகளுக்கு' வெளியே சொல்லித் தர, பின்னர் சூஸிகி ரோஸி ஒரு முக்கிய ஸென் ஆசிரியராக மாறியது வரலாறு.

சூஸிகி ரோஸி 'ஏன் அமெரிக்காவுக்கு வந்தேன்?' என்று உரையாடியிருக்கின்றார். இத்தனைக்கும் ரோஸி அமெரிக்காவுக்கு வந்து உயிரோடு இருந்த ஆண்டுகள் 12 ஆண்டுகள் மட்டுமே. ஸென் வரலாறுகள் இது ஒரு சொற்பகாலம். ஆனால் ரோஸி தனக்குப் பின் குறிப்பிட்ட மாணவர்களை உருவாக்கியதோடல்லாது, அநேக ஸென் மடலாயங்கள் போல, மாஸ்டர்கள் இறந்துபோக காலத்தில் கரைந்துபோகாது இன்றும் சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி பல நூறு மாணவர்களின் அவர்களின் தலைமுறைகளும் வந்தபடி இருக்கின்றன.

ஒன்றுமே இல்லாது வந்த சூஸிகி ரோஸி அவர் இறந்துபோனபோது மூன்று வெவ்வேறு மடாலயங்களைத் தொடங்குமளவுக்கு அவரது மாணவர்களை வளர்த்துவிட்டிருந்தார். சூஸிகி ரோஸி அமெரிக்கா வந்த இரண்டு வருடங்களில் அவரது மனைவி அமெரிக்காவுக்கு வருகின்றார். சூஸிகி ரோஸி காலையில் மாணவர்களோடு இருந்து தியானம் செய்வது முடிந்தவுடன் உடனேயே மடலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளுக்காக உடையை மாற்றிவிட்டு அந்நிலத்தில் ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார் என்று மனைவி குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு தன்னோடு கொஞ்ச நேரப் பொழுதைக் கழியுங்கள் என்றாலும் எனக்கு இந்த அமெரிக்காவில் ஸென்னை பரப்பும் விருப்பம் இருக்கின்றதெனச் சொல்லி வாரம் ஒரு முறை நடக்கும் ஆங்கில தம்ம உரைக்குத் தயாராக தனது அறைக்குச் சென்று விடுவார் எனச் சொல்கின்றார்.

ன்றைய அநேக ஜப்பானிய ஸென் ஆசிரியர்களைப் போல சூஸிகி ரோஸிக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் உரையாற்ற கடும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார். சிலவேளைகளில் இப்படி வாரம் முழுதும் தயாரித்த உரையைக் கேட்க, ஆரம்ப காலகட்டத்தில் மூன்று/நான்கு மாணவர்கள்தான் வந்தபடி இருந்திருக்கின்றார்கள். இப்படி கடுமையாக உரையைத் தயார் செய்ததற்கு ஒரு பத்துப்பேர் வந்தால் கூட பரவாயில்லை என்று தான் ரோஸியிடம் கேட்டதாக ரோஸியின் மனைவி குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு ரோஸி, ஒருவரா இல்லை ஆயிரம் பேரா , அது எனக்கு பொருட்டில்லை; நான் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் எனச் சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியான கடும் உழைப்பில்தான் சூஸிகி ரோஸி தனது மாணவர்களை உருவாக்கியிருந்தார். அதேபோல அவர் நம்பிக்கையீனங்களையும் தனக்குள் உருவாக்காது, அவரின் வாழ்க்கையில் அறிந்த ஸென்னைத் தீவிரமாக நம்பியிருக்கின்றார். அவரது கடைசிக்கால உரையில் கூட ரோஸி, நான் இன்னும் கூட பெளத்தத்தை ஆழ அறிவுப்புலத்தில் வைத்து வாசித்திருக்கலாம், இன்னும் கூட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் நாளாந்த வேலைகளில் நேரத்தைச் செலவிட்டுவிட்டேன். ஆனால் எனது மாணவர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் என்னை அறிவுப்புலத்திலும் தியானத்திலும் விஞ்சிப்போவார்கள். என் வயதொத்தவர்கள் (60களில் இருப்பவர்கள்) என் மாணவர்களைத்தான் அதிகம் நம்புவோம். நீங்கள் ஏதோ ஒருவகையில் சாதித்துக் காட்டுவீர்கள்' என்றிருக்கின்றார்.

