கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

M.I.Aயின் 'மாயா'

Wednesday, July 21, 2010

-மாயா அருட்பிர‌காச‌த்தின் 'மாயா' இசைத்தொகுப்பை முன்வைத்து-

'Did you like this?
They can rewrite History
But we can re write it back faster
We have speed on our hands'
-M.I.A


மாயா அருட்பிர‌காச‌த்தின் (M.I.A) மூன்றாவ‌து இசைத்தொகுப்பான‌ 'மாயா' அண்மையில் வெளிவ‌ந்துள்ள‌து. ஏற்க‌ன‌வே மாயாவின் 'அருள‌ர்', 'க‌லா' போன்ற‌ இசைத்தொகுப்புக்க‌ள் வ‌ந்து அதிக‌ க‌வ‌னிப்பைப் பெற்றிருக்கின்ற‌ன‌. அவ‌ர‌து அநேக‌ பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப் போல‌, அவ‌ர் நேர‌டியாக‌வும் த‌ன‌க்குச் ச‌ரியான‌து என்று நினைக்கின்ற‌வ‌ற்றைப் பேசுவ‌தால் மாயாவை நேசிக்க‌வும், வெறுக்க‌வும் செய்கின்ற‌ நிறைய‌ப்பேர் இருக்கின்ற‌ன‌ர். த‌ன‌க்குக் கிடைத்த‌ த‌ள‌ங்க‌ள் அனைத்திலும், ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளுக்கு எதிராக‌த் த‌ன் குரலைத் தொட‌ர்ச்சியாக‌ மாயா உர‌த்து ஒலித்திருக்கிறார். இத‌னால்தான் இல‌ங்கையின் பாதுகாப்புச் செய‌லாள‌ர் கோத்த‌பாய‌ ராஜ‌ப‌க்சா ஒருமுறை 'மாயா த‌ன் பாட‌ல்க‌ளைப் பாடுவ‌தோடு நிறுத்திக்கொள்ள‌ட்டும்; இல‌ங்கையின் உள்விவ‌கார‌ங்க‌ளில் த‌லையிட‌வேண்டாம்' என்று எச்ச‌ரித்துமிருக்கிறார் மாயாவின் வெளிப்ப‌டையாக‌ ஒலிக்கும் அரசிய‌ல் குர‌லால் அமெரிக்காவிற்குச் செல்வ‌த‌ற்கான‌ விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தையும் இதையிட‌த்தில் நாம் நினைவுகூர‌ வேண்டும். 'தீவிர‌வாதி'க‌ளென‌ தடைசெய்ய‌ப்ப‌ட்ட‌ விடுத‌லை இய‌க்க‌ங்க‌ளை முன்னிலைப்ப‌டுத்தி எவ‌ராலும் த‌ம் இர‌சிக‌ர்க‌ளைப் பெரும‌ள‌வில் க‌வ‌ர‌முடியாது, ஆனால் மாயா ம‌ட்டுமே விதிவில‌க்காக‌ த‌ன‌து பாட‌ல்க‌ளில் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ங்க‌ளென‌ அடையாள‌ப்ப‌டுத்தப்ப‌ட்ட‌ இய‌க்க‌ங்க‌ளை அடிக்க‌டி குறிப்பிட்டும் கூட‌ பெரும‌ள‌வு இர‌சிக‌ர்களைக் கொண்டிருக்கின்றார்'  என‌க் கூறுகின்றார் ஓர் இசை விம‌ர்ச‌க‌ர்.

மாயாவின் மூன்றாவ‌து இசைத்தொகுப்பு வ‌ர‌முன்ன‌ரே ப‌ல்வேறுவித‌மான‌ ச‌ர்ச்சைக‌ள் தொட‌ங்கிவிட்ட‌ன‌. 'மாயா' இசைத்தொகுப்பில் உள்ளாட‌க்க‌ப்ப‌ட்ட‌ 'Born Free' பாட‌ல் காணொளியாக‌(video) வ‌ந்த‌போது மிக‌ப்பெரும் ச‌ர்ச்சைக‌ள் எழும்ப‌த் தொட‌ங்கிய‌து. அந்த‌க் காணொளியில் அமெரிக்க‌ இராணுவ‌ம் சிவ‌ப்புத்த‌லை  ம‌னித‌ர்க‌ளை நிர்வாண‌மாக‌ சுற்றி வ‌ளைப்பதாய், சுட்டுக்கொல்வ‌தாய், குழ‌ந்தைக‌ளைப் ப‌லியெடுப்ப‌தாய் காட்ட‌ப்ப‌ட்ட‌தால் YouTube அப்பாட‌லை 'வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க்கு ம‌ட்டும் உரிய‌து' என‌ எளிதாக‌க் கூறித்  த‌டைசெய்தது;  ஆனால் அதேவேளை மாயா 'தீவிர‌வாதப்புலிக‌ளின் பாட‌கி'யென‌ துவேச‌த்துட‌ன் வெட்டி ஒட்ட‌ப்ப‌ட்ட‌ காணொளிக‌ளை 'சுத‌ந்திர‌மாக‌' YouTube அனும‌தித்த‌து. மாயாவின் பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப்போல‌ இப்பாட‌ல் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்திற்கும் ப‌ல‌வேறு வித‌மான‌ வாசிப்புக்க‌ள் விம‌ர்ச‌க‌ர்க‌ளாலும் இர‌சிக‌ர்க‌ளாலும் முன்வைக்க‌ப்ப‌ட்டு விவாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இக்காணொளியில் அமெரிக்க இராணுவ‌த்தால் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ சிவ‌ப்புத்த‌லை இளைஞ‌ர்க‌ளுக்கு இர‌ண்டு வித‌மான‌ தெரிவுக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று க‌ண்ணிவெடிக‌ள் புதைக்க‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளினூடாக‌ ஓடுத‌ல், ம‌ற்ற‌து ஒட‌ம‌றுத்தால் துப்பாக்கியால் ஈவிர‌க்க‌மின்றிச் சுட்டுக்கொல்ல‌ப்ப‌டுவார்க‌ள். இர‌ண்டு தெரிவுக‌ளின‌தும் முடிவு ஒன்றுதான், அது ம‌ர‌ண‌ம். இன்று வெளிநாடுக‌ளை ஆக்கிர‌மித்து நிற்கும் அமெரிக்கா/பிரித்தானியா ம‌ற்றும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ள் ஆக்கிர‌மிப்பு நாடுக‌ளில் நிக‌ழ்த்தும் கொடூர‌மான‌ வ‌ன்முறையை நாளை த‌ன‌து சொந்த‌ நாட்டின் ம‌க்க‌ளுக்கு எதிராக‌க் கூட‌ நிக‌ழ்த்தும் என்கின்ற‌ ஒருவ‌கையான‌ வாசிப்பைக்கூட‌ நாம் இக்காணொளியினூடு செய்ய‌லாம். எவ்வாறான‌தாயினும் இது அர‌சு/இராணுவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அளவ‌ற்ற அதிகார‌த்திற்கு எதிரான‌ க‌ல‌க‌க் குர‌லே. மேலும் இப்பாட‌லைப் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தைத்த‌ரும் சிறுகுறிப்புப் புத்த‌க‌த்தில், ஈழ‌த்தில் நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு க‌ண்க‌ளும் கைகளும் க‌ட்ட‌ப்ப‌ட்டு சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌னின் ப‌ட‌ம் இணைக்க‌ப்ப‌ட்டிப்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும் (இந்நிக‌ழ்வு காணொளியாக‌ வ‌ந்த‌து ந‌ம் அனைவ‌ருக்கும் நினைவிருக்கும்).