அந்த நம்பிக்கையை வீணடிக்காது அவரின் சிறந்த மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று ஸென்னை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட நிறையப் புத்தகங்களை ஸென் பற்றியும், அவர்களின் ஆசிரியரான சூஸிகி ரோஸி பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சூஸிகி ரோஸியின் நேரடி மாணவர்களுக்கே இப்போது 80 வயதுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்த 80 வயது ஆசிரியர்களின் அடுத்த தலைமுறை மாணவர்கள் கூட தமது ஆசிரியர்களினூடாக சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். ஒரு நீண்ட தலைமுறை இப்போது சூஸிகி ரோஸிக்கு உருவாகிவிட்டிருக்கின்றது.

சூஸிகி ரோஸியை வாழ்வைப் பார்க்கும் நாங்கள் நம்பும் ஓரு விடயத்தை எவ்வளவு உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என யோசித்துப் பார்க்கின்றேன். அதுவும் ஈழத்தமிழர்களாகிய நாம் இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாம். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் ஒரு grassroots இயக்கத்தையும் எந்த நம்பிக்கை/அரசியல் சார்ந்தும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பல்வேறு அரசியல்/ஆன்மீக நம்பிக்கையாளர்கள் புலம்பெயர்ந்த தேசம் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றார்கள். நாம் எல்லோரையும் ஏன் இப்படி தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவில்லை என்று கேட்க முடியாது. ஆனால் இவ்வாறு சமூகத்தில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் அல்லது சொல்லிக் கொள்பவர்கள் ஏன் ஒரு சிறு காலடியைக் கூட உருப்படியாக வைக்க முடியவில்லை என்று அவரவர்கள் சுயவிமர்சனம் செய்யவேண்டும்.

சூஸிகி ரோஸி 1950களில் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஆங்கிலம் கூட ஒழுங்காய்த் தெரியாது. முற்றிலும் புதிய நிலப்பரப்பு மட்டுமில்லை, மனிதர்களும் கூட புதியவர்கள். என்கின்றபோது 12 ஆண்டுகளிலேயே மிகச் சிறந்த மாணவர்களையும், ஸென் மடாலயங்களையும் உருவாக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அவருக்குப் பின்னும் அது உயிர்வாழும் விதைகளையும் ஊன்ற முடிந்திருக்கின்றது. இத்தனைக்கும் ரோஸி தனது ஸென் உரைகளையும், தியானத்தையும் கற்பித்தபோது வந்த மாணவர்கள் நான்கைந்து பேரே.  

ஸென் என்றோ ஒருநாள் அமெரிக்காவில் பரவும் என்கின்ற அந்த மாபெரும் நம்பிக்கை, தொடக்ககால மாணவர்கள் ஒருசில  என்றாலும் அவர்களை அரவணைத்த விதம் இன்றைக்கு சூஸிகி ரோஸியின் மூலம் ஸென் மாபெரும் ஆலமரமாக வேரை மட்டுமில்லை விழுதுகளையும் விட்டு பரவியிருக்கின்றது.

மே
லும் சூஸிகி ரோஸி  ஒருவருக்கு வயது கூட ஒரு பொருட்டேயல்ல என்று நிரூபித்துமிருக்கின்றார். இன்றைக்கு 80களில் ஆயுதப்போராட்டத்தில் பங்காற்றியவர்கள் உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் முடிந்தபோது பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரின்முன் நீங்கள் உண்மையிலே தமிழ்ச் சமூகத்திடம்  கொடுக்க உங்களிடம் எதை வைத்திருக்கின்றீர்கள் என்பதையும், உங்களை அதற்காக எவ்வளவு தயார்ப்படுத்தி நிகழ்காலத்தோடு நிற்க முடிகின்றதா என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் அவை வெறும் வெற்று வார்த்தைகளாக/ வீணான நம்பிக்கைகளாக, தரிசு நிலத்து விதைகளாகவே நீங்கள் விதைக்கும்/பேசும் எதுவும் இருக்கும் என்பதாக அமையும் அவலச்சூழலுக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணரவேண்டும்.