இந்த‌ இசைத்தொகுப்பு ப‌ற்றி மாயா எம்ரீவியிற்கு நேர்காண‌ல் கொடுத்த‌போது, 'இது ஒரு முப்ப‌ரிமாண‌ இசைத்தொகுப்பு' என்று கூறியிருக்கின்றார். முப்ப‌ரிமாண‌ம் என்ப‌தில் எவ‌ற்றை மாயா உள்ள‌ட‌க்க‌ விரும்புகின்றார் என்று தெளிவாக‌த் தெரியாத‌போதும், இர‌ண்டு வ‌கையில் இவ்விசைதொகுப்பு மூன்று ப‌ரிமாண‌ங்க‌ளைத் தொட‌ முய‌ன்றிருக்கிற‌து போல‌த் தெரிகிற‌து. ஒன்று, தொகுப்பிலுள்ள‌ பாட‌ல்க‌ள் மாயாவின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வின் த‌த்த‌ளிப்புக்க‌ளையும், வெளிப்ப‌டையான‌ அர‌சிய‌லையும் ம‌ற்றும் காத‌லையும் கூறுவ‌தால் இது ஒருவ‌கையான‌ முப்ப‌ரிணாம‌ம் என‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். மாயாவின் இர‌ண்டாவ‌து இசைத்தொகுப்பான‌ 'க‌லா'வில் காத‌ல் த‌வ‌ற‌விட‌ப்ப‌ட்டிருந்த‌து அல்ல‌து மென்மையாக‌ ஒலித்திருக்கிற‌து. ஆனால் இத்தொகுப்பில் நான்கிற்கு மேற்ப‌ட்ட‌ காத‌ற்பாட‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌; சில‌ பொப் (electro pop) இசையில் பின்ன‌ணியில் க‌சிகின்ற‌ன‌. இர‌ண்டாவ‌து வ‌கையான‌  முப்பரிமாண‌மாக‌ கொள்ள‌க்கூடிய‌து இங்கே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வெவ்வேறான‌ வாத்திய‌ங்க‌ள்...பொப், எலெக்ரோ, ரக்கே, ராப் பல்வேறுவித‌ இசைக் க‌ல‌வைக‌ள் -சில‌வேளைக‌ளில் த‌னிப்பாட‌ல்க‌ளில் கூட‌-க‌ல‌க்க‌ப்ப‌ட்டு முப்ப‌ரிணாம‌மாக‌ விரிவ‌டைகின்ற‌ன. இவ்வாறான வித்தியாச‌மான‌ இசைக்கோர்வைக‌ளோடு பல்வேறுவித‌மான‌ புதிய‌ முய‌ற்சிக‌ளையும் மாயா பாட‌ல்க‌ளில் புகுத்தியிருக்கிறார். இத‌னால் ம‌ர‌புவ‌ழியான‌ அல்ல‌து த‌ட‌ம்ப‌திக்க‌ப்ப‌ட்ட‌ பாதையிலான‌ இசைத்துணுக்குக‌ளைக் (genre) கேட்க‌விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு இவ் இசைத்தொகுப்பு ஏமாற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌லாம். கேட்கும்போது ச‌வால்க‌ளை ப‌ல்வேறு த‌ள‌ங்க‌ளில் ஏற்ப‌டுத்தும் 'மாயா' இசைத்தொகுப்புட‌ன் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதாக‌ நெருக்க‌ம் கொண்டுவிட‌முடியாது என்ப‌தையும் குறிப்பிடாக‌ வேண்டும்.

'மாயா' தொகுப்பில் 'XXXO' சிற‌ந்த‌ காத‌ல்பாட‌லென‌ ப‌ல‌ரால் அடையாள‌ங்காண‌ப்ப‌ட்ட‌போதும் எவ‌ராலும் க‌வ‌னிக்காத‌ அருமையான‌ இன்னொரு காத‌ற் பாட‌லொன்று இருக்கிற‌து. அது 'Space' என்கின்ற‌ பாட‌ல். 'புவியீர்ப்பு என‌து எதிரி/ அது என்னைக் காசைப் போல‌ இழுக்கிற‌து/ நான் வாழ்வின் ஓடிசியில் மித‌ந்துகொண்டிருக்கும்போது/விண்மீன்க‌ள் என்ன‌ருகில் மோதுகின்ற‌ன‌/ என‌து தொலைபேசி இணைப்புக்க‌ள் செய‌லிழந்துவிட்ட‌ன்/ உன்னால் இனி என்னை (தொலைபேசியில்) அழைக்க‌முடியாது' என‌ பிரிந்துபோகின்ற‌ காத‌லை அருமையாக‌ மாயா சொல்கின்றார். மேலும் மிக‌ மென்மையோடும் ஒருவித‌ கெஞ்ச‌லோடும் த‌தும்பும் மாயாவின் குர‌ல் ந‌ம்மை இன்னொரு வெளிக்கு அழைத்துச் செல்கிற‌து. 'XXXO','Space' பாட‌ல்க‌ளைப் போல‌, 'It takes a muscle to fall in love', 'Tell Me Why' போன்ற‌வையும் காத‌லின் கொண்டாட்ட‌த்தையும் பிரிவின் வேத‌னைக‌ளையும் காம‌த்தின் கிற‌க்க‌ங்க‌ளையும் பாடுகின்ற‌ன‌.