சூஸிகி ரோஸி, அமெரிக்காவிற்கு வந்த புதிதில் அருகிலிருக்கும் கடையில் ரெட்டிஷ்களை சூப்புக்காக வாங்குவாராம். இவர் எப்போதும் பழைய/ வாடிய ரெட்டிஷ்களை வாங்குவதைப் பார்க்கும் கடைக்காரர், புதிதை தேர்ந்தெடுக்கலாமே என்று கேட்பாராம். அதற்கு, புதியதை வாங்க எவரும் வருவார்கள், வாடியதை ஒருவரும் வாங்கமாட்டார்கள் என வாங்கிச் செல்வராம் ரோஸி. அதுபோலவே சூஸிகி ரோஸி தனது கடைசிக்காலத்தில் ஒரு அறுவைச் சிகிச்சையைச் செய்தபின்னும், ஓய்வெடுக்காமல் அவரது தோட்டத்தில் எதையாவது வெட்டிக் கொட்டிக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்த அவரது மனைவி, இப்படியே வேலை செய்தால், உங்கள் ஆயுள் சுருங்கிவிடும் என்று கத்துவராம். அதற்கு சூஸிகி, நான் என் ஆயுளைச் சுருக்காமல் விட்டால்,  எனது மாணவர்கள் வளரமாட்டார்கள் (If i dont cut my life short, my students will not grow) என்று பதிலளிப்பாராம்.

சூஸிகி ரோஸியை தொடக்க காலத்தில் நினைவுபடுத்தும் அவரது பலர் மாணவர்கள் அவர் நன்றாகப் புகைப்பவராகவும், வாரவிறுதிகளில் பார்க்கும் ஜப்பானிய Rom-Com திரைப்படங்களுக்கே கண்ணீர் விடுபவராகவும் இருந்தவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு ஸென் ஆசிரியரை, அதுவும் அமெரிக்காவில் ஸென்னை பரவலாக்கிய ஒரு ஆசிரியரை இப்படி நம்மால் கற்பனை செய்யமுடிகின்றதா? ஆனால் இப்படியெல்லாம் இருந்தபோதும், அவரின் முதன்மை நோக்கான ஸென்னை அமெரிக்க மண்ணில் விதைப்பது என்ற விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது அவரின் இறுதிக்காலம் வரை முயன்றிருக்கின்றார். அதுவே அவரது ஸென், அதுவே அவரது தம்மம்.

*******

இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'

Friday, October 17, 2025

நூல் அறிமுகக் குறிப்பு. -அரசி விக்னேஸ்வரன்


பிந்திய இரண்டாயிரங்களில்   இணையப் பாவனை வளர்ந்து Blog மூலம் தமது எழுத்து, வாசிப்பு உலகை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பவர் இளங்கோ. கவிதை, சிறுகதை, நாவல் என புனைவு இலக்கியத்திலும் திரைப்பட விமர்சனம், பயணக்கட்டுரைகள் என்றவகையில் அபுனைவு எழுத்திலும் கால்பதித்திருப்பவர். தனக்கேயுரிய மொழிநடையுடன் அவர் எழுதும் முகப்புத்தகப் பதிவுகள் கூட சுவாரசியமான வாசிப்புக்குகந்தவை.  அவரது எட்டாவது புத்தகமும் இரண்டாவது சிறுகதைத் தொகுதியுமான "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்" என்ற நூல் கடந்த ஜூலை பத்தொன்பதாம் திகதி மாலை ரோறொன்றோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

இந்தப்புத்தகம் 2011 முதல் 2024 வரையான 13 வருட காலப்பகுதிக்குள் இளங்கோ எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பாக சென்னை டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் இளங்கோ தனது புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.  புத்தகத்தின் உள்ளடக்கத்தினுள் புகமுன்னர் எனக்கு இருந்த விமர்சனம் என்னவெனில் இந்தப் புத்தகத்துக்கு ஏன் எந்த முன்னுரையும் எழுத்திச் சேர்க்கப்படவில்லை என்பதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் பா.அ. ஐயகரன் அவர்களின் ஒரு சின்னக் குறிப்பு மட்டும் இடம்பெற்றிருக்கிறது. 


இந்தப் புத்தகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இளங்கோ பல இதழ்களில் எழுதி வெளியிட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை காலக் கிரமத்தில் புத்தகத்தில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதும் தெளிவற்று இருந்தது. உள்ளடக்கப் பக்கத்தில் கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகளையும் சேர்த்திருக்கலாம். இவற்றில் மிகப்பழைய கதை எது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லாக் கதைகளையும் நான் இருமுறை புரட்டிப் பார்க்கவேண்டியிருந்தது.


முதல் வாசிப்பில் இளங்கோவின் புத்தகம் எனக்கு ஒரு சுவாரசியமான  இலகுவான வாசிப்புக்கு உகந்த ஒன்றாகவே பட்டது. ஆனால் வாசித்து முடித்தபின்னர் யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் புலப்படும் தன்மை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தது. புத்தக வெளியீடன்று உரையாற்றிய மைதிலி தயாநிதி அவர்கள் பின் நவீனத்துவப் பார்வையுடன் இக்கதைகளை ஆராய்ந்திருந்தார். வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான வாசிப்பனுவத்தையும் அர்த்தப்படுத்தல்களையும் இக்கதைகள் கோரி நிற்பதைப்  புரிந்து கொள்ள முடிந்தது. 


புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றது. இலங்கை அரசியல் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் பலருக்கு புத்தர் என்பவர் அதிகாரத்தினதும்  ஆக்கிரமிப்பினதும் குறியீடாகத் தெரியலாம்.   மனைவியையும் குழந்தையை யும் விட்டு சந்நியாசியாகிய அவருக்கும் முத்தத்திற்கும்  என்ன சம்பந்தம் என்றும் சிலர் நினைக்கலாம். கதைசொல்லி தேடும் அமைதி, திருப்தி அல்லது பூரணம் என்பதற்கு கதைசொல்லி அவரைக் குறியீடாக்குகிறான். தலைப்புக் கதை அதற்கு நல்ல உதாரணம். புத்தர் கதைசொல்லியை ஒரு அவதானியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அல்லது அவர் தன்னைப் பார்ததுக்கொண்டிருக்க வேண்டும் என்று கதைசொல்லி அவாப்படுகிறான். வெளியில் தெரியாத அவன் மன ஓட்டங்களுக்கு புத்தர் சாட்சியாகிறார். அவன் வாழ் க்கையின் அர்த்தத்தைக்  காதல் , காமத்தினூடு கண்டடைகிறபோது புத்தரை அங்கே கண்டடைகிறான்.  இளங்கோவின் கதைகளில் புத்தர் மட்டுமல்ல, இடையிடையே வைரவர், இயேசுநாதர், யோகர் சுவாமி, சோக்கிரடீஸ், காஃப்கா, எனப் பலரும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தினூடு வந்து போகிறார்கள். 


முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த விடயம் இளங்கோவின் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் வரும் கதைசொல்லியின் தன்மை. அவன் புறஉலகில் சஞ்சரிப்பது கனவு போல இருக்கும் அளவுக்கு அக உலகில் அதிகம் சஞ்சரிப்பவனாக இருக்கிறான். மாநகரவாசியாகவும் தளைகள் அற்றவனாகவும் எல்லாவற்றிலும் இருந்து விலகியவனுமாக இருக்கிறான். இந்த "அந்நியனை"த்தான் "விளிம்பு நிலை மனிதனாக" மைதிலி தயாநிதி அவர்கள் நோக்கினார்கள். 