மாயா இசைத்தொகுப்பில் இருக்கும் 'Teqkilla', Stepping Up', 'Illy Girl' ஆட்ட‌ அர‌ங்குக‌ளில் ஆடுவ‌த‌ற்குரிய‌வை; கொண்டாட்ட‌த்தையும் குதூக‌ல‌த்தையும் ஒருங்கே வ‌ழிய‌விடுப‌வை. காதலும், கொண்டாட்ட‌மும் அநேக‌ இசைஞ‌ர்க‌ளிட‌ம் இருப்ப‌வை, இவ‌ற்றோடு அர‌சிய‌லையும் இணைக்கும்போதே மாயாவின் இசை பிற‌ரிட‌மிருந்து வேறுப‌ட‌க்கூடியதாக‌ மாறுகின்ற‌து. 'Born Free' பாட‌லின் கூற‌ப்ப‌ட்ட‌ உக்கிர‌ அர‌சிய‌லைப் போல‌ 'Love a Lot'ல் 'நான் என‌து க‌ன்ன‌த்தைக் காந்தியைப் போல‌ (அடிக்க‌)காட்ட‌ மாட்டேன்/ என்னோடு ச‌ண்டை பிடிப்ப‌வ‌ர்க‌ளோடு நான் ச‌ண்டையிடுவேன்' என‌ மாயா கூறுகின்றார். அதேபோல‌ இன்னொரு பாட‌லான‌ 'Believer'ல் 'நான் போராட்ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுக்க‌வில்லை/ போராட்ட‌ங்க‌ள் என்னைத் தேர்ந்தெடுக்கின்ற‌ன‌' என்கின்றார்.அதேபோல‌ நாம் எவ்வாறு நுண்ணிய‌த‌ள‌த்தில் க‌ண்காணிப்ப‌டுகின்றோம் என்ப‌தை 'Message' பாட‌லில் 'இணைய‌ம் கூகிளோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து/ கூகிள் அர‌சாங்க‌த்தோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து' என்று பாடுகிறார். உண்மைதான் அமெரிக்காவில் ம‌ட்டுமில்லை, சீனாவில் கூட‌ அர‌சாங்க‌ம் த‌ன‌க்குரிய‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரிக்க‌க் கேட்க‌  யாகூ போன்ற‌ பெருநிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ழ‌ங்கிய‌மை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியுள்ள‌து. 'Story to be Told' என்கின்ற‌ பாட‌லில் எதுவானாலும் ‍அது மிக‌ச் சாதார‌ண‌ க‌தையாக‌ இருந்தாலும் அனைவ‌ரும் த‌த்த‌ம‌து க‌தைக‌ளைச் சொல்வ‌தை அனும‌திக்கும் சுத‌ந்திர‌மான‌ வெளி வேண்டும் என்கிறார் மாயா. அதேபோன்று 'Meds and Feds' என்ற‌ பாட‌லில் 'யார் சொன்ன‌து எல்லாச் ச‌ட்ட‌ங்க‌ளும் எதோவொரு ச‌ட்ட‌த்தால் ஆக்க‌ப்ப‌ட்ட‌து என்று/ நாங்க‌ள் அவ‌ற்றை உடைப்போம், அவ‌ர்க‌ளின் க‌ண‌னிக‌ளையும்' என்கிறார்.

இன்று அநேக‌மான‌ க‌லைஞ‌ர்க‌ளும், இல‌க்கிய‌க்கார‌ர்க‌ளும், அறிவுஜீவிக‌ளும் வ‌ச‌தியான‌ இட‌த்திலிருந்துகொண்டு எவ‌ரையும் நோகாது முன‌கிய‌ குர‌லில் அதிகார‌ங்க‌ளுக்கும்/அர‌சுக‌ளுக்கும்/ஒடுக்குமுறைக‌ளுக்கும் எதிரான‌ குர‌லை வெளிப்ப‌டுத்துகிறார்க‌ள். இவ் மெல்லிய‌ குர‌லை ம‌றுத்து தெளிவான‌ உறுதியான‌ குர‌லில் மாயாவின் க‌ல‌கக் குர‌ல் ஒலிக்கிற‌து. அதிகார‌ப் பெரும‌ர‌த்தின் ஒரு சில‌ இலைக‌ளையாவ‌து மாயாவின் இசை அதிர‌ச் செய்வ‌தால்தான் இல‌ங்கை அர‌சும், அமெரிக்க‌ உள‌வுத்துறையும் மாயாவிற்கு எதிர்வினை செய்கின்ற‌ன‌. இப்ப‌டியே தொட‌ர்ந்திருந்தால் உன்னை ஒடுக்கி ஓரிட‌த்தில் சுருட்டி வைப்போமென‌ அவ்வ‌ப்போது இவ‌ர்க‌ள் மாயாவை அத‌ட்ட‌வும் செய்கின்ற‌ன‌ர். இத‌ற்கு மாயா ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர் இல்லை. அத‌னால்தான் 'You get off easy. I speak direct 2 the CIA FBI China Sri Lankan Gov on Aim' என‌ அவ‌ர்க‌ளை நோக்கி மீண்டும் பேசுகிறார்.