ஆனால் எனக்கு அவன் நினைத்த நேரம் நினைத்த முடிவை எடுக்ககூடிய, முகம் தெரியாத ஒரு பெண்ணோடு திட்டமிடாத ஒரு தாய்லாந்துப் பயணத்துக்கு ஒரே நாளில் கிளம்பிவிடக்கூடிய அல்லது வேலைக்கு லீவு போட்டுவிட்டு கால் போன போக்கில் நடந்து வழியில் உணவகத்தில் உணவருந்தி ஏற்கனவே பிரிந்த பழைய காதலியுடன் இரவு விடுதியில் தாங்கிவரக்கூடிய, ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்ட  வாழ்வை வாழ்பவனாகத்  தெரிந்தான். அந்தக் கதைசொல்லியின் மனவோட்டத்தினூடு பயணிப்பதும் அவனது பார்வைக்குள்ளால் நகரங்களையும் இயற்கையையும் தரிசிப்பதும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.


இந்தப் புத்தகத்தில் ஒரு சில கதைகள் மொழி பெயர்ப்புக் கதைகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு இலங்கை அல்லது புலம்பெயந்த தமிழ்க்  கதாபாத்திரங்களை அல்லது பழக்கமான இடங்களை குறிப்பிடாமலேயே அமைந்திருந்தன. ஆனால் ஒரு சில கதைகள் போர், இலங்கை அரசியல் என்பவற்றை நேரடியாகவே தொட்டிருக்கின்றன. 



தொகுப்பின் முதலாவது கதை "அரசன் அன்று கொன்றால் லியனகே நின்று கொல்வார்". இக்கதையில் கதாநாயகன் ஒரு  சிங்கள இளைஞனாக இருக்கிறான். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் எல்லாம் தோற்ற நிலையில் பேனாவால் போர்தொடுத்த ஊடகவியலாளர்கள் எல்லாரும் காணாமல் போய்க்கொண்டிருந்த வேளையில் எல்லாருக்கும் இருந்த ஆற்றாமையை இந்தக்கதை தொடுகிறது. குற்றவாளிக்கு இருக்கும் குற்றவுணர்சசியை வைத்தே ஒருவகை பழிவாங்கலை நடாத்திகாட்டுகிறது எதிர்பாராத திருப்பத்தினைக் கொண்ட இந்தக் கதை. 


"வெள்ளவாய்க்கால் வைரவர்" என்னும் இன்னொரு கதை இந்திய இராணுவக் காலத்தில் அமைந்து, ஒரு சிறுவனைக் கதைசொல்லியாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுவது போல் அநேகமான இடகங்களில் இருந்தாலும் சில இடங்களில் அவன் வளர்ந்தபின் சொல்வதுபோல, இளங்கோவின் வழமையான கதைசொல்லி எட்டிப்பார்க்கும் இடங்களில் அமைகிறது. இந்தக் கதையும் காவல் தெய்வமான வைரவரைக் கூடக் காக்க முடியாத, அநியாயங்கள் நடப்பதை பார்த்தும் மௌனியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் ஆற்றாமையையம் அது ஏற்படுத்தக்கூடிய ஆழமான மனவடுவினையும் துலக்குகிறது. 


இந்தத் தொகுப்பில் எல்லாக் கதைகளிலும் இழையோடும் இன்னொரு கருப்பொருள் காதல். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேறாத அல்லது நிலைக்காத காதலாகவே அமைகிறது. "முள்ளிவாய்க்கால்" என்னும் கதையில்  பதின்ம வயதில்  மலர்ந்து பின் யுத்த காலத்தையும் இறுதிப்போரையும் தாண்டி  கடைசிவரை ஒருவருக்கொருவர் சொல்லப்படாமலேயே போய்விட்டாலும் வாசகர்களின் மனதில் பதிந்து விடக்கூடிய ஒரு காதலுக்கு இளங்கோவின் கதைசொல்லி சாட்சியாகிறான். 


தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட வேண்டியதென நான் நம்பும் அதிகம் புரிந்துகொள்ளப்படாத  உளவியல் நோய்க்கூறுகளையும்  சில கதைகள் தொட்டுச்செல்கின்றன. "ஏகாந்தம் என்பதும் உனது பெயர்" கதையில் "Bipolar disorder " இனால் பாதிக்கப்பட்ட கதைசொல்லி அது தன்னை எப்படிப்  பாதிக்கிறது என்பதை அவனே மனதுக்குள் கவனித்துக்கொண்டு இருப்பதும் அதற்கு ஒரு உதாரணம். பராமரிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் எவ்வளவு துரத்துக்கு ஒருவரை இட்டுச்செல்லக்கூடும் என்பதை "உறைந்த நதி" கதை எமக்கு உறைக்க வைக்கிறது. 


தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளைப் பற்றியும் எழுதுவதற்கு நிறைய இருப்பினும் இக்கதைகள்  வாசகர்களின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தையும் கோருபவை  என்பதால் வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டும், இளங்கோ தொடர்ந்தும் எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் கொண்டுவந்திருக்கும் ஒரு தனித்துவமான இடத்தை இன்னும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் குறிப்பை முடித்துக்கொள்கிறேன்.

 

*******


('அம்ருதா' ஐப்பசி இதழில் வெளிவந்தது; கனடாவில் நடைபெற்ற 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியதன் சுருக்கிய எழுத்து வடிவம்)


மக்னோலியாப்பூ குறிப்புகள்

Tuesday, September 30, 2025

 

'Calm in the Storm (Zen Ways to Cultivate Stability in an Anxious World)' நூல் வெளிவந்த அன்றே வாங்கியிருந்தேன். இது எனது ஆசிரியரான தாயின் நேரடி மாணவரான  Brother Phab Huu, ஓரு பத்திரிகையாளராருடன் சேர்ந்து எழுதியது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக  Podcast செய்து வருகின்றனர். விரைவில் நூறாவது Podcast வரப்போகின்றது. நடைமுறை வாழ்க்கையில் ஸென்னை எப்படி பழக்கப்படுத்திக் கொள்வது என்று நேரடியாகப் பேசுவதால் இவர்களின் பேச்சுக்கள் சுவாரசியமானவை. ஆகவே நிறைய பலவீனமுள்ள தருணங்களை/மனிதர்களை இவர்களின் பேச்சுக்களினூடாக அறிந்துகொள்ளும்போது, நமது வாழ்க்கையின் பிரதிபலிப்பைப் பார்க்கலாம்.


ஒரு நூலை அது வரமுன்னர் pre-order செய்து நான் வாங்குவதென்பது அரிது. கடைசியாக அப்படி வாங்கியது அருந்ததி ரோயின் The Ministry of Utmost Happiness என நினைக்கின்றேன். 'Calm in the Storm' இல், பெரும்பாலும் அவர்களின் உரைகளிலிருந்தே எழுத்தாக்கி இருக்கின்றனர். இந்த உரைகளை நான் விடாது கேட்பவன் என்பதால் எளிதில் அதைக் கண்டு கொள்ள முடிந்தது. இந்த நூலை வாங்கியது என்பது அவர்களிடமிருந்து நிறையப் பெற்றதற்கு  இது நான் அவர்களுக்கு நன்றி செலுத்தும் முறை என்பேன். 


நாம் எத்தனையோ அரிய விடயங்களைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம், ஆனால் அவர்களுக்கு அதைச் சொல்லவோ/நன்றி செலுத்தவோ முடியவதில்லை. அதை வேறுவிதமாகத்தான் செய்ய வேண்டியிருக்கின்றது.


நண்பரொருவர் நான்கு பெண்கள் இலங்கையில் ஒரு சிறு குழுவைத் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு வகையில் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருப்பதைச் சொன்னார். அவரவர்க்கு இருக்கும் நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் அவ்வளவு உற்சாகமாக அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் இனியான காலங்களில் சிறுசிறு குழுக்களாலேயே சமூகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்புவன் நான். ஆகவே இவ்வாறான அமைப்புக்களின் தொடக்கமும், செயற்பாடுகளும் மனதுக்கு இதமளிப்பவையாக இருக்கின்றன. அவர்களது அமைப்பு 'Everystory Sri Lanka'. இன்ஸ்டாவில் தேடினால் எளிதில் கிடைப்பார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!


*

ன்று நல்லூர் முருகன் கோயிலில் தேர்த்திருவிழா நடந்து முடிந்திருக்கின்றது. நானறிய யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரேயொரு தீவிர முருகன் பக்தன் நமது வடகோவையாராகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் நல்லூர் திருவிழா தொடங்கிய முதல் நாளிலிருந்து 25ம் திருவிழா முடியும்வரை விரதம் இருப்பார்; ஆனால் ஒருநாளும் நல்லூர்க் கோயில் பக்கம் எட்டியே பார்க்கமாட்டார். 


வடிவேல் ஒரு திரைப்படத்தில் ஒரு கோட்டை வரைந்துவிட்டு, நீ  கோட்டுக்கு அந்தப் பக்கத்தில் நின்று கதைக்க வேண்டும், நான் இந்தப் பக்கத்தில் நின்று கதைப்பேன். பேச்சு பேச்சாக இருக்கவேண்டும், என்ன நடந்தாலும் கோட்டைத் தாண்டக்கூடாது என்று வில்லனுக்கு சூளுரைப்பது போல, வடகோவையாருக்கும், முருகனுக்கும் ஏதோ ஒரு சபதம் இருக்கும்போல. இல்லாவிட்டால் திருவிழாக் காலங்களில் கடும் விரதமிருந்து விட்டு கோயில் பக்கம் எட்டிப்பார்க்காமல் யாராவது இருப்பார்களா என்ன? சிலவேளைகளில் மனதிலே கோயில் கட்டிய பூசலார் நாயனாரின் பரம்பரையில் வந்தவராக இவர் இருப்பாரோ தெரியவில்லை.


அவர் ஒரு தீவிர நல்லூர் முருகப் பக்தன் போலக் காட்டிக்கொண்டாலும், நள்ளிரவு 'ஏகாந்த' வேளைகளில் மனந்திறந்து பேசும்போது, 'டேய் நான் எங்கை பக்தியோடு விரதம் இருக்கிறனடா, இப்படிச் செய்வது என்னுடைய detox இற்கு,  வருடம் முழுவதும்  ஊர்வன நகர்வன, பறப்பன, கடலுக்குள் பாய்வது என்று அனைத்தையும்  கணக்கில்லாது  நன்றாக விழுங்கிவிட்டு, 25 நாட்கள் விரதம் இருந்தால் உடல் நல்ல cleansing ஆகிவிடும், அதற்குத்தான் இப்படி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்கின்றேன்' என்று உண்மையை உளறிவிடுவார்.


நல்லூர் முருகனின் தேர்த்திருவிழாவை ஏதோ ஒரு யூ-டியுப்பில் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, நல்லூரில் ஒரு தேர்தான் போகின்றது என்றார். நான் நல்லூர்க்கோயில் திருவிழாவுக்கு மட்டுமில்லை; சாதாரண நாளில் கூட நல்லூர் கோயிலுக்குள்ளே போனதில்லை (அது எதற்காக என்று தெரிய விருப்பம் இருப்பவர்கள் 'நான் கம்பராமாயணம் படித்த கதை' என்ற எனது ஆக்கத்தை வாசிக்கவும்). எனவே நல்லூரில் தேர்த்திருவிழாவுக்கு ஒரு தேர் மட்டுந்தான் இழுப்பார்கள் என்பதை நான் இதுவரை கவ்னித்திருக்கவில்லை.


ஏனென்றால் என் சிறுவயதில் இருந்து நான் திருவிழா கொண்டாடிய கோயில் என்றால் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில். இந்த நல்லூர்க்கந்தன் போல ஒற்றைத் தேர் இழுக்கும் கஞ்சத்தனம் எல்லாம் மாவிட்டபுரம் கந்தனுக்கு இல்லை. அவரின் தேர்த்திருவிழாவில் கம்பீரமாக 5 தேர்களை இழுப்பார்கள். அதுவும் அந்தப் பெருந்தெருவில் ஐந்து தேர்களும் பவனி வருவது என் சிறுவயதுக் காலங்களில் விழிகள் விரிக்கப் பார்க்கும் வியப்பான விடயம்.