இது ம‌ட்டுமில்லாது ப‌டிப்பு ப‌டிப்பென‌ 'வ‌ளாக‌ங்க‌ளுக்குச் செல்வ‌தே வாழ்வின் உன்ன‌த‌ம்' என்கின்ற‌ த‌மிழ்ச் ச‌மூக‌த்திற்கு ப‌டிப்பைப்போல‌வே இசைத்துறையில் நுழைந்தால் கூட‌ உய‌ர‌ங்க‌ளை அடையால‌மென‌ முன்னுதார‌ண‌மாக‌ இசையில் சாதிக்கும் மாயா ம‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌வ‌ரும் கூட‌. இன்றைய‌ உல‌க‌ப் ப‌ர‌ப்பில் ஒவ்வொரு ச‌மூக‌த்திற்கும் த‌ம‌து சாத‌னையாள‌ர்க‌ளாக‌ப் ப‌ட்டிய‌லிட‌ நீண்ட‌தொரு வ‌ரிசையிருக்க‌ ந‌ம‌க்கு எவ‌ருமேயில்லையென்கின்ற‌ வ‌ருத்த‌த்தை துடைத்து மாயா என்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ப்பெய‌ர் உல‌க‌ அர‌ங்கில் ஒளிருகிற‌து. த‌ன‌க்கு குழ‌ந்தை பிற‌ந்த‌போது 'என் பிள்ளைக்கு இருக்கும் வ‌ச‌திக‌ளில் ஒன்றுகூட‌ இல்லாது ஈழ‌த்த‌மிழ்ப்பிள்ளைக‌ள் வ‌ன்னியில் இற‌க்கின்ற‌ன‌வே' என‌ உண்மையான‌ ம‌னிதாபிமான‌த்தோடு த‌ன் ம‌ன‌தைத் திற‌ந்த‌ மாயாவை நாம் கொண்டாடத்தான் வேண்டும், அவ‌ர‌து பாட‌ல்க‌ளைப் போன்று.

ந‌ன்றி: அம்ருதா (செப்ரெம்ப‌ர்-2010)

2 comments:

அருண்மொழிவர்மன் said...

மாயாவின் born free யின் காணொயைத்தவிர இந்த டொகுப்பில் வதிருக்கும் பிற பாடல்களை இன்னும் நான் பார்க்கவில்லை.

ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் அது தவிர்ந்த பல விடயங்களிலும் அதிகாரங்களுக்கு எதிரான குரலாக ஒலித்துக் கொண்டிருப்பது M.I.A யின் குரல்.

மாயா தொடர்பான இன்னொஒன்று, ஸ்லம் டோக் மில்லனியருக்கு இசைக்காக ரஹ்மானிற்கு விருது கொடுக்கப்பட்டபோது உயிர்மையில் ஷாஜி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் அந்தத் திரைப்படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய M.I.A பற்றி எந்த விதமான குறிப்புகளும் இருக்கவில்லை என்ற ஞாபகம் இருக்கின்றது

7/21/2010 08:45:00 PM
DJ said...

உண்மைதான் அருண். ஷாஜி அதில் மாயாவின் ப‌ங்க‌ளிப்புப் ப‌ற்றி ம‌றைத்தே இருந்தார். இத்தனைக்கும் மாயாவின் பாட‌ல் ஒஸ்கார் நிக‌ழ்வ‌த‌ற்கு முன்னே கிராமி விருதிற்குப் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்டும் இருந்த‌து. ஷாஜி பிற‌கு இன்னொரு க‌ட்டுரை ஸ்ல‌ம்டோக் மில்லிய‌னர் ப‌ட‌த்தின் இசைத்தொகுப்புப் ப‌ற்றி அக்க‌வேறு ஆணிவேறாக‌ அல‌சி எழுதிய‌போதே மாயாவின் Paper Plane பாட‌ல் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதையும் ர‌ஹ்மான் போட்ட‌ இசைமாதிரியும் மாயா அதில் பாடிய‌துபோல‌ நினைக்கும்ப‌டி எழுதியிருந்தார். அப்பாட‌லுக்கு ர‌ஹ்மான் இசைய‌மைத்த‌வ‌ர் அல்ல‌.

9/01/2010 09:33:00 AM