நல்லூர்க் கந்தனுக்கு ஐந்து தேர்கள் மட்டுமில்லை, நல்லூர்ப் பக்கமாய்  தேர்த்திருவிழாவன்று பறவைக்காவடி வருகின்ற சிலமனையும் நான் அவ்வளவாய்ப் பார்க்கவில்லை. இங்கே கனடாவில் மொன்றியலில் மலையில் அமைந்திருக்கும் வல்-மொறின் முருகன் கோயில் தேர்த்திருவிழாவுக்கு போனால் கூட நம்மவர்களின் பறவைக்காவடியைப் பார்க்கலாம். 


பறவைக்காவடிகள் என்றாலே அது சந்நிதி என்று அம்மா சொன்னார். அவர் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது ஒருநாள் முந்தியே அவரின் தாயோடு போய் சந்நிதியில் தங்கி நின்று இந்தப் பறவைக்காவடிகளை எல்லாம் பார்ப்பார் எனச் சொன்னார்.


ஐந்து தேர்கள் இல்லாத நல்லூர்க் கந்தனைத்தான் எங்கள் யாழ்ப்பாணத்தின் அடையாளம்/பெருமை என்று படங்காட்டுகின்றீர்களே, இதெல்லாம் நியாயமா யாழ்ப்பாணிகளே?


இந்தப் போர் மட்டும் நடக்காது, எங்களைப் போன்றவர்களைப் பனித்தேசத்துக்குத் துரத்தியிருக்காவிட்டால், மாவிட்டபுரம் கந்தன்தான் எங்கள் யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று இந்நேரத்துக்கு 'ஹர்த்தாலு'க்கு அழைப்பு விடுத்து கதவடைப்புச் செய்திருப்போம்!


*

யாழ்ப்பாணத்தில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்புக் கிடைக்கின்றது. நண்பர் மதுராங்கி அங்கு வாங்கியதாக இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். யாழில் என் புத்தகங்களை வாங்கவென 10 வாசகர்கள்தான் இருப்பார்கள். ஏற்கனவே 'கலைமுகம்' இதழின் ஆசிரியரான எமில் இந்நூலை வாங்கியதாகச் சொல்லியிருந்தார். மற்ற நண்பர்கள் அவர்களின் Sleeper cells ஐ களைந்துவிட்டு களத்தில் இறங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


நிற்க.


இம்முறை 'எழுநா'வும் தனது அரங்கை  இப்புத்தகக் கண்காட்சியில் அமைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான 25 புத்தகங்களை வெளியிடும் திட்டத்தில் இதுவரை வெளிவந்துவிட்ட 20 நூல்களை நீங்கள் அங்கே பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர் மக்கள் மட்டுமில்லை, வருடந்தவறாது நல்லூர்க் கந்தனுக்காக அலையலையாகச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களும் 'எழுநா'வின் இந்த நூல்களை தமக்காக வாங்கலாம் அல்லது வாங்கி வாசிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். மகிழ்ச்சி என்பது ஒருபோதும் பிறர்க்குக் கொடுக்க கொடுக்க  குறைவதில்லை; மேலும் மேலும் கூடிக்கூடிச் செல்லும் என்று ஆசான் புத்தர் கூறியதுபோல, புத்தகங்களை வாசிப்பதால் நமது உலகம் இன்னுமின்னும் விசாலமடைகிறது என்பதற்கிணங்க இவ்வாறான புத்தகக் கண்காட்சிக்கு, கோயிலுக்கும், திரையரங்குக்கும் செல்வது மாதிரி குடும்பமாகச் சென்று வரலாம். 

 
அறிவைப் பெறாது (பாடப் புத்தக அறிவைச் சொல்லவில்லை), 'வாய் வீச்சில் வீரராக' ஈழத்தமிழ்ச் சமூகம் இருப்பதை தினம் தினம் அரசியல்வாதிகளிலிருந்து, 'அறிவுஜீவிகள்' எனச் சொல்லப்படுவர்கள் வரை பார்க்கின்றோம்; ஆகக் குறைந்தது நாங்கள் இவ்வாறான 'கோமாளி'களாக மாறாதிருக்க நமக்கு முன்னாலிருக்கும் நல்ல தேர்வு புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்பதேயாகும்.


ஆகவே இவ்வாறான புத்தகக் கண்காட்சிகளுக்கு உற்சாகமாகச் சென்று வாருங்கள்!


***


(Aug, 2025